உயிரை உயிரால் கோர்க்கவா
24 உயிரை உயிரால் கோர்க்க வா
காரில் போகும் பவன் போகும் வாகனங்களை எல்லாம் கைகாட்டியும் கடைகளை காட்டியும் கைத்தட்டிகிலுக்கி சிரித்துக் கொண்டே வந்தான்.. பவனை அனிதாவால் கையில் பிடிக்கவே முடியாத அளவுக்கு துள்ளிக் குதித்துக்கொண்டு வந்தான்.
அனிதா அவனுடன் சேர்ந்து பேசி சிரித்து வந்தாள்.. மோகனுக்கு தான் தனித்துவிட்டதை போல உணர்வு மேலிட்டது.. காரை ஓட்டிய படியே இருவரையும் பார்த்துக்கொண்டே வந்தான்.. ஒருகட்டத்தில் மோகன் பார்ப்பதை அனிதா பார்த்துவிட்டு அவன் பார்வை பேசியதை புரிந்து கொண்டவள் என்னங்க பவனுக்கு பசிக்கும்ல காபி ஷாப் பார்த்து நிறுத்துங்க அவனுக்கு பால் வாங்கணும் என்றதும்..
“ம்ம் நிறுத்துறேன்” என்று தலையை அசைத்துவிட்டு காபி ஷாப் வந்ததும் காரை நிறுத்தி “இறங்கி வா” என்று முன்னே சென்றான்.. காபி ஷாப்க்கு ரோட்டை கிராஸ் செய்து போகணும்.. அனிதாவுக்கோ எப்போதும் ரோட் கிராஸ் பண்ணுவதில் பயம்.. அவளது ப்ரண்ட்ஸுடன் வெளியே போகும் போது அவர்கள் கையை பிடித்துக்கொண்டுதான் போவாள்.. இப்போது தன்னை கை பிடித்து கூட்டி போக சொல்ல மோகனிடம் கூச்சப்பட்டவள் தயங்கியபடியே நின்றிருந்தாள்.. மோகனோ ரோட்டை கிராஸ் பண்ணிவிட்டு திரும்பி பார்க்க அவள் காரின் பக்கமே நின்றிருந்தாள்..
பவனோ “ப்பா வாங்க” என்று கையை அசைக்க.. இவளுக்கு ரோடு கூட கிராஸ் பண்ணத் தெரியாது போல.. இவள எப்படி தனியா அனுப்பறது என்று அனிதாவை திட்டிக்கொண்டே ரோட்டை கிராஸ் பண்ணி வந்தவன் “உனக்கு ரோடு கிராஸ் பண்ண வராதா” என்று கேட்டும் விட்டான்.
அவளும் “எனக்கு கொஞ்சம் பயம்தான்.. என் ப்ரண்ட்ஸ் கூட போகும்போது அவங்க என் கையை பிடிச்சுக்குவாங்க” என கண்ணை உருட்டி பேசினாள் தயக்கத்துடன்.
“சரியாபோச்சு போ” என்றவன் பவனை அனிதாவிடமிருந்து வாங்கியவன் அவளது கையை பிடித்துக்கொண்டு ரோட்டை கிராஸ் செய்தும் காபி ஷாப் உள்ளே செல்லும் வரை கையை விடவேயில்லை அவன்.. அவளும் விலக்காமல் அவனோடு சேர்ந்தே பிடித்திருந்தாள்.. ஏனோ கையைவிட இருவருக்கும் விருப்பமில்லை.
டேபிள் பக்கம் வந்தவுடன் கையை விட்டு அமர்ந்தனர்.. “நீ என்ன குடிக்குற காபி ஆர் டீ” “எனக்கு பிளாக் டீதான் வேணும்” என்றாள்.. “ஏன் பால் டீ குடிக்கமாட்டியா”
“இல்ல எனக்கு பால் பிடிக்காது அதான்” என்றாள்.. பவனோ “நெனக்கு பால் பால்” என்று துள்ளி குதித்தான்.
பேரரிடம் “ப்ளாக் டீ ஒண்ணு, காபி ஒண்ணு நெக்ஸ்ட் பால் நல்லா ஆத்தி கொண்டு வாங்க குழந்தைக்கு” என்றவன் “வேற எதுவும் சாப்பிடுறியா” என்றான் அவளை பார்த்துக்கொண்டே.. இன்றோ வாடாமல்லிக்கலரில் பூ போட்ட சாப்ட் சில்க் சேலை கட்டியிருந்தாள்.. அவளது வெள்ளை நிறத்துக்கு எடுப்பாய் இருந்தது.. காதில் குடைசிமிக்கி போட்டிருந்தாள்.. அவள் பேசும் போது ஜிமிக்கியும் ஆடியது.. கழுத்தில் தான் கட்டிய தாலி செயினோடு மஞ்சள் கயிறும் மின்ன அவளை விடாது பார்த்திருந்தான்..
அனிதாவுக்கோ அவனது பார்வை கூச்சத்தை தர தலையை குனிந்து கொண்டாள்.. ஏன் நாம பார்த்தா இவளும் பார்க்கமாட்டாளா என்று அவன் மனம் கூப்பாடு போட்டது.. அவளுடன் சேர்ந்து வாழ அவனுக்கு ஆசை வந்துவிட்டது.. பேரர் மோகன் ஆர்டர் பண்ணியதை கொண்டு வர ப்ளாக் டீயை எடுத்தவள் ஓரமாக வைத்துவிட்டு “பவனை என்கிட்ட கொடுக்க நான் அவனுக்கு பாலை காட்டுறேன்.. நீங்க காபியை குடிங்க” என்று பவனை மோகனிடமிருந்து தூக்க..
