நேற்று வரை நீ யாரோ கண்ணா?
அத்தியாயம் 13
“என்னடா நடந்தது அத்தனையும் நேர்ல கண்ட மாதிரி பேசுறாளேன்னு பாக்குறியா?! ஒரு பொண்ணப் பிடிக்கலைன்னா தைரியமா அதை வெளிய சொல்றதுக்கு துப்பில்ல. ஆனா அவளோட மானத்துல கை வைக்க மட்டும் உங்களுக்குள்லாம் கொஞ்சங்கூட உறுத்தல்ன்றதே இல்லைல.. அவ்ளோ இளக்காரம்..?!” என ரத்னா பேசிக் கொண்டிருந்ததை எல்லாம் கேட்டு,
சற்று நொடிகள் தன் மனதுக்குள் எதையோ நினைத்து அசைபோட்ட காதம்பரிக்கு அப்போதும் அலட்சியபாவமே தோன்றவும், அதை எதிர்பார்த்திருந்த ரத்னாவிற்கும் சிரிப்பு வரத் தான் செய்தது.
“இப்போ நான் சொன்னதுக்கெல்லாம் என்ன எவிடன்ஸ்ன்னு தானே யோசிக்கிறீங்க?! அதையெல்லாம் முன்னாடியே சொல்லிட்டா சஸ்பென்ஸ் போயிடுமே. ஆனா எவிடன்ஸ் இல்லாம நான் பேசவே மாட்டேன் காதும்மா.” என அழுத்தி காதம்பரியின் கன்னத்தைக் கிள்ளியவளை,
“ச்சீ..ச்சீ.. என்னைத் தொடாத..” என வெடுக்கெனப் பேசியவரின் அருகே வந்து காதம்பரியைக் கட்டியணைத்து கன்னத்தில் நச்சென ‘இச்’ ஒன்றை வீம்புக்கென்றே கொடுத்தவளை எரிச்சலுடன் பார்த்தபடி நின்றிருந்தார் காதம்பரி.
“இதப்பாரு காது! ரொம்ப பண்ணுனன்னு வையி… அப்பறம் நம்ம பைரவ்வையும்…” என கண்ணாலேயே தன்னுடைய சில்மிஷ எண்ணத்தைக் கூற,
ஏதேதோ எண்ணி பயந்த காதம்பரியோ விதிர்விதிர்த்து போனார். “இப்போ உனக்கு என்னதான்டி வேணும்?” என சலிப்புடன் கேட்டவரை,
“ஹப்பாடா… பைரவ்.. ஒருவழியா இந்த மரமண்டைக்கு புரிஞ்சுடுச்சுப்பா. அதென்னன்னா காதூ… என் அக்காக்கும் உங்க மகன் சந்துருவுக்கும் ஊரறிய எங்க வீட்டு சொந்தபந்தம் கூடியிருக்குறப்போ பழனிமலைல இருக்குற எங்க ஹீரோ முன்னாடி கல்யாணம் பண்ணணும். இல்லைன்னு வையி…” என இழுத்தவளிடம்,
“இல்லைன்னா… இல்லைன்னா என்னடி பண்ணுவ?” என துடுக்காகவே கேட்டார் காதம்பரி.
“ஹாஹாஹா.. என்னப் பண்ணுவேன்னு முன்னாடியே சொல்லிட்டா நீ உஷார் ஆகிடுவியே. அதுனால உன்னை வச்சு செய்யுறத நீ அனுபவிக்கும் போது தெரிஞ்சுக்கோ.” என்றுக் கிண்டலாக கூறிவிட்டு,
“வா பைரவ்! போலாம். நம்ம ஆன்ட்டிடா.. இவுங்கள எப்ப வேண்ணாலும் போட்டுத் தாக்கலாம். வா..வா..வா..” எனக் கூறியபடி தனது நண்பனை அழைத்துக் கொண்டு செல்லும் ரத்னாவைக் கொலைவெறியுடன் கண்ட காதம்பரி,
“ச்சீ.. கண்ட கண்ட கழுதையெல்லாம் எச்சில் பண்ணிட்டுப் போறதுக்கு நான் என்ன இளிச்சவாயியா?! உன்னைக் கவனிச்சுக்குறேன்டி. என்னத் திமிரு?!” எனக் கூறவும்,
கதவைத் திறந்தாலும் தலையை மட்டும் திருப்பி, “ஆன்ட்டி.. உங்க ஃபோனுக்கு ஒரு குறும்படம் வந்துருக்கும். பாத்துட்டு ரியாக்ட் பண்ணுங்க. நாங்க கிளம்பறோம்.” எனக் கூறிவிட்டு சென்றுவிட்டாள் ரத்னா.
