உயிரோடு விளையாடு அசுரா
உயிர் – 37
நள்ளிரவு நேரம்..!!
தூக்கமின்றி படுக்கையில் கிடந்தாள் முகி. பீமாவின் வார்த்தைகள் அவளை உயிரோடு கொன்று புதைத்திருந்தன.
சித்தார்த் எனும் கயவனுக்காக அவள் தரமிறங்கிப் போனதை எண்ணி ஆயிரமாவது தடவையாக தன்னை நொந்து கொண்டாள் அவள்.
பீமா தன்னைக் காதலிக்கிறான் என்பது இன்றைய அவனுடைய செயல்களில் அவளுக்குத் தெள்ளெனப் புரிந்தது.
அவனுடைய ரசனைப் பார்வையும் தொடுகையும் கண்களில் வழிந்த நேசமும் அவனுடைய மனதில் தான் இருக்கிறோம் என்பதை அவளுக்கு உறுதிப்படுத்த அவள் மனம் குளிரத்தான் செய்தது. இருந்தும் அவள் இடையில் விட்ட சிறு பிழை அவளின் மன வாழ்க்கையை பாதிப்பதை உணர்ந்தவள் கூடிய சீக்கிரமே தன்னுடைய தவறை சரி செய்ய வேண்டுமென எண்ணிக் கொண்டாள்.
பீமாவின் தூய நேசத்தை அடைய அவள் மனம் ஏங்கத் தொடங்கியது. ‘உன்னை காதலிச்சிடுவேன்னு தோணுது.’ எனக் கூறிய பீமா “உன்னைக் காதலிக்கிறேன்.” எனக் கூற வேண்டுமென மனதார ஆசை கொண்டாள் அவள்.
இத்தனை வெறுப்பிலும் அவளுக்கு ஒன்று என்றதும் துடித்துப் போகும் அவனை அவளுக்கு நிரம்பப் பிடிக்கத்தான் செய்தது.
அந்தப் பிடித்தத்தை வாய்விட்டுக் கூற முடியாது கூச்சம் தடுக்க, தன்னுடைய நேசத்தை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள் அவள்.
அவளுடைய விழிகளோ ஏக்கத்தோடு படுக்கையை ஆராய்ந்தன. வெகு நேரமாகியும் பீமா படுக்கைக்கு வராததை அறிந்து அவளுடைய சிந்தனைகள் அவனை நோக்கி மீண்டும் பயணிக்கத் தொடங்கின.
“நல்லா இருந்தவனை நான் தான் குழப்பிட்டேனோ..? ஏன் இன்னும் தூங்காம இருக்கான்..?’ என எண்ணியவள் நேரத்தைப் பார்த்தாள்.
நேரமோ நள்ளிரவு ஒன்று எனக் காட்டியது. பெருமூச்சோடு மீண்டும் படுக்கையில் சரிந்து கொண்டாள் முகி.
எத்தனையோ கசப்பான விடயங்கள் நடந்து முடிந்திருந்தாலும் இன்று பீமாவின் கையணைப்பினுள் அடங்கி இருந்ததை எண்ணி அவளுடைய உடல் சிலிர்த்து அடங்கியது.
அவனுடைய கரங்களின் தேடலில் அவள் காமத்தைக் காணாது காதலை அல்லவா கண்டாள். தீண்டித் தீண்டி தன் பெண்மையை மென்மையாக மிளிரச் செய்தானே..! அவனுடைய நெருக்கம் கொடுத்த நினைவுப் போதையில் மெய்மறந்தவள் சற்று நேரத்திலேயே அவன் அவளை விலக்கித் தள்ளியதும் நினைவில் தோன்ற முகம் வாடிப் போனாள்.
மலர்ந்து விரிந்திருந்த அவளுடைய முகமோ தீயில் கருகிய மலராய் வாடிப் போனது. கண்களில் கண்ணீர் சட்டென துளிர்விட, அதற்கு மேல் எதையும் சிந்தித்துக் கலங்கி தன்னையே வேதனைப்படுத்த தைரியமின்றி விழிகளை வலுக்கட்டாயமாக இறுக மூடிக்கொண்டு உறங்க முயன்றாள் முகி.
