வேங்குழலின் நல்லிசை நீயடி
வேங்குழலின் நல்லிசை நீயடி
அத்தியாயம் 19
மதிமலர் அவர் சிரிப்பதை பார்த்து அவர் கூறுவது உண்மையா? என்பதுபோல் ஆதவன் முகம் பார்த்தாள்.
ஆதவன் பதில் கூறும் முன்பே “என் பெயர் கீர்த்தனா நான்தான் ஆதவனின் அம்மா” என்று கூறினார். அதற்கும் அவனது முகத்தையே மதிமலர் நோக்கினாள். அவனும் சிரித்துக் கொண்டே “அம்மா மலர் கூறுவது உண்மைதான் நேரமாகிவிட்டது. நீங்கள் படுங்கள் காலையில் பேசிக் கொள்ளலாம்” என்று எழுந்து “மலர் என்னோடு வா “என்று கட்டளை இட்டு விட்டு முன்னால் நடந்தான்.
ஒரு அடிகூட எடுத்து வைக்காமல் அப்படியே நின்றாள் மதி மலர். இப்படிப் நிற்பதை பார்த்து கீர்த்தனா “போமா பயப்படாதே “என்றார். மதி பயந்தபடியே ஆதவனை பின் தொடர்ந்தாள். ஹாலிலிருந்து ஒரு அறையின் கதவை திறந்து அறையின் உள்ளே சென்றான். மதியும் அந்த அறையினுள் சென்றாள். பார்த்தவுடனே தெரிந்தது அது அவனது அலுவலக அறை என்று. மேசையின் மேல் இரு முழங்கைகளை பதித்து விரல்களை ஒன்றாக கோர்த்து மதி மலரைப் பார்த்து “இனி மதியம் கோயிலுக்கு, பார்க்குக்கு என்றெல்லாம் செல்ல முடியாது இல்லையா ?”என்றான்.
அப்போதுதான் மதி புரிந்துகொண்டாள் தான் திட்டமிட்டு அவனுடைய இடத்துக்கு வரவழைக்கப்பட்டு இருப்பதை. ஆனால் ஏன்? என்பதுதான் விளங்கவில்லை.
மலர் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க அவன் முகம் சில கணங்களில் சோகத்தைக் பூசிக் கொண்டது. அதில் நிலவிய சோகம் புரிந்தது ஆனால் அதன் காரணம் புரியவில்லை.
நீண்ட மூச்சை வெளியிட்டு” அம்மாவுக்கு தண்டுவடத்தில் கோளாறு இருக்கிறது. அதோடு இதயக்கோளாறு இரண்டிற்கும் சேர்ந்தாற்போல் வைத்தியம் பார்ப்பதற்கு அவர்களது உடல்நிலை தேற வேண்டும். இதயக் கோளாறு காரணமாக அதிகம் நடக்க முடியாது. நடந்தால் மூச்சு விட சிரமப் படுவார்கள். இப்பொழுது அவர்களுக்கு வைத்தியத்தை காட்டிலும் உன்னை போன்ற ஒருவரின் துணை தான் அவசியம்” என்றான்.
பின்பு” மலர் உன்னிடம் சொல்லாமல் வேண்டுமானால் நான் இங்கு வேலைக்கு சேர்த்திருக்கலாம் ஆனால், உண்மையாகவே உன்னுடைய உதவி அம்மாவுக்கு தேவைப்படுகிறது.” “உன்னை அவர்களுக்கு மிகவும் பிடித்தும் இருக்கிறது. உனக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன் அதற்காகவாவது மறுக்காமல் செய்வாய் அல்லவா?” என்றான். “அத்தோடு மூன்று மாதம் இங்கிருந்து வேலை செய்வதாக ஒப்பந்தத்தில் வேறு கையெழுத்திட்டு இருக்கிறாய் கவனத்தில் வைத்துக் கொள்” என்றான்.
“கட்டாயமாக செய்கிறேன் சார் அத்தையை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்றாள்.
