பாண்டியன் தோள் வளர் பைங்கிளி
10
பாண்டியன் தோள் வளர் பைங்கிளி
ஜியா ஜானவி 💞
தோரணமாக தொங்கிய உடையுடன் சுப்பிரமணியன் ஒருபுறம்.. கையில் அன்னக்கிளியுடன் சொர்ணம் மறுபுறம்… ஒரு பஞ்சாயத்தே இன்னும் முடியல அதுக்குள்ள அடுத்த பஞ்சாயத்தா? என்று அங்குள்ள அனைவரும் பார்க்க..
முத்தையாவும் தன் பேரனை முறைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார். பாண்டியனோ வழக்கம்போல அங்கு உள்ள புகைப்படங்களை பார்க்க.. கண்ணதாசன் தந்தையை மீறி மகனை கண்டிக்க முடியாத காரணத்தினால் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு நிற்க.. நிலைமையை கையில் எடுத்துக்கொண்ட ராமதாஸ் மகனிடம் “பாண்டியா என்னது இது? ஏன் மாப்பிள்ளைய இப்படி ஆக்கி வெச்சிருக்க? என்று கேட்க..
அவனோ வடிவேல் பாணியில் “என்ன ஆக்கி வைச்சுயிருக்கேன்?” என்று திரும்பவும் கேட்டான்..
தனக்கு ஏறிய பிரஷரை கஷ்டப்பட்டு கட்டுப் படுத்திக் கொண்ட கண்ணதாசன் அண்ணனிடம் தான் பேசுவதாக கூற.. “அப்பனுக்கும் மகனுக்கும் ஏற்கனவே ஆகாது. இதுல நீ ஏதாவது ஒன்னு பேசி, அவன் ஏடாக்கூடமா ஒன்னு பதிலுக்கு சொல்ல.. ஒன்னும் வேணாம். நானே பேசி என்னனு கேட்கிறேன்” என்று தம்பியின் வாயை அடைத்துவிட்டார்.
பின் ராமதாஸ் மகனிடம் நெருங்கி “என்னோட நடந்தது சொல்ல போறியா இல்லையா? என்க, மகனோ “இப்போ என்ன? என்ன நடந்ததுன்னு சொல்லணும் அவ்ளோதானா!! அப்படியே எல்லாரும் மேல பாருங்க” என்றான்..
என்னத்துக்கு எல்லாரையும் மேல பார்க்க சொல்லுறான் என்று புரியாவிடினும் அனைவரும் மேலே அண்ணாந்து பார்க்க அவர்கள் வீட்டு சீலிங் தான் தெரிந்தது.
ஆனால் அவன் எதற்கு பார்க்கச் சொன்னான் என்று புரிந்துகொண்ட அன்னக்கிளியின் உதட்டின் ஓரம் சிரிப்பில் துடித்தது. ‘லூசு பையன் அவங்க என்ன கேட்கிறாங்க, இவன் என்ன சொல்றான்’ என்று மனதுக்குள் வசைபாடி கொண்டாள்.
“அங்கு என்னடா இருக்கு?” என்று மேலே பார்த்து கொண்டே கண்ணதாசன் கேட்க..
“அங்க ஒன்னும் இல்லையே டா!” என்று ராமதாஸ் சொல்ல..
பேரன் என்ன சொன்னாலும் அதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கும் என்று நம்பிய அவன் அப்பத்தா அமிர்தமோ இன்னும் மேலிருந்து கண்ணை அகற்றவே இல்லை..
வீட்டில் உள்ள மற்ற பெண்களும் எதுக்கு அங்க பார்க்கச் சொல்கிறான் என்று புரியாவிடினும் இவன் அலும்பு தெரிந்தவர்கள் அமைதியாகவே நின்று கொண்டனர்.
அதன் பின்னே அவன் சொன்ன விபரத்தில் அனைவரும் அனல் கண்களால் அவனை பொசுக்க.. ஏற்கனவே இவனால் நொந்து நூடுல்ஸ் ஆகி தொங்கிக்கொண்டிருந்த சுப்ரமணியனோ ஏன்டா இவன் வீட்டுல பொண்ணு எடுத்தோம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டான்.
