இது ஒருநாள் உறவா தலைவா..?
உறவு – 46
சென்னையில் தன்னுடைய வீட்டில் அனைவரும் கலகலப்பாக வேலைகளில் ஈடுபட்டிருக்க, தன்ஷிகாவோ தன்னுடைய அறையில் தனிமையில் அமர்ந்திருந்தாள்.
விடிந்தால் திருமணம்..!!
அனைவரும் அவளுடைய திருமணத்தை எண்ணி சந்தோஷத்தில் திளைத்துப்போய் இருக்க அவள் மாத்திரம் உணர்வுகள் மரத்துப்போன நிலையில் விட்டத்தை வெறித்தவாறு அமர்ந்திருந்தாள்.
தன்னுடைய மனம் எதனை விரும்புகின்றது என்பது அவளுக்கேப் புரியாத புதிராக இருந்தது.
தன்னுடைய மகிழ்ச்சியை விட தன்னுடைய குடும்பத்தின் மகிழ்ச்சியும் தன்னை நேசிக்கும் லோகஜித்தின் மகிழ்ச்சியுமே அவளுக்குப் பெரிதாகத் தெரிந்தது.
தன்னால் அவர்கள் ஒருபோதும் துன்பம் கொள்ளக்கூடாது என்ற முடிவினை எடுத்தவள் தன் மனதை திடப்படுத்திக் கொண்டு திருமணத்திற்குத் தயாரானாள்.
அதே கணம் அவளுடைய அறைக் கதவைத் திறந்து ஹேமா உள்ளே நுழைந்தாள். அவளுடைய கரத்தில் மருதாணி கிண்ணமும் சில ட்யூப்களும் இருந்தன.
“வா ஹேமி…”
“என்னாச்சுக்கா..? ஏன் டல்லா இருக்க..?”
“இல்லையே.. ஐ ஆம் ஓகே..” எனப் புன்னகைத்தாள் தன்ஷிகா.
“ம்ம்.. எனக்கு மாமாவைப் பார்த்தா பாவமா இருக்குக்கா.”
“ப்ச்.. பைத்தியம் மாதிரி உளராத ஹேமி. விதார்த் ஒன்னும் உனக்கு மாமா கிடையாது.” என அதட்டினாள் அவள்.
“நீ இப்படிக் கத்திப் பேசுறதால எதுவுமே மாறப் போறது இல்லைக்கா.”
“எதுவுமே மாறவும் வேணாம் ஹேமி. எனக்கு விதார்த்தை நினைச்சாலே வெறுப்பா இருக்கு.”
“அன்னைக்கு அவர் உனக்கு ஹெல்ப்தான் பண்ணிருக்காரு. பார்ட்டில யாரோ உன்னைக் கடத்த ட்ரை பண்ணிருக்காங்க. மாமாதான் உன்னைக் காப்பாத்திருக்காருக்கா.”
“ஓஹ்… அப்படின்னு யாரு சொன்னது..? அவரே உன்கிட்ட வந்து சொன்னாரா..?” என எள்ளலாகக் கேட்டாள் அவள்.
“இல்ல.. எனக்கு முத்துராமன் அங்கிள் சொன்னாரு. அந்த பார்ட்டி நடந்த இடத்துல இருக்கிற சிசிடிவி ஃபுட்டேஜை எடுத்து பார்த்துட்டு இருந்தாரு. அப்போதான் எனக்கும் உண்மை தெரிஞ்சுது. அவர் பாவம்கா. அவரோட பார்வைல உனக்கான ஏக்கம் காதல் தெரியுது.” என்றாள் ஹேமா.
“ஷட் அப் ஹேமி… அவரோட காதல் ஏக்கம் எல்லாம் என் மேல கிடையாது. அதெல்லாம் வேற ஒருத்திக்கு சொந்தமானது. நீயும் என்னைக் ஹர்ட் பண்ணாத ப்ளீஸ்…” எனச் சீற்றமாகத் தொடங்கி கலக்கமாக முடித்தாள் தன்ஷிகா.
