உயிரோடு விளையாடு அசுரா
உயிர் – 17
திடீரென தன்னுடைய அறைக் கதவு திறக்கவும் எங்கே அந்த அரக்கன்தான் மீண்டும் வந்து விட்டானோ என எண்ணி அஞ்சியவள் அங்கே வந்த ருத்ராவைக் கண்டு விக்கித்துப் போனாள்.
அவளை அங்கே கண்டதும் அவள் உடலோ தானாக பின்னால் நகர்ந்தது.
மூச்சை நன்கு இழுத்து தன்னைத் திடப்படுத்திக் கொண்டவள் அவளைப் பார்த்து மெல்ல புன்னகைத்தவாறு “உள்ளே வாங்க…” எனத் தடுமாறியவாறே அழைத்தாள்.
அவளை அலட்சியமாக பார்த்தாள் ருத்ரா.
“என்னோட வீட்ல இருந்துகிட்டு என்னையே வான்னு வரவேற்கிறியா பெரிய ஆளு தான்டி நீ.” என்றாள் அவள்.
உள்ளே வரவேற்றது ஒரு குற்றமா.? தவித்துப் போனாள் முகில்.
ருத்ராவோ அனுமதி இன்றியே அவளுடைய படுக்கை அறைக்குள் நுழைந்தவள் அந்த அறையைச் சுற்றிப் பார்க்கத் தொடங்க, முகிலாவின் முகமோ அதிருப்தியால் மாறிப்போனது.
ருத்ராவின் பார்வை அவர்களுடைய படுக்கையை ஆராய்ச்சியோடு மேய, கசங்கி கிடந்த போர்வையை சட்டென சரி செய்தாள் முகிலாஷி.
படுக்கையில் இருந்து தன்னுடைய முகத்தை திருப்பியவள் முகியை முறைத்துப் பார்த்தாள்.
அப்போதுதான் முகிலாஷியின் இதழ்கள் சிவந்து தடித்துப் போய் இருப்பதைக் கண்டு கொண்டவளுக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிய, அவளுடைய உடலோ தீயாய் தகித்தது.
தன்னை அங்கே ஒதுக்கி வைத்துவிட்டு இவளுடன் இங்கே குடும்பம் நடத்துகின்றான் என எண்ணி வெகுண்டவளின் மனதில் பல தீய திட்டங்கள் வரிசையாக வரத் தொடங்கின.
ருத்ராவின் பார்வை தன்னுடைய இதழ்களை வெறிப்பதை உணர்ந்தவளுக்கு அப்படியே நிலத்தினுள் புதைந்து போய் விட மாட்டோமா என்றிருந்தது.
அவமானத்தில் முகம் சிவக்க சட்டென குளியல் அறைக்குள் நுழைய முயன்ற முகியின் கரத்தை அழுத்தமாக பிடித்து நிறுத்தினாள் ருத்ரா.
“ப்ளீஸ் கையை விடுங்க…” என்றவளை உறுத்து விழித்தவள்,
“என்னடி ரொம்ப சுகபோகமா வாழுற போல.?” எனக் கேட்டாள்.
அவளுடைய பார்வை அவளையும் அவர்களுடைய படுக்கையையும் மாறி மாறிப் பார்க்க, ருத்ராவின் வார்த்தைகளில் உடல் கூசிப் போனது அவளுக்கு.
விழிகளில் நீர் சட்டென பொங்கி விட தடுமாறியவாறே தன்னுடைய கையை விலக்க போராடியவள், “நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் இல்லை.” எனக் கலங்கிய குரலில் கூறினாள்.
“ப்ச்… எதுக்குடி இப்போ இப்படி பச்சையா பொய் சொல்ற.? அதான் உன் முகத்தை பார்த்தாலே தெரியுதே.” என எரிந்து விழுந்தாள் ருத்ரா.
ஒரு கட்டத்திற்கு மேல் ருத்ராவின் வார்த்தைகளை ஜீரணிக்க முடியாது போனது முகிலாஷிக்கு.
அவள் எதற்காக எந்த தவறும் செய்யாமல் கண்டவர்களிடம் திட்டு வாங்க வேண்டும் என எண்ணியவள் ருத்ராவிடமிருந்து தன்னுடைய கரத்தை உருவி எடுத்தாள்.
