பாண்டியன் தோள் வளர் பைங்கிளி
28
பாண்டியன் தோள் வளர் பைங்கிளி
ஜியா ஜானவி 💞💞
அதிகாலையில் எழுந்த பாண்டியன் பின்கட்டுக்கு செல்ல அங்கே தோட்டத்தில் முத்தையா சிலம்பம் பயிற்சி மேற்கொண்டிருந்தார். இவனும் தாத்தா உடன் சேர்ந்து சிலம்பம் சுற்றி வெகு நாட்களானது.
உடனே தனது வேஷ்டியை தார் பாய்ச்சு கட்டிக்கொண்டு,அருகேயிருந்த சிலம்பத்தை எடுத்துக் கொண்டு தாத்தா முன் சென்று நிற்க அவரும் அவனுடன் மகிழ்ச்சியாகவே பயிற்சி சண்டையை மேற்கொண்டார்.
இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டுக் கொள்ள, பார்த்துக்கொண்டிருந்த பெண்களுக்கு தான் கொஞ்சம் திக்கென்று இருந்தது.
கடைசியில் இருவரும் சிறிய சிரிப்புடன் வீட்டுக்குள் நுழைய அமிர்தம் எதிர்கொண்டு அவர்களுக்கு காலை நீராகாரத்தை வழங்கினார்.
தனது அப்பத்தாவிடமும் வம்பு வழக்க வேண்டி, “தாத்தாவைப் பார்த்தால் இன்னும் ஜம்முனு இருக்காரு.. ஆனா நீ தான் கிழவியாகிட்ட.. எங்க தாத்தாவோட எண்பது கல்யாணத்துல நான் அவருக்கு வேற இளசா புதுசா பொண்ண பார்த்து கட்டி வைக்க போறேன்” என்றான் பாண்டியன்.
பேரன் பேசப் பேச முத்தையாவும் தனது மீசையை முறுக்கி வைத்துக் கொண்டு அமிர்தத்தை பார்க்க, அவரோ நொடித்துக்கொண்டு “உங்க தாத்தா என்னைய தவிர வேற யாரையும் கட்ட மாட்டார். அந்தக்காலத்திலேயே என்னைய பொண்ணு பாக்க வந்த ஆளுங்கள ரயிலு பொட்டிய மறைச்சி, அருவாள காட்டி விரட்டி விட்ட ஆளு. முடிஞ்சா வேற பொண்ணோட கல்யாணத்த முடிச்சி வை” என்று அவனிடம் பெருமையாகச் சொல்லிக் கொண்டே செல்ல.. அதுவரை முத்தையா கர்வமாக பார்த்து கொண்டு இருந்தவர், இப்போது காதலாக தன் மனைவியை பார்த்தார்.
அடப்பாவிகளா!!! தாத்தனுக்கு ஏத்த பேரன்!!
தாத்தாவின் காதலை கேட்டவனின் கை தன்னிச்சையாக தன் மார்பில் இருந்த காயத்தை தடவியது.
காலையில் சதீஷை அழைத்துக்கொண்டு ஆடுதுறை நோக்கி பயணமானான் பாண்டியன். “மச்சி அந்த புல்டோசர் மண்டையன்.. கண்டிப்பா இன்னைக்கு என்னைய தேடிக்கிட்டு வருவான்”
முதலில் குழம்பிய சதீஷ், பின்னர் அந்த புல்டோசர் மண்டையன் யார் என்பதை தன் வக்கீல் ஞானத்தால் கண்டறிந்து கடகடவென்று சிரித்தான்.
“ஆனாலும் உன் பேரு வைக்கிற பாங்க இருக்கு பாரு மச்சி.. அடிச்சிக்க ஆளே இல்லை”
பின் இருவரும் அந்த கேஸ் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொண்டே ஆடுதுறையை அடைய சதீஷை கோர்ட்டில் இறக்கிவிட்டவன் தன் அலுவலகம் நோக்கி சென்றான்.
அங்கே அவனுக்கு முன்னே நின்ற தீனதயாளனை பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டே கண்டும் காணாமல் உள்ளே சென்றான்.