“நீ டீயை குடி நான் பவனுக்கு பாலைக்காட்டுறேன்” என்றவன் பாலை எடுத்துப் பார்க்க பால் பவன் குடிக்கும் சூடு பதத்தில் தான் இருந்தது.. ஏனோ இந்த முறை பவனுக்கு தான் பால் காட்ட வேண்டும் என்று நினைத்தான் மோகன்.
அனிதாவுக்கோ இங்க வரவங்க “என்னை பத்தி என்ன நினைப்பாங்க குழந்தைக்கு அம்மா டீ குடிக்கறாங்க.. அப்பா பாலை காட்டுறாங்கனு என்னை மட்டமா நினைப்பாங்க ப்ளீஸ் பவனை என்கிட்ட கொடுங்களேன்” என்றாள் கெஞ்சும் விதமாக..
அவள் கேட்கும் விதத்தை பார்த்தவன் “அடுத்தவங்களுக்காக நாம வாழக்கூடாது அனிதா.. நமக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்யணும்” என்று சொன்னவன் பாலை பவனுக்கு கொடுக்க.
பவனோ “ப்பா அம்மாட்ட” என்று சிணுங்க… இவ்ளோ தூரம் நான் பேசியது வீணாப்போச்சு போ என்று மனதில் வருத்தப்பட்டவன்.. “இந்தா நீயே இவனுக்கு பாலை கொடு” என்று அனிதாவிடம் கொடுத்தான் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு..
இவர் என்ன என்கிட்ட இப்படி முகத்தை காட்டுறாரு.. பவனாத்தான என்கிட்ட வரேனு சொன்னான்.. நான் என்ன பண்றது என்று மனதில் யோசித்தவள் “பவன் அம்மாவுக்கு பசிக்குது நான் டீ குடிக்கிறேன்.. நீ அப்பாட்ட பால் குடிக்களேன்” என்று வயிற்றைத்தடவி கண்ணைச்சுருக்கி கேட்டாள்.
அனிதா கேட்கும் விதத்தை பார்த்த மோகனுக்கே சிரிப்பாக வந்தது.. பவனும் “ம்மா பசிக்குதா” என்றவன் “ப்பா பால்” என்று சொல்ல மோகன் சிரித்துக்கொண்டே பவனுக்கு பாலை காட்டினான்.
இருவரும் பேசிக்கொள்ளாமலே அவரவர் மனதில் என்ன இருக்கு என்று தெரிந்து கொண்டிருந்தனர் இருவர் மனதிலும் காதல் அரும்ப தொடங்கியது..
அனிதாவின் வீடு மோகனுக்கு தெரியாது வீட்டுக்கு போகும் வழியை சொல்லிக்கொண்டே வந்தாள் அனிதா.. அடுத்த அரைமணிநேரத்தில் அனிதாவின் வீட்டின் முன் காரை நிறுத்த அனிதாவின் சொந்தக்காரர்கள் வீட்டின் முன்னே நின்றிருந்தனர்.
மோகன் காரைவிட்டு இறங்க அவனுக்கு ராஜ வரவேற்பு தடபுடலாக நடந்தது.. “வாங்க வாங்க மாப்பிள்ளை” என்று முத்து கையெடுத்து கும்பிட்டு வரவேற்றார்.
பழைய காலத்து இரண்டடுக்கு வீடு ஆனாலும் புதுப்பித்து வைத்திருந்தார் முத்து.. வீட்டைச்சுற்றிலும் தென்னந்தோப்பு சிலுசிலுவென காத்து இதமாய் அடித்துக்கொண்டிருந்தது.. இருவருக்கும் பக்கத்து வீட்டு பெண் வந்து ஆரத்தி எடுக்க மூவரும் வீட்டுக்குள் சென்றனர்..
மோகன் வீட்டைவிட நல்லா பெரியதாகவே இருந்தது அனிதாவின் வீடு.. பவனை இறக்கிவிட அவன் அங்கும் இங்கும் ஓடினான்.. அனிதா பவன் ஓடாதே அவன் பின்னே ஓடிக்கொண்டிருந்தாள் ஹாலில் சோபாவில் தனியாக உட்கார்ந்திருந்தான் மோகன்.. சங்கோஜத்துடன் உட்கார்ந்திருந்தான்.. புதுமாப்பிள்ளை என்று சில பெண்கள் மோகனை பார்க்க வந்தவர்கள் அவனைப் பார்த்து சிரித்துவிட்டு மாப்பிள்ளை நல்லா இருக்கார்ல என்று பேசிக்கொண்டு போக மோகனுக்கு வெட்கம் வந்துவிட்டது.. அனிதா வீட்டில் இருக்க அவனுக்கு சங்கடமாய் இருந்தது.
அனிதாவின் பெரியப்பா மகன் பிரசாத், மோகன் தனியே இருப்பதை கண்டவன் “மச்சான் நல்லாயிருக்கீங்களா.. நான் அனிதா பெரியப்பா மகன் பிரசாத்” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான்.
