உயிரோடு விளையாடு அசுரா
உயிர் – 11
பீமாவின் எதிரிகளோ அவனை அவனுடைய கோட்டைக்குள் வந்து தாக்கத் தொடங்க ஒரு கணம் ஸ்தம்பித்து போனான் அவன்.
அவனுடைய குடும்பத்தை தவிர அவன் இங்கிருப்பது வேறு யாருக்கும் தெரியாது அல்லவா.?
அப்படி இருக்கையில் நான் இங்கே இருப்பதை என் எதிரிகள் எப்படிக் கண்டுபிடித்தனர் என எண்ணி திகைத்தவன் தோட்டாவில் இருந்து தன்னை பாதுகாக்கும் பொருட்டு சட்டென குனிந்து சோபாவின் பின்னே மறைந்தான்.
அவன் முகமோ கோபத்தில் தணலைப் போலக் கனன்று கொண்டிருந்தது.
அதே நேரம் தனக்கு பின்னே வந்து கொண்டிருந்த முகிலாஷியின் நினைவு வர சட்டென அவளைத் திரும்பிப் பார்த்தான் பீமா.
அவளோ பேய் அறைந்தாற் போல அந்த இடத்திலேயே விழிகளை மூடியவாறு உறைந்து போய் நிற்க, அவளைக் கண்டு பதறியவன் “முகிஇஇஇ கீழே படுஉ…” எனக் கத்தினான்.
அச்சத்தில் உறைந்து போய் இருந்தவளுக்கோ அவனுடைய அலறல் செவிதனை கிஞ்சித்தும் எட்டவே இல்லை.
அதற்குள் தோட்டாக்கள் படபடவென மழை போல பொழிய சட்டென நிலத்தில் உருண்டவாறு அவளை நெருங்கியவன் அவளின் கரத்தை பற்றி கீழே இழுத்திருந்தான்.
அவன் பிடித்து இழுத்ததில் சுயமடைந்து அலறியவாறே கீழே அவன் மார்பின் மீது விழுந்தாள் அவள்.
அடுத்த நொடி அவள் “வீல்…” என அலற, சட்டென அவளைப் புரட்டி தரையில் கிடத்தியவன் அவளுடைய உதடுகளை தன் கரம் கொண்டு மூடி, “உஷ்ஷ்…” என்றான்.
“ப… பயமா இருக்கு.” என தேகம் நடுங்கியவளின் கன்னத்தை தட்டியவன், “ஒன்னும் ஆகாது தைரியமா இரு..” என்க, அவளுடைய கரங்களோ உயர்ந்து அவனுடைய கறுப்பு நிற டீஷர்ட்டை இறுகப் பற்றிக் கொண்டன.
அவனோ அவளைத் தோட்டா துளைக்காதவாறு தன் உடலால் மூடியவன், அவள் தன்னுடைய டீஷர்ட்டைப் பற்றி இழுக்கவும் அவள் மீது பேலன்ஸ் தவறி விழுந்தான்.
“ப்ச்… இடியட்…” எனச் சீறியவாறு எழ முயன்றவனின் கழுத்தை தன் கரம் கொண்டு வளைத்துக் கொண்டாள் முகிலாஷி.
ஒவ்வொரு தோட்டாவின் சத்தத்திற்கும் அவளுடைய உடல் தூக்கித் தூக்கிப் போட்டது.
உடும்புப் பிடியாக தன்னை இறுக அணைத்துக் கொண்டு கிடந்தவளின் காதோரம் குனிந்தவன்,
“டியர்…. நீ இப்போ என்னை விடலைன்னா இன்னும் ரெண்டே நிமிஷத்துல ரெண்டு பேருமே சொர்க்கம் போயிருவோம். அவனுங்க உள்ளே வர்றாங்கடி லீவ் மீ.” என அழுத்தமாக கூறினான் அவன்.
அவளோ இன்னும் நடுங்கிப் போனாள்.
“ஊஃப்ப்…” என்றவன் அடுத்த கணம் அவளுடைய இடையினூடே தன் கரத்தை நுழைத்து அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டவன் சட்டென சரிந்து உருண்டவாறே அருகே இருந்த அறை ஒன்றுக்குள் அவளோடு நுழைந்து கொண்டான்.
அடுத்த கணம் அவளைத் தன் உடலில் இருந்து பிரித்தவன், சட்டென அந்த அறையின் கதவைப் பூட்டினான்.