‘என்னதது..?’ என எடுத்துப் பார்த்தவருக்கு நெஞ்சில் பயம் என்ற உணர்வு புதிதாக வருவது தெரிந்து வியர்க்க விறுவிறுக்க மெத்தையில் அமர்ந்துவிட்டார் காதம்பரி.
உடனே முத்துவேணிக்கு தனது மொபைலில் அழைப்பு விடுத்துப் பார்த்தவருக்கு தொடர்பு எண் செயலிழந்ததாக செய்தி கிடைக்க, ஏமாற்றமே மிஞ்சியது. மீண்டும் தனது மொபைலில் வேறொரு நம்பருக்கு டயல் செய்து அழைப்பு விடுத்ததும், எதிர்முனையில், “ம்ம்.. சொல்லுங்க..” என்றக் குரல் கேட்டதும் தான் தாமதம்… தற்போது நடந்த அனைத்தையும் கூறிவிட்டு,
“நீ சொன்னன்னு தான் நான் இவ்ளோ ரிஸ்க் எடுத்தேன். இது மட்டும் என் பசங்களுக்கு தெரிஞ்சா… ஐய்யோ.. நினைச்சு பாக்கவே பயமா இருக்கு. நீ ஏதாவது பண்ணு.” என கெஞ்சலில் ஆரம்பித்து கட்டளையில் முடித்தார் காதம்பரி.
காதம்பரியின் அறையில் மாட்டிய மைக்ரோ ஸ்பிக்கர் டிவைஸ் மூலம் தனது காதில் வைத்திருந்த ஃப்ளூடூத் ஃபோனில் அவரின் அறையில் நடக்கும் பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் கேட்டுக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தாள் ரத்னா.
‘அப்போ இது மெயின் தலை கிடையாது. இன்னும் வேற யாரோ இருக்காங்க. ம்ம்ம்…’ என யோசித்தவாறு தோட்டத்தை நோக்கி நடந்தாள் ரத்னா.
பைரவ்வுடன் வெளியே தோட்டத்திற்கு வந்ததும் கீழே மண்டியிட்டு அமர்ந்து, “பைரவ்.. இப்போ நீ என்ன பண்றேன்னா, இந்த வீடு ஃபுல்லா சுத்திப் பாத்துட்டு நான் ஒளிஞ்சுக்குற இடத்துக்கு கரெக்ட்டா வந்துடணும். கேம் ஆரம்பிப்போமா?!” என நாயின் தலையை பரபரவென வாரிவிட்டு தடவிக் கொடுத்துக்கொண்டே ரத்னா கூறவும்,
பைரவ்வும் உற்சாகத்துடன் “லொள்…” என முன்னங்கால்களைத் தூக்கிக் காட்டி தனது சம்மதத்தைத் தெரிவித்துவிட்டு ஓட ஆரம்பித்தது. இந்த விளையாட்டு அடிக்கடி ரத்னாவும் பைரவ்வும் விளையாடுவது தான்.
பைரவ்வை அனுப்பிவிட்டு எழுந்தபோது தன்னை யாரோ பார்ப்பது போன்ற உணர்வு எழ, சுற்றிலும் தனது பார்வையை ஓடவிட்டாள் ரத்னா.
அவள் உள்ளுணர்வு கூறியது சரியே என்பது போல வருண் தனது வெண்மைநிறக் கோர்ட்டை சரிசெய்தவாறே நடந்து கொண்டிருந்தவனின் தீர்க்கமான விழிகள் ரத்னாவைக் கவ்வியபடியே இருந்ததைக் கண்டவளுக்கு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது மிகவும் சிரமமாக இருந்தது.
