உயிரோடு விளையாடு அசுரா
உயிர் – 32
கனத்த இமைகளை கடினப்பட்டு திறந்தவள் தான் தன் படுக்கையில் படுத்திருப்பதை கண்டு எழ முயன்றாள்.
அவளுக்கு அருகே நின்ற அவளுடைய தந்தையோ அவளை ஓய்வெடுக்குமாறு கூற, மறுப்பாக தலையசைத்தவள் அவசர அவசரமாக எழுந்து மீண்டும் தள்ளாட்டத்துடன் படுக்கையில் சரிந்தாள்.
அவள் எதிர் நோக்கிய அதிர்ச்சிகளின் விளைவு அவளை மயங்கச் செய்திருந்தது. அதன் தாக்கம் இன்னமும் விலகாது இருக்க, மீண்டும் படுக்கையில் சரிந்து கொண்டவள் அதன் மறுபுறம் நின்ற சித்தார்த்தைக் கண்டு பதறினாள்.
சித்தார்த்தைப் பார்க்கப் பார்க்க அவளுக்கோ சினமும் அழுகையும் ஒரு சேரத் தோன்றியது.
தன்னுடன் நெருங்கிப் பழகிய தோழியையே பழி வெறிக்காக கொலை செய்திருக்கிறான் என்றால் அவன் எவ்வளவு கேவலமான ஜென்மமாக இருக்கக்கூடும் என எண்ணியவளுக்கு அவன் மீது வெறுப்பே மிஞ்சியது.
எப்படியெல்லாம் அவனை நம்பினாள்.. தவறுகளுக்கு அப்பாற்பட்டவன் என்றல்லவா நினைத்தாள்.
கண்ணாடியை வைரம் என நம்பி தவறிழைத்த தன் மீது அவளுக்கு பொல்லாத சீற்றம் பொங்கி எழுந்தது.
தன்னையே நொந்து கொண்டாள் அவள்.
அவன் மீது அவள் வைத்திருந்த முழு நம்பிக்கையும் சில நொடிகளில் சீட்டுக்கட்டுமாளிகையாக சரிந்து காணாமற் போனது.
அதே கணம் தன்னுடைய கரத்தில் இருந்த பீமாவின் அலைபேசியை காணாது திகைத்தவள் தன்னுடைய படுக்கையைச் சுற்றி மளமளவென ஆராய்ந்தாள்.
“எதைம்மா தேடுற…?” எனக் கேட்டார் அவளுடைய தந்தை.
“அ… அவரோட ஃபோன். அதை என் கைல வச்சிருந்தேன் அது எங்கப்பா.? அது எனக்கு வேணும் அது எங்க…?” எனப் பதற்றத்துடன் கேட்டாள் அவள்.
அவரோட போன் என்றதும் புருவம் உயர, அதிர்ந்து விழித்தான் சித்தார்த்.
“அவர்னா யாரு யாரோட போன்?” என முகிக்கு குறையாத படபடப்போடு கேட்ட சித்தார்த்தின் முகத்தைக் கூட பார்க்கப் பிரியப்படாதவள் தன்னுடைய தந்தையை கேள்வியாய் பார்த்தாள்.
அவரோ தான் எடுத்து வைத்திருந்த பீமாவின் அலைபேசியை எடுத்து அவளுடைய கரத்தில் கொடுக்க, அதனை இறுகப்பற்றிக் கொண்டாள் அவள்.
“குட்டிம்மா… இது பீமாவோட ஃபோனா…? அதை என்கிட்ட கொடு….” என்றவன் ஃபோனை வாங்குவதற்காக தன்னுடைய கரத்தை அவளை நோக்கி நீட்டினான்.
“கிட்டே வா தர்றேன்…” என்றாள் முகி.
சித்தார்த்தோ அவளை நோக்கிக் குனிந்த கணம் தன்னுடைய ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி அவனை ஓங்கி அறைந்தாள் முகிலாஷி.
