வா!! என் கலாப காத(வ)லா
14
வா!! என் கலாப காத( வ )லா…
ஜியா ஜானவி ❤️
காயம்பட்ட அரிமா தன் காயங்களை தன் நாக்கால் நக்கி நக்கி ரணத்தை போக்கிக் கொள்கிறதோ இல்லையோ மீண்டும் மீண்டும் வலியை உணர்வது போலத்தான் கௌதமின் கடந்த காலம்!!
வலிக்க வலிக்க தன் ரணங்களை கண்மூடி அனுபவித்தவன் கண் திறக்கும் போது மீண்டும் வலியே இருந்தது அந்த கண்களில்!! அது நடந்து முடிந்த சம்பவத்திற்காக இல்லை யசோதராவின் காதலுக்காக!!
அவளின் ஆழ் காதலை நன்கு உணர்ந்தவன்! தன்னையே சுற்றி சுற்றி வந்து வம்பு இழுப்பதை ஏனென்று புரிந்தவன்!!
அவன் தொட்டதும் குழைந்து உருகி வழியும் அவளின் அந்தரங்கத்தை தெரிந்தவன்!!
ஆனாலும் அவளிடம் நெருங்க பயம்!!
அவளிடம் அன்பு காட்ட பயம்!!
அவளின் அன்பை பெற பயம்!!
பொய்யிலா அவளது காதலில் உருக பயம்!!
தன்னையே கொடுக்க முயன்ற அவளது நம்பிக்கையில் பெரும் பயம்!!
பயம்? பயமே தான்!! பயமே அறிந்திராத கௌதம் ரகோத்தமனுக்கு!!
மீண்டும் ஒரு தோல்வியை ரணத்தை வலியை அவனால் தாங்க இயலாத பயம்!!
முதல் முதலில் அவள் இதழ்களை தொட்ட நொடி அவளுக்கு மட்டுமல்ல அவனுள்ளும் ஒரு மின்னல் தெறித்தது உண்மையே!!
அதில் தொலைய இருந்த மனதை இறுக்கப் பிடித்து, அவளை தன்னில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்றே பொல்லாத வார்த்தைகள் எல்லாம் சொல்லினான்!!
அப்படியும் அவள் அவனை விட்டுப் பிரிந்தாள் இல்லை.. அவன் முகம் பார்க்காமல் இல்லை.. அவன் தொட்டால் அருவருப்பு அடைந்தாள் இல்லை.. அவன்மீது எங்கு எந்த புள்ளியில் அவளுக்கு அப்படியொரு அன்பு காதல் ஊற்றெடுத்தது என்று இன்னமும் புரியவில்லை கௌதமுக்கு!!
நீ காதல் செய் செய்யாமல் போ..
அன்பு காட்டு காட்டாமல் போ..
நேசம் கொள் கொள்ளாமல் போ..
ஆனால் நான் உன்னிடம் காதல்.. அன்பு.. நேசம் மையல் கொண்ட தையலே!
என்று ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு வார்த்தையிலும் அவள் நிரூபித்து கொண்டிருக்க அது சுகமாய் தித்தித்தது கௌதமுக்கு.
யசோதராவை எத்தனை முறை எப்படிப் பார்த்தாலும் அவனுக்கு சலிப்பதில்லை. அவளின் பேச்சும் துடுக்குத்தனமும் ஒருவித அழகு என்றால்.. அவளது
அழகும் இளமையும் மற்றொரு விதமான அழகு!!
ஒரு இனிய மதுவை போல…
அருந்த அருந்த மனதையும் உடலையும் புத்தியையும் மயக்கி மன இறுக்கங்களை தளர வைத்து.. ரணங்களை மறக்கச் செய்து.. வலிகளை குறைத்து.. பழைய
உணர்வுகளை எளிதாக்கும் மதுவின் இனிமை அவள். ஏன் மதுவும் மாதுவும் ஒன்றென கவிஞர்கள் கூறினர் என்று இப்பொழுது புரிந்தது நன்றாக கௌதமுக்கு!! அதுவும் அன்றைய கூடலில்லா கூடல் நிகழ்வுக்குப் பின் இன்னும் தெளிவாய்!!