‘எனக்கும் உனக்கும் செட்டாகாதுன்னு அன்னிக்கு அவ்ளோ தில்லா சொல்லிட்டு போறான் பாரு.. தடிமாடு..’ என தன் மனதிற்குள் வசைபாடியவாறு தானும் தலைநிமிர்ந்து வருணை நேருக்குநேர் பார்த்தபடி நின்றிருந்தாள் ரத்னா.
வருண் என்ன நினைக்கிறான் என்பதை மட்டும் ரத்னாவால் புரிந்து கொள்ளவே இயலவில்லை. தன்னை அற்பக் காரணங்களுக்காக நிராகரித்தவனிடம் தானாக சென்று குழைந்து நிற்கவும் பிடிக்கவில்லை.
ரத்னாவை விட்டு விலகி பெரும்தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணத்திலேயே உழன்றவனுக்கு மீண்டும் அவளைக் கண்டதில் பரம சந்தோஷம். ஆனால் ஹோட்டலில் அவள் செய்தக் காரியத்தால் மீண்டும் உற்சாகமானவன், எப்படியும் அவளைத் தேடிக் கண்டுபிடித்து மனம் விட்டு பேசிவிட வேண்டும் என்ற முடிவில் இருந்தான்.
தான் மனதில் நினைத்து ஏங்கிய வெண்ணிலா தன் கண்ணெதிரேயே அதிலும் அதிகாலை வேளையில் தன் இல்லத்தில் கண்டதும் உடலெல்லாம் பரபரப்பானது வருணுக்கு.
ஆர்வத்துடன் அவளிடம் பேச வந்தால், தன்னை சிறிதும் சட்டை செய்யாமல் உதறிச் சென்ற ரத்னாவை கண்டு வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியக் கதையாக மாறிப் போனதை… பாவம் ரத்னா தான் அறிந்திருக்கவில்லை.
எந்தவித தயக்கமும் இல்லாமல் தன்னை கண்ணால் எரித்த அந்த அழகு வதனதேவதையை உள்ளூர ஏக்கத்துடன் நினைத்தாலும் தன்னுடைய வரட்டு கௌவுரவம் பேச விடாமல் பெரிதும் அவனைத் தடுத்து நிறுத்தியிருந்தது.
ஏதும் பேசாமல் பார்வைக்கணைகளை மட்டும் வீசியவனாய் தனது பைக்கில் லாவகமாக ஏறியமர்ந்து கூலர்ஸ்ஸை கண்களில் மாட்டும் போதும் ரத்னாவை திரும்பி பார்த்தவன் பின் பைக்கை கிளப்பிக் கொண்டு வேகமாக சென்றுவிட்டான்.
“ஒருசிலர தலைகீழா நிக்க வச்சு தண்ணி குடிக்க வச்சாதான் மாறுவாங்க போலருக்கு.. ம்ம்ம்.. பாப்போம்..” என யோசித்தவாறு நின்றபோது வயிற்றில் பசியின் வேகத்தை அறிந்தவள் அப்படியே சமையலறை நோக்கி நடக்கலானாள்.
அவள் அங்கே தான் வருகிறாள் என அறிந்து கொண்ட கண்ணம்மா, முதலிலேயே தயார் செய்த மணமணக்கும் நெய் பணியாரமும் அதற்கேற்றவாறு தேங்காய் சட்னி மற்றும் புதினா சட்னியுடன் இஞ்சி தட்டிப் போட்ட சூடான தேநீர் கப்பும் வைத்த தட்டை எடுத்து ரத்னாவிடம் நீட்டினார்.
“இந்தா கண்ணு.. காலைல நீ எதுவும் சாப்பிட்டிருக்க மாட்ட. இதை சாப்பிட்டுட்டு தெம்பா வேலை செய்யு.” என அவரது தோனியில் தமிழ்நாட்டுப் பாரம்பரியத் தமிழைக் கேட்டு ரசித்தவாறே,
“நீங்க சாப்பிட்டீங்களா கண்ணம்மா?” என தோழமையுடன் கேட்ட ரத்னாவை வியந்து நோக்கினார் கண்ணம்மா.
