உயிரோடு கலந்து விட்டாய்
அத்தியாயம் 20
“வீட்டுக்கு வந்த மகராசிக்கு ஆரத்தி கரைக்காம என்ன வெட்டிப் பேச்சு வேண்டிக் கிடக்கு… பவானி….” என உரக்கக் கத்தியதும் வேலைக்கார பெண்ணொருத்தி விரைவாக ஆரத்தித் தட்டுடன் வந்தாள்.
“என்ன மசமசன்னு பாத்துட்டு நிக்கிற?! வந்தவங்களுக்கு ஆரத்தி எடு சாவித்திரி…” என உரத்தக் குரலில் கட்டளையிட்டவாறு கம்பீரமாக நடந்து வந்து நின்றார் ராஜேஸ்வரி பாட்டி.
“நானா…?” என ஆத்திரத்துடன் கத்திய சாவித்திரியை, “ச்சு.. பேசப்படாது. உன்னை சொல்லாம குட்டப்பாவாடை போட்டு இந்தா நிக்குதே.. இந்தப் பொண்ணையா எடுக்க சொல்றது?” என நேரடியாகவே மெர்லினைக் கைகாட்டி ராஜேஸ்வரி பாட்டி கூறியதும்,
‘இந்த கிழபோல்டுக்கு என்ன நக்கல் பாரேன்.. டிரஸ்ஸிங் சென்ஸ்ஸே இல்லாத இடியட்ஸ்..’ என மனதினுள் அவன்யாவையும் பாட்டியையும் கறுவியவாறு தனது உடையை லேசாக கீழே இழுத்து விட்டபடி உள்ளே சென்று விட்டாள் மெர்லின்.
“ஹும்.. கொண்டாடி..” என முணங்கிக் கொண்டே ஆரத்தி எடுத்தார் சாவித்திரி. திருஷ்டி பொட்டு வைக்கும்போது ராகவ்வின் மீது மென்மையாகவும் அவன்யா மீது ஒரு அழுத்தத்துடனும் வைத்து விட்டு பணிப்பெண்ணிடம் தட்டைக் கொடுத்து விட்டு,
“இந்தக் கண்ராவியெல்லாம் பாக்கணும்ன்னு என் தலைல எழுதியிருக்கு. உங்கப்பா வரட்டும். பேசிக்கிறேன்.. ஹீம்..” என முகத்தைத் தூக்கி வைத்தபடி சேலை முந்தானையை தூக்கி உதறியபடி உள்ளே சென்று விட்டார்.
சாவித்திரி உள்ளே செல்லும் வரை அமைதியாக நின்றவன், “பாட்டி…” என ராஜேஸ்வரியை மென்மையாக அணைத்தபடி சிரித்தான் ராகவ். “பொடிப்பயலே.. நான் கோடு தான் போட்டேன். நீ ரோடே போட்டு எல்லாரையும் ஆஃப் பண்ணிருவ போல..” என செல்லமாக ராகவ்வின் தோளைத் தட்டி தலைமுடியை வருடியவரிடமிருந்து திரும்பி கண்ணாலேயே அழைத்தான் ராகவ்.
அவன் அவ்வாறு அழைத்ததும் வேகமாக பாட்டியிடம் வந்து நின்றாள். அவளின் கைப்பிடித்து, “ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி..” எனக் கூறியபடி ராஜேஸ்வரியின் பாதம் பணிந்தனர் இருவரும்.
மனம் நிறைந்த பூரிப்புடன், “நல்லாருப்பீங்கப்பா.. எந்திரிங்க..” என ஆசிர்வாதம் செய்து அவர்களை எழுப்பினார். அவன்யாவின் மலர்முகத்தைத் தொட்டு தடவியபடி, “தேவதை மாதிரி எப்டிடா பிடிச்ச?! ஏம்பேரனுக்கேத்த ஜோடி தான்.” என கண்ணில் குறும்புடன் ராஜேஸ்வரி கூறியதும் சட்டென அவன்யாவின் முகம் செக்கச்சிவந்து போனது.
அவளது முகமாற்றத்தைக் கண்டதும், “பாரேன்டா.. ஒரே ஒருப் பொய் சொன்னதும் இவ முகம் எப்டி சிவந்துருச்சு..” என ராகவ்வைப் பார்த்து கண்ணடித்தபடி பாட்டி கூறியதும்,
‘ஆத்தடி… இது பயங்கரமான பார்ட்டியா இருக்கே.. இவனோட சேர்த்து இனிமே இன்னொரு இம்சையையும் சமாளிக்கணும்..’ என உள்ளுக்குள் நொந்தபடி பேந்த பேந்த அவன்யா விழிக்க,
அதைக் கண்ட இருவருக்கும் வாய் கொள்ளா சிரிப்பு வந்ததைக் கண்டு அவன்யாவின் முகம் கடுகடுவென மாறியது. ஆனாலும் இவ்வீட்டில் தனக்காக பரிந்து கொண்டு வந்த அம்மூதாட்டியை மிகவும் பிடித்து போனது அவன்யாவிற்கு.