அவளை உடையுடன் பார்க்கையில் ஓர் அழகென்றால்.. அன்று அரைகுறை ஆடையில் இன்னொரு அழகாய் தெரிந்தாள். முதல் பாதி கண்ணை நிறைத்தது என்றால்.. பின் பாதி அவனை பித்துப் பிடிக்கச் செய்தது!! அன்று இன்னும் சற்று நேரம் இருந்தால் கூட எல்லை தாண்டி அவளோடு முழுவதுமாக கலந்திருப்பான்!! ஆனா அது அவன் மனதுக்கு பிடிக்கவில்லை அவளுடன் அப்படி கலப்பது!! கூடவே பழைய துரோகங்களின் சாயலும் அப்போது வெளிப்பட அவனால் முழு மனதோடு ஒன்றுபட இயலவில்லை..
யசோதரா அன்பு மிக்கவள்!!
உள்ளும் புறமும் அழகு நிறைந்தவள்!! மனதுக்கு மிக மிக நெருங்கியவள்!!
பழக வெகு இனியவள்!!
அவளைக் கண்ணில் பார்க்கும்போதே அவனின் இறுக்கம் தளரும்! அவளுடன் பேசும்போது மனம் குழையும்! அவளின் விழிகள் ஆடும் சதிராட்டத்தில் ரணங்கள் மறையும்! அவளை அணைத்து முத்தமிட்டால் ஆண்மை மயங்கும்! அவள் கைத்தலம் பற்றினால் நம்பிக்கை பெருகும்! அவன் வாழ்க்கையில் இவள் நுழைகையில் கடந்த வாழ்வு காணாமல் போகும்! பாலைவனமாய் இருக்கும் அவனது வாழ்வு பூஞ்சோலை வனமாய் மாறும்!!
அவள் அதரங்களை சுவைக்கும் போது அவன் ஆணவம் முற்றிலும் உருகிக் கரைந்தோடி விடும்!!
அவளிடம் மயங்கி முயங்கி அதிலிருந்து மீளும்போது முற்றிலுமாக அவன் உணர்வுகளில் காதல் மட்டுமே ஆக்கிரமித்திருக்கும்!!
அவன் பார்வையிலும் சொல்லிலும் அவன் காதல் தெரியாவிட்டாலும்.. செயலில் அந்த காதலின் கனிவு வெளிப்படுவதை அவனாலேயே உணர முடியும்.. அதுவும் அவளிடம் மட்டுமே!!
அந்த ஒரு இரவு!! அவள் மற்றவன் கைகளில் சிக்கி சின்னாபின்னமாக இருந்த அந்த ஒரு இரவு!! அன்று அனைத்தும் புரிந்தது இந்த மர மண்டைக்கு!! அவளின்றி அணுவும் அசையாது என்று!!
இருவருக்குமான அந்த பிணைப்பில் வெளிப்படும் அன்பு எந்த வகையானது?
காதல் இன்றி வேறு எது??
காதல் சுகமானது தானே??
“ஆனால் அந்த சுகத்திற்கு ஆயுள் குறைவடி பெண்ணே!! கண்டிப்பாக என்னோடு உன்னால் சந்தோசமாக ஏன் நிம்மதியாக கூட ஒரு நாளை கடந்துவிட முடியாதடி பெண்ணே!! வேண்டாம் இந்த ரகோத்தமன்!! சென்று விடடி! முழுதாக என்னை விட்டு சென்று விடடி!!” என்று தலையை பிடித்து கொண்டு கத்தினான் கௌதம்!!
இவன் சொல்லில் மனதில் ரணத்தோடு யசோதரா சென்றிட.. அவளுக்கு குறையாத அதே ரணம் தான் ரகோத்தமன் மனதிலும்!!
கண்களில் துடைக்கத் துடைக்க நீர் வழிந்து கொண்டே இருக்க சாலையில் பார்வை இருந்தாலும் கருத்தில் இல்லை யசோவுக்கு!! ஏதோ மூளை அவளை சரியாக அவள் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தது!!
