உயிரோடு கலந்து விட்டாய்
அத்தியாயம் 16
“சார்.. எல்லா கொட்டேஷனும் ரெடி பண்ணிட்டேன். நீங்க ஒரு தடவப் பாத்துட்டீங்கன்னா மெயில் பண்ணிடலாம்..” என தன் வேலையிலேயேக் குறியாக இருந்தபடி கூறியவளிடம், ‘எப்படி ஆரம்பிப்பது?’ என யோசித்தவாறே,
அவளிடம் லேப்டாப்பை வாங்கி பால்கனியில் இருந்த சோஃபாவில் அமர்ந்தான் ராகவ். அவனது முகத்தையே பார்த்திருந்தவளுக்கு, ‘என்னாச்சு.. ஏதோ ஃபோன் வந்துச்சு.. அதுக்கப்புறம் முகமே சரியில்லயே..’ என யோசித்தவள்,
மெல்ல அவனிடம், “என்னாச்சு சார்?! ஏதும் ப்ராப்ளமா?” என தணிந்தக் குரலில் கேட்கவும் புருவங்களை விரித்தபடி நிமிர்ந்தவன் தன் மொபைலில் அன்றைய ட்ரென்டிங் நியூஸ்ஸைப் போட்டு அவளின் கையில் கொடுத்து பார்க்க சொன்னான்.
அவனது மொபைலைக் கையில் வாங்கிப் பார்த்தவளுக்கு தலையே சுற்றியது. ‘அய்யய்யோ.. என்ற மானம் போச்சு.. மருவாத போச்சு..’ என ஏதோ துக்கம் நிகழ்ந்ததைப் போல தன்னுடைய துப்பட்டாவை வாயில் பொத்தியபடி அதிர்ச்சியில் வாயடைத்து நின்றிருந்தாள் அவன்யா.
“பாத்தியா?! எல்லாம் உன்னால வந்தது. நீ மட்டும் ஒழுங்கா இருந்துருந்தா இந்த மாதிரி நாம அசிங்கப்பட வேண்டிய அவசியமே இருந்துருக்காது..” என சுள்ளென எரிந்து விழுந்தவனைக் கண்டு பேந்த பேந்த விழித்தபடி நின்றாள்.
“எல்லாப் பக்கத்துலருந்தும் எனக்கு ஏகப்பட்ட ப்ரஷர்.. எங்கெங்கிருந்தோ கால்ஸ் வந்தமயமா இருக்கு. எல்லாத்தையும் இப்போதைக்கு ப்ளாக் பண்ணிருக்கேன். இந்த ரூமருக்கு உடனே நாம ஒரு முடிவு கட்டியாகணும். புரியுதா?” என படபடவென ராகவ் பேசிக் கொண்டிருக்கும் போது கதவு தட்டப்படும் ஓசைக் கேட்டது.
‘மீடியாவாக இருக்குமோ?!’ எனப் பயந்தவாறு கால்கள் பின்னடைந்து செல்ல, கதவைத் தட்டுவது யாரெனப் பார்க்கும் தைரியம் அவளுக்கு வரவில்லை. இதுவரை மானத்துடன் வாழ்ந்தக் காலங்கள் போக, தற்போது தன்னிலையை யோசித்து பார்த்தவளுக்கு இனி வாழப் போகும் காலங்கள் பெரும் சவாலாகத் தான் இருக்கப் போகிறது என திட்டவட்டமாகத் தெரிந்தது.
அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு நேராக சென்று கதவைத் திறந்து யாரென்று பார்த்தபோது இரவுநேர சாப்பாட்டைக் கொண்டு வந்து வைத்து விட்டு போவதற்காக பணியாளன் ஒருவன் நின்றிருந்தான்.
