புயலுக்கும் பூவுக்கும் சுயம்வரமோ?
சுயம் வரம் : 08
வெண்மதியின் தந்தையிடம் விடைபெற்று வந்த பிறகு டாக்ஸி பிடித்து கிளம்பிய அக்னி தன் வீட்டை வந்து அடையவே மணி பத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது.
அவசர அவசரமாக டாக்ஸிக்கு பணம் கொடுத்துவிட்டு வீட்டிற்குள் நுழைய சற்று தயங்கியவன்.. பின் வாசல் வழியாக செல்ல முற்பட அதன் வாசல் திறந்தே இருந்தது.
பின் பக்கம் தோட்டம் இருப்பதால் பெரும்பாலும் அந்த கதவு இரவு நேரம் பூட்டியே இருக்கும்.
இன்று திறந்து கிடப்பதை கூட யோசிக்க முடியாத அளவிற்கு தனது அறைக்குள் சென்று விட வேண்டும் என்கிற முனைப்பே இருக்க மனம் சுற்றி இருக்கும் விஷயங்களை பெரிதாக கணக்கில் கொள்ளவில்லை.
அப்போது மின் விளக்கு உயிர்பித்ததை கண்ட பின் தான் பிரம்மையில் இருந்து வெளியே வந்தான் அக்னி.
மின்விளக்கை யார் உயிர்பித்து இருப்பார்கள் என்பதற்கு பெரிய ஊகம் ஒன்றும் இருக்கத் தேவை ஏதும் இல்லை.
“தாத்தா” என்றவனின் குரலில் பயம் ஏதும் இன்றி இயல்பாகவே இருந்தானா இல்லை திடமாக காட்டிக்கொண்டானா என்பது அவனுக்கே வெளிச்சம்.
அவரின் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட உதிர்க்கவில்லை ஆனால்
விழிகள் குற்றம் சாற்றின.
நீ எங்கு போய்விட்டு வருகிறாய் என்று கூட அவர் கேட்க வேண்டிய அவசியம் இல்லையே.. அவர் தான் தன் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் மேலும் கண் வைத்து இருக்கிறாரே. அவர் பார்வையில் இருந்து தப்பித்து விட முடியுமா என்ன?
அதை அவனும் அறிந்தே இருந்தான். முன் வாசல் வழியாக வந்து தன் தாயை எழுப்பி தொந்தரவு செய்யக் கூடாது என்று தானே பின் வாசல் வழியாக வந்தான்.
அவரின் பார்வைகளை அலட்சியப்படுத்தி விட்டு செல்லாமல் மௌனமாகவே நின்றான்.
அவர் எதுவும் கேள்விக் கேட்காமல் தன் தடியை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்று விட்டார்.
அவரின் அடுத்த நடவடிக்கை என்ன என்பது அவ்ளோ சீக்கிரம் யாராலும் ஊகிக்க முடியாது. அவரைப் பற்றி நன்றாக உணர்ந்தவன் அக்னி ஒருவனே. அதை அவரும் அறிந்தே இருந்தார்.
இப்போதைக்கு ஏதும் இல்லை என்ற தற்காலிக மனநிம்மதியுடன் அறைக்குள் சென்று அதீத சோர்வில் உறங்கியும் விட்டான்.
ஆதித்ய நாராயண தேவின் கண்கள் மட்டும் உறக்கத்தை தழுவ மறுத்தது.
எதோ ஒன்று தன் கையை விட்டு நழுவுவது போல் மனம் அடித்து சொன்னது.
அது தான் உண்மை என்பது போல் விதி அவர்களையே அறியாமல் அக்னிக்கும் மதிக்கும் ஒரு அவிழ்க்க முடியாத முடிச்சை கட்டி இருந்தது.
மறுநாள் காலை மதியை பள்ளிக்கு அனுப்பவில்லை.
வீட்டிலே அவளை அதிகாலையிலே எழுப்பி குளிக்க வைத்த எதிர்வீட்டு அத்தை சித்ரா.. அவள் கையில் நல்லெண்ணையும் நாட்டுக் கோழி முட்டையும் கொடுக்க..
