இது ஒருநாள் உறவா தலைவா..?
உறவு – 30
தன்னுடைய அறைக்குள் நுழைந்த தன்ஷிகாவோ தன்னுடைய படுக்கை முதல் குளியலறை வரை அனைத்தையும் பிரித்து மேயத் தொடங்கினாள்.
பின்னே அவள் ஆசை ஆசையாக இத்தனை வருடங்கள் பொக்கிஷமாக பாதுகாத்திருந்த அவளுடைய சங்கிலியைக் காணவில்லை அல்லவா.
அதனை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டுமென எண்ணியவள் அவளுடைய அறையைச் சல்லடை போட்டுத் தேடத் தொடங்கினாள்.
எவ்வளவு தேடியும் அவள் தேடிய பொருள் அறையில் இல்லாது போக அவளுடைய முகமோ வெகுவாக வாடிப்போனது.
‘அச்சோ எங்க விழுந்திருக்கும்னு தெரியலையே. கார்லையும் இல்ல ரூம்லயும் இல்ல பாத்ரூம்லையும் இல்ல. எங்கதான் போச்சு..?’ என எண்ணி சலித்துக் கொண்டவள் மீண்டும் ஒருமுறை தேடிப் பார்த்துக் களைத்துப் போனாள்.
மணியோ நள்ளிரவு ஒன்றாகிப் போனது. அத்தனை நேரமும் தன்னுடைய சங்கிலியைத் தேடி அது கிடைக்காது சோர்ந்து போனவள் இன்னும் விதார்த் அறைக்கு வரவில்லை என்பதை உணர்ந்து திகைத்துப் போனாள்.
எப்போதுமே வெளியே சென்றால் குறித்த நேரத்திற்கு வந்து விடுபவன் இன்று இவ்வளவு நேரம் ஆகியும் வராது போக அவளுக்கோ சற்றே பதற்றமாக இருந்தது.
காலை வேளையாயின் ஏதாவது முக்கிய வேலையில் இருப்பானெனலாம். ஆனால் இந்த நள்ளிரவு வேளையில் அவனைக் காணாததும் அவளுடைய மனமோ பதறத் தொடங்கியது.
தன்னுடைய அலைபேசியை எடுத்து அவனுக்கு அழைப்பெடுத்தவள் அவன் அழைப்பை ஏற்காது போக பயந்து போனாள்.
கீதாவைப் பார்க்க போயிருப்பான் போல என எண்ணிக் கொண்டவள் சற்றே கலங்கிய விழிகளைத் துடைத்துக் கொண்டாள். அவன் எப்போது வருவான் என அவளுடைய விழிகள் கவலையோடு வாயிலை நோக்கிய வண்ணமே இருந்தன.
அடுத்த கணமே அவன் எப்படிப் போனால் தனக்கென்ன.? என அலட்சியமாக எண்ணியவள் அவனைப் பற்றி சிந்திப்பதை நிறுத்த முயன்றாள்.
படுக்கையில் படுத்து விழிகளை மூடியவளுக்கு தன் கூந்தலில் இருந்த ஈரத்தை துடைத்து விடத் துடித்த விதார்த்தின் முகமே மனக் கண்ணில் தோன்றியது.
சட்டென விழிகளைத் திறந்தவள் பெரு மூச்சோடு மீண்டும் தன் அலைபேசியை எடுத்து அவனுக்கு அழைத்தாள்.
அந்தோ பரிதாபம் ரிங் போனதே தவிர மறுமுனையில் இருந்து அவன் அழைப்பை ஏற்கவே இல்லை. ஒரு கட்டத்தில் பயந்து போனவள் இடைவிடாது தொடர்ந்து அழைப்பினை ஏற்படுத்திக் கொண்டே இருக்க,
மறுமுனையில் இருந்து சட்டென அழைப்பு ஏற்கப்பட்டு ஹலோ என்ற குரல் ஒலித்தது.
அந்த குரல் விதார்த்தின் குரல் அல்ல என்பதை உணர்ந்து கொண்டவள் நடுங்கிய கரங்களை அழுத்திப் பிடித்தவாறு, “ஹ… ஹலோ…நீங்க யாரு..? விதார்த் எங்கே..?” என பதற்றத்துடன் கேட்டாள்.
