இது ஒருநாள் உறவா தலைவா..?
உறவு – 23
வெகு நேரமாகியும் தன்ஷிகா வராததால் மனதில் ஒட்டியிருந்த கொஞ்சநஞ்ச நிம்மதியும் முற்றிலும் விடை பெற்றுப் போனதைப் போல உணர்ந்தான் அவன்.
தன்னுடைய அறைக்குள் இருப்புக் கொள்ள முடியாது வெளியே வந்து ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து கொண்டவனது பார்வை முழுவதும் கதவிலேயே நிலைத்திருந்தது.
எப்போது அவள் உள்ளே வருவாள் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஒவ்வொரு நொடியும் அவனுக்கு ஒரு யுகம் போலக் கழிய, சற்று நேரத்தில் பொறுக்க முடியாமல் தன்னுடைய அலைபேசியை எடுத்தவன் தன்ஷிக்கு அழைப்பு விடுத்தான்.
அவளுடைய அலைபேசியோ ஸ்விட்ச் ஆஃப் என அறிவிக்க, எரிச்சலோடு தன்னுடைய ஃபோனை தரையில் விட்டெறிந்தான் விதார்த்.
‘மூணு மணி நேரமாச்சு.. இன்னும் ஏன் வரலை.? அவளுக்கு உடம்புக்கு ஏதும் முடியலையோ..? இல்லைன்னா வேற ஏதாச்சும் ப்ராப்ளமா..?’ என எண்ணிக் கலங்கியவன் பதற்றத்தில் இருக்கையை விட்டு எழுந்தான்.
தரையில் கிடந்த ஃபோனை மீண்டும் எடுத்தவன் லோகஜித்திற்கு அழைக்க முயல, அந்நொடி கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் தன்ஷிகா.
அவள் உள்ளே நுழைந்ததைக் கண்டதும் அவனுடைய மொத்த உலகமும் அவளின் முன்னே ஸ்தம்பித்ததை போல ஒரு கணம் உறைந்து போய் அவளைப் பார்த்தவாறு நின்றான் விதார்த்.
அதே கணம் அவளைத் தொடர்ந்து உள்ளே வந்த லோகஜித்தோ “பத்திரமா இரு தன்ஷிம்மா.. நல்லா ரெஸ்ட் எடு..” எனக் கூற, அவனைக் கண்டதும் அசைவற்று நின்ற விதார்த்திற்கோ சற்று தெளிவு பிறந்தது. உள்ளுக்குள்ளே தகிக்கவும் செய்தது.
லோகஜித்தோ அவள் உள்ளே நுழைந்ததும் அவளிடம் தலையசைத்து விடைபெற்றுச் சென்று விட, விதார்த்தோ அவளை ஆழ்ந்து பார்த்தான்.
அவனுடைய நாக்கு நுனி வரை ஏராளமான கேள்விகள் வந்து தொக்கி நின்றன.
அவளோ மிகவும் சோர்வாக ஹாலில் இருந்த சோபாவில் சாய்ந்து அமர்வதைக் கண்டவன் தனக்குள் எழுந்த கேள்விகளை அடக்கிக் கொண்டான்.
அவளுடைய ஆடையோ மாற்றப்பட்டிருந்தது. லோகஜித் வாங்கிக் கொடுத்திருப்பான் போலும் என எண்ணிக் கொண்டவனுக்கு முகம் அஷ்டகோணலாக மாறியது.
அவளை தலை முதல் கால் வரை ஸ்கேன் எடுப்பதைப் போல முழுவதுமாக ஆராய்ந்தவன், அதன் பின்னரே அமைதியாக தளர்ந்து அவளின் முன் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்.
“சாரி சார்… நான் இன்னைக்கு போன இடத்துல ஃபயர் ஆக்சிடென்ட் ஆயிருச்சு. கொஞ்ச நேரத்துல செத்துருவோமோன்னு பயந்தே போயிட்டேன். நல்லவேளை லோகி வந்து காப்பாத்திட்டாரு. மயிரிழைல உயிர் பிழைச்சு வந்திருக்கேன்.” எனக் கூறி சிறு முறுவலை உதிர்த்தவள் விழிகளை மூடிக்கொண்டாள்.