“அய்ய சீ இதெல்லாம் எனக்கு வேண்டாம்…” என பிடிவாதம் பிடித்து அறைக்குளே கட்டிலை சுற்றி வட்டம் அடித்துக் கொண்டு போக்குக் காட்டிக்கொண்டு இருந்தாள் மதி.
“ஏய் அங்க இங்கன்னு ஓடாதே டி.. நீ என்ன இப்போ சின்னப் பொண்ணா?
ஒழுங்கா இதை வந்து குடி.. உன் அத்தை நல்லதுக்குத் தான் சொல்லுவேன்..” என்று சொல்லிக்கொண்டே அவரும் அவளை துரத்திக் கொண்டு ஓடினார்.
“வவ்வ வவ்வே…!! நான் வரமாட்டேன்.” என்று வக்கனை அடித்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறியவளின் இடையை வளைத்துப் பிடித்தது ஒரு கரம்.
“டேய் கிருஷ்ணா.. விடு டா என்னை” என்று தடுக்க..
“என்னது டாவா” என்று அதிர்ந்தவன் “சொல்லுவியா?…சொல்லுவியா?” என்று அவள் தலையிலே கொட்டினான்.
“அம்மா” என்று இவள் வலியில் கத்த..
“கிருஷ்ணாஅவளை விடு.” என்றாள் அவனின் தாய் சித்ரா.
“இப்போ ஒன்னும் அவள் சின்னப் பிள்ளை இல்லைடா.. முன்ன மாதிரி அவளை கை நீட்டினேன்னு தெரிஞ்சுது அவ்ளோ தான்..” என்று ஒரு விரல் நீட்டி எச்சரிக்கை செய்தார்.
“சரி வாடிம்மா..வந்து முட்டையை குடி” என்று மீண்டும் அருகில் வர.. அப்போது மீண்டும் போக்கு காட்ட நினைத்தவளை.. திரும்பி வந்து இருக்கையையும் கெட்டியாக பிடித்துக் கொண்டான் கிருஷ்ணா.
“இப்போ குடுங்கம்மா. இனி எப்படி தப்பிக்க பார்க்கிறாள் என்று நானும் பார்க்கிறேன்..” என்று சொல்லி விட்டு இன்னும் அழுத்தமாக கையைப் பிடித்துக் கொண்டு கால்களையும் நகர விடாமல் கிடுக்குப் பிடி போட்டுக் கொண்டான்.
இப்போது தான் மதிக்கு தப்பிக்க வலி இல்லையே.. வேண்டாம் வேண்டாம் என்று மறுக்க மறுக்க வாயில் ஊற்றிவிட்டார் சித்ரா.
“அதான் குடிசிட்டேன்ல என்ன விடு.”
அவன் விட்டவுடன் அறைக்குள் தஞ்சம் புகுந்து கொண்டாள் மதி.
“இவளிடம் மயிலே மயிலே இரை போடுன்னு சொன்னால் வேலைக்கு ஆகாதும்மா.. இப்படி தான் அடாவடியாக இறங்கினாள் தான் உண்டு..இனி அவள் எவ்ளோ பிடிவாதம் பிடிச்சு உன்னை டார்ச்சல் பண்ண போறன்னு மட்டும் பாரும்மா?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. மதி சொன்னாலே புரிந்துகொள்வாள் என் சமத்து மருமகள்..” என்று அவளுக்கு வக்காலத்து வாங்க..
“நீ இப்படியே நம்பிட்டு இரும்மா..” என்று மேலும் கீழும் பார்த்துவிட்டு சென்று விட்டான் அவன் வீட்டை நோக்கி.. வெண்மதி வரவிட்டாலும் இவனுக்கு இன்று பள்ளிக்கூடம் இருகிறதே.. அது மட்டும் இல்லாமல் பொதுத்தேர்வுக்கு இன்னும் மூன்று மாதங்களே எஞ்சி இருக்க.. மட்டைப் பந்து விளையாட்டை சற்று ஒதுக்கி விட்டு இனி முழுமூச்சாக படிப்பில் இறங்கி விட வேண்டும் என்கிற எண்ணத்தோடு சைக்கிளை மிதித்துக் கொண்டு தன் நண்பர்கள் வழக்கம் போல் கூடும் ஆலமரத்தடியில் வந்து நிற்க.. அப்போதே அவர்கள் இவனுக்காக காத்துக் கொண்டு இருந்தனர் போலும்..