அந்த நபரோ இந்த தொலைபேசியின் உரிமையாளர் பாரின் முன் சுயநினைவு இழந்து கிடப்பதைக் கூற, அவளுக்கோ மனம் நைந்து போனது.
அலைபேசியை எடுத்து பேசியவருக்கு நன்றி கூறியவள் அந்த பாரின் முகவரியை கேட்டு குறித்துக்கொண்டாள். அடுத்த நொடியே தான் தங்கியிருந்த ஹோட்டலின் நிர்வாகியை தொடர்பு கொண்டவள் அங்கிருந்து விதார்த்தை அழைத்து வருவதற்காக ட்ரைவர் ஒருவரை ஏற்பாடு செய்தாள்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவள் கேட்டதைப் போல ட்ரைவர் காருடன் தயாராக நிற்க, தன்னுடைய ஃபோனையும் பர்ஸையும் எடுத்துக் கொண்டவள் அதீத வேகமாக கீழே இறங்கிச் சென்றாள்.
தனக்காக காத்துக் கொண்டிருந்த காரினுள் ஏறியவள் குறிப்பிட்ட முகவரியைக் கூற காரோ வேகமாக விரைந்து சென்றது.
அந்த நள்ளிரவு நேரத்தில் அவளுக்கோ பதற்றம் அதிகரிக்க, கைவிரலில் இருந்த நகங்களை கடித்துத் துப்பியவாறு ஒரு கையால் தன் தலையைத் தாங்கிக் கொண்டு குனிந்து அமர்ந்திருந்தாள் அவள்.
அரை மணி நேரத்தில் அந்த குறிப்பிட்ட பாரின் முன் கார் நிற்க, குளிரில் சுயநினைவு இழந்து ஷர்ட் ஒரு பக்கம் கிழிந்த நிலையில் வீதியில் சுருண்டு படுத்திருந்தவனைக் கண்டதும் அவளுக்குள்ளே ஏதோ உடைவதைப் போல இருந்தது.
இந்த நிலைமையில் அவனை அவள் பார்க்கத்தான் வேண்டுமா என உள்ளம் முழுவதும் ரணமாய் வலிக்க, ஏன் என்றே புரியாது கலங்கி நின்றாள் அவள்.
அடுத்த கணமே இது கலங்கி நிற்பதற்கான நேரம் இல்லை எனப் புரிய ட்ரைவரின் உதவியோடு விதார்த்தை தூக்கிக் காரின் பின் இருக்கையில் படுக்க வைத்தாள். அதன்பின் தானும் காரினுள் ஏறிய அமர்ந்துவிட, காரோ அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலை நோக்கிச் செல்லத் தொடங்கியது.
விதார்த்தோ போதையில் மெல்ல அசைந்து அவளுடைய மடியில் தலை வைக்க, அவளுக்கோ சட்டென கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது.
பின் ஒரு வித வெறுப்பும் தோன்ற, அவனை மெல்ல விலக்கினாள் தன்ஷிகா.
அந்த ட்ரைவரின் உதவியுடன் விதார்த்தை அவனுடைய அறைக்குள் கொண்டு வந்தவள் அவருக்குரிய பணத்தைக் கொடுத்து அவரை அனுப்பி வைத்தாள்.
சோபாவில் சாய்ந்து கிடந்தவனின் இதழ்களோ ஏதேதோ முணுமுணுத்த வண்ணம் இருந்தன.
எப்போதும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் அவனுடைய முடிகளோ தளர்ந்து சரிந்து போயிருக்க, அவனுடைய விழிகள் கூட சிவந்து கலங்கிப் போயிருந்தன.
எதற்காக இப்படி தன்னைத்தானே வருத்திக் கொள்கிறான் எனப் புரியாது அவனையே பார்த்தவாறு தவித்து நின்றாள் தன்ஷிகா.
சற்றே தன்னைத் சமப்படுத்திக் கொண்டு அவனை நெருங்கி அவனுடைய முகம் பார்த்து அவனை அழைத்தவள் அவனிடம் சிறு அசைவு கூட இல்லாததைக் கண்டு மிரண்டு போனாள்.
