அடி என் மவுனத் தாரகையே
மௌனம் 22
அப்படியே ஆடாமல் அசையாமல் பதுமை போல் நின்று விட்டாள் மது ,;ஒரு மனிதருக்கு கெட்ட நேரம் வந்தால் இப்படி கூட வருமா என்று அதிர்ச்சியின் உச்சத்தில் மது..
ஏனெனில், மகாராணி போல வாழ்ந்த வசுந்தரா இன்று மிகச் சாதாரணமான மனிதரைப்போன்ற நிலைக்கு மாறி விட்டதே இதற்கு காரணம்..
எந்த முன் பகையையும் மனதில் கொள்ளாமல் அவர்களை உள்ளே அழைத்து குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தாள் மது..
கண்களில் கண்ணீரோடு இருவரும் இருமுறை தண்ணீர் கேட்டு வாங்கிக்குடிக்க, அவர்களது முகமே பசியோடு இருக்கிறார்கள் என்று இவளுக்கு உணர்த்தியது..
எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் அவர்களை உணவருந்த அழைத்துச் சென்று, அவர்கள் வயிறார சாப்பிடும் வரை அருகில் இருந்து பரிமாறினாள் மது…
அதன்பின்னரே அவர்களிடம் “ஏன் இப்படி ஒரு கோலத்தில் இருக்கிறீர்கள் என்னவாயிற்று உங்களுக்கு”?? என கேட்க,அவளைக் கட்டிப்பிடித்து கதறிவிட்டார் வசுந்தரா..
வசுவா இப்படி??..அதுவும் மதுவிடம்!!…
இவளிடம் தன் மன உணர்வை வெளிப்படுத்துவது என்றால் உண்மையிலேயே திருந்தி விட்டாரோ??…
“அடி என் தங்கமே!! உன்னைப்போய் பகையாளியாய் நினைத்தேன், மனசாட்சியே இல்லாத பல கொடுமைகள் செய்தேன், கடைசியில் உன்னை கொல்லும் அளவு கூட துணிந்தேன்.. என் மகனின் வாழ்க்கையிலிருந்து முழுவதாக உன்னை விலக்கி வைக்க முயற்சி செய்தேன் .. ஆனால் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாது இப்படி அன்பு பாராட்டுகிறாய்..
இங்கு எதற்கு வந்தாய்??.. என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல், உள்ளே அழைத்து பசித்த வயிறுக்கு சாப்பாடு போட்டாயே.. நீயல்லவோ மனுஷி!!.. நானும் நான் இருந்தேனே பெண்ணென்று உருவத்தில் பேயாய்…
பணப் பேய் பிடித்து அலைந்தேன், அதிகார பேய் பிடித்து அலைந்தேன், கடைசியில் நம்பியவர்களே மோசம் செய்ய.. நட்புகள் கையை விரிக்க.. யாரெல்லாம் என்னை புகழ்ந்து என் பணத்தில் குளிர்காய்ந்தார்களோ அவர்களெல்லாம் என்னை புறம் பேசியதோடு எனக்கு அறிவுரை வழங்க ஆரம்பித்தனர்.
அங்குதான் என் அகங்காரம் பெரிய அடி வாங்கியது ..
கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வர, என்ன செய்வது என்றே புரியாமல் ஒவ்வொரு சொத்துக்களாய் விற்க ஆரம்பித்தோம்.. கடைசியில் குடியிருந்த வீடு கூட மிஞ்சவில்லை.. நடுரோட்டில் வரும் நிலை வரும் என கனவிலும் நினைக்கவில்லை மது…
யதுவின் வீட்டில் கூட சம்பந்தி என பாராது உதவி கேட்டு விட்டேன், மிகவும் கேவலப்படுத்தி அனுப்பிவிட்டார்கள்.. நிற்கதியாய் நிற்கும் நிலை வர, கடைசியாக ஆதியிடம் உதவி கேட்கலாம் என்று வந்தோம்..
அப்பொழுது கூட எனது கர்வம் இடம் தரவில்லை.. அவனிடம் நான் மண்டியிட்டு கேட்க வேண்டுமா??.. என்று ஒரு தலைக்கனம் எனக்கு, உண்மை நிலையை கூறாமல் ஏனோதானோவென்று உதவி கேட்டேன்…
கடவுளே!! அவன் பேசிய பேச்சுக்கள் இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது..
