உயிர் உருகும் தேடல் நீ
தேடல்… 20!!
காலையில் எழுந்த யசோதா வீடு அமைதியாக இருப்பதை பார்த்து தேவகியை தேடி சென்றவர், “பிள்ளைங்க இன்னும் தூங்கிட்டு இருக்காங்களா கா?” என்று கேட்டார்.
காலை உணவுக்கு என்ன சமைக்க வேண்டும் என்பதை சொல்லிவிட்டு சற்று ஓய்வாக அமர்ந்திருந்தவர் யசோதாவை பார்த்து “பிள்ளைங்க தூங்குறாங்களா முழிச்சி இருக்காங்களான்னு எனக்கு எப்படி தெரியும்?” என்றார்.
“இந்நேரத்துக்கு கீழே நீங்களே தூக்கிட்டு வந்துருவிங்களே கா ரெண்டு பேரையும்!! காலைல அவங்களோடவே இருந்து அவங்களையே தேடுது எனக்கு” என்றபடி தேவகி அருகில் சோபாவில் அமர்ந்தார்.
“அவங்கள தூக்கிட்டு வரணும்னா நான் இப்ப தூத்துக்குடிக்கு தான் போகணும்” என்றதும் புரியாமல் பார்த்து யசோதாவிடம் “உஷா நேத்து அவங்க அம்மா வீட்டிலேயே தங்கிட்டா… இரண்டு நாள் கழிச்சு தான் வருவா” என்றதும், “அது எப்படி நம்ம கிட்ட பர்மிஷன் கேட்காமல் அவளே எல்லாம் முடிவு எடுத்து இன்ஃபர்மேஷன் மட்டும் சொல்வாளாமா? நீங்க எப்படி இதுக்கு ஒத்துக்கிறீங்க? இதெல்லாம் நல்லதுக்கு இல்லை கா!! ஆரம்பத்திலேயே அடக்கி வையுங்க!! இல்லையென்றால் போகப்போக உங்க சொல் பேச்சு எதுவும் கேட்க மாட்டா… நம்ம புள்ளையையும் நம்ம கிட்ட இருந்து பிரிச்சி கூட்டிட்டு போய்விடுவா கா…” என்று மெது மெதுவாக நஞ்சை கலக்க முயன்றவரை பார்த்துக்கொண்டே வந்த சொர்ணம்பாள் “எப்படி யசோதா… என் புள்ளைய நீ என்கிட்ட இருந்து பிரிச்சிட்டு போனியே.. அப்படியா?” என்றார் நெத்தியடியாய்!!
“அது.. அது…” என்று முதலில் தயங்கியவர் “உங்க புள்ள தான் சென்னை பக்கம் பிசினஸ் ஆரம்பிச்சாரு. அதனால நானும் உதய்யும் அவர் கூடவே போனோம். இதுல என்ன தப்பு?” என்றவாறு தான் செய்த தப்பை பூசி முழுகப் பார்த்தார்.
“உன் புருஷன் பிசினஸ்காக நீ அவன் கூட போனது தப்பு இல்லேன்னா… தூத்துக்குடியில் பிசினஸ் பார்க்கிற என் பையன் கூட அவ போனது மட்டும் எப்படி தப்பா இருக்கும் யசோதா?” என்று தேவகி கேட்க இம்முறை யசோதாவால் ஒன்றும் கூற முடியவில்லை.
ஆனாலும் பிள்ளைகளுக்காய் மனம் ஏங்கியது. இந்த சில மாதங்களாக பிள்ளைகளுக்கு உணவு ஊட்டுவது.. தலைக்கு ஊற்றுவது.. குளிப்பாட்டுவது.. உடை மாற்றுவது.. விளையாடுவது.. என்று தொலைந்த தன் மகனை இவர்களில் தேடி, அதில் சுகம் பெற்றவர், இப்போது ஏனோ குழந்தைகள் இல்லாமல் இருக்க முடியாமல் தவித்தார்.
