நேற்று வரை நீ யாரோ கண்ணா?
அத்தியாயம் 24
திடீரென ரத்னா இந்தியா செல்ல வேண்டும் எனக் கூறியதும் வருணுக்கு சற்று நோடிகள் ஒன்றும் விளங்கவில்லை. ‘தன்னால் தான் ஏதும் சங்கடப்பட்டுக் கிளம்புகிறாளோ?’ என்ற எண்ணம் வருணை சூழ, “ஏன்.. என்னாச்சு?! யாருக்காவது உடம்பு சரியில்லயா?” என முதலில் இருந்த உற்சாகம் அனைத்தும் வடிந்து, கவலைத் தோய்ந்த முகத்துடன் கேட்க,
அவனது வாடிய முகத்தைக் காணத் தாங்காது, “அப்டியில்ல. அதான் பாட்டிக்கு உடம்பு சரியாகிடுச்சே.. அப்புறமும் நான் இங்க எதுக்குன்னு உங்க வீட்டுல யாராவது கேட்டா, அதுக்கு பதில் சொல்றதுக்கு என்கிட்ட எந்தக் காரணமும் இல்ல.. அதான்…” என காதம்பரியை மறைமுகமாகக் கூறி, வாக்கியத்தை முடிக்காமல் இழுத்தபடி முடித்தாள் ரத்னா.
அவளது அழகு வதனத்தைக் கூர்ந்து நோக்கியவன், “இல்ல… அதுக்கெல்லாம் அசறுற ஆள் நீயில்ல.. உண்மைய சொல்லு. என்கிட்ட ஏதும் மறைக்கிறியா?!” என அழுத்தம் நிறைந்தப் பார்வையுடன் வருண் கேட்கவும், அப்பார்வையை சந்திக்க முடியாமல் சிலநொடிகள் திணறிப் போனாள் ரத்னா.
அவளது திணறலில் கூட ஓர்வித நளினத்தைக் கண்டவனுக்கு சுவாரஸ்யம் பிறக்கவே, “ம்ம்ம்.. சொல்லு.. வேற ஏதாவது யோசிச்சு நல்லக் காரணம் சொல்லு. பார்ப்போம்.. நான் வெயிட் பண்றேன்.” எனக் கூறி உள்ளுக்குள் நகைத்தாலும், வெளியே விறைப்புடன் நிற்பதைக் கண்ட ரத்னாவிற்கு உண்மையில் உதறல் எடுத்தது.
‘அட..என்னடா இவன்?! நொய்யு..நொய்யுன்னு கேள்வியா கேட்டு கொல்லுறானே?! இவனையெல்லாம் கட்டிக்கிட்டு எப்டித்தான் குடும்பம் நடத்தப் போறேனோ?! தேவுடா!!!’ என முகத்தில் அபிநயத்துடன் மனதிற்குள் புலம்பியவளைக் காண காண வருணுக்கு பொழுதென்பது போவது தெரியாமல் தான் போனது.
‘உண்மையக் கக்கலைன்னா இந்த டிராகன் பூஸ்டர் நம்மள ரிலீஸ் பண்ண மாட்டான்.. சரி.. இவன் தலையெழுத்து!! இவுங்கம்மாவப் பத்தி என் வாயால தெரிஞ்சுக்கணும்ன்னு விதி! ஆசைப்பட்டீல்ல.. கேளு..’ என மனதினுள் கறுவியவாறே,
“வருண்! நான் சொல்றதக் கேட்டு ஷாக்காகாமக் கொஞ்சம் இருக்கப் பாருங்க. அது..வந்து..” என அவனது அன்புத் தாய் செய்த லீலைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ரத்னா கூறக் கூற வருணின் முகம் இறுகிப் போய் பாறையென உறைந்துப் போனது கண்டு ரத்னாவிற்கு வருத்தமாகத் தான் இருந்தது.
ஆனாலும் என்ன செய்வது?! கூறித்தானே தீர வேண்டுமென முடிந்தவரை வருணின் மனதைக் காயப்படுத்தாமல் நாகரீகமாக சில வார்த்தைகளை தவிர்த்திருந்தாள் ரத்னா.
முதன்முறையாக தன் தாயை நினைத்து அவமானமாக உணர்ந்தான். ஒருப் பெண்ணின் மானத்தோடு விளையாடுமளவிற்கு அவனது தாய்க்கு பரம்பரைக் கௌரவம் முக்கியமாக இருந்திருக்கிறது.
ரத்னாவின் கண்ணை சந்திக்க முடியாமல் இப்போது வருண் திணறலானான். ஆனால் அவனது மன வேதனையை ரசிக்கும் எண்ணத்தில் தான் ரத்னா இருக்கவில்லை.
