மோகம் 31 :
இன்று ராணியின் வீட்டிற்குப் பெண் கேட்க செல்வதாக இருந்தார்கள் .மித்ரன் விக்கியிடம் “நான் என் கார்ல வரேன் மச்சான் ,நீங்க முன்னாடி போங்க சரியா…” என்றதும் விக்கி “சரி” என்று வைத்து விட்டான்.
மித்ரனின் பெற்றோர் அடுத்த வாரம் வருவதாகக் கூறியிருந்தார்கள். மதுவிடம் கிளம்ப சொன்னவன் சிவகாமி கையெழுத்துப் போட்டுக் கொடுத்த பத்திரத்தை எடுத்து வைத்தான்.
அவன் பத்திரத்தை எடுத்து வைப்பதைப் பார்த்து “சித்திக் கிட்ட கொடுக்கப் போறீங்களா அத்தான்” என்றதும் அவன் ஆமென என தலையாட்ட அவன் கன்னத்தில் நச்சென்று ஒரு முத்தத்தைப் பதித்து விட்டு குளியலறைக்குள் புகுந்து விட்டாள்.
இருவரும் கிளம்பி வண்டியில் போகும் போது “அத்தான் எனக்கு கொஞ்சம் சாக்லேட்ஸ் வாங்கி தாங்க” என்றதும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வண்டியை நிறுத்தினான்.
“உனக்கு எவ்ளோ வேணுமோ வாங்கிகோடா” என்றவன் பழங்கள் ,சில திண்பண்டங்கள் வாங்கினான்.
“இது எதுக்கு”
” முதல் தடவை உங்க வீட்டுக்குப் போறோம்ல அதான்.”
“அங்கேயே போறோம்”
” அங்க போகாம ராணி வீட்டுக்குப் போனா நல்லாருக்காதுடா,உங்க வீட்டுக்குப் போய்ட்டு அப்புறம் ராணி வீட்டுக்கு போவோம் சரியா”.
“ம்ம்”
” ஆமாம் நீ சாக்லேட்ஸ் இதுவரைக்கும் சாப்டது இல்லையே “
“இது வானுக்கு அத்தான் அவ சாக்லேட்ஸ்னா விரும்பி சாப்பிடுவா அதான் அவளுக்குக் கொஞ்சம் வாங்கினேன்” என்றாள்.
இன்னும் கை நிறைய சாக்லேட்ஸை எடுத்தவன் அதையும் சேர்த்து பில் போட்டான்.பின் இருவரும் கிளம்பினர்.
மதி வீட்டிற்கு சென்றதும் சிவகாமி “அங்கயே நில்லுங்க” என்றதும் “அய்யோ சித்தி ஏன் இப்படி பண்றாங்க “என்று நினைத்துக்கொண்டே மித்ரனைப் பார்கையில் அவன் முகத்தில் ஒன்றும் கண்டுபிடிக்க முடிக்கவில்லை.
பின் திரும்பியவள் அதிர்ந்தாள்.அங்கு சிவகாமி ஆரத்தி தட்டைக் கையில் ஏந்தியவாறு வந்தார்.
மதி மித்ரனைப் பார்த்தாள் ,மித்ரனுக்கும் இது அதிர்ச்சி தான் அவனும் இதை எதிர்ப்பார்க்க வில்லை.
சிவகாமி இருவருக்கும் ஆரத்தி சுற்றி விட்டு “வீட்டுக்குள்ள போங்க மாப்பிள்ளை” மதியிடம் “மாப்பிளையை உள்ளே அழைச்சிட்டு போ” என்று விட்டு ஆரத்தியைக் கொட்டச் சென்றார்.
வீட்டுக்குள் சென்றவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்றாள் வான்மதி “என்னக்கா அதிர்ச்சி மேல அதிர்ச்சியா” என்று கேட்டதும் மது ஆமென தலையசைக்கவும் “இனி அப்படிதான் ” என்றாள்.
அவளிடம் ஏதோ கேட்க வந்த மது சிவகாமி வரவும் அமைதியானாள்.
மித்ரன் தான் கொண்டு வந்த பழங்கள் அடங்கிய பையை மதிகையில் கொடுத்துக் குடுக்க சொன்னான்.
அவன் கண்கள் சிவகாமியைக் கூர்மையாக அளவிட்டது.
மதுவிடம் பாசமாக பேசவில்லை என்றாலும் முன்பு போல குரோதத்துடனும் பார்க்கவில்லை.
சிவகாமி மதியிடம் “மாப்பிள்ளையை உன் அறைக்கு அழைச்சிட்டு போ சாப்பாடு ரெடி ஆனதும் கூப்பிடுறேன்…அப்போ வாங்க இன்னும் அந்த தம்பி (விக்கி) வர தாமதம் ஆகுமாம் கொஞ்ச நேரம் முன்னதான் போன் வந்துச்சுன்னு ராணி சொன்னா உள்ள கூட்டிட்டு போ”.
வாங்கி வந்த பைகளை வான்மதியிடம் கொடுத்தாள். அவளை பார்த்து “என்ன வானு இது நம்பவே முடியலை “என்று கேட்டதும் “நீ முதல்ல மாமாவ கூட்டிட்டு ரூமுக்கு போ எல்லாம் அப்புறம் சொல்றேன்” என்றவள்” ஹே எனக்கு சாக்லேட்ஸ் வாங்கிருக்கியா சூப்பர்” என்று குதூகலித்தாள்.