“தேற்றனுமா? இங்கே காட்டு!!” என்று அவன் கட்டிலை காட்டிய விதத்தில், கூடை நெருப்பை அள்ளி கொட்டியிருந்தான் அவள் நெஞ்சில்!! வேறு யாரேனும் இதை சொல்லியிருந்தால் கனல் கங்குகளாக வந்து விழுந்திருக்கும் வார்த்தைகள்!!
ஆனால் கேட்டவனோ மனம் நிறைந்தவன்! அவன் மனதிலும் ரணம்தான் நிறைந்தவன்!
கண்களை மூடி அமைதியாக சிறிது நேரம் அமர்ந்து இருந்தாள். அதன்பின் ஒவ்வொரு நிகழ்வாக அதாவது கௌதமை இவள் முதல் முதலில் சந்தித்ததில் இருந்து இன்று நடந்தது வரை நடந்த நிகழ்வுகளை அசைபோட்டபடியே இருக்க.. அதில் இவளுக்கு கிடைத்தது எல்லாமே முன்னுக்கு முரணான அவனது செயல்களும் வார்த்தைகளும் தான்!!
வார்த்தைகள் என்னவோ இவளை காயப்படுத்தும் கூர் அம்புகளாகவே இருக்க.. அவன் செயல்கள் என்னவோ
அவளிடம் அன்பு செய்பவையாகவே இருந்தது!
வார்த்தைகளில் அரக்கனாகவும்!!
செயல்களில் அன்பனாகவும்!!
யாருடா நீ? ராட்சசனா? ரட்சகனா? ரகோத்தமா யாரு டா நீ!!
மனதில் பல எண்ணங்கள் எழுந்து மறைந்தது. என்னதான் நல்ல தேர்ந்த நடிகனாக இருந்தாலும்.. வார்த்தைகளில் நஞ்சைக் கலந்து தெளித்தாலும்.. அவன் நெஞ்சத்தில் உள்ள அன்பை கண்டிப்பாக நேத்திரங்கள் வெளிப்படும்.
“இருடா!! திரும்ப உன்னை என்னைக்கு பார்க்கிறோனோ.. அன்னைக்கு அந்த ரெண்டு கண்ணையும் பார்த்து நான் கண்டுபிடிக்கிறேன். உன் மனசுல என்ன இருக்குன்னு” சூளுரைத்துக் கொண்டாள். அதன்பிறகு தான் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.
அப்பொழுது பார்த்து தந்தையின் போன் வர “பாப்பா சாப்டியா டா? இங்கே வந்திருக்கலாம்! பாப்பா இங்க பார் வெரட்டி வெரட்டி சாப்பாடு நான் இப்பதான் எல்லாத்தையும் ஒரு ஃபுல் கட்டு கட்டிட்டு, ஐஸ்கிரீம் எடுத்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன்!” என்று அவர் சற்று வெறுப்பேற்ற..
“மிஸ்டர் கண்ணபிரான் உங்களுக்கு ஒரு காலம் வந்தால், எனக்கு ஒரு காலம் வராது? அப்ப காட்டுறேன் நான் யாருனு!!” என்றவள், “நான் எனக்கு சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டேன். பொண்ணை நினைத்து கவலைப்படாமல், என்கிட்ட பொய் சொல்லாம நிஜமா நல்லா சாப்பிடுங்க சரியா?” என்றாள் அப்பாவை அறிந்தவளாக..
இவள் பேசப் பேச அவர் முகத்தில் அங்கே ஒரு அசட்டு புன்னகை! “கண்டுபிடிச்சிட்டா என் மக.. அவ என்னை விட அறிவாளி!” என்று பெருமிதம் வேறு!!
அப்பாவிடம் சொல்லி விட்டாலும் சாப்பிடுவதற்கு சற்று மனம் இல்லை அவளுக்கு. கிச்சனுக்குள் நுழைந்து இருக்கும் பிரட்டை முட்டையோடு சேர்த்து பிரட் முட்டை பொரியல் ஆக்கிக் கொண்டு வந்து டிவி முன் அமர்ந்து விட்டாள்.
மீண்டும் போன் அடிக்க “ஒரு முட்டை ப்ரட் கூட ஒழுங்கா சாப்பிட விட மாட்டேங்கிறாங்க!!” என்று எரிச்சலோடு பார்த்தால் அது பரதனிடம் இருந்து வந்தது.