இரண்டு நாட்களில் அவனை விரட்டி விடுவேன் என்று சவால் விட்டு சென்றவன், மறுநாள் காலையிலேயே அதுவும் அவன் வரும் முன்னமே அதன் வாசலில் வந்து நின்று கொண்டிருந்தான்.
தோல்வியை அவ்வளவு சாமானியமாக ஏற்றுக்கொள்ள மாட்டான் தீனதயாளன்.
அவனுக்கு தெரிந்த யுக்திகளையெல்லாம் பயன்படுத்துவான். அது காசு பணம் துட்டு மணியாக இருக்கும்.. இல்லை பொருட்களாக இருக்கும்.. இன்னும் சில இடங்களில் அந்தப் பொருட்களில் பெண்கள்கூட அடங்கும்.
பாண்டியனை பார்க்க அனுமதி கேட்க, தான் இப்போது பிஸியாக இருக்கிறேன் என்று கூறி இரண்டு மணி நேரம் காக்க வைத்தான்.
வெகு நேரம் காக்க வைத்து பின் அவர்களை வரவைக்கும் நேரம் பார்த்து இவன் வெளியில் சென்று “வாங்க மிஸ்டர் தீனதயாளன் உங்களுக்கு என் கூட பேசினும்.. எனக்கு என் வேலையை பார்க்கணும். நான் போற இடத்துக்கு நீங்க வந்தீங்கன்னா.. ரெண்டு வேலையும் இலகுவாக முடிந்துவிடும்” என்று மரியாதை உடனே அவனை அழைத்துச் சென்றான் பாண்டியன்.
இதை பார்த்த மதனுக்கு, தன் முதலாளியை பார்க்கும்போது மாலை மரியாதை போட்டு பலியிட அழைத்துச் செல்லும் கிடாவை போலவே தோன்றினான். தலையை உலுக்கி கொண்டவன், விதி வலியது என்று அவர்கள் பின்னே வால் பிடித்து கொண்டே சென்றான்.
முதலில் அருகில் உள்ள ஊர்களில் புது ஆராய்ச்சியாக நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு இருக்க அதைக் காணவே இவனும், இவன் கீழ் உள்ள அதிகாரிகளும் செல்ல அவர்களை தொடர்ந்தான் தீனதயாளன்.
அங்கு சென்றவுடன் தீனதயாளனை சிறிதும் கண்டுகொள்ளவில்லை பாண்டியன். ஆனால் தன் அருகிலேயே வைத்துக் கொண்டு அவர்களின் ஆராய்ச்சி பற்றியும் பயிர்களை பற்றியும் விசாரித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தான்.
தீனதயாளனுக்கு படு கோபமாக இருந்தது. காரணம் அமைச்சர் கைவிரித்ததே.
இரண்டு நாட்களில் அவனை மாற்றி காட்ட வேண்டுமென்று இவன் ஆணையிட, அதை சிரமேற்கொண்டு தன் பதவியை அதிகாரத்தை பயன்படுத்தி, அவனை மாற்ற ஆவண செய்ய பேச எத்தனிக்க, அவருக்கே அது ஆப்பாக முடிந்தது..
“ஏற்கனவே உன் தொகுதியில் விவசாயிகள் பிரச்சனை நிறைய இருக்கு. அதனாலதான் இந்தப் பையன அதுவும் வெளிநாட்டில் எல்லாம் ஆராய்ச்சி செய்து கிட்டு இருந்த பையனை புடிச்சு உங்க ஊருக்கு அனுப்பி, ஏதோ கொஞ்சம் பிரச்சனை எல்லாம் சரி பண்ணலாம் நான் ஏற்பாடு பண்ணுனேன். ஆனா நீ முதலுக்கே மோசம் வர மாதிரி அவனையே பதவியில் இருந்து தூக்க சொல்லுற. அவனின் அந்த போஸ்ட்டை பறிக்கிறது உன் போஸ்டுக்கு நீயே வச்சுக்கிற ஆப்பு.. உன் தொகுதியிலே விவசாயிங்கதான் ஜாஸ்தி. அடுத்த தேர்தலில் அவங்க வோட்டு நமக்கு தேவை.