“ஏய்ய்ய்…..” என அவளை அடிக்கப் பாய்ந்தவனை தடுத்துப் பிடித்தார் சிம்மன்.
“இங்கே என்னதான் நடக்குது.? உங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி என்ன பிரச்சனை…? சித்துவை எதுக்கும்மா அடிச்ச..?” எனக் கேட்டார் சிம்மன்.
“இவன் மனுஷனே இல்லைப்பா… இவன் ஒரு மிருகம்..”
“நம்ம சித்தார்த் அப்படி இல்லம்மா…”
“உ… உண்மைதான்பா.. இவன் நாங்க நினைக்கிற மாதிரி இல்ல.. கொலை பண்ணிட்டான்பா…” எனக் கதறினாள் அவள்.
அவளுடைய கூற்றில் அதிர்ந்தவர் பெருமூச்சு விட்டார்.
“ஓஹ்ஹ்… உனக்கும் தெரிஞ்சிடிச்சா தங்கம்.. அன்னைக்கு இவனுங்க அளவுக்கதிகமா ட்ரக்ஸ் எடுத்திட்டாங்கடா. அதனாலதான் அந்த அமுதாப் பொண்ணை தெரியாம ரேப் பண்ணிட்……” என அவர் முடிக்க முதலே “ப்பாஆ உளறாதீங்க. அதெல்லாம் அவளுக்குத் தெரியாது.” என அவசரமாக இடையிட்டு கூறினான் சித்தார்த்.
சட்டென தன் வாயை இறுக மூடிக் கொண்டார் சிம்மன்.
தன்னுடைய காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாது ஸ்தம்பித்துப் போனாள் அவள்.
அவளுடைய மூளையோ தன் செவியில் விழுந்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கிரகித்துக் கொண்டே இருந்தன.
‘அதனாலதான் அந்த அமுதாப் பொண்ணை தெரியாம ரேப்…’
‘அந்த அமுதாப் பொண்ணை தெரியாம ரேப்..’
‘அமுதாப் பொண்ணை தெரியாம ரேப்…’
‘தெரியாம ரேப்…’
‘ரேப்……!!!!????????’
அமுதாவிற்கு நடந்த கொடூரம் புரிந்து விட, அவள் இதயமோ ஒரு கணம் நின்று துடித்தது. இதனால்தான் பீமா அத்தனை கோபத்தோடு இருந்திருக்கிறானா என நினைத்தவளின் விழிகள் வலி தாங்காது சில நொடிகள் மூடிக் கொண்டன.
அவள் கண்ணீர் சிந்தவும் இல்லை..
கதறி அழவும் இல்லை.
அக்கணம் அவளுடைய உள்ளமோ எரிமலைக்கு நிகராக பொங்கி வெடித்துக் கொண்டிருந்தது.
“அப்போ அமுதா… இப்போ ருத்ரா. இன்னும் எத்தனை பேரைக் கொன்னுருக்க…?” என சித்தார்த்தை பார்த்துக் கேட்டாள் அவள்.
“நீ நினைக்கிற மாதிரி இல்ல குட்டிம்மா.. நான் நல்லவன்தான்… உன் மேல கை வெச்சுட்டான்னுதான் ருத்ராவைக் கொன்னேன். எல்லாம் உனக்காகத்தான்.. அண்ணா உன் மேல அவ்ளோ பாசம் வெச்சிருக்கேன்டா.” என்றவனின் முகத்தில் “த்தூஊஊ…” என காறி உமிழ்ந்தாள் அவள்.
“இதுக்கு மேலையும் நீ சொல்றதை நம்புறதுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல.” என வெடித்தாள் அவள்.
அவளுடைய செயலில் மற்ற இருவருக்கும் திக்கென இருந்தது.
சித்தார்த்தோ தன் முகத்தில் இருந்த எச்சிலை சாவகாசமாக துடைத்தவன் முகியை வெட்டும் பார்வை பார்த்தான்.