“ஒகே…. அக்கா உன்னோட கையைக் கொடு மருதாணி வச்சி விடுறேன்..” என்ற ஹேமாவின் கரங்களைப் பற்றிக் கொண்டவள் அவளைத் தன்னருகில் அமர்த்தினாள்.
“உன்கிட்ட ஹார்ஷா பேசியிருந்தா சாரிடி..”
“சே அப்படிலாம் இல்லைக்கா..”
“ம்ம்… ஏன் கல்யாணம் நின்னதைப் பற்றி என்கிட்ட நீ ஒண்ணுமே சொல்லலை..? உன்னோட கல்யாணம் நின்னு போனதை நினைச்சு வருத்தப்படுறியா ஹேமி..?”
“இதுல வருத்தப்படறதுக்கு என்னக்கா இருக்கு..? ஏதோ பெரிய குழில விழாம தப்பிச்சிட்டேன்னு சந்தோஷமாதான் இருந்துச்சு.” என்றாள் அவள்.
அவளுடைய தலையைப் பாசமாக வருடிவிட்டவளுக்கும் சற்றே நிம்மதியாக இருந்தது.
“நீ எதைப் பத்தியும் யோசிச்சு கவலைப்படாதம்மா. அக்கா இருக்கேன்ல. நான் பாத்துக்குறேன்.” என்றாள் தன்ஷிகா.
தன்ஷிகாவின் கன்னங்களைப் பிடித்து செல்லமாகக் கிள்ளிய ஹேமாவோ, “என்னை நானே நல்லா பார்த்துக்குவேன்.. முதல்ல நீ உன்ன நல்லா பாத்துக்கோ. உன்னோட மனசுக்கு முக்கியத்துவம் கொடுக்கா.
மத்தவங்களுக்காக வாழாத.. உனக்காக வாழு.” என்றாள் அவள்.
ஹேமாவின் வார்த்தைகளில் வேதனையோடு தன்னுடைய விழிகளை மூடிக்கொண்டாள் தன்ஷிகா. தனக்காக இனி எங்கணம் அவளால் வாழ முடியும்..? அவளுடைய வாழ்க்கைதான் மூன்று வருடங்களுக்கு முன்னரே கருகிக் காணாமல் போய்விட்டதே. மூடிய விழிகளுக்குள் கீதாவும் வருணும் ஒன்றாக இணைந்திருப்பதைப் போன்ற காட்சிகள் வரத் தொடங்க, சட்டென தன் விழிகளைத் திறந்தாள் அவள்.
உள்ளம் ஏனோ வலியால் தவித்து துடித்தது. தன்னுடைய உணர்வுகளை வழமை போல உள்ளேயே புதைத்து விட்டு வெளியே புன்னகையோடு திரும்பியவள் ஹேமாவிடம் தன்னுடைய உள்ளங்கையை மருதாணி வைப்பதற்காகக் கொடுத்தாள்.
மீண்டும் அவளுடைய சிந்தனை விதார்த்தைச் சுற்றி மேயத் தொடங்கியது.
பார்ட்டி நடந்த அன்று அவன் தனக்கு உதவிதான் செய்திருக்கிறான் என்பது புரிய, அவனை வார்த்தைகளால் கண்டபடி வதைத்தது வேதனையைக் கொடுத்தது.
ஹேமாவோ அவளுடைய கரத்திற்கு அழகாக மருதாணி வைத்து விட்டாள்.
சற்று நேரத்தில் வெளியே சலசலப்பு அதிகமாக கேட்க, ஹேமாவோ எழுந்து சென்று ஜன்னலை திறந்து வெளியே பார்த்தவள் அங்கே வந்து நின்ற விதார்த்தைக் கண்டு அதிர்ந்து போனாள்.
“என்னடி யார் வந்திருக்கா..? ஏன் இவ்வளவு சத்தமா இருக்கு..?” எனக் கேட்டாள் தன்ஷிகா.
