உயிரோடு கலந்து விட்டாய்
அத்தியாயம் 26
அவன்யா ராகவ்வுடன் வந்ததிலிருந்து ராஜேஸ்வரி பாட்டியின் விழிகள் கூர்மையாக கவனித்து வந்தது. இருவரும் நல்ல நண்பர்களாக மட்டுமே இருக்கிறார்களென தெரிந்து கொண்டவர், தானே முன்வந்து தனது வம்சம் தழைப்பதற்கான வழியை ஏற்படுத்தி கொடுக்க முடிவெடுத்தார்.
ராகவ்வின் விழிகள் அவன்யா அறியாமல் அவளைக் காணும் போதெல்லாம் காதலுடனும் ஏக்கத்துடனும் தழுவிச் செல்வதை கண்டு கொண்டார் ராஜேஸ்வரி பாட்டி. அவன்யாவும் அதே போல் நடந்து கொள்வதை அறிந்து,
“ஆக… ரெண்டும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிட்டிருக்கு. ம்ம்ம்.. இப்பவே அந்த ஆட்டத்துக்கு ஒரு முடிவு கட்டுறேன்.” என நினைத்துக் கொண்டு இவ்வேற்பாட்டை செய்து கொண்டிருந்தார்.
“அதெல்லாம் ஒன்னுமில்ல பாட்டி..” என கம்மியக் குரலில் அவன்யா தலையைக் குனிந்தபடி கூறவும், அவளது தலையை ஆதூரத்துடன் தடவியபடி, “நான் என்ன செஞ்சாலும் அது உங்க ரெண்டு பேரோட நல்லதுக்கு தான். சீக்கிரமே பேரனோ, பேத்தியோ பெத்துக் கொடுக்க வழியப் பாருங்க.” எனக் கூறிவிட்டு,
“அப்டியே ராகவ்வுக்கு கால் பண்ணி வீட்டுக்கு சீக்கிரம் வர சொல்லு. ஏன்னா.. அவன் தான் கோர்த்த தாலிய உன் கழுத்துல போடணும்.” என பாட்டி கூறியதும், விழிகள் பளிச்சிட,
“அ..ஆ.. சொல்ல மறந்துட்டேன் பாட்டி. அவருக்கு முக்கியமான மீட்டிங் இருக்காம் பாட்டி. சென்னை போயிருக்கார். வர லேட் நைட்டாகும்ன்னு சொல்லிட்டு தான் போனார்… அதுனால இன்னொரு நாள் இதெல்லாம் வச்சுக்கலாமே…” என கெஞ்சாதக் குறையாக தொங்கிக் கொண்டிருந்தவளின் தலையில் மண்ணள்ளிப் போடுவது போல, ராகவ் வீட்டினுள் புன்சிரிப்புடன் நுழைந்தான்.
“ஹாய் பாட்டி.. டைம்க்கு வந்துட்டேனா? ஒன்னும் லேட்டாகலயே.” என உற்சாகத்துடன் அவன் கூறுவதைக் கேட்ட அவன்யாவிற்கு தலையே சுற்றியது. ‘நடிக்கணும்ன்னு சொல்லிட்டு இப்போ இவர்பாட்டுக்கு வந்து நிக்கிறாரு. அப்போ அவருக்கு என்ன கல்யாணம் பண்றதுல எந்தப் பிரச்சனையும் இல்லையா?!’ என உள்ளுக்குள் நினைத்து தவித்தபடி தெளிவான பதிலுக்காக ராகவ்வின் முகத்தைப் பார்த்தாள் அவன்யா.
“வாடாப்பா.. இப்ப தான் உனக்கு போன் பண்ணலாமான்னு கேட்டுட்ருந்தேன். சரி.. சரி.. போங்க.. போங்க.. சீக்கிரம் டிரஸ்ஸ மாத்திட்டு வாங்க.” என இருவரையும் விரட்டினார் ராஜேஸ்வரி பாட்டி.
என்ன தான் அவன்யாவின் சமையலில் மயங்கியிருந்தாலும் தன் மகள் வாழ வேண்டிய இடத்தில் இவள் வந்து விட்டாளே என்ற புகைச்சல் சாவித்திரியின் உள்ளே இருக்கத் தான் செய்தது. ஆனால் பகலவராஜனின் நேர்குணத்திற்கு பயந்து அமைதியாகவும் உள்ளுக்குள் பொருமிக் கொண்டும் வலம் வந்து கொண்டிருந்தவரின் கண்கள் வாசலில் கார் வந்து நிற்பதைக் கண்டதும் யாரேன உன்னிப்பாக கவனித்தது.
காரிலிருந்து இறங்கி வந்தவர்களைப் பார்த்ததும் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று விட்டார் சாவித்திரி. “மம்மி..” என புள்ளிமான்களாய் ஓடிவந்த தன் பிள்ளைகளை தாய்மைப் பொங்க அழைத்தார்.