“உஷா போன் பண்ணளா?” என்றபடி சொர்ணம் தேவகியிடம் கேட்க.. “ஆமா அத்தை நேத்து நைட்டே போன் பண்ணி சொன்னா தங்கிட்டு வரேன்னு.. எப்பொழுதும் காலைல போனா சாயந்திரம் வந்துடுவா. நான் தான் கூட ரெண்டு நாள் இருந்துட்டு வான்னு சொல்லி இருக்கேன். என்ன பண்றான்னு தெரியல! உங்க பேரனும் நைட்டு இங்க வீட்டுக்கு வரல.. அநேகமா அவனும் அங்கே தங்கிட்டான் நினைக்கிறேன்” என்றார் யசோதாவை ஓரக்கண்ணால் பார்த்து…
“அவ தான் அவங்க அம்மா வீட்டுக்கு தங்கினானா.. சூர்யா ஏன் போய் அங்க தங்கனும்? இப்படி அடிக்கடி மாமியார் வீட்டில தங்கறது நல்லது இல்லை” என்று மீண்டும் அவர் ஆரம்பிக்க… அவரை கூர்ந்து பார்த்த சொர்ணாம்பாள் “நம்ம வீடு அங்க இருக்கும்போது மாமியார் வீட்டில ஏன் தங்க போறான்? அப்படியே மாமியார் வீட்டுல தங்கினாலும் என்ன தப்பு? வீட்டுக்கு வந்த மருமகள் மட்டும் மாமியார் மாமனாரை பார்த்துக்கணும் நாம நினைக்கும் போது.. நம்ம வீட்டுப் பிள்ளையும் அவன் மாமியார் மாமனார தாங்கனும் தானே?? நான் என் ரெண்டு பிள்ளைகளுக்கும் அப்படித்தான் சொல்லி கொடுத்தேன்!” என்றார் மீண்டும் யசோதாவை குத்தி காட்டியபடி…
*ஆனாலும் யசோதா சொல்றது சரிதான் அத்தை.. எப்போதும் பிள்ளைகளோடு இருந்துட்டு இப்ப அவங்க இல்லாம வீடு ஒரு மாதிரியா தான் இருக்கு” என்றார் தேவகி.
“ஒரு சில மாசம் பழகுன உனக்கே இப்படி இருந்தா.. அவனுங்க பொறந்ததிலிருந்து உஷா அம்மா அப்பா தானே வளர்த்திருக்காங்க.. அவங்களுக்கு எப்படி இருக்கும்? இருக்கட்டும்! மாசத்துல ஒரு ரெண்டு நாள் போய் அங்கு இருக்கிறது ஒன்னும் தப்பு இல்ல.. கூட்டு குடும்பத்தில் இருக்கும் போது இந்த மாதிரி சிலவற்றை அனுசரித்து அரவணைத்து சென்றால் தான் குடும்பத்துக்குள்ள எந்த சண்டை சச்சரவும் வராது. மூணாவது மனுஷன் தலையிடும் இருக்காது”
“தேவகி.. முன்ன நீ மருமகள் மட்டும்தான். இப்போ ஒரு மருமகளுக்கு மாமியாராகவும் ஆயிட்ட.. அதனால பார்த்து நடந்துக்க! வார்த்தைகள் விடும்போது கவனம் தேவை!! இதை நான் உனக்கு சொல்லணும்னு அவசியம் கிடையாது. ஆனாலும்… மனிதனின் மனம் எப்பொழுதும் ஒரே போல் இருப்பதிலேயே… சில சமயம் கிறுக்கு புடிச்சிரும்! அப்போ நல்லதெல்லாம் மண்டைக்கு ஏறாது!! பக்கத்துல இருக்குறவங்க ஏதாவது குறைகள சொன்னா.. எறும்பு ஊர கல்லும் தேயும் என்பது மாதிரி கொஞ்சம் கொஞ்சமா அவங்க பேசுறது நம்ம மனசுல ஏத்திக்க ஆரம்பிச்சிடுவோம். அதனால பார்த்து நடந்துக்கோ.. புரிஞ்சுதா!” என்று அவர் கூற புரிந்தது என்பதற்கு தலையசைத்தார் தேவகி.
