இது ஒருநாள் உறவா தலைவா..?
உறவு – 19
கீதாவின் உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு வந்தவனின் உள்ளமோ ஆழமாக காயம் பட்டுப் போனது.
“கர்மா இஸ் பூமராங்…” என முணுமுணுத்தவன் உடைந்து போனான்.
இத்தனை ஆண்டுகள் நெஞ்சில் சுமந்த கீதாவின் காதல் சடுதியில் கரைந்து காணாமல் போனதை அவனால் ஏற்க முடியவில்லை.
உடலின் ஒவ்வொரு அணுவிலும் வதையை அனுபவித்தவன் “ஆஆஆஆஆ……..” எனக் கத்தினான். ஏமாற்றத்தின் வலி அவனை உயிரோடு கொன்று புதைத்தது.
ஏற்கனவே காயம் பட்டிருந்த அவனுடைய கரத்தைக் கொண்டு தன் காரோடு மோதினான்.
எவ்வளவு பெரிய தவறிழைத்து விட்டான். இனி எப்படி அதை சரி செய்யப் போகிறான்..? எதற்குமே அவனிடம் பதில் இல்லை.
அவனுக்கோ தலை வெடிப்பதைப் போல இருந்தது. தலையைக் கொண்டு போய் தரையில் மோதி உடைக்க வேண்டும் போல இருந்தது.
காதல் ஒன்றிற்காக அனைத்தையும் இழந்து நிற்கும் தன்னை அடியோடு வெறுத்தான் அவன்.
தன் மீதே அளவு கடந்த சீற்றம் பொங்கிப் பெருகியது அவனுக்கு.
அக்கணம் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவதென அவனுக்கு கிஞ்சித்தும் புரியவே இல்லை.
தன் பக்கமே தவறுள்ளது என்பது புரிய, அவனுடைய மனம் தன் குடும்பத்தை எண்ணி ஏங்கத் தொடங்கியது. ஒரு பொய்யை நம்பி எத்தனையோ பேரின் அன்பை இழந்து விட்டோம் என்பது புரிய, தவியாய் தவித்தான் அவன்.
காலத்தை மாற்றும் சக்தி மாத்திரம் அவனுக்கு கிடைத்தால் அனைத்தையும் ஒரு நொடியில் மாற்றி விடுவானே.
அவனுடைய ஏக்கம் கொண்ட மனமோ நடக்காத விடயங்களை எல்லாம் எண்ணிப் பார்த்து தவிக்கத் தொடங்கியது.
தன்னுடைய ஃபோனை எடுத்து தன் குடும்பப் புகைப் படத்தைப் பார்த்தவன் வாய் விட்டுக் கதறி அழத் தொடங்கினான்.
“ம்மா… ம்மாஆஆ சாரிம்மா… சாரி… சாரிம்மா… கோ.. கோபமா இருக்கியாம்மா….? நா… நான் சாகலைம்மா.. உன் பையன் சாகலை.. ந.. நல்லா இருக்கேன்… ம்ஹூம் நா.. நான் நல்லா இல்லைம்மா.. கொஞ்சம் கொஞ்சமா செத்துகிட்டு இருக்கேன்.” என்றவனின் நெஞ்சமெல்லாம் நைந்து போனது.
“ப்பாஆ சாரிப்பா… த… தப்பு பண்ணிட்டேன்பா… சாரிப்பா…”
“அண்ணா சாரிடா… எ.. என்னை மன்னிச்சிருடா.. உ.. உன் தம்பி சாகலைடா..”
“பா… பாட்டிஇஇ… பே… பேரனை தேடினீங்களா பா… பாட்டி…? ஐயோஓஓ எ… எனக்காக தவிச்சீங்களா..? எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன்…” என துடியாய் துடித்துக் கதறியவனுக்கோ தன்ஷிகாவின் முகம் நினைவில் ஆடியது.
தாலி கட்டும் நேரம் முகம் முழுக்க நாணப் புன்னகையுடன் சிவந்து தலை குனிந்திருந்தவளின் தோற்றம் அன்று அவனை பாதிக்கவே இல்லை. ஆனால் இன்று அதே தோற்றத்தில் அவளை நினைத்துப் பார்த்தவன் உயிர் அற்ற வெறுங் கூடாகிப் போனான்.