“ஏன் மச்சி இன்னைக்கு லேட்டு…?” என்றான் அவன் தோஸ்து பிரியன்..
“அது ஒன்னும் இல்லடா.. மதிக்கு வர வெள்ளிக் கிழமை சடங்கு வைக்குறாங்க..
அதற்காக மாமாகிட்ட உதவி ஏதும் வேணுமான்னு கேட்டுப் பேசிட்டு வந்தேன் அதான் லேட்டு..” என்று விளக்கம் கொடுக்க..
“இனி மதி நம்மக்கிட்ட பேசமாட்டளா டா?” என்றான் பிரியன்.
“ஏன்டா இப்படி சொல்லுற?” என்றான் கிருஷ்ணா.
எப்படிடா வயசுக்கு வந்தப்பெண்ணை நம்மக்கிட்ட பேச விடுவாங்க?”
“அதெல்லாம் பிறகு பார்த்துக்கலாம் இன்னைக்கு வணிகவியல் டெஸ்ட் இருக்கு அதை முதலில் பார்ப்போம்.”
“மச்சான் நீ படிச்சிட்டியா?” – பிரியன்.
“அதெல்லாம் தெய்வக் குத்தம்.. நான் ஏன் பண்ணப் போறேன். இந்த தடவை பிட் அடிக்கணும் மச்சி.. அடுத்த தடவையில் இருந்து பார்த்துக்கலாம்.” என்றான் அலட்சியமாக.
“என் இனமடா நீ..” என்று அவன் நண்பன் மார்தட்டிக்கொள்ள..
அதைக் கண்டு மற்றவர்கள் சிரித்துக் கொண்டே பள்ளிக் கூடத்தை வந்து அடைந்து விட்டனர்.
அவர்களின் கலகலப்பும் கும்மாளமும் எல்லாம் வகுப்பறையை நெருங்கும் வரை தான் இருந்தது.
அந்த முகத்தை கண்ட அடுத்த நொடி கிருஷ்ணாவின் முகம் பாறை என இறுகியது. அவன் தோழர்களின் முகங்கள் கூட முறைப்பையும் கனலையும் தத்து எடுத்துக் கொண்டன.
அவர்களின் எதிரில் நக்கல் பார்வையை வீசிக்கொண்டு நின்று இருந்தான் அக்னி.
கிருஷ்ணாவிற்கு கோபக்கனல் கொழுந்து விட்டு எரிந்தாலும் அதை முகத்தில் காட்டமல் தன் இருக்கையில் வந்து அமர்ந்தவன்.. அவனை தோற்கடிப்பதற்கான நேரத்தைக் குறிப்பார்த்து காத்துக் கொண்டு தான் இருந்தான்.
பொதுவாக வகுப்பில் இரு அணியினரோ அல்லது அதற்கு மேற்ப்பட்ட அணியினர் பிரிந்து குழுவாக இருப்பது வழக்கம் தான்.
அது போல் தான் இங்கும். எதுவென்றாலும் நீயா நானா என்று முட்டிக் கொள்வது வழக்கமே.
இந்த வகுப்பில் அக்னி ஒரு அணியும் கிருஷ்ணா ஒரு அணியும் பிரிந்து இருந்தனர். பணக்கார வர்க்கத்தை சேர்ந்தவர்கள் அக்னியின் அணியாகவும் மத்திய வர்கத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணாவின் அணியாகவும் அடிக்கடி மோதல் அடிதடி என்று மோதிக்கொண்டு பிரச்சனை பள்ளி முதல்வர் காது வரை செல்லாமல் அது ஓயாது.
அக்னியின் மனநிலை மிகமோசமாக இருந்தது. அதற்கு காரணம் கிருஷ்ணா அல்ல. அவனின் தாத்தாவே தான்.
