உயிரோடு விளையாடு அசுரா
உயிர் – 14
முகிலாஷியின் இதயமோ ஒவ்வொரு நொடியும் பயத்தில் எகிறிக் குதித்துக் கொண்டிருந்தது. கொஞ்சம் கூட இரக்கமே இன்றி அவளுடைய மென்மையான உடலை மரத்தோடு கயிற்றால் இறுகப்பிணைத்து வைத்திருந்தவனை உணர்வுகளற்று வெறித்துப் பார்த்தாள் அவள்.
தான் கோபத்தில் நிதானம் சிறிதும் இன்றி பேசியதால்தான் தன்னைக் கட்டி வைத்திருக்கிறான் என நினைத்தவள் அவிழ்த்து விடும்படி கெஞ்ச,
அவனோ “சாரி டியர்.” என்றவாறு கையில் பெட்ரோல் கேனை எடுக்கவும் மிரண்டு தான் போனாள் அவள்.
அவளுடைய பெரிய விழிகளோ பீமாவின் கரத்தில் இருந்த பெட்ரோல் கேனைக் கண்டு இன்னும் பெரிதாக விரிந்தன.
“எ.. என்னப் பண்ணப் போறீங்க..? இ… இத என் மேல ஊத்தப் போறீங்களா.?” என அழுகுரலில் கேட்டாள் அவள்.
அவனோ நிதானமாக பெட்ரோல் கேனின் மூடியைத் திறக்க, அவளுக்கோ இதயம் தொண்டைக்குள் வந்த துடிக்கத் தொடங்கியது.
அவனுடைய செயலில் நடுநடுங்கிப் போனாள் முகிலாஷி.
அவனோ அவளின் அருகே நெருங்க அவளோ “நோஓஓஓஓஓ…..” என அலறத் தொடங்கினாள்.
அவளுடைய அலறல் அந்த இடத்தை அதிரச் செய்தது.
“எ… என்னைக் கொளுத்தப் போறீங்களா..? எ…ன்ன பண்றீங்கன்னு தெரிஞ்சு தான் பண்றீங்களா..? ப்ளீஸ் இதெல்லாம் ரொம்ப பெரிய பாவம்… என்ன விட்ருங்க.. எ.. எனக்கு பயமா இருக்குங்க..” எனக் கதறத் தொடங்கினாள் அவள்.
அவளுடைய கதறலில் அவனுடைய கரம் ஒரே ஒருகணம் அசைவற்று நின்றது.
பின் பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவன் அடுத்த நொடியே அவளுடைய உடல் மீது பெட்ரோலை ஊற்றத் தொடங்க வெடவெடத்துப் போனாள் அவள்.
“வ்வேணாம் பீ… பீமா… நா… நான் வலி தாங்க… தாங்கவே மா… மாட்டேன்.. என்னை விட்ரு… நா.. நான் எரிஞ்சு சாக விரும்பலை.. என்னைக் கொளுத்திராத.. ப்ளீஸ்… ப்ளீஸ்… ப்ளீஸ்…” எனக் கதறியவளை பெட்ரோலால் குளிப்பாட்டினான் பீமா.
அவளுடைய கதறல் அவனுடைய இதயத்தை கத்தியால் குத்தியதைப் போல வலிக்கச் செய்தது. தன்னை இரும்பாக்கிக் கொண்டான் அவன்.
உடல் நடுங்கியவாறு விழிகளை மூடிக்கொண்டாள் அவள்.
அவளுடைய கழுத்து மார்பு வயிறு என பெட்ரோல் வழிந்து உடல் முழுவதையும் நனைக்க அவளுக்கு மனமும் உடலும் அச்சத்தில் பதறித் துடித்தது.
உயிரோடு எரித்துக் கொல்லும் அளவிற்கு அப்படி என்ன தீங்கை அவனுக்கு நான் செய்தேன் என தவித்துப் போனாள் அவள்.
பெட்ரோலும் தீயும் அவளுடைய உடலில் உறவாடினால் அவளால் உயிரோடு தப்பிப்பது இயலாத காரியம் அல்லவா.?
அவன் தன் உடலில் ஊற்றிய பெட்ரோலோ தன்னுடைய ஆடைகளை நனைத்திருக்க அதற்கு மேலே அவளுடைய கண்ணீரும் அவளை நனைக்கத் தொடங்கியது.
எதுவுமே செய்ய முடியாது கைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய உயிரைக் காப்பாற்ற தன்னந்தனியாக கதறிக் கொண்டிருந்தாள் அவள்.
