உயிர் உருகும் தேடல் நீ
தேடல்… 4!!
ஆயிற்று இன்றோடு உதயச்சந்திரன் தேய்பிறையாய் மறைந்து ஆறு மாதங்கள்… யசோதாவும் சந்தானமும் சென்னை செல்லவில்லை. மகன் இல்லா வீட்டை பார்க்கும் தைரியம் அவர்களுக்கு இல்லை. அந்த வீட்டின் ஆணிவேராய் இருந்த செண்பகத்தம்மாளும் இந்த ஆறு மாதத்தில் ஜீவனற்றே காணப்பட்டார். சற்குணம் தன் ஈஸிசேரே கதி என்று கிடந்தார்.
இதுவரை அந்த குடும்பத்தில் பெண் குழந்தைகளை தவற விட்டிருக்கிறார்கள் தான். ஆனால் இன்று வளர்ந்து கல்யாண வயதினை எட்டி இருக்கும் காளையை இழந்து களை இழந்து கிடந்தது அந்த குடும்பம். யாரும் எதிர்பாராத அவனின் மறைவு அவர்களை நிலைகுலைய வைத்தது.
“அவன் பைக் ரேஸ்ன்னு ஆரம்பிக்கும் போது தடுத்து இருக்கணும்! அதை விட்டு கோடிக்கணக்கான பணத்தை கொடுத்து பைக்கும் வாங்கி கொடுத்து… நம் பிள்ளைக்கு நாமே எமனாகி போனோமோ??” என்று சொல்லி சொல்லி வருந்தாத நாள் இல்லை யசோதா!!
ஒற்றைப் பிள்ளை.. ஒற்றைப் பிள்ளை… என்று பிள்ளை கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்து, செல்லம் கொடுத்து.. கொஞ்சி கொண்டாடி.. தலையில் வைத்து கூத்தாடி.. என்று அவர்களின் வாழ்வை பெற்றோராகிய நாமே தடம் மாறி தடுமாறி விழ வைக்கிறோம்.
ஆனால் எத்தனை குழந்தைகள் அந்த தடம் புரண்ட வாழ்க்கையில் இருந்து.. தடுக்கி விழுந்த வாழ்க்கையிலோ எழுந்து இருக்கிறார்கள்? அல்லது எத்தனை பெற்றோர்கள் அப்படி தாங்கி பிடிக்கிறார்கள்? ஒன்று குழந்தையோடு குழந்தையை அவர்களும் விழுந்த இடத்திலிருந்து எழாமல் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இல்லையேல் விழுந்தவனை நற்பாதையில் எடுத்துச் செல்லாமல் அவனுக்கு பக்க பலமாய் நின்று கொள்கிறார்கள்.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உறுதுணையை பக்கபலமாய் இருக்க வேண்டியதுதான்!! ஆனால் அவன் தவறு செய்யும் போது திருத்த வேண்டிய பொறுப்பும் அவர்கள் ஆகிறது.
கடவுள்கள் கொடுத்த வரங்கள் பிள்ளைகள்!! அவர்களை போற்றி வளர்க்கவில்லை என்றாலும் வீணடிக்க வேண்டாமே.. ஒற்றை பிள்ளை… என்ற பெயரை சொல்லிக்கொண்டு???
இங்கு யசோதாவும் அதனை தான் செய்தார். சந்தான பாண்டியன் அதற்கு துணை நின்றார்!! அனைத்தையும் வாரி கொடுத்துவிட்டு இப்பொழுது அழுது என்ன பயன்?
சூரியவர்த்தனுக்கு நிற்க நேரமில்லை. என்று நன்றாக உணவருந்தியது என்று கூட தெரியவில்லை. தேவகியும் முதல் ஒரு வாரம் முடங்கி தான் கிடந்தார். ஆனால் மற்றவர்களின் நிலை உணர்ந்து தன்னை தானே தேற்றிக்கொண்டு அவர்களை தேற்றவும் முயன்றார். என்னதான் தேவகி யசோதாவை நெருங்கினாலும் அவர் நெருங்க விடவில்லை.