உடல் மிகுந்த களைப்பில் இருக்க சற்று நேரத்தில் உறக்கத்திற்கு சென்று இருந்தாள் அவள். ஆனால் அவளுடைய கனவிலோ அமுதா வந்து கதறுவதைப் போன்ற காட்சிகள் தோன்ற, பதறி எழுந்து விழித்தவள் அருகே மேஜையில் இருந்த தண்ணீரை எடுத்து மடமடவென அருந்தினாள்.
மூச்சு எடுக்கவே சிரமமாக இருந்தது. அவளுக்கு நேரமோ இரவு இரண்டு எனக் காட்ட அப்போதும் படுக்கைக்கு வராத பீமாவை எண்ணி கவலை கொண்டாள் அவள்.
மெல்ல படுக்கையில் இருந்து இறங்கி பால்கனி நோக்கிச் சென்றவளுக்கு பீமா யாருடனோ பேசும் குரல் கேட்க, தயங்கி நின்றாள்.
‘இந்த நேரத்துல யார் கூட பேசிக்கிட்டு இருக்காரு..?’ என எண்ணியவள் வெளியே தெரிந்த நிலவை வெறித்தவாறு நின்றவனை விழிகள் விரியப் பார்த்தாள்.
பக்கவாட்டாகத் தெரிந்த அவனுடைய முகம் வாடிச் சோர்ந்து இருப்பதைக் கண்டவளுக்கு ஏனோ இதயம் வலிப்பதைப் போல இருந்தது.
அவனை நெருங்கி என்னவென கேட்பது என அறியாது அதே இடத்தில் அவனைப் பார்த்தவாறு நின்றாள் அவள்.
அவனோ தன்னுடைய தலையை அழுந்தக் கோதியவாறு, “உன்னை என்னால காப்பாத்த முடியலை அம்மு… ஐ அம் சாரி…” என கலங்கிய குரலில் வானைப் பார்த்துக் கூற, அதனைக் கேட்டவளுக்கு இதயம் பதறித்தான் போனது.
பீமா வெளியே கம்பீரமானவனாக இருத்தாலும் மனதளவில் மென்மையானவன் என்பதை அக்கணம் உணர்ந்து கொண்டவள் அவனை என்ன சொல்லி தேற்றுவதென அறியாது விழிகள் கலங்க அவனைப் பார்த்தபடி நின்றாள்.
அமுதாவின் இறப்பிலிருந்து அவன் இன்னும் வெளிவரவில்லை என்பது அக்கணம் தான் அவளுக்குப் புரிந்தது.
தன்னுடைய சொந்த அண்ணன் கூட தன்னில் இத்தனை அன்பு இல்லாத போக, தன்னுடைய நண்பனின் தங்கையின் மீது உயிரையே வைத்திருக்கும் பீமாவின் பாசம் கண்டு வியப்பின் உச்சிக்கே சென்றாள் அவள்.
பீமா அமுதாவின் மேல் வைத்துள்ள பாசத்தில் பத்தில் ஒரு பங்கு கூட சித்தார்த் தன் மீது வைக்கவில்லையே என எண்ணின் நொந்து போனாள் அவள்.
கலங்கி நின்ற கணவனின் தோற்றம் அவளை மிகவும் வருத்த அவனை நெருங்க முயன்றவள் தயங்கினாள். தன் மீது அவன் கோபமாக இருப்பது புரிய அவனை எவ்வாறு சமாதானப்படுத்துவது எனத் தெரியாது அவளுக்கு தலை வலிப்பதைப் போல் இருந்தது.
தான் உண்மை புரியாது செய்த தவறால்தான் இத்தனை துன்பங்கள் எனப் புரிய, சரேலென அவளுடைய ஒற்றைக் கண்ணில் இருந்து வழிந்தது கண்ணீர்த் துளி.
அதனைத் தன் புறங்கையால் துடைத்தவள் பீமாவின் இறுகி விறைத்த தோற்றத்தைக் கண்டு கலங்கியவாறே படுக்கையை நோக்கி நடந்தாள்.
‘நான் நிம்மதியா தூங்கியே பல நாள் ஆச்சு..’ என அவன் கூறிய வார்த்தைகளுக்கு இப்போதுதான் அர்த்தம் புரிந்தது அவளுக்கு.