“சரி சரி காலை சாப்பாடு முடிஞ்சிடுச்சதும் நீ அந்த கணக்கு வழக்கு எல்லாம் எடுத்துட்டு வா. உன் பேரனுங்க வந்ததிலிருந்து நீ அதெல்லாம் சரியாக பார்க்கவில்லை. எனக்கும் முன்ன போல முடியல.. இனி நீதானே இதெல்லாம் பார்த்துக்கணும். காலை சாப்பாடு முடிஞ்ச உடனே எடுத்துக்கிட்டு நம்ம தாழ்வாரத்துக்கு பக்கத்துல ரூமுக்கு வந்துரு.. அதுல காத்தாட ஒக்காந்து அங்கேயே கணக்கு எல்லாம் பார்க்கலாம்” என்றதும் சரியத்தை என்றவர் காலை உணவு தயாராகி விட்டதா என்று பார்க்க சென்றார்.
தேவகி உள்ளே செல்வதை பார்த்த யசோதா “அது என்ன அத்த.. பொசுக்கென்று எல்லாத்தையும் இனி அவங்க தான் பாத்துக்கணும்னு சொல்றீங்க? அப்போ எங்களுக்கு இதுல எந்த உரிமையும் இல்லையா?” என்று உரிமை கொடி பிடித்தார் யசோதா.
“உரிமையா?? அதெல்லாம் நீ பிரிச்சுகிட்டு போய் இருபது வருஷத்துக்கு மேல ஆகுது யசோதா!! எந்த உரிமையில் உரிமை இருக்குன்னு கேக்குற? இப்போ ஏதோ கொஞ்சம் மாசமா எங்களோட இங்க இருக்க.. அதுக்கு முன்ன வரைக்கும் இங்கு என்ன நடந்தது ஏது நடந்ததுனு நீ கண்டு கிட்டியா? உன் குடும்பம் உன் பிள்ளை உன் புருஷனு தனியாக தானே இருந்த!! சொத்தையும் உங்களுக்கு உள்ளதுக்கு பணமா வாங்கிட்டு தானே போனீங்க.. அப்போ இங்க இருக்கிறது மூத்தவனுக்கும் அவனுடைய குடும்பத்துக்கும் மட்டும் தான்!! இந்த அண்ணன் தம்பி பாசம் என்பது வேற.. சொத்து பத்து என்கிறது வேற!! மீண்டும் உன்னால அவங்களுக்குள்ள ஒரு பிரச்சனையை கொண்டு வந்து என் சின்ன மகனை அநாதையா தெருவுல நிறுத்திடாத!! சூர்யாவுக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்காது!! அவன் அம்மாவை ஏதாவது ஒரு வார்த்தை சொன்னால்.. அவங்களை அடியோடு ஒதுக்கி வைத்து விடுவான்! ஜாக்கிரதை!!” என்று கண்டித்து விட்டு காலை உணவு உண்ண சென்றார்.
‘ஓ!! சூர்யாவுக்கு அவங்க அம்மாவ யாராவது ஏதாவது சொன்னா உடனே தள்ளி வைத்து விடுவானாமா? அந்த சொல்றவங்க பொண்டாட்டியாக இருந்தால் கூட வா??” என்று யசோதா மனம் எக்கு தப்பாக யோசிக்க ஆரம்பித்தது.
பொறாமை தான்!! வேற என்ன? முன்னே அவர் குடும்பம் என்பது மட்டுமே அவர் கருத்திலும் மனதிலும் நிறைந்து இருக்க… இவர்களைப் பற்றி அவர் கண்டுகொள்ளவே இல்லை! இப்பொழுது தங்கள் மகன் இறந்திருக்க.. இவர்கள் மட்டும் குடும்பமாய் வாழ்வது சிறுக சிறுக அவருக்கு பொறாமை உணர்வை ஏற்படுத்தி இருந்தது.