“சாப்பிட தான் இல்ல.. இந்த பாலையாவது குடி யசோ.. உடம்பு என்னத்துக்கு ஆகும் இப்படியே இருந்தா?” என்று கலங்கிய குரலில் தங்கையை தேற்ற அவர் முயற்சி செய்ய..
யசோதாவா “உனக்கு என்ன? நீ நல்ல தின்னுட்டு தெம்பாதான இருக்கே! உன் புள்ள நல்லா கல்லு மாதிரி தான் இருக்கான். போனது வாரி கொடுத்தது என் பிள்ளையை தானே?” என்று விஷத்தை கக்க.. கையில் இருந்த பாலை போட்டுவிட்டு விக்கித்து அவரை பார்த்த தேவகி.. அதன் பின் அவரை நெருங்கவே இல்லை.
“என்ன வார்த்தை சொல்லிட்டா? தங்கை என்று இவளை தேற்றப்போனால்.. இப்படியா பேசுவா?” என்றவர் மனத்தாங்காமல் கணவனிடம் அன்று இரவில் அழுது புலம்ப.. அது கேட்ட சௌந்தரத்திற்கு அவர்கள் மீது கோபமும் கொள்ள முடியவில்லை. வேறு வழியின்றி மனைவியை தான் தேற்றினார்.
“தேவி.. அவங்கள நினைச்சு பாரு பிள்ளையை வாரி கொடுத்ததும் அவங்களுக்கும் கஷ்டமா தானே இருக்கும்”
“இல்லைன்னு சொல்லலைங்க.. நமக்கு கஷ்டமில்லையாங்க??” என்றவர் அழுது வெடிக்க… மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டார்.
“விடு தேவிம்மா… யசோ பத்தி தெரிஞ்சது தானே?” என்று தேவகியை ஆற்றுப்படுத்தினார்.
“அதுக்காக.. அதுக்காக.. இருக்குற ஒரு புள்ளையும்.. என் புள்ள நல்லா இருக்குறது உறுத்துதா அவளுக்கு? குடும்பத்துக்கு வாரிசுனு இருக்குறது அவன் மட்டும் தான்! அவனையும் தூக்கி கொடுக்கணுமா? இல்லை எனக்கு புரியல?? எதுக்கும் நான் அவளை எதுவும் பேசினதில்லை. ஆனா.. ஆனா.. அவ என்ன வார்த்தை சொல்லிட்டா?” ஏங்கி ஏங்கி அழுது கரைந்தார்.
ஆனாலும் அடுத்த நாள் வழக்கம் போல உணவை எடுத்துச் சென்று தேவகியை மறைத்து நின்ற செண்பகம் “தேவகி.. எங்க போற?” என்று கேட்டார் என்றார்.
“யசோவுக்கு சாப்பாடு எடுத்துட்டு போறேன் அத்தை..” என்றார்.
“சந்தானம்..!!” என்று வீடு அதிர அவர் அழைக்க… உள்ளே அறையில் யசோ எப்போதும் போல சோகத்தில் இருக்க… சந்தானம் வாயிலில் தன் அண்ணனோடு பேசிக் கொண்டிருந்தவர், அன்னையின் அழுத்தமான குரலில் உள்ளே ஓடி வந்தார். என்ன இது என்று சௌந்தரமும் கூட வந்தார்.