மோகனுக்கு மோர் கொண்டு வந்து கொடுத்தாள் அனிதா.. மோரை வாங்கி குடித்துவிட்டு கொடுக்க.. “நீங்க என் ரூம்க்கு வந்து ரெஸ்ட் எடுக்குறீங்களா” என்றாள்.
பிரசாத்தோ, “மச்சான் நான் தோட்டத்துல இலை கட் பண்ண போகணும் நீங்க போய் ரெஸ்ட் எடுங்க” என்று அவனும் கிளம்பிவிட மாடியில் உள்ள அறைக்கு மோகனை கூட்டிச்சென்றாள்..
அனிதா மட்டும் இருக்க “பவன் எங்கே இருக்கான்” என்று கேட்டுக்கொண்டே அவளது அறைக்குப் போக.. “பவனை எங்க சித்தி எடுத்திட்டு போயிருக்காங்க, குழந்தைகங்க நிறைய பேர் இருக்க அவன் போக அடம் பிடிச்சான் அதான் அனுப்பி விட்டேன்” என்றாள் தயக்கமாக.. சித்தியிடம் பவனை கொடுக்கவில்லையென்று சொல்ல முடியவில்லை கேட்டதும் கொடுத்துவிட்டாள்.
“பவன் துறுதுறுன்னு இருப்பான்.. எங்காவது ஓடிவிழுந்துட்டா என்ன பண்றது.. நீ போய் கொஞ்ச நேரம் இருந்து தூக்கிட்டு வந்துரு” என்றவன் குளியலறைக்குள் சென்றான்.
அனிதாவுக்கோ குழந்தையை இப்போ தான் அவங்ககிட்ட கொடுத்தேன்.. உடனே போய் எடுத்துட்டு வந்தா சங்கடமா நினைக்கமாட்டாங்களா.. இவர் ஏன் இப்படி சொல்றாரு என்று மோகன் மீது கோபம் வந்தாலும் வெளிக்காட்டாமல் பவனை எடுத்துவர சென்றுவிட்டாள்..
காம்பவுண்ட் சுவர் தாண்டினால் அனிதாவின் சித்தி வீடு.. அவர்கள் வீட்டு வாசலில் குழந்தைகள் பவனோடு ஓடிப்பிடித்து விளையாண்டு கொண்டிருந்தனர். பவனோ எப்போதும் தனியாக இருப்பவன் இன்று நிறைய குழந்தைகளை பார்த்ததும் குஷியில் அவர்களுடன் ஓடிப்பிடித்து விளையாண்டு கொண்டிருந்தான்.. பவன் விளையாடுவதை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் அனிதா..
மோகனுக்கு பவனின் சிரிப்பு சத்தம் கேட்க ஜன்னலை எட்டிப்பார்த்தான்.. பவன் குழந்தைகளுடன் விளையாடுவதை பார்த்தவனுக்கு இதழ் தானாக விரிந்து கொண்டது.. பவனுக்கு ரொம்ப நேரம் விளையாண்டால் சோர்ந்து போவான் விளையாண்டது போதும் அவனை எடுத்து வரச்சொல்ல அனிதாவுக்கு போன் போட்டான் மோகன்
போன் அடிப்பதைக் கண்டு போனை ஆன் செய்தவள் “சொல்லுங்க.. பவன் விளையாடுறான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்”
“இல்ல அவனுக்கு ரொம்ப நேரம் விளையாண்டா மயக்கம் வந்துடும்.. நீ அவனை எடுத்துட்டு வா” என்று சொல்லிக்கொண்டிருக்க அதே நேரம் பவன் கீழே விழுந்திருந்தான்.. அவன் அழுகை சத்தம் மோகனுக்கும் கேட்டது.
“என்னாச்சு பவன் அழறான் போய் பாரு” என போன் பேசிக்கொண்டே படியிறங்கி பவன் இருக்கும் இடத்திற்கு வந்தான்.. பவன் ஓடியதில் கால் தடுமாறி கீழே விழுந்தவனுக்கு மண்டையில் லேசாய் புடைந்து போனது.. அனிதாவுக்கோ பயமும் அழுகையும் கலந்து வந்தது.. பவனை தூக்கிக்கொண்டு அவனது மண்டையை தேய்த்துவிட்டாள்.. “குட்டிக்கு ஒண்ணும் ஆகாது அம்மா மருந்து போட்டு விடுறேன்” என்று பவனை அணைத்துக்கொண்டு தட்டிக்கொடுக்க.. அதற்குள் மோகன், பவன் இருக்கும் இடத்திற்கு வந்ததும் மோகனை பார்த்த பவனோ “ப்பா கீழே விழுந்துத்தேன் என்று தலையில் அடிப்பட்டதை அவனிடம் சொல்லி அழுதுகொண்டே மோகனிடம் தாவினான்.
மோகனும் தலையில் புடைப்பை பார்த்துவிட்டு “இதுக்குதான் உன்னை சீக்கிரம் போய் பவனை தூக்கிட்டு வானு சொன்னேன்” என்று அனிதாவிடம் குரலை உயர்த்தினான் மோகன்.
