பாண்டியன் தோள் வளர் பைங்கிளி
23
பாண்டியன் தோள் வளர் பைங்கிளி
ஜியா ஜானவி 💞
பிரச்சாரம் என்று ராமதாஸ் பெரிதாக எதுவும் மேற்கொள்ளவில்லை தனயன் அறிவுரையில்.. அவ்வூரில் உள்ள பெரிய தலைகளை பார்த்து அவர்களின் ஆதரவைப் பெற்றவர், சிலரை தன்னுடன் அழைத்துக்கொண்டு அந்த ஊரின் சில வீதிகளை.. கை கூப்பிய வண்ணமே அவர்களுடன் ஒரு பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் கேட்டார். அதுவும் வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே…
சங்கரோ ஊர் கொள்ளா போஸ்டர்களையும் பேனர்களையும் அடுக்கி அதகளப்படுத்த.. இவரோ அமைதியாக ஒரு பேரணியை மட்டும் நடத்தி முடித்தார். ஆனால் இதில் எதிலும் பாண்டியனும் அவன் சகாக்களும் பங்கு பெறவில்லை. பெரியப்பாவுக்கு பின்னே நிழல் போல தன்னுடைய ஆட்களை மட்டுமே நியமித்திருந்தான்.
ஆண்களில் மதுபிரியர்களை தவிர மற்றவர்களெல்லாம்.. ராமதாஸ் குடும்பத்தை வழி வழியாக பார்த்தவர்கள் அவர்களின் நேர்மையும் நியாயமும் தெரிந்தவர்கள். பெரும்பாலானோர் அவருக்கே ஆதரவளித்தனர்.
அதேபோல பெண்கள் சாராயம் என்ற ஒற்றை வார்த்தையே அவர்களை வெறுக்க செய்வதாக இருக்க.. பின் எங்கே சங்கருக்கு வாக்களிக்க…
போதாக்குறைக்கு அன்னக்கிளியும் தன் பணியை செவ்வனே செய்து முடித்து இருக்க.. இனி ஷங்கரின் கனவு எங்கு பலிக்க…
தேர்தல் நாளும் மிக ரம்மியமாகவே ஆரம்பித்தது.. இவர்கள் இரண்டு குழுவினர்களும் தனித்தனி குழுவாக டெண்ட் போட்டு அமர்ந்து, அவ்வழியே செல்லும் மக்களை ‘தங்களுக்கு ஓட்டு போடுங்கள்’ என்று கூறியவாரே அமர்ந்து இருந்தனர்.
அப்போது சங்கரி ஆட்களில் ஒருவன் “அண்ணே.. அந்த பாண்டியன் வந்து அவன் ஆளை வெச்சு பொண்ணுங்க கிட்ட எல்லாம், நம்ம ஊத்தி கொடுக்கிறோம்.. தண்ணீ அடிக்கிறோம்.. என ஏதேதோ சொல்லி.. பொம்பளைங்க ஓட்ட எல்லாம் அவனுங்க பக்கம் இழுக்க பார்க்குறாங்க” என்று கூற.. ( என்னா டக்கு டா நீங்க)
“அப்படியெல்லாம் யாரையும் இழுக்க முடியாது டா.. நாம் அவ்வளவு செலவு பண்ணி இருக்கோம்.. இவங்க வெறும் வாயிலேயே வட சுடுறவனுங்க” என்று நக்கலாக கூறினான் சங்கர்..
பணம் மட்டுமே பிரதானம் என்ற நினைப்பில்.. பல இடங்களில் அதன் மதிப்பு அதலபாதாளத்தில் என்பதை மறந்து…
“ஆனாலும் அவனை சும்மா விடக்கூடாது. எதுக்கும் ஒரு மிரட்டு மிரட்டு வைப்போம்ண்ணே.. அப்பதான் நம்ம மேல ஒரு பயம் இருக்கும்” என்று அவன் ஏற்றிவிட..
மற்றவனோ “அண்ணே வேணாம்ணே.. இன்னைக்கு தேர்தல் நேரத்துல நீங்க ஏதாவது ரகளை செய்து, அதையே காரணம் காட்டி அவனுங்க ஏதாவது வம்பு பண்ணுங்க. இன்னைக்கு ஒரு நாள் பொழுது பொறுங்க. நாளைக்கு பார்த்துக்கலாம்” என்று தக்க சமயத்தில் அறிவுரை கூற..