“உன் பொண்டாட்டிய தேத்துறது மட்டுமே எங்க வேலை கிடையாது!! நாங்களும் அவன் மேல பாசம் வைத்தவர்கள் தான்.. எட்டி இருந்ததனால பாசம் இல்லனோ அக்கறை இல்லனோ கிடையாது!! ஆனால் இன்ன வரைக்கும் உன் பொண்டாட்டி பேசறதுக்கு எதுக்கும் எதிர்த்து தேவகி ஒரு வார்த்தை பேசினதில்லை. அவளுக்கு பேசத் தெரியாமல் கிடையாது. குடும்பம் வேணும் உறவு வேணும் நினைத்து அமைதியா இருக்கா.. ஆனா அதுக்கும் ஒரு எல்லை இருக்கு!!”
துக்கத்தில் இருக்கும் அம்மா இப்படி ஆத்திரமாக பேச.. அப்ப எதுவோ யசோதா வாய் விட்டு இருக்கிறாள் என்று நினைத்தார்.
“ஆனா சந்தானம்.. நேத்து பேசுனதுன என்னால ஜீரணிக்க முடியல!” என்றதும் என்ன என்று புரியாமல் “அவ ஏதாவது புள்ள போன தூக்கத்துல ரெண்டு வார்த்தை பேசியிருப்பா.. மன்னிச்சிக்கோங்க அம்மா” என்றவர் தேவகி பக்கம் திரும்பி “மன்னிச்சுக்கோங்க அண்ணி! அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்..” என்ன எது என்று தெரியாமலே மன்னிப்பு கேட்டார் சந்தானம். அவர் மனைவியை பற்றி தெயிந்தது தானே? யசோவின் வாய் எதையாவது சொல்லி இருக்கும் என்று நினைத்திருந்தார்.
“நீ நினைக்கிற அளவு உன் பொண்டாட்டி சாதாரணமா வாய் விடல.. இவளுக்கு ஆறுதல் சொன்னவ கிட்ட.. ‘உன் புள்ள கல்லு மாதிரி இருக்கான்! உனக்கு எங்க என் துக்கம் தெரியப்போகுதுன்னு சொல்றா?’ அப்போ அவளோட நினைப்பு என்ன? இருக்கிற ஒத்த வரிசையும் நாங்க தூக்கி கொடுக்கனும் நினைக்கிறீங்களா இரண்டு பேரும்? சொல்லுங்க?” என்றதும் அதிர்ந்து நின்றார் சந்தானம்!!
“சொல்லு டா.. அந்த புள்ள இங்க இருந்தா ஒழுங்கா கட்டுப்பாடாக வளர்ந்து இருப்பான். இருக்க விட்டீங்களா நீங்க? நீங்க மட்டும் தான் ஒத்த புள்ள வச்சிருக்கீங்களா? தேவகி என்கிட்ட விடல.. அப்படியா வளர்த்து வச்சிருக்கோம் நாங்க வரதன? அந்த புள்ள ஒரு வேலை ஒழுங்கா சாப்பிட்டு எத்தனை நாள் ஆகுது தெரியுமா? ஆறு மாசம் எல்லா தொழிலும் அவன் தான் பார்க்கிறான்! சென்னை தூத்துக்குடி மார்த்தாண்டம்னு சுத்தி சுத்தி ஓடுறான்.. அந்த புள்ளைய பார்த்து என்ன வார்த்தை கேக்குறா உன் பொண்டாட்டி? கருவேப்பிலை கொத்து மாதிரி ஒத்த வாரிசு இருக்கு! அதையும் தூக்கி குடுக்கணும் நினைக்கிறாளா அவ?” என்று ஆத்திரத்துடன் அவர் கேட்டு ஒவ்வொரு கேள்வியையும் கண்டு தேவகியும் சௌந்திரமுஅ மௌனமாய் இருக்க.. சந்தானத்திற்கு பதைபதைத்தது மனைவி தவறவிட்ட வார்த்தையில்…
“யசோ….” என்று இவர் கத்த.. அதுவரை மாமியார் பேசியதெல்லாம் அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த யசோவிற்க்கு அப்போதுதான் அவர் சொன்ன வார்த்தையின் வீரியம் புரிய.. அவசரப்பட்டு வார்த்தையை விட்டு விட்டோமோ என்று மனம் குமைய வெளியே வந்து நின்றார்.