“டேய் ராணி.. மாதவி… வாடா.. வாடா.. என்னடியம்மா சொல்லாம கொல்லாம வந்துட்டீங்க. ஒரு ஃபோன் பண்ணிருந்தா நானே வந்துருப்பேன்ல.” என அன்புடன் உபசரித்தவாறு தன் மகள்களை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டார்.
தன் பேத்திகளைக் கண்டதும், “அடடடே.. என் பன்னீர் ரோஸ்ஸஸ்க்கு இப்போ தான் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதாக்கும். எப்டி இருக்கீங்க ரெண்டு பேரும்??” என உபசரித்தபடி பாட்டியும் அவர்களைக் கொஞ்ச,
அவ்விருவரின் இதழ்கள் அவரவர்க்கு தகுந்த பதிலை அளித்தாலும் விழிகளால் யாரையோ தேடிக் கொண்டிருந்தனர். “பாட்டி.. எங்க பாட்டி உங்களோட புது பேத்தி? நியூஸ் கேட்டதும் உடனே வரலாம்ன்னு தான் பாத்தோம். ஆனா ஃபைனல் எக்ஸாம் ஓடிட்டிருந்துது. அதான் வர முடியல.” என வினயமாக வினவியவளை சற்றுக் கூர்மையுடன் பார்த்து,
“ஆக, எங்க எல்லாரையும் பாக்க வரல. அவள வேவுப் பாக்க தான் வந்துருக்கீங்க.” என ராஜேஸ்வரி பாட்டி கேட்கவும், சட்டென தங்களது முகபாவனைகளை மாற்றிக் கொண்டு,
“என்ன பாட்டி இப்டி சொல்லிட்டீங்க..?! நீங்களும் முக்கியம் தான்.” என தங்களது பாட்டியின் கழுத்தைப் பிடித்துத் தொங்கியவர்களை, “அடியேய்.. அடியேய்.. அய்யய்யோ.. என் கழுத்த ஒடிச்சிராதீங்கடி.” என கத்தியபடி அவ்விருவரின் கைகளை செல்லமாக அடித்து கைகளை எடுத்து விட்டார் பாட்டி.
“ஆமா பாட்டி.. இன்னிக்கு எதுவும் ஃபங்க்ஷனா பாட்டி? ரொம்ப கிராண்டா இருக்கே. எல்லா சொந்தக்காரங்களும் வந்துருக்காங்க. என்ன பாட்டி விஷேசம்?” என தன் விரிந்தக் கூந்தலை காதோரம் எடுத்து விட்டவாறு மாதவி கேட்க,
“இன்னிக்கு ராகவ்வோட பொண்டாட்டிக்கு தாலி பிரிச்சு கோர்க்குற ஃபங்க்ஷன் நடக்க போகுது. அதான் கிரான்டா ரெடி பண்ணிருக்கேன். நீங்களும் போய் ரெடியாகிட்டு வாங்க.” என அன்புடன் கூறியவரை முறைத்து பார்த்தபடி,
“எங்கிருந்தோ வந்தவளுக்கு இவ்ளோ கிரான்ட் தேவையில்லயே பாட்டி.” என எரிச்சலுடன் ராணி கூறவும், “நல்லா சொல்லும்மா. நானும் சொல்லி சொல்லி அலுத்துட்டேன். உங்கப் பேச்சாவது காதுல நல்லா விழட்டும்.” என தனது பொருமலை வெளிப்படுத்தினார் சாவித்திரி.
“ஆரம்பிச்சுட்டீங்களா?! நல்ல நாள்ல சொந்தக்காரங்கள்லாம் வந்துருக்காங்க. உங்க சண்டைய பாக்க எனக்கு நேரமில்ல. எனக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு. நான் போறேன்.” என உள்ளே சென்று விட்டார் ராஜேஸ்வரி பாட்டி.
“என்னம்மா நடக்குது இங்க? ரகு மாமாவ ஆளையே காணோம். ராகவ் மாமா என்னன்னா எவளையோ கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டாரு. அப்போ எங்களோட நிலைமை?” என கண்ணைக் கசக்கிய பிள்ளைகளை சமாதானப்படுத்தினார் சாவித்திரி.
“இங்கப் பாருங்கடி.. அந்த அவன்யாவ எப்டியாவது கரெக்ட்டான பாய்ண்ட்ட பிடிச்சு வீட்டை விட்டு துரத்திட்டீங்கன்னா உங்க ரெண்டு பேரையும் கூட ராகவ் மாமாக்கு கட்டி வைக்கிறேன். அதுக்கென்ன இப்போ குறை வந்துச்சு. ஆனா கரெக்ட்டான பாய்ன்ட் வேணும். யோசிங்க..” என தன் பிள்ளைகளை சமாதானப்படுத்துவது போல தூபம் போட்டார் சாவித்திரி.