நேற்று இரவு அமைதியாக சென்றவர் காலையில் இருந்து கலகத்தை ஆரம்பித்து வைத்து விட்டார்.
காலையில் எல்லோரும் உணவு அருந்த மேஜையின் மேல் அமர்ந்து இருக்கும் போது.. வாசுதேவிடம் (அதான் அக்னியின் அப்பா) “உன் பையன் பொய் சொல்லி டிரைவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு யாருன்னே தெரியாதே ஒரு பொண்ணுக்கு ஊழியம் பண்ணிட்டு வந்து இருக்கான். சொன்னப் பொய்க்காக இன்னும் ஒரு மாசத்துக்கு யாரும் அவன்கிட்டப் பேச கூடாது. பச்சத் தண்ணீர் கூட யாரும் தரக்கூடாது. யாரவது என்னை மீறிப் பேசுனீங்கன்னு தெரிஞ்சுது உங்களை ஒன்னும் பண்ண மாட்டேன் அவன் தான்
தண்டனை மேலும் அனுபவிப்பான்.”
“ஏங்க இப்படி பண்ணுரீங்க?” என்று தேவகி வாயைத் திறக்க..
“வாயை மூடு.” என்று தன் மனைவியை அடக்கி விட்டு..
”வாசு நீ என்ன சொல்லுற?”
“நீங்க சொன்னால் எனக்கு சத்திய வாக்கு தான் அப்பா”
வாசுவைப் பொறுத்த மட்டில் தன் தகப்பனுக்கு பிறகு தான் மகன் எல்லாம்..
அதற்குப் பிறகு அவர் நெஞ்சில் ஈரம் இல்லாதவர் போல் தான் நடந்து கொண்டார்.
கமலாவிற்கு (அக்னியின் அம்மா) தான் கண்களில் கண்ணீர் ஆறாக பெருகியது.
பெத்த மனம் துடிதுடித்தது.
“ஆபிஸில் இன்னைக்கு பெரிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகுது..
இப்படி அழுது வடிந்தால் நடந்த மாதிரி தான் சனியனே வாயை மூடு.” என்று அதட்டியவர் வாசுவே தான்.
இதைக் கேட்டு மனம் வெதும்பிய கமலா வாயைப் பொத்திக் கொண்டார்.
தாயின் நிலையைக் கண்டு அக்னியின் மனம் வெகுவாக கலங்கிப் போயிற்று.
வாசுவும் நாராயணனும் ஆபீஸ் கிளம்பி சென்றவுடன்.. மகனை ஓடி வந்து அணைத்த கமலா எதுவும் பேசாமல் மௌனமாக அழுதார்.
அவர் மகனிடம் பேசக் கூட பயம் ஆக இருந்தது.
வீடு முழுவதும் தான் ஸ்பை ஆட்கள் இருக்கிறார்களே.. இங்கு நடக்கும் ஒவ்வொன்றும் அங்கு சென்று அடைந்து விடும் என்பதால் எதுவும் பேச முடியாமல் அழ..
“நீங்க தானேப் பேசக் கூடாது… நான் பேசலாம் இல்லையா? ஒன்னும் யோசிக்காதிங்கம்மா… நான் மாமா வீட்டில் தங்கிக் கொள்கிறேன் என்ன ஓகே தானே?”
இப்போது தான் மனம் அவருக்கு சற்று சாந்தி அடைந்து இருந்தது.
சிரிங்க அம்மா என்ற முத்துப்பல் தெரிய சிரிக்கவும்.. அது அவருக்கும் ஒட்டிகொண்டது போலும்.
அதை எண்ணிப் பார்த்தவன் ஒரு பெருமூச்சென்று விட்டுக் கொண்டு வணிகவியல் புத்தகத்தை திறந்துப் படிக்க ஆரம்பித்தான்.
இப்படியே இரண்டு நாட்கள் கழிய.. வெண்மதிக்கு பூப்புனித நீராட்டு விழா எளிமையாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
வீட்டிற்கு அருகில் இருந்த காலி இடத்தில் பந்தல் இட்டு பூத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மேடையின் நடுவில் ஒரு நாற்காலி மட்டும் வைக்கப்பட்டு
இருந்தது.