“அண்ணிகிட்ட மன்னிப்பு கேளு!” என்று சந்தானம் கூற.. கண்கள் கலங்க அனைவரையும் பார்த்தவர் மெல்லிய குரலில் “மன்னிச்சுடு கா!” என்றார். தங்கையின் கலங்கிய தோற்றம் தமக்கையை வருத்த அவரை தன்னோடு அணைத்துக் கொண்டார் தேவகி இரண்டே எட்டில் அவரை அணுகி…
“இதுதான் பாசம்! இதுதான் உறவு! இதுதான் அன்பு! இதையெல்லாம் வேண்டாம் சொல்லிடு தானே எல்லாத்தையும் உதறிவிட்டு சென்னைக்கு போனீங்க… இப்போ யார் உங்களை பார்த்தா? யாரு உங்களை தேற்றினா? நீங்கள் வைத்திருந்த பணமா.. இல்லை பகட்டுக்காக உங்களை சுற்றி நின்ற சொந்தமா.. இல்லை வீண் ஆடம்பரங்களில் பொழுதுபோக்குகளில் உங்களோடு செலவழித்த உங்க நண்பர் கூட்டமா? எதுவும் இல்லை!! உன் கூட பிறந்தவன்.. உன் கூட பொறக்கலைனாலும் உன்னோட அக்கா..!!” என்று மகனையும் மருமகளையும் ஒரு வாட்டு வாட்டி எடுத்தார் செண்பகம்.
இதையெல்லாம் அமைதியாக பார்த்திருந்தார் சற்குணம். “இத நீ முன்னமே செய்து இருக்கலாம் செண்பகம்.. என் பேரன் இப்போ உயிரோட இருந்திருப்பானே!” என்று மெல்லிய குரலில் கூறிக் கொண்டே அவர் நெஞ்சை தடவிக் கொள்ள அனைவரும் அந்த உண்மை சுட.. தப்பு பண்ணிட்டோமா என்று அப்பாவின் காலடியில் அமர்ந்து கதறினார் சந்தானம்.
“இன்னொரு முறை இந்த வீட்ல போனது பற்றி பேச கூடாது. இனி நடப்பதை பற்றி பாருங்க” என்று முந்தானையில் கண்களை துடைத்துக் கொண்டே செண்பகத்தம்மாள் கூற, அதன்பின் யசோவும் சந்தானமும் மெல்ல மெல்ல இயல்புக்கு திரும்பினர். உடனடியாக இல்லை என்றாலும் அறையிலே அடைந்து முடங்காமல் வெளியே எழுந்து இயல்பு போல் நடமாடினர்.
மகனை இழந்த துக்கம் இருக்கத்தான் செய்தது. அதையும் தாண்டி வாழ வேண்டுமே?? அதுவும் யாரையும் வருத்தாமல் வாழ வேண்டும் என்று அறிவு உணர்த்த… தற்பொழுது அண்ணனோடு தூத்துக்குடி சென்று வந்து கொண்டிருந்தார் சந்தானம்.
இனி சென்னை பக்கம் போவதில்லை என்று முடிவெடுத்து அங்குள்ள தொழில்களை என்ன செய்வது என்று பார்க்க சென்று இருந்தான் சூரியவர்த்தன்.
முழுக்க முழுக்க மகனுக்காக அவன் சவுரியத்திற்காக என்று பார்த்து பார்த்து கட்டி இருந்த வீடு. இப்பொழுது அந்த வீட்டில் தான் தங்கி இருந்தான் சூரியவர்த்தன். அங்குள்ள சில முக்கியமான கோப்புகள் சந்தானம் மற்றும் யசோதாவின் உடைமைகள் அனைத்தையும் இரண்டு நாட்கள் முன்னால் தான் வேலை ஆட்களின் உதவியோடு தன் நம்பகமான டிராவல்ஸ் மூலம் மார்த்தாண்டத்திற்கு அனுப்பி இருந்தான்.