தண்ணீராய் செலவழித்த பணம் கண்முன்னே மிதந்து செல்ல வாலை சுருட்டி அமர்ந்துவிட்டான் சங்கர்.
ஆனாலும் அவன் வாய் சும்மா இருக்கவில்லை. காலையிலேயே வேலைக்கு செல்ல வேண்டும் என நினைத்து ஓட்டு போட வந்த அன்னக்கிளியை மடக்கி பிடித்தான் சங்கர்.
முன்னேயே அவனைக் கண்டால் இவள் பயப்பட மாட்டாள். இப்போது பாண்டியனின் பாதியான பின்பு பயம் கொள்ளவா போகிறாள் இந்த பைங்கிளி?
“நீ அன்னைக்கு ஏதோ பெருசா வேலையெல்லாம் செஞ்சுகிட்டு இருக்கியாமே.. இன்னும் ரெண்டு நாள் தான் அதுக்கு அப்புறம் இந்த ஊர் மொத்தமும் என் கட்டுப்பாடுல.. அதனால என்கிட்ட பார்த்து பதுவுசா நடந்துக்க.. முறச்சிகிட்டு திரிஞ்சே இந்த முகரை இல்லாமல் போய்விடும்” என்று மிரட்ட..
அவளோ அவனுக்கு ஒன்றும் பதில் அளிக்காமல் அவனை மேலேயும் கீழேயும் பார்த்தவள், “முடிஞ்சா செஞ்சு கோடா” என்ற வண்ணம் ஒரு லுக்கை விட்டு கடந்து சென்றாள்.
அதற்குள் அன்னத்தை மிரட்டுவதை பார்த்த பாண்டியனின் சகாக்கள் அதை அவனிடம் கூற, அவனும் வெகு அலட்சியமாக “சங்கருக்கு சேதாரம் அதிகம் இல்லையே?” என்று கேட்டான்.. அவர்களோ “அடப்பாவிகளா!! நல்ல ஜோடி சேர்ந்திங்கடா ரெண்டு பேரும்!!” என்று விட்டு தத்தம் வேலையை பார்த்தனர்.
ஆனாலும் சங்கரின் மீது ஒரு கோபம் இருக்கத்தான் செய்தது பாண்டியனுக்கு. “எப்படி என்னவளை கூப்பிட்டு நீ மிரட்டுவாய் என்று?” தங்கள் குழு அமைத்து இருந்த அந்தக் கொட்டகையில் இருந்து அவனை பார்த்தவாறே தன் மீசையை முறுக்கி விட்டு கொண்டான் பாண்டியன்.
அங்கே தேர்தல் நல்ல முறையில் நடப்பதற்காக சில பல போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்தனர்.
தேர்தல் எல்லாம் முடிவுறும் தருவாயில் கிட்டத்தட்ட பிற்பகலுக்கு மேல் ஓரளவு கூட்டம் குறைவாக காணப்பட்ட நேரம், இவர்கள் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஈடுபட்ட அனைவருக்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர்.
அவர்களை அருகில் உள்ள ஒரு மண்டபத்திற்கு அழைத்து அங்கே சாப்பாடு பரிமாறும் வேலையை பாண்டியன் தலைமையில் ஒரு குழு செயல்பட்டுக் கொண்டிருக்க.. ஒரு குழு சதீஷின் தலைமையில் அங்கே தேர்தல் வேலை நடக்கும் இடத்தில் மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தது.
சங்கரோ “என்னடா போலீஸ் எல்லாம் அவனுங்க கூட்டிட்டு போயிட்டாங்க. நான் அவங்களை மடக்க பிரியாணி குவார்ட்டர் வாங்கி குடுத்து நம்ம வழிக்கு கொண்டுவரலாம் நினைச்சேனே?” என்று அவன் யோசனையாக கேட்க…
“அண்ணே.. அவர்கள் என்ன ஓட்டு போட போறாங்க? அவனுங்களை எதுக்கு நாம கரெக்ட் பண்ணனும்? நமக்கு செலவு மிச்சம் நினைச்சுக்கோங்க” என்று கூற.. அதுவும் சரிதான் என்ற சங்கர், “டேய்.. இங்கன நீங்க எங்க பார்த்துட்டே இருங்க. நான் வீடு வரைக்கும் போயிட்டு வரேன்” என்று தன் வீட்டை நோக்கி சில அல்லக்கைகள் உடன் சென்றான்.