“ம்ப்ச்.. உங்களுக்கு தெரியலையே பெரியப்பா. பொதுவா என்ன நடந்ததுன்னு கேட்டா இப்படி தான் எல்லாரும் மேல பார்க்கணும் அப்பதான் நான் பிளாஷ்பேக் சொல்ல வசதியா இருக்கும்” என்று கூறிக்கொண்டே தன் பெரியப்பாவின் முன் சுழல் சுழலாக சுற்றிக்காட்ட, இவன் திருந்தவே மாட்டான் என்று அனைவரும் தங்கள் தலையில் அடித்துக் கொண்டனர்.
பாண்டியனும் அவன் நண்பர்களும் கூடவே ஒட்டுப்புல்லாக சுப்பிரமணியனும் திருவிழா கூட்டத்தில் சுற்றிக் கொண்டு வருபவர்களிடம் வம்பு பண்ணிக் கொண்டும், தெரிந்தவர் தெரியாதவர் என பேதமில்லாமல் “என்ன மாப்பிள்ளை சௌக்கியமா?” “என்ன மாமா எப்ப வந்த ஊர்ல இருந்து?” “என்ன மச்சான் வீட்ல எல்லாம் சௌக்கியமா?” என்று கேட்டுக் கொண்டே செல்ல..
சுப்ரமணியமோ “என்ன மச்சான் இங்க வர அம்புட்டு பேரும் உங்களுக்கு தெரிஞ்சவங்களா?” என்று கேட்க..
“யாருக்கு தெரியும் அத்தான். ஆனா எல்லார் கிட்டேயும் இப்படி கேட்டா தான், நம்மளுக்கு எல்லாரையும் தெரிஞ்சவனு ஊருக்குள்ள நினைப்பாங்க” என்று அவனை பார்த்து கண்ணடித்து கொண்டு சொல்ல..
விவரம் புரியாத சுப்ரமணியனும் “சூப்பர் மச்சான்.. நானும் ஒன்றை செய்யவா?” என்று கேட்க.. “உங்களுக்கு இல்லாததா நீங்களும் கேளுங்கள்” என்று கூறிக்கொண்டே அவர்கள் முன்னால் நடக்க…
இவர்களை சுற்றி தங்கள் கண்ணை வைத்தவாறு நடந்து வந்து கொண்டிருந்த சங்கரின் ஆட்களும், இவர்களின் இந்த சம்பாஷணையை கேட்டுக்கொண்டு அவர்கள் முன்னாலேயே வர.. சங்கர் ஆட்கள் என்று புரிந்து கொண்ட பாண்டியனும் அவன் நண்பர்களும் கண்டுகொள்ளாமல் செல்ல, விபரம் அறியா சுப்பிரமணியனோ அவர்களை நோக்கி கையசைத்து “என்ன மச்சி எப்படி இருக்க?” என்று ஒருவனை பார்த்து கேட்டு விட்டு அடுத்தவனை பார்த்து “என்ன பங்காளி வீட்ல எல்லாரும் சௌக்கியமா?” என்று கேட்க.. இது போதாதா அவர்களுக்கு..
“யாருக்கு யாருடா மச்சான்?” என்று ஒருவன் எகிறி கொண்டு வர.. அடுத்தவனோ “நான் உனக்கு பங்காளியா? ஏன் அப்பனும் உன் அப்பனும் ஒரு அப்பனுக்கு பிறந்தவங்களா?” என்று கேட்டு மற்றொருவன் பாய்ந்து கொண்டு வர.. “நீ என்ன என் தங்கச்சிய கட்டினவனா டா” என்று மற்றொருவன் அவன் சட்டையை பிடிக்க.. ஆரம்பமானது அங்கே ரணகளம்.
வழக்கம்போல் சமரனோ அவ்விடத்தை சமர் களமாக்கி அமர்க்களமாக்க… சங்கரும் அவன் ஆட்களும் விடாமல் அவனிடம் சண்டை பிடிக்க , இடையில் மாட்டிக்கொண்ட சுப்பிரமணியனோ என்ன செய்வது என்று புரியாமல் இருவரிடமும் மாற்றி மாற்றி வதை பட்டான்.