மனதின் ஓரம் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச தைரியம் கூட கரைந்து இல்லாமல் போக மிகவும் சோர்ந்து பலவீனமாகினாள் அவள்.
பீமாவோ ஒரு நொடி கூட தன்னுடைய பார்வையை அவளின் மீதிருந்து அகற்றவே இல்லை. அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தவன் அவளுடைய கதறலையும் பயத்தின் துடிதுடிப்பையும் கண்டு தனக்குள் இறுகி நின்றான்.
“உனக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா…? ச்சீஈஈ.. நீ எல்லாம் மிருகம்.. இல்ல இல்ல மி… மிருகத்துக்கு கூட கொஞ்சமாவது இரக்கம் இருக்கும்.
உன்கிட்ட அது கூட இல்லை. நீ ஒரு அரக்கன். டெமன்.” என வெடித்தாள் அவள்.
அவனோ அப்போதும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, மீண்டும் உயிர் பிச்சை கேட்டு கதறத் தொடங்கினாள் முகி.
அவனோ அடுத்த சில நொடிகளில் தன்னுடைய செல்போனை வெளியே எடுத்தவன் பெட்ரோலில் நனைந்து மரத்தோடு பிணைக்கப்பட்டிருந்த முகிலாஷியை வீடியோ எடுக்கத் தொடங்கினான்.
அவளுடைய கதறலை தன்னுடைய ஃபோனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டவனின் முகத்திலோ மிளிர்ந்தது வெற்றிப் புன்னகை..!!
அந்த இரண்டு நிமிட வீடியோ முழுவதும் அவளுடைய அழுகையும் கெஞ்சலும் கதறலுமே நிறைந்து போயிருக்க, அதை பார்ப்பவருக்கோ நிச்சயம் இதயத்தில் உதிரம் வலியும்.
வீடியோவை எடுத்து முடித்தவன் அதனை பத்திரப்படுத்தி விட்டு தன்னுடைய போனை தன் பாக்கெட்டினுள் போட்டுக் கொண்டான்.
அடுத்த சில நொடிகளில் அவனோ அவளை நெருங்க, அவளோ தன்னைக் கொளுத்தப் போகிறான் என எண்ணி ஸ்தம்பித்துப் போனாள்.
அவளுக்கோ மூச்சடைத்துப் போனது.
அவளை நெருங்கியவன் மள மளவென அவளுடைய கட்டுக்களை அவிழ்த்து விட, அவளோ தொய்ந்து அவன் மீதே சரிந்தாள்.
அவள் மூச்செடுக்காது இருப்பதை உணர்ந்து அவளை உலுக்கியவன் அவளுடைய முதுகில் தட்ட, நின்று போன அவளுடைய சுவாசமோ மீண்டும் உயிர் பெற்றது.
“அவ்ளோதான் முகி… ரிலாக்ஸ்.” என எதுவுமே நடக்காததைப் போல அவளோடு உரையாடினான் அவன்.
அவளுக்கோ அச்சத்தில் இதழ்கள் வேறு நடுங்கிக் கொண்டிருக்க,
பெண்ணவளுக்கு அவனுடைய முகத்தை பார்க்கக் கூட சற்றும் பிரியமே இல்லை.
தன் வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு கொடூரனை அவள் சந்தித்ததே இல்லை என அக்கணம் எண்ணிக் கொண்டாள் அவள்.
அவளுடைய உடலில் இருந்த சிறுசிறு காயங்களோ பெட்ரோல் பட்டதும் காந்தியது..!! எரிந்தது..!!
உடல் எரிவு ஒரு பக்கம் மன உளைச்சல் ஒரு பக்கம் என ஒரு கொடுமையான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டாள் அந்த மென் மாது.
அவனோ அவளுடைய முகத்தில் படாதவாறு கழுத்துக்கு கீழே பெட்ரோலை ஊற்றியிருந்தவன்,
அவளுடைய உடலை ஆராய்ந்தான்.
பெட்ரோலோ காற்றின் உபயத்தால் ஆவியாகி விட்டிருந்தது.
அவளுடைய உடையில் மாத்திரமே பெட்ரோலின் ஈரம் இருப்பதைக் கண்டவன் தான் எடுத்து வைத்திருந்த ஈரத்துணி ஒன்றினை எடுத்து அவளைப் பரபரவெனத் துடைக்கத் தொடங்கினான்.
அவளோ அவனுடைய கரத்தில் பாவை போல அசையாது நின்றாள்.
சற்று நேரத்தில் அவளைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்டவன் தோட்டத்திலிருந்து அந்த வீட்டினுள் நுழைந்தான்.