அவளோ அஞ்சி நடுங்கியபடி நிற்க, அவளைப் பாதுகாப்பாக தரையில் அமர வைத்தவன்,
“உனக்கு ஒன்னும் ஆகாது. பயப்படாம இங்கேயே இரு. என்ன நடந்தாலும் வெளியே வராத.” என்றவன் அந்த அறையை விட்டு வெளியேற முயல, அடுத்த நொடியே அவனைப் பாய்ந்து மீண்டும் இறுக அணைத்துக் கொண்டாள் முகிலாஷி.
பீமாவின் ஆட்களும் தங்களை தாக்கியவர்களை துப்பாக்கியால் தாக்கத் தொடங்க படார் படார் என தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது தோட்டாக்களின் பேரொலி.
அந்தப் பேரொலியின் சத்தத்தில் அவளுடைய மென்மையான இதயமோ அதிர்ந்து வேக வேகமாகத் துடிக்க தனித்திருக்க பயந்தவள் பீமாவின் மார்பு கூட்டினுள் புதைந்து கொண்டாள்.
“ப்ளீஸ் என்னை விட்டுப் போயிடாதீங்க.” என அழுதவாறு தன் உடலோடு ஒட்டியவளை குனிந்து பார்த்தான் பீமச் சக்கரவர்த்தி.
அவளுடைய திடீர் இறுகிய அணைப்பு அவனை அதிரச் செய்திருந்தது.
அதே நேரம் வெளியே நிலைமை மோசமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தவன் தான் செல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்து அவளை விலக்க முயன்றான்.
இரும்போடு காந்தம் ஒட்டிக்கொண்டதைப் போல தன்னோடு பிணைந்து இருந்தவளை பிரிக்க முயன்றவன் அவளுடைய உடல் அதிர்ந்து நடுங்குவதை கண்டு தன் கைகளை விலக்கிக் கொண்டான்.
“ஹேய் இங்கே என்னை மீறி எதுவுமே நடக்காது பயப்படாதே.” என அவன் அறியாமலேயே அவளை சமாதானம் செய்ய தொடங்கினான் பீமா.
அச்சத்தின் உச்சத்தில் நின்றவளுக்கோ அவனுடைய சமாதான வார்த்தைகள் எங்கணம் கேட்கும்..?
அவளோ இன்றோடு தன் கதை முடிந்தது எனும் வகையில் நடுங்கி ஒடுங்கிப் போய் நின்றாள்.
இடைவிடாத தோட்டாக்களின் சத்தம் வேறு அவளை இன்னும் பலவீனப்படுத்த தன் முன்னே இருந்தவனை பாதுகாப்பு கவசமாக எண்ணி அணைத்துக் கொண்டாள் அவள்.
அருகில் பீமா மட்டும் அல்ல பேய் நின்றிருந்தால் கூட இப்படித்தான் அணைத்திருப்பாள்.
அறையின் வெளியே சண்டை தீவிரமாக நடப்பது புரிய பீமாவின் சிந்தனைகள் யாவும் முகிலாஷியை விட்டு நீங்கி தன்னுடைய எதிரிகள் மீது நிலைக்கத் தொடங்கியது.
“முகி நான்தான் சொல்றேன்ல பயப்படாத. என்னை மீறி இங்கே எதுவுமே நடக்காது.” என அவளுக்கு உறுதி அளித்தவன் தன் மார்பில் புதைந்திருந்தவளை விலக்கி பாதுகாப்பான ஓரிடத்தில் அவளை அமரச் செய்தான்.
“நான் திரும்ப வர வரைக்கும் இங்கேயே இரு.”
“ப்ளீஸ் டோன்ட் லீவ் மீ..” என அழுது கரைந்தவளின் கன்னங்களைப் பற்றிக் கொண்டவன்,
“ப்ச்….. முதல்ல அழுகுறத நிறுத்து.” என அதட்டினான்.
அவளோ இன்னும் அதிகமாக அழுதாள். அழுகையில் உடல் குலுங்க அமர்ந்திருந்தவளைக் கண்டு பெருமூச்சு விட்டவன் அவள் அமர்ந்திருந்த இடத்தை ஒரு சோபாவை இழுத்து அவளின் முன்னால் வைத்து அவளை மறைத்தான்.
மருண்ட பார்வை பார்த்தவளைக் கண்டு தன் விழிகளை மூடித் திறந்தவன் அடுத்த கணம் அந்த அறையை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தான்.
வெளியே வந்ததும் தன்னுடைய ஆட்களின் கரத்தில் இருந்த இரண்டு துப்பாக்கியை கைப்பற்றிக் கொண்டவன்,
“ஷிட் இப்போ ஸ்நைப்பர் எதுக்குடா..? வெக்டர் கன்னை கொடு..” என்றவன் சடுதியில் துப்பாக்கியை மாற்றிக் கொண்டான்.