அதனால இந்தப் பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது உனக்கு நல்லது. இல்ல கட்சி உனக்கு எதுவும் சர்போர்ட் பண்ணாது” என்று கராமாக மேலிடம் பேசி வைத்து விட.. ‘சாப்பாடு இல்லனா கூட இருக்க முடியும் அரசியல் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது’ என்று அவன் அறிவு விளக்கம் கொடுக்க.. அதற்கு மேல் தீனதயாளனுக்கு இதில் எதுவும் தன்னால் செய்ய முடியாது என்று தீர்மானமாக கூறி வைத்து விட்டார்.
அதன் காரணமாகவே சமரன் இடமே சமரசமாக பேசலாம் என்று இன்று காலையில் இருந்து அவன் பின்னே சுற்றிக் கொண்டிருந்தான் தீனதயாளன்.
நம் மண்ணின் மைந்தனும் மூன்று ஆண்டுகளாக தான் விட்ட வேலைகள் அனைத்தையும் ஒரே நாளில் பார்த்து, பயிர்களை வளர்த்துவிட வேண்டும் என்ற சீரிய நோக்கில், அடுத்தடுத்த என்று ஒன்றுவிடாமல் வயல்களையும், பயிர்களையும், பின் விவசாயி பிரச்சனைகளையும் விசாரித்து, சுத்திக் கொண்டே இருந்தான்.
பின்னால் சுத்திய தீனதயாளன் அடுத்த இடத்திற்கு பாண்டியன் போக காரில் ஏற முயல அவனை தடுத்து, “அடுத்தடுத்து நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்க.. என்ன நினைத்துக் கொண்டு இருக்கிற உன் மனதில்.. நான் உன் பின்னாடியே வரதால் என்னை இளக்காரமாக நினைத்து விட்டாயா? இங்கே பாரு முதலில் சமாதானம் பேசி பார்ப்போம், பாவப்பட்டவர்கள் ஆச்சே நினைச்சு, அதற்காகத்தான் இவ்வளவு தூரம் உன் பின்னாடி சுத்திகிட்டு இருந்தேன் இல்லைன்னா… அடுத்தடுத்த யூகங்கள்னு மாறிக்கொண்டே இருப்பவன் நான்” என்று ஆத்திரத்தில் அவன் பொரிந்து தள்ள…
அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்த பாண்டியனோ, அவனை உற்று நோக்கினான்.
காலையிலிருந்து சரியாக சாப்பிடாததால் சற்று சோர்ந்தும், வெயிலில் அலைந்ததால் வியர்வையில் ஆங்காங்கே நனைந்திருக்க பாவமாக நின்றிருந்தான் தீனதயாளன்.
அவன் இந்த அடையாளங்களை எல்லாம் ஒவ்வொன்றாக தன் விரல் கொண்டு சுட்டிக்காட்டிய பாண்டியன், “ஒரே ஒருநாள் என்னுடன் அலைந்ததுக்கு உனக்கு இவ்ளோ கஷ்டமா இருக்கு. ஆனா இவங்களுக்கு எல்லாம் இது தான் தொழில்.. இதுதான் உயிர் மூச்சு.. அவங்க கஷ்டத்த நீ புரிஞ்சுக்கணும் என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் உன்கிட்ட பேசணும்னு சொன்னேனே ஒழிய, உன்னோட சமாதான பேச்சு வார்த்தைக்காக இல்லை.. நீயும், உன் கேஸூம் கோர்ட்ல எப்புடி நார் நாராக போறீங்கன்னு மட்டும் பாரு” என்று எள்ளலாக கூறினான் பாண்டியன்.