எவ்வளவு மோசமான ஒரு தாயாக இருந்திருக்கிறேன் நான்..
நினைத்து நினைத்து தினமும் அழுகிறேன் நான்.. செய்த பாவத்திற்கு அளவே கிடையாது இதை கேட்பது தவறு தான் ஆனாலும் கேட்கிறேன் என்னை மன்னித்து ஏற்றுக் கொள்வாயா??.. எனக்கு வேறு யாருமே இல்லை உங்களைத்தவிர”… என்று கண்களில் கண்ணீரோடு குரலில் நெகிழ்ச்சியோடு மன்றாடினார் வசுந்தரா..
கனத்த மனதுடன் அதிர்ச்சியாய் பார்த்துக்கொண்டிருந்த மது, நொடிப்பொழுதில் கையெடுத்துக் கும்பிட்ட வசுவின் கைகளை கீழே இறக்கி, “எந்தக்காலத்திலும் நீங்கள் என் அத்தை என்பது மாறாது. தாராளமாய் நீங்கள் எங்களோடு இருக்கலாம்.. நாம் அனைவரும் ஒன்றாக இருப்போம் அத்தை”.. என்று கூற, நெகிழ்ச்சியோடு மதுவை இறுக கட்டிப்பிடித்துக் கொண்டாள் வசுந்தரா…
“என்னை மன்னித்து விடு அம்மா”.. என்று வேலு தன் தங்கையிடமும் மருமகளிடம் இரு கை கூப்பி வணங்கி கேட்டார்…
இருவரும் ஒருசேர “ஏதோ ஒரு கஷ்டகாலம் நாம் அனைவரும் இப்படி இருந்தோம், இனி அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்.. பழையதை விடுங்கள் அண்ணா” என பத்மாவும் “நீங்க பெரியவங்க இந்த மாதிரி எல்லாம் பண்ணி என்ன சங்கட படுத்தாதீங்க மாமா, நாம எல்லாரும் ஒற்றுமையாய் சந்தோஷமாய் இருக்கலாம் மாமா” என்று மதுவும் கூறினாள்..
இந்த அனைத்து கூத்தையும், எந்த உணர்ச்சியும் இல்லாது கைகளை கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்த படி பார்த்துக்கொண்டிருந்த ஆதியின் மைண்ட் வாய்ஸ் நமக்கு தெரியாதல்லவா இதோ,
‘யப்பா சாமி என்ன நடிப்பு நடிக்குது எங்க அம்மா.. அதை இந்த லூசு என்னமா நம்புது பாரேன். இவளை ஏமாற்றுவது இவ்வளவு ஈசியா?? கொஞ்சம் சென்டிமென்ட் டயலாக் விட்டாபோதும் கவுந்துடுவா போல இருக்கே..யார் யாருக்கோ அறிவாளி பட்டம் தர்ராங்க மொதல்ல என் பொண்டாட்டிக்கு தாங்கப்பா.. இவளை எல்லாம் என்ன பண்ணாலும் திருத்த முடியாது லூசு லூசு.. என மனதிலேயே தலையில் அடித்துக் கொண்டான்..
எங்க அம்மாவே தானா திருந்துச்சாமா… அதை இவ நம்புறா..எங்க போய் நான் முட்டிக்கரது.. இந்த நிலைமைக்கு இவங்க வர்றதுக்கு நான் எத்தனை வேலை செஞ்சேன்னு எனக்கு இல்ல தெரியும் , கடைசியில் என்னை ஒரு ஓரமாக கைகட்டி வேடிக்கை பார்க்க வைத்து விட்டார்களே..
இது தான் கலிகாலம் என்பதோ??.. ஒவ்வொரு தொழிலையும் முடக்கி, பணப்பட்டுவாடாவை நிறுத்தி, நெருக்கடி கொடுத்து, நம்பிக்கையான ஆட்களை வேலையை விட்டு தூக்கி, பேங்க்ல கடனை திருப்பி கேட்க சொல்லி பிரஷர் கொடுத்து, ஸ்ஸ்சப்பா…. எத்தனை வேலை செஞ்சிருக்கேன் நான்…. இதுக்கு எவ்வளவு செலவு பண்ணி இருக்கேன்??… ஆனா எனக்கு ஒரு கிரெடிட் இல்ல..
