ஆளை அசத்தும் அசுரா
அசுரன் – 3
அந்த அறைக் கண்ணாடியின் முன்பு நின்றவன் சாம்பல் வண்ண கோர்ட்டை அணிந்து கொண்டிருந்தான். அவனது மனமோ ‘இது அவளுக்கு மிகவும் பிடித்த கோர்ட்…’ என நினைவூட்டியது.
அவளைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கும் தன் காதல் மனதிற்கு கடிவாளம் இட்டவன் அந்த பழைய கோர்ட்டை கழற்றி பத்திரப்படுத்தினான்.
வெற்று மார்புடன் நின்றவாறு வளர்ந்திருந்த தன் சிகையை அழுந்தக் கோதியவனது பார்வை தன் மார்பில் பதித்த பெயரில் நிலைத்தது.
உதித்தனா என எழுதியிருந்த அழகான பிராமி எழுத்துக்கள்….. இந்த டாட்டூவைப் பார்த்து அவள் அழிக்க முற்பட்ட விதமும் பின் அது தன் பெயர் என்பதை அறிந்து அணைத்து முத்தமிட்டதையும் நினைக்க அவனது உடலோ ஜிவ்வென்று வானில் பறக்கத் தொடங்கியது.
அவளோடு அன்று இணைந்ததுதான் இறுதியாக இருக்குமென அவன் கனவா கண்டான்..?? மண் பாவை போல அன்று என் கையில் குழைந்து விட்டு எப்படி அவளால் என்னைத் தூக்கியெறிய முடிந்தது….??
‘ம்ப்ச்…. அடங்கு மனமே.. அவளைப் பற்றி நினையாதே….’ என மீண்டும் தன் மனதைக் கட்டுப்படுத்தியவன் தன் மார்பை இதமாக வருடி விட்டான்.
‘முடி சூடா மன்னனாக இருந்த என்னைக் கூட இந்தக் காதல் முடியைப் பிய்த்துக் கொண்டு அலைய வைத்து விட்டதே… சே…’
அவனது அறை முழுவதும் தன் காதல் காரிகையின் ஓவியங்களை வரைந்து குவித்திருந்தான். அவற்றைப் பார்க்கப் பார்க்க அவனது உடலின் ஒவ்வொரு அணுவும் அவள் வேண்டுமென போராடி ஆர்ப்பாட்டம் செய்தது.
தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் இன்னும் இன்னும் தனக்குள் இரும்பென இறுகிப் போனான்.
தன் உயிரானவளைப் பிரிந்ததால் இந்த நான்கு வருடங்களிலும் அவனது தொழில் சரிந்து வீழ்ந்து போனது என எண்ணினால் அது முற்றிலும் தவறு.
அவனுடைய ராவண் ஏர் லைன் பல நாடுகளில் கால் பதித்து அசுர வளர்ச்சியடைந்திருந்தது. காதல் தோல்வி அடைந்ததும் மது அருந்தி தாடி வளர்த்து தேவதாஸ் போலத் திரியும் ரகமில்லையே நம் ராவணன்.
தற்போதோ தன்னுடைய புது வேலைத் திட்டத்திற்காக மெல்போர்ன் நகரில் இருந்து பைரன் பே எனும் இடத்திற்குச் செல்லத் தயாராகினான்.
பைரன் பே என்பது தென்கிழக்கு ஆஸ்திரேலிய மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு கடற்கரை நகரமாகும்.
எழில் கொஞ்சும் அந்தக் கடற்கரை நகரில் தன் யௌவன மங்கையான உதியை சந்திக்கப் போவதை அவன் அறியவே இல்லை..
* * * * * * * * * * *
பைரன் பேயில் உள்ள மதுமதியின் வீட்டில்……
“ம்மாஆ…. ம்மாஆஆ… ம்மாஆஆஆ… ம்மாஆஆஆஆஆ……” என உதியின் பின்னேயே சுற்றிக் கொண்டிருந்தான் அவளுடைய செல்ல மகன் தரு.
“சொன்னா கேளுடா…. பிடிவாதம் பிடிக்காதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்…..”
“பீச்சுக்கு போகலாம்மா ப்ளீச்……”
“ஹா ஹா அச்சோ என்னோட தங்கமே ப்ளீச்னு சொல்லக் கூடாது… ப்ளீஸ்னு சொல்லணும் ஓகேவா?? இப்போ அம்மாக்கு டைம் இல்லைடா சாயங்காலம் பீச்சுக்கு போகலாம்டா…. டீலா..??” என்றவாறு வேலைக்குச் செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தாள்.