அவன் அதீத போதையில் இருக்கிறான் என்பதை உணர்ந்ததும் ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்து வந்தவள் அவன் முகத்தில் மெல்ல நீரை அடித்து கழுவத் தொடங்க அவனுடைய விழிகள் சிரமம் கொண்டு திறந்து மூடின.
மேலும் ஒரு துணியை எடுத்து அதை நன்றாக நீரினுள் அமழ்த்தியவள் அந்த ஈரத்தோடு அவனுடைய முகம் கழுத்து என அனைத்தையும் துடைத்து விட அவனுக்கோ சற்றே போதை தெளியத் தொடங்கியது.
வரண்டு கிடந்த அவனுடைய இதழ்களைப் பார்த்தவள் சற்று தண்ணீரை அவனுக்கு பருக்கியும் விட்டாள். இதற்கு மேல் என்ன செய்வதென என அவளுக்கு சற்றும் புரியவில்லை. அவளுடைய இடைவிடாத முயற்சியில் சற்றே விழிகள் திறந்து எழுந்து நின்றவன் தன் அருகில் நின்ற தன்ஷிகாவை வெறித்துப் பார்த்தான்.
அடுத்த கணம் மிருகமாகிப் போனான் அவன்.
தன் பார்வையை அவளிடமிருந்து பிடிவாதமாகக் திருப்பிக் கொண்டவன் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கத் தொடங்கினான்.
அவனுடைய ஆவேசம் கண்டு மிரண்டு போனாள் பாவை. அவள் எத்தனையோ முறை அவனை தடுத்து பிடித்தும் கூட அவனுடைய ஆக்ரோஷத்தை அடக்க முடியாது போனது.
எதையோ தனக்குள் கூறிக் கதறியவாறே அந்த அறையில் இருந்த பொருட்களை உடைத்து நொறுக்கியவன் தன்னுடைய கரங்களை மடக்கி சுவற்றில் குத்த விக்கித்துப் போனாள் அவள்.
அவனுடைய ஆக்ரோஷம் கண்டு அவளுக்கோ உடல் உறைந்து தான் போனது.
விதார்த் கோபப்பட்டு அவள் பார்த்திருக்கிறாள்தான். ஆனால் இத்தனை ஆக்ரோஷத்துடனும் வெறியுடனும் அவனை அவள் இதுவரை கண்டதே இல்லை.
அவளோ உடல் நடுங்கத் தொடங்க பயத்தோடு அந்த அறையின் சுவற்றில் ஒன்றிக் கொண்டாள்.
அவனோ “டாமிட்….” எனக் கத்தியவன் தன் அருகில் இருந்த மிகப்பெரிய பூச்சாடியை தன் காலால் எட்டி உதைத்து உடைக்க, அதுவோ சுவற்றோடு மோதி நொறுங்கிப் போனது.
ஒரு கட்டத்தின் மேல் பொறுக்க முடியாமல் தரையில் அமர்ந்தவன் தன் தலையைத் தாங்கியவாறு கதறத் தொடங்க அவனுடைய உணர்வுப் போராட்டத்தைக் கண்டு பதைபதைத்துப் போனாள் தன்ஷிகா.
ஏன் ஆக்ரோஷமாக நடந்து கொண்டான்..? எதற்காக அத்தனை பொருட்களையும் உடைத்தான்…? பச்சைக் குடிகாரன் போல வீதியோரத்தில் ஏன் சுயநினைவற்றுக் கிடந்தான்..? என எண்ணி சோர்ந்து போனவள் அவனுடைய செயல்களை வெறித்தவாறு அமைதியாக நின்றாள்.
படிக்கட்டு தேகம் கொண்ட அவனை அடக்க முடியும் என அவளுக்கு தோன்றவில்லை. ஒரு கட்டத்தில் அவனோ தன் கரங்களை மடித்து தரையில் குத்தத் தொடங்க அவனுடைய ஒவ்வொரு தாக்குதலுக்கும் அந்த தரை பாரிய சத்தத்தோடு அதிர்ந்தது.