“ டேவிட் எத்தனை பேரு…?” என உறுமினான் பீமா.
“ஒரு பதினைஞ்சு பேர் இருப்பானுங்க பாஸ்.” என்றான் டேவிட்.
“ஒருத்தனும் இந்த கோட்டையை விட்டு உயிரோடு போக கூடாது.” எனக் கர்ஜித்தவன் அடுத்தடுத்த உத்தரவுகளை பிறப்பிக்க அவனுடைய கட்டளையை சிரமேற்கொண்டு செயல்படுத்தினர் அவனுடைய ஆட்கள்.
“டேய் எப்படியாவது அந்த பொண்ண கண்டு பிடிச்சு தூக்குங்கடா. அவளைப் பார்த்தாலே சூட் பண்ணிருங்க.” என எதிர்பக்கம் தாக்கியவர்களில் இருந்து ஒரு குரல் பீமாவின் செவியில் மோத, சட்டென உடல் இறுகிப் போனான் அவன்.
இவர்கள் முகிலாஷியைத் தூக்கிச் செல்வதற்காக வந்திருக்கிறார்கள் என்பது புரிய சினத்தின் உச்சிக்கே சென்றவன் கண்மண் பாராது சுட்டுத்தள்ளத் தொடங்கினான்.
அடுத்த சில நொடிகளில் அந்த வீடு ரணகள பூமியாக மாறிப்போனது.
பீமாவின் ஆட்கள் உள்ளே நுழைந்தவர்களை வேட்டையாடத் தொடங்க சிலரோ உயிர் பிழைத்தால் போதும் என தப்பித்து ஓடிச் சென்றனர்.
சிலர் அந்த இடத்திலேயே இறந்து மடிந்தனர். பீமாவின் பக்கம் வலிமை ஓங்க, எதிராளிகளோ தேனீக்களின் கூட்டமாக கலைந்து பறந்து போயினர்.
அந்த இடமோ சிறிது நேரத்தில் ஓய்ந்து போக, தன் கரங்களில் இருந்த துப்பாக்கியை தூக்கி எறிந்தான் அவன்.
அடுத்த நொடியே தனக்குக் கீழே தரையில் கிடந்த சிலரின் உடம்பைத் தாண்டி அந்த அறையினுள் வேகமாக நுழைந்தான் பீமா.
முகிலாஷி இருந்த இடத்தை நெருங்கியவன் சோபாவை இழுத்து விட்டு அவளைப் பார்த்தான்.
அவளோ தன் இரண்டு காதுகளையும் கரங்களால் பொத்தியவாறு மயங்கிச் சரிந்து இருப்பதை கண்டவனுக்கு பெருமூச்சு எழுந்தது.
அவளுடைய உள்ளங்கால் தொடக்கம் உச்சந்தலை வரை விரைந்து ஆராய்ந்தவன் அவளுக்கு எந்த அடியும் படவில்லை என்பதை உணர்ந்து ஆசுவாசமடைந்தான்.
பின் தன் எண்ணத்தை உணர்ந்து அதிர்ந்தான்.
‘இவளுக்கு என்ன ஆனா எனக்கென்ன.? என எண்ணியவன், மயங்கிக் கிடந்தவளைத் தூக்கி சோபாவின் மீது கிடத்தியவன் தண்ணீர் எடுத்து வந்து அவளுடைய முகத்தில் தெளிக்க அவளோ பதறி அடித்துக் கொண்டு எழுந்தாள்.
நெஞ்சம் பதற சுற்றியும் படப்படபோடு பார்த்தவளை தன் கூர் விழிகளால் ஆராய்ந்தவன் “இன்னும் டூ மினிட்ஸ்ல நாம இங்கிருந்து கிளம்பனும்.” என்றான்.
அவளோ உலக யுத்தமே நடந்தது போல அச்சத்தில் உறைந்து போய் இருக்க அவனோ சாதாரண தடியடி சண்டை போல அதனைத் தூசியாக தட்டி விட்டு உரையாடுவதை கண்டு அவளுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
“உங்களுக்கு பயமே கிடையாதா.? கொஞ்ச நேரத்துல எல்லாருமே செத்து இருப்போம்.” என படபடத்தாள் அவள்.
“சாகனும்னு விதி இருந்தால் செத்து தானே ஆகணும்.” என இலகுவாகக் கூறியவன் “சீக்கிரமா வா….” என்றவாறு முன்னால் நடந்தான்.
