வேங்குழலின் நல்லிசை நீயடி
வேங்குழலின் நல்லிசை நீயடி
அத்தியாயம் 13
ஆதவன் அறையை விட்டு வெளியே சென்றதும் அலமாரியில் கைகளை விட்டுஏதாவது கிடைக்காதா? என்ற ஆசையில் மதி உடைகளை எல்லாம் கலைத்துப்பார்த்தாள். அவள் வைத்திருந்த அடிப்படை ஆதாரங்கள், அரைகுறை படிப்பின் சான்றிதழ்கள், உதயாவின் பிறப்புச் சான்றிதழ்கள், மருத்துவமனை கோப்புகள், மற்றும் சிவாப்பா அவளிடம் கொடுத்து இருந்த கொஞ்சப்பணம் என்று எதெல்லாம் அவன் கைகளில் சிக்க கூடாது என்று அவள் வைத்திருந்தாளோ அதில் ஒன்று கூட அவள் கைகளுக்கு அகப்படவில்லை.
அவன் வந்த நாளிலிருந்து இதெல்லாம் அவன் கைகளுக்கும், கண்களுக்கும் தட்டுப் படக்கூடாது என்று வைத்து இருந்தாள். அவற்றில் ஒன்றுகூட இன்று அவள் வசம் இல்லை.
மெதுவாக எழுந்து முன் அறைக்கு வந்தாள். அவள் தேடிய அனைத்தும் அவன் கைகளில் வைத்து பார்த்துக்கொண்டுஇருந்தான். உதயாவின் பிறப்பு சான்றிதழ் அதில் குழந்தையின் பெயர் என்பதற்கு நேராக “உதய கீர்த்தனா” என்று அவளது முழு பெயர் எழுதப்பட்டிருக்க, தந்தையின் பெயர் என்ற இடத்தில் ஆதவன் என்று எழுதப்பட்டிருந்தை ஒற்றை விரல் கொண்டு அழகாக வருடிக்கொடுத்தான். சில நிமிடங்கள் அவன் உணர்வுகளின் பிடியில் கட்டுண்டு இருந்தான். இந்த ஆதாரங்களின் கூடவே ஒரு சில போட்டோக்களும் , வளைகாப்பின் போது அவள் எடுத்துக்கொண்டது அவளது திருமண போட்டோ , இன்னும் ஆதவன் தாயார் கீர்த்தனாவோடு சில ஃபோட்டோக்களும் இருந்தது.
“என்ன மதி நமது திருமண போட்டோ கூட வைத்திருக்கிறாய். கதிரவனோடு உன் திருமண போட்டோவே இல்லையே அது எங்கே” என்று கேட்டு “உன் கதிரவனை என் கண்ணில் காட்டாமல் மறைத்தே விடுவாய் போல இருக்கிறது ஆனால் நான் கண்டு பிடிக்காமல் விடமாட்டேன்” என்று சிரித்தான்.
பேசியபடியே அந்த ஃபோட்டோகளில் இருந்து தனியாக ஒரு போட்டோவை எடுத்து காண்பித்து” இது உன்னிடம் எப்படி வந்தது மதி?”என்று கேட்டு விட்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்தப் புகைப்படத்தில் ஆதவன் வெள்ளை நிற வேட்டி சட்டை அணிந்து வலது காலை இடது காலின் மேல் போட்டுக் கொண்டு இரு கைகளையும் வலது முட்டியில் கோர்த்து சாய்ந்திருப்பது போல் இருந்தது அந்த புகைப்படம்.
பதிலே பேசாமல் தலை குனிந்து நின்றிருந்தாள். “அப்போது இந்தப் புகைப்படத்தை தான் புத்தகத்தில் மறைத்து எடுத்து சென்றாயா?” என்று கேட்டான்.