‘கண்கள் சற்று கலங்கியவாறு தெரிந்ததோ’ என எண்ணுவதற்கு முன் கண்ணம்மா இயல்புநிலைக்கு வந்திருந்தார்.
“நீங்க சாப்பிடுங்க கண்ணு..” என்று அத்துடன் நிறுத்திக் கொண்டவரின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சமையலறையின் ஒரு பகுதி டைல்ஸ் திண்டில் ஏறியமர்ந்தவள்,
“நான் இப்போ கெஸ்ட். அதுனால நான் என்னக் கேட்டாலும் நீங்க செய்யணும். கரெக்ட்டா?” எனக் கேட்டுவிட்டு பணியாரம் ஒன்றை எடுத்து இரண்டாகப் பிய்த்து சட்னியில் குழைத்தெடுத்து,
“ஹிம்.. இது எனக்கு.. இது உங்களுக்கு..” என கண்ணம்மாவின் வாயருகே கொண்டு சென்றவளைத் தடுத்தவாறு ரத்னாவின் கையைப் பிடித்த கண்ணம்மாவிற்கு கண்ணில் நீர் சுரக்க ஆரம்பித்தது.
மெல்லிய முறுவல் ஒன்றை உதிர்த்து விட்டு, “அப்புறம் அழலாம் கண்ணு. முதல்ல வாயத் திறங்க..” என அவரது பாஷையிலேயே பேசிக்காட்டி, கண்ணம்மாவிற்கு ஊட்டிவிட்டு தானும் மிச்சபாதியை தனது வாயில் போட்டு சுவைத்ததும் கண்களில் பாராட்டுடன்,
“செம்ம கண்ணு.. உங்க கைப்பக்குவத்துக்கு இன்னிலருந்து நானும் அடிமை ஆளம்பனா.” என தலை வணங்கி கைகளை விரித்தவாறுக் கூறியவளைக் கண்டு வாய்விட்டு சிரித்தார் கண்ணம்மா.
“நல்லா பேசுறீங்க கண்ணு.. எனக்கு கண்ணாலம் ஆகிருந்தா உங்கள மாதிரியே எனக்கும் ஒரு பேத்தி இருந்துருப்பா கண்ணு..” எனக் கூறிவிட்டு கண்கலங்க நின்றவரின் தோளைத் தொட்டு,
“நல்ல வேளைப்பா.. மகள்னு சொல்லாம பேத்தின்னு சொன்னீங்க..” என ஆசுவாசம் ஆவது போல நடித்தபடி நெஞ்சில் கைவைத்துக் கூறியவளைப் போலியாக அடித்தவாறு,
“உங்கள மாதிரி இதுவரைக்கும் இங்க வந்த பொண்ணுங்க ஒன்னுக்கூட என்கிட்ட இப்படி பேசுனதே இல்ல கண்ணு.” என தன் சமையல் வேலையைப் பார்த்துக் கொண்டே பேசினார் கண்ணம்மா.
காலாட்டியவாறு பணியாரத்தை முழுங்கிக் கொண்டிருந்த ரத்னாவின் உடல் அசைவுகள் அத்தனையும் ஸ்தம்பிக்க, கண்ணம்மாவை கேள்வியுடன் பார்த்தாள் ரத்னா.
தன்னை அவ்வாறு ரத்னா பார்த்ததும் சட்டென சுதாரித்து, “இன்னும் பணியாரம் வேணுமா கண்ணு?!” என அக்கறையுடன் கேட்டவரை,
மெல்ல தனது வாயை மென்றவாறே ஏதோ புரிந்தது போல தலையசைத்தவள், “ம்ம்.. கொடுங்க கண்ணு.. பயங்கரப்பசி.” எனக் கூறியவளுக்கு அன்புடன் பார்த்து பார்த்து பரிமாறினார் கண்ணம்மா.