அவளுக்கோ அந்த நிகழ்வின் தாக்கம் இன்னும் மறையாமல் இருந்தது. உடலின் படபடப்பை மறைத்துக் கொண்டு இயல்பு போல பேசினாள் அவள்.
“உன்னைக் காப்பாத்தினது யாருன்னு சொன்ன..?” என சிறு புன்னகையோடு கேட்டான் விதார்த்.
“லோகிதான் சார். அவர் மட்டும் இல்லைன்னா என்னாகிருக்கும்னு நினைக்கவே என் நெஞ்சு நடுங்குது.. தேங்க் காட் கரெக்ட் டைம்ல வந்து காப்பாத்திட்டாரு.” என்றாள் தன்ஷிகா.
“ஓஹ்… கிரேட்… ஓகே நீ டயர்டா இருப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடு. நான் போய் நமக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்துர்றேன்.” என எழுந்தவனைத் தடுத்தவள்,
“நான் ஆல்ரெடி லோகி கூட டின்னர் முடிச்சிட்டேன் சார். உங்களுக்கு மட்டும் ஆடர் பண்ணிக்கோங்க.” எனக் கூறியவாறு அவள் தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொள்ள அவனுக்கோ உணவு உண்ணும் ஆசையே விட்டுப் போனது.
பசி கூட அவனுக்கு மரத்துப் போக மீண்டும் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டவன் தன்னுடைய மூச்சை நன்கு இழுத்து விட்டுக் கொண்டான்.
அக்கணம் அவளுடைய காலில் அடிபட்டது நினைவு வர, மீண்டும் எழுந்தவன் அவளுடைய அறைக் கதவைத் தட்டினான்.
“தனீஈஈ…?”
“சொல்லுங்க சார்…..” என உள்ளிருந்து கத்தினாள் அவள்.
“உள்ளே வரட்டுமா…?”
அவள் பக்கம் சில நொடிகள் மௌனத்தில் கழிந்தது. அவளுடைய சில நொடி மௌனத்தில் அவனுடைய முகம் சட்டென சுருங்கிப் போனது.
அவளுடைய நலம் அறிய வேண்டி தன்னுடைய தயக்கத்தை உதறிவிட்டு மீண்டும் அவளை அழைத்தான் விதார்த்.
“தனி…?” என்ற அவனுடைய அழைப்பில் அவளோ வேறு வழியின்றி “கதவு திறந்துதான் சார் இருக்கு. உள்ளே வாங்க..” என அழைத்தாள்.
அவளுடைய அறைக் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த விதார்த்தின் பார்வை படுக்கையில் அமர்ந்திருந்த தன்ஷிகாவை மெல்ல வருடியது.
“உன்னோட கால்ல அடிபட்டிருந்துச்சுல்ல. இப்போ எப்படி இருக்கு…?”
“கொஞ்சம் பெயினா இருக்கு சார்.” எனக் கூறியவள் சட்டென அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“எனக்கு கால்ல அடிபட்டிருக்குன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்..?” என்ற கேள்வியில் அவனோ ஒரு கணம் திகைத்தவன் பின் நிதானித்துக் கொண்டான்.
“நீ நடக்க முடியாம நடந்து வந்ததைப் பார்த்தேன். சோ கால்ல அடிபட்டிருக்கும்னு கெஸ் பண்ணினேன்.” என உண்மையை மறைத்துப் பதில் கூறினான் விதார்த்.
“அந்த ஃபயர் ஆக்சிடென்ட்ல கீழ விழுந்துட்டேன். அப்போ யாரோ கால் மேல ஏறி மிதிச்சிட்டு போய்ட்டாங்க.” எனக் கூறியவாறு தன்னுடைய காலை மெல்ல வருடினாள் தன்ஷிகா.