பின்பு ஹாஹா என்று சிரித்து “என் வீட்டுக்கு தான் நீ வேலைக்கு வரப் போகிறாய் என்று தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டாய் தானே.ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு இருக்க மாட்டாய் இல்லையா?” “அதனால் தான் அதைப் பற்றி சிறு குறிப்பு கூட உனக்கு நான் கொடுக்கவில்லை” என்றான்.
ஆப்பசைத்த குரங்கு என்பார்களே அதுபோல இருந்தது மலரின் நிலை. வேலை அவளுக்கு முக்கியம் தான் என்றாலும் ஆதவனை சந்திக்க பயந்தே ஏதும் விசாரிக்காமல் அவசரமாக இந்த வேலையை ஒத்துக் கொண்டாள். ஆனால் ஆதவன் அவனை தான் தவிர்ப்பதை தெரிந்துகொண்டு திட்டமிட்டு செயல்படுவான் என்று நினைக்கவில்லை.
தலை நிமிராமல் அமைதியாக நின்றிருந்த மதிமலரிடம்” இன்னொரு முக்கியமான விஷயம் உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன் அதற்காகத் தான் உன்னை தோட்டத்தில் சந்திக்க வந்தேன்” என்றான் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு .
மதிமலர் என்ன முக்கியமான விசயம் என்று அவன் முகத்தை ஆர்வமாகப் பார்த்தாள்.
“இனி இங்கு இருக்கும் வரை குறிப்பாக எனக்கு முன்னால் இந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் பெண் போல நடந்து கொள்ளாதே ” என்றான். அவன் சொல்லுவது எதுவும் மலருக்கு விளங்கவில்லை.
“ஐந்தாம் வகுப்பு பெண் போலவா? அப்படி என்றால் என்ன சார் ?”என்றாள் அப்பாவியாக.
சிரிப்பை அடக்கியபடி” அதுதான் சிறுபிள்ளை போல தேன் மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறாயே அதைத்தான் சொன்னேன்” என்றான்
அவன் சொன்ன பாவனையில் அவளுக்கும் சிரிப்பு வந்தது. இதைச் சொல்லத்தான் அப்படி பயப் படுத்தினாரா? என்று எண்ணிக் கொண்டாள். நான் சாப்பிடக் கூடாதாம் ஆனால் என்னிடம் இருந்து இவர் மட்டும் பிடுங்கி சாப்பிடுவாராம் இது என்ன நியாயம்? என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள். இப்படி வந்து மாட்டிக் கொண்டேனே என்று நினைத்ததுவிட்டு. திடீரென்று “சார் உங்கள் மனைவி எங்கே?” என்று கேட்டாள். ஆதவன் இறுக்கையில் பின்னோக்கி சாய்ந்து கொண்டு” வருவாள் அவளுக்காக தான் காத்திருக்கிறேன்” என்றான்.
மதி மலருக்கு அவளைச் சுற்றி எல்லாம் ஒளி இழந்தது போல் தோன்றியது.”ஓ” என்றவள் “கவலைப்படாதீர்கள் சார் அத்தையை நான் நன்றாக பார்த்துக் கொள்வேன் “என்று சுரத்தே இல்லாமல் பதில் அளித்து விட்டு திரும்பி வேகமாக அவளது அறைக்கு வந்துவிட்டாள்.
மறுநாள் காலை அழகானதாகவே இருந்தது. பெரிதாக அங்கு வேலை ஒன்றும் இல்லை. சும்மா இருக்க பிடிக்காமல் யசோதாவுக்கு சிறுசிறு உதவிகளை செய்து கொடுத்தாள். தோட்டத்திலிருந்து மலர்களைப் பறித்து தொடுத்து கீர்த்தனாவிடம் கொடுத்து “அத்தை ஆதவன் சார் மனைவிக்குக் கொடுத்து விடுங்கள்” என்று நீட்டினாள். அவரும் சிரித்துக் கொண்டே வாங்கி வைத்துக் கொண்டார். அதிகாலை உடற் பயிற்சியை முடித்துக் கொண்டு வந்து தாயாரிடம் பேசிக்கொண்டிருந்தான் ஆதவன். அப்போது அங்கே வந்த மதிமலரை பார்த்த கீர்த்தனா லேசாக சிரித்துவிட்டு “ஆதவா மலர் உன்னுடைய மனைவிக்கு இந்த பூவை கொடுக்கச் சொன்னாள் மறக்காமல் எடுத்துக் கொடுத்து விடு” என்றார். அவன் சிரித்து விட்டு” நீங்களே கொடுத்து விடுங்கள் அம்மா “என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறி விட்டான்.