“அண்ணே.. நீங்க வரவே தேவப்படாது. எப்படி இன்னொரு ஒரு மணி நேரத்தில் தேர்தல் எல்லாம் முடிஞ்சிடும். எல்லாத்தையும் எடுத்துட்டு அவங்க ஆபீஸர் எல்லாம் கிளம்பிடுவாங்க. நீங்க வீட்டிலேயே ரெஸ்ட் எடுங்க” என்று அவனின் எடுபிடி கூற…
சரிடா என்று புறப்பட்டு விட்டான் இரண்டு பைக்கில் நால்வராக. இவர்கள் நேராக வீட்டுக்கு செல்வது எப்படி? எப்படியும் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று அதீத நம்பிக்கையில் வழக்கம்போல அவர்கள் கடைக்கு சென்று சரக்கு அடித்துவிட்டு, மீண்டும் வண்டியில் தட்டுத்தடுமாறி ஏறி வளைந்து நெளிந்து சென்று கொண்டிருந்தனர் வீட்டை நோக்கி…
அப்போது ஒரு திருப்பத்தில் நடுவில் கட்டப்பட்டிருந்த கயிற்றால் பைக் நிலை தடுமாறி சாய, ஏற்கனவே போதையில் நிலையில்லாமல் ஓட்டிக்கொண்டு வந்தவர்களும் சேர்ந்து ரோட்டில் விழுந்து சரிந்தனர்..
அப்பொழுது முகமூடி போல முகத்தை தன் துண்டுகளால் மறைத்த நான்கு அடியாட்கள் சங்கர் மற்றும் ஆட்களை சூழ்ந்து தங்கள் கையில் வைத்திருந்த சிறு கத்தியால் சரமாரியாக ஆங்காங்கே கிழித்து வைத்தனர். இவர்கள் சுதாரித்து கத்தி உதவி கேட்டு மற்றவர்கள் ஓடி வரும் வரை, ஆழமாகவும் இல்லாமல் அதே நேரம் லேசாகவும் இல்லாமல் சரக்கு சரக்கு என்று ஒவ்வொருத்தருக்கும் பத்து பன்னிரண்டு இடங்களில் கிழித்து விட்டு ஓடி மறைந்தது அக்கும்பல்..
யார் இவர்கள்? எதற்கு? ஏன்? என்று ஒன்றும் புரியாமல் வலியால் துடித்து இவர்கள் கத்திக் கொண்டே இருக்க.. அதற்குள் அவ்வழி போனவர்கள் வந்தவர்கள் இவர்களை அருகே உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர்.
தையல் போடும்படி ஒன்னு இரண்டு வெட்டுகள் மட்டுமே இருக்க.. மற்றவை எல்லாம் சும்மா சாதாரணமான காயங்களே. அதனால் அவற்றுக்கு மருந்து வைத்து கட்டி அவர்களுக்கு ஒரு டிடி ஊசி போட்டு அனுப்பி வைத்துவிட்டனர் மருத்துவர்கள்.
சங்கருக்கோ இது பாண்டியன் தான் செய்திருப்பான் என்று கோபம் கொண்டு வீட்டிற்கு கூட செல்லாமல் நேரே மண்டபத்திற்கு வந்தான்.
தேர்தல் முடிந்த நிலையில் தேர்தல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சென்றுவிட அங்கு காவலுக்கு இருந்த காவல்துறையினர் மட்டும் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். பாண்டியன் அவனின் ஆட்கள் அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்துக் கொண்டிருந்தனர்.
இவன் வந்து பிராது கொடுத்தான். பாண்டியனும் அவன் ஆட்கள் தான் இவ்வாறு செய்தார்கள் என்று அங்கேயுள்ள போலீஸ் அதிகாரியிடம்..
அவரோ அவனை மேலேயும் கீழேயும் பார்த்தவர், “எப்போ? எங்க? எத்தனை மணிக்கு நடந்துச்சு தெளிவா சொல்லுங்க?” என்றார்.