“வாட்…? மிதிச்சிட்டாங்களா..?” எனப் பதறியவன், சட்டென படுக்கையின் அருகே நெருங்கி தரையில் மண்டியிட்டு அமர்ந்தவன் அவளுடைய பாதத்தை தன் கரத்தில் ஏந்திக் கொள்ள, அவளுக்கோ உடல் விதிர்விதிர்த்துப் போனது. பாதம் கூசியது.
“ஐயோ என்ன பண்றீங்க..?” எனப் பதறியவாறு காலை இழுத்துக் கொள்ள முயன்றவளை தன்னுடைய பார்வையால் அடக்கியவன், அவளுடைய கால் வீங்கி இருப்பதைப் பார்த்து இதழ்களை வளைத்தான்.
“வலிக்குதா தனி..?” என்றவனின் குரலோ மயிலிறகைப் போல மென்மையாக ஒலித்தது. அந்தக் குரலில் திகைத்துப் போய் அவனுடைய முகத்தைப் பார்த்தாள் தன்ஷிகா.
அவனோ எழுந்து சென்று ஒரு பாத்திரத்தில் சுடுநீர் எடுத்து வந்தவன் ஒரு துணியை எடுத்து சுடுநீரில் அமிழ்த்தி அவளுடைய பாதத்தில் மெல்ல ஒத்தடம் கொடுக்கத் தொடங்க, அவளுக்கோ மிகுந்த சங்கடமாகிப் போனது.
“அச்சோ இதெல்லாம் வேணாம் சார். நானே பாத்துக்கிறேன்..” என அவனை தவிர்க்க முயன்றவளை அவன் சற்றும் கவனத்திற் கொள்ளவே இல்லை.
வீக்கம் அதிகமாக இருந்த இடத்தில் சற்று அழுத்தி அழுத்தி ஒத்தடம் கொடுத்து முடித்தவன் அதன் பின்னரே அவளுடைய வெண்ணிற பாதத்தை விடுவித்தான்.
விழிகள் கலங்க அவனை வெறித்துப் பார்த்தாள் தன்ஷிகா.
“உங்க அக்கறை எனக்குத் தேவலை சார். நீங்க என்னோட முதலாளி. நான் உங்ககிட்ட வேலை பார்க்கிற சாதாரண பொண்ணு. நீங்க என்னோட காலை பிடிச்சு இப்படி ஒத்தடம் கொடுக்கிறதெல்லாம் சரியா வராது.” என கலங்கிய குரலில் கூறி முடித்தாள் அவள்.
அக்கணம் அவளை நிமிர்ந்து பார்த்தவன் தன்னுடைய கரத்தை அவள் முன் நீட்டினான்.
அவளோ அவனைப் புரியாது பார்க்க, “முதலாளி தொழிலாளிங்கிறதை இன்னையோட மறந்திரலாம் தனி. நீயும் நானும் நல்ல பிரண்ட்ஸா இருக்க ட்ரை பண்ணலாமே..?” என்றான் விதார்த்.
இவனுக்கு இத்தனை மென்மையாக பேசவும் தெரியுமோ என எண்ணி வியந்து போனாள் அவள்.
அவனுடைய கரம் வெகு நேரமாக தன்னை நோக்கி நீண்டிருப்பதைக் கண்டவளுக்கு அவனுடன் நட்பு பாராட்ட முடியுமா என்ற கேள்வி உள்ளுக்குள் எழுந்தது.
“கமான் தனி… இன்னும் ஒரு மாசத்துக்கு நம்ம இங்கேதான் இருக்கப் போறோம். எனக்கு ஏதாவதுன்னா நீதான் பாத்துக்கணும். உனக்கு ஏதாவதுன்னா நான்தான் பாத்துக்கணும். சோ நாம ப்ரெண்ட்ஸ் ஆயிரலாம்.” என்றான் அவன்.
அவனுடைய கூற்றில் அவளுடைய முகமும் சற்றே தெளிய சிறு புன்னகையோடு அவனுடைய கரத்தை பற்றிக் குலுக்கினாள் அவள்.