மதி திகைத்து விழி விரித்து நான் இந்த புகைப்படத்தை மறைத்து எடுத்து வந்தது இவருக்கு எப்படித் தெரியும்? என்று யோசித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
அவள் முகத்தைப் பார்த்தே அவளது நினைவை கண்டு கொண்டவன் போல “எனக்கு எப்படி தெரியும் என்று நினைக்கிறாயா? இப்படித்தான்” என்று அவனது அலைபேசியை எடுத்து ஒரு வீடியோவை ஓட விட்டவன் அதை மதி பார்ப்பதற்கு ஏதுவாக அவள் முகத்திற்கு நேராக திருப்பி பிடித்தான்.
அந்த வீடியோவில் தெரிந்த காட்சியில் மதி இன்னும் திகைத்து தலையை குனிந்து கொண்டாள்.அந்த காட்சியில் இருக்கையில் அமர்ந்தபடி இருந்த மதி மெதுவாக நிமிர்ந்து பயந்து பார்த்தபடி கையில் வைத்திருந்த ஃபோட்டோகளில் ஒன்றை எடுத்து மடியில் வைத்திருந்த ஒரு வாரப்பத்திரிக்கைக்குள் மறைத்து வைப்பது போல் இருந்தது அந்த வீடியோ காட்சி.
“இல்லை அது நான் அத்தையோடு இருந்த புகைப்படம் அவரிடம் கேட்டு தான் வாங்கி வந்தேன் என்றாள்”. “ஓஹோ “என்று நம்பாதவன் போல் ஒலி எழுப்பினான்.
“அப்போ இது எப்படி உன்னிடம் வந்தது?” என்று மீண்டும் கேட்டான்.
“எப்படியோ கலந்து வந்துவிட்டது போலிருக்கிறது “என்று ஏதோ பதிலளித்து சமாளித்து விட்டதாக எண்ணிக் கொண்ட மதி இந்த போட்டோவை எடுத்து வரும்போது அறையில் இருந்தது அவளும் ஆதவனின் தாயார் கீர்த்தனா மட்டும்தான் பின் எப்படி இந்த வீடியோ? என்று குழம்பினாள்.
“சரி நான் சொன்னதை நன்றாக நினைவில் வைத்துக்கொள். இவையெல்லாம் என்னிடம் தான் இருக்கும். சென்னைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான பொருள் ஏதாவது இருந்தால் பார்த்து அதை மட்டும் எடுத்து வை”என்று அனுப்பி வைத்தான்.
இரவானதும் உதயாவை வாங்கி முன்னறையில் கீழே பாய் விரித்து அவன் அருகில் படுக்க வைத்துக் கொண்டான். கேள்வியாக பார்த்த மதியை உள்ளே “ஃபேன் இல்லை அல்லவா இங்கேயே தூங்கட்டும்” என்று முடித்துவிட்டான்.
ஃபேன் ஒரு சாக்கு என்றாலும் உதயாவை மதியின் கையில் தர விரும்பவில்லை அதுதான் உண்மை என்பதை மதி அறிந்து கொண்டாள். தான் இன்று இரவு எப்படியாவது ஊரை விட்டு வெளியே சென்று விட வேண்டும் என்று போட்ட திட்டம் அவனுக்கு எப்படித் தெரிந்தது? என்று யோசித்தபடியே உள்ளறையில் படுத்து உறங்கிப் போனாள் மதி மலர்.
மறுநாள் காலை வழக்கம்போலவே விடிந்தது அடுத்த நாள் பூமி பூஜை என்பதால் நிலத்தைஅதற்காக சுத்தம் செய்து தயார் படுத்திக் கொண்டிருந்த வேலை நடந்து கொண்டிருந்தது.
காலை வேளையில் வெளியே பந்தலின் அடியில் அமர்ந்து தனது கால்களை அங்கிருந்த பிரம்பு டீப்பாயின் மேல் நீட்டி மடியில் லேப்டாப்பை வைத்து வேலை செய்து கொண்டிருந்தான் ஆதவன்.அப்போது அங்கு வந்த செந்தில் சில கோப்புகளில் கையெழுத்து வாங்குவதற்காக நின்றுகொண்டிருந்தான் அவனிடம் பேசியபடியே கையெழுத்திட்டு நிமிர்ந்தபோது செந்திலின் பார்வை பதிந்த இடத்தை திரும்பிப்பார்த்தான். அங்கு மதி நீண்ட கூந்தலை பிரித்து துவட்டியபடி வேலை செய்வதை நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்தான்.