“இப்போதா தெரியுது..” என பலத்த பீடிகையுடன் தனது தாடையில் விரல் வைத்து யோசித்தவாறு கூறியவளைப் புரியாது பார்த்தனர் இருவரும். “என்ன…” என ராகவ் முந்திக்கொண்டு கேட்க,
“ம்ம்ம்.. இந்த மாதிரி என்னை சீண்டி விளையாடுற குணம் உங்களுக்கு யார்க்கிட்டருந்து வந்துருக்குன்னு இப்போதா தெரியுது..” என சலித்து போய் சொல்ல, அதற்கும் சேர்த்து இருவரும் சிரிப்பதை கண்ணில் ரசனையுடன் பார்த்திருந்தாள் அவன்யா.
இவர்கள் இவ்வாறு சிரித்து பேசியபடியே வீட்டினுள் வந்து கொண்டிருப்பதைக் கண்ட மெர்லினுக்கு பிடிக்கவில்லை. ‘என் சந்தோஷத்துல மண்ணள்ளிப் போட்டுட்டு நீங்க மட்டும் சந்தோஷமா இருக்க முடியுமா?!’ என குரோதத்துடன் தன் மொபைலை எடுத்து யாருடனோ சில நிமிடங்கள் பேசிவிட்டு மொபைலைக் கீழே வைத்தபோது ஏளனச் சிரிப்பொன்றை உதிர்த்தாள்.
தனது பாட்டியுடன் பேசியபடி ஹாலில் வந்தமர்ந்து சில நிமிடங்கள் பொதுவாக பேசிக் கொண்டிருக்கும் போது, ராகவ்விற்கு தனது மொபைலிலிருந்து அழைப்பு வந்தது. அதையெடுத்து பேசியவனின் முகம் இறுகத் தொடங்கியதைக் கண்குளிரக் கண்டவாறு கால் மேல் கால் போட்டபடி பார்த்துக் கொண்டிருந்தாள் மெர்லின்.
“வாட்.. டேமேஜ் ஆகுற வரைக்கும் நீங்கள்லாம் அங்க என்னப் பண்ணிட்டிருந்தீங்க?! நான் உடனே அங்க வர்றேன்.” என அவதி அவதியாக எழுந்தபடிக் கூறியவன்,
“பாட்டி ஒரு எமர்ஜன்ஸி.. நான் உடனே போகணும். அவன்யாவ பாத்துக்கோங்க. எவ்ளோ சீக்கிரம் வர முடியுதோ அவ்ளோ சீக்கிரம் நான் வர்றேன்.” எனக் கூறியபடி அவன்யாவைப் பார்த்தவன் சிறு தலையசைப்புடன் வேகமாக வெளியே சென்று விட்டான்.
‘நான் இருக்குற வரைக்கும் உங்கள அவ்ளோ ஈஸியா சேர விட்ருவேனா?! நெவர்.. ராக்கி என்னோட டார்லிங். ஹீ இஸ் மைன் ஒன்லி..’ என வன்மத்துடன் நினைத்தவள் ராஜேஸ்வரிக்கு பயந்து ஒரு மேகஸினை எடுத்துப் புரட்டுவது போல பாவனை செய்யலானாள்.
‘தனிமையில் அவன்யா சிக்குவாள். அதுயிது என பயமுறுத்தி துரத்தி விட்டு விடலாம்’ என இழவு காத்தக் கிளியாக மெர்லின் அமர்ந்திருப்பதை உணர்ந்ததாலோ என்னவோ ராஜேஸ்வரி பாட்டி அவன்யாவிற்கு பூஜைக்கு பூச்சரம் கட்டுவது எப்படியெனக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
பின் பாட்டி அவன்யாவை விட்டு நகல்வதாய் இல்லையென அறிந்ததும், மேகஸினை தொப்பென மேஜையில் தூக்கிப் போட்டு விட்டு சாவித்திரியைத் தேடிச் சென்றாள் மெர்லின்.