அங்கே வந்த ஒரு பாட்டியோ குழந்தையின் தலையை பார்த்துவிட்டு “பூமாதேவி குழந்தைக்கு அடிபடாம பார்த்துக்குவா தம்பி இந்த வீக்கம் கொஞ்ச நேரத்துல அமுங்கிடும்” என்று ஏதோ தலையை கையால் கசக்கி பூசிவிட்டார்.. பவன் இன்னும் விசும்பிக்கொண்டிருக்க.. அனிதாவும் அழுதுகொண்டுதான் இருந்தாள்..
மோகனோ பவனை தூக்கிக்கொண்டு அறைக்குச் சென்றுவிட்டான்.. பவனோ அழுதுகொண்டே தூங்கிவிட்டான்.. கட்டிலில் படுக்க வைத்து அவன் பக்கம் உட்கார்ந்து கொண்டான்.. மோகனுக்கு கோபம் அனிதாமேல் தான் ஆனால் வெளிக்காட்டாமல் வந்துவிட்டான்.. பவனின் மண்டையை பார்க்க லேசாக வீக்கம் குறைந்திருந்தது.. அவன் நெற்றியில் முத்தமிட்டவனோ கண்ணை மூடிக்கொண்டு கட்டிலில் தலைசாய்த்தான்.. இங்கிருந்து இப்பவே கிளம்பிவிடவேண்டுமென்று தோன்றியது.. பவனை காண போகும் வழியில் அனிதாவின் சொந்தகார பெண்மணிகள் இரண்டு பேர்
“என்னக்கா இந்த முத்து மாமா கையில குழந்தையை வச்சிருக்கவங்களுக்கு நம்ம அனிதாவை கட்டிக்கொடுத்திருக்காரு.. அந்த பையனை பார்த்தா சிரிக்க கூட மாட்டேன்கிறாரு.. நம்ம பொண்ணை நல்லா பார்த்துப்பாரா”
மற்றொரு பெண்மணியோ “நம்ம பொண்ணும் கணவனை இழந்தவதான குழந்தை இருந்தா தப்பில்லை.. அனிதாவோட குணம் அந்த பையனுக்கும் பிடிச்சுபோய்டும்” என்று இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்..
அனிதாவை சொந்தக்காரர்கள் முன்னிலையின் திட்டிவேறு விட்டான்.. இனி தன்னை வில்லனாத்தான் பார்ப்பாங்க என்று எண்ணிக்கொண்டவனுக்கு மனம் ஒருநிலையில் இல்லை.. சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பிவிட வேண்டியதுதான் என்று கண்ணை மூடி உறங்கியும் விட்டான்.
அனிதாவோ அவர் குழந்தையை எடுத்துட்டு வானு சொன்னதும் எடுத்துட்டு வந்திருக்கணுமோ.. எடுத்துட்டு வந்திருந்தா பவன் கீழே விழுந்திருக்கமாட்டானோ என்று நினைத்துக்கொண்டே அழுது கொண்டிருந்தாள்.. அங்கே வந்த பாட்டியோ “அம்மாடி குழந்தை விளையாடினா கீழ விழத்தான் செய்வான் இதுக்கெல்லாம் அழுவியா நீ” என்று அனிதாவை கடிந்து கொண்டார் அந்த பாட்டி.
அனிதாவோ சிறிது நேரம் கழித்தே தன் அறைக்குச் சென்றாள்.. முத்துவோ பலகாரம் வாங்க சென்றிருந்தவருக்கு இந்த விசயம் தெரியாமல் போனது.. பவன் உறங்கிக்கொண்டிருந்தான்.. மேலே வந்த முத்துவோ “அம்மாடி மாப்பிள்ளையை சாப்பிட கூட்டிட்டு வாமா குட்டிப் பையன் என்ன பண்ணுறான்” என்றதும் அவளுக்கு அழுகை வந்துவிட்டது..
அனிதா அழுக, முத்து என்னமோ ஏதோவென்று “பதறி “என்னாச்சு அனிதாமா” என்று பரிதவிப்பாக கேட்க..
அனிதாவோ பவன் கீழ விழுந்ததைக் கூறி முத்துவை கட்டிக்கொண்டு ஒருமூச்சு அழுது தீர்த்தாள்.
“அட கிறுக்கு புள்ள, மாப்பிள்ளை பவன் அழுதான்ல அதான் சும்மா பேசியிருப்பாரு உன்ன.. பவனுக்கு எதுவும் ஆகாது நீ போய் மாப்பிள்ளையை சாப்பிட கூப்பிட்டு வா” என அவளது தலையை வாஞ்சையாக தடவி விட்டார்.
25 உயிரை உயிரால் கோர்க்க வா
அறைக்குள் சென்றவள் குளியலறை சென்று முகம் கழுவி விட்டு மோகன் முன்னே வந்து நின்றவள் பவனை எட்டிப்பார்க்க தூக்கத்தில் நெளிந்து கொண்டிருந்தான்.. குழந்தையை தூக்க வேண்டுமென்றால் மோகனை தாண்டித்தான் தூக்கவேண்டும்.. பவன் அழுததில் உச்சா போய்விட்டான்.. பவனின் ஆடை வேறு நனைந்திருந்தை கண்டவள்.. “என்னங்க” என்று மோகனை கூப்பிட.. கண்திறந்து அனிதாவின் முகத்தை பார்க்க அவள் அழுது கண்சிவந்து முகமே வீங்கிப்போயிருந்தது..