உதயசந்திரன் அறையில் தான் ஒவ்வொன்றாக பார்த்திருந்தான் வர்த்தன். உறங்குவதற்கு என்று ஒரு அறை.. நண்பர்களோடு கேலி பேசி சிரிக்க என்று தனியாக ஒரு அறை.. உடற்பயிற்சிக்கு என்று ஒன்று.. இண்டோர் கேம்ஸூக்கு என்று தனியிடம் என்று அவ்வளவு சொகுசாக வளர்த்திருந்தார் மகனை சந்தான பாண்டியன்.
ஒரு கசந்த முறுவலோடு அனைத்தையும் பார்த்திருந்தவன் அவன் அறையில் எதையும் உபயோகப்படுத்தாமல் தனக்கு என்று ஒரு அறையை கீழே ஏற்படுத்திக் கொண்டான்.
இனி சென்னைக்கு அடிக்கடி வந்து செல்ல நேரிடும்.. அப்படி வந்தால் வெளியில் தங்குவதை விட இதுவே சிறந்தது. அவ்வப்போது வீட்டையும் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்து விட்டான். ஆனால் சந்தானத்துற்கு விருப்பமில்லை. வீட்டை விற்று விட வேண்டும் என்றார்.
“இல்லை சித்தப்பா.. கொஞ்ச நாள் ஆகட்டும். பிறகு பார்த்துக்கலாம்” என்றவனின் மனதில் ஏக குழப்பங்கள் ஓடிக்கொண்டே இருந்தது. இதுவரை வீடு தொழில் என்று சுற்று சுற்றி வந்தவன் கண்களை மூடும் நேரம் எல்லாம் உதயசந்தரனின் வார்த்தைகள் அவனை நிம்மதியாக நித்திரை அண்ட விடாமல் செய்தது.
ப்ரித்யூ… குழந்தை.. வாரிசு.. இதே தான் அவனது மனம் திரும்பத் திரும்ப உருப்போட்டுக் கொண்டே இருந்தது. சென்னை தொழிலை தான் பார்த்து ஒரு முடிவுக்கு வருகிறேன் என்று அவன் இங்கு வந்ததற்கு காரணமும் அந்த பெண் யார் என்று கண்டுபிடிக்க தான்.
ஏற்கனவே பனை அது சம்பந்தப்பட்ட பொருட்களை இவன் எக்ஸ்போர்ட் செய்து கொண்டிருப்பதால் சித்தப்பாவின் இந்த எக்ஸ்போர்ட் இம்போர்ட் கம்பெனியை கையாளுவதில் அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ‘என்ன வாடிக்கையாளர்கள் வேறு.. பொருட்கள் வேறு.. ஆனால் தொழில் ஒன்று தானே!’ என்று முதலில் அதை சரி செய்தவன் சென்னை அலுவலகத்திற்கு சென்று தனக்கு என்று ஒரு பிஏவை புதிதாக அப்பாய்ட்மெண்ட் செய்தான். அப்படி வந்தவன் தான் பரத்.
அவனுக்கு தொழிலைத் தாண்டி இந்த பிரத்யக்ஷாவை தேடவும் அதைப்பற்றி விவரங்களை அவ்வப்போது இவனுக்கு சொல்லவும் ஒரு ஆள் தேவைப்பட்டது. அதற்காகத்தான் தனக்கு பிஏவாக பரத்தை தேர்வு செய்தான்.
ஆறு மாதங்களாக அவனது நண்பர்கள் பற்றி ஒவ்வொருவரை பற்றியும் தகவல்களை தனியார் துப்பறியும் நிறுவனத்தின் மூலம் கண்டறிய செய்தான். உதய்யின் இறப்புக்கு வந்த நண்பர் குழு அதற்குப்பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு சென்று விட்டனர்.