அவளுடைய மென் கரமும் அவனுடைய வன் கரமும் ஒன்றோடு ஒன்று மோதி பிண்ணிக் கொண்டன.
அவளுடைய வெண்டைப் பிஞ்சு விரல்களோடு தன்னுடைய விரல்களைக் கோர்த்தவனுக்கோ இதயம் கனிந்தது.
இப்படியே இந்த நொடிகள் உறைந்து விடாதா என அவனுடைய மனம் ஏங்கியது. அடுத்த கணமே தன்னுடைய மனதில் உதித்த ஏக்கத்தை எண்ணி அதிர்ந்து போனான் அவன்.
தனியின் மீது அவனுக்கு ஈர்ப்பு தோன்றி விட்டதா.?
“சே…! சே…! இருக்காது. நோ வே…” என முணுமுணுத்தான் அவன்.
“ஹாங் என்ன சார்..?”
“நத்திங்… சரி நீ ரெஸ்ட் எடு..” என்றான் அவன்.
“சார்…?”
“ம்ம்….?”
“உங்களுக்கு இப்போ கால் பரவாயில்லையா..?”
“எஸ் ஐ ஆம் ஓகே நவ்..” என்ற விதார்த் அவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்துவிட்டு எழுந்து கொண்டான்.
“குட் நைட் சார்…”
“குட் நைட் தனி..” என்றவன் அவளுடைய அறையை விட்டு வெளியேறத் தொடங்க அவளுடைய அலைபேசியோ மெல்ல சிணுங்கியது.
அவளோ அதனை ஏற்றவள்,
“ஹாய் லோகி..” எனக் கூறியவாறே படுக்கையில் சாய ஒரு கணம் அவளின் அறை வாயிலில் அசைவற்று நின்றவன் அடுத்த கணமே ஏதோ தன்னைத் துரத்துவதைப் போல வேகமாக அங்கிருந்து வெளியேறிச் சென்றான்.
*************
அடுத்த நாள் காலையில் அவர்களுடைய வேலை சம்பந்தமான மீட்டிங் ஒன்றிற்காக நேரத்திற்கே தயாராகி விதார்த்தும் தன்ஷிகாவும் பாரிஸில் உள்ள பிரபல்யமான வணிக நிறுவனம் ஒன்றை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர்.
வழமை போல தன்ஷிகாவோ காரின் ஜன்னலின் ஊடாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வர, விதார்த்தின் விழிகளோ அவளை மாத்திரமே மையமிட்டன.
“தனி..?”
“ம்ம்….?”
“உன்னோட பியூச்சரைப் பத்தி என்ன நினைக்கிற.?” எனக் கேட்டான் அவன்.
அவளுடைய விழிகளோ அவனை சற்றே இகழ்ச்சியாக நோக்கி விட்டுத் திரும்பிக் கொண்டன.
என் எதிர்காலத்தையே அழித்துவிட்டு எதிர்காலத் திட்டம் பற்றி கேட்கிறாயே என அவனைக் குற்றம் சாட்டுவதைப் போல இருந்தது அவளுடைய பார்வை.
“இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாமே தனி…?” என்றான் அவன்.
“ஏன் நீங்க கீதாவை கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா..?” எனக் கேட்டாள் அவள்.
கீதா இன்னொரு திருமணம் புரிந்து நிறைவாக வாழ்வதை அவளிடம் கூறாது மறைத்தவன் ஆமெனத் தலையசைக்க அவளுக்கோ முகம் இறுகிப் போனது.
“கண்டிப்பா சார் நானும் ஏமாத்தாத நல்ல பையனா கிடைச்சா கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன்.” என இறுகிய குரலில் கூறியவள் தன்னுடைய முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவள் இன்னொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை பிறக்கவும் அவனுடைய மனமோ சற்றே நிம்மதி அடைந்தது.
அதே கணம் உள்ளுக்குள் சிறு வலியும் புதிதாய் பிறந்து அவனை வதைக்கத் தொடங்கியது.
💜💙💙💜