“அப்படி என்ன தப்பு செய்துவிட்டேன்? எனக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை? நான் மட்டும் ஏன் என் பிள்ளையை பறி கொடுக்க வேண்டும்! இவள் மட்டும் நல்லா இருக்கிறாளே!!” என்று சிறு தீப்பொறியாய் ஆரம்பித்தது இன்று ‘இவர்கள் மட்டும் எப்படி நல்லா இருக்கலாம்?’ என்று பெரும் காட்டுத் தீயாய் வளர்ந்து நின்றது யசோதாவின் மனதிற்குள்.
அதனால் குடும்பத்தில் குழப்பத்தை விளைவு பண்ணவே தன் அண்ணன் கபாலீஸ்வரரோடு யாரும் அறியாமல் கரம் கோர்த்தார் யசோதா!!
சௌந்தர பாண்டியனும் சந்தானபாண்டியனும் காலையிலேயே மார்த்தாண்டம் அலுவலகத்திற்கு சென்று விட.. சற்குண பாண்டியனோ அன்று தென்னந்தோப்புக்கு தேங்காய் பறிப்பு என்று அவரும் சென்று விட்டார்.
வீட்டில் இருந்ததோ மூன்று பெண்கள். சொர்ணம்பாளும் தேவகியும் வீட்டு கணக்குகள் பார்க்க சென்று விட்டனர். வீட்டு கணக்குகள் என்றால் வெறும் வீட்டு செலவுகள் மட்டுமில்லை. இவர்களுக்கு என்று இருக்கும் சில கோயிலுக்கு தர்ம காரியங்கள்.. அவர்கள் பண்ணையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கான வசதி வாய்ப்புகள்.. கல்விக்கு உதவுவது.. திருமணம் போன்ற வைபவங்களுக்கு சீர் செய்வது என்று பலவகை அடங்கும்.
இது எல்லாம் வீட்டுப் பெண்களின் தலைமையில் தான்!! அதனால் அதைப் பற்றிய கணக்கு வழக்குகள் இந்த சிறிது காலம் சரியாக எழுதாமல் இருக்க.. அதை பற்றி தான் பேச பெரிய மருமகளை அழைத்துக் கொண்டு தனியாக சென்று விட்டார் அவர்.
‘தனித்திருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம்!’ என்று சும்மாவா சொன்னார்கள்.. எப்பொழுதுமே தன்னை தனிமைப்படுத்திக் கொள்பவர், யசோதாவின் மனது என்னென்னமோ எண்ணங்களை குப்பைகளாக சேர்த்துக் கொண்டே வந்தது. அந்த குப்பைகளின் நடுவே வாழ தொடங்கிய விட்டார் அவர். அதனோடு வாழ்பவர் மனம் மட்டும் நன்றாகவா இருக்கும்? அதனால் அந்த குப்பைமனம் கொண்டு கபாலீஸ்வரரை துணையாக்க.. அவருக்கு போன் செய்தார்.
“என்ன ணா.. இப்ப எல்லாம் உனக்கு தங்கச்சி ஞாபகமே இல்லை” என்றதும் அந்த பக்கம் இருந்த கபாலீஸோ பொரிந்து தள்ளிவிட்டார்.
“என்னது தங்கச்சியா? அன்னைக்கு அந்த வர்த்தன் அத்தனை பண்ணி வேறொரு பொண்ணு கழுத்துல தாலி கட்டும்போது என் தங்கச்சி நீங்க எல்லாம் எங்க போனீங்க? இரண்டு வருஷமா அவனுக்காக காத்திருந்த என் பொண்ணு விட்டுட்டு இன்னொருத்தி கழுத்துல அப்படி ஈஸியா தாலி கட்டிட்டான். ஏன்னு கேட்க ஒரு சொந்தம் கூட இல்லையா? இப்ப மட்டும் அண்ணனை எதுக்கு உறவு கொண்டாட வர?” என்று அவர் பேச பேச காதை குடைந்து கொண்ட யசோதாவோ…
“கொஞ்சம் நிறுத்துறியா! இப்ப பழசை பேசி என்ன பண்ண போற? புதுசா நான் உனக்கு ஒரு விஷயம் சொல்றேன் கேளு!!” என்றார்.