‘மாமனார் கூடவே அப்பவே போயிருக்கலாம், சுத்தி பார்க்க ஆசைப்பட்டத்துக்கு நல்லா வச்சு செய்றானுங்க’ என்று மனதுக்குள் அழுது கொண்டே வெளியில் கெத்தாக மூஞ்சியை வைத்துக் கொள்ள.. இவன் நோஞ்சான் என்று புரிந்துகொண்ட சங்கரின் ஆட்களும் தங்கள் முழு திறமையையும், வலிமையையும் அதிகமாக இவனிடமே காட்ட நொந்து நூடுல்ஸ் ஆனான் சுப்பிரமணியன்.
ஆனால் அவர்களின் முழு திட்டம் வேறாக இருந்தது. பாண்டியனை திசைதிருப்பவே இப்படி வழியே வந்து சண்டையிட்டு அடி வாங்கி சென்றனர் சங்கரின் ஆட்கள். என்னவாக இருக்கும் அவர்களின் திட்டம்?
ஒருவழியாக முதல் பஞ்சாயத்து முடிவுக்கு வர.. வேகமாக வந்த ஆதிரை தன் கணவனை நோக்கி ” உங்களுக்கு கொஞ்சமாவது கூறு இருக்கா? அவன்தான் இளந்தாரை இங்க நாலு பேரோட கூட்டு சேர்ந்து சுத்துறான். உங்களுக்கு என்ன இந்த 40 வயசுல,ஊர் சுத்த கேட்குது? இப்பதான் உங்களுக்கு இளமை துள்ளுதோ.. வாய வச்சுகிட்டு சும்மா இல்லாமல் வாயைக் கொடுத்து நல்ல வாங்கிட்டு வேற வந்திருக்கீங்க.. முதல்ல போய் குளிங்க. போங்க..” என்று தன் கணவனை அழைத்துக்கொண்டு தங்கள் அறையை நோக்கிச் சென்று விட்டாள்.
இப்போது சொர்ணம் கோபத்துடன் அவர்களை நோக்கி பார்த்துக் கொண்டிருக்க.. ரைட்டு அடுத்த பஞ்சாயத்து..
“சரிடா மாப்பிள்ளை வாயைக் கொடுத்து அந்த சங்கர் ஆட்கள் கிட்ட சண்டை போட்டீங்க.. சரி ஆனா இந்தப் பிள்ளைய என்னடா பண்ணி வைச்ச.. அவங்க ஆத்தா மகமாயி மாதிரி அவள இழுத்துட்டு, நம்ம வீட்டு வாசல் முன்னாடி வந்து நிற்குது” என்று ராமதாஸ் கேட்க..
“ஏண்டா.. உன் விளையாட்டு எதுவும் இந்த புள்ளைகிட்ட காட்டலேயே?” என்று திகில் உடனே மகனை பார்த்து கண்ணதாசன் கேட்க..
முத்தையாவும் அவனை தான் கூர்மையாக பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்.
“சேச்சே.. நான் எந்த வம்பும் அந்த புள்ள கிட்ட செய்யவே இல்லை பெரியப்பா” என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தது போல அவன் கூற…
“நெஜமாவாடா?” என்று சந்தேகத்துடனே அவர் கேட்க..
“ஆமாம் பெரியப்பா.. சும்மா அந்த பொண்ணு பின்னாடி போவேன். அவ்வளவுதான் வேற ஒன்னும் பண்ணல”
“என்னது அந்த பொண்ணு பின்னாடியே போவியா!!” என்றார் அதிர்ச்சியுடன் கண்ணதாசன்…
“ஆமா ராத்திரி நேரம் தனியா போகும். அதனால வீடு வரைக்கும் போய் பத்திரமா விட்டுதான் வருவேன்” என்றான் பாண்டியன்.
“என்னது வீடு வரைக்கும் பின்னாடியே போவியா?” இது அப்பத்தா அமிர்தம்..
“பின்ன என் ஆளு தனியாக போகும் போது, பின்னாடியே போகலேன்னா நான் எல்லாம் என்ன லவ்வரு சொல்லுங்க”
“என்னது லவ்வரா?” அதிர்ச்சியுடன் பெரியன்னை ஜோதி..
“ஆமாம் ஜோ.. நாளைக்கு நம்ம வீட்டுக்கு வர போற பொண்ணு.. யாரும் ஒரு வார்த்தை வாய் மேல பல்லு போட்டு பேசக்கூடாது இல்ல.. அதுக்கு தான்” என்று கூறியவனை பார்த்து அவன் அன்னை வசந்தா.. “நம்ம வீட்டுக்கு வர போறவளா?” என்றார் மற்றவர்கள் குறையாத அதிர்ச்சியுடன்..