அவனை அழைத்து ஆறுதல் சொல்லித் தேற்றி தன்னுடைய மடியினில் தூங்க வைக்க வேண்டும் என்ற அவா அவளுள் தோன்ற, அடக்க முடியாது மீண்டும் பால்கனியை திரும்பிப் பார்த்தாள் அவள்.
எந்தக் குற்றமும் செய்யாத இவன் ஏன் இத்தனை துடிக்க வேண்டும்..?
இவ்வளவு நிம்மதி இல்லாமல் ஏன் தவிக்க வேண்டும்..?
குற்றம் செய்தவர்கள் ஊரை விட்டுச் சென்று எங்கோ ஓடி நிம்மதியாக இருக்க, எந்தக் குற்றமும் புரியாத பீமா மாத்திரம் ஏன் இப்படி எல்லாம் தவிக்க வேண்டும்..? என கவலை கொண்டாள் முகிலாஷி.
பீமாவின் உடைந்த தோற்றத்தைப் பார்த்து வந்தவளுக்கு தூக்கம் நெருங்க மாட்டேன் என்றது.
இமைகளை இறுக மூடிக்கொண்டு அமைதியாக படுக்கையில் கிடந்தாள் அவள். மூடிய விழிகளிலிருந்து கண்ணீர் மாத்திரம் நில்லாமல் வழியத் தொடங்கியது.
சற்று நேரத்தில் பீமா உள்ளே நடந்து வரும் அரவம் கேட்க சட்டென விழிகளை துடைத்துக் கொண்டவள் தூங்குவதைப் போல நடிக்கத் தொடங்கினாள். தூக்கம் போல நடித்தாலும் அவளுடைய மனதின் பாரமோ விழிகளின் வழியே கண்ணீர் ஊற்றாகப் பொழிய, உள்ளே வந்து அவள் அருகே படுத்த பீமாவின் பார்வை அவனுடைய முகத்தில் நிலைத்தது.
அவளுடைய விழிகளில் இருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரைக் கண்டவன் பெரு மூச்சு விட்டான்.
“நீ இன்னும் தூங்கலையா..?” எனக் கேட்டான் அவன்.
அவளோ விழிகளைத் திறக்காது, “நான் எப்பவோ தூங்கிட்டேன்.” என்றாள்.
சட்டென சிரித்தான் அவன். “க்ரேஸி கேர்ள்.” என்றவனின் கரம் உயர்ந்து அவளுடைய கன்னத்தில் இருந்த விழி நீரைத் துடைத்தன.
“உன்னோட அப்பா உன்னைத் தேடி எனக்கு கால் பண்ணினாரு.” என்றதும் சட்டென விழிகளைத் திறந்தாள் அவள்.
“ஓஹ்….?” என்றவள் மீண்டும் அமைதியாகிப் போனாள்.
“உன்னை அழைச்சுட்டுப் போகணுமாம்..” என்றவனின் விழிகள் அவளை ஆராய்ந்தது.
“நீ… நீங்க எ.. என்ன சொன்னீங்க..?” என தவிப்போடு கேட்டாள் அவள்.
“தயவு செஞ்சு கூட்டிட்டுப் போயிருங்கன்னு சொன்னேன்.” என்றான் அவன்.
சட்டென முகம் வாடிய மலராய் சுருண்டது அவளுக்கு. வந்த அழுகையை இதழ் கடித்து அடக்கிக் கொண்டாள் அவள்.
“சரி தூ… தூங்குங்க.” என்றவள் அவனுடைய கேசத்தினுள் கரம் நுழைத்து அவனுடைய தலையை வருடிக் கொடுக்க, அவனுடைய இமைகள் இதமாக மூடிக் கொண்டன.
“தேங்க்ஸ்.” என்றவன் அவளை நெருங்கி அவளுடைய மார்பில் தலையை சாய்க்க, பதறினாள் அவள். அவளுடைய கரம் சில நொடிகள் அசைவற்று நின்றன. பின் நெகிழ்வோடு மீண்டும் அவனுடைய தலை கோதின.
“முகி…?”
“ம்ம்ம்….?”
“நான் உன்னோட அப்பாகிட்ட என் பொண்டாட்டி உங்ககூட வந்தா தாராளமா அழைச்சுட்டுப் போங்கன்னு சொன்னேன்.” என்றான்.