“என்ன புதுசா சொல்ல போற? என் பொண்ண நான் எவ்ளோ கஷ்டப்பட்டு அந்த வீட்டுக்கு அனுப்பி வச்சிருக்கேன் தெரியுமா? ஆனால் அங்க போய் பெருசா எந்த இம்ப்ரூவ்மென்ட் இல்ல!!” என்று பெருமூச்சு விட்டார், அவர் கண்ட கனவுகள் என்ன?? இன்று நடப்பது என்ன என்று!!
“அப்படி எல்லாம் எதுவும் கைவிட்டுப் போய் விடல ண்ணே… வெண்மதியும் இங்கே வந்து அவளோட பங்குக்கு நல்லாதான் செஞ்சிட்டு இருக்கா.. அன்னைக்கு அவ போட்ட போடுல சூர்யாவே அரண்டு போய் தான் அவகிட்ட தனியா பேசி ஏதோ சமாதானம் பேசி இருக்கான். அதை நான் என் இஷ்டத்துக்கு கொஞ்சம் நாலு பிட்டு போட்டு மருமகளா வந்தவகிட்ட கொளுத்தி போட்டேன். அது இப்ப வெடிச்சு.. அவ அவங்க அம்மா வீட்ல போய் தங்கி இருக்கா.. சூர்யா கூட நேத்து நைட்டு வீட்டுக்கு வரல!! அங்க இருந்த இன்னொரு வீட்டுக்கு போயிட்டான்!! ஆக… அவங்களுக்குள்ள எதுவுமே சரி இல்லை!! இந்த இடைவெளியை பயன்படுத்திகிறது உன் கையிலயும் உன் பொண்ணு கையிலயும் தான் இருக்கு” என்றதும் குஷி ஆகிவிட்டார் கபாலீஸ்.
“யசோமா…இப்பதான் நீ என் தங்கச்சி மாதிரியே பேசுற! இந்த ஒரு விஷயம் போதாது.. ஏற்கனவே கிளிப்பிள்ளைக்கு சொல்றது போல அவ்வளவு பேசி தான் வெண்மதியை அங்க அனுப்பி வைத்திருக்கிறேன். ஏடாகூடமாக ஏதாவது பண்ணுனா அவங்க அம்மாவ தொலைச்சு கட்டிடுவேன்.. இந்த வயசுல டிவோர்ஸ் பண்ணி விடுவேன் என்று எல்லாம் மிரட்டி தான் அனுப்பி இருக்கேன். அதனால கண்டிப்பாக என் பேச்சுக்கு தான் ஆடுவா!! நீ கவலைப்படாத தங்கச்சி!! புதுசா மொளைச்சவ இடத்துல என் பொண்ண உட்கார வைப்பான் இந்த கபாலிஸ்!!” என்று சூல் உரைத்தவர் சில விஷயங்களை தங்கையிடம் கூறி, “இதை என் பொண்ணு கிட்ட சொல்லு!! நீ பக்கத்துல அவளுக்கு ஆறுதல துணையாய் இருக்கனு தெரிஞ்சாலே… அவளுக்கு இன்னும் கொஞ்சம் தைரியம் வரும் அங்க பேச..” என்றதும் சரி என்றார் யசோதா.
அன்றைய பொழுதுகள் அண்ணன் தங்கை அவ்வப்போது கூடி கூடி பேசி எப்படி மீண்டும் உஷாவுக்குள்ளும் சூர்யாவுக்குள்ளும் பிரச்சினையை பெரிதாக்கி.. இருவரையும் பிரிப்பது என்பது பற்றி வெகு தீவிரமாக சிந்தித்து சிந்தித்து திட்டம் தீட்டிக் கொண்டிருத்தனர்.
அந்தோ பாவம்!! அவர்களுக்கு தெரியவில்லை ஏற்கனவே இருவரும் கூடி கூடி தான் களிக்கிறார்கள் என்று!!
மறுநாள் காலையிலேயே உணவுக்கு அமர்ந்த வெண்மதியிடம் தேவகி “மதி இன்னைக்கு நான் அத்தை பாட்டி எல்லாம் பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போறோம். நீ பத்திரமா இருந்துக்கோ! சரியா?” என்றார்.