எல்லாம் என் நேரம்.. ஆதி உன் நிலைமை இப்படியாடா ஆகணும்!!… அங்க பாரு பாச மழை பொழிகிறதை.. பார்த்துப் போகனும் டா ஆதி இல்லன்னா இவங்க பாசத்துல வழுக்கி விழுந்தாலும் விழலாம்.
.இவங்களையெல்லாம் என்னைக்கு நம்ப முடியாதுடா சாமி.. எப்ப முட்டிக்குங்க, எப்ப சேர்ந்துக்குங்க என்றே தெரியலை. நான் ஒரு முட்டாள், இவள பத்தி தெரிஞ்சும் வாய் விட்டுட்டேன் ,உங்களை மது ஏற்றுக் கொண்டால் நீங்கள் வீட்டுக்குள்ள வரலாம் என்று சொன்னது எவ்வளவு பெரிய தப்பா போயிடுச்சு..
ரெண்டுபேரும் வீட்டுக்குள்ள வந்து ஜம்ம்பமா உக்கர்ந்துட்டாங்களே.. சரி பாப்போம் இங்குதானே இருக்க போகிறேன், அவங்க சொன்ன சொல்லில் இருந்து ஒரு படி மாறட்டும் வெச்சு செஞ்சுடுவோம்..
குழந்தைங்க சிரிக்கிற சத்தம் கேக்குது, அவங்கள பாக்காம இங்கே எங்க அம்மாவை கொஞ்சிட்டு இருக்கா இவள எல்லாம் என்ன பண்றது… என்னை கொஞ்சுடின்னா போங்க மாமா எனக்கு தூக்கம் வருது, இல்ல டயர்டா இருக்குது, இல்ல குழந்தைகளை பார்க்கணும் …என்று அடுக்கிட்டு போறா, இங்க பாரு குசலம் விசாரிக்கரதை..
இன்னைக்கு உனக்கு இருக்குதுடி மகளே.. உன்னை விடுவதாயில்லை, புருஷன் பொண்டாட்டி சண்டையில் இடையில யாராச்சும் வந்தாங்க அவ்வளவுதான் அவங்க கைமாதான்..என்று நினைத்தவாறு, அங்கு நடக்கும் நிகழ்வுகளைவேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..
“ஆதி எங்களை மன்னித்துவிடு.. நீ என் மகன் என்பதை மறந்து உன்னிடம் போட்டி போட்டுவிட்டேன், அதற்கான தண்டனையை அதிகமாகவே அனுபவித்து விட்டேன் ..இனி நீ ஒரு நல்ல அம்மாவை பார்ப்பாய், எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடு”… என்று ஆதியின் அருகில் வந்து அவன் கையைப் பிடித்து வசுந்தரா கெஞ்ச வேலுவும் அவ்வாறே செய்தார்…
தன் கையை அவர்களிடமிருந்து விடுவித்தவன், “மதுதான் உங்களை இங்கிருக்க சொல்லிட்டாளே, இனிமேல் இங்கேதானே இருக்கப் போறீங்க, நீங்க உண்மையிலேயே மாறி விட்டீர்களா இல்லையான்னு பாக்கத்தானே போறேன்??.. மாறிட்டீங்க என்றால் ரொம்ப சந்தோஷம் தான்.. அப்ப நானே உங்ககிட்ட நல்லா பேசுகிறேன் அதுவரை என்னிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள்” என்றவாறு உள்ளே சென்று விட்டான்..
மகன் இந்த அளவு தங்களை அனுமதித்ததே பெரிய விஷயம் என்று இவர்களும் அமைதியாக இருந்துவிட்டனர்.. இனி எதிர்காலத்தில் நல்லபடியாக வாழ்ந்து காட்டுவோம் என்று மனதில் உறுதி எடுத்துக்கொண்டனர்..