“ஏய் உன்கிட்டதான் பேசிகிட்டு இருக்கேன். நீ என்னடான்னா கண்டுக்காம போய்கிட்டே இருக்க. மேனர்ஸ்னா உனக்கு என்னன்னு தெரியாதா.?” என்ன நக்கலாக கேட்டாள் ருத்ரா.
அவளுடைய வார்த்தைகளில் விஷம் தோய்ந்திருப்பதை உணர்ந்து கொண்ட முகியின் மனமோ வெறுப்படைந்தது.
“அடுத்தவங்களோட பெட் ரூமுக்குள்ள கதவை நாக் பண்ணாம வர்ற நீங்க மேனர்ஸ் பத்தி பேசலாமா.?” என மெல்லிய குரலில் ஆனால் சற்றே அழுத்தமாகக் கேட்டாள் முகி.
“ஏய்….” என அலறிய ருத்ராவோ, அடுத்த கணம் தன்னுடைய கரத்தை வேகமாக முகிலாஷின் கன்னத்தில் ஓங்கி இறக்கினாள்.
முகியின் மென்மையான கன்னத்தில் பளார் என்று அறை விழ,
முகியோ ஒரு கணம் திகைத்துப் போய் நின்று விட்டாள். அவளால் ருத்ரா தன்னை அடித்ததை நம்பவே முடியவில்லை.
அவளுடைய விழிகள் இமைக்க மறந்து ருத்ராவையே அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தன.
ருத்ராவோ தான் அடித்த கன்னத்தில் கரத்தை வைத்தவாறு உறைந்து போய் நின்றவளை பார்த்து,
“ச்சீ… வெக்கமா இல்லையா டி உனக்கு.?” எனக் கத்தினாள்.
அன்று பார்க்கும் போது அமைதியாக அழுது கொண்டிருந்த ருத்ராவா இப்படி ஆக்ரோஷமாக கத்துவது என நம்ப முடியாமல் விதிர்விதிர்த்துப் போய் நின்றாள் முகிலா.
“ஏய் உன்னைத்தான்டி கேட்கிறேன். பதில் சொல்லு இந்த உலகத்தில உனக்கு வேற ஆம்பளையே கிடைக்கலையா.? என்னோட புருஷன்தான் உனக்கு கிடைச்சாராடி..?” என வாயில் வந்ததை எல்லாம் திட்டத் தொடங்கினாள் அவள்.
முகிலாஷியோ துடித்துப் போனவளாய் தன் காதுகளைப் பொத்திக் கொண்டாள். மனம் ரணமாய் வலித்தது.
“உண்மை தெரியாம பேசாதீங்க ப்ளீஸ்.” எனக் கதறலோடு சீறினாள் அவள்.
“என்னடி உண்மை..? என்ன உண்மை? அதான் பார்க்கிறேனே என் புருஷனோட நீ அடிக்கிற கொட்டத்த.”
“ஐயோ நீங்க நினைக்கிற மாதிரி எதுவுமே இல்லை. ப்ளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்களேன்.” எனத் தன்னை புரிய வைக்க முயன்றாள் முகிலா.
“நீ சொல்றதை எதுக்குடி நான் கேட்கணும்.? அதான் உன்னோட வீங்கிப்போன உதட்டை பார்த்தாலே தெரியுதே. நான் கூட உனக்கு விருப்பம் இல்லாமதான் நீ இங்கே வந்திருக்கேன்னு நினைச்சேன். ஆனா இப்போதான் உண்மையை தெரிஞ்சுகிட்டேன்.” என்றதும் முகிலாஷிக்கோ கோபத்தில் முகம் சிவக்கத் தொடங்கியது.
சில வார்த்தைகள் உயிரோடு கொல்லும் என்பது எவ்வளவு உண்மை என அக்கணம் உணர்ந்து கொண்டாள் அவள்.
கண்களில் இருந்து கண்ணீர் வழிய அவள் முன் கண்ணீர் சிந்தி தன்னை பலவீனமாக காட்ட விரும்பாதவள் சட்டென தன் விழி நீரை கீழே வழியாது துடைத்துக் கொண்டாள்.
“சரி உண்மைய சொல்லு என் புருஷன்கிட்ட எவ்வளவு பணம் வாங்கின.?” எனக் கேட்டாள் ருத்ரா.
அவள் என்ன கேட்கிறாள் என்பதே புரியாது போக விழிகளை விரித்தவாறு நின்றாள் முகி.