பின் இருவரும் அறைக்குள் வந்தனர். “அத்தான்..”என்று சொல்ல வந்தவளை “உங்க சித்திய பத்தி எதும் பேசாத மது என்னால அவங்களை நம்ப முடியாது ” என்றதும் “ஏன் அத்தான் அவங்க முன்னாடி என்னை பேரு சொல்லிக் கூட கூப்பிடமாட்டாங்க இப்போ பாருங்க. ஏன் அத்தான் தப்பு பண்ணினவங்க மாறக்கூடாதா” என்று கேட்டாள்.
எதையோ நினைத்துக் கண்களை மூடி திறந்தவன் “மதி என்னால அவங்களை மன்னிக்கவும் முடியாது அவங்க உனக்கு பண்ணின கொடுமைகளை மறக்கவும் முடியாது “என்றான்.
“சரி அத்தான் நான் எதும் பேசலை நீங்க கோபப்படாதீங்க”.
அப்பொழுது கதவைத்தட்டிவிட்டு வான்மதி மோர் இருவருக்கும் எடுத்து வந்தாள்.”இந்தாங்க மாமா எடுத்துக்கோங்க” என்றதும் எந்த பிகுவும் செய்யாமல் எடுத்துக் கொண்டான்.
பின் மதியிடம் தட்டை நீட்டி “எடுத்துக்கோக்கா” என்றவள் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததைக் கூறினாள்.
“ராணி அக்கா இரண்டு நாளுக்கு முன்னாடி வந்து பொண்ணு பாக்க வரப் போறதாகவும் அதுக்கு நீங்களும் வருவீங்க என்று அம்மாகிட்ட சொன்னதும் உன் அறையைச் சுத்தமா துடைச்சு கட்டில் மெத்தையெல்லாம் அம்மா தான் போட்டுச்சுக்கா என்னால நம்பவே முடியலைக்கா எப்படியோ இப்போ வாச்சும் திருந்துச்சே” என்று பெருமூச்சு விட்டவள் “சரி இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு வாங்க சாப்பாடு ரெடி ஆயிடும் சாப்பிட்டு ராணி அக்கா வீட்டுக்கும் போலாம்” என்று கூறிவிட்டு சென்றாள்.
பின்பு சிவகாமி அழைத்ததும் இருவரும் சென்றார்கள் மித்ரன் எதுவும் பேசவில்லை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தானே ஒழிய யாரிடமும் பேசவில்லை.
அப்பொழுது தான் ராமரும் வந்தார்.மித்ரனை விசாரித்தவர் தானும் சாப்பிட அமர்ந்தார். சிவகாமிக்கு இவ்வளவு சமைக்க தெரியும் என்று இன்றுதான் ராமர் பார்த்தார்.
அனைத்தும் வெஜ்ஜாக இருக்கவும் ஏன் தோட்டத்துல நிக்குற கோழிய அடிச்சுக் குழம்பு வச்சிருக்கலாம்ல என்றதும் “அட கூறுகெட்ட மனுஷா மறுவீட்டு விருந்துல அசைவம் செய்யக்கூடாது” என்று சாடினார்.
பிறகு அனைவரும் சாப்பிட்டதும் ராணி வீட்டிற்கு சென்றனர். அப்பொழுது தான் விக்கியின் காரும் வர மித்ரன் அங்கே நின்று அவர்களிடம் பேசிக்கொண்டே தங்கி விட மதி ராணி வீட்டினுள் சென்றாள்.
பின்பு பெண் பார்க்கும் படலம் முடிந்து திருமணத் தேதியை முடிவு செய்தனர் இன்னும் மூன்று மாதம் கழித்து திருமணம் வைத்துக் கொள்ளலாம் எனவும் விக்கிக்கு முகம் தொங்கி விட்டது.
அதை பார்த்து சிரித்த மித்ரன் “விடு மச்சான் இவ்ளோ நாள் பொருத்துட்ட இன்னும் கொஞ்சநாள் பொறுக்க மாட்டியா ” என்று அவன் சொன்னது போலவே மித்ரனும் சொல்லி காட்டினான்.
” நீ எல்லாம் ஒரு நண்பனாடா சிரிக்கிற” என்றதும் “மச்சான் உன் குயின் முறைக்கிறாங்கடா” என்று கூறி சிரித்தான்.
பின்பு அனைவரும் பேசி முடித்து வெளியே வந்தனர்.
அப்பொழுது விக்கி கிளம்பிவிட இவர்கள் இருவரும் சிவகாமியிடம் சொல்லி கொண்டு கிளம்பலாம் என்று வந்தவர்களை இரண்டு நாள் இருந்துட்டுப் போலாமே என்று சிவகாமி கேட்கவும் மித்ரன் மதியைப் பார்த்தான்.இருக்கலாம் என்று அவள் கண்களால் கெஞ்சவும் சரி என்று ஒத்துக் கொண்டான்.
அப்பொழுதுதான் நினைவு வந்தது வீட்டுப் பத்திரத்தைக் கொடுக்கவில்லை என்று பின்பு எடுத்து சிவகாமியிடம் கொடுத்தான் ஏதோ பேச வந்த சிவகாமியிடம் ” நீங்க மதுவ கல்யாணம் பண்ணவிட மாட்டீங்கன்னு தெரிஞ்சு தான் பத்திரத்தைக் கொடுக்கலை. இனி இந்த பத்திரம் தேவைப்படாது. “
“இனியாரலும் என்கிட்ட இருந்து மதுவ பிரிக்க முடியாது” என்று கூறினான்.
ஆனால் அவனுக்கு தெரியவில்லை மதுவே அவனை விட்டு பிரிந்து செல்வாள் என்று.