“இதுக்கு தான் வருண் நான் எதுவும் சொல்லாம கிளம்பணும்ன்னு நினைச்சேன். உங்களை காயப்படுத்த எனக்கு விருப்பமில்லை.” என மென்மையானக் குரலில் ரத்னா வருணின் இருக் கன்னங்களைப் பற்றி மிருதுவாக வருடியவாறுக் கூறவும்,
அவளது பிஞ்சு விரல்கள் தன் கன்னத்தை விட்டு விலகுவது கூட அத்தருணத்தில் வருணால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ரத்னாவின் விரல்களைத் தன் கன்னத்தோடு வைத்து அழுத்தியபடி, சற்று நிமிடங்கள் அப்படியேக் கண்கள் மூடி நின்றிருந்ததை,
தங்களது பேச்சு வார்த்தை முடிந்ததைத் தொடர்ந்து, மெல்ல நடந்து வந்து பால்கனியிலிருந்து பார்த்திருந்த பெரியவர்களுக்கு ஏதோ ஒன்று சரியில்லை எனத் தோன்ற ஆரம்பிக்க,
“வருண்!!! மேல வா… ரத்னாவையும் கூட்டிட்டு வா!!” என மரகதம் பாட்டி கட்டளையிட, அவரது அழைப்பில் சட்டென விலகி நின்றவர்களுக்கு ‘இப்போது இவர்களை எப்படி சமாளிப்பது?!’ என திருதிருவென விழித்தபடி மாடிக்கு சென்றனர்.
தவறு செய்து மாட்டியவர்களைப் போல தலைகுனிந்து நின்றவர்களுக்கு ‘அனைத்தையும் பார்த்துவிட்டனரோ?!’ என்றப் பதட்டமே முதலில் மனமெங்கும் மேலோங்கியிருந்தது.
“என்னடா பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல?!” என புருஷோத்தமன் வருணைப் பார்த்துக் கேட்கவும் தான் இருவருக்குமே உயிரே வந்தது.
‘அப்பாடி! பெருசுங்க ‘அந்த’ சேட்டையப் பாக்கலடா சாமி! டேய்.. வருணு.. தேவையாடா இந்த மானங்கெட்டப் பொழப்பு?! கட்ரோல் யுவர்செல்ஃப் மேன்!’ எனத் தனக்குத் தானே மெல்ல முணங்கியவனின் வார்த்தைகள் யாவும் ரத்னாவின் காதில் தெளிவாக விழ, பக்கென சிரித்து விட்டாள்.
அவளது சிரிப்பைக் கண்டதும் தான் பெரியவர்களுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனாலும், “என்னம்மா?” எனக் கனிவுடன் ரத்னாவின் கன்னத்தைத் தடவியபடி மரகதம் பாட்டி கேட்கவும், சற்றுத் தயங்கியவளோ தற்போதைய நிலவரம் தவிர்த்து மற்ற நிகழ்வுகள் எதையும் மறைக்காமல் கூறினாள்.
நேத்ரா மற்றும் சந்துருவின் திருமண பந்தத்தைக் கூறாமல் ரத்னா மறைத்ததைக் கண்ட வருண், மெல்ல ரத்னாவின் காதருகே வந்து, “ஏன் எல்லா விஷயத்தையும் முழுசா சொல்லல?!” என ஹஸ்கி வாய்ஸில் கேட்கவும்,
“அங்க என்ன நிலவரம்ன்னு தெரியாம வாய விட வேண்டாம் வருண். பாட்டி இப்போதா கொஞ்சம் தெளிஞ்சு வந்துருக்காங்க. சோ.. இத மட்டும் இந்தியா போயி பாத்துக்கலாம். ப்ளீஸ்…” என பதிலுக்கு ரத்னாவும் அதே ஹஸ்கி வாய்ஸில் பதிலளித்தாள்.
ஆனால் வருண் மற்றும் ரத்னாவின் கண்களுக்கு காதம்பரி குற்றவாளியாகத் தெரிந்தாரென்றால், புருஷோத்தமன் மற்றும் மரகதத்திற்கு காதம்பரியை அவ்வாறு செய்யத் தூண்டியது யாரெனப் புரிந்து அவர்களுக்குள் ஒருவித சங்கேதப் பார்வையைப் பகிர்ந்து கொண்டனர்.