“ஏய் இப்படி ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி பார்க்கிற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத. உன்னோட நடிப்பெல்லாம் ஆம்பளைங்க கிட்டக் காட்டி எவ்வளவு வேணுமானாலும் சம்பாதிச்சுக்கோ. இந்த அப்பாவி மாதிரி மூஞ்சி வச்சிக்கிறது எதுவுமே தெரியாத மாதிரி நீலி கண்ணீர் வடிக்கிறது இதெல்லாம் என்கிட்ட செல்லுபடி ஆகாது.” என ஆத்திரமாக கத்தினாள் ருத்ரா.
முகிலாஷிக்கோ ஐயோ வென்றானது.
ஒவ்வொரு வார்த்தைகளையும் கத்தி போல உபயோகப்படுத்தி தன்னைக் குத்திக் கிழிக்கும் ருத்ராவை மிரண்டு போய் பார்த்தாள் அவள்.
இப்படி தகாத வார்த்தை பேசுவதையும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் அடித்துக் காயப்படுத்துவதையும் சிறுவயதிலிருந்தே பார்த்து வளராதவளுக்கு ருத்ராவின் செயல்கள் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இளவரசி போல தன்னுடைய வீட்டில் சீராட்டி வளர்க்கப்பட்ட அவளுக்கு திடீரென நரகத்தில் கொண்டு வந்து வைத்து அவளைக் கொடுமைப்படுத்துவது போல இருந்தது அவர்களின் செயல்.
பெண்ணாக இருந்தாலும் தன்னுடைய உடலை இஞ்ச் இஞ்சாக துளைத்து ஆராய்ச்சி பார்வை பார்க்கும் ருத்ராவின் பார்வையை அறவே வெறுத்தாள் முகி.
கொஞ்சம் கூட நாகரிகம் அற்ற ருத்ராவின் செயலில் அவளுடைய முகமும் அருவருப்பால் சுளித்தது.
ருத்ராவின் முகத்தைப் பார்க்காமல் விழிகளை இறுக மூடிக்கொண்டாள் முகி.
“ஏய் எவ்வளவு பணம் வாங்கினேன்னு கேட்டேன்.” என மீண்டும் கேட்டாள் ருத்ரா.
“ஐயோ நீங்க என்ன கேக்குறீங்கன்னே எனக்குப் புரியல. நான் யார்கிட்டயும் பணம் வாங்கல.” என துவண்டு போன குரலில் கூறினாள் முகிலாஷி.
“ஆஹா…!! ஆஹா…!! என்ன நடிப்புடா சாமி… ஒண்ணுமே புரியாத மாதிரி ரொம்ப நல்லாவே நடிக்கிற.” எனச் சீறினாள் ருத்ரா.
“ஐயோ சத்தியமா நீங்க என்ன கேக்கறீங்கன்னு எனக்குப் புரியலைங்க.” என்றவளுக்கு குரல் உடைந்து தொண்டை அடைத்தது.
“ஓஹோ மேடமுக்கு புரியலையா சரி நேராவே கேட்கிறேன். என் புருஷன் கூட படுக்கறதுக்கு எவ்வளவு பணம் வாங்கின…?” என்றதும் தன் தலையில் இடி விழுந்தாற் போல துடித்துப் போனாள் முகிலாஷி.
கரம் நடுங்க சட்டென தன் காதுகளை இறுக மூடிக்கொண்டாள் அவள்.
அமிலத்தைக் காய்ச்சி அவளுடைய செவியினில் வார்த்தாற் போல இருந்தது ருத்ராவின் வார்த்தைகள்.
இத்தகைய கேவலமான வார்த்தைகளை அவள் கேட்கத்தான் வேண்டுமோ.? இக்கணமே செத்தால் கூட நிம்மதி என எண்ணி மருகினாள் அவள்.
“சொல்லுடி எவ்வளவு வாங்கின.? இது வரைக்கும் அவர்கிட்ட எத்தனை லட்சம் வாங்கியிருக்க.?” என அவளை கேள்விகளால் கொலை செய்து கொண்டிருந்தாள் ருத்ரா.
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் “ஜஸ்ட் ஷட் அப்… தயவு செஞ்சு இங்கிருந்து வெளியே போங்க.” எனச் சீறினாள் முகிலாஷி.