அவளைத் தூக்கியவாறு நேரே பாத்ரூமிற்குள் நுழைந்தவன் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தவளை ஷவரின் அடியில் நிறுத்தினான்.
பெட்ரோலின் மணம் அவளுடைய மூக்கை துளைக்கத் தொடங்க, தன் கரத்தினால் மூக்கைப் பொத்தினாள் அவள்.
“ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்…” என முணுமுணுத்தன அவனுடைய உதடுகள்.
“என்னால முடியலை. உடம்பெல்லாம் எரியுது….” என விசும்பினாள் அவள்.
அவளுடைய கூற்றைக் கேட்டு திகைத்தவன் அவளுடைய உடலை பரிசோதித்தான் ஆங்காங்கே கைகளிலும் கால்களிலும் சிறு சிறு சிராய்ப்புகள் போல இருந்த காயத்தை பார்த்தவனுக்கு ஐயோ வென்றிருந்தது.
தோட்டாக்களில் இருந்து தப்பிக்க தரையில் உருண்டு புரண்ட போது இந்த சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது என புரிந்து கொண்டவன் தன்னுடைய கேசத்தை அழுந்தக் கோதினான்.
அவளோ ஒரு கட்டத்தில் கண்ணீர் வற்றிப் போய் அமைதியாகிப் போனாள்.
அவனுடன் வந்தது முதல் இன்று வரை அவள் அனுபவித்த வலிகள் யாவுமே மிக மிக மோசமானவை அல்லவா.?
இன்றோ தன்னைக் கட்டி வைத்து தன் உடலில் பெட்ரோல் ஊற்றி எரிக்கும் அளவுக்கு அப்படி என்ன என் மீது வன்மம் என எண்ணியவள் முற்றிலும் உடைந்து போனாள்.
அவனோ அவள் உடையில் படிந்த பெட்ரோல் முழுவதையும் கழுவிச் சுத்தம் செய்தவன் உடல் விறைத்து போயிருந்தவளை இழுத்து தன் மார்பில் சாய்த்துக் கொண்டான்.
அவளோ திமிறவோ விலகவோ இல்லை. அவன் மார்பில் புதைந்து கண்ணீர் உகுக்கத் தொடங்க, பீமாவின் மனம் ஆட்டம் காணத் தொடங்கியது.
“எ.. என்னை ஏன் இப்படி சித்ரவதை பண்றீங்க..?” குமுறினாள் அவள்.
அவனோ அவளை இன்னும் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான்.
அவனுடைய ஒற்றைக் கரம் உயர்ந்து அவளுடைய கூந்தலை வருடத் தொடங்கியது.
அவளுக்கோ அவனுடைய செயல் ஆட்டை பலியிடுவதற்கு முன்பு அதனுடைய தலையில் தடவி கொடுப்பதைப் போல இருந்தது.
தானும் இவனுடைய கரத்தில் எப்படியாவது ஒரு நாள் இரக்கத்தான் போகிறோம் என்பதை உணர்ந்து கொண்டவள், அடுத்த கணமே அவனுடைய அணைப்பில் இருந்து திமிறி விடுபட்டாள்.
“ரொம்ப பயந்துட்டியா..?” எனக் கேட்டான் பீமா. முதன் முறையாக அவனுடைய குரலில் மென்மை சற்றே எட்டிப் பார்த்தது.
எவ்வளவு பெரிய பாதகமான செயலை செய்துவிட்டு எதுவுமே நடவாதது போல கேள்வி கேட்டவனை தன்னுடைய நகங்களால் பிராண்டி வைக்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு.
ஆனால் நினைப்பது எல்லாம் நடத்தி விடுவதற்கு அவள் ஒன்றும் அத்தனை பலசாலி அல்லவே. தனக்கு எதிரே மலைமாடு போல அஜானபாகுவாக நிற்கும் பீமாவைக் கண்டதும் அவனுக்கு எதிரான அவளுடைய எண்ணங்கள் யாவும் சீட்டுக்கட்டு மாளிகையாக சரிந்து வீழ்ந்து போயின.
தான் அவனைத் தாக்கினால் கொசுவை நசுக்குவது போலத் தன்னையும் நசுக்கிக் கொன்று விடுவான் என்ற உண்மையை அறிந்தவளுக்கு கண்ணீர் மாத்திரம் நில்லாமல் பெருகி வழிந்தது.
“ப்ச்…. இப்போ எதுக்கு ஒப்பாரி வைக்கிற.? அதான் உன்னை எதுவும் பண்ணலைல.? டோன்ட் வொர்ரி அவ்ளோ சீக்கிரமா உன்னைக் கொல்ல மாட்டேன்.” என்றான் அவன்.