உயிர் மீது ஊசி ஏற்றினாற் போல இருந்தது அவனுக்கு.
இத்தனை நாட்களும் மனதை வருத்திய விடயங்களை தூக்கித் தூர வைத்தவன் முதல் முறையாக தன்ஷிகாவைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினான்.
அவளுக்கு அவன் செய்தது எத்தனை பெரிய பாவம் என்பது புரிய அவனுடைய மனமோ வேதனையில் துவண்டு மீண்டது.
“சாரி தனி. உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்ல.. சா… சாரி… இ.. இத்தனை வருஷம் என்னை உயிருக்குயிரா காதலிச்சவளே என்னை மறந்துட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா. நீ ஏன்டி இன்னொரு வாழ்க்கையை தேடிக்கலை..? ஏன் ஏன்….? ஏன் தனி…? நீயும் இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா குழந்தையோட வாழ்ந்திருக்கலாமே.
உன்கூட நான் ஒரு நாள் கூட வாழலையேடி.. அப்புறம் ஏன்டி இப்படி இருக்க…? மூணு வருஷமா எதுக்கு இந்த விதவைக் கோலம்..? எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு போயிருக்க வேண்டியதுதானே.. நீ என்னையே நினைச்சு உருகுற அளவுக்கு நான் உனக்கு ஒன்னுமே பண்ணலையேடி. உன்னோட முகத்தைப் பார்த்து கூட நான் பேசலையே… நான் கட்டிட்டுப் போன அந்த தாலிக்காக இவ்வளவு நாள் இருந்தியா..? இல்லையே அதையும் விதவைன்னு சொல்லி அறுத்திருப்பாங்களே… ஏன்டி போகலை.. ஐயோ… அன்னைக்கு எதுவுமே த.. தப்பா தெரியலை.. இ… இன்னைக்கு எ… எல்லாமே தப்பாதானே தெரியுது.” என்றவன் காரை ஸ்டார்ட் செய்து கண்மண் தெரியாத வேகத்தில் ஓட்டத் தொடங்கினான்.
ஒவ்வொரு நொடியும் அவனுடைய நெஞ்சத்தில் இடி விழுவதைப் போல ரணம் தோன்றி மறைந்தது.
‘இந்த வருணால யாருக்குமே எந்த உபயோகமும் இல்ல. காதலிச்ச கீதாக்கு கொடுத்த வாக்கையும் காப்பாத்த முடியல. பெத்த அம்மா அப்பாக்கும் உண்மையா இல்ல. கட்டிய மனைவிக்கும் துணையா இல்ல. இந்த வருண் இருக்கிறதுக்கு செத்தே போயிரலாம்.
எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டு வாழ்ற வாழ்க்கை தேவையே இல்ல.” என்றவன் காரைச் செலுத்தியவாறே தன் விழிகளை மூடிக் கொண்டான்.
எங்காவது சென்று இடித்து விடுவோம் என எண்ணியவாறு காரை திருப்பியவன் சட்டென விழிகளைத் திறந்தான்.
“நோ…. நோஓஓஓ… நான் சாக… சாகக் கூடாது… என்னை நம்பி இங்கே வந்தவளை பத்திரமா அவளோட ஊருக்கு அனுப்பி வைக்கணும். அ.. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக் கொ… கொடுக்கணும். சந்தோஷம் பொங்குற அளவுக்கு அவ வா… வாழணும். அவளோட இந்த இருண்ட பக்கத்தை கிழிச்சு அவ வாழ்க்கைல புதிய பக்கத்தை நிச்சயமா நா.. நான் எழுதுவேன். போதும் அவ என்னால பட்ட துன்பம் எல்லாம் போதும். இதுக்கப்புறம் அவளோட வாழ்க்கைல சந்தோஷம் மட்டும்தான் இருக்கணும். அதுக்கப்புறம்தான் என்னோட கட்டை வேகணும்.” என்றவன் நிதானிக்க,
அதே கணம் தன்னை மோதுவதைப் போல எதிரே வந்த காரைக் கண்டு திகைத்து சட்டென அந்த விபத்தில் இருந்து விலக முயன்றான் அவன்.