‘உன்னால் என்னை என்ன செய்துவிட முடியும்…?’ என்ற கேள்வி அவனுடைய பார்வையில் பொதிந்திருந்தது.
படுக்கையில் இருந்து ஆவேசமாக எழுந்தவளின் முகத்தில் அத்தனை ஆக்ரோஷமும் அருவருப்பும் அப்பிக் கிடந்தது. சோர்வில் தடுமாறிய உடலை திடப்படுத்திக் கொண்டு தரையில் கால்களை அழுத்தமாக ஊன்றி நின்றவள்,
“ச்சீஈஈஈ நீ எல்லாம் மனுஷனே இல்ல…” எனச் சீறினாள்.
“இஸ் இட்….?” என கேலியாக கைகளை விரித்தான் சித்தார்த்.
அவளோ சட்டென குளியல் அறைக்குள் நுழைந்து விட, சிம்மனின் முகமோ இறுகியது.
“முட்டாள்… எதுக்காக மறுபடியும் கொலை பண்ண..? நம்ம வீட்டுப் பொண்ணுக்கு தெரியுற அளவுக்கு கேர்லஸ்ஸா இருந்திருக்க. உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா..? ஆல்ரெடி அமுதா கொலை கேஸ்ல எவ்வளவு கஷ்டப்பட்டு உன் பேரு வராம பார்த்துக்கிட்டேன். இதுலயும் ஏதாவது பிரச்சனை வந்தா நீயே பார்த்துக்கோ. என்னால உனக்கு எந்த உதவியும் பண்ண முடியாது. தண்டமா பணத்தையும் செலவழிக்க முடியாது.” எனக் கோபத்துடன் கூறினார் அவர்.
“சாரிப்பா பட் இதுல எந்த பிரச்சனையும் வராது. இது பக்காவா ஆக்சிடென்ட் மாதிரி பிளான் பண்ணி காரை மலையில் இருந்து தள்ளி விட்டுட்டோம். பாடிய சிங்கமோ புலியை சாப்பிட்ருக்கும்னு நினைச்சிருப்பாங்க. சோ இந்த கேஸ்ல எந்த பிரச்சினையும் வராது. உங்க மக என்னை காட்டிக் கொடுக்காமல் இருந்தா போதும்.” என சிடுசிடுப்பாக கூறினான் சித்தார்த்.
“அவ சின்ன பொண்ணுடா. அவளுக்கு நம்மளோட மறுபக்கம் தெரியாது. தெரிய வரக்கூடாது. எப்படியாவது உன் தங்கச்சியை சமாளிக்க பாரு.” என்றார் அவர்.
சற்று நேரத்தில் குளியல் அறையில் இருந்து வெளியே வந்தவளின் முகமோ நீரினால் கழுவப்பட்டு தெளிவாக இருந்தது.
வெளியே வந்த தன்னுடைய தங்கையை அழுத்தமாக பார்த்தவன், “இதோ பார் முகி நீதி நேர்மை நியாயம்னு இருந்தா இந்த உலகத்துல நிம்மதியா வாழ முடியாது. நம்ம வாழ்க்கையை நாமதான் ரசிச்சு வாழனும். கூடிய சீக்கிரமே நான் சொல்ல வர்றது உனக்கு புரியும். அது வரைக்கும் பொறுமையா இரு.
முட்டாள்த்தனமா எதுவும் பண்ணாத.” என்றான் சித்தார்த் அவளின் பார்வையோ துச்சமாக அவனை ஏறிட்டது.
“பாருங்கப்பா கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம எப்படி பார்க்கிறான்னு பாருங்க.” என சீற்றத்தோடு கூறினான் அவன்.