குழந்தைகளின் அழுகுரல் கேட்க, அவசர அவசரமாய் உள்ளே விரைந்தாள் மது..
அப்பொழுதுதான் வசுவும் தனக்கு பேரக் குழந்தைகள் பிறந்திருக்கு என்பதை அறிந்து கொண்டாள்.. கோடி கோடியாய் பணம் இருந்த பொழுது உணராத அன்பை இப்போது உணர்ந்தவர், எங்கள் வாரிசு பிறந்திருக்கிறது எப்படி வெறும் கையோடு பார்ப்பது என்று மனம் அழுத்த, இப்படி ஒரு நிலைமை யாருக்குமே வரக்கூடாது என்று நிலைகுலைந்து அப்படியே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தார்..
சட்டென்று முகத்தில் வெளிச்சம்!!.. கழுத்தில் இருந்த தாலி கொடி தான் அதற்கு காரணம்..
உடனேயே தன் கணவரை அழைத்துக்கொண்டு “சற்று காற்றாட சென்று வருகிறோம் அண்ணி” என்று தன் நாத்தனாரிடமும் கூறிவிட்டு வெளியே வந்தனர்.
ஏற்கனவே பழகிய ஊர் என்பதால் சிட்டிக்குள் சென்று தன் நகையை விற்று, குழந்தைகளுக்கென்று என்னென்ன தங்கத்தில் அடிப்படையாய் வாங்க வேண்டுமோ அதெல்லாம் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்…
இவர்களது இந்த மாறுதல் யாராலும் நம்ப முடியவில்லை.. ஆனால் கண்முன்னே நடப்பதால் நம்பாமலும் இருக்க முடியவில்லை.. சாட்சியாய் வேடிக்கை மட்டும் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
வசு தம்பதியினர் வந்த நேரம் குழந்தைகள் கை காலை உதைத்துக் கொண்டு விளையாடிக்கொண்டிருந்தன குழந்தைகளுக்கு தங்களது பரிசுகளை அணிவித்து தூக்கி உச்சிமுகர்ந்து கண்கள் கலங்க “எங்கள் வாழ்க்கையை ஒளியேற்ற வந்த தெய்வப் பிறவிகள் நீங்கள், இனி உங்களை வளர்ப்பதில் தான் எங்கள் முழு கவனமும் இருக்கும்”.. என்று இருவரிடமும் கொஞ்சிக் கொண்டிருந்தனர்
அப்பாடி நம்மளுக்கு அடிமை சிக்கிட்டாங்க… என்று மதுவின் மனமோ குத்தாட்டம் போட்டது.
பின்னே இரட்டை குழந்தைகளை வளர்ப்பது என்றால் சும்மாவா??.. ஒரு நிமிடம் கூட ஓய்வு இல்லாமல், தன்னை கூட கவனிக்க முடியாமல், ஓடியாடி கொண்டு இருக்கிறாளே..
இப்பொழுது தானாக வலிய இவர்கள் வந்து ‘ஆலம்பனார்உங்கள் அடிமைகள் நாங்கள்’ என்று தலை கொடுத்தால், சும்மா விட இவள் என்ன பைத்தியமா?? என்ஜாய் த டைட் ஷெட்யூல் என்று பெருமையாக கூறிக்கொண்டு பொறுப்பை ஒப்படைத்தாள்..
ஒரு வழியாக அனைவரும் அவரவர் வேலைகளில் ஐக்கியமாகி விட, ஆதி தம்பதியினருக்கு நிறைய ஓய்வு கிடைத்தது..
குழந்தைகளின் பசிக்காக மட்டுமே மதுவை நாடி வரும்படியும் மற்ற நேரங்கள் அனைத்தும் ஆளுக்கு ஒரு குழந்தையாக பார்த்துக்கொண்டனர் வசு & கோ..
இப்பொழுது பழையபடி ஆதியும் மதுவும் காதல் வசம்..
இரவு குழந்தைகள் இவர்கள் அருகில் இருப்பதால் பகலில் இருவருக்குமான நேரம் ஒதுக்கப்பட்டு விடும் மொத்தத்தில் ஆதியின் நிலை இப்பொழுது ஜாலியோ ஜிம்கானா தான்..