அவன் தன்னை விட்டு விலகிச் செல்லவும் மீண்டும் வந்து அவளை அப்பிக் கொண்டது அளவற்ற பயம்.
சட்டென எழுந்து அவன் பின்னாடியே வேகமாக நடந்தாள் அவள்.
அதேநேரம் அவனுடைய முதுகை பார்த்தவள் திகைத்துப் போனாள்.
அவனுடைய முதுகிலோ தோட்டா துளைத்து உதிரம் வழிந்து கொண்டிருக்க, அதனை கண்டவளுக்கு தலை சுற்றுவதைப் போல இருந்தது.
விரைந்து அவனை நெருங்கியவள் “ஐயோ உங்க முதுகுல ரத்தம் வருது.” எனப் பதற்றத்தோடு கூறினாள்.
“தெரியும்…” எனக் கூறியவாறு நில்லாமல் நடந்தான் அவன்.
“அடக்கடவுளே ஹாஸ்பிடல் போகலையா…?” பதறினாள் அவள்.
“நோ நீட்….” என்றவன் அறையின் வெளியே கிடந்த பிணங்களைத் தாண்டிச் செல்ல அவனைத் தொடர்ந்து பின்னால் வந்தவளோ வெளியே ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை கண்டு விக்கித்து போனாள்.
அவள் விழிகளோ கண்ணீரை அருவி போல சொரிய, அவளுடைய கால்கள் நிலத்திலேயே வேரூன்றியதைப் போல அசைவற்றே நின்று விட்டன.
அத்தனை பேரையும் கொன்று குவித்தது இந்த அரக்கன் தான் என உணர்ந்து கொண்டவள் அவனை இன்னும் அதிகமாக வெறுத்தாள்.
முன்னே வேகமாக நடந்து சென்றவன் தன்னைத் தொடர்ந்து அவள் வரவில்லை என்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்தான்.
“இடியட் உன்னை என் பின்னாடிதானே வரச் சொன்னேன்.”
“ச்சீ நீங்க எல்லாம் மனுஷனா.? இப்படி கொஞ்சம் கூட இரக்கும் இல்லாம இத்தனை பேரை எதுக்காக கொன்னு குவிச்சு வச்சிருக்கீங்க.? உங்க நிழல் பட்டா கூட பாவம். உங்க கூட இருக்கிறதால இந்த பாவம் எல்லாம் என்னையும் வந்து ஒட்டிக்க போகுது.” என அழத் தொடங்கினாள் அவள்.
“நானே எரிச்சல்ல இருக்கேன் என்னோட கோபத்தை சீண்டாமா ஒழுங்கு மரியாதையா என்கூட வா.” என அதட்டினான் அவன்.
“அப்பாவி மனுஷங்க உயிரை எடுக்கிற உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது.” என அந்த வரவேற்பறை வாயிலில் நின்று கத்தினாள் அவள்.
அதே நேரம் பீமாவின் ஆட்களோ வந்து இறந்த உடல்களை அள்ளிக் கொண்டு போக தரையில் சிந்திய ரத்தத்தை கண்டு அவளுக்கோ குமட்டிக் கொண்டு வந்தது.
அளவுக்கு அதிகமான ரத்தத்தை பார்த்ததும் தலை சுற்ற, நிற்க முடியாமல் சோபாவை பிடிக்க முயன்றவள், கால் தடுமாறி அப்படியே அந்த உதிரத்தின் மீது விழுந்தாள்.
அடுத்த நொடியே அடித்துப் பிடித்து எழுந்து கொண்டவளுக்கு தன் உடலின் மீதும் இரத்தக் கறை இருப்பதைக் கண்டு உள்ளம் துடிதுடித்துப் போனது.
தன்னை குனிந்து பார்த்தவள் சித்தம் கலங்கியவளாக அழுதவாறே மேலே அறையை நோக்கி ஓடத் தொடங்கினாள்.
அவளுடைய செயல்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பீமாவுக்கு ஏகத்துக்கும் சினம் ஏறிக்கொண்டே போனது.
சினத்தை கட்டுப்படுத்த முடியாது அவளைப் பின்தொடர்ந்து மாடி ஏறினான் அவன்.
“ஏய்…” என்ற கர்ஜனையோடு அறைக்குள் நுழைந்தவன் அறையினுள் அவள் இல்லாததைக் கண்டு குளியல் அறையின் கதவைத் திறந்தான்.
அவளோ அங்கே திறந்து விட்ட ஷவரில் நனைந்தவாறு முகத்தை மூடி விம்மி அழுது கொண்டிருக்க இவனுக்கோ பொறுமை பறந்தது.
💙💜💜💙