அவனுடைய கரமோ காயம் பட்டுப் போக அதற்கு மேல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது அவனருகே ஓடிச் சென்றவள் மடக்கிய அவனுடைய முஷ்டிகளை தன் கரங்களால் இறுகப் பிடித்துக் கொண்டாள்.
“ஐயோ போதும் எதுக்கு இப்படி மிருகம் மாதிரி நடந்துக்கிறீங்க..? ப்ளீஸ்… ப்… ப்ளீஸ் நிறுத்துங்க… எனக்கு பயம்மா இருக்கு விதார்த்.” என குரல் நடுங்க கூறியவளின் குரல் தனக்கு மிக அருகில் கேட்க, சிவந்து போன விழிகளுடன் அவளுடைய முகத்தை ஏறிட்டு பார்த்தான் விதார்த்.
இத்தனை நேரமும் அவனில் குடிகொண்டிருந்த மிருகத்தனமோ மாறி அவனுடைய முகம் சட்டெனக் கனிந்து போனது. “தனீஈஈ….” என அதரங்கள் பிரிய முணுமுணுத்தவன் அடுத்த கணமே அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டான்.
காற்றுக் கூட புக முடியாத அளவிற்கான இறுகிய அணைப்பில் அவளோ ஸ்தம்பித்துப் போனாள். மூளை மரத்துப் போனது.
அவளுடைய அதிர்ந்த முகமோ அவனுடைய மார்புப் பகுதியில் புதைந்து போக, அவளுடலோ அதிர்ச்சியில் நடுங்கத் தொடங்கியது. தன்னுடைய மொத்த பலத்தையும் திரட்டி அவனை தள்ளிவிட முயன்றவள் தன் கழுத்தில் முகம் புதைத்து எதையோ முணுமுணுத்தவனின் கலங்கிய குரலில் தடுமாறிப் போனாள்.
“சாரி பேபி… சா….ரி பேபி… இ.. இனி உன்னை விட்டுட்டுப் போக மாட்டேன்டி.. நான் உனக்கு வேணாமா…? இந்த விதார்த் உனக்கு வேணாமா..?” என வேதனையோடு புலம்பியவனைக் கண்டு விழிகளை இறுக மூடிக்கொண்டாள் அவள்.
அவளுக்கோ அவன் கீதாவை எண்ணி கலங்குவதாகத் தோன்ற முள்ளின் மேல் நிற்பதை போன்று தவித்தாள் அவள்.
சிரமப்பட்டு அவனுடைய கரங்களில் இருந்து விடுபட்டு விலகி நின்றவள் மீண்டும் அவன் தன்னுடைய கரத்தை மடித்து தரையில் குத்துவதைக் கண்டு ஆடித்தான் போனாள்.
ஏனோ அந்த நொடி அவனுடைய துடிப்பைக் கண்டு அவளுக்கு உள்ளம் நடுங்கித்தான் போனது. ஏன் இத்தனை வேதனை..? ஏன் இந்தக் கதறல்..? எனப் புரியாது திகைத்தவள் மீண்டும் அவனை நெருங்கி அவனுடைய கரங்களைப் பற்றி எழுப்பினாள்.
அவள் தன்னை நெருங்கியதும் அவனுடைய முகம் மீண்டும் கனிந்தது. எதையோ கூற வந்தவனின் உதட்டில் தன் கரத்தை வைத்து தடுத்தவள் அவனை அழைத்துக்கொண்டு படுக்கையில் அமர்த்தினாள்.
“விதார்த் ப்ளீஸ் காம் டவுன்… எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம். இப்ப நீங்க ரொம்ப டிஸ்டர்பா இருக்கீங்க.. ப்ளீஸ் தூங்குங்க..” என்றவளை அவனுடைய விழிகள் ஆழ்ந்து பார்த்தன.
மகுடிக்கு கட்டுப்படும் பாம்பு போல அவளுக்கு கட்டுப்பட்டான் விதார்த். சற்று நேரத்தில் அவனுடைய விழிகள் தானாக மூடிக்கொள்ள அப்படியே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றான் விதார்த்.
தூக்கத்தில் அவனுடைய கரங்களோ தன்ஷிகாவின் சங்கிலியைத் தேடி துலாவத் தொடங்கின.
💜💙💙💜