அதேநேரம் அங்கு வந்த மதுமதியோ தருவை தன் கைகளில் தூக்கிக் கொண்டவள். “அம்மா வேலைக்கு போகட்டும் கண்ணா… நாம ரெண்டு பேரும் பீச்சுக்குப் போகலாம் ஓகேவா….???” என்றாள்.
“யா ஹூ……. என்றவாறு தரு சந்தோஷக் கூச்சலிட அவர்கள் இருவரையும் பார்த்த உதிக்கு நெஞ்சம் நெகிழ்ந்தது.
ராவணனைப் பிரிந்து வீட்டை விட்டு வெளியேறிய உதியின் கண் முன்னே அகோரமான கார் விபத்து ஒன்று நிகழ்ந்து விட உதியோ உறைந்து போனாள்.
அடுத்த நொடியே நடந்து முடிந்த விபரீதம் புரிய அந்தக் காரினுள் இருந்த மூவரையும் அங்கிருந்தவர்களின் துணையோடு மருத்துவமனையில் சேர்த்தாள்.
அவர்களைத் தேடி உறவினர் என யாரும் வராத காரணத்தினால் மூன்று நாட்கள் மருத்துவமனையிலேயே அவர்களுக்கு உதவியாக தங்கி இருந்தவளுக்கு தான் கொண்டு வந்த சேர்த்த மூவரில் இருவர் இறந்து விட்டனர் என்ற செய்தி இடியாக தலையில் மின்னாமல் முழங்காமல் விழுந்தது.
அந்தக் கோர விபத்தில் மதுமதியின் பெற்றோர் இறந்து விட மதுமதி பலத்த காயத்துடன் தப்பித்தாள்.
சில மாதங்கள் மதுவுக்கு துணையாக இருந்தவள் அவள் குணமாகியதும் விலகிச் செல்ல முயல மதுவோ அவளை அணைத்து கதறியே விட்டாள்.
இருவருக்குள்ளும் இருந்த தனிமையும் இழப்பும் மற்றைய நபரால் குறைக்கப்பட ஒருவரை ஒருவர் அன்போடு ஆதரித்துக் கொண்டனர்.
அதன் பின்னர் மதுவோ உதியை அழைத்துக் கொண்டு தன்னுடைய மற்றைய வீடான பைரன் பே வந்துவிட அவர்களுடைய வாழ்க்கை அந்த அழகிய கடற்கரை நகரத்தில் தொடர்ந்தது.
அனைத்தையும் நெகிழ்ச்சியுடன் நினைத்துப் பார்த்தவள் சிறு புன்னகையோடு மதுவை அணைத்துக் கொண்டாள்.
மூவரும் ஒன்றாக இணைந்து உணவு உண்டதன் பின்னர் உதியோ பைரன் பேயில் உள்ள விமான நிலையத்திற்குச் சென்றாள்.
ஆம் இடைப்பட்ட ஆண்டுகளில் மதுவின் உதவியோடு விமானப் பயிற்சி நெறிகளை முடித்தவள் தற்போது கோ பைலட்டாக திகழ்கிறாள்.
அடி மேல் அடியடித்தால் அம்மியும் நகரும்… என்பது உதியின் வாழ்க்கையில் உண்மையாகியது. அவளது இலட்சியம் கனவு அனைத்தும் சாத்தியம் ஆகியது.. இருந்தும் அவளால் தன் வெற்றியை மகிழ்ந்து கொண்டாட முடியவில்லையே…
தர்ஷனை இழந்தது, ராவணனின் காதல் பொய்த்துப் போனது என அவளது இதயம் வலித்துக் கொண்டிருக்க அவளால் எங்கணம் மகிழ்வாய் இருக்க முடியும்…??
பிடித்த வேலை எனினும் அதை எண்ணி அவளால் இன்புறத்தான் முடியவே இல்லை..
தன் எண்ணங்களை ஒதுக்கி வைத்தவள் தரு குட்டியைத் தூக்கி முத்தமிட்டு மதுவிடம் ஒப்படைத்து விட்டு விமான நிலையத்திற்கு புறப்பட்டாள்.