“ஏன்? என்ன திடீர்னு கால் செய்கிறார்?” என்று யோசனையோடு “பரதன் அண்ணா??” என்று அவளை அழைக்க..
“யசோ மா.. உன் வண்டி பாக்ஸில் சாப்பாடு இருக்கு. மறக்காம எடுத்து சாப்பிடு சிக்கனும் வச்சிருக்கேன்” என்று அவர் கூற, இவளோ “எப்படி ணா?” என்று அதிசயத்து கேட்டாள்.
“சாருக்கு நீ காபி எடுத்துட்டு போன இல்லையா.. கண்டிப்பாக ஏதாவது பேசி கோபப்படுவார் இல்ல திட்டுவார் நினைச்சு, அப்பவே சாப்பாடு பேக் பண்ணி, நீ டைனிங் டேபிள் மேல் வைத்திருந்த உன்னோட சாவியை எடுத்து கொண்டு போய் பாக்ஸில் வைத்து விட்டேன். சார் என்ன பேசியிருந்தாலும் மனசுல வைச்சுகாம சூடு ஆறத்துக்கு முன்னாடி சாப்பிடு” என்று பாசத்தோடு கூற..
“அண்ணன் ஒரு கோவில்.. அண்ணன் ஒரு தெய்வம்!” என்று சினிமா பட டைட்டில் கூறிக்கொண்டே போனை அணைத்தவள் ஓடிச்சென்று அவள் ஸ்கூட்டியின் பாக்சை திறந்து பார்க்க, அங்கே அவளுக்காக சுடசுட காத்திருந்தது பரதனின் கைவரிசையில் உருவான பிரியாணியும் சிக்கன் சிக்ஸ்டிபையும்.
கொண்டு வந்தவள் தட்டில் பிரியாணி சிக்கன் சிக்ஸ்டி பைவ் இவள் செய்த முட்டை பிரட் என அனைத்தையும் பரப்பி அதை போட்டோ எடுத்து முதலில் தந்தைக்கு அனுப்பி வைத்தாள்.
கோழியின் காலைக் கடிக்கும் கன நேரத்தில் அவளது மண்டைக்குள் ஒரு மணி அடிக்க.. சட்டென்று அந்த காலையும் அவள் முன்னிருந்து உணவையும் தன்னோடு சேர்த்து ஒரு செல்பி எடுத்தாள். ஒன்றல்ல நிறைய எடுத்து ஒவ்வொன்றாக பரதனிடம் இருந்து வாங்கி வந்திருந்த கௌதமின் நம்பருக்கு வாட்ஸ் அப் செய்தாள்.
“அதாவது நீ என்னதான் என்னை காயப்படுத்தினாலும் அதையெல்லாம் எனக்கு தூசு போல நான் தட்டிக் கொண்டு போய்கிட்டே இருப்பேன்!” என்பது போல அவள் செய்கை இருந்தது.
இங்கு கௌதம் அவளை அதிகமாக காயப்படுத்தி விட்டோம் என்று மனதுக்குள் உழன்றுக் கொண்டிருந்தான் உணவைக்கூட மறுத்து. இது அவ்வப்போது நடக்கும் என்பதால் அவனது அறையில் ஹாட் பாக்ஸில் சாப்பாடு வைத்து விட்டு பரதன் சென்றுவிட்டார்.
மாலை வரை அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ‘அழுது கொண்டே போனாளே ஒழுங்காக போய் வீடு சேர்ந்தாளா இல்லை எங்கேயாவது போய் முட்டி விழுந்துட்டாளா தெரியவில்லையே? சாப்பிட்டு இருப்பாளா? இல்லை ரோஷத்தோடு படுத்து இருப்பாளா? ஐயோ!!!! எனக்கு பைத்தியம் பிடிக்க வைக்கிறாளே!! ராட்சசி!! ராட்சசி!!’ என்று அவ்வளவு கோபம் வந்தது அவனுக்கு.