அவள் அந்தப் பக்கமாக சென்றதும், “ஹப்பாடா.. இம்ச தொலைஞ்சது..” என ஒரே நேரத்தில் பாட்டியும் பேத்தியும் கூறிவிட்டு சற்று நிதானமாக கவனித்து பக்கென சிரித்து விட்டனர். “உங்களுக்கும் அவுங்கள பிடிக்காதா பாட்டி?” என அவன்யா கேட்டதும்,
“அட நீ வேற.. இவ எப்படா எங்கள விட்டு தொலையுவான்னு நானும் எவ்ளோ நாளா காத்துட்டிருந்தேன். ஒருவழியா இந்த வீட்டுக்கு மருமகளா வரல. சரி.. இப்ப பூக் கட்டக் கத்துக்கிட்டியா? இதே மாதிரி இன்னொரு செட் பூமாலை கட்டிட்டிரு. நான் இதோ வந்துடுறேன்.” என இயற்கை உபாதைக் காரணமாக பாத்ரூம் சென்ற பாட்டியை உளவு பார்த்தபடி அங்கே வந்து நின்றனர் சாவித்திரியும் மெர்லினும்.
“ஏய் எந்திரிடி.. நீ கெட்டக் கேட்டுக்கு சோஃபா கேக்குதா?” என அதட்டி எழுப்பினார் சாவித்திரி. சட்டென தன்னை ஒருவர் அதட்டியதும் யாரென பதறியபடி சுற்றிலும் பார்த்தவள், பின் சோர்ந்த முகத்துடன் அவர்களைப் பார்த்து எழுந்து நின்றாள். என்ன தான் ஆனாலும் ராகவ்வின் அத்தையல்லவா!
“இங்கயே ஒய்யாரமா உக்காந்து பூக்கட்டிட்டிருந்தா கிச்சன் வேலையல்லாம் யாரு பார்ப்பாங்க?! எந்திரிச்சு போயி இந்த கோமாளி வேஷத்தக் கலைச்சுட்டு சமையல் பண்ணு.. போடி..” என கட்டளையிட்டவாறு அவளைப் பிடித்துத் தள்ளினார் சாவித்திரி.
இதுவே மற்ற நேரமாக இருந்து எவரேனும் அவள் மீது கைவைத்திருந்தால் நடப்பதே வேறல்லவா! ஆனால் நடிக்கவே வந்திருந்தாலும் இது தான் அவன்யாவிற்கு புகுந்த வீடு என உணர்ந்ததால் முகம் வாட அனைத்தையும் பொறுத்துக் கொண்டாள்.
மற்றவர் முன்பு கண்ணீர் சிந்தப் பிடிக்காதவளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. வேகமாக அவ்விருவரிடமிருந்து தப்பித்து ராகவ்வின் அறையை ஒரு வேலையாள் மூலம் அறிந்து கொண்டு தன் உடையை மாற்றியதும் சமையலறை நோக்கி சென்றாள் அவன்யா.
அவள் அவ்வாறு செல்வதைக் கண்டிருந்த சாவித்திரிக்கு முகம் கொள்ளாப் பெருமை என்றால் தன் குரோதத்தை விஷமாக அவன்யா மிது கொட்டிய திருப்தியில் புன்னகைத்தபடி அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தாள் மெர்லின்.
சமையலறையில் சென்று அன்றைய சாப்பாட்டு அட்டவணையைக் கேட்டுத் தெரிந்து கொண்டு வேலைகளை செய்யத் தொடங்கியபோது சாவித்திரி அங்கு வந்தாள்.
“அடடடடே.. பெரிய மைசூர் மஹாராணி பேத்தி! வேலை ஏவிட்டு ஜம்பமா நிக்குறதப் பாரு.. யாருமத்த அநாதைக்கு வேலைக்காரங்க ஒருக் கேடா?? ஏய்.. எல்லாரும் வெளியப் போங்க. இனிமே இவ மட்டும் தான் இங்க வேலை பாக்கணும். ம்ம்ம்.. போங்க..” என உரத்தக் குரலில் சாவித்திரி கத்தியதும் வேலையாட்கள் அனைவரும் வேகமாக வெளியேறினர்.
“சூப்பர் ஆன்ட்டி.. இப்பதா யார் யார எங்க வைக்கணுமோ அங்க வச்சுருக்கீங்க. ஏய்.. எனக்கு பசிக்குது. சீக்கிரம் ஆகட்டும்.. இன்னும் ஒரு மணிநேரத்துல எங்களுக்கு சாப்பாடு வரணும். புரியுதா.?! யூஸ்லெஸ் இடியட்..” என தான் என்னவோ அவ்வீட்டு மஹாராணி போல கட்டளையிட்டு விட்டு சாவித்திரியின் விரல்களைக் கோர்த்து கொண்டு வீம்புக்காக கலகலவென சிரித்தபடி நடந்து சென்றாள் மெர்லின்.