அவளுடைய வார்த்தைகளில் கொதித்துப்போன ருத்ராவோ சட்டென முகியை நெருங்கியவள் அவளுடைய கழுத்தை இறுகப் பற்றினாள்.
“ஹௌ டேர் யு… இடியட்…? யாரைப் பார்த்து வெளியே போக சொல்ற.? என்ன வெளியே போக சொல்றதுக்கு நீ யாருடி.? பின் வாசல் வழியா எங்க வீட்டுக்குள்ள வந்த உனக்கு இவ்வளவு தைரியம் எப்படி வந்துச்சு.?” என ஆக்ரோஷமாக கத்தினாள் ருத்ரா.
அவளுடைய செயலில் அதிர்ந்தவள் தன்னுடைய கழுத்து இறுக்கப்படவும் சட்டெனப் போராடி அவளுடைய கையை தட்டி விட்டாள்.
ருத்ராவோ அவளுடைய கரத்தைப் பிடித்து இழுத்தவள் தரதரவென அவளை அந்த வீட்டிற்கு வெளியே அழைத்து வரத் தொடங்கினாள்.
மித்ராவின் முரட்டுத்தனமான செயலில் உடல் நடுங்க அவளின் பின்னாலேயே இழுபட்டுச் சென்றாள் முகி.
“என்ன பண்றீங்க…? என்னை விடுங்க ப்ளீஸ்.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. யு ஹர்ட்டிங் மீ..” என அழுதவளை இழுத்து வந்து வெளியே தள்ளிவிட, வெளியே படுத்துக் கிடந்த நாய்களைக் கண்டவளுக்கோ உடல் விதிர்விதித்தது.
“ஐயோ… ப்ளீஸ் ருத்ரா. வெளியே நாய்ங்க இருக்கு.” எனக் கெஞ்சிக் கதறியவளை வெளியே மண் தரையில் தள்ளி விட்டாள் ருத்ரா.
“ம்மாஆஆஆஆ….” என்ற அலறலோடு தரையில் விழுந்தவள், நாய்களைக் கண்டு அஞ்சி நடுங்கி அலறியவாறே எழுந்து உள்ளே ஓடி வர, அதற்கு முதலே ஒரு நாய் அவள் மீது பாய்ந்தது.
அந்த நாயின் எடையை தாங்க முடியாது அப்படியே தரையோடு சரிந்தாள் முகிலாஷி.
முகியின் கதறலோ அந்த இடம் முழுவதும் நிறையத் தொடங்கியது.
அந்த நாயும் வெறிகொண்ட வேங்கையாக அவள் மீது பாய்ந்து அவளுடைய காலைக் கவ்வ,
பெருங்குரலெடுத்து கதறி அழுதாள் அவள்.
ருத்ராவோ அதிர்ந்து போனாள். அவளை வெளியே தள்ளி அனைத்து வேலையாட்களின் முன்பும் அவமானப்படுத்த எண்ணியிருந்தவள் வெளியே இருந்த நாய்களை மறந்து போனாள்.
ஒரு நாய் பாய்ந்ததைத் தொடர்ந்து மற்ற நாய்களும் முகிலாஷியை நோக்கிப் பாய்ந்து வர சட்டென அங்கே வந்த வேலையாட்கள் நாய்களை விரட்டி விட்டனர்.
அதே கணம் பீமாவின் காரோ அந்த காம்பவுண்டினுள் நுழைந்தது.
“ஓ மை காட். இவர் என்ன இன்னைக்கு இவ்ளோ சீக்கிரமா வீட்டுக்கு வந்துட்டாரு. நான்தான் அவளை இப்படி பணணினேன்னு தெரிஞ்சா என்ன கொன்னே போட்றுவாரு. ஐயோ இப்போ என்ன பண்றது.? எப்படியாவது அவரோட கண்ணுல படாம இங்கிருந்து போயிடனும்” என எண்ணியவள் சட்டென்று அந்த வீட்டின் பின்பக்கமாக நடந்து தங்களுடைய வீட்டை நோக்கி ஓடத் தொடங்கினாள்.
வேலையாட்கள் மூன்று பேர் சேர்ந்து நாய்களை விரட்டி விட எழ முடியாது கண்ணீரோடு தரையில் சுருண்டு விட்டாள் முகிலாஷி.
💜💙💙💜