“யார் வந்திருக்கான்னு நீயே வந்து பாருக்கா..” என சிறு படபடப்போடு கூறினாள் ஹேமா.
தன்ஷிகாவோ எழுந்து ஜன்னலின் அருகே வந்தவள் சுவாரஸ்யமின்றி தன்னுடைய பார்வையை வெளியே செலுத்தினாள்.
அங்கே தன்னுடைய குடும்பம் சூழ விதார்த் நிற்பதைக் கண்டதும் அவளுக்கோ உடலும் உள்ளமும் சேர்ந்தே உறைந்து போனது.
அங்கே வெளியே நின்ற அவளுடைய தாய் தந்தை எல்லோரும் வருணைப் போல ஒருவன் வந்ததும் அதிர்ந்து போய் நிற்க, அவர்களுக்கு முன்பு தன்னை வருணாக அறிமுகப்படுத்திக் கொள்ளாது தன்ஷிகாவின் முதலாளியாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான் அவன்.
அதே கணம் பதற்றத்தோடு வெளியே வந்த தன்ஷிகாவோ, தன் முகத்தில் எந்தவிதமான அதிர்ச்சியையும் காட்டாது “வாங்க சார்.. ஏன் அங்கேயே நிற்கிறீங்க உள்ளே வாங்க..”என அழைக்க, அதைப் பார்த்த அவளுடைய பெற்றோருக்கோ பேரதிர்ச்சி.
“அம்மாடி யாரும்மா இவர்..? இவர்கிட்டதான் நீ வேலை பார்த்தியா..? இவரைப் பார்த்தா நம்ம மாப்பிள்ளை மாதிரியே இருக்கே.” என அதிர்ச்சியாகக் கேட்ட தன்னுடைய அன்னையின் கரங்களை இறுகப்பற்றி அழுத்தியவள்,
“ம்மா… இது அவர் இல்லம்மா.
அவர்தான் இறந்து போய் மூணு வருஷம் ஆச்சே… இது என்னுடைய முதலாளி இவர்கிட்டதான் நான் வேலை பார்த்தேன்.” எனக்கூறி அங்கிருந்த அனைவருடைய சந்தேகத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தவள் விதார்த்தை எரிப்பதைப் போலப் பார்த்தாள்.
அவன் எதற்காக இங்கே வர வேண்டும் என்ற எரிச்சல் அவளுக்குள் தீயாய் எழுந்து தகித்தது.
சற்று நேரத்தில் அங்கே இருந்த அனைவரும் தன்ஷிகா கூறியதை நம்பி விதார்த்தை ஒருவிதமான சுவாரஸ்யத்துடன் வரவேற்க அவனுடைய முகத்திலோ சிறு புன்னகைக்கீற்று தோன்றியது.
“உள்ளே வாப்பா… கல்யாணத்துல கலந்துகிட்டு சாப்பிட்டுத்தான் போகணும்.” என அவனை வரவேற்றார் தன்ஷியின் தந்தை.
“அம்மாடி நம்ம மாடி ரூம்ல இவரை தங்க வைக்கலாம். இவரை உள்ளே கூட்டிட்டு போம்மா.. நான் இந்தப் பந்தலை கட்டிட்டு வந்துர்றேன்.” என்றார் அவளுடைய தந்தை.
“சரிப்பா… நான் பார்த்துக்கிறேன்.” என்றவள் அவனை அழைத்துக் கொண்டு மாடியறை நோக்கிச் சென்றாள்.
“தயவு செஞ்சு எங்க வீட்ல ஸ்டே பண்ணாதீங்க. இங்க இருந்து போயிருங்க.” என மெல்லிய குரலில் சீறினாள் அவள்.
அதைக் கேட்டவனோ, “ரெண்டு நாள் தங்கியிருந்து விருந்து சாப்பிட்டப்புறம்தான் போவேன்.” என சத்தமாக எல்லோருக்கும் கேட்கும்படி கூறியவனை ஒன்றும் செய்ய முடியாது வெறித்துப் பார்த்தாள் அவள்.