“நாம சாப்பிட்டு உடனே கிளம்பிடலாம்” என்றவன் எழுந்து குளியலறைக்குள் போனான்.. அனிதாவோ மாலை வரை இருந்து விட்டு இரவு வீட்டுக்கு போலாம் என்றிருந்தாள்.. இப்பவே கிளம்பணும் என்றதும் அவளுக்கு அழுகையாய் வந்தது.. கல்யாணம் ஆனாலே பிறந்த வீட்டை மறந்துவிடணுமா என்ன என்று பொருமிக்கொண்டவள் பேக்கிலிருந்து பவனுக்கு வேறு இன்னர் எடுத்து பவன் போட்டிருந்த ஈரமான இன்னரை மாத்தி விட்டாள்.. அனிதா பவனை தொட்டதில் முழித்துக்கொண்டு தலையை தொட்டுப்பார்த்தான்.. இன்னுமே கொஞ்சம் வீங்கியிருந்தது.. “பட்டு” என்று அவனை கட்டிக்கொண்டு “இனி உன்னை அம்மா எங்கயும் விடமாட்டேன் செல்லம்” என்று பவனை அணைத்துக்கொண்டாள்.
முகம் கழுவி வந்த மோகனோ அனிதாவின் பேச்சைக் கேட்டு நாம எல்லார் முன்னாடியும் அவளை திட்டியிருக்கக் கூடாது என்று எண்ணியவன் அவள் பக்கம் வந்தவன் “அனிதா டவல் கொடு முகம் துடைக்க” என்று கேட்க.
டவல் எடுத்து வைக்க மறந்திருந்தாள்.. “டவல் எடுத்துட்டு வரலை” என்றாள் மெதுவாக..
சட்டென்று அவளது முந்தானையை எடுத்து முகம் துடைத்து விட்டு கண்ணாடி முன்னே நின்று தலை வாரினான்.
அவளுக்கோ அச்சோடா என்றிருந்தது.. “பவனுக்கு பசிக்கும் சீக்கிரம் போலாம்” என்று கீழே சென்றான்.
பவன் குட்டி, உன்னோட அப்பா எந்த நேரத்துல எப்படியிருப்பாருனு புரிஞ்சுக்கவே முடியலடா என்று பவனை பார்த்து கண்ணைச் சிமிட்டினாள்.
பவனோ அவள் கேட்டதில் என்ன புரிந்ததோ கிலுக்கிச் சிரித்தான்.. பவன் சிரித்ததும்தான் நிம்மதியுடன் பவனை தூக்கிக்கொண்டு சாப்பிடச் சென்றாள்.
கீழே டைனிங் டேபிளில் மட்டன் பிரியாணி , மட்டன் ஃப்ரை, சிக்கன் ஃப்ரை, சில்லி சிக்கன், பிஷ் ,நண்டு ,காடை , கவுதாரி , முட்டை என நிறைய இருந்தது.. மோகனுக்கு இத்தனையும் சாப்பிடனுமா என்று மலைப்பாக இருந்தது..
அனிதா பவனை மடியில் உட்கார வைத்துக்கொண்டு அவனுக்கு பருப்பு சாதம் ஊட்டினாள்.. இன்னும் அசைவ உணவு கொடுக்கவில்லை பவனுக்கு.. நெய் கலந்த பருப்புசாதம் ஊட்டி முடிக்க அனிதாவின் சித்தி பவனை தூக்கி வைத்துக்கொண்டு.. “நீ சாப்பிட்டு முடி நான் பையனை வச்சிக்கிறேன்” என்று டைனிங் டேபிள் அருகே நின்று கொண்டார். மோகனின் கோபத்தை பார்த்த சித்தி பவனை வெளியே எடுத்துச் செல்லவில்லை.
மோகனோ இலையில் வைத்ததை சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.. கடைசியில் பருப்பு பாயாசத்தோட சாப்பிட்டு முடித்தவனோ அப்பாடா என்று எழுந்தான்.. அனிதாவுக்கோ சிக்கன் என்றால் நல்லா மூக்கு முட்ட சாப்பிடுவாள்.. கொஞ்ச நாளாக சிக்கனை விட்டிருந்தாள்.. இப்போது அளவாக சாப்பிட்டு முடித்து எழுந்தவள் கையை கழுவிவிட்டு வந்து பவனை வாங்கிக்கொண்டாள்.
முத்துவோ தாம்பூலத்தில் பணம் வைத்துக் கொண்டு வந்து கொடுக்க.. “மோகனோ இதெல்லாம் வேண்டாம்” என்று மறுத்தான்.. “தம்பி இது முறை.. மறுவீடு வந்தா மாப்பிள்ளைக்கு நாங்க சீர் கொடுக்கணும்.. மறுக்காம வாங்கிக்க” என்றதும் தாம்பூலத்தை வாங்கிக்கொண்டவன்.. “நாளைக்கு காலேஜ் போகணும் எனக்கு வேலையிருக்கு.. நாங்க கிளம்புறோம்.. இன்னொரு நாள் அனிதாவை கூட்டிட்டு வரேன்” என்று அனிதாவை பார்த்தபடி பேசினான் மோகன்.
மதியத்துக்கு மேல் புடவையை கட்டிக்கொண்டு அனிதாவால் இருக்க முடியவில்லை.. “என்னங்க ஒரு ஐந்து நிமிசம் வந்துடறேன்” என்று அறைக்குச் சென்றவள் சுடிதார் போட்டு விட்டு வந்தாள்.. முதன் முறையாய் அவளை சுடிதாரில் பார்க்கிறான் மோகன்..
“இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாம்ல மச்சான்” என்று வந்தான் பிரசாத்.
“இல்ல இன்னொருநாள் வரோம் வேலையிருக்கு பிரசாத்” என்றான் நாசூக்காய் மோகன்.
அனிதாவுக்கு அப்பா வீட்டிலிருந்து மனமேயில்லாமல் கிளம்பினாள்.. தோட்டத்தில் விளைந்த காய்கறி பழங்கள் எல்லாம் காரில் ஏற்றிவிட்டிருந்தார் முத்து.
காருக்கு வந்த மோகனோ காய்கறிகளை பார்த்தவன் என்னது இவ்ளோ காய்கறியா என்று விழி விரித்து ஆச்சரியமாக பார்த்தவன் முத்துவின் பாசத்தின் அளவை புரிந்து கொண்டான்.. பவனோ சாப்பிட்டதில் தூங்கியிருக்க தோளில் போட்டுக்கொண்டு வந்தாள்.. இருவரும் காரில் ஏற “முத்துவோ வீட்டுக்கு போய்ட்டு போன் போடுமா” என்றார்.. அவர் முகத்தில் அத்தனை சந்தோசம் தெரிந்தது..
“போய்ட்டு வரேன்ப்பா” என்று கையசைத்தவளுக்கு கண்ணீரும் கோர்த்துக்கொண்டது.. கொஞ்சம் தூரம் காரில் சென்று கொண்டிருக்க.. அனிதாவோ இன்னும் கொஞ்சநேரம் இருந்திருக்கலாம் என்று எண்ணியவள் மோகன் மீது பொய் கோபத்துடன் அமைதியாக அமர்ந்திருந்தாள்.. மோகனோ அவள் அமைதியை கலைப்பதாக எண்ணி “இவ்வளவு காய்கறி ஏத்தி விட்டிருக்காரு உங்கப்பா.. நாம என்ன காய்கறி கடையா வைக்கப் போறோம்” என்றான் அனிதாவை பார்த்து கிண்டலாக..
“பூசணிக்காய், கத்தரிக்காய் எல்லாம் நாலு நாள் வச்சுக்கலாம்.. மீதி காய்கறிகளை நம்ம வீட்டுக்கு வந்தாங்கள்ள மல்லிகா மேம், ஜோஷிதா அவங்களுக்கு கொடுத்திரலாம்.. எங்க ஊர்ல பொண்ணு மறுவீடு வந்தா காய்கறிகள் எல்லாம் கொடுக்கற வழக்கம்.. அப்பா அரிசி மூட்டை போடுறேனு சொன்னாரு நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றாள் இதழ் சுளித்து..
“உங்க ஊருல பொண்ணு கட்டுனா மாப்பிள்ளை நல்லா பிழைச்சுப்பான்” என்று சிரித்தான் மோகன்.
“எங்கப்பா பாசத்தோட கொடுத்திருக்காரு.. உங்களுக்கு சிரிப்பாயிருக்கா” என்று கோபவப்பட்டு மோகனை முறைத்தாள்..
“அம்மாடியோவ் மேடம்க்கு கோபம் எல்லாம் வருது” என்று பேசியவன் பவனின் நெற்றியை பார்க்க.. வீக்கம் வற்றியிருந்தது.. “சாரி பவன் கீழ விழுந்ததும் கொஞ்சம் எமோசனல் ஆகி எல்லார் முன்னாடியும் உன்னை திட்டிட்டேன்” என்றான் மோகன் கவலையாக.
“பரவலா விடுங்க” என்று ரோட்டை பார்த்துக்கொண்டு அப்படியே கண்ணை மூடித் தூங்க ஆரம்பித்தாள்.. மோகனோ அவள் தூங்கட்டுமென்று அமைதியாய் காரை ஓட்டினான்.. பவன் அனிதாவின் மடியில் அவளின் ஷாலை இழுத்து பிடித்துக்கொண்டு சுகமாய் உறங்கிக்கொண்டிருந்தான்.. அவளது அழகுகள் அவனது கண்ணுக்கு காட்சியளிக்க இதழ் குவித்து ஊதிக்கொண்டு ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டினான்.. ஆனால் அவன் கண்களோ மீண்டும் அனிதாவை பார்க்கச்சொல்லியது.. அனிதாவின் மேல் காதல் வந்ததும் கள்ளத்தனமாய் அவளை சைட் அடிக்க ஆரம்பித்தான்.
இரவாகிவிட்டது வீடு வந்து சேர்வதற்கு காரை நிறுத்த அனிதா விழித்துக்கொண்டாள்.. காரை விட்டு இறங்கியதும் பரிமளா வாசலில் நின்றிருந்தவர் “வாம்மா ஏன் இன்னிக்கே வந்துட்டீங்க நாளைக்கு காலையில வந்தாக்கூட மோகன் காலேஜ்க்கு போயிருக்கலாம்” என்று வினவ.