இது வெறும் சிறு சடங்கு கழிப்பதால் அக்கம் பக்கத்து தவிர பெரிதாக யாரையும் அழைக்கவில்லை சித்ரா.
வெண்மதியின் பெற்றோர்கள் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் பண்ணி இருந்ததால் பெரிதாக சொந்தங்கள் என்று யாருமே கிடையாது.
அவர்கள் திருமணம் ஆகி இங்கு வரும்போது பக்கத்து வீட்டில் இருந்த சித்ராவே
நண்பியாகி பின்னர் உறவாகும் நிலைக்கு மாறி இருந்தாள்.
வெண்மதியை வளர்த்தது கூட சித்ரா தான்.
அவளே முன் வந்து அவளுக்கு மஞ்சள் பூசி பட்டுப்புடவை பழம் பூ சீப்பு கண்ணாடி வளையல் பொட்டு எல்லாம் அடங்கிய தாம்பூலத் தட்டும் கையில் பணமும் கொடுத்தார்.
பின்னர் மாமன் சடங்கிற்காகவே சித்ராவின் கணவன் முருகவேல் மாலை போட்டு விட்டு சிறு மோதிரம் ஒன்றை அணிவித்து விட்டார்.
எல்லோரும் வரிசையாக வந்து ஒன்றன் பின் ஒன்றாக சந்தனம் பூசி விட..
பின் பெண்ணை அழைத்துக் கொண்டு வர முருகவேலும் கிருஷ்ணாவும் ஓலைக் கட்டி அதில் வெண்மதியை அமரவைத்தனர்.
அதன் பின் மேலும் அவன் ஓலையைக் கட்டிக் கொண்டு இருக்கும் போதே
“உன் வருங்கால மனைவியைப் பார்த்துக் கோடா கிருஷ்ணா…” என்று சுற்றி இருந்தவர்கள் கலாய்க்க..
“இனி இந்த வீட்டில் அடுத்து கிருஷ்ணாவுக்கும் மதிக்கும் தான் டும் டும் டும்” என்று சித்ராவிடம் எல்லோரும் சொல்லவும்..
அதற்க்கெல்லாம் இன்னும் வருஷங்கள் இருக்கு.. படிக்குற பிள்ளைங்க கிட்டப் போய் இப்படி எல்லாம் பேசக் கூடாது என்று பொய்யாக மிரட்டி அனைவரின் வாயையும் அடைத்தார். அவர் மனதிலும் மதி அவரின் மருமகள் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்தது.
மதிக்கு திருமணம் என்று சொன்னப் போது கற்பனை குதிரைகள் ஓடின..
மணமகளாக அவள் வந்து நிற்க.. எதிரில் கம்பீரமாக அமர்ந்து புன்னகை முகத்துடன் அமர்ந்து இருந்தது அக்னியே தான்..
அதுவரை தோன்றிய கனவுக் குதிரையில் திடுக்கிட்டு இருந்து வெளியே வந்தவள்
எனக்கு ஏன் நேத்துப் பார்த்தவரின் முகமே அடிக்கடி தோணுது.. நான் ஏன் அவரைப் பற்றி சிந்திக்குறேன் என்று எண்ணிக் கொண்டு இருந்தவள் சித்ரா அத்தை அவளை தோளை உலுக்கியப் பின் தான் சுய நினைவுக்கே வந்தாள்.
“சரி இதில் கையை கழுவும்மா.. உனக்கு விருந்து போடணும். நீ சாபிட்டப் பிறகு தான் மத்தவங்களுக்கு கொடுக்க முடியும்.”
“ம்ம்…!! என்றவள் அவளுக்கு போடப் பட்டு இருந்த இலையில் இருந்த உணவுப் பதார்த்தங்களை ருசிக்க ஆரம்பித்தாள்.
இங்கு தன் மாமன் வீட்டில் வெண்மதியைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தான் அக்னி.