“உன்னால ஒருத்தரோட வாழ்க்கையை அழிஞ்சு போச்சு.. அதைப்பத்தி உனக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா இல்லையா…? நீ அமுதாவைக் கொல்லலைன்னா இந்நேரத்துக்கு என் பீமா அவருக்கு பிடிச்சவ கூட நிம்மதியா வாழ்ந்திருப்பாரே. இப்படி பழி வெறில அந்த மனுஷன் தன்னோட வாழ்க்கையை தொலைச்சுட்டு நிற்கிறதுக்கு காரணமே நீங்கதானேடா பாவிங்களா..” என்றவளுக்கு தொண்டை அடைத்தது.
“எதே உன் பீமாவா…??? என்ன அவன் மேல லவ்வா…?” எனக் கேட்டான் சித்தார்த்.
“ஆமா என் பீமாதான். இப்போ என்ன.?” என சற்றும் குறையாத சீற்றத்தோடு கேட்டாள் அவள்.
“முட்டாள் முகி. அவன் ஜெயில்ல இருந்து வந்தா முதலாவது உன்னைத்தான்டி கொல்லுவான். அவனை போலீஸ்ல மாட்டிவிட்டது நீதான். அதை மறந்துடாத. உனக்கொரு ஆபத்துன்னா நான்தான் வந்தாகணும்.” என்றான் சித்தார்த்.
“அவர் கையால செத்தாக் கூட எனக்கு சந்தோஷம்தான். பட் அதுக்கு முதல் உனக்கு நான் தண்டனை வாங்கித் தராம விட மாட்டேன்.” எனச் சீறினாள் அவள்.
சிம்மனோ சித்தார்த்தை பார்வையால் கட்டுப்படுத்தியவர்,
“தங்கம் நீ எதையும் யோசிச்சு கவலைப் படாத. எல்லா பிரச்சனையும் நான் பாத்துக்குறேன். உனக்கு அந்த பீமாவை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். அவன் கூட நான் பேசுறேன்.” என்றார் சிம்மன்.
“என்னப்பா அவன் கூட இவளை சேர்த்து வைக்கப் போறீங்களா..?” எனக் கோபத்தோடு கேட்டான் சித்தார்த்.
“எத்தனை நாளைக்குத்தான் சண்டை போட்டுக்கிட்டே இருக்கப் போறீங்க..? ரெண்டு பேரும் முகி மூலமா சேர்ந்துடுங்க. இந்தப் பிரச்சனையை சுமூகமா தீர்த்திடலாம். என்ன இருந்தாலும் இப்போ அவன் நம்மளோட மாப்பிள்ளைடா.” எனச் சிரித்தார் அந்த நல்ல தந்தை.
தந்தையின் பேச்சில் அவளுக்கு அருவருத்துப் போனது.
இவ்வளவு நாளும் பேரழகாகத் தெரிந்த அவளுடைய குடும்பம் இப்போது அருவருப்பின் உச்சமாக மாறிப் போனது.
நீண்ட நேரமாகியும் முகியோ வாய் திறந்து எதுவுமே பேசாது காதே கேளாதவள் போல் இருப்பதைக் கண்ட சித்தார்த்தின் புருவங்கள் மெல்ல கேள்வியாய் உயர்ந்தன.
“இப்போ உனக்கு என்ன தான்டி வேணும்..?” எனக் கேட்டான் அவன்.
“நீ போலீஸ்ல சரண்டர் ஆகணும். பீமா வெளியே வரணும்.” என்றாள் அவள்.
“பீமா… பீமா… பீமா… ச்சே… லிசின் முகி. அவனை அவ்ளோ சீக்கிரமா வெளியே வர விட்ருவேனா..? அது உன்னோட கனவுல கூட நடக்காது. அமுதாவோட கேசையும் அவன் தலையிலேயே கட்டி ஆயுசு பூரா அவன ஜெயில்ல அடைக்கலைன்னா என் பேரு சித்தார்த் இல்லை.” என்றான் அவன்.
“யாரு யாரை ஜெயில்ல அடைகிறாங்கன்னு பார்க்கலாம்.” எனத் திமிராகக் கூறியவளை அதிர்ந்து பார்த்தான் அவன்.