அவ்வப்போது கண்ணம்மாவிற்கும் ஊட்டிவிட்டவாறே, “ஆமா. அப்போ ஏதோ சொன்னீங்களே. இங்க வர்ற பொண்ணுங்கன்னு… என்னை மாதிரியே நிறைய நர்ஸ் வந்தாங்களா என்ன?!” என மெல்ல விசாரிக்க ஆரம்பித்தாள் ரத்னா.
“அப்படில்லாம் ஒன்னுமில்லம்மா. நீங்க சாப்பிடுங்க.” என சுற்றும் முற்றும் பார்வையை ஓடவிட்டவாறு பயந்துகொண்டே பதிலளித்தவரை வினோதமாக பார்த்து,
“பயப்படாதீங்க கண்ணம்மா. இப்போ நான் கேக்கறது என்னோட சேஃப்டிக்காக தான். வேலை செய்ய வந்த இடம் பாதுகாப்பானதான்னு எனக்கும் தெரியணும் இல்லையா?” என்ற ரத்னாவின் நியாயமான கேள்வியில் திருப்தியானவர்,
“நீங்க சொல்றதும் சரி தான். உங்கள மாதிரியே நிறைய பேரு வந்துருக்காங்க. ஆனா சந்துரு தம்பி பண்ற சேட்டைல அவுக எல்லாரையும் நம்ம ஐயா வேலைய விட்டு நிறுத்திருவாரு.” என ஹஸ்கி வாய்ஸில் கண்ணம்மா கூறியதைக் கேட்ட ரத்னாவின் கை முஷ்டி இறுகியது.
‘நீ என்னமோ யோக்கியன் மாதிரி பேசிட்டு போன. ஆனா உன் ஹிஸ்ட்ரி இவ்வளோ கேவலமா இருக்கே.. இவனுக்கு நம்ம அக்காவ கல்யாணம் பண்ணி வைக்கிறது சரியில்லயோ?!’ என ரத்னா தனது மனதுக்குள்ளேயே யோசித்தபடி பேசிக் கொண்டிருந்த போது,
“ஆனா என்னமோ தெரியல கண்ணு. ஒரு மூணு நாலு வருஷமா சந்துரு தம்பி எந்த வெளியூருக்கும் போகல. வீடு… வீடு விட்டா ஆபிஸ்ஸுன்னு அலையுறதா நம்ம ஐயா சொல்லிக் கேட்டுருக்கேன்.” என தன்போக்கில் கண்ணம்மா கூறியதைக் கேட்டு சுருங்கியிருந்த ரத்னாவின் புருவங்கள் மெல்ல விரிந்தது.
‘ஓ… கதை அப்டி போகுதா?! ஆக மொத்தத்துல ரெண்டு பேரும் மனசுக்குள்ளயே போட்டு புழுங்கிக்கிட்டு கிடக்காய்ங்க..’ என மெல்லியக் குரலில் முணங்கியவளை,
“ஒரே ஒரு பொண்ணு மட்டும் வரும் கண்ணு. ரொம்ப சிறுசா கெவுனு ஒன்னப் போட்டுக்கிட்டு சந்துருத் தம்பிய பாக்க வரும். ஆனா நம்ம தம்பி தான் பிடி கொடுத்தே பேசாம போயிடும். சந்துருத் தம்பி முகத்துல முன்ன மாதிரி கலகலப்பு, சந்தோஷம் எதுவுமே இல்ல கண்ணு. ஏதோ எந்திரம் மாதிரி போகுது.. வருது..” என ரத்னாவிற்கு தேவையான தகவல் அனைத்தையும் அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார் கண்ணம்மா.
‘இப்போதைக்கு இது போதும். மிச்சத்த அப்புறம் பாத்துக்கலாம்.’ என எண்ணியவளின் காலைத் தனது காலால் தட்டியவாறு கூப்பிட்டது பைரவ்.
“அடடே.. வெர்ரி குட்.. இந்த தடவையும் பயபுள்ள ஜெயிச்சுருச்சுப்பா.. வீடு ஃபுல்லா சுத்திப் பாத்துட்டியா பைரவ்?!” என தனது நண்பனின் தலையைப் பிடித்து ஆட்டியவாறு கொஞ்சியவளை அதிசயமாக பார்த்தார் கண்ணம்மா.