பவன் மீண்டும் வெளிநாட்டிலேயே வேலை தேடிக் கொண்டு சென்று விட.. மிதுன் சரியாக இன்ன தொழில் என்று இறங்காமல் பொழுதுபோக்காக சுற்றிக் கொண்டிருந்தான்.
இந்துவுக்கு மாப்பிள்ளை பார்த்து விட.. ஷாப்பிங் என்று சுற்றிக் கொண்டிருந்தாள். கூடவே நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையோடு சாட்டிங் டேட்டிங் என்று அவளது உலகம் தனியே சென்றது. மயூரியின் நிலை என்னவென்று தெரியவில்லை. கொடைக்கானல் அருகில் இருக்கும் பாட்டி வீட்டோடு போய் தங்கி விட்டாள் என்று இருந்தது.
ஹரிஷ் தான் அவ்வப்போது தனியாக பப்புக்கு சென்று தண்ணி அடித்துக் கொண்டு நண்பனை நினைத்து அவ்வப்போது அழுவான். பின்பு தனது தந்தையோடு தொழில் பார்க்கிறான் என்ற தகவலும் வந்திருந்தது. இதில் யாரும் சந்தேகப்படுப்படி இல்லை.
மேலும் தம்பியின் அனைத்து விஷயங்களும் அறிந்தவர்கள் என்றால் ஒன்று மயூரி மற்றொன்று ஹரிஷ்!! மயூரியை விட ஹரிஷை அணுகுவதை மேல் என்று எண்ணியவன் அவனை அழைத்து வர சொன்னான்.
வீட்டுக்கு வர சொன்னவன் ஹாலில் அமர்ந்து வரும் ஹரிஷை உற்றுப் பார்த்தான். அந்த வீட்டில் கால் எடுத்து வைத்த முதல் அவன் முகம் அவனையும் மீறி நண்பனை நினைத்து கலங்குவதை கசங்குவதை கண்டு அமைதியாக இருந்தவன் எதிரில் அமரச் சென்னான்.
“ப்ரத்யூங்குறது யாரு ஹரிஷ்?” என்று இவன் நேரடியாக விஷயத்திற்கு வர தூக்கி வாரி போட்டது ஹரிஷூக்கு.
“அண்ணா… அது…??”
*உதய்க்கும் எனக்கும் ஒரே வயசு தான்! அதனால நீ என்னை சூரியானே கூப்பிடலாம்” என்றதும் ஹரிஷின் தலை எல்லா பக்கமும் ஆடியது. பின்பு அவனுக்கு தெரிந்தவரை அனைத்தையும் கூறினான்.
அவர்கள் படித்த காலேஜில் சென்று ப்ரித்யூ பற்றி விவரங்கள் கேட்ட பொழுது அவளின் பழைய வீட்டு விலாசம் மட்டுமே இருந்தது. கூடவே அவளது புகைப்படம் ஒன்றும் அங்கு இல்லை… “எனக்கு எப்படியாவது அந்த பொண்ணோட போட்டோ வேணும் ஹரிஷ்! ஏற்பாடு பண்ணு!!” என்றவன் “கடைசி நேரத்துல உதய் இந்த மாதிரி சொல்லி இருக்கானா… கண்டிப்பா அதுல விஷயம் இருக்கும். அவன் கடைசி ஆசை நிறைவேற்றனும்னு பார்க்கிறேன்” என்றான் வர்த்தன்.
“கண்டிப்பா சூர்யா உங்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்” என்றவன் தனது வீட்டில் கிடந்த பழைய போட்டோக்களை எல்லாம் ஆராய்ந்தான். அவனது லேப்டாப் பழைய பென்ட்ரைவ் என்று பார்க்க.. இவர்கள் குழு இருந்த போட்டோக்கள் தான் அத்தனையிலும் இருந்தது. அதில் உதய்யை பார்க்க பார்க்க இன்னும் மனம் ஆறாமல் அழுகை வந்தது ஹரிஷுக்கு.