“ஏற்கனவே நான் சொன்னதுதான் மரியாதையா இத்தோடு ஒதுங்கி போயிடு. திரும்ப வந்து உங்க ஊர்ல பாக்ட்ரி கட்டுறேன், உங்களுக்கு வேலை கொடுக்கிறேன் ஏதாவது ஒன்னு சொல்லிட்டு திரும்ப திரும்ப நீ வந்தேனா… உன்னைய பத்தி சொன்னான் அந்தக் இன்ட்ரஸ்டிங் மேட்டர்…..” என்று சற்று இடைவெளி விட்டு அவனின் இதய துடிப்பை எகிற விட்டு, “அதான் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் ஓட கைக்கூலியா.. அவங்களோட பினாமியா.. இருக்கிற இல்ல அந்த விஷயம்.. அது மட்டும் இல்லாம சட்டவிரோதமான நடத்திக் கொண்டுயிருக்கிற உன் மத்த பாக்டரி எல்லாம் இதனால் மூட வேண்டி வரும். என் மண்ணை மட்டும் தான் என்னால பாதுகாக்க முடியும்.. ஆனா ஒவ்வொரு இடத்திலேயும் என்னால போய் பாதுகாக்க முடியாது”
” இப்போது கேஸ் கோர்ட்டுக்கு போன நாங்க அதற்கான ஆதாரத்தை எல்லாத்தையும் சமிட் பண்ணுவோம், உன் மொத்தமும் இழுத்து மூடி விடுவாங்க… இப்பல்லாம் மக்களுக்கு ரொம்பவே விழிப்புணர்வு அதிகம். புரிஞ்சு நடந்துக்கோ” என்று காரில் ஏற கதவை திறந்தவன், “இன்னொரு முக்கியமான விஷயம்.. நீ எம்பி மூலமா ஆட்களை ஏவி விட்டு பிரஸிடெண்டை கொல்ல சொன்னதுக்கு சாட்சியோட என்கிட்ட ஆதாரம் இருக்கு. அதையும் சேர்த்து நாம் போட்டேன்னா.. அப்புறம் நீ ஆயுசுக்கும் கம்பி தான்..
“என்னது பிரசிடென்ட் நான் கொல்ல சொன்னேனா? புதுசா கதை சொல்ற” என்று பயத்தை காட்டாமல் தீனதயாளன் பேச..
“உன் நடிப்பை வேற யார்கிட்டயாவது காட்டு!! இந்த சமரன்கிட்ட இல்ல.. இந்த ஃபேக்டரி கட்ட உனக்கு ஆதரவா பிரசிடெண்ட் இருக்க மாட்டார்ன்னு நினைத்து அவரை போட சொன்னதும் எனக்கு தெரியும்.. அதுக்கு அப்புறம் சங்கரை பிரசிடன்ட் ஆக்க நீ காச வாரி இறைத்ததும் எனக்கு தெரியும்.. ஏன்னா அவனும் உன்னாட்டம் ஒரு சாராயம் விக்கிறவன்” அவன் செய்த செயல்களை எல்லாம் விலாவாரியாக புட்டுப்புட்டு பாண்டியன் வைக்க அதைக்கேட்ட தீனதயாளனுக்கோ வேர்த்து வழிந்தது.
பின் திரும்பி “நாளைக்கு வரைக்கும் உனக்கு டைம். நாளை மறுநாள் இந்த கேஸ் கோர்ட்டுக்கு வருது. நீயே வாபஸ் வாங்கிட்டேன்னா, உனக்கு லாபம்” என்றவன் மதனை பார்த்து “என்ன டா மதனா!! உன் முதலாளிக்கு நல்ல சோப்பு புளி எல்லாம் போட்டு விளக்கி சொல்லு. எனக்கு நேரம் ஆகுது” என்றவன் தன் காரில் ஏறி விரைந்து விட்டான்.
பாண்டியன் சொன்ன அனைத்துமே உண்மைதான் இவன் நடத்தி வரும் சில பல கம்பெனிகளால் ஆங்காங்கே பெரும் பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதை எல்லாம் இவன் தன் பணத்தையும், அதிகாரத்தையும், அரசியல் பலத்தையும் வைத்து அடக்கி வைத்திருக்கிறான். இப்போது இந்த ஒரு கேஸ் கோர்ட்டுக்கு வந்தால் அவைகளும் தூசி தட்டி எழுப்பப்படும். அவனது கோட்டை சரிவதற்கு அநேக வாய்ப்புகள் இருக்கின்றன. இது தெள்ளத் தெளிவாக புரிய நாளை வரை எனக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டான் தீனதயாளன். மேலும் கொலை கேஸூம் சேர்ந்தால் அவ்வளவு தான். தன் ஆட்டம் க்ளோஸ். அப்பொழுதே மதனை விட்டு பாண்டியனுக்கு போன் செய்ய சொல்லி அவர்கள் விலகிக் கொள்வதாக கூறினான்.