இதுவரை மதியின் மேல் ஆர்வமாக பதிந்திருந்த செந்திலின் பார்வை இப்போது ஏக்கமாக படிந்திருப்பதை கண்டான். இல்லை இவனுக்கு ஏதாவது பாடம் நடத்தியே தீர வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான் ஆதவன்.
மறுநாள் பூமி பூஜை என்ற நிலையில் அன்று இரவு தொலைபேசியை எடுத்து எடுத்து பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான். ஏதோ ஒரு தொலைபேசி அழைப்பிற்கு காத்திருப்பது போல் இருந்தது அவனது நடவடிக்கைகள். அப்போது அவனது அலைபேசி ஒலிக்கவே, உதயாவையும் தூக்கிக்கொண்டு போனை ஆன் செய்து வெளியே சென்று அமர்ந்து விட்டான். எதிர்ப்புறம் பேசியவர்களின் முழு பேச்சையும் கேட்டு முடித்தவன் பதில் “சரி நான் பார்த்துக் கொள்கிறேன் ” என்பது மட்டுமே இருந்தது.
பேசி முடித்தவன் அடுத்து யாருக்கோ அவனது அலைபேசியில் இருந்து அழைத்தான் அப்பொழுது உதயா கைநீட்டி அலைபேசியை பிடுங்க முயற்சிக்க அதை ஸ்பீக்கரில் போட்டு வலது தொடையில் மேல் வைத்துக் கொண்டு மகளை இரு கைகளில் பிடித்து நிறுத்தி விளையாடினான்.
ஆதவனை சாப்பிட அழைப்பதற்காக வீட்டின் முன்னால் வந்த மதி, ஹலோ என அவன் பேசத் தொடங்கவும் சரி பேசி முடிக்கட்டும் என்று அவனின் பின்னால் நின்று கொண்டாள்.” ஹலோ” என்று அழைத்து “டாக்டர் சுரேஷ் “என்றான்.
” டேய் ஆதவா சொல்லுடா” என்று அந்தப் பக்கமிருந்து பதில் வந்தது .
“ஆமாண்டா ஆதவன்தான் எனக்கு ஒரு சிறு உதவி வேண்டும் இப்பொழுது நான் சொல்லும் இடத்தில் எனது அலுவலக ஊழியர் ஒருவர் அடிபட்டு இருக்கிறார். அவரை உனது மருத்துவமனைக்கு கூட்டி வந்து வைத்தியம் செய்ய வேண்டும் முடியுமா?” என்றான்.
“எங்கடா? முதல்ல இடத்தை சொல்லு நான் ஆட்களை அனுப்பிவிட்டு உன் கிட்ட பேசுறேன்” என்றான்.
ஆதவன் இடத்தை குறிப்பிடவும் அங்கு தொலைபேசியில் இருந்த படியே அவனது ஊழியர்களை அழைத்து ஆம்புலன்சில் அடிபட்டவனை அழைத்து வர ஏற்பாடு செய்தான் பின் “சொல்லியாச்சு சொல்லுடா என்ன விஷயம்?” என்றான் சுரேஷ்.
” இல்ல ஒரு சின்ன விஷயம் அதனால தான் கை வைக்க வேண்டியதா போச்சு”. “நானே செய்திருப்பேன் என் பெயர் வெளியே வரும், அதைவிட சம்பந்தப்பட்ட நபரின் பெயர் வெளியே வரக்கூடாது என்று நினைத்தேன். அதனால் தான் ஆட்களை நியமித்து அடிக்கச் செய்தேன் பாத்துக்கொள்” என்றான்.
“என்னது நீ தான் கை வைத்தாயா? நீயே அடித்துவிட்டு நீயே வைத்தியமும் பார்ப்பாயா? “என்று சிரித்தான். “ஓ இதுதான் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதா?” என்று மீண்டும் சிரித்தான் டாக்டர் சுரேஷ்.