உதியோ அந்த அழகியோ பைலட் ஆடையில் இன்னும் அழகாக மிளிர்ந்தாள். வழக்கம் போல ஏவியேஷன் சென்டரினுள் நுழைந்தவளை அங்கிருந்த கேப்டன் அழைத்தார்.
“குட் மார்னிங் சார்…”
“குட் மார்னிங் உதித்தனா.. இன்னைக்கு நம்ம ஏவியேஷன் சென்டருக்கு இன்னொரு பிக் ஏவியேஷன் சென்டரோட ஹெட் ஒரு புராஜெக்ட் பண்ணுறதுக்காக வர்றாரு….”
“ஓக்கே சார்……”
“அவரும் சிறந்த கேப்டன்தான்… அவரோட முடிவுதான் இங்க ஃபைனலா இருக்கும்… நம்ம டீம் மெம்பர்ஸ் எல்லார்கிட்டேயும் இதைச் சொல்லிரு… அவர் எல்லா ப்ளைட்டையும் பார்த்து ஓகே சொன்னா மட்டும்தான் நமக்கு அடுத்த ஸ்டேஜ் போறதுக்கான அப்ரூவல் கிடைக்கும். சோ பி கேயார் ஃபுல்…”
‘யாருடா இது அவ்வளவு பெரிய அப்பாடக்கர்….????’ என தன் மனதினுள் நினைத்தவள் வெளியே நல்ல பிள்ளை போல முகத்தை வைத்துக் கொண்டு கேப்டன் கூறிய அனைத்திற்கும் தலையை அசைத்துக் கொண்டிருந்தாள்.
சற்று நேரத்திலேயே அந்தக் கேப்டன் வந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட உதியோ அருகே நின்ற இன்னொரு கோ பைலட்டான செலஸ்டினாவிடம் பூங்கொத்தைக் கொடுத்து வரவேற்குமாறு கூறினாள்.
அனைத்தையும் தயார் செய்து விட்டு ஏனையவர்களுடன் ரன்வேயில் நின்றவளது கவனத்தை ஒரு ஹெலாகாப்டர் ஈர்த்தது.
அனைவரும் பரபரப்பாக அதன் அருகே செல்ல அவளோ விமானத்தில் வராது ஹெலிகாப்டரில் வருவதைப் பார்த்து விழி விரித்தவள் தானும் புன்னகை முகத்துடன் அந்தக் கேப்டனை வரவேற்க முன்னேறினாள்.
ஹெலிகாப்டர் நின்றதும் அதில் இருந்து குதித்திறங்கியவனைக் கண்ட உதியின் இதயமோ வெடித்து விடும் எனும் அளவிற்கு துடிக்கத் தொடங்கியது.
கரங்கள் நடுங்க, உடல் உதற முகமோ வெளிறிப் போனது. யாரை இனி தன் வாழ்நாளில் பார்க்கவே கூடாது என எண்ணியிருந்தாளோ அவனைக் கண்டதும் அவளுக்கு சர்வமும் நடுங்கிப் போயிற்று.
அவளது மனமோ ‘ஓடிவிடு உதி….. அவன் பார்க்கும் முன் இங்கிருந்து ஓடிவிடு….’ என கூச்சலிட சட்டென அவனுக்கு முதுகைக் காட்டியவாறு திரும்பி நின்று கொண்டாள்.
செலஸ்டினாவோ பூங்கொத்தைக் கொடுத்து அவனை வரவேற்க ராவணனோ கம்பீரமான நிமிர்ந்த நடையுடன் வந்து கொண்டிருந்தான்.
திடீரென அவனது இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்க சட்டென தன் நடையை நிறுத்தியவன் தன் கண்களின் கூர் பார்வையால் சுற்றிலும் பார்த்தான்.
அவனது இதயம் தனக்குரிய இணையை உணர்ந்து கொண்டது போலும்… அவனது உள்ளுணர்வு உதியை அங்கே உணர்ந்து கொள்ள அவனது பார்வை சற்றே அங்கும் இங்கும் அலைப்புற்றது.
அவனோ சுற்றிலும் பார்வையை படர விட்டவாறு அவளை நெருங்கி வர உதியின் கால்கள் சட்டென வலு இழந்து தொய்ந்தன. அவன் பக்கம் திரும்பியும் பாராது மளமளவென அந்த இடத்தை விட்டே அவள் விரைந்து வெளியேற முயல,
அவளுடைய கேப்டனோ “உதித்தனா இங்கே வாங்க… ஹீ இஸ் கேப்டன் ஷர்வித் ராவண்….” என்ற வேண்டாத அறிமுகப் படலத்தை இனிதே ஆரம்பித்து வைத்தார்.