ஒருவழியாக பிரச்சனையெல்லாம் ஓய்ந்து மதன் மற்றும் அவனது ஆட்கள் அவர்களது தளவாடங்களை எல்லாம் வயல்களில் இருந்து எடுத்து சென்று விட்டனர். அவர்கள் வாங்கிய நிலங்களை திரும்பவும் அந்தந்த விவசாயிகளுக்கு கொடுத்து விடவும் ஏற்பாடு செய்துவிட்டான் மதன்.
இவையெல்லாம் சங்கர் காதுக்கு செல்ல அவனோ அதிர்ச்சியில் நின்ற இடத்திலேயே நின்றான். “டேய் இந்த பாண்டியன் என்ன அவ்வளவு பெரிய ஆளா டா? அந்த கம்பெனிக்காரனை ஓட ஓட இப்படி விரட்டிட்டான். அப்ப நாம எல்லாம் எம்மாத்திரம்” என்று தன் அல்லகைளிடமிடம் கேட்க.. அவர்களும் “அண்ணே.. நாம நம்ம தொழில கொஞ்ச நாளைக்கு மூடி வைப்போம்” என்று ஒத்து பாட, “கொஞ்ச நாள் என்னடா.. அவன் அடுத்த நமக்கு ஏதும் ஆப்பு வைக்குமுன் வேற தொழிலுக்கு மாறி விடுவோம்” என்று வேறு என்ன புது தொழில் செய்வது என்று மிகுந்த ஆலோசனையில் இறங்கினான் சங்கர் தன் அல்லகைகளுடன்..
இரண்டு மாதங்கள் செவ்வனே இவ்வாறே சென்றது. இவன் வேலைக்குச் செல்வதும் அவ்வப்போது தன் காதல் பைங்கிளியுடன் ஆலமரத்தில் கொஞ்சிக் குலாவுவதும் பின் வீடு திரும்புவதுமாக இருக்க..
இவனுக்கு கொஞ்சமும் சளைத்தவள் இல்லை என்று அம்பையும் தன் வீட்டுக்கு சதீஷ் வரும் நேரங்களிலும்.. மற்ற இடங்களில் அவனை காணும் போதும் அவனை சீண்ட தவறுவதே இல்லை அவள். இருவரின் காதலும் எவ்வித பிரச்சினையுமின்றி அமைதியாகவே சென்று கொண்டிருக்க.. சொர்ணம் இம்முறை வெளியே தெரியாமல் தன் மகளுக்கு மாப்பிள்ளை தேடும் படலத்தை தொடங்கினார். முன்னைப்போல் நிகழ்ந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன்..
காலையில் பாண்டியன் வேலைக்கு கிளம்ப ஆயத்தம் ஆகி சாப்பிட வர, தந்தைமார்கள் மில்லுக்கும் வியாபாரத்தையும் பார்க்க செல்லாமல் வீட்டிலிருக்க.. தாய்மார்களும் பட்டுப்புடவையில் தயாராகி வெளியில் செல்ல தயாராகி இருக்க.. என்னவென்று புரியாமல் அனைவரையும் பார்த்தவன் சாப்பாடு மேசையில் அமர்ந்து தானே போட்டுக்கொண்டு சாப்பிட்டவாறு.. “என்ன ஏதாவது விஷயத்துக்கு எல்லாம் போறீங்களா?” என்று பொதுவாக கேட்டவாறு தன் உணவை தொடர்ந்தான்.
“ஆமா ராசா.. உனக்கு பொண்ணு பார்க்க போறோம்” என்று அப்பத்தா அசராமல் அவன் தலையில் பெரிய குண்டைத் தூக்கிப் போட.. அதில் அதிர்ந்தவனுக்கோ புரை ஏறியது.