அவனுடைய போதாத காலமோ என்னவோ அவனுக்கு எதிரே வந்து கொண்டிருந்த காரோ விலகும் அவனையே குறி பார்ப்பதைப் போல வந்து அவனை இடித்துத் தள்ள,
விதார்த்தின் கரங்களில் தடுமாறிய கார் அந்த வீதியில் இருந்த மின் விளக்கு கம்பத்தோடு மோதி நின்றது.
விதார்த்தோ சட்டென நிதானித்ததால் மிகப்பெரிய விபத்தில் இருந்து தப்பிக்க முடிந்திருந்தாலும் கூட அதிலிருந்து அவனால் முழுமையாக விடுபட முடியவில்லை.
“இடியட்…..” எனக் கர்ஜித்தவாறு காரில் இருந்து இறங்க முயன்றவன் தன்னுடைய கால்களை அசைக்க முடியாது போக அதிர்ந்து போனான்.
அவனை மோதிய காரோ மின்னல் வேகத்தில் அந்த இடத்திலிருந்து விரைந்து சென்றுவிட விதார்த்தத்தின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
தன்னுடைய காரை மிகவும் சிரமப்பட்டு திருப்பி எடுத்தவன் வேகத்தை குறைத்தவாறு தான் தங்கியிருந்த ஹோட்டல் நோக்கி புறப்படத் தொடங்கினான்.
யார் தன்னை மோதியது என்றெல்லாம் சிந்திக்கும் நிலையில் அப்போது அவன் இருக்கவில்லை. எதைப் பற்றியும் சிந்திக்காது அவன் தங்கியிருந்த ஹோட்டலை நெருங்கியவன் காரை விட்டு சிரமப்பட்டவாறே இறங்கினான்.
வலது காலில் எதுவோ குத்திக் கிழித்து இருப்பதைக் கண்டவன் மெல்ல மெல்ல நடந்து சென்று தன்னுடைய அறைக்குள் நுழைவதற்குள் போதும் போதுமென்றாகியது அவனுக்கு.
இந்த வலி அவனுக்கோ பெரிதாகத் தெரியவில்லை. உடல் வலியை விட, அவனுடைய மன வலி ஓங்கியிருந்தது.
தன்ஷிகாவோ ஹாலில் அமர்ந்திருந்தவள் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த விதார்த்தின் நிலையைக் கண்டு அதிர்ந்து போனாள்.
நடக்க முடியாது காலில் காயத்தோடு வந்தவனைக் கண்டு பதறியவள் சட்டென அவனை நெருங்கி தாங்கிக் கொண்டாள்.
அவனுடைய கரங்களை தன் தோளின் மீது போட்டுக் கொண்டவள்,
“ஐயோ என்னாச்சு சார்..? எப்படி அடிபட்டிச்சு..? ஐயோஓ கை… கைலையும் ர.. ரத்தம் வருது சார்…” என்றவளின் பார்வையோ அவனுடைய தலை முதல் உள்ளங்கால் வரை அவசர அவசரமாக ஆராய்ந்தது. அவனுடைய உதட்டிற்கு கீழே அடிபட்டு வீங்கி இருப்பதைக் கண்டவள் பயந்து போனாள்.
அவளுடைய தோளின் மீது தன்னுடைய கரத்தைப் போட்டவாறு மெல்ல அடியெடுத்து வைத்தவன் தன்னுடைய அறைக்குள் நுழைந்ததும் கட்டிலில் அமர்ந்தான்.
“டோன்ட் பேனிக் தன்ஷிகா. சின்ன ஆக்சிடெண்ட்தான் ஐ அம் ஓகே நவ்.” என்றான் விதார்த்.
“இப்படியே இருங்க சார். அசையாதீங்க.” என்றவள் தன்னுடைய அறையை நோக்கி ஓடினாள்.