என்ன தான் வீட்டுக்குள் இவள் தன் பிள்ளையின் வாழ்க்கையில் பிளவு ஏற்படுத்த வந்திருந்தாலும் அண்ணன் மகள் அதுவும் வயது பெண் என்று கனிவு இருந்தது தேவகியிடம்..
“இதை இவளுக்கு நீ சொல்லனுமா தேவகி? அதெல்லாம் அவ இருந்துக்குவா!! அவ யாரு பொண்ணு!!” என்று நக்கலாக செண்பகத்தம்மாள் பதிலளிக்க..
“என்ன இருந்தாலும் வயசு பொண்ணு இல்லையா அத்தை? அதுதான் தனியா வீட்ல விட்டுட்டு போக ஒரு மாதிரி தயக்கமா இருக்கு! நாள பின்ன நம்மளை எதுவும் யாரும் சொல்லிட கூடாது பாருங்க” என்றார்.
இந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தார் யசோதா. அதனால் கிளம்பும் வரை தான் வரவில்லை என்று அவர்களிடம் சொல்லவில்லை. அவரும் வருவதை போல காட்டிக்கொண்டு புடவை எல்லாம் மாற்றியவர், கடைசி நேரத்தில் வரவில்லை என்றார்.
“எனக்கு உடம்பு ஒரு மாதிரி இருக்கு! தலையெல்லாம் சுத்துது! உடம்பு தானா நடக்குது… ” என்று ஏகப்பட்ட காரணங்களை அடுக்க.. தேவகியும் சொர்ணாம்பாளும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். பின் தேவகி “சரி யசோ. வீட்ல தானே இருக்க வெண்மதியையும் பார்த்துக்கோ” என்று இவர்கள் கிளம்பி விட்டனர்.
உடனே வெண்மதியை தேடி செல்ல முயலவில்லை. ‘எப்படியும் வீட்டில் வேலைக்காரர்களில் இவர்களுக்கு விசுவாசமான ஆட்கள் உண்டு. அதனால் இப்ப நான் உடனே சென்று மதியை பார்த்தால் அதையும் போட்டுக் கொடுத்து விடுவார்கள். கொஞ்ச நேரம் நாமும் ரூமில் ரெஸ்ட் எடுப்போம்’ என்று தன்னறைக்கு சென்று கதவை சாத்திக் கொள்ளும் முன் வேலைக்காரர்களிடம் “தொந்தரவு செய்யாதீர்கள்!! எனக்கு உடல்நிலை சரியில்லை” என்று விட்டு படுத்துக் கொண்டார்.
ஒரு ஒரு மணி நேரத்தை கஷ்டப்பட்டு தள்ளியவர் அதற்கு மேல் எங்கே அவர்கள் வந்து விடுவார்களோ என்று வெண்மதியை தேடி சென்றார்.
வேலைக்காரர்களிடம் கேட்க “அவங்க தோப்பு பக்கம் போனாங்க சின்னமா” என்றார்கள்.
“தோட்டத்து பக்கம் இவ ஏன் சொல்கிறா? தனியா இருக்க பிடிக்காமல் சுற்றிக்கொண்டு இருப்பாளா இருக்கும். இவள் எல்லாம் என்ன கபாலீஸ் அண்ணன் மகளோ? இந்நேரத்திற்கு இங்கே தனியா சுற்றுவதற்கு பதில் தூத்துக்குடி சென்றிருக்க வேண்டாமா? ஏதாவது இரண்டு மூன்று பொய்களை சொல்லி சூர்யாவை அழைத்துக் கொண்டு ஹார்பர் பார்க்க ஆசை.. கப்பல் பார்க்க ஆசைனு அவனை வளைத்து போடுவதை விட்டுவிட்டு, இங்கு தோட்டத்தை ரசிக்கிறேன்.. மரத்தை ரசிக்கிறேன்.. பூவை ரசிக்கிறேன் என்று… இவளுக்கெல்லாம் சுட்டு போட்டால் கூட இந்த மாதிரி நேக்காக கிடைக்கும் வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ள தெரியாது போல..” என்று ஒன்று விட்டு அண்ணன் மகளை வசைப்பாடிக்கொண்டே சென்றவர் அங்கு கண்ட காட்சியை பார்த்து அதிர்ந்தே நின்று விட்டார்.