“அம்மாடி என்ன மசமசன்னு அங்கேயே நிற்கிற..? தம்பியை உள்ளே கூட்டிட்டுப் போ.. உன்னோட புடவை ஜாக்கெட் வந்திருச்சு. அதையும் ஒரு தடவை போட்டுப் பார்த்திரு..”
“ம்மா..” என பல்லைக் கடித்தவளுக்கு முகம் சிவந்து போனது. அடுத்த கணம் அங்கே நில்லாது மாடிக்கு அவனை அழைத்துச் சென்றாள் அவள்.
மாடி அறைக்குள் சென்றதும் அவளுடைய சீற்றப் பார்வையோ விதார்த்தின் மீது விழுந்தது.
“இப்போ எதுக்காக இங்கே வந்தீங்க..?” என சீறியவள் அவனைக் கொலை வெறியோடு பார்த்தாள்.
“உன்னோட வருங்கால கணவன்தான் எனக்கு இன்விடேஷன் கொடுத்து வர சொல்லிட்டு போனானே. மறந்திட்டியா..?” எனக் கேட்டான் விதார்த்.
“உங்களால இங்க ஏதாவது பிரச்சனை வந்தா நான் மனுஷியா இருக்க மாட்டேன்..” எனக் கோபத்தோடு கூறினாள் அவள்.
அவனோ தான் கொண்டு வந்திருந்த பையை அந்த அறையில் இருந்த மேஜை மீது வைத்தவன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.
“என்னால இங்க எந்தப் பிரச்சனையும் உனக்கோ உன்னோட கல்யாணத்துக்கோ வராது. நீ தைரியமா இருக்கலாம்.” என்றவனின் பார்வை அவளை நிதானமாக அளவிட்டது.
சிறு வெள்ளை கற்கள் பதிக்கப்பட்ட கறுப்பு நிற சுடிதாரில் அழகாக மிளிர்ந்தவளை ஒரு நொடி ரசித்தவன் பின் தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டான்.
அவளுடைய கரங்களில் வைக்கப்பட்டிருந்த மருதாணியை பார்த்தவனுக்கு முகம் மலர்ந்தது.
“நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் தனி..” என்றான் அவன்.
அவளோ விழிகள் கலங்க சட்டென அங்கிருந்து வெளியேற முயல அவளுடைய கரத்தைப் பிடித்து தடுத்தவன்,
“இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க தனி…” எனக் கூறினான். அவனுடைய வார்த்தைகளில் அவளுக்கோ கோபம் உச்சிக்கு ஏற அவனுடைய கரத்தை வேகமாக தட்டி விட்டாள் அவள்.
“ரிலாக்ஸ் தனி..” என்றவனின் குரல் கனிந்தது.
“உங்களுக்கு ஏதாவது வேணும்னா சொல்லுங்க.” என்றவள் அவனுடைய முகத்தைப் பார்த்தாள்.
அவனுடைய மனமோ, ‘நீ தான் வேணும்..’ எனக் கதற, அதனை உள்ளேயே போட்டு அமிழ்த்தியவன் வெளியே அவளைப் பார்த்து மறுப்பாகத் தலையசைத்தான்.
“இப்போ எனக்கு எதுவுமே வேணாம் தனி. ரொம்ப டயர்டா இருக்கு. ரெஸ்ட் எடுத்தாலே போதும்.” என்றான் அவன்.
அவளோ சரி என தலையசைத்து விட்டு வெளியேற முயன்ற நொடி இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டன.
ஒரு நொடி நிதானித்து அவனுடைய முகம் பார்த்தவள், “பார்ட்டில எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்..” என்றாள்.
“பரவால்லயே உண்மை தெரிஞ்சிடுச்சு போல..”
“ம்ம்….”
“ஓகே நீ கிளம்பு..”
“சரி…” என்றவாறு அறையை விட்டு வெளியே சென்றவள், தன்னுடைய நீளமான கூந்தலை வருடியவாறு மீண்டும் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“என்னடி..?” என சிறு புன்னகையோடு கேட்டான் விதார்த்.