“இப்போ ஒரு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தான் சார்.. இவனும் இவன் பிரென்ட்ஸூம் சேர்ந்து செஞ்சு இருக்காங்க. எனக்கு நல்லா தெரியும்” என்று சத்தியம் செய்யாத குறையாக அவன் அடித்துக் கூற..
“அவங்க மதியத்தில் இருந்து எங்களுக்கு சாப்பாடு அரேஞ்ச் பண்ணுறது.. நாங்க கேட்ட உதவி எல்லாம் செய்துவிட்டு இவனும் இவன் ஃபிரண்ட்ஸ் இங்கே தான் இருக்கானுங்க. என் கண்ணு முன்னாடி தான் இருக்கானுங்க. அப்புறம் எப்படி அங்க வந்து இருப்பாங்க” என்று திரும்ப அவர்களையே கேட்க..
அதற்குள் சங்கரின் நண்பன் ஒருவன் “வந்தவங்கள் எல்லாம் மூஞ்சி எல்லாம் மூடி இருந்தாங்க சர்” என்று வாயை விட..
“அப்போ நீங்க நேரம் யாரையும் பார்க்கல. உங்க அனுமானத்த தான் சொல்றீங்க.. ஆனா அதே நேரம் அவங்க இங்கே தான் எங்க கண் பார்வையில் இருந்தாங்க. அப்புறம் எப்படி நீங்க கொடுத்த புகாரை ஏத்துக்க முடியும்?” என்று அதிகாரி அவனையே திருப்பி கேட்டார்.
அப்போது பாண்டியன் நேராக சங்கரிடம் வந்தவன்.. “அடேய்.. சங்கர் இதுக்கு முன்னாடி நான் உன்னை அடிச்சு வெளுத்ததே கிடையாதா.. அப்படியே நான் அடித்ததா சொன்னாலும், நான் நேரடியா உன்கிட்ட தான் மோதியிருப்பேன். முகமூடி எல்லாம் போட்டுட்டு வர்ற அவசியமே எனக்கு கிடையாது.. இதுவரைக்கும் எத்தனை தடவை என்கிட்ட அடி வாங்கி இருக்க, அப்ப நான் இப்படித்தான் மூடிட்டு வந்தேனா? இந்த பாண்டியனுக்கு எப்பொழுதுமே நேர் மோதல் தான் பிடிக்கும்” என்று கூறியவன் பின் தன் தாடையை தடவி ஏதோ யோசித்தவாறு அவனை பார்த்தான்.
“நான்தான் ஏற்கனவே சொன்னேன்ல உன் கிட்ட, இந்த பிரஸிடெண்டு பதவிக்கு ஒரு ஆப்பு வந்துகிட்டே இருக்குன்னு.. உன்னை யாரு தனியா போயி மாட்ட சொன்னாங்க.. பாரு அதனாலதான் எங்க பெரியப்பா வீட்டிலேயே பத்திரமா வச்சிருக்கேன். நீ போய் வசமா சிக்கிகிட்டியே சங்கரா” என்று கூறி பரிதாபப்பட்டான் பாண்டியன்.
ஏற்கனவே பாண்டியன் குத்து பட்ட விவகாரம், பிரசிடென்ட் இன்னும் வாய் பேச முடியாமல் இருப்பது எல்லாம் அந்த ஊர் காவல் அதிகாரிக்கு தெரியும். அதனால் அவரும் பாண்டியனுக்கு ஒத்தே பேசினார்.. “சரி சங்கர் நீ ஒரு கம்ப்ளைண்ட் எழுதி கொடுத்துட்டு போ.. நான் அவங்கள பிடிக்க பார்க்கிறேன்” என்று கூறினார்.
சங்கரும் பாண்டியன் கூற்றை மறுக்க முடியாமலும், அதே நேரம் அவன் இங்கேதான் இருந்ததற்கான ஆதாரம் காவல்துறை அதிகாரி கூறியது வேறு அவனை குழப்பியது. யார் நம்மை தாக்கி இருப்பார்? என்று குழப்பத்துடனே தன் ஆட்களை அழைத்துக் கொண்டு, ஒரு வேளை பாண்டியன் சொல்வது உண்மையோ என்று அவனின் மனம் எண்ணத்தொடங்கியது…
பின் அனைவரும் வீடு சென்று விட வழக்கம்போல பாலத்தில் அமர்ந்து ஐவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
“டேய் மச்சி யாருடா இப்படி போட்டு கிழிச்சிருப்பா அந்த சங்கரையும் அவன் ஆடகளையும்?” என்று முருகன் கேட்க..