உதிக்கோ எங்கே தான் மயங்கி விழுந்து விடுவேனோ என்ற எண்ணம் தோன்றத் தொடங்கியது.
ராவணனோ சுற்றிலும் பார்வையை சுழல விட்டவன் உதித்தனா என்றதும் சடாரென திரும்பி அந்த இடத்தில் பார்வையைப் பதித்தான்.
உதியோ கேப்டனின் குரலுக்குப் பணிந்து ராவணனைப் பார்த்தபடி நிற்க, நீண்ட நெடிய வருடங்களின் பின் தன்னவளைப் பார்த்தவன் உறைந்தே விட்டான்.
அவளைப் பார்த்த நேரம் அவனது மனம் உடல் அனைத்தும் தன் செயற்பாடுகளுக்கு இடைநிறுத்தம் செய்து விட அவனது உடலோ சிலையைப் போலானது.
ராவணன் உதியைத் திருமணம் செய்யும் போது உதியின் தோற்றம் சிறு பெண் போலவே இருக்கும்.. ஆனால் இந்த நான்கு ஆண்டுகளிலே அவளது தோற்றம் முற்றிலும் மாறிப் போயிருந்தது.
அவள் உடல் சற்றே பூசினாற் போல இருக்க அவளது இடை வரை நீண்டிருந்த கூந்தலோ அவளது கழுத்து வரை ஸ்டைலாக வெட்டப்பட்டிருந்தது.
அவளது மீன் விழிகளில் காதலையும் தவிப்பையும் தேடி சோர்ந்தவனது பார்வை அவன் எஞ்ஞான்றும் விரும்பும் கரும்புத் தேனை சுரக்கும் அவளது செழித்த செவ்விதழ்களில் நிலைத்து மீள முடியாது தவித்தது.
வெண் சங்குக் கழுத்திலே அவன் அணிவித்த தாலி தெரிகிறதா என நோக்கியவனுக்கோ அவளது பைலட் ஆடை விழிகளை விரிய வைத்தது.
மெச்சுதல் பார்வையுடன் கழுத்தின் கீழே பார்வையை செலுத்தியவன் மூச்சடைத்துப் போனான். பிரம்மனின் ஒட்டு மொத்த வள்ளல் குணத்தையும் தன்னவளின் தனங்களில் உணர்ந்து கொண்டவன் படபடப்புடன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
உள்ளிழுத்துக் கொண்ட முச்சு வெளியே வராமல் சதி செய்தது.
ஒட்டு மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்த காரிகையை களவாடிச் செல்ல அவனது இதயம் பரபரத்தது. கரங்கள் துடிதுடித்தன.. கால்களோ ஓரிடத்தில் நிற்க முடியாது தாவி அணைக்க ஏங்கித் தவித்தன.
இத்தனை நாட்களும் அவள் மீது கடும் சினத்தில் இருந்ததை அவன் மனம் மறந்தே போனது. தன்னை விட்டுச் சென்ற பாதகி என வசைபாடியதையும் மறந்தே போனான்.
செழித்த அழகில் பேரழகியாக நின்றவளை இனியும் தன் கையணைப்பிற்குள் கொண்டு வராது இருந்தால் தன் இதயம் ஏக்கத்தில் வெடித்து விடுமோ என அஞ்சியவன் அவளை நெருங்க,
இவ்வளவு நேரமும் அவனது வெறித்த பார்வையில் திகைத்த அகலிகைச் சிலையாக நின்றவள் அவன் தன்னை நெருங்கவும் சட்டென தன் அருகில் நின்ற அவளுடைய நண்பனான சிவாவின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டாள்.
அந்நொடிப் பொழுதுகள் எந்தக் காதல் கணவனும் தன் வாழ்வில் விரும்பாத நரகமான நொடிப் பொழுதுகள்.
ரௌத்திரத்தில் அவன் உடல் இறுகிப் போக, நரம்புகள் சினத்தில் முறுக்கேறியது. தாடை இறுக அவளை அழுத்தமாகப் பார்த்தான் அந்த அசுரன்.
💜💙அசுரன் வருவான்💙💜