“உ… உங்களுக்கு எப்போ கல்யாணம்..?”
அவனோ பெருமூச்சோடு அவளைப் பார்த்தவன், “எல்லாமே ஓகே ஆயிடுச்சு தனி. இன்னும் ஒரு மாசத்துல நானும் கீதாவும் கல்யாணம் பண்ணிக்குவோம்.” என்றான் விதார்த்.
அக்கணம் அவளுடைய முகமும் சற்றே தெளிந்தது. அவன் அவனுடைய காதலியோடு சேர்வதற்காகத் தானே இத்தனை போராட்டங்களும் வேதனைகளும். அவனாவது கீதாவுடன் மகிழ்வாய் வாழட்டும் என எண்ணியவள் சிறு தலைசைப்போடு அங்கிருந்து வெளியேறினாள்.
அவள் படிகளில் இறங்கும் தருணம் அவளின் பின்னே வேகமாக ஓடி வந்தவன்,
“ஹேய் தனிஇஇஇஇ….” என அழைக்க, அவளுக்கோ தூக்கிவாரிப் போட்டது.
“எ… என்ன..? என்னாச்சு.?” எனப் பதற்றத்தோடு கேட்டாள் அவள்.
“எனக்கு ஒரு காபி கிடைக்குமா..?” எனக் கேட்டான் அவன்.
அவன் ஓடி வந்த வேகத்தில் பதறி படிக்கட்டின் அருகே இருந்த சுவற்றோடு சாய்ந்து நின்றவள்,
“காபிக்காகவா இப்படி ஓடி வந்தீங்க..?”
“எஸ்…” என்றவனின் பார்வையோ மாடியில் நின்றவாறு அந்த வீட்டின் வெளிப்புறத்தை மேய்ந்தது.
“நீ வெளியே எங்கேயும் போகணுமா..?” எனக் கேட்டான் அவன்.
“இ.. இல்லையே.. நான் இனி வெளியே போகக் கூடாது.” என்றாள் அவள்.
“நல்லது.. வீட்லையே இரு. சந்தேகப் படுற மாதிரி யாராவது வந்தா அவங்க கூட பேசாத அவாய்ட் பண்ணிடு.”
என்றவனை முறைத்தவள், ‘லூசாப்பா நீ..?’என்பதைப் போல அவனைப் பார்த்தாள்.
“ப்ச் நான் உன்னோட நல்லதுக்காகத்தான்டி சொல்றேன்.”
அவளுடைய பார்வையோ அவனை ஏளனமாக ஏறிட்டது. அவனைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாது விலகி நடந்தவளின் கரத்தைப் பிடித்து இழுத்தவன்,
“எனக்குத் தெரியாம நீ இந்த வீட்டை விட்டு எங்கேயும் நகரவே கூடாது.” என எச்சரித்தான். அதில் மிரண்டு போனவள் தன் கையை உதறிவிட்டு கீழே ஓடிவிட, புள்ளி மானாய் துள்ளி ஓடும் அவளுடைய அழகு அவனைக் கொல்லத் தொடங்கியது.
அந்த ஒரு நாள் உறவுக்கு நாளையோடு முற்றுப் புள்ளி வைத்து விடுவார்கள் என புரிந்து கொண்டவன் மனதால் துவண்டு போனான்.
அந்த ஒரு நாள் உறவு நீளாதோ என்ற ஏக்கம் அவனுள் பிறந்தது. அவனுடைய கரமோ தன் பாக்கெட்டினுள் இருந்த தன்ஷியின் சங்கிலியை எடுத்து தன் உதட்டோடு பொருத்திக் கொண்டது.
கண்ணீர்த் துளிகள் காதலுக்கு சாட்சியாக அவனுடைய கன்னத்தில் இறங்க, “ஐ லவ் யு கண்ணம்மா.” என முணுமுணுத்தான் விதார்த்.
💜💙💙💜