ஆனால் சாப்பாடு அனைத்தையும் வைத்து விட்டு நிமிர்ந்தபோது அவன்யாவை ஏளனமாக விலைமாதுவைப் பார்ப்பது போல ஒருப்பார்வை பார்த்தான். அப்பார்வையில் அதுவரை இருந்த தைரியமனைத்தும் தொலைந்து போய் கூனிக்குறுகிப் போய் அவன்யா நின்றதைக் கண்ட ராகவ்விற்கு சுள்ளென கோபம் வந்தது.
“அங்க என்ன வாயப் பாத்துட்டு நிக்கிற?! உன்னைக் கல்யாணம் பண்ணது இப்டி வாயப் பாத்துட்டு நிக்கதானா?! வந்து எல்லாத்தையும் எடுத்து வை..” எனக் கம்பீரமாக உத்தரவிட்ட ராகவ்வின் கூற்றைக் கேட்டதும் அப்பணியாளனின் பார்வை மரியாதைக் கலந்ததாய் மாறுவதை விந்தையிலும் விந்தையாய் பார்த்திருந்தாள் அவன்யா.
‘தன் மானத்தைக் காப்பதற்காக இப்படி ஒருப் பொய்யை சொல்லிக் காப்பாற்றுவது ஏனோ?!’ என்றக் குழப்பத்தில் ராகவ்வை அவன்யா பார்த்தபோது அவனும் அவளைப் பார்த்தான்.
மேற்கொண்டு அங்கே நிற்க சங்கடப்பட்ட பணியாளன் வேகமாக வெளியே சென்றதும் கதவடைத்தவன், “இதை தான் உனக்கு சொல்லணும்ன்னு நெனச்சேன் அவன்யா. என்னோட இமேஜ் மட்டுமில்ல.. உன்னோட பாதுகாப்பும் இப்போ விமர்சனத்துக்குள்ளாகிருக்கு. எனக்கு அது சுத்தமா பிடிக்கல. சோ….” என வாக்கியத்தை முடிக்காமல் இழுத்தவனுக்கு, “சோ…” என அதிவேகமாக எடுத்துக் கொடுத்தாள் அவள்.
“உன் சேஃப்டிக்காகவும் சேர்த்து தான் சொல்றேன் அவன்யா.. நீ கொஞ்சம் நல்லா யோசிச்சு பாத்துட்டு சொல்லு..” எனத் தயங்கித் தயங்கி கூறியவனை புதிதாகப் பார்த்தாள் அவன்யா.
‘என்னாச்சு.. ஓவரால்ல ஆடுறாரு.. மேட்டரென்னன்னு மட்டும் சொல்ல மாட்றாரே.. ஒருவேள மேரேஜ் பத்தி சொல்ல வர்றாரா?’ என தனக்குள் சிறகடிக்கத் தொடங்கியத் தன் மனதைக் கட்டுக்குள் கொண்டு வந்து அடைத்தபடி,
‘அதுக்குன்னு நீயும் ரொம்ப ஓவரா இமேஜின் பண்ணாத. உன்னை மாதிரி ப்ளாட்ஃபார்ம எல்லாம் கல்யாணம் பண்ணிக்க அவருக்கென்ன பைத்தியமா?’ என தலையில் ‘நங்கு..நங்கு’ என கொட்டு வைப்பது போல ஒரு மனம் எடுத்துரைக்க,
‘அப்போ உன்கிட்ட வந்து சில்மிஷம்லாம் பண்ணுனானே.. அதுக்கென்ன சொல்ற?’ என இன்னொரு மனம் மறுகேள்வி கேட்டது.
‘அட மக்கே…!!! துர்கா-ரகுவப் பத்தி உன் வாயாலயே ஸ்டேட்மென்ட் வாங்குறதுக்கான சதியாக் கூட இருக்கலாமில்லையா?!’ என மீண்டும் விளக்கவுரை அளித்ததும் ‘இதுவும் சரி தான்’ என ஒப்புக் கொண்டவள், ராகவ் என்ன தான் சொல்ல வருகிறானென மீண்டும் கவனிக்கலானாள்.