“ஆனா பாட்டி.. காதம்பரி ஆன்ட்டிக்கு பின்னாலயும் யாரோ இருக்காங்க. அது மட்டும் எனக்கு தெளிவாத் தெரியும். அது யாருன்னு தான் இன்னும் நான் கண்டுபிடிக்கணும். அதுக்கு தான் நான் இந்தியா கிளம்பணும்ன்னு சொல்றேன்.” என ரத்னா தன் குடும்பத்தின் நினைவில் தற்போது நடந்த எவற்றையும் கூறாமல் மறைத்தக் குற்றவுணர்வில் சற்றுக் குரல் கம்மக் கூறவும்,
“இப்போ நீ இந்தியா போகணும். இல்லையா?” என நிதானமாக மரகதம் பாட்டிக் கேட்கவும், ‘ஆம்’ என தலையாட்டியவளைக் கண்டு மெல்லியப் புன்னகைக்கீற்றை சிந்தியவர்,
“ராஜா! ரத்னாவுக்கும் சேர்த்து இந்தியாவுக்கு டிக்கெட் போட்ரு. அவளும் நம்மக்கூட வரட்டும்.” என ஒன்றும் அறியாதவர் போல தன் மகனிடம் கூறியவரை, விழிகள் அகலப் பார்த்தவள் குறும்புடன் இதழ்களை மடித்து அழுத்தி, புருவங்களை உயர்த்தி ஏதோப் புரிந்தது போல புன்னைகைத்தாள் ரத்னா மெல்ல தலையசைத்தபடி.
“ம்மா.. காதம்பரி மட்டும் இங்க இருக்கட்டுமே..” என ஆரம்பித்த புருஷோத்தமனின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவர், “புருஷோத்தமா! அவ கெட்டவ இல்லப்பா. அவள ஒதுக்கி வைக்காத. அவளும் வரட்டும்.” என தன் மகனின் தோளை ஆதரவுடன் தட்டியபடி கூறுவதைக் கேட்ட புருஷோத்தமனோ,
“அதில்லம்மா.. அவ உங்கக்கிட்ட நடந்துக்கிட்ட விதத்தைப் பார்த்ததுக்கு அப்புறம் அவக்கிட்ட நான் பேசுறதையே நிறுத்திட்டேன். இப்போ போய் எப்டிம்மா அவக்கிட்ட பேசுறது?!” எனத் தயங்கிய புருஷோத்தமனின் சங்கடத்தைப் புரிந்து கொண்ட ரத்னா,
தனது தலையின்மேல் இருக் கொம்புகள் முளைத்தது போன்ற உணர்வுடன் சில்மிஷமாக சிரித்துக் கொண்டு, “அந்தக் கவலை உங்களுக்கெதுக்கு அங்கிள்?! அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். நீங்க கிளம்புறதுக்கு தேவையானத எடுத்து வைங்க. போங்க.. போங்க.. போங்க..” எனக் கண்ணடித்து சிரித்தவளைக் கண்டு மற்ற மூவரும் ஏதோ புரிந்தது போல,
“எப்டியும் வச்சு செய்யப் போற?! பாத்து செய்மா. காதுவோட காது பாவம்.” எனக் கிண்டலாக மரகதம் பாட்டி வெளிப்படையாகக் கூறவும் அதுவரை இருந்த இறுக்கம் தளர, அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.
அப்போது தான் லேடிஸ் கிளப்பிலிருந்து வீட்டிற்கு வந்திருந்த காதம்பரி காரிலிருந்து இறங்கியபோது, இவர்களனைவரும் மாடியில் நின்று சிரித்துப் பேசுவதைப் பார்த்து விட்டு எரிச்சலடைந்தார்.
சிரித்துக்கொண்டே கீழே ஏதேச்சையாக பார்த்த வருணின் முகம் சட்டென இறுக, அதைக் கவனித்த மற்றவர்களும் திரும்பி நின்று காதம்பரியைக் கண்டதும் எந்தவித உணர்வுமில்லாமல் பார்த்தனர்.
அனைவரும் தன்னைத் தான் பார்க்கின்றனர் என உணர்ந்த காதம்பரி, படக்கென எதையும் கவனியாதது போன்ற பாவனையுடன் காரின் கதவைப் படாரென அறைந்து சாற்றிவிட்டு வீட்டினுள் சென்று விட்டார்.
தன் காரியத்திலேயே கண்ணாய் இருந்த ரத்னாவிற்கு காதம்பரியை இந்தியாவிற்கு அழைத்துச் செல்வதில் பெரிதாக ஒன்றும் சிரமமிருக்கவில்லை. காதம்பரியிடம் சென்று தனது மொபைலில் சேவ் பண்ணி வைக்கப்பட்ட மரகதம் பாட்டிக்கு எதிரே நின்று காதம்பரி பேசிய சொற்பொழிவை ஒருமுறை போட்டுக் காண்பித்தாள் ரத்னா.
அவள் நினைத்தது போலவே காதம்பரி மிகவும் பயந்து விட்டார். தன் கணவருக்கும் தன் பிள்ளைகளுக்கும் இந்த வீடியோவைக் காட்ட வேண்டாமென கெஞ்ச ஆரம்பித்தார் காதம்பரி.