கடைசியாக ஒரு பழைய பென் டிரைவில் இவர்கள் சென்ற இண்டர்காலேஜ் காம்படீஷனில் இரண்டாவது கோப்பை பெறும்போது அனைவரும் நிற்க அதில் ப்ரித்யூவும் நின்றிருந்தாள். அதை தவிர அவளோடது பிரத்தியேகமான போட்டோக்கள் ஏதும் அவனிடம் இல்லை.
அதை கொண்டு வந்து காட்ட பரதநாட்டிய அலங்காரத்தில் இருந்த அவளின் முகம் அத்தனை தெளிவாக இல்லை. ஆனாலும் அவளை மட்டும் அதற்கான டெக்னீஷ்களிடம் கொடுத்து தனியே எடுத்து வைத்துக் கொண்டான் சூர்யா.
ஒருபுறம் இவன் ப்ரித்யூவை தேடிக் கொண்டிருக்க.. மறுபுறம் இவனது கல்யாணத்தை நெருக்க செய்ய அவன் வீட்டுக்கு வந்தார் கபாலீஸ்வரர் வெண்மதியின் அப்பா.
உதய் இறந்ததிலிருந்து அவரின் கணக்கு இன்னும் பெரிதாயிற்று. முன்னாடியாவது இரண்டு பிள்ளைகள். சொத்துக்கள் பிரியும்!! இப்பொழுது இருப்பது ஒரே ஒரு வாரிசு!! சொத்துக்கள் அனைத்தும் வில்லாமல் விரியாமல் வந்து சேரும்.
என்னதான் இவர்கள் கல்யாணம் வரை வந்தாலும் திடீரென்று இறப்பினால் இன்று கல்யாணம் நடைபெறாமல் இருக்க.. இடையில் யாரும் குழப்பம் செய்து விடவோ இல்லை குறுக்கே யாரும் பாய்ந்து விடவோ கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்.
அவ்வப்போது வந்து இரண்டு தங்கைகளையும் பார்த்து ஆறுதல் கூறி விட்டு செல்வார். அன்றும் அவர் அப்படி வந்திருக்க செண்பகத்தம்மாளோ இவரை கண்டு கொண்டதில்லை.
“இன்னும் இப்படியே இருந்தா எப்படி மா? ஒரு கெட்டது நடந்த வீட்ல நல்லது நடக்க வேண்டாமா.. யார் கண்டா சின்ன மாப்பிள்ளையே வந்து மாப்பிள்ளைக்கு பிள்ளையா பிறந்தாலும் பிறக்கலாம்!” என்று இவர் கொளுத்தி போட.. அது யசோதாவின் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
இம்முறை அவரே சென்று மாமியாரிடம் வர்த்தனின் திருமணத்தைப் பற்றி பேசினார்.
“உன் அண்ணன் தான் புரியாம பேசுறானா நீனும் புரியாம பேசுற யசோ.. இன்னும் புள்ள செத்து ஒரு வருஷம் ஆகல.. அதுக்குள்ள எப்படி பண்ண முடியும்?” என்றதும் அவர் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள “இந்த பிடிவாதம் உன்னிடம் குறையவே மாட்டேங்குது என்ன? எப்படியும் இன்னைக்கு நைட்டு வரதா வந்துருவான். நாளைக்கு நீயே அவனிடம் கேளு” என்றார்.
“நானா??” என்று அதிர்ந்தவரிடம் “ஆமாம் நீயேதான்!!” என்று அழுத்தமாக கூறிவிட்டு சென்றுவிட்டார் செண்பகம்.