அவளுடைய பதற்றத்தையும் தவிப்பையும் உள்வாங்கிக் கொண்ட விதார்த்திற்கோ உள்ளம் பிசையத் தொடங்கியது.
எப்படிப்பட்ட பெண்ணின் வாழ்க்கையை தான் பாழாக்கி விட்டோம் என்பது புரிய வேதனையில் விழிகளை மூடினான் அவன்.
“உன்னை சீக்கிரமா இந்த நரகத்துல இருந்து மீட்டெடுப்பேன் தனி.” என்றவன் அவள் தன்னருகே விரைந்து வருவதைக் கண்டு மீண்டும் அமைதியாகிப் போனான்.
தன்ஷிகாவோ சென்ற வேகத்திலேயே மீண்டும் அவனுடைய அறைக்குள் நுழைந்தவள் கையில் முதலுதவி பெட்டியுடன் வந்தாள்.
“பெட்ல படுத்துக்கோங்க சார். உங்க காயத்துக்கு மருந்து போட்டு விடுறேன்.” என்றவளை அழுத்தமாகப் பார்த்தவன்,
“நீ எனக்காக இதெல்லாம் பண்ணணும்னு எந்த அவசியமும் இல்ல. டைம் ஆயிடுச்சு. நீ போய்த் தூங்கு..” என அவளை அவளுடைய அறைக்கு அனுப்ப முயன்றான் விதார்த்.
“அது எனக்கும் தெரியும் சார். பட் என்ன தான் இருந்தாலும் மனிதாபிமானம்னு ஒன்னு இருக்குல்ல. உங்க இடத்துல யாரா இருந்தாலும் நான் இப்படித்தான் ஹெல்ப் பண்ணியிருப்பேன்.
தெரியாதவங்களுக்கே ஹெல்ப் பண்ணும்போது என்னோட பாஸ் நீங்க உங்களுக்கு ஹெல்ப் பண்ணாம என்னால இருக்க முடியுமா.? உங்களுக்கு மருந்து போட்டப் பிறகு தூங்குறேன்.” என்றவள் அவனுடைய காயத்தை சுத்தம் செய்யத் தொடங்கினாள்.
“ம்ம்” என்ற முனகலோடு தன் விழிகளை மூடிக்கொண்டான் விதார்த். தன்ஷிகாவோ அவனுடைய காலுக்கு மருந்திட்டு முடித்தவள் அவனுடைய கைக்கும் மருந்து பூசினாள்.
அவனுடைய அதரங்களுக்கு கீழே சற்று தடித்து வீங்கி இருப்பதைக் கண்டவள் பஞ்சினை நீரில் நனைத்து விட்டு அவனுடைய இதழை தன் விரலால் அழுத்தி பிடித்தவாறு இதழின் கீழே பஞ்சினால் துடைக்க விதார்த்தோ பதறி எழுந்தான்.
“நோ தேங்க்ஸ் தனி. போதும் இனி நான் பாத்துக்குறேன். நீ போய்த் தூங்கு.” என கடுமையான குரலில் கூற, அவனுடைய கடுமையில் அதிர்ந்தவள் அவனை புரியாது பார்த்தாள்.
‘இவன் தனின்னு என்னைத்தான் சொல்றானா..?’ என எண்ணியவள் “சார் தனின்னு என்னையா கூப்பிட்டீங்க..?” எனச் சந்தேகத்தோடு கேட்டாள்.
“இங்கே நீயும் நானும் மட்டும் தானே இருக்கோம். சோ உன்னைத்தான் அப்படி கூப்பிட்டேன். உன்னோட ஃபுல் நேம் சொல்லிச் சொல்லியே வாய் வலிக்குது. அதனாலதான் இந்த பேருக்கு ஷிப்ட் ஆயிட்டேன். சரி போய்த் தூங்கு.” எனக் கேலியாகக் கூறுவதைப் போலக் கூறி அவளை அனுப்பி வைத்தவன் வேதனையோடு விழிகளை மூடிக்கொண்டான்.
இனி வரப் போகின்ற நாட்களை போராடித்தான் கடக்க வேண்டுமென அவனுக்குப் புரிந்தது.
💙💜💜💙