“இல்லத்தை நம்ம வீட்டுக்கு வந்தா கொஞ்சம் அவரு ப்ரீயா தூங்கி எழும்புவாரு என்றவள் பவனை பிடிக்க அத்தை கார்ல காய்கறிகள் கொண்டு வந்திருக்கேன் எடுத்துட்டு வரேன்” என்று பவனை கொடுத்துவிட்டு திரும்ப, மோகன் கொஞ்சம் காய்கறிகளை எடுத்துக்கொண்டு வந்தான்.. மீதி காய்கறிகளை பையில் போட்டு எடுத்துக்கொண்டு வந்து சமையல்கட்டில் வைத்துவிட்டு திரும்ப மோகன் தண்ணீர் குடிக்க வந்தவன் அவள் மீது மோதினான்..
“சாரிங்க” என்றாள் பதட்டத்துடன்..
மோகனோ பரிமளா வருகிறாரா என்று எட்டிப்பார்த்தவன் “சுடிதார் உனக்கு அழகாயிருக்கு” என்றவன் அவள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவளது கன்னத்தில் முத்தம் கொடுத்து சென்றிருந்தான்.. அவளோ விழிகளை அகல விரித்து நின்றுவிட்டாள்.. கையெல்லாம் நடுங்கியது.. மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள்.
பரிமளாவோ பவனை அறையில் படுக்க வைத்துவிட்டு வந்தவர் “அம்மாடி நான் சமையல் முடிச்சிட்டேன்.. ரெண்டு பேரும் சாப்பிட்டு போய் படுங்க.. பவனுக்கு பால் ப்ளாஷ்க்குல ஊத்தி வச்சிருக்கேன் கொண்டு போய் வச்சிக்க.. நான் மாத்திரை போட்டேன்மா தூக்கம் வருது” என்று கூறியவர் அறைக்குச் சென்றுவிட்டார்.
இப்போது மோகனை சாப்பிட கூப்பிடனுமே என்று சமையல் கட்டிலேயே நின்றுவிட்டாள்..
மோகனோ இவ இப்போதைக்கு வரமாட்டா வயிறு வேற பசிக்குது என்று வயிற்றை தடவியவன் பவனுக்கு தலையணையை இருபக்கமும் வைத்துவிட்டு சமையல்கட்டுக்குச் சென்றான்.. அவளோ நின்ற இடத்திலேயே அசையாமல் நின்றிருந்தாள்..
“ம்க்கும் எவ்ளோ நேரம்தான் இப்படியே நிற்கப்போற.. சுடில பார்த்ததும் எனக்கு முத்தம் கொடுக்க தோணுச்சு.. தப்பா இருந்தா மன்னிச்சுடு பசிக்குது தோசை போடுறியா” என்று டைனிங் டேபிளில் உட்கார்ந்தான்.
ஹாட் பாக்ஸை எடுத்துக்கொண்டு போனவள் தட்டில் தோசையை போட்டு “நீங்க எனக்கு தாலி கட்டியிருக்கீங்க.. என்னைத் தொட உங்களுக்கு உரிமையிருக்கு முத்தம் கொடுக்கலாம் தப்பில்லை.. ஆனா சமையல் கட்டுல வைச்சு இனி கொடுக்காதீங்க” என்றவளுக்கு கன்னம் செங்காந்தள் மலரை போல சிவந்துதான் போனது..
தோசையை வாயில் வைத்தவனுக்கு புரை ஏறியது.. “அப்போ பெட்ரூம்ல கொடுக்கலாம்ல” என்றான் கண்ணைச்சிமிட்டி.. அனிதாவுடன் பேசிக்கொண்டாள் அவளுடன் நல்ல புரிதலைத்தரும் என்று நினைத்துவிட்டான்..
“கொஞ்சநாள் வெயிட் பண்ணுங்க” என்று சட்னியை ஊற்றினாள்.
“நீயும் உட்கார்ந்து சாப்பிடு காலையில நேரமே எழுந்திருக்கணும்ல” என்று சொன்னவன் அவளது கையை பிடித்து உட்கார வைத்தான்.
அச்சோ இவரு பாசம் கோபம் ரெண்டுமே ஓவாராதான் காட்டுறாரு போல என்று எண்ணியவளுக்கு சிரிப்புதான் வந்தது.. இருவரும் சாப்பிட்டு முடிக்க.. சமையல்கட்டை ஒதுங்க வைத்துவிட்டு அறைக்கு போகவே அவளுக்கு கொஞ்சம் நடுக்கமாய் இருந்தது.
மோகனுக்கு பாலை எடுத்துக்கொண்டு போனவள் “என்னங்க பால் கொண்டு வந்திருக்கேன்” என்று பால் டம்ளரை நீட்ட அவனோ லேப்டாப்பில் படம் பார்த்துக்கொண்டிருந்தான்.
பாலை வாங்கி குடித்துவிட்டு “நீ டிரஸ் சேன்ஞ் பண்ணலையா” என்றான் பாலை குடித்துக்கொண்டே..
“அது வந்து இந்த ட்ரஸே எனக்கு ஓ.கேதான்” என்றாள் தலையை குனிந்துகொண்டு…
“அனிதா நமக்குள்ள இயல்பா நடக்கறது எப்பவாயிருந்தாலும் நடக்கும்.. நீ ரொம்ப கூச்சப்படாத.. நான் உன் புருசன்தான்.. ஆனா உன்னோட விருப்பம் இல்லாம முத்தம் தவிர வேற எதுவும் நடக்காது சரியா.. நான் வேணா கண்ணை மூடிக்கறேன் நீ டிரஸ் மாத்திக்கோ” என்றான் குறுநகையுடன்.