அதற்கு சிரித்துக்கொண்டு” நான் எங்கடா தொட்டிலை ஆட்டினேன்? அவன் வலது கையை மட்டும் தொட்டிலில் மாட்டி இருக்கிறேன்” என்று சிரித்தான்.
“ஏன்டா ஆபீஸ்ல ஏதாவது பிரச்சனையா? அங்கு ஏதாவது பணத்தில் கைவைத்து விட்டானா?” என்று கேட்டான் சுரேஷ்.
“அங்கெல்லாம் கை வைக்கவில்லை. அவன்கண் வச்ச இடம் சரியில்ல. அதனாலதான் நான் கை வைக்க வேண்டியதாகி விட்டது” என்றான்.
பின்” சரிடா என்ன செலவோஅதை பில் போட்டு கீர்த்தனா மில்ஸ் பேர்ல எனக்கு அனுப்பிவிடு சரியா ? இப்போது வைத்து விடட்டுமா?” என்று வைத்துவிட்டான்.
பேசி முடித்துவிட்டு உதயாவை தூக்கிக்கொண்டு திரும்பியபோது மதி நின்று இருப்பதை பார்த்து “என்ன மதி உதயா வேண்டுமா?” என்று கேட்டான்.
” இல்லை சாப்பிட அழைக்க வந்தேன்” என்றவள்,” யாருக்கு என்ன ஆயிற்று ? உயிருக்கு ஏதாவது ஆபத்தா?” என்று கேட்டாள்.
“உயிருக்கு எல்லாம் ஒன்றுமில்லை செந்திலுக்கு தான் ஒரு சின்ன விபத்து வைத்தியத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டேன். சாப்பிடப் போகலாமா?” என்றான்.
அவன் பேச தொடங்கியதிலிருந்தே அவள் முழுதாய் அவன் பேச்சை கேட்டி ருந்ததால் செந்திலை இவன்தான் ஆட்களை அனுப்பி அடித்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டாள். எதற்கு என்று இவனிடம் எப்படி கேட்பது? கேட்டாலும் சொல்லிவிடுவானா? ஆதவன் என்பதற்கு பதிலாக அழுத்தம் என்று பெயர் வைத்திருக்கலாம். வாயிலிருந்து ஒன்றும் வாங்க முடியாது என்று நினைத்துக் கொண்டாள்.
மறுநாள் வாஸ்து பூஜைக்கான நேரம் பத்து மணி என்பதால் மெதுவாக எழுந்து சாவகாசமாகவே அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர். முதலில் உதயாவை தயார்ப்படுத்தி கண்ணம்மா விடம் கொடுத்துவிட்டு, அவளும் குளித்து விட்டு வந்தாள். ஆதவனும் குளிப்பதற்கு சென்று விடவே, உணவு ஊட்டுவதற்காக உதயாவை கண்ணம்மா வெளியே எடுத்துச் சென்றுவிட்டார். உதயா வருவதற்குள் புடவையை மாற்றி தயாராகி விடவேண்டும் என்று உள்ளறைக்கு சென்று ஆதவன் வாங்கிக்கொடுத்த எலுமிச்சை நிற மென் பட்டை அவசர அவசரமாக மாற்றி கொசுவத்தை கீழே குனிந்து சரி செய்து கொண்டிருந்தபோது முன்னறையில் கதவைத் தாழிடும் சத்தம் கேட்டது.சில நொடியில் முன்னால் நிழலாடியது கீழே அமர்ந்த படியே பார்க்க அவள் பார்வை வட்டத்திற்குள் வெள்ளை வேஷ்டியில் கிளி பச்சையும் வெள்ளி நிறமும் இரு கோடுகள் போல் கொண்ட வேட்டி கரை ஒன்று கண்ணில் பட்டது நிமிர்ந்து பார்க்க ஆதவன் நின்றிருந்தான்
இவன் எங்கு இங்கே என்று பதறியடித்துக் கொண்டு நிமிர்ந்து எழ முயற்சிக்க தடுமாறி விழப் போனாள்.