போன் அடிக்க எடுத்து பார்த்தால் எஸ்வி அழைத்துக் கொண்டிருந்தான். “இவன் ஏன் இந்த நேரத்தில் எனக்கு அழைக்கிறான்?” என்றவன் “ஞாயிற்றுக் கிழமையான பொண்டாட்டி பிள்ளைகளோடு வீட்ல இருங்கடா!! அப்பவும் ஸ்டேஷனை கட்டிகிட்டு அழுவாதிங்கடா!!” என்று வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அவனுக்கு தட்டி விட்டு போனை அணைத்து போட்டுவிட்டான்.
கௌதம் நம்பர் மட்டுமே யசோதராவிடம் இருக்க, அவளது நம்பர் இவனுக்கு தெரியவில்லை. அதிலும் ஏதும் புது நம்பராக இருந்தால் அதன் பக்கமே இவன் சென்று விடமாட்டான். அதனால் அவளது மெசேஜ்களை இவன் பார்க்காமல் தவியாய் தவித்துக் கொண்டிருந்தான்.
இரவில் இவன் தூக்கம் வராமல் உருண்டு புரண்டான். அவளை சென்று பார்த்துவர மனம் உந்தினாலும், இவன் தன் மன உறுதியில் நிலையாக நின்றான். அவளைப் பார்க்காமல்.. பார்க்கக்கூடாது என்று!!
இவன் நினைத்தால் ஆச்சா?
விதியும்.. ரைட்டரின் சதியும் சேர்ந்து அவனை அவளிடமே கொண்டு போய் சேர்த்தது.
வேறெங்கே நட்ட நடு ராத்திரியில் யசோவை காண அவள் வீட்டிற்கு சென்றான் கௌதம். அவர் வீட்டு வாயிலில் நின்று பெருமூச்சை ஒரு நான்கைந்து தரம் இழுத்து விட்டுக் கொள்வதுமாய்.. ஒரு கால் முன்னே வைப்பதும் தலையசைத்து பின் திரும்புவதுமாக ஐந்தாறு முறை செய்வதுமாய்.. காம்பவுண்டில் கை வைப்பதும் எடுப்பதும் ஆக ஒரு ஏழெட்டு முறை செய்வதுமாய்.. இருந்தவன், ஒரு வழியாக ஏறி உள்ளே குதித்தான் பத்தாவது முயற்சி பின்!!
ஒற்றை அடுக்கு வீடு!! கீழே இரண்டு அறைகள், பூஜை அறை, சமையல் அறை ஹால் என்றிருக்க, மாடியில் ஒற்றை அறையும் அதைத் தொடர்ந்து பெரிய ஹாலும், அதன் பிற்பகுதி மொட்டை மாடியாக இருந்தது.
இந்த வீட்டுக்குள் இவளை எப்படி தேடிக் கண்டுபிடிப்பது என்று குழப்பமாக கமெண்ட் சுவர் ஓரம் நின்றிருக்க.. சட்டென்று கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார் கண்ணபிரான் போன் பேசிக்கொண்டே..
“டேய் டவுட் கேளுங்க நான் உங்க கிட்ட சொன்னது ஒரு குத்தம டா? அதுக்குன்னு எப்படி மிட் நைட்ல போன் பண்ணி டவுட் கேக்கறீங்க? டேய் நல்லவனுங்களா.. உங்க படிப்பு பக்தியை பார்த்து நான் வியக்கேன்! கேளுங்க டா.. கேட்டு தொலைங்க” என்று அலுத்துக் கொண்டார் அந்த விரிவுரையாளர்..
அந்தப் பக்கம் கேட்ட மாணவனோ உண்மையாக கேட்டானோ அல்லது கௌதமுக்கு உதவி செய்வதற்காக இன்று பார்த்து போன் செய்து கேட்டானோ.. அவனுக்கே வெளிச்சம்!! பெரிதாக அவனுக்கு கும்பிடு போட்டவன், அவருக்கு தெரியாமல் மெல்ல உள்ளே சென்றான்.