அவளோ சேலையை கையிலெடுக்க, “ஏன் நைட்டி போட மாட்டியா.. நைட்டி இல்லைனா சொல்லு நாளைக்கு காலேஜ்விட்டு வரும்போது எடுத்துட்டு வரேன்.. சைஸ் சொல்லு” என்று லேப்டாப்பில் படம் பார்த்துக்கொண்டே கேட்டான்.
“என்கிட்ட இருக்கு.. என்றவள் கண்ணை மூடுங்க” என்று லைட்டை ஆப் பண்ணிவிட்டு அவசரமாக சுடிதாரை மாற்ற மோகனோ ஒற்றைக்கண்ணை திறந்து கொண்டு அவளை பார்த்துக்கொண்டுதான் இருந்தான்.. என் பொண்டாட்டிய நான் பார்க்க உரிமையிருக்கு என்று எண்ணிக்கொண்டான்.. நைட்டியை மாற்றியவள் பவன் பக்கம் வந்து படுத்துக்கொண்டாள்.
மோகனுக்கு அவளது செயல் சிரிப்பை வரவழைக்க லேப்டாப்பை அணைத்தவன், தலையணையை எடுக்க “கட்டில்ல தான் இடம் இருக்கே ஏன் சோபாவுல போய் குறுக்கி படுக்குறீங்க” என்றாள் மெதுவாக..
“இல்லமா நான் பக்கம் படுத்து கையை காலை மேல போட்டா உனக்கு தான் சங்கடம்” என்றவன் தலையணையை தூக்க..
“நடுவுல தான் பவன் படுத்திருக்கான்ல.. நீங்க கட்டிலயே படுங்க.. சின்ன சோபாவுல நேத்து நைட் காலை குறுக்கி படுத்திருந்தீங்க” எனக்கு கஷ்டமா போச்சு என்றாள்.
“சரி நீ இவ்ளோ சொல்லும்போது நானும் மெத்தையில படுக்குறேன்” என்றவன் கட்டிலில் ஓரமாக படுத்துக்கொண்டான்.. இருவரும் கண்ணைமூடித் தூங்க ஆரம்பித்திருந்தனர்.. நடு இரவில் பவனை அணைத்தவாறு இருவரது கைகளும் சேர்த்து போட்டுக்கொண்டு உறங்கினர்.. இடையில் பவன் சிணுங்க எழுந்தவள் அவனுக்கு பாலை காட்ட, பாலை குடித்துவிட்டு உறங்கினான் பவன்.
ஐந்து மணி ஆனதும் எழுந்து குளித்துவிட்டு வந்தவள், மோகன் தூங்குகிறானா என்று எட்டிப்பார்த்தாள்.. அவன் சீராக மூச்சுவிட பொறுமையாக சேலையை கட்டத்துவங்கினாள்.. மோகனோ இன்னும் உறங்கவில்லை.. அவள் எழுந்தவுடன் கண்விழித்துக்கொண்டான்.. அவளது அழகுகள் அவன் கண்ணுக்கு தெரிய அவன் பொறுமை காற்றில் பறந்து போனது.. மெல்ல எழுந்து சென்று அவளை பின்னிருந்து அணைத்துக்கொண்டவன் “ப்ளீஸ் அனி ஒரு முத்தம் மட்டும் கொடுக்கறேன்” என்று கூறி அவளை தன் புறம் திருப்ப, அவள் மலர்கொங்கைகளை மறைத்து நின்றிருக்க.. அவளது கையை எடுத்துவிட்டு அவளை இறுக அணைத்துக்கொண்டான்.. ஆண்மகனின் முதல் அணைப்பு பெண்ணவளுக்கு சிலிர்ப்பை கொடுத்தது.. அவனை கட்டி அணைக்க வேண்டாம் என்று சொல்ல மனம் இல்லை அவளுக்கு.. கண்ணீர் சிறு துளி எட்டிப்பார்க்க.. உள்ளிழுத்துக்கொண்டவள் அவனை, அவளும் அணைத்துக்கொண்டாள்.. அவள் அணைத்ததும் அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தவன் அவளது செவ்விதழை கவ்விக்கொண்டான்.. சத்தம் வராமல் மென்மையாய் முத்தம் கொடுத்தான்.. லைட் அணைத்துதான் இருந்தது.. பவன் எங்கே விழித்து விடுவானோ என்ற பயத்தில் இருந்தாள் அனிதா.. இதழ் முத்தம் மட்டும் போதவில்லை அவனுக்கு. அவள் செழுமைகள் அவனது நெஞ்சில் அழுந்த மலர்கொங்கைகளில் முகம் புதைத்தான்.. மோகன் கைகளில் களிமண் பொம்மை போல அவன் கைகள் படுத்தும் பாட்டில் மயங்கியிருந்தாள்.. மோகனுக்கு அவள் டைம் கேட்டது நினைவு வர.. அவளைவிட்டுப் பிரிந்தவன் “சாரிடி கொஞ்சம் அவசரப்பட்டேன்” என்றவன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.. அனிதாவுக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது.. என்றிருந்தாலும் நடக்கப்போவதுதானே நம்ம மனசை நாமதான் மாத்திக்கணும் என்று புடவையை கட்டி முடித்தவள் சமையல் கட்டுக்கு சென்றாள்..