அதில் பதறி அவன் அருகே வந்த அமிர்தம், அவன் தலையில் தட்டி அருந்த நீரை கொடுத்தவாறு “பாரு கல்யாணம்னு சொன்னதும் ராசாவுக்கு எவ்வளவு சந்தோசம்.. தண்ணீ கூட பொர ஏறிடுச்சு” என்று மேலும் அவனுக்கு அதிர்ச்சியை கொடுத்து விட்டு செல்ல..
அடேய்!! பாண்டியா!! மொத்த குடும்பமும் சேர்ந்து உனக்கு பொண்ணு பார்க்கல.. ஆப்பை ரெடி பண்றாங்க.. ஏற்கனவே உனக்கு கல்யாணம் ஆனது தெரியாம!! பாஞ்சி போய் தடுத்துறு ஒரு பக்கம் பேரட் இன்னொரு பக்கம் அப்பாத்தா மத்தளம் போல உன்னைய பதம் பார்த்துடு வாங்க.. ஜருகண்டி.. ஜருகண்டி…
ஆமாம்ல..
அட ஆமாவே தான்!! சீக்கிரம் ஓடு..
மனசாட்சி அவனை விரட்ட வாயில் உள்ள உணவை அவசரமாக தொண்டைக்கு அனுப்பி நீரை சரித்து, அவன் நிமிர்ந்து பார்ப்பதற்குள் மொத்த குடும்பமும் அவனுக்கு ஆப்பு வைக்க தங்கள் பெரிய காரில் ஏறி கிளம்பி சென்று இருந்தனர்.
போகும்போது தன் பேரனுக்கு பாய் சொல்ல மறக்கவில்லை அந்த பாசமிகு அப்பத்தா!!
அலுவலகம் செல்லும் பொழுது சதீஷிடம் காலையில் தங்கள் வீட்டில் நடந்தவற்றை கூறிக் கொண்டே வர, அவனுக்கு கோபம் அதிகரித்து “அறிவு இருக்காடா உனக்கு? இன்னும் உன் வீட்டில் சொல்லாமல் இருப்ப.. எதுல தான் விளையாடுறதுனு இல்லையாடா? அவங்க பாட்டு பொண்ண நிச்சயம் செய்து விட்டு வந்தால் நீ என்ன செய்வ?” என்று கேட்டான்..
“பொண்ணு பாக்க மட்டும் தானடா போயிருக்காங்க. இன்னைக்கேவா பரிசம் எல்லாம் போடுவாங்க. அதெல்லாம் பண்ண மாட்டாங்க. வீட்டுக்கு போனவுடனே அவங்க கிட்ட எல்லாத்தையும் தெளிவா பேசி முடிச்சிடுறேன் டா” என்று நண்பனை சமாதானம் செய்து இவன் அலுவலகத்திற்கு சென்றான்.
அலுவலகம் சென்ற அவனால் நிம்மதியாக அலுவலக வேலையை பார்க்க முடியாமல் வீட்டினர் சொல்லி சென்றதே அவன் சிந்தையில் உழன்றது. வேலையிலும் பல சொதப்பல்களை செய்து அதற்கு மேல் தாங்காமல் வெகு சீக்கிரமே வீடு திரும்பினான் பாண்டியன்.
இவன் சீக்கிரம் வீட்டுக்கு வந்து என்ன செய்ய? ஆனால் அவன் மொத்த குடும்பமும் அவனை வெகு நேரம் காக்க வைத்து.. கோபப்பட வைத்து.. பிபி எகிற வைத்து இரவு வீடு திரும்பினர்..
வீட்டில் நுழைந்தவர்களை பார்த்ததும் விரைந்து சென்று “இவ்வளவு நேரமா வீட்டுக்கு வர? மணி என்ன ஆகுது?” என்று இவன் எரிந்து விழ..
“என்னடா அதிசயமா இருக்கு? நீ என்னைக்கு வீட்டுக்கு சீக்கிரம் வந்து இருக்கு இந்த மூணு வருஷமா? நடுராத்திரில தான் வீட்டுக்கு வருவே” என்று முத்தையா அப்போதும் அவனை வார அதில் தாத்தாவை முறைத்தவன் பின் பாட்டியிடம்..