“என்ன சொல்ற…?” என புரியாமல் கேட்டவனை அழுத்தமாகப் பார்த்தவள்,
“நடந்த எல்லா உண்மையும் போலீஸ் கிட்ட சொல்லிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னை அரெஸ்ட் பண்ணிருவாங்க. உனக்கு ஆயுள் தண்டனையோ தூக்கு தண்டனையோ நல்லா அனுபவிச்சுக்கோ ஆல் தி பெஸ்ட்.” என்றாள் முகி.
“வாட் போலிஸ்ஸுக்கு கால் பண்ணியா..???? எப்போ…???” எனத் தாயும் மகனும் ஒரே நேரத்தில் அதிர,
அப்போதுதான் அவள் பீமாவின் அலைபேசியோடு குளியல் அறைக்குள் நுழைந்தது நினைவு வர தன் தலையில் பலமாக தட்டிக் கொண்டான் சித்தார்த்தன்.
அடுத்த கணமே பொங்கி எழுந்த கோபத்தில் முகியின் கூந்தலை இறுகப் பற்றியவன் அவளுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
“கொழுப்பெடுத்த கழுத. எவ்ளோ தைரியம் இருந்தா என் மேலேயே கம்ப்ளைன்ட் கொடுத்திருப்ப…? அந்த ருத்ராவை கொன்னதுக்கு பதிலா உன்னைக் கொன்னுருக்கணும்.” என சீறியவன் மேலும் அவளை அடிக்க முனைய சித்தார்த்தை தடுத்து நிறுத்தினார் சிம்மன்.
“சித்து அவளை அடிக்காத. என்ன இருந்தாலும் இவ நம்ம வீட்டுப் பொண்ணு. அவளே கூடிய சீக்கிரம் நம்மள புரிஞ்சிப்பா.” என்றார் அவர்.
“லூசாப்பா நீ…? புரியாம பேசிக்கிட்டு இருக்கீங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் வந்து என்ன தூக்கிட்டு போகப் போறாங்க. இந்த பைத்தியக்காரியை வெச்சுகிட்டு என்னமோ பண்ணித் தொலைங்க. ச்சை…” எனக் கத்தியவன் அடுத்த கணமே தன்னுடைய பாஸ்போர்ட்டையும் பணத்தையும் எடுத்தவாறு அங்கிருந்து வெளியேற முயல, அவனின் வழியை மறைத்தாள் முகி.
ஏற்கனவே அவள் மீது கோபத்தில் இருந்தவன், அவள் தன்னுடைய வழியை மறைக்கவும் கொதித்துப் போனான்.
அவளுடைய தலையைப் பிடித்து சுவற்றில் மோதியவன் அவள் வலியில் சுருண்டு விழவும் அதனைக் கண்டு திருப்தியாக ரசித்தவன் அடுத்த நொடியே அங்கிருந்து கிளம்பிச் சென்றிருந்தான்.
“முகிஇஇஇஇஇ ஐயோ என் தங்கமே… ரெ.. ரெத்தம் வருது….” எனப் பதறியவாறு நெருங்கிய தந்தையின் கரத்தை தட்டி விட்டவள் வலியில் துடித்துப் போனாள்.
முன் நெற்றியில் அடிபட்டு இரத்தம் கசியத் தொடங்கியிருந்தது.
“ஹாஸ்பிட்டல் போகலாம் தங்கம்..” எனக் கலங்கியவரை நேராகப் பார்த்தவள்,
“அமுதா இடத்துல நான் இருந்திருந்தா எ… என்ன பண்ணிருப்பீங்க…?” எனக் கேட்டாள்.
உடல் விறைத்துப் போனார் அவர்.