“இப்படித் தினம் தினம் என்னை சாகடிக்கிறதுக்கு ஒரேடியா கொன்னாக் கூட பரவால்ல.” என்றாள் அவள்.
அவனோ சட்டென அவளுடைய நெற்றியில் தன் துப்பாக்கியை எடுத்து வைத்தவன், “அப்போ இப்பவே உன்னை கொன்னுரட்டுமா.?” எனக் கேட்டான்.
அவளோ மீண்டும் அச்சத்தில் திணறிப் போனாள்.
எங்கே உண்மையாகவே தன்னைக் கொன்று விடுவானோ என எண்ணியவளுக்கு தேகம் சில்லிட்டுப் போனது.
அவளுடைய பார்வையோ மையமிட்டு தன் நெற்றி மேல் இருந்த துப்பாக்கியை வெறித்தது.
“என்ன பதிலையே காணோம்..? டெல் மீ டியர் இப்போவே உன்னைக் கொன்னுரட்டுமா.?” எனக் கேலியாகக் கேட்டான் அவன்.
இதழ்களை அழுந்த மூடிக்கொண்டு வாயைத் திறக்காமல் தன்னுடைய பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள் அவள்.
செத்து தொலையவும் பயமாக இருந்தது அவளுக்கு.
அவனோ துப்பாக்கியை எடுக்காமல் இருக்க, மீண்டும் அவனை நிமிர்ந்து பார்த்தவள் கரங்கள் நடுங்க தன் நெற்றியில் பதிந்திருந்த துப்பாக்கியில் தன் கரத்தை பதித்தாள்.
“என்ன வலிக்காம கொன்னுடுறீங்களா ப்ளீஸ்…?” என உதடு துடிக்க, தொண்டை அடைக்க கேட்டவளைக் கண்டு பெருமூச்சோடு தன்னுடைய துப்பாக்கியை இறக்கி உள்ளே வைத்தான் பீமச் சக்கரவர்த்தி.
“சில வலிகளைத் தவிர்க்க முடியாது முகி. அதை நாம தாங்கித்தான் ஆகணும்.” என்றான் அவன்.
அவனுடைய குரலில் இருந்த உணர்வை அவளால் பிரித்தரிய முடியவில்லை.
அவனுடைய முகி என்று அழைப்பிலேயே அவள் ஸ்தம்பித்து நின்று விட்டாள்.
அவளுக்கோ தன் செவிகளையே நம்ப முடியவில்லை.
டியர் என்ற அன்புக்குரிய வார்த்தையை அழைத்து அழைத்து உயிர் பயத்தை காட்டியவனோ, இப்போது தன்னுடைய முகி என்ற பெயரையும் அழைத்து தன்னை பயப்பட வைத்து விடுவானோ என அச்சம் தான் பிறந்தது அவளுக்கு.
அவனுடைய குரலில் இருந்த கனிவை சற்றுத் தாமதமாகவே உணர்ந்தவள் எதுவும் கூறாது தன்னுடைய வாயை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
பெண்களின் மனதை அறிவது மிகவும் கடினம் எனக் கூறியது யார் என்று தெரிந்தால் நிச்சயம் அப்படி கூறியவரின் தலையை உடைத்து விடுவாள் முகிலாஷி.
ஆண்களின் மனது மட்டும் என்ன திறந்த புத்தகமாகவா இருக்கிறது.?
ஆண்களின் மனதிலும் ஆழ்கடல் போல பல மர்மங்களும் ரகசியங்களும் உண்டு என்பதை பீமாவைப் பார்த்து அறிந்து கொண்டாள் அவள்.
அவனுக்குள் இருக்கும் ரகசியங்களை அறிந்து கொள்வதற்கு முதல் தான் இறந்து மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விடுவேன் என்ற எண்ணமும் அவளுக்கு தோன்றத்தான் செய்தது.
தனக்கு முன்னே நிற்பவன் தன்னுடைய முகத்தைப் பார்த்தே தன்னுடைய சிந்தனைகளை எடை போட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாது அவளோ தன்னுடைய இஷ்டத்துக்கு சிந்தனைக் கப்பலில் வலம் வந்து கொண்டிருந்தாள்.
சிந்தனைகளுக்கு ஏற்ப அவளுடைய புருவங்கள் உயர்ந்த தாழ்வதையும் இதழ்கள் வளைவதையும் மூக்கு விடைப்பதையும் கண்டவனுக்கு இதழ்கள் பிரிந்து சிறு புன்னகையும் தோன்றலாயிற்று.
💜💙💙💜