மேற்கொண்டு பேசிக் கொண்டிராமல் அவரவர் அறைக்கு சென்று உடை மாற்றி தயாரான போது மாதவிக்கு அவளது தோழி ஒருத்தி வீடியோ கால் செய்தாள். தன் அலங்காரங்கள் சரியாக உள்ளதா எனப் பார்த்து விட்டு, வீடியோ கால்லை ஆன் செய்தவள் கலகலப்புடன் பேசிக் கொண்டிருந்தாள்.
கையில் கேமிரா ஸ்டிக்குடன் பேசிக் கொண்டிருந்தவளோ தன்னை சுற்றி உள்ள பொருட்களை பஜாரில் நின்று கொண்டு காண்பித்துக் கொண்டிருந்தாள் மாதவிக்கு. கேமிரா ஃபோனை ஓரிடத்தில் வைத்து விட்டு கண்ணாடி முன் அமர்ந்து மேக்கப் செய்தபடி அலட்சியமாக பேசிக் கொண்டு இருந்தாள்.
எப்போதும் அணிகலன்களில் ஆர்வம் கொள்பவளின் மனம் முழுவதும் அவன்யாவை விரட்டுவதில் இருந்தக் காரணத்தால் சரியாக எதையும் கவனியாமல் அவளுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ராணியின் கண்களில் அந்த வீடியோ காலில் மாதவியின் தோழிக்கு பின் சென்று கொண்டிருந்த ஒரு ஜோடி விழுந்ததும் அதிர்ச்சியில் உறைந்தாள்.
வேகமாக ஓடிவந்து கேமிரா ஃபோனைத் தூக்கிப் பிடித்து, “அப்டியே கொஞ்சம் ஸ்டெடியா நில்லு.” என ராணி கூறியதும் மாதவியின் தோழி அசையாமல் நின்றாள். அவளுக்கு பின் ரகுநந்தன் துர்காவுடன் கையில் ஊன்றுகோலுடன் நடந்து செல்வதைக் கண்டவள் அப்படியே அதை ‘ஸ்க்ரீன் ஷாட்’ எடுத்தாள்.
அதன்பின் அத்தோழியிடம் கூறி ரகுநந்தனை அடையாளம் காட்டி அங்கு எதற்காக வந்திருக்கிறான் என்ற செய்தியை மட்டும் அறிந்து சொல்லுமாறு வேண்டிக் கொண்டாள் ராணி. துர்காவை வெகு அருகில் ஃபோட்டோ எடுத்து தனக்கு அனுப்பச் சொல்லி வீடியோ கால்லை துண்டித்தாள்.
‘ரகு அத்தான்னால நடக்க முடியுதா?! அதெப்டி சாத்தியம்? கூட வந்தவ யாரு..? நர்ஸ்ஸா இருக்குமோ?! ஆனா பாத்தா அப்டி தெரியலியே..’ என பலவிதமான கேள்விக்கணைகள் எழுந்து ராணியின் மனதைக் குடைந்து கொண்டிருக்க,
“என்னாச்சுக்கா.. ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்க?” என நிதானமாக வந்து மாதவி கேட்க, ஏதோ யோசனையில் இருந்த ராணி, “ஒன்னுமில்ல மது. வா.. போய் அவள கவனிப்போம்.” என மாதவியை அழைத்துக் கொண்டு அவன்யாவைத் தேடிச் சென்றாள் ராணி.
“சார்.. நீங்க எல்லாம் தெரிஞ்சு தான் பண்றீங்களா?” என குழப்பத்துடன் அவன்யா கேட்க, கண்ணாடியில் தனது சிகையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தவனின் இதழில் அழகான புன்னகை தவழ்ந்தது.
“தெரியுமே..” என நகைப்புடன் கூறிவிட்டு அவளிடம் திரும்பியவன், “தெரியாமயா ரெடி ஆகிட்டிருக்கேன்.?!” என கிண்டலாகக் கூறிவிட்டு மீண்டும் கண்ணாடியின் பக்கம் திரும்பி விட்டான் ராகவ்.
“சார்.. நாம மூணு மாசம் அக்ரிமென்ட் மேரேஜ் தானே சார் போட்ருக்கோம். எதுக்கு இந்த ஃபார்மாலிட்டீஸ்.. அதோட உங்க சொந்தக்காரங்க அத்தனை பேரும் வந்துருக்காங்க. எங்க நாம மாட்டிக்குவோமோன்னு எனக்கு பயம்மா இருக்கு.” என தன் கையைப் பிசைந்தவாறு அவன்யா கூறவும் தன் தலைமுடியை சரிசெய்து கொண்டிருந்த ராகவ்வின் கைவிரல்கள் அப்படியே நின்றது.