“அந்த இன்னொரு கோஷ்டி இருக்கும்னு மச்சி அன்னைக்கே சொன்னான். அவனுங்க இப்படி பண்ணி இருப்பார்களோ!” என்று பயத்துடனே கிரி கூற..
“ஆனா அன்னைக்கு பிரஸிடெண்டே கொல்லுகிற அளவுக்கு போனவங்க, இவனுங்கள சின்னச்சின்ன காயத்தோடு எப்படி விட்டுட்டு போனானுங்க?” என்று அருண் தன் சந்தேகத்தை கேட்க…
சதீஷும் பாண்டியனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். பின்பு “அவங்களையெல்லாம் நானும் என் கூட சிலம்பம் பயிற்சிக்கு வர ஆட்களும் தான்டா கிழிச்சோம்” என்று கூற மற்றவர்கள் திகைத்து அவனை நோக்கினர்..
“ஏன்டா? ஏன் எதுக்கு இந்த கொலவெறி?” மாட்டி இருந்தா அவ்வளவு தான்” என்று நண்பன் மேல் உள்ள அக்கறையில் அவர்கள் கோபப்பட..
“இல்லடா மாட்ட மாட்டோம். தெளிவா தானே பிளான் போட்டேன். அவனுங்கள கொலை செய்ய இல்ல.. பயத்தை வர வைக்க தான் இந்த மாதிரி செஞ்சேன். நாம இப்படி செஞ்சா தான் அந்த உண்மையான கருப்பாடு வெளில வரும். அப்பதான் அதை மடக்கி பிடிக்க முடியும். இந்நேரம் விஷயம் தெரிஞ்சு அவனும் குழம்பித்தான் போயிருப்பானுங்க” என்று கூறி சிரித்தான் பாண்டியன்…
“அடப்பாவி ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டியா!!” என்று விஷயம் தெரியாத மற்ற மூவரும் அவனை அதிர்ச்சியாக பார்த்தனர். அவன்என்றோ ஆரம்பித்ததை அறியாமல்..
அடுத்த இரு தினங்களில் ஊரே ஒரே அமைதியாகவே இருந்தது.. நாளை பிரசிடெண்ட் தேர்தலுக்கான முடிவு அறிவிக்கப்படும் என்று கூறி இருந்ததால்.
வீட்டுச் சிறையில் இருந்தான் சங்கர் உயிருக்கு பயந்து. அவன் எண்ணப்படி கண்டிப்பாக தான் ஜெயித்து விடுவோம் என்ற நம்பிக்கை இருந்தாலும் கூடவே இந்த கண் தெரியாத எதிரி யாராக இருக்கும்? எதற்காக பிரசிடெண்ட் பதவியில் இருக்கிறவங்களை போட்டுத்தள்ள பார்க்கிறான்? என்று இன்னமும் புரியாமல் அவன் சிற்றறிவுக்கு எட்டாமல் குழம்பி நின்றான்.
அதனால் வெளியில் எங்கும் செல்லாமல் இரண்டு நாட்களாக வீட்டுக்குள்ளேயே தஞ்சம் அவன்.
மூன்றாம் நாள் அவ்வூர் தாலுகா ஆஃபீஸில் ஓட்டுகள் எண்ணப்பட்டு பிரசிடன்ட் ஆக ராமதாஸ் அறிவிக்கப்பட.. வேட்டும் பட்டாசும் கும்மாளமாக இளைஞர்கள் கூத்தாட.. மாலை மரியாதை வாழ்த்துக்கள் என பெரியவர்கள் அசத்த.. வெற்றி வாகை உடன் வீடு திரும்பினார் ராமதாஸ்.
ஒருவாரமாக பாண்டியனை கண்ணால் காண்பதே அரிதாக இருந்தது அன்னக்கிளிக்கு. ஒரு வாரம் இரவு பணி என்பதால் இவள் மாலை சென்று காலையில் வீடு திரும்ப, பகற்பொழுது தூங்கிய கழிக்க.. அதே போல் அவனும் பெரியப்பாவின் தேர்தல் விஷயத்தில் கொஞ்சம் பிஸியாகவே சுற்ற இருவரும் பார்த்துக் கொள்ள முடியாமல் போனது.