“ஏன் இப்படி எல்லாரும் ஷாக் ரியாக்ஷன் கொடுக்குறீங்க? இந்த அன்னக்கிளி தான் இந்த சமரவேல் பாண்டியனோடு பைங்கிளி” என்று கூறியவனைக் கண்டு அனைவரும் ஸ்தம்பித்து நிற்க…
“கனவுல கூட நடக்காது” என்று கர்ஜித்தார் சொர்ணம்..
“ஏன் நடக்காது?” என்று அவருக்கு சற்றும் குறையாத கோபத்துடன் சண்டியர் கணக்காய் விடைத்துக்கொண்டு நிற்கும் பாண்டியனை பார்த்து உள்ளுக்குள் சிறிது பயந்தாலும், தன் மகளின் வாழ்க்கையை எண்ணி அவன் கண்களை தைரியமாகவே எதிர்கொண்டார் சொர்ணம்.
அதற்குள் இவன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தில் இருந்து மீண்ட பாண்டியனின் குடும்பத்திற்கு, சொர்ணத்தின் பேச்சில் கோபம் பொங்க செய்தது அவர்களுக்கு.
பாரம்பரிய வம்சம்.. சொல்லிக் கொள்ளுமளவு சொத்துக்கள்.. ஒற்றை
ஆண்பிள்ளை.. என்று தங்களைப் பற்றி சற்று கௌரவமாகவே சிந்தித்த அவ்வீட்டு பெண்கள், சொர்ணம் சொன்ன வார்த்தையில் சிலிர்த்துக் கொண்டு எழுந்தனர்.
“எவடி இவ.. என் பேரனுக்கு பொண்ணு தர மாட்டேன்னு சொல்றது? .. என் பேரனுக்கு என்ன குறை சொல்லு” என்று அமிர்தம் முந்தானையை உதறி சொருகி கொண்டு வர..
“உங்க பேரனுக்கு ஒன்னும் குறைச்சலே இல்லை. ஆனா என் பொண்ணுக்கு அவன் வேணாம்” என்றார் சொர்ணம் கோபத்துடன்..
“இவ பொண்ணு சீமா சித்திராங்கி.. ஊர்ல இல்லாத பெரும் அழகி.. இவளை விட்டா வேற யாரும் எங்க பையனுக்கு பொண்ணு தர மாட்டாங்களா?”
அதற்குள் கோவிலில் ஏற்பட்ட கலவரத்தை கேட்டு அறிந்த ராசாத்தியும் விரைந்து அங்கு வந்து சேர்ந்திருக்க.. அமிர்தத்தின் பேச்சில் தன் பேத்தியை அவர் குறைவாக கூறுவதை கண்டு அவரும் பொங்கி எழுந்தார்.
“ஆமா என் பேத்தி அழகிதான்.. அவ கிடைக்க உன் பேரன் தான் தவம் பண்ணியிருக்கணும்” என்று தன் பங்குக்கு அவரும் ஆரம்பித்தார்.
“அழகு மட்டும் இருந்தால் போதுமா? ஆஸ்தி அந்தஸ்து என்ன இருக்கு உங்க கிட்ட.. ஆஸ்தி அந்தஸ்து விடு, இவன் அப்பன் ஒரு குடிகாரன்.. குடிச்சு குடிச்சு எல்லாம் அழிச்சிட்டு தானே இங்கே வந்து நிக்கிறா.. இதுல உங்களுக்கு பெத்த பெம்மானம் வேற” என்று சொல்லால் அடிக்க…
சண்டைக்கோழி என சிலிர்த்த சொர்ணமும் “எங்களுக்கு ஆஸ்தி அந்தஸ்து இல்லேன்னாலும்.. என் பொண்ணுக்கு ஒரு படிப்பு இருக்குது.. வேலை இருக்கு.. ஆனா உங்க பையன் கிட்ட என்ன இருக்கு, ஆம்பளன்னு பேரை தவிர” என்று அவரும் வாயை விட..