வேற என்ன தோட்டத்தில் மாமரத்தின் அடியில் பரத் அமர்ந்திருக்க.. அவனது மடியில் அமர்ந்து மதியோ கைகளை மாலையாக அவன் கழுத்தில் போட்டிருக்க… கொஞ்சும் கிளியாக இருவரும் கொஞ்சிக் கொண்டிருந்தனர்.
“அடிப்பாவி..!!” என்று வாயை திறந்து நின்று விட்டார் அதிர்ச்சியில் யசோதா!!
பின்னே.. இவர்கள் ஒரு திட்டத்தை தீட்டி வைத்திருக்க.. இங்கே அதற்கு எதிராக வேறொரு திட்டம் அரங்கேறிக் கொண்டிருந்தால்.. அதிர்ச்சியாகாமல் என்ன செய்வார்? அதுவும் இவளுக்கு அந்த அளவு நேக்குப் போக்கு பத்தாது.. வாய்ப்பை பயன்படுத்திக் தெரியவில்லை.. என்று அத்தனை முறை வசைப்பாடி வந்து கொண்டிருக்க.. இவளோ நாங்கள் எல்லோரும் கோயில் சென்று விட்டோம் என்ற கேபில் இப்படி அவ லவ்வரை வரவைத்து கொஞ்சிக் கொண்டிருக்கிறாளே?! எவ்வளவு தைரியம் இருக்கணும் இவளுக்கு?” என்று தான் நின்றார்.
“இந்த பையனை எங்கேயோ பார்த்திருக்கிறேனே? இவன்.. இவன்… சூர்யாவோட பிஏ அந்த பரத் இல்ல? அடப்பாவி முதலாளியை கூட இவளை கோர்த்துவிடு நாங்கள் நினைத்தால்.. பிஏ கூட காதல் வசனம் பேசிக் கொண்டிருக்கிறாளே.. இந்த மதி!” என்று திகைத்தவர் “மதி… வெண்மதி!!” என்று அந்த தோட்டமே அலற கத்தினார்.
யசோதாவின் கத்தலில் அதரிப்பதறி இருவரும் எழுந்து நிற்க.. வேகமாக வந்தவரோ “என்ன காரியம்டி செஞ்சிட்டு இருக்க.. நாங்க உன்னை எப்படி வாழ வைக்கலாம்னு பார்த்தா இப்படி ஒரு பஞ்ச பரதேசி கூட வாழ நினைக்கிறியே? உன்னை…” என்று அவளை அறைய கையை ஓங்க அதை தடுத்து பிடித்தது மற்றொரு கை!!
அந்தக்கை யார் என்று பார்த்தவர் இன்னும் அதிர்ந்தார்!! காரணம் அது மதியே தான்!!
“எங்க அத்த அடிக்க வந்தா.. குறுக்கே வந்து நீங்க தான் தடுத்து நிறுத்தனும்! எப்படி என் பொண்டாட்டிய அடிக்கலாம்னு தைரியமா கேட்கணும்! இப்படி பயந்துகிட்டு நிக்கிறீங்க?” என்று பரத்தை பார்த்து அவள் கோபமாக கூற “அச்சோ.. சாரி.. மூன்…!! எனக்கு இந்த லவ்வே புதுசு!! இதெல்லாம் எனக்கு சட்டுனு வரல.. போக போக நான் ஒன்னு ஒன்னா உன்கிட்ட கத்துக்கிறேன் மூன்!” என்றவன் கூறிய தினுசில் சிரிப்பு முகிழ்த்தது வெண்மதிக்கு!!
“தட்ஸ் மை பாய்!!” என்று இடது கையால் பரத்தின் தாடையை பிடித்து கொஞ்சி முத்தமிட்டாள் வெண்மதி!!