‘எங்கே உண்மைத் திருமணமென்று சொன்னால், வேண்டாமென மறுத்து விடுவாளோ?!’ என்ற அச்சத்தில் “வேற வழியில்ல அவன்யா. நம்ம கல்யாணம் பண்ணுன மாதிரி நடிக்குறது தான் ஒரே வழி..” என ராகவ் கூறியதும்,
“என்னது…?!” என தன் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டது போல பேரதிர்ச்சி அடைந்தாள் அவன்யா. அவளைப் பொறுத்தவரை தற்போது ராகவ் கூறுவது ஒன்றும் சாதாரண விஷயம் அல்லவே..
தன்னை சமன்படுத்திக் கொள்ள பலநொடிகள் எடுத்துக் கொண்டாள் நெஞ்சைப் பிடித்தபடி. ‘அடப்பாவி… கொஞ்ச நேரத்துல நான் என்னென்னெல்லாம் கனா கண்டுட்டேன்.. பொசுக்குன்னு கல்யாணம் பண்ண மாதிரி நடிக்க சொல்லிட்டானே.. அப்ப அவர் நம்மக்கிட்ட ‘ப்ளேபாய்’ வேலையத் தான் காட்டிருக்காரு… ச்சே..’ என மனதினுள் குமுறியவாறு கைவிரல்களைப் பிசைந்தபடி நின்றிருந்தவளிடம்,
“என்ன அவன்யா.. நான் பாட்டுக்கு பேசிட்டிருக்கேன்.. நீ பதிலே சொல்லாம இருக்க.. உனக்கு ஓகே தானே?” என இயல்பாகக் கேட்டவனிடம், பட்டென “இல்ல சார்.. எனக்கு இதுல கொஞ்சமும் விருப்பமில்ல. என்னை விட்டிருங்க.. நான் பாட்டுக்கு போயிடுறேன்..” என அழாதக் குறையாக கூறியவளை ஒருநிமிடம் கூர்ந்து பார்த்து விட்டு,
‘லூசு.. லூசு.. இவள இப்டியே போக விட்டாலும் இவளக் கண்டிப்பா கொன்னுடுவாங்கன்னு எப்டி இவக்கிட்ட சொல்லிப் புரிய வைப்பேன்?! ம்ஹூம்.. இவக்கிட்ட நம்ம ரூட்டு தான் சரி..’ என மனதைக் கடினமாக்கியபடி தீர்மானித்து,
“அப்ப சரி.. உத்தரகாண்ட்ல இருக்குற உன் ஃப்ரண்டையும் சேர்த்து போட்டுத் தள்ள சொல்லிட வேண்டியது தான்.” என சாவதானமாக சாப்பிட அமர்ந்தான் ராகவ்.
‘ஆத்தி.. துர்கா உத்தரகாண்ட்ல தான் இருக்கான்னு இவனுக்கெப்டி தெரியும்?! அச்சச்சோ.. அங்கப் போய் அவளக் கொன்னுடுவாங்களா?! இல்ல.. இல்ல.. இதுக்கு தான் விட மாட்டேன்..’ என அவன்யாவினீ உள்ளம் பதற,
“என்னது.. நோ.. நோ.. நோ.. சார்.. அப்டி ஏதும் பண்ணிடாதீங்க.. என்னை என்ன வேணுன்னாலும் பண்ணுங்க.. அவ நல்லபடியா வாழட்டும் சார். ப்ளீஸ் சார்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ் சார்..” என விரல்களை ஒன்றாகக் கோர்த்து பின்னியவாறு கெஞ்சியவளிடம்,
“அப்ப நான் சொன்ன டீலுக்கு ஒத்துக்கோ.. சாய்ஸ் இஸ் யுவர்ஸ்..” எனக் கூறிவிட்டு தன் வேலை முடிந்ததென சாப்பிடத் தொடங்கினான். ஊசிமுனையில் நிற்பது போல நெளிந்தவாறு வேண்டா வெறுப்பாகத் தலையசைத்தபடி, “ஓகே சார்..” எனக் கூறியவளை உள்ளம் மெச்சும் பார்வையுடன் நோக்கி,