அன்று இரவு அவனை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று இல்லாத நோயாளியின் பெயரை சொல்லி, அவரை பார்த்து விட்டு வருவதாக அன்னையிடம் புளுகி, அவன் வீட்டை நோக்கி நடந்தாள் அன்னக்கிளி கையில் செல்லை எடுத்துக் கொண்டு..
அவன் வீடு இருக்கும் தெருவின் முக்கில் அவள் திரும்ப, அருகே ஒலித்த பேச்சுக் குரலைக் கேட்டவுடன் அவளுக்கு திக்கென்றது. அது ஒரு இடிந்த வீட்டில் சந்து போன்ற அமைப்பு. அங்கிருந்து அம்பையின் குரல் கேட்க, அவள் இங்கு யாரிடமோ மாட்டிக்கொண்டாளோ என்று பெண்ணாக பதறி, அவள் தன் கையில் உள்ள செல்லை வைத்து டார்ச் அடித்து அங்கே செல்ல அவள் கண்ட காட்சி அவளை உறைய வைத்தது..
அன்னக்கிளி என் கற்பனையில் எக்குத்தப்பாக அம்பை மாட்டி இருக்க.. அவளை யாரோ பிடித்து வைத்து தவறாக நடக்க முயல்வது போல அதீத கற்பனையில் அவள் செல்ல.. ஆனால் அங்கே சிறைபட்டு நின்றதோ சதீஷ் சிறைவைத்தவளோ அம்பை..
பாண்டியனை பார்த்துவிட்டு தான் சேகரித்த விஷயங்கள் அனைத்தையும் பற்றி இருவரும் சிறிது நேரம் உரையாடினார். பின் அவன் வீட்டுக்கு கிளம்பி செல்ல, அவன் பின்னே தொடர்ந்து வந்த அம்பை இந்த சந்து விளைவில் அவனை பிடித்து இழுத்து தன் கையிலேயே சிறை வைத்திருந்தாள்.
அவனோ அவளிடம் கெஞ்சி கொண்டிருந்தான். “இதெல்லாம் நல்லா இல்ல.. விட்டுடு யாராவது பார்த்தால் அசிங்கமாகிவிடும். அதுவும் நண்பன் ஓட தங்கச்சி நீ. வேணா சொன்னா கேளு” என்று அவன் மன்றாடி கொண்டிருக்க…
இவளோ அடாவடியாக “அதெல்லாம் முடியாதுடா கோடாலி மூக்கா.. ஒழுங்கா என பொண்ணு கேட்டு நீ வர.. இல்ல நானே உன் வீட்டுக்குள் வந்து குடித்தனம் நடத்த ஆரம்பிச்சுடுவேன்” என்று அவள் குண்டை தூக்கி போட…
“சொன்னா புரிஞ்சுக்கோடி.. ஏண்டி ஏண்டி புரிஞ்சுக்க மாட்டேங்கறே” என்று அவன் அலுத்துக் கொண்டான்..
“ஆமா கட்டுன மாதிரி வாடி போடி போட்டு பேசு. ஆனா மனசுக்குள்ள ஒண்ணும் இல்லன்னு சொல்லி கட்டிக்க மாட்டேன்னு சொல்லு”
“அன்னக்கிளிக்கு அவங்க அம்மா வீட்ல மாப்பிள்ளை பார்க்குறாங்க அது தெரியுமா உனக்கு?” என்று அவள் கேட்க..
“அதுக்கும் இதுக்கும் என்னடி சம்பந்தம்” என்று அவன் அலுத்துக் கொள்ள..
“என்ன சம்மதமா? உன்னால தான்! எல்லா பிரச்சினைக்கும் நீதான் நூலு”
“என்னது நானா?!”