ராசாத்தியே கொஞ்சம் சுணக்கம் கொண்டார் சொர்ணத்தின் பேச்சில்.. அமிர்த்தை கேட்கவும் வேண்டுமா என்ன..
“ஆமாண்டி.. பொட்ட புள்ளய வேலைக்கு அனுப்பி உட்கார்ந்துட்டு திங்கிற நீ என் பேரனை சொல்லுறியா? எங்களுக்கு அப்படி எல்லாம் ஒன்னும் அவசியம் கிடையாது. என் பேரன் எந்த வேலைக்கு போகலைனாலும் ஒக்காந்து தின்னா, ஒன்பது தலைமுறைக்கு காணும் எங்கள் சொத்து.. யாரும் உன்கிட்ட வந்து பொண்ணு கொடுனு உன் வீட்டு வாசல்ல வந்து நிக்கல.. போடி போக்கத்தவளே” என்று அவர் ஒரு ஆட்டம் ஆட..
அமிர்தம் என்று கூப்பிட்டு தன் மனைவியின் வாயை அடைத்தார் முத்தையா. பின் கம்பீர நடையுடன் சொர்ணத்தின் அருகில் வந்து நின்று அவரை முறைத்துப் பார்க்க.. அதில் சற்றே சொர்ணமும் பயந்து ஓரடி பின்னுக்கு நின்று தன் தலையை கவிழ்த்துக் கொண்டார்.
“இங்க பாரு சொர்ணம்..ஏதோ வயசுக்கோளாறு என் பேரன் உன் பொண்ணு பின்னாடி சுத்தி இருக்கான். அதுக்காக நீ உன் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசணும்னு அவசியமில்லை. என் பேரனை பத்தி என்ன தெரியும்னு நீ பேசுற.. உனக்கு பிடிக்கலைன்னா நீ பஞ்சாயத்தில் பிராது கொடு.. அந்த பஞ்சாயத்தை எப்படி பார்க்கணும்னு எங்களுக்கும் தெரியும்” என்ற அவரின் கம்பீர குரலில் சற்று உள்ளடங்கிய பேச்சில் சொர்ணமும்.. “பொட்டபுள்ள வாழ்க்கை அதனாலதான் நான் பஞ்சாயத்து வரைக்கும் போகல அய்யா. பஞ்சாயத்துக்கு போனாலும் கட்டப்படுற ஆளா.. அதான் உங்க கிட்டயே சொல்லிட்டு போகலாம் தான் இங்கே வந்தேன்” என்று கூற..
“என்கிட்ட சொல்ல வந்தேன்னா அப்போ அளவோட வார்த்தைகளை பேசனும். தடிச்சு பேசக்கூடாது.. வந்தது நீ ஒழுங்கா சொல்லி இருந்தீன்னா நானும் என் பேரன் கண்டிச்சு இருப்பேன். ஆனா நீ பேசுன பேச்சு.. சரி இல்லை சொர்ணம்”
“நான் உண்மை தானுங்க சொன்னேன்” என்று தன் பேச்சு உறுதி என்று அதிலேயே அவர் நிலைத்து நின்று கூற..
“தனிச்சி நின்னு பொட்ட பிள்ளைய தைரியமாக வளர்க்குறனு உன்னைய நினைச்சு சந்தோசப்பட்டு இருக்கேன், பெருமை பட்டிருக்கேன் சொர்ணம். ஆனா நீ எப்படி பேசுவது உன்னோட முதிர்ச்சிய சொல்லல.. இனியும் என் பேரன் உன் பெண்ணு பின்னாடி வர மாட்டேன். போ” என்று கூற..
“அதுதாங்க எனக்கும் வேணும்.. ஏற்கனவே என் பொண்ணை, பொண்ணு பாக்க வந்தவரையும் விரட்டிவிட்டான்..இனி அந்த மாதிரி எதுவும் செய்ய வேணாம்னு சொல்லி வையுங்க” என்ற கோரிக்கையுடன் தர தரவென அன்னக்கிளியை இழுத்துக் கொண்டு சொர்ணம் செல்ல..
ராசாத்தி தன் கையை பிசைந்தவாறு முத்தையாவை பார்த்தார்.
முத்தையாவுக்கு ஒன்று விட்ட பங்காளி குடும்பம்தான் ராசாத்தியின் குடும்பம்.