“எங்க போனீங்க? எந்த ஊர்ல போய் பொண்ணு பார்த்தீங்க? என்னைய விட்டு தகவல் மட்டும் சொல்லிட்டு நீங்க பாட்டு ஏன் போயிட்டீங்க? என்கிட்ட அனுமதி எல்லாம் கேக்க மாட்டீங்களா? புடிச்சிருக்கான்னு கேட்க மாட்டீங்களா? உங்களுக்காக எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா?” என்று அவன் பாட்டில் கேள்வி கணைகளை மாரி என அவர்கள் மேல் பொழிந்து கொண்டிருக்க…
அவன் மொத்த குடும்பமும் அவன் சொல் அம்புகளை அனைத்தையும் காது குடையும் பஞ்சு போலவே பாவித்து காதில் விட்டு குடைந்து சுழற்றி கீழே தள்ளினர்.
“எவ்ளோ நாள் தான் நாங்களும் உன் கிட்ட கேட்டு கொண்டே இருக்கிறது. நீ பிடி கொடுக்கவே மாட்டேங்கிற. அதான் இப்போ உனக்கு வேல வேற செட் ஆகிடிச்சுல.. நாங்களே நல்ல இடமா பார்த்து பேசி முடிச்சிட்டு வந்துட்டோம்” என்று ஜோதி கூற, அதில் அதிர்ந்தவன் “என்ன பேசி முடிச்சிட்டு வந்துட்டீங்களா?” என்று அவன் வீடே அதிரும் வண்ணம் கேட்டான்.
“இங்க பாரு ராசா.. நீ எங்க பேச்சை தட்ட மாட்ட அப்படின்னு நினைச்சு தான் நாங்க பொண்ணு வீட்டுல நிச்சயம் பண்ணிட்டு வந்துட்டோம். பரிசமும் போட்டாச்சு.. எல்லாம் பேசி முடிஞ்சாச்சு” என்ற அப்பத்தா “எனக்கு ரொம்ப அசதியா இருக்கு நான் ஓய்வு எடுக்க போறேன்” என்று தன் அறைக்குள் புகுந்து கொண்டார்.
“பரிசம் போட்டாச்சா? யாரை கேட்டு பரிசம் போட்டீங்க? எப்படி நீங்க பரிசம் போடலாம்?” என்று மீண்டும் அவன் எகிறி குதிக்க..
அதையும் அலட்சியப்படுத்திய அவனது அம்மா “தம்பி.. இதையெல்லாம் காலைல பேசலாமே.. போய் தூங்கு” என்று விட்டு தங்கள் அறையில் புகுந்து கொண்டனர் அன்னையர்கள். இவன் அப்பத்தாவிடம் பேசியபோதே ராமதாசும் கண்ணதாசனும் சென்றுவிட நடு ஹாலில் தனியாக நின்று கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான் பாண்டியன்.
அவனைப் பொருத்தவரை என்று தன் பேரட்டை பார்த்து நேசிக்க ஆரம்பித்தானோ, அன்றே அவள் அவனது மனையாளாக அவன் மனதில் ஆழமாக மிக அழுத்தமாக பதிந்து விட.. இந்த சாஸ்திர சம்பிரதாயங்கள் அனைத்தும் அவனுக்கு வெறும் நிகழ்வே மற்றவர்களுக்காக..
“இவங்க என்ன தலைகீழா நின்னாலும் இந்த கல்யாணம் நடக்காது. எனக்கு என் பேரட் தான் பொண்டாட்டி” என்று முடிவுக்கு வந்தவன் அதன்பிறகே உறங்கச் சென்றான்.
மறுநாள் காலையில் தன் வேலைக்கு விடுப்பு அறிவித்துவிட்டு தன் வீட்டினரை ஒருவழியாக்க வேகவேகமாக கீழே இறங்கி வந்தான் பாண்டியன்.