“குட்.. ஒரு த்ரீ மன்த் அக்ரிமென்ட் போட்டுக்கலாம். இந்த சலசலப்பெல்லாம் கொஞ்சம் அடங்குனதும் நீ உன் வழியப் பாத்து போய்க்கிட்டே இருக்கலாம். டீல் ஓகேவா?” என ஏதோ ஒரு பிஸ்னஸ் டீலை வெற்றிகரமாக முடித்து விட்டதைப் போல புன்னகையுடன் கூறியபடி சாப்பிட அமருமாறு சைகை செய்தவனை,
‘முடியாது போடான்னு சொன்னா அப்டியே மண்டைய கிண்டைய ஆட்டிரப் போற பாரு.. ரணதேவ் பில்லாக் குரங்கு.. அடியே அவுலு.. ஒருதலைக்காதல்… எந்த வகையினில் பாவம்ன்னு தேவதாசா கடைசி வரைக்கும் நீ அலையணும்ன்றது தான் விதின்னா யாரால மாத்த முடியும்..?! ஹூம்..’ எனப் பொருமியபடி பெருமூச்சொன்றை வெளியிட்டவள்,
ராகவ் எனும் ஜீவன் அங்கு சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கூட கண்டு கொள்ளாமல் மடமடவென இரவுநேர சாப்பாட்டை உண்ண ஆரம்பித்து ஜெட் வேகத்தில் அனைத்தையும் காலி செய்து பெரிதாக ஏப்பமிட்டாள் அவன்யா.
அவள் சாப்பிட ஆரம்பித்ததும் இயல்பாக இருந்த ராகவ்வின் முகம், சாப்பாட்டை மொத்தமாக உண்ணுவதைக் காணக் காண, ‘ம்ம்ம்.. ஃபர்ஸ்ட் சாப்பிடுறதுல கன்ட்ரோல் பண்ண சொல்லிக் கொடுக்கணும். இல்லைன்னா என் மானத்த வாங்கிடுவா..’ என சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, உள்ளூர சலித்தபடி அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
சாப்பிட்டு முடித்ததுமே சற்றுக் காற்றாட நடக்க வேண்டுமென ராகவ்விடம் கூறிவிட்டு, நைசாக மெல்லப் பால்கனிக்கு நழுவி வந்து துர்காவிடம் அவளது ஒப்பந்தத் திருமணம் பற்றி கருத்து கேட்க விரும்பினாள் அவன்யா.
நல்லவேளையாக அழைப்பு சென்றதும், எதிர்முனையில், “ஹலோ.. அவன்யா..” என சந்தோஷமாக துர்கா பேசுவது கேட்டு சற்று ஆசுவாசமானவள், தன்னிலையைப் பற்றிக் கூறுவதற்காக வாயைத் திறந்தபோது, அவளினருகில் ராகவ் வந்து நிற்பதைக் கண்டவளுக்கு மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது.
“ஹலோ.. சொல்லுடி.. எப்டி இருக்க?” என்று மட்டும் கேட்டவளிடம், “நான் ரொம்ப நல்லாருக்கேன் அவி.. அவருக்கு ட்ரீட்மென்ட் போயிட்டிருக்கு.. ஃபுல்லா க்யூர் ஆக மூணு மாசம் ஆகுமாம். அதுவரைக்கும் நீயும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருடி.. எங்கப்பாவ அவ்ளோ ஈஸியா நம்பிடாத. அவர் அரசியல்வாதின்றத நிரூபிச்சு பழிவாங்க நினைப்பாரு.. நீ சேஃப்பா தானே இருக்க? அ.. ஹலோ.. ஹலோ.. பேசுடி.. எனக்கு பயம்மாருக்கு.. ஹலோ..” என துர்கா அடுக்கிக் கொண்டே போக,
சொல்ல வந்த விஷயத்தை மிகவும் சிரமத்துடன் மென்று முழுங்கியவாறே, “நான் சேஃப்பா தான் இருக்கேன். நீயும் பாத்து பத்திரமா இரு..” எனக் கூறிவிட்டு சலிப்புடன் அழைப்பைத் துண்டித்தாள் அவன்யா.