ஊருக்குள் பெரிய தலை தங்கள் பங்காளி வேறு அதனால் “மச்சான் அது பொண்ணு வாழ்க்கை நினைச்சி அப்படி எல்லாம் பேசிட்டு போகுது.. மனசுல ஏதும் வெச்சுக்காதீங்க. என் பேராண்டி பத்தி எனக்கு தெரியாதா?” என்று ராசாத்தி கூற..
“நீ போ மதனி.. உன்னைய பத்தி எனக்கு தெரியும்.. போய் அந்த பிள்ளையை சமாதானப்படுத்து” என்று கூறி அனுப்பி வைத்தார் முத்தையா..
பின் திரும்பி தன் குடும்பத்தினரை பார்த்து, ” இதை பற்றி யாரும் நாம இப்போ பேச வேணாம்..போங்க எல்லாரும்” என்று கூற அனைவரும் தத்தம் அறையை நோக்கி சென்று விட்டனர் ஒருத்தனை தவிர..
பாண்டியன் தான் தாத்தாவை முறைத்துக்கொண்டு நட்ட நடு வீட்டில் நின்று கொண்டிருந்தான். அவன் கண்கள் சொன்ன செய்தி ஒருபுறம் அவருக்கு மனக்கஷ்டத்தை கொடுத்தாலும்.. மறுபுறம் முறைப்பாகவே அவன் கண்களை நேராகவே பார்த்தார் அவர்.. அதற்கு எல்லாம் பயந்தவனா அவன்..
‘நீங்க பேசுனது பேசிட்டீங்க.. இனி நான் செய்யுறதை பொறுத்திருந்து பாருங்க’ என்று கண்களாலேயே அவருக்கு செய்தியை அறிவித்து விட்டு தன் அறையை நோக்கி சென்று விட்டான் பாண்டியன்.
மகளை அழைத்துக் கொண்டு சென்ற சொர்ணத்தின் கண்முன்னே திருவிழாவில் நடந்த அந்த காட்சியே திரும்பத் திரும்ப வந்து சென்றது.
சக்கரை பொங்கல் கொண்டுசென்ற மகளின் பின்னே இன்னொரு வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டி கூப்பிட்டுக் கொண்டே வந்த சொர்ணத்தை, அங்குள்ள இரைச்சலில் காதில் வாங்காமல் சென்று கொண்டிருந்தாள் அன்னக்கிளி.
சட்டென்று அவள் கை இழுக்கப்பட, சொர்ணமும் அங்கே சென்று பார்க்க பாண்டியனின் கை வளைவில் அன்னக்கிளியே பார்த்தவுடன் உயிரே போனது அவருக்கு.
தன் மகளின் முகத்தில் விருப்பமின்மை தெரிந்தாலும், அவனை ஓங்கி அறையாமல் அவள் நின்ற விதமே மகளும் பாண்டியனை விரும்பத் தொடங்கி விட்டாளோ என்று எண்ணம் தோன்ற ஆரம்பித்தது அவருக்குள்..
அதன் பின் ராசாத்தியும் சொர்ணமும் வீட்டுக்கு சென்று விட, தோழிகளுடன் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தாள் அன்னக்கிளி. கொஞ்சம் தள்ளி அன்னக்கிளியை பார்வை வளையத்துக்குள் வைத்தவாறு பின்தொடர்ந்து கொண்டிருந்தான் பாண்டியன். இதையெல்லாம் பார்த்த சொர்ணத்தின் மூளைக்குள் ஏற்கனவே மாப்பிள்ளை வீட்டார் வராததுக்கு பாண்டியன் தான் காரணம் என்ற செய்தி வந்திருக்க.. இவை எல்லாம் சேர்த்து கொந்தளித்து பாண்டியன் வீட்டிற்கே சென்று விட்டார் நியாயம் கேட்க மகளைஅழைத்து கொண்டு..
ஆனால் அவரின் நியாயங்கள் எல்லாம் பாண்டியனின் காதல் முன் நிற்குமா என்ன!!
அன்று இரவே அவர்கள் வீட்டின் ஓட்டை பிரித்துக்கொண்டு உள்ளே குதித்து விட்டான் பாண்டியன்.
பகைவர்களை சமர் களத்தில் வென்ற மன்னவன்.. காதல் களத்தில் வெல்லவானா???
வருவோம்ல..