விவசாயத்தில் மட்டுமல்லாது நீர்நிலைகளை பாதுகாக்க , தூர்வாரும் பணிகள் என்று தன் செயல்களின் மூலம் பல்வேறு வகைகளில் சுற்றுப்புறத்தை முன்னேற்றுவதற்காக தன் நேரங்களை செலவிட்டான் ஆதி.
நாடு நமக்கு என்ன செய்கிறது என்பதை விட நாம் நாட்டிற்காக என்ன செய்தோம் என்று சிந்திப்பதே சாலச்சிறந்தது.. என்று அனைவரையும் இந்த முயற்சியில் கை கொடுக்கச் சொன்னான். இப்பொழுது ஆலமரமாக இவர்களது அமைப்பு விரிந்து பரந்து நிற்கின்றது..
இரண்டு வருடங்களுக்குப் பிறகு,
தக்ஷ்விகா, தக்ஷ்ஷேஷ்
குழந்தைகளின் காதணி விழா..
குழந்தைகள் இருவரும் மூன்று வயது எட்டி இருக்க, இருவருக்கும் காதுகுத்தி, குல சாமிக்கு பொங்கல் வைத்து கும்பிடலாம் என்று மிகப்பெரிய விழாவை ஏற்பாடு செய்திருந்தனர் ஆதி மது தம்பதியினர்.
யாரும் எட்டாத உயரத்தில் நினைத்துப் பார்க்க முடியாத செயல்களை செய்து கொண்டு இருக்கும் இவ்விருவரும்,தங்களை நம்பி வரும் அனைவரையும் அரவணைத்துக்கொண்டு பெரும் சேவை ஆற்றி வருகின்றனர்…
மது இப்பொழுது மிகப் பெரிய கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்துகிறாள்..
ஆதி பரம்பராவோடு நில்லாமல் பல்வேறு சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்த பல செயல்கள் செய்ய, இதைக்கண்ட அரசாங்கமும் ஆதிக்கு கைகொடுக்க, இப்பொழுது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு ஆதித்தன் அவர்கள்…
நாட்டின் அனைத்து வளங்களையும் மாசு மருவின்றி மீட்டெடுத்துக்காப்பதே தன் வாழ்நாள் லட்சியம்.. என செயல்பட்டு வருகிறான் இந்தப் போராளி…
இவ்விருவரின் வீட்டு விசேஷம் என்பதால் கூட்டம் களைகட்டியது…
மதுவிற்கு உடன்பிறந்தவர்கள் இல்லை என்பதால் தாத்தா பாட்டி மடியிலேயே அமர்ந்து குழந்தைகளுக்கு அனைத்து சீர்களும் செய்ய வசுவும் வேலுவும் மிகவும் அகமகிழ்ந்து போயினர்.
அனைத்து விசேஷங்களும் முடிந்தபின்னர் குடும்பத்தையே ஒன்றாக நிற்க வைத்து அனைவருக்கும் திருஷ்டி சுத்தி அம்மாச்சி கூறினார் , “இதுபோல ஒரு குடும்பத்தை பார்க்க முடியாது.. அந்த அளவு ஒற்றுமையாக வாழ்கிறீர்கள்.. இதற்கு ஒரே காரணம் உங்களின் விட்டுக்கொடுத்தலும் உள்ளார்ந்த அன்புமே!!.. இது உங்களிடம் மட்டுமில்ல உங்கள் குழந்தைகளிடமும் சொல்லிக்கொடுத்து வளர்க்கிறீர்கள், இந்த குடும்பத்தின் மேல் எந்தக் கண்ணும் படக்கூடாது, நீங்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழவேண்டும்”… என்று கூறி ஆசீர்வதித்து பூசணிக்காயை சுற்றினார்..
அனைவரும் மகிழ்ச்சியோடு சிரித்த வண்ணம் அம்மாச்சி காலில் விழுந்து வழங்கியதோடு, தங்கள் கனவுகளை மேலும் மெருகூட்ட ஆயத்தமாயினர்….
நாமும் இந்த அன்பான குடும்பத்தை வாழ்த்தி விடை பெறுவோம்.