முதல் நாள் இரவு 12 மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வந்தான் வர்த்தன். மறுநாள் காலை உணவு உண்ணும் நேரத்தில் தேவகி அவனிடம் பேசிக் கொண்டே பரிமாற.. ஏக்கமாக தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தார் யசோதா.
அது வர்த்தனுக்குத் தெரிந்தாலும் தன் அன்னையின் இடத்தை மற்றவருக்கு கொடுக்க அவன் விரும்பவில்லை. ஆனாலும் அவர் பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்து “எதுவும் என்கிட்ட கேட்கணுமா சித்தி?” என்று கேட்டான்.
“ஆமாம்..!” என்று தயங்கி தயங்கி அவன் முன்னே வந்து நின்றவர், அக்காவை கண்களால் கெஞ்சி “நீ பேசேன்!” என்று கூற.. “நான் மாட்டேன்! நீயே பேசு!” என்று அவரும் கண்களால் பதில் பேச..
“இரண்டு பேரும் கண்களால் காதல் செய்றீங்களா?” என்று கிண்டல் செய்தவனின் முதுகில் தேவகி பட்டென்று ஒன்று போட்டார்.
“சொல்லுங்க சித்தி! என்ன விஷயம்?” என்றதும் “நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கியேன் சூர்யா” என்றார் நிமிர்ந்து அவரை ஒரு பார்வை பார்த்தவன், அப்பொழுது நிதானமாக உணவை விழுங்கி கொண்டு “இப்போதைக்கு கல்யாணம் பண்ற மூடில் நான் இல்ல சித்தி.. நீங்களும் ஒரு வித வருத்தத்துல இருக்கீங்க.. அந்த வருத்தத்தோடு எல்லாம் இந்த வீட்ல நல்லது நடந்தா நல்லா இருக்காது! இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்!! அதோட இல்லாம எனக்கு இப்ப வேலை சரியா இருக்கு.. கல்யாணம் பண்ணாலும் அந்த பொண்ணு கூட என்னால டைம் ஸ்பென்ட் பண்ணவே முடியாது. அதுவே பல பிரச்சனைக்கு வழிவகுக்கும்.. உதய்யோட தெவஷம் முடியட்டும்” என்று அவன் கூறி விட அதற்கு மேல் பேச முடியாமல் அனைவரும் மௌனம் காத்தனர்.
காலம் அப்படியாக செல்ல… ஓராண்டு நிறைவடைந்தது உதய் அவர்களை விட்டு பிரிந்து…
கற்குவேல் அய்யனார் கோவிலில் மீண்டும் இருவருக்கும் திருமணம் செய்ய நல்ல நாள் பார்க்க வந்திருந்தனர் குடும்பத்தினர். இப்பொழுது தேவகியவுடன் யசோதா தான் மிக ஆர்வமாக இருந்தார் கல்யாணத்தை எதிர்நோக்கி..
இவர்கள் திருமணத்திற்காக நல்ல நாள் கேட்க திடீர் என்று சந்தனம் வந்த பூசாரி “ஏற்கனவே நீங்க செய்த பெண் பாவம் பத்தாதா?? மீண்டும் அங்க ஒரு பொண்ணை வாரிசோட தவிக்க விட்டு.. இங்கே கல்யாணம் பண்ணுவீங்களா?” என்று சொன்னதும் அனைவரும் அதிர்ந்தனர்.
அதுவும் வாரிசா?? என்று பேரதிர்ச்சி அனைவருக்கும்!!
உண்மையில் வாரிசு இல்லை வாரிசுகள்!!
பெங்களூர் அருகே ஒரு சின்ன நகரத்தில் தனது நாட்டிய பள்ளியில்
நடனம் கற்றுக் கொடுத்து கொண்டிருந்தாள் ப்ரத்யுக்ஷா.. அருகில் ஒரு வயது நிரம்பிய அவளது பிள்ளைகள்.. தேஜ் மற்றும் தீரஜ்!!
தேடல் தொடரும்…