“அ… அப்படி சொல்லாத தங்கம்… அ… அப்பாவோட நெஞ்சே வெடிச்சிருக்கும்…” என்றவரை வெறுமையாக பார்த்தவள்,
“உங்க வீட்டுப் பொண்ணு மட்டும் தங்கம்.. இதே வேற பொண்ணுன்னா தகரமாப்பா..? அவளும் என்னை மாதிரி ஒரு பொண்ணுதானே..? ஏ.. ஏன்பா இவ்ளோ சுயநலம்…? நீங்கதான் என்னோட ஹீரோ ரோல்மாடல் எல்லாமே.. ஆனா இப்போ உங்க முகத்தைப் பார்க்கவே பிடிக்கலைப்பா.. அசிங்கமா தெரியுறீங்க..” என்றவள் வேதனையோடு முகம் திருப்பிக் கொண்டாள்.
“அம்மாடி…!!!!!??” எனக் கலங்கி நா தழுததழுத்தவரைப் பார்த்து,
“கொ… கொஞ்சம் தண்ணி தர முடியுமா…?” என இதழ்கள் துடிக்கக் கேட்டாள்.
“இதோ கொண்டு வரேன் தங்கம்.” என வேகமாக எழுந்து அவர் நீரை எடுத்து வரச் செல்ல அடுத்த நொடியே அந்த வீட்டை விட்டு வெளியேறி வேக வேகமாக ஓடத் தொடங்கினாள் அவள்.
இத்தனை நாட்களும் எப்போது இந்த வீட்டிற்கு வருவது என ஏங்கிப் போய் இருந்தவளுக்கு இப்போது இந்த வீடு நரகமாக காட்சியளித்தது.
வீட்டை விட்டு வெளியே வந்தவளுடைய கால்களோ நேராக போலீஸ் ஸ்டேஷனை நோக்கிச் செல்லத் தொடங்கின.
எந்தக் குற்றமும் செய்யாத பீமா என்பவன் அங்கே அல்லவா இருக்கிறான். அவனை என எண்ணி மனம் நொந்தவள் மனம் முழுவதும் வலியைக் சுமந்தவாறு காவல் நிலையத்தை நோக்கிச் செல்லத் தொடங்கினாள்.
சித்தார்த் அவளை சுவற்றோடு மோதியதில் அவருடைய முன் பக்க தலையோ சற்றே வீங்கிப் போயிருக்க அவளுக்கோ தலை சுற்றுவதைப் போல இருந்தது.
அதே கணம் அவளுடைய அருகே காரொன்று வந்து உரசுவதைப் போல நிற்க, பயந்து போனவள் சட்டென பின்னால் நகர்ந்தாள்.
அந்தக் காரைத் திறந்து கொண்டு வெளியே இறங்கியவனைக் கண்டதும் அவளுடைய முகமோ அதிர்ச்சியில் சட்டென மாறியது.
“என் பீமா….” என முணுமுணுத்த உதடுகள் துடிக்க, அவளின் விழிகளில் இருந்து கண்ணீர் நில்லாமல் வழியத் தொடங்கியது.
அடுத்த கணமே அவனை நெருங்கி விம்மலோடு அணைக்க முயன்றவளை அருவருப்பான பார்வையில் உறைய வைத்தான் அவன்.
அந்த அருவருப்பான பார்வையில் அக்கணமே மாண்டு போனாள் அவள்.
“பீ… பீமா… சா.. சா..ரி…”
“கார்ல ஏறுடிஇஇஇ…” என்ற அவனுடைய கர்ஜனையில் உடல் தூக்கிவாரிப் போட, அவனை நோக்கி மெல்ல அடி எடுத்து வைத்தவள் அதற்கு மேல் தாங்க முடியாது வீதியிலேயே மயங்கிச் சரிந்தாள்.
💜💙💙💜
அடுத்த எபியில் ப்ளாஷ் பேக் வரும் டியர்ஸ்..
பாதி எழுதிட்டேன்..
அடுத்த எபி இன்னைக்கே போடுறேன்🌷💜