யசோதாவோ அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகி ஆவென்று வாயை பிளந்து பார்த்திருக்க… “என்னத்த ரொம்ப ஷாக் ஆயிட்டீங்களோ? இதைவிட இன்னும் நிறைய ஷாக் எல்லாம் இருக்கு!! அதெல்லாம் தெரிஞ்சா என்ன ஆவிங்க? வயசான காலம் சட்டுனு ஹார்ட் அடைச்சுக்க போகுது!” என்று நக்கலாக கூறியவள் யசோதாவின் கையை ஒரு சுழற்று சுழற்றி பின் விட.. அந்த சுழற்றலில் வேகமாக இரண்டு மூன்று முறை சுற்றி ஒரு நிலைக்கு வரவே தலையெல்லாம் கிறுகிறுத்து போனது அவருக்கு!!
“இருடி நீ இப்படி இவன் கூட சுத்துறத.. காதல்னு கூத்தடிக்கிறத.. உங்க அப்பனுக்கு போன போட்டு சொல்றேன்” என்றார் இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு அப்போதும் அடங்காத யசோதா!
“அத முதல்ல செய்யுங்க சின்னத்தை!! நானே எப்படிடா எங்க அப்பா கிட்ட போய் என் லவ்வ சொல்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். என்ன இருந்தாலும் நானும் ஒரு பெண் அல்லவா? எனக்கும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு வெட்கம் இதெல்லாம் இருக்கும் அல்லவா?” என்று நாடக பாணியில் ஷாலை திருகிக் கொண்டு நிலத்தில் பெரு விரலால் கோலம் போட்டப்படி வெட்கத்தில் பேசியவளை பார்த்த பரத்திற்கு காதல் பெருக.. உதட்டை குவித்து பறக்கும் முத்தத்தை ஒன்று விட்டான்.
“ஐ.. கேட்ச் இட் மாமோய்!” என்று என்று இவளும் பதிலுக்கு பறக்கும் முத்தத்தை விட்டாள் ரஞ்சிதமே ஸ்டைலில்…
“இருடி இப்பவே போன போடுறேன்!” என்று அவர் போனை போட..
“நல்லா பண்ணுங்க! என்ன சொல்வாரு? எங்க அம்மாவை ஏதாவது பண்ணிடுவேன் இல்லனா டிவைஸ் பண்ணிடுவேன் சொல்வாரு… தாராளமா பண்ணட்டும்! இந்த மாதிரி ஒருத்தர் கூட வாழ்வதற்கு எங்க அம்மா அந்த ஆள டிவோர்ஸ் பண்ணிட்டு இனிமேலாவது நிம்மதியா இருக்கட்டும்! சீக்கிரம் போன் போடுங்க…” என்றவள், “பரத் உங்களுக்கு தெரிஞ்ச நல்ல லாயர் யாராவது இருக்காங்களா?” என்று கேட்டாள்.
“ஏன் எங்க கம்பெனி லீகல் அட்வைஸர் இருக்காரே! ஒன் ஆப் தி டாப்பஸ்ட் லாயர் இன் த சிட்டி!” என்றான் அவன்.
“சீக்கிரம் அவர் கிட்ட ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வைங்க!” என்றாள் இவள்.
உடனே யசோதா தன் போர்முறையை மாற்றினார். “ஏண்டா உண்ட வீட்டுக்கு துரோகம் பண்றியே? எப்படி உன் பாஸ் விட்டு பெண்ணை காதலிக்கிறியே? என்று அவன் மனதில் குற்ற உணர்வை ஏற்படுத்த முயன்றார்.
அவனோ வெண்மதியை பார்க்க.. வெண்மதியோ கண்களாலேயே சமாதானம் செய்தாள்.
“இரு முதல்ல சூர்யாவுக்கு போன் பண்றேன்!” என்றதும்..
“போடுங்க.. போடுங்க.. போன போட்டாங்க!! எங்க காதலை சேர்த்து வைச்சதே அவரு தான்!” என்று கெத்தாக கூறி மேலும் ஒரு குண்டை தூக்கி யசோதாவின் தலையில் போட்டாள் வெண்மதி!!
தேடல்… தொடரும்!!