மலர் அவளாகவே “நான் வேண்டுமானால் கொடுத்துவிட்டு வரட்டுமா அத்தை “என்று கேட்டாள். “எங்கே மா கொண்டுபோய்க் கொடுப்பாய்?” என்று கேட்டாள்.
“அவர்களது அறையில் தான். நேற்று இரவு கூட ஆதவன் சார் அவர்களுக்காக காத்திருப்பதாகச் சொன்னார். ஒருவேளை தாமதமாக வந்து இருப்பார்களோ என்னவோ. அப்படியே நானும் அவர்களை பார்த்தது போல் இருக்கும்” என்றாள்.
அதற்கும் சிரித்துவிட்டு “இங்கே வா மலர்” என்று அவளை அவரருகில் அமர்த்திக் கொண்டு அந்தப் பூவை எடுத்து மலருக்கு வைத்துவிட்டார். அவரது செய்கையை பார்த்தவள் “ஏன் அத்தை ?அவர்களுக்கு பூக்கள் என்றால் பிடிக்காதா?” என்று கேட்டாள்.அதற்கும் சிரித்துக்கொண்டே “பூ பிடிக்காத பெண்கள் உண்டா? ஆனால் அவன் மனைவிக்கு இப்போது எங்கே போவது?” என்று கேட்டார்.
“நேற்று மாலை நீங்கள் சொன்னீர்களே அவரது மனைவியை விட்டுவிட்டு இங்கே வந்திருப்பதாக “என்று அவர் முகம் பார்த்து கேட்டாள்.
புன்னகை முகமாகவே அவளைப் பார்த்து “அதை நினைத்துக் கொண்டாயா? அவன் வேலையை தான் அவன் மனைவி என்று சொன்னே” என்றார்.
மலருக்கு சட்டென்று அவள் உலகம் ஒளிமயமாக மாறியது. அவளது உணர்வுகளை அவளாலே புரிந்து கொள்ள முடியவில்லை. தனக்கு ஏன் உள்ளூர மகிழ்ச்சியாக இருக்கிறது என்று எண்ணிக் கொண்டவள் ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்து கொண்டாள் கொஞ்சமே கொஞ்சம் என்றாலும் ஆதவனிடம் சிறு ஈர்ப்பு தோன்றி இருக்கிறது இதை வளர விடுவது தனக்கு நல்லதல்ல என்று நினைத்துக் கொண்டாள்.
அவள் முகத்தில் தோன்றி மறைந்த உணர்வுகளை எல்லாம் பார்வையால் படித்துவிடுபவர் போல் பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தனா,”எங்கே எனக்கும் இந்த வீட்டிற்கு மருமகள் வர வேண்டும் என்று ஆசையாக தான் இருக்கிறது .ஆனால் ,அவன் காதலித்து தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நான் பார்க்கும் பெண்ணை எல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டே இருக்கிறான்” என்று கவலையோடு சொன்னார். “இவன் எப்போது காதலித்து? எப்போது? அந்த பெண் சம்மதம் சொல்லி எப்போது இந்த வீட்டுக்கு மருமகள் வருவது? “ம்ம் ” என்று சலித்துக் கொண்டார்.
“உனக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்கிறேன் யாரிடமும் சொல்லி விடாதே “. “இந்த பையன் பார்ப்பதற்குத்தான் விரட்டிக்கொண்டு இருப்பானே தவிர காதலை சொல்வதற்கெல்லாம் தைரியம் போதாது. அதுதான் என் கவலை” என்று சிரித்தார்.
அவர் சொன்ன பாணியில் மலருக்குமே அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.
அவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக “விடுங்கள் அத்தை நேரம் காலம் கூடி வந்தால் எல்லாம் சரியாக நடக்கும். உங்கள் ஆசையும் அவரது ஆசையும் விரைவில் நிறைவேறும்” என்றாள்.
அதன் பிறகு நாட்கள் இயல்பாகவே நகர்ந்தது. ஒரு நாள் மாலையில் கீர்த்தனாவின் அறையில் அவரோடு டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் மலர். அப்போது அந்த நிகழ்ச்சியை வழங்குபவர்கள் என்று ஒரு நிறுவனத்தின் பெயரை கூறி விளம்பரம் வந்து கொண்டிருந்தது. அதை பார்த்ததும் மதிமலர் அத்தை இந்த விளம்பரத்தில் வரும் ஹீரோ வேஷ்டி சட்டையில் சூப்பராக இருப்பார் .வேஷ்டி சட்டை அவருக்கு அத்தனை பொருத்தமாக இருக்கும் பாருங்களேன்” என்று கூறி டிவியிலேயே விழிகளை ஆர்வமாக பதித்த படி நின்றிருந்தாள். “அத்தை இப்போது அந்த விளம்பரம் வரப்போகிறது பாருங்களேன் “என்று சொல்லி முடிக்கவும் டிவி அணைந்து விட்டது.” அச்சச்சோ இப்போது போய் கரண்ட் போய்விட்டதே?” என்று திரும்பி பார்க்க அங்கே முறைத்தபடி நின்றிருந்தான் ஆதவன்.
டிவியின் ரிமோட் அவன் கையில்தான் இருந்தது. அதை கோபமாக சோபாவின் மீது வீசியவன், “நீ விளம்பரத்தில் வரும் கதாநாயகனை பார்த்து ரசிக்கத்தான் நான் சம்பளம் தருகிறேனா?” என்றான்.
“டேய் ஆதவா “என்று குரல் கொடுத்தார் கீர்த்தனா.
மலர் பதில் சொல்லாமல் நின்றாள் “எனக்கு குடிப்பதற்கு ஏதாவது கொண்டுவா” என்று சொல்லிவிட்டு “வாங்கம்மா கொஞ்ச நேரம் தோட்டத்தில் உட்காருவோம் “என்று அவரை வீல் சேரில் அமரச் செய்து தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான்.
மலர் சமையலறைக்குச் சென்று கீர்த்தனாவுக்கும் ஆதவனுக்கும் அவளுக்குத் தெரிந்த முறையில் இஞ்சி சேர்த்து டீ தயாரித்து எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றாள். அவள் தோட்டத்தை நோக்கி நடந்து செல்லும்போது ஆதவனும் கீர்த்தனாவும் அவர்களுக்குள் ஏதோ பேசி சிரித்த படி இருப்பதை பார்த்தாள். கொஞ்சம் முன்பு என்னை அப்படி முறைத்ததென்ன? இப்பொழுது இப்படி சிரிப்பது என்ன? இவரை புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று நினைத்துக் கொண்டாள்.
தோட்டத்தில் டீயை கொடுத்துவிட்டு தாயும் மகனும் பேசுவதற்கு இடைஞ்சல் இல்லாமல் அவளது அறைக்கு வந்தாள். வந்தவளுக்கு ஏதோ தோன்ற ஜன்னலின் அருகில் சென்று அவர்கள் இருவரும் பேசி சிரிப்பதை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது ஆதவன் அவனது கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்து பேசியபடியே தலைமுடியை ஒரு கையால் தடவிகொண்டே நடந்து செல்வதை ரசித்தாள். நடந்து சென்ற ஆதவன் சட்டென திரும்பி மலர் நின்று இருந்த அறை ஜன்னலில் பார்வையை பதித்தான். இதை எதிர்பார்க்காத மலர் சட்டென்று மடங்கி அமர்ந்து மறைந்து கொண்டாள். நான் பார்ப்பது மட்டும் எப்படித்தான் தெரியுமோ? என்று எண்ணி பயந்தாள். சில நிமிடங்கள் கழித்து மெதுவாக எழுந்து மீண்டும் ஜன்னல் அருகில் நின்று வெளியே எட்டிப்பார்த்தாள். அங்கே தோட்டத்தில் கீர்த்தனா மட்டும் அமர்ந்திருக்க நெஞ்சில் கைவைத்து “அப்பாடி ஆதவன் சார் என்னை பார்க்கவில்லை, தப்பித்தேன்”. என்று வாய்விட்டே சொல்லிக்கொண்டு திரும்ப அங்கு அவளது அறையின் வாசலில் கைகளை கட்டி ஒரு காலை மடக்கி மாயக்கண்ணன் போல் சுவற்றில் சாய்ந்து நின்று அழகான பல் வரிசை தெரிய சிரித்துக்கொண்டிருந்தான் ஆதவன்.