ஒரு அறையில் கதவு திறந்து விளக்கு எரிந்து கொண்டிருக்க, அதை எட்டிப் பார்த்தவன் அது கண்ணபிரான் அறை என்று யூகித்து, அங்கிருந்து மெல்ல தேடிக் கொண்டு மற்றொரு அறையை திறந்தான். மனதுக்கு இதம் தரும் மெல்லிய நீல நிற விடி விளக்கின் ஒளியில் ஒயிலாக தலையணையை கட்டிப்பிடித்து கொண்டு சுகமாக உறங்கிக் கொண்டு இருந்தாள் யசோதரா.
“அடிப்பாவி!! இவ மனசு கஷ்டப்படுவாளேனு நினைச்சு, நான் கவலையோடு இங்கே வந்தால், இவள் கவலையற்று தூங்குறா!! ராட்சசி!! ராட்சசி!!” என்று மனதில் அவளை செல்லமாக திட்டிக் கொண்டவன், மெதுவாக அவள் தூக்கம் கலையாமல் அருகில் சென்று அவளை பார்த்தவண்ணம் இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்தான்.
சுழலும் அந்த நாற்காலியில் சுழன்று கொண்டே.. இமைக்கும் நொடியும் வீண் என்று அவளை பார்த்து இருந்தான் காதலாக!!
சேனிட்டின் வகை இரவு நைட்டி ஒன்றை அணிந்து இருந்தாள். அதுவும் எக்கு தப்பாக அவை அவளின் உடலோடு ஒட்டியும் விலகியும் இருந்தது. நைட்டி விலகி இருந்த இடங்களில் தெரிந்த அங்கங்கள் பித்தை ஏற்றியது என்றால், உடலோடு ஒட்டி இருந்த அவளின் இளமை வனப்புகளில் அவனுள் உணர்ச்சிகளில் எழுச்சி!!
சட்டென்று ஏதோ முணுமுணுத்தவாறு எழுந்தாள் யசோதரா. அவனை பார்த்தால் ஏதும் சொல்லுவாளோ? வந்திருக்கக் கூடாதா? என்று சட்டென்று இருக்கையிலிருந்து அவன் எழுந்து நின்று விட்டான்.
கண்களை கசக்கி கொண்டே அவனை பார்த்தவள், “ஹேய் ரகோத்தமா.. என்ன மேன் கனவுல வந்தா இவ்வளவு டீசன்ட்டா நிக்கிற.. நேருல பார்த்தா இழுத்து வைச்சு வாய கடிக்கிற.. வாய் மட்டுமா.. அன்னைக்கு நீ என்னென்ன பண்ணுன.. எல்லாம் முடிக்கிற மாதிரி முடிச்சிட்டு நீ பாட்டுக்கு பாத்ரூம்குள்ள போய் ஒளிஞ்சிக்கிட்ட.. எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது தெரியுமா?
ஆனா நான் உன் மாதிரி எல்லாம் கிடையாது. பாதியில விடுற ஆளும் கிடையாது. இப்ப பாரு உன்னை என்ன பண்றேன்!” என்று சட்டென அவனை இழுத்து தன் மேல் சரித்துக் கொண்டாள்.
கௌதமோ அவளின் இந்த அதிரடியை எல்லாம் எதிர் பார்க்கவே இல்லை. தன்னைப் பார்த்ததும் முதலில் பயந்த கத்துவாள், பின்பு கோபப்படுவாள்.. அப்பாவுக்கு பயந்து தன்னை வெளியே போக சொல்லுவாள் என்றெல்லாம் பெரிதாக இவன் கற்பனை கோட்டை கட்டிக் கொண்டிருக்க அந்த கோட்டை எல்லாம் தகர்த்து எறிந்து கோட்டையின் மீது கொடி நாட்ட கிளம்பி விட்டாள் இந்த அல்லிராணி!!
தன்மீது விழுந்தவனை அடுத்த நொடி பிரட்டி போட்டாள். “என்ன லுக்கு மேன்? எத்தனை தோசை சப்பாத்தி நான் பொரட்டி போட்டு இருக்கேன் தெரியுமா? உன்னை புரட்டி போட்டது எல்லாம் ஒரு மேட்டரே இல்ல இனி செய்ய போறது தான் மேட்டர்” என்றாள் தூக்கக் கலக்கத்தில் கனவு என்று எண்ணி!!
அவனின் இரு கன்னங்களையும் தன் இரு கைகளால் தாங்கி..