‘இல்ல அவன்யா.. ஒருக் குடும்பத்தோட மூணு மாசம் வாழ்றதுக்கு வாய்ப்பு கிடைச்சுருக்கு. அதுக்காகவே நாம பொறுத்து போலாம். தப்பில்ல..’ என தன்னைக் கட்டுப்படுத்தியபடி கண்களை ஒருதரம் இறுக்க மூடித் திறந்தவளின் தோளில் பாட்டியின் கரம் வந்து அழுத்தியது.
“என்னம்மா.. நான் அப்டி போனதும் இங்க உன்னைக் கூட்டிட்டு வந்து விட்டுட்டாங்களா?” என சிறுபுன்னகையுடன் கேட்டவாறு நின்ற ராஜேஸ்வரியின் கரத்தைப் பற்றி அழுத்தியவாறு தன் உணர்வை தலைகுனிந்து வெளிப்படுத்தினாள் அவன்யா.
“அசடு.. அசடு.. சாவித்திரி தெரிஞ்சோ தெரியாமயோ உனக்கு செஞ்ச நல்லக் காரியம் இது தான். சமையல்கட்ட நம்மக் கன்ட்ரோல்ல எடுத்துக்கிட்டோம்ன்னு வையி.. வீட்டையே ஆளலாம்.” என தைரியம் சொன்னவரை ஆதங்கத்துடன் பார்த்தாள்.
“என்னம்மா.. நானும் உன்னை சமைக்க சொல்றேன்னு பாக்குறியா?! எங்க வீட்டுக்கு வந்த மருமக சமையல் முதற்கொண்டு சோடை போகலன்னு நான் நிரூபிக்கணும்மா. நான் இங்க உக்காந்துக்குறேன். நான் சொல்ற பக்குவத்துக்கு நீ சமைக்க ஆரம்பி.. அப்புறம் பாரு.. உங்க சித்தி உன்னையே தான் சுத்தி சுத்தி வருவா சாப்பாட்டுக்காக..” என குரலில் சிரிப்புடன் ஊக்கமூட்டினார் ராஜேஸ்வரி.
அவன்யாவிற்கு அப்போது தான் பழைய தைரியம் ஓரளவிற்கு வந்தது. அவளது முகம் இயல்புநிலைக்கு வருவதைக் கண்டவர், ஒவ்வொன்றாக கூற ஆரம்பித்தார். அவரது சொல்படி அனைத்தையும் செய்து முடித்தவளுக்கு வியர்வையில் தேகமே நனைந்து விட்டது.
ஆனால் தன்னாலும் அறுசுவையுடன் சமைக்க முடியுமென உணர்ந்தவளுக்கு அதுவரை பட்டபாடு ஒருப் பெரிய விஷயமாகத் தெரியவேயில்லை. தன் கையால் சமைத்த உணவை தன் குடும்ப அங்கத்தினர் அனைவரும் சாப்பிட போகின்றனர் என அறிந்து மகிழ்ந்தாலும், ராகவ்வும் சாப்பிடுவான் என நினைத்து பார்க்கையில் தான் அங்கே நடிக்கத் தான் வந்திருக்கிறோம் என்பதை மறந்தே போனாள் அவன்யா.
அவளது உற்சாகமனைத்தையும் காலில் போட்டு மிதிக்காத குறையாக புலம்பில் தீர்த்தனர் சாவித்திரியும் மெர்லினும். ஆனால் உண்மையில் அவளது கைவண்ணத்தில் செய்யப்பட்ட சாப்பாடு அருமையாகத் தான் இருந்தது சாவித்திரிக்கு.
‘எங்கே அதை வாய்விட்டு கூறினால் தான் எண்ணி வந்தக் காரியமனைத்தும் கெட்டு விடுமோ.’ என்றக் காரணத்தால் குறை மேல் குறை கூறலானார். அனைத்தையும் அமைதியாக கேட்டவளின் விழிகளில் கண்ணீருக்கு பதிலாக விரக்தியே குடிகொண்டிருந்தது.