அவள் வாய்விட்டு உளறியதை கேட்டிருப்பாரோ? என்ன சொல்லி தப்பிப்பது என்று மலர் யோசிக்கும் போதே “ஜன்னலின் வழியே ரசித்துக் கொண்டிருந்தாய் அல்லவா?” என்று கேட்டான் ஆதவன்.
அவசரமாக “இல்லை சார் “என்றாள்.
ஒரு நிமிடம் குனிந்து புன்னகையை அடக்கி “ஜன்னலில் வழியாக தோட்டத்தை ரசிக்கவில்லையா? வேறு எதை ரசித்தாய்? என்று கேட்டான்.
மாட்டிக்கொண்டது போல் தவித்த மலர் தப்பிப்பதற்கு ஏதோ வாய்ப்பு கிடைத்து போல தாமதிக்காமல் “ஆ ஆ ஆமாம் சார் தோட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தேன்” என்றாள்.
“ம்ம்ம் “என்று பாராட்டுவது போல் முகபாவனையை வெளிப்படுத்தி விட்டு கீர்த்தனாவிடம் சென்று விட்டான்.
சிறிது நேரத்தில் கீர்த்தனாவை அவரது அறைக்கு அழைத்து வந்து தொழில் சம்மந்தமாக பேசிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டின் செக்யூரிட்டிஆதவன் அலுவலக ஊழியர் ஒருவர் பார்சல் ஒன்றை கொடுத்து முதலாளியிடம் கொடுக்கச்சொல்லி சொன்னதாக மலரிடம் கொடுத்தார்.
மலரும் அதை வாங்கிக்கொண்டு கீர்த்தனாவின் அறைக்கு சென்று அவனிடம் நீட்டினாள்
அதை ஆதவன் வாங்கும் முன்பு கைநீட்டி வாங்கிய கீர்த்தனா, அந்த பார்சலை பிரித்துப் பார்த்து ஆதவன் முகம் பார்த்தார்.
சிரித்துக்கொண்டே தாயின் கைகளிலிருந்து அந்த பார்சலை வாங்கியபடி எழுந்தான்.
கீர்த்தனா புன்னகைமுகமாகவே “எத்தனை முறை சொல்லியிருப்பேன் ஒருமுறையாவது என் ஆசையை நிறைவேற்றி இருப்பாயா? இப்போது உன் நிலமையை பார். நூறு சதவீதம் நான் சொன்னதுதான் என்றார்.
“சரி சரி இது உங்களுக்காகவும் தான் என்று வைத்துக் கொள்ளுங்கள்” என்றான்.
“இதை நான் நம்ப வேண்டுமா? போடா” என்றார் கீர்த்தனா.
இவர்கள் பேசிக் கொள்வது புரியாமல் பார்த்துக்கொண்டு நின்றிருந்த மலரை கடந்து சென்று விட்டான்.
மறுநாள் காலையில் கீர்த்தனா குளித்து தயாராவதற்கு நர்ஸ் உதவிக் கொண்டிருக்க, மாடிப் படியின் அருகில் இருக்கும் பிளவர் வாஷ்சில் தோட்டத்தில் இருந்து பறித்து வந்த பலவித மலர்களை அடுக்கிக் கொண்டிருந்தாள் மலர். அப்போது மாடிப்படியில் யாரோ இறங்கி வரும் சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தாள்.
இசைக்கும்………..
.