தடுமாறியவளை பிடித்து நேராக நிறுத்தி னான். அவள் தோள்களில் வைத்திருந்த அவனின்இரண்டு கைகளில் லேசாக அழுத்தம் வந்தது போலிருந்தது. மதி தலை நிமிர்ந்து அவனைப் பார்க்க ஆதவனும் மேலிருந்து கீழாக மதியை அளவிட்டுக் கொண்டிருந்தான் என்ன இப்படி பார்க்கிறார் ?என்று மதி வெட்கத்தில் சிவந்து போக, இந்த நிறம் உனக்கு அத்தனை பொருத்தமாக இருக்கிறது மதி என்று சிலாகித்துக் கூறினான்.
இது எங்கே மதியின் காதில் விழுந்தது? அவளோ வேஷ்டி சட்டையில் கம்பீரமாக ஆணழகனாக நின்றிருந்த அவனையே விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்ப்பதை பார்த்தவன் அவள் விழியோடு விழி பதித்தபடி இரு புருவங்களை தூக்கி என்ன என்பது போல் பார்த்தான். பின்பு “அது என்ன உனக்கு வேஷ்டி சட்டை மட்டும் அத்தனை பிடிக்கிறது. அன்றும் இப்படித்தான் பார்த்தாய் பார்வையிலேயே என்னை உறிஞ்சி எடுத்து விடுவது போல” என்றவன் ஒரு நிமிடம் என்று முன்னறைக்கு சென்று திரும்பியவன் கையில் நெருக்கமாக தொடுத்த மல்லிகைச்சரங்கள் இருந்தது. அதை மதியின் கைகளைப் பிடித்திழுத்து அதில் வைத்தான்.
மதி குனிந்தபடியே நின்றிருக்க மிக சன்னமான குரலில் “மலர் “என்று அழைத்தான் .அவன் அழைத்தது மெதுவாகத்தான் இருந்தாலும் மலர் வெடுக்கென்று நிமிர்ந்தாள். நெடுநாளைக்கு பிறகுஇல்லை வெகு மாதங்களுக்குப் பிறகு அவளை “மலர்” என்று அழைக்கிறான். நிமிர்ந்து கண்களில் நீர் கோர்க்க அவனைப் பார்க்க இரண்டு கைகளில் அவள் முகத்தை தாங்கிக் கொண்டவன், மெதுவாக முன்னேறி அவள் நெற்றியில் மென்மையாக இதழ்களைப் பதித்தான்.
மதி எந்த உலகத்தில் இருந்தாள் என்றே தெரியவில்லை நடுங்கத்தொடங்கிய உடலினை கண்களை மூடி கட்டுப்படுத்த முயன்றாள். கண்களை மூட அத்தனை இன்பமாக நிம்மதியாக பாதுகாப்பாக உணர்ந்தாள் மூடிய கண்கள் மூடியபடியே இருக்க கண்ணீர் வழிய தொடங்கியது. வழிந்த கண்ணீரை பெரு விரல்களால் துடைத்து எடுத்தவன் மென்மையாக அவள் இரு இமைகளின் மீதும் முத்தமிட்டான்.
சில நொடிகளுக்குப் பின் கண்களைத் திறந்தவள் அவர்களின் நிலையை புரிந்து கொண்டு க க என்று நடுக்கத்தோடு ஏதோ சொல்லத் தொடங்க அவன் புன்னகையை அடக்கியபடி “கன்னத்திலும் வேண்டுமா?”. ” சரி” என்று என்று கன்னத்தில் முத்தமிட்டான்.
அவள் சொல்ல வருவது என்ன அவன் செய்வது என்ன என்று நினைத்துக் கொண்டவள், மறுப்பாக தலையசைத்தாள். கண்ணம்மா வந்துவிடப் போகிறார்கள் என்று நினைத்ததை சொல்வதற்காக மீண்டும் க எனத் தொடங்கும் முன் அவள் தலையசைத்ததை பார்த்து குறும்பாக “கன்னத்தில் வேண்டாமா ? அப்போது இங்கேயா? என்று கேட்டு இதழோடு இதழ் சேர்த்தே விட்டான்.
இசைக்கும்…………