‘முட்டாளே.. முட்டாளே.. நீ நடிக்கத் தான் வந்துருக்க.. அப்புறம் ஏன் அவுங்க சந்தோஷப்படணும்ன்னு ஆசைப்படுற.. விடு.. ராகவ்வும் வந்து இதையே தான் சொல்லுவான்.’ என நினைத்தவள் ஏதும் சொல்லாமல் மெல்ல அவளது அறை நோக்கி செல்வதற்காகத் திரும்பியபோது,
“ஏய் நில்லு.. நான் பாட்டுக்கு இங்க பேசிட்டிருக்கேன். நீ பாட்டுக்கு போற.. என்னத்த பழகி வச்சுருக்க?! இதான் குடும்பத்துல வளர்ந்த பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணும்கிறது..?! அநாதைங்களுக்கு எப்டி நம்மப் பழக்க வழக்கமெல்லாம் தெரியப் போகுது..?!” என நக்கலாக குத்திப் பேசியவரை ஒருவார்த்தைக் கூட எதிர்த்து பேசாமல் நின்றவாறு தலைகுனிந்தாள் அவன்யா.
“ஓ… அப்டியா சாவித்திரி.?! இதோ நீ கூடத்தான் கல்யாணம் பண்ணி உன் புருஷன் வீட்டுக்கு போன. ஆனா மாசம் 30 நாள்ன்னா நீ 28 நாளும் இங்க தான டேரா போட்ட. அது மட்டும் குடும்பத்துலருந்து வாக்குபட்டு போன பொண்ணுங்க செய்யுற வேலையா?!” என சமயம் பார்த்து காலை வாரி விட்டபடி,
“அம்மாடி அவன்யா.. இவுங்கள்லாம் நீ சமைச்சத சாப்பிடுற மாதிரி தெரியல.. நீ வா உக்காரு.. நம்ம சாப்பிடுவோம். அதுவும் அந்த பாதாம் கீர் செஞ்சுருக்கியே… ம்ம்ம்.. வேற லெவல்.. நம்ம சாப்பிட்டுட்டு மிச்சத்த என்ன பண்ணலாம்?! ம்ம்ம்ம்.. அடியே பவானி.. பவானி.. இங்க வா.. அப்டியே உன் மவளையும் கூட்டிட்டு வா. இந்த சாப்பாட என் கண்ணு முன்னாடியே காலி பண்றீங்க.” என ராஜேஸ்வரி பாட்டி கூற கூற சாவித்திரி மற்றும் மெர்லினின் கண்ணில் பசி ஏக்கம் கூடிக் கொண்டே போனது.
‘அய்யய்யோ.. போற போக்க பாத்தா சோறு கிடைக்காது போலயே..’ என திருதிருவென விழித்தபடி நின்றிருந்த சாவித்திரியைக் கண்டுகொள்ளாது தன் வேலையை செவ்வனே செய்தார் ராஜேஸ்வரி.
“அ..அம்மா.. ராகவ்வுக்கு இல்லாம போயிடப் போகுது.. நீங்க பாட்டுக்கு எல்லாத்தையும் வேலைக்காரங்களுக்கு எடுத்துக் கொடுத்துட்டா அப்புறம் நாங்க என்ன பண்றது?!” என பதறியபடி பசிவேகத்தில் பேசியவரைக் கண்டதும் சிரிப்பு வந்து விட்டது அவன்யாவிற்கு.
தான் பெற்ற செல்வங்களைப் பற்றி ஒருத் தாய்க்கு தெரியாதா என்ன?! அரும்பிய புன்னகையுடன், “உனக்கும் உன் ப்ரண்ட்டுக்கும் தான் வாய்லயே வைக்க முடியலன்னு சொல்லிட்டியேம்மா. அப்புறம் எதுக்கு உங்களுக்கு..?! உங்களுக்கு இருக்குற வசதிக்கு ஸ்விகில ஆர்டர் போட்டு சாப்பிடுங்க. நீ என்ன என் வாயப் பாத்துட்டே இருக்க.. உக்காருவியா…” என அசால்ட்டாக அவன்யாவை இழுத்து தன்னருகில் அமர வைத்து சாப்பாட்டை பரிமாறத் தொடங்கினார்.
“அம்ம்ம்மா… எனக்கும்…” என தயங்கியபடி ஆரம்பித்த சாவித்திரியிடம், “ம்ம்.. சொல்லு.. உனக்கும்..” என எடுத்துக் கொடுத்தபடி, “ஆஹா.. பாதாம் கீர்ல எல்லாமே அளவா செஞ்சு வச்சுருக்கடியம்மா.. ஹூம்.. எங்க.. ஒருசிலருக்கு இதை சாப்பிடுறதுக்கு கொடுத்து வைக்கல..” எனத் தன் மகளை வம்பிழுத்தவாறு பாதாம் கீர்ரை உறிஞ்சிக் குடிக்கலானார்.