அவரது கெஞ்சலை அலட்சியம் செய்தவளோ, “அப்போ எங்கக்கூட நீங்க இந்தியா வரணும். இல்லைன்னாஆஆ..” என குடுகுடுப்பக்காரன் போல மொபைலை ஸ்டைலாக ஆட்டியபடி விளையாட்டாக வாக்கியத்தை இழுத்தவளிடம் பதறிப் போய்,
“வேண்டாம்..வேண்டாம்.. யார்க்கிட்டயும் இதைப் போட்டுக் காட்டிடாத. ப்ளீஸ்… நீ என்ன சொன்னாலும் நான் கேட்குறேன்.” எனக் கெஞ்சியவரிடம் மேலும் வம்பிழுக்கும் நோக்குடன்,
“நானும் உங்கப் பையன் வருணும் இந்தியால டேட்டிங்லாம் ப்ளான் பண்ணி வச்சுருக்கோம். சோ…” என கிண்டலாக புன்னகைத்தபடி ரத்னா கூறவும், ‘எல்லாம் என் தலலயெழுத்து! இருடி உன்னை வச்சுக்குறேன்.’ என மனதிற்குள் கறுவியவாறு,
“அ..ஆங்.. தாராளமா போங்களேன். யார் வேணான்னு சொன்னது?! எனக்கு நோ அப்ஜெக்ஷன்!” என பல்லைக் கடித்தபடி கூறினார் காதம்பரி.
உண்மையில் தனக்கு கிடைத்த குடும்பம் ஒரு பொக்கிஷம் என்பதை காதம்பரி எள்ளளவும் புரிந்து கொள்ளாமல், அர்த்தமில்லாத எதையோ தேடிச் சென்று தன் வாழ்வை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீலிமா தான் சுருக்கென முள் தைத்தாற் போல புரிய வைத்தாள்.
அவர்களிடமிருந்து மெதுவாக நகன்று தனதறைக்கு உள்ளே வந்தவர், நீலிமாவிற்கு மொபைலில் அழைத்து தானும் தனது குடும்பமும் இந்தியா கிளம்பி வருவதாக தகவல் அளித்தார் காதம்பரி. ஆனால் நீலிமாவிடமிருந்து கிடைத்த தகவலில் தன் இதயமே வெடித்துவிடுமளவிற்கு அதிர்ந்து போய் அப்படியே படுக்கையில் அமர்ந்து விட்டார்.
‘ஆக.. நான் இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டதெல்லாம் வீணாப் போச்சே.. அய்யோ.. இப்போ இவள எப்டி சமாதானப்படுத்துறது?!’ என சங்கடத்துடன் நெளிந்தவரிடம்,
“அத்தை.. முடிஞ்ச வரைக்கும் என் சந்துரு எனக்கு கிடைக்க நான் போராடுவேன். இல்லைன்னா அவனக் கொன்னுட்டு நானும் செத்துருவேன். நான் சந்திரகலா இல்ல. நீலிமா…!!!” எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டு ஃபோனைக் கட் செய்தாள் நீலிமா.
‘என்ன…?!!!’ என அதிர்ந்தபடி, “ஹலோ..ஹலோ..ஹலோ.. நீலு.. நான் சொல்றதக் கொஞ்சம் கேளும்மா. அப்படி ஏதும் விபரீதமா யோசிக்காத.” எனக் காதம்பரி கத்திக் கொண்டிருந்த வார்த்தைகள் யாவும் பாலைவனத்தில் சிந்திய நீரைப் போல வீணானது.
முதன்முதலாக தன் மகனின் உயிர் சம்பந்தமான பயம் காதம்பரியின் தாய்மையைத் தீண்டி சிலிர்த்தெழ வைத்தது. இறந்து போன தன் தோழிக்கு செய்யும் கடமையாக, உதவியாக நீலிமாவை தன்பிள்ளைப் போல அரவணைத்து வளர்த்ததற்கு இது சரியான பலனாக தெரியவில்லை என்பது காதம்பரிக்கு அப்போது தான் தெள்ளத்தெளிவாக புரிந்தது.
‘எவருக்கும் கிடைக்கவில்லையென்றால் கொன்றுவிடுவாளாமே?! அதையும் தான் பார்க்கிறேனே?! அருமைப் பெருமையாய் என் மகனை வளர்த்தது இவள் சாகடிக்கவா? இதை நான் அனுமதிப்பேன் என்று வேறு நினைக்கிறாளா அவள்?!’ என வெகுநாட்கள் கழித்து சுயமாக யோசிக்கச் செய்தது காதம்பரியின் தாய்ப்பாசம்.