‘அவ வேலைல மட்டும் கவனமா இருக்காய்யா.. நம்மள பேச விடாம இங்கிட்டு இவன் படுத்துறான்னா, அங்கிட்டு அவ அதுக்கு மேல டாப்கீர் போட்டு ஓடுறா.. இவுங்களுக்கு நடுவுல நாம தான் சிக்கி சீரழிய வேண்டியிருக்கு..’ என புலம்பியபடி எழுந்தவளின் கைப்பிடித்து அமர வைத்தவன்,
“நான் சொல்றதக் கொஞ்சம் பொறுமையா கேளு.. நாளைக்கு காலைல நமக்கு மேரேஜ். சிம்பிளா ரிஜிஸ்டர் ஆபிஸ்லயே பண்ணிக்கலாம். அப்ப தான் நம்புவாங்க.. அப்புறம் முக்கியமான விஷயம்… நமக்குள்ள அக்ரிமென்ட் போட்டுக்குறது வீட்ல தெரியக்கூடாது. தெரிஞ்சா உனக்கும் உன் ஃப்ரண்ட்டுக்கும் தான் ஆபத்து. பாத்துக்க..” என முதலில் சாதாரணமாகக் கூறிவிட்டு இறுதியில் குரலை கடினமாக்கி எச்சரித்தவனை திகிலுடன் பார்த்தாள் அவன்யா.
‘ஒரே ஒரு ஃப்ரண்ட்ஷிப்னால என் டோட்டல் லைஃப்பும் காலியாகப் போகுது.. அடியே துர்கா.. நீ மட்டும் நேர்ல வந்தன்னு வையி.. மவளே..’ என தன் தோழி துர்காவை வசைபாடியவாறு மெல்ல எழுந்து சென்று தலையனையைக் கையிலெடுத்தவளைப் பார்த்து,
“நோ அவன்யா.. என்கூட மெத்தைல படு.. அப்ப தான் இதுக்கப்புறமும் நம்ம வீட்ல பழக்கமாகும். கண்டிப்பா என் விரல்நகம் கூட உன்மேலப் படாது. ஐ ப்ராமிஸ்.. வந்து படு.. காலைல சீக்கிரம் எந்திரிக்கணும்..” எனக் கூறிவிட்டு மேகஸின் ஓன்றை எடுத்துப் புரட்டியவாறு படுக்கையில் அமர்ந்து சாய்ந்து கொண்டான் ராகவ்..
‘என்னது.. ஒன்னா படுக்கணுமா?!’ என திகைத்தவள் அவனது நலன் எண்ணி, “சார்.. வேணாம் சார். தூக்கத்துல கால் கை பட்டுச்சுன்னா உங்களுக்கு தான் சங்கடம்.. நான் சோஃபால படுத்துக்குறேன்.” என ஒருமுறைக்கு பலமுறை சொல்லிப் பார்த்தாள் அவன்யா.
ஆனால் ராகவ் பிடிவாதமாய் இருக்க, ‘ஹூம்.. யார் பெத்த பிள்ளையோ.. நம்மக்கிட்ட கைமா ஆகுறதுக்குன்னே பக்கத்துல வந்து படுக்குது.. நாளைக்கு உயிரோட எந்திரிப்பானா மாட்டானான்னு அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்..’ எனக் கடவுளைக் கும்பிட்டு கன்னத்தில் ரெண்டு போட்டுவிட்டு அப்படியே போர்வையை தன்மீது மூடி படுத்து விட்டாள்.