பின் மெல்லத் திரும்பி, “அக்ரிமென்டா… அப்டின்னா..” என ஒன்றும் புரியாமல் கேட்டதும் அவன்யாவின் உள்ளமோ பதறி விட்டது. ‘ஆத்தடி.. அக்ரிமென்ட்ன்னா இன்னாவா?! யோவ்.. என்னய்யா நெனச்சுட்டிருக்க..?!’ என பயத்தில் கைகளை உதறியவள்,
“சார் விளையாடாதீங்க.. அக்ரிமென்ட்ல ரெண்டு பேருமே சைன் பண்ணிருக்கோம்.” எனக் கூறியதும், “ஓ… யெஸ்.. யெஸ்.. யெஸ்.. அக்ரிமென்ட் இருக்குல்ல.. அதுக்கென்ன இப்போ..?” என கைகளை மார்பின் குறுக்கே கட்டியவாறு ராகவ் கேட்கவும்,
“சார்.. விளையாடாதீங்க.. எல்லாருக்கும் தெரியிற மாதிரி நீங்க மறுபடியும் எனக்கு தாலி கட்டுவீங்களாம்.. அதோட..” என மேற்கொண்டு கூற முடியாமல் திணறியபடி கன்னம் சிவந்தவளை,
“அதோட.. என்ன சொல்ல வந்த..??” என பதிலை அறிந்து கொண்டே சீண்டினான் ராகவ். “நமக்கு சாந்திமுகூர்த்தமாம். பாட்டி சொன்னாங்க.” என தலையைக் குனிந்தபடியே அவன்யா கூறவும் குறுஞ்சிரிப்பொன்றை உதிர்த்தவாறு அவளினருகில் நெருங்கி வந்து நின்றான் ராகவ்.
முன்னெடுத்து வைத்த அவனது ஒவ்வொரு காலடிக்கும், அவன்யாவின் இதயம் வெளியே எகிறிக் குதிக்காதக் குறையாக துடிக்கத் தொடங்கியது. அவளது இருக் தோள்களின் பக்கத்திலும் தன் கைகளைப் போட்டு நெருங்கியபோது அசையாமல் நின்றவளை,
“இதப்பாரு அவன்யா. இது வெறும் அக்ரிமென்ட் மேரேஜ்ன்னா நானே ஃபர்ஸ்ட் இத அலோ பண்ணிருக்க மாட்டேன். எனக்கு பிடிக்காத எதுவும் இங்க நடக்காது. அதே மாதிரி உனக்கு பிடிக்காத எதுவும் நடத்த விட மாட்டேன். சொல்லு.. இந்த ஃபங்க்ஷன் வேணாமா?” என மிருதுவான குரலில் மாயக்கண்ணனின் ரூபமெடுத்து கொஞ்சியவனை ஏறெடுத்து பார்த்தவளின் இதழ்கள் அவளறியாமல் சம்மதத்தைத் தெரிவித்தவாறு, “எனக்கு..எனக்கு..” எனத் தந்தியடித்தபடி திக்கித் திணறிக் கொண்டிருந்தவளின் நெற்றியில் செல்லமாக முட்டியவாறு,
“உனக்கும் ஓகே தானே?” எனக் குழைவான குரலில் கேட்கவும், “ஆனா சார்… நான் கேர் ஆஃப் ப்ளாட்ஃபார்ம். உங்க ஸ்டேட்டஸ்க்கு..” என ஆரம்பித்தவளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவளது பூவிதழை அழுத்தமாகவும் மென்மையாகவும் ஒற்றியெடுத்தான்.
அதன் மோக மயக்கத்தில் ஒருகணம் இன்பமாய் அதிர்ந்தவள், விழியுயர்த்தி பார்த்தபோது என்றுமில்லாத காதல் பொங்கி வழிவதைக் கண்டவன் சின்ன சிரிப்புடன், “என்னயவா பொங்கச்சோறுன்னு சொல்ற..?! நீ வா.. இன்னிக்கு நைட் பொங்க வைக்கிறேன்.” என கிண்டலாகக் கூறியதும் சட்டென விழிகளை உயர்த்தி,
‘ஆத்தாடி.. பின்லாடனுக்கு கேட்டுருச்சுடி. இனிமே மைன்ட்வாய்ஸ்ஸ மட்டும் தான் மெயின்டெய்ன் பண்ணணும் போல.’ என திருதிருவென விழித்தபடி அசடுவழிந்தாள் அவன்யா.
ஆனால் இருவருமே அப்போதே மனம் விட்டு பேசியிருக்கலாமென எண்ணி மருகுமளவிற்கு பேரிடி ஒன்று அவ்விருவருக்கும் காத்திருந்ததை.. பாவம் அவர்கள் அறிந்திருக்கவில்லை.