என் பொண்டாட்டி என்ற வார்த்தையில் உடலில் ஆயிரம் பூக்கள் பூத்ததைப் போல சிலிர்த்துப் போனாள் அவள்.
தலை கோதிய அவளுடைய கரத்தை எடுத்து தன்னுடைய கன்னத்தில் பதித்தவன், “இந்த அன்பு உண்மைதானா..?” என ஆழ்ந்த குரலில் கேட்டான்.
அவனுடைய விழிகளை நேராகப் பார்த்தவள் “சந்தேகப்படுறீங்களா..?” என பதில் கேள்வி கேட்டாள்.
“எல்லாரையும் நம்பி எல்லார்கிட்டயும் ஏமாந்து போன எனக்கு மறுபடியும் யாரையுமே நம்ப முடியலை. நம்பவும் மாட்டேன். நீ காட்ற அன்பு பொய்யா உண்மையான்னு தெரியல. ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உன் கூட இருக்கிற ஒவ்வொரு நொடியுமே ரசிச்சு அனுபவிக்கணும்னு தோணுது. இது நாளைக்கு நிரந்தரமான்னு கூடத் தெரியல. இருக்கும் வரைக்கும் என் கூடவே இருந்திரு முகி.” என்றான் அவன்.
அவனுடைய வார்த்தைகளில் அவளுக்கோ வியப்பே மேலிட்டது.
காலையில் வீட்டை விட்டு வெளியே போ எனக் கூறியவன் இப்போது இருக்கும் வரை என்னுடன் இருந்து விடு என்கிறான். அவனுடைய மனதில் என்னதான் இருக்கிறது என அறிய முடியாது குழம்பிப் போனாள் முகிலாஷி.
“என்ன நம்புங்க பீமா. நான் உங்களை ஏமாத்த மாட்டேன்.” என்றாள் அவள்.
“கேட்க நல்லாத்தான் இருக்கு.” என கசப்பாக சிரித்தான் அவன்.
தன்னுடன் நம்பிக்கையின்றியே அவன் பழகுகிறான் என்பது புரிய ஆழமான வேதனையை அனுபவித்தவளாக அமைதியாகி போனாள் அவள்.
அவனோ தன்னுடைய தலையை நிமிர்த்தி அவளுடைய கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தவன் அவளுடைய கழுத்து வளைவில் முகம் உதைத்து உறக்கத்தை தழுவிக் கொண்டான்.
இவ்வளவு நேரமும் அவனைத் தழுவாத உறக்கம் முகியை அணைத்த நொடி வந்துவிட, நிம்மதியான உறக்கத்தை நள்ளிரவை தாண்டிய பொழுதில் தழுவிக் கொண்டான் பீமா.
****************
அடுத்த நாள் காலையில் தன் உடல் உணர்ந்த அதீத பாரத்தில் விழிகளைத் திறந்தவள் தன் மேல் கிடந்த பீமாவைக் கண்டு முகம் சிவந்தாள்.
“பீ.. பீமா எழுந்திருங்க. எ.. என்னால மூச்சு விட முடியல.” என சிணுங்கியவாறே அவனை விலக்கப் போராடியவள் அவனுடைய முகத்தை நிமிர்த்தி பார்த்தாள்.
அவனுடைய வாயில் இருந்து வெண் நுரை தள்ளியிருக்க, அதனைப் பார்த்தவளின் உடலோ தூக்கிவாரிப் போட்டது.
“பீ… பீமாஆஆ… பீமாஆஆஆ பீமாஆஆஆஆஆஆ.. ஐயோஓ எழுந்திருங்க.. எழுந்திருங்களேன்… பீமாஆஆ ப… பயமா இருக்கு பீமா…” எனக் கதறியவள் அவனை புரட்டி படுக்கையில் போட்டு விட்டு அவனை உலுக்கி எழுப்ப முயன்றாள்.
“எ.. என்னாச்சுங்க உ… உங்களுக்கு..? என் பீமாஆஆஆஆ…” என அந்த வீடே அதிர கத்தலானாள் அவள்.
அவளுடைய பீமாவோ தலை தொங்கிப் போய்க் கிடந்தான்.
💜💙💙💜