“ஆமா.. நீ ஒழுங்கா எங்க வீட்டுக்கு வந்த பொண்ணு கேட்டு இருந்தா, உனக்கும் எனக்கும் கல்யாணம் முடிஞ்சு இருக்கும். என் கல்யாணத்தோடுதான் அண்ணனும் கல்யாணம் பண்ணிக்கிறதா வீட்ல பேசிட்டு இருக்காங்க. அப்பதான் எங்க அண்ணன் போய் அன்னக்கிளி வீட்டுல பொண்ணு கேட்க முடியும்” என்று அவள் விம் பார் போட்டு விளக்கி கூற…
ஒரு பெரு மூச்சை இழுத்து விட்டவன் பின் அவளைப் பார்த்து.. “அம்மு இப்ப இருக்கிற நிலைமையில் நான் கல்யாணம் இதெல்லாம் பண்ண முடியாது. கொஞ்சம் பிரச்சன ஓடிட்டு இருக்கு. அதெல்லாம் முடியட்டும். நான் என்ன நினைக்கிறேன்னா நம்ம விஷயம் உங்க அண்ணனுக்கு தெரிஞ்சு இருக்கும்னு.. சரிதானே?” என்று அவன் கேட்க..
அம்பையும் ஆமாம் என்று தலையசைத்தாள்.
“அப்புறம் ஏன்டி என்னைய புடிச்சுட்டு தொங்குற? எப்போ விஷயம் அவனுக்கு போயிடுச்சோ, இனி கண்டிப்பா அவனே நம்ம கல்யாணத்தை முடித்து வைப்பான். சும்மா என் பின்னாடி வந்து தொந்தரவு பண்ணாம வீட்டுக்கு போய் நிம்மதியா தூங்கு” என்றான்.
“இதுக்கு என்ன அர்த்தம்? நீ விரும்புறனு எடுத்துக் கொள்வதா? இல்லையா?” என்று கண்களில் காதலை தேக்கி அவள் கேட்க..
பார்த்தவுடனே அவள் மீது காதல் வரவில்லை தான் அவனுக்கு. ஆனால் பார்க்க பார்க்க ஏதோ ஒரு ஈர்ப்பு அவளிடம். இப்போது கண்களில் காதலுடன் கேட்கும் அவளை மறுக்க அவனுக்கு மனம் வரவில்லை. அவளை இழுத்து அணைத்து மென்மையாக நெற்றியில் தன் முதல் முத்தத்தை பதித்தான் சதீஷ்..
நம்ப முடியா சந்தோச மகிழ்வுடன் அவனைப் பார்த்தாள் அம்பை. அவளின் வழக்கமான குறும்புடன் பின் தன் கன்னத்தை திருப்பி அவனிடம் காட்ட அவனோ வெட்கச்சிரிப்புடன் அங்கேயும் தன் இதழை பதித்தான். பின் மறு கன்னத்தை காட்ட அவனோ போடி முடியாது என்றான்.
“அடேய் ஏசுநாதர் என்ன சொல்லி இருக்காரு? ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டனும் சொல்லி இருக்காரா இல்லையா?”
இவள் கூற வரும் விளக்கத்தை கேட்க அவனுக்கு சிரிப்பு பொங்கியது. “அதுக்கும் இதுக்கும் என்னடி சம்பந்தம்?” என்று அவன் சிரிப்புடனே கேட்க…
“இது அம்பைநாதர் வாக்கு. ஒரு கன்னத்தில் முத்தம் கொடுத்தால் மறு கன்னத்திலேயும் கொடுக்கணும்” என்று கூறி அவள் கண்ணடிக்க..
அவளின் குறும்பில் மென்னகை புரிந்தவன் அவள் கேட்டதை கொடுக்கவும் தவறவில்லை..
இவர்கள் இங்கே காதல் செய்து கொண்டிருப்பதை பார்த்த அன்னக்கிளி, மனதிலிருந்து பயம் போக.. அதற்குமேல் தான் இங்கு அதிகப்படி என்று உணர்ந்து மெல்ல அவன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
“அண்ணனுக்கு ஏத்த தங்கச்சி… ரெண்டும் ரவுடி பீஸுங்க” என்று வாய் தன் போல சத்தமாக பேசிக் கொண்டு செல்ல..
“அப்போ நீங்க எல்லாம் எப்படி மேடம்? அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணையா?” என்று நக்கலாக கேட்டது ஒரு குரல்…
அவள் சட்டென்று திரும்பி பார்க்க, அங்கே அந்த உடைந்த வீட்டின் இன்னொரு பகுதியில் இருந்து வெளிவந்து சுவற்றில் சாய்ந்து தன் இரு கைகளையும் கட்டியவாறு நின்று கொண்டிருந்தான் அவளின் சமரன்… சமரவேல் பாண்டியன்..
வருவோம்ல…