அனைவரையும் கூடத்தில் அமருமாறு சொன்னவன்.. அவர்களும் “சொல்லுடா எதுக்கு எங்களை இங்கே வந்து உட்கார வெச்சி இருக்க.. கல்யாண வேலை தலைக்கு மேல இருக்கு” என்று முத்தையா ஆரம்பிக்க..
“பதினைந்து நாளுல கல்யாணம் வச்சிருக்கோம். பொறுப்பில்லாம காலையில் இப்படி கூப்பிட்டு வைச்சு பேசாம உட்கார்ந்திருக்க” என்று கண்ணதாசன் பொறுப்புகளைப் பற்றி பக்கம் பக்கமாக பேச.. ‘என்னடா பொறுப்புக்கு வந்த சோதனை!!’ என்று ராமதாஸ் தன் தம்பியை பார்த்து நக்கலாக சிரித்தார்.
பின் மகனை பார்த்து “தம்பி சொன்னது மாதிரி 15 நாள்ல தான் கல்யாணம் வச்சிருக்கோம் உனக்கு. நிறைய வேலை எல்லாம் நம்ம பக்கம் இருக்கு. என்ன விஷயம் டக்குனு சொல்லு” என்றார்.
அனைவரையும் ஒரு முறை அழுத்தமாக பார்த்தவன் பின் “எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடிச்சு” என்றான்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒருவரையொருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொள்ள.. பின் அனைவரும் வெடித்து சிரித்தனர்.
“என்னது கல்யாணம் ஆயிடுச்சா? கல்யாணம் ஆயிடுச்சா!! என்று பல கோப குரல்களையும், அதிர்ந்த குரல்களையும், வலி நிறைந்த குரல்களையும் நீங்க எதிர்பார்த்தால் அது வீணே.. ஏன்னா இது பாண்டியனோட குடும்பம்.. ஹா.. ஹா..
பின் அனைவரும் கூலாக “அதுதான் எங்களுக்கு தெரியுமே!” என்றனர்..
“என்னது தெரியுமா?” இப்பொழுது அதிர்ச்சியானது பாண்டியன்..
“சொர்ணம் அன்னக்கிளிக்கு மாப்பிள்ளை பார்க்கிறதை பாத்துட்டு ராசாத்தி சித்தி தான் என்கிட்ட வந்து சொன்னாங்க.. ஏற்கனவே உனக்கும் அன்னக்கிளி பிடித்திருக்கிறதால, நாங்களும் அம்பை கல்யாணத்துக்கு அப்புறம் கல்யாணம் பண்ணலாம்னு நினைச்சோம். ஆனா அதுக்கப்புறம் தான் நீ அவளுக்கு தாலி கட்டி இருக்கிற விஷயத்தை ராசாத்தி சித்தி என் கிட்ட சொன்னாங்க. அது தான் நேத்தைக்கு போயி நாங்க சொர்ணத்தை சம்மதிக்க வச்சு, பேசி முடிச்சு பரிசம் போட்டுடு வந்தோம்” என்று ராமதாஸ் விளக்க..
ஒருபுறம் தன்னவளைத்தான் தனக்கு பரிசம் போட்டாடுள்ளார்கள் என்று மனதில் ஆனந்தம் கொண்டாலும், பெற்றோர்களுக்கு தெரியாமல் செய்த செயல் அவனை உறுத்த, தவறு செய்துவிட்டு முழிக்கும் பாலகன் போலவே அவன் அவர்களை பார்க்க அதை பார்த்து அனைவருமே உருகினர்.
“சரி விடுடா இனியாவது அவசரப்பட்டு இந்த மாதிரி வேலை எதுவும் செய்யாதே” என்று கண்ணதாசன் கூற, மற்றவர்களும் கலைந்து சென்றனர்.
அப்போது அவன் அருகே வந்த முத்தையா “இனிமே போய் அன்னத்தை பார்க்கணும்னா வாசல் வழியாகவே போ.. ஓட்ட பிரிச்சி உள்ளே இறங்காதே” என்று சொல்லி விட்டு செல்ல..
“தாத்தா” என்று அதிர்ந்தான் பாண்டியன்..
வருவோம்ல..