அவன் முகத்தோடு முகம் இழைய… மூக்கும் மூக்கும் உரசிக்கொள்ள…
சூடான மூச்சுக்காற்று அடுத்தவர் நாசியில் நுழைந்து உள்ளுக்குள் தகிக்க… இதழ்களும் இதழ்களும் கோர்த்துக் கொள்ள… நாக்கும் நாக்கும் பிணைந்து கொள்ள… யார் இதழ்கள் எவரிடம் இருக்கிறது என்பது தெரியாத அளவு… லயித்து இருந்தனர்.
கௌதமுக்கு சிறகில்லாமல் வானில் பறப்பது போன்ற ஒரு உணர்வு. தன்னவள் மனதில் தான் எத்தனை தூரம் ஆழமாக பதிந்து இருக்கிறோம் என்பதை உணர்ந்த அந்த நிமிடம்!!
அவளோ அவனை மேட்டர் செய்கிறேன் என்று படாதபாடு படுத்தி வைத்துக் கொண்டிருந்தாள். தாடியை பிடித்து இழுப்பதும்.. இதழ்களால் மீசை முடிகளை அளப்பதும்.. அவன் கேசத்துக்குள் விரல்களைவிட்டு கலைப்பதும்.. பின் தடாலடியாக அவனது சட்டை பட்டன்களை கழற்றி அந்த திரண்ட நெஞ்சில் குட்டி குட்டி முத்தங்கள் வைப்பதும்.. அவ்வப்போது அவனது கழுத்திலும் காது மடல்களிலும் தன் இதழ்களால் கவ்வி கடிப்பதும் என்று!!
கௌதமும் அவளிடம் தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுத்து அவளது செயல்களில் கண்களை மூடி லயித்து தான் போனான். அதன்பின் இடைவிடா இதழணைப்புகள் என்பதைவிட இதழ் முற்றுகளே அதிகமாக இருந்தது அல்லி ராணியின் அட்ராசிட்டியால்!!
காலையில் சின்ன சின்ன பறவைகளின்
க்ரீச் க்ரீச் ஒலியில் தூக்கம் கலைந்து எழுந்தான் கௌதம். வெகு நாளைக்கு பிறகான நிம்மதியான உறக்கம் தன் மனம் கவர்ந்த மந்தாகிணியோடு!!
காலை நேரப் புத்துணர்ச்சி அவன் இளமை நரம்புகளை நன்றாக முறுக்கேற்றிவிட்டது. கைகளை மேலே உயர்த்தி நெட்டி முறித்தவன் உடலில் அவன் வியர்வை வாசத்தோடு பெண்ணவளின் பருவத்திரு மேனியின் பெண்மை வாசமும் அவன் நாசிக்குள் நுழைந்து அவனின மோகத்தை ஏற்றியது!! அவனின் நாடி நரம்புகள் அனைத்தும் முறுக்கேறிப் போய் மீண்டும் மீண்டும் அவளை நாடத் துடித்தது!!
இதற்கு மேல் இங்கே இருந்தால் சரி வராது என்று நினைத்தவன் அசந்து உறங்கும் அவளைப்பார்த்து மென்னகை புரிந்து, அவளது பிறை நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் வைக்க, அவள் இதழ்களோ உறக்கத்திலும் புன்னகையில் விரிந்தது.
கதவைத் திறந்துகொண்டு வெளியில் அவன் வரவும், காபி எடுத்துக்கொண்டு கண்ணபிரான் மகளின் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
அவனைப் பார்த்து அவர் அதிர்ந்து நிற்க.. இவனோ சர்வ சாதாரணமாக அவர் கையிலிருந்த காபியை எடுத்து பருகினான்.
“நெக்ஸ்ட் டைம் வரும் போது பால் இல்லாமல் பிளாக் காபி போட்டு குடுங்க மாமா!! அவ அசந்து தூங்குறா.. கொஞ்ச நேரம் கழிச்சி போய் எழுப்புங்க!” என்றவாறு வெளியில் சென்றவனையும் மகளின் அறையையும் அதிர்ச்சியோடு மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் கண்ணபிரான்.
கொள்ளையிட வருவான்…
