சீதையின் ராவணன்
அத்தியாயம் – 5
“அத்தான். எப்படியிருக்கீங்க?”
“ஹேய் சித்ரா! என்ன திடீர்னு?”
“அக்கா தான் வரச்சொன்னா.”
“ஓ! அண்ணி தான் வரச் சொன்னாங்களா?”
“ம்ம்ம். எங்க உங்க பொண்டாட்டி?”
“இங்க தான் எங்கயாவது இருப்பா?”
“என்னத்தான் கல்யாணத்துக்கு அப்புறம் என்னை கண்டுக்கவே மாட்டேங்குறீங்க?”
“நீ தான் இங்க வர்றதில்லை.”
“அப்புறம் உங்க பொண்டாட்டி இருப்பாங்களே. நானும் வந்தா அவங்களுக்கு டவுட் வராது?”
“வந்தா வந்துட்டுப் போகட்டும். அவளால் என்னை என்ன பண்ண முடியும்? மிஞ்சி மிஞ்சி போனால் அழுவா, ஆர்பாட்டம் பண்ணுவா, வேறென்ன பண்ணுவா? நீ வா செல்லம். நாம கொஞ்சி நாளாகுது” என சித்ராவை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டான் மலைச்சாமி.
சரியாக அதே நேரத்தில் துவைப்பதற்காக துணியெடுக்க வந்த பார்கவி யைப் பார்த்தும் சட்டென விலகி நின்றனர். பிடிபட்ட கள்ளர்களைப் போல் இருவரும் நின்றிருக்க
“இ. இவ.இவள் சித்ரா. பெரியண்ணியோட தங்கச்சி. லீவுக்கு வந்துருக்கா.”
“ஹாய் பார்கவி!”
“ஹ.ஹலோ!” என்றவாறே தன் கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றார் பார்கவி. அவளால் இதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தன் கணவன் தனக்கே உரியவன் என்றவள் நினைத்திருக்க அவனோ மாற்றான் தோட்ட மல்லிகையோடு படர்ந்திருக்கிறான்.
‘இப்போது என்ன செய்வது? அம்மா, அப்பாகிட்ட ஃபோன் பண்ணி சொல்லுவோமா?’ எனப் பலவாறு யோசித்து களைந்தாள் பார்கவி.
“அத்தை நம்ம சித்ராவை நாளைக்கு இங்க ஈஸ்வரன் கோவில்ல பொண்ணுப் பார்க்க வர்றாங்க.”
“சரி ப்ரியா. இப்போ அதுக்கு நான் என்ன செய்யனும்னு நினைக்கிற?”
“இல்லத்தை.. பார்கவியோட நகையெல்லாம் அவக்கிட்ட சும்மா தானே இருக்கு. அதைக் கொஞ்சம் கொடுத்தீங்கன்னா? சித்ரா கொஞ்ச நேரம் மட்டும் போட்டுட்டு கொடுத்துடுவா.”
“அதுக்கென்ன தாராளமா போட்டுக்கட்டும். அவளும் எனக்கு ஒரு பொண்ணு தான். ஏய்! பார்கவி.”
“சொல்லுங்கத்தை.”
“சித்ராவை பொண்ணு பார்க்க வர்றாங்களாம். உன்னோட நகைய கொஞ்ச நேரம் கொடு. பாவம் போட்டுக்கட்டும்.”
‘ஊரா வீட்டு நெய்யே. என் பொண்டாட்டி கையேன்னு இவங்கபாட்டுக்கு என்னோட நகைய கொடுக்கச் சொல்லுறாங்க’ என பார்கவியால் நினைக்க மட்டுமே முடிந்தது.
“என்ன சும்மா இங்க நின்னு கனவு கண்டுட்டுருக்க. உங்க வீட்டுல போடுறேன்னு சொன்னதுல பாதி நகைய நீதானே வச்சுருக்க. என்னமோ வேற யாருக்கோ கொடுக்குற மாதிரி முகத்தை வைச்சுருக்க. சித்ரா உனக்கும் தங்கச்சி தான்.”
“சரிங்கத்தை”
தான் கூட அணிந்து பார்த்திராத நகையை சித்ராவிற்கு கொடுத்தாள் பார்கவி.
“அத்தான். இந்த நகை எனக்கு எப்படியிருக்கு?”
“உனக்கே அளவெடுத்து செஞ்ச மாதிரி அற்புதமாயிருக்கு.”
தன்னை ஏறெடுத்துப் பார்த்திராத கணவன் பேசும் பேச்சினை விரக்தியுடன் பார்த்திருந்தால்.
பொண்ணு பார்க்கும் படலத்திற்கான அனைத்து வேலைகளையும் பம்பரமாக சுழன்று பார்த்துக் கொண்டிருந்தாள் பார்கவி.
“இந்த சித்ரா மல்லிப்பூ. உனக்காக தேடி அலைஞ்சு வாங்கிட்டு வர்றேன்”
“என்னத்தான் எனக்கு மட்டும் வாங்கிட்டு வந்திருக்கீங்க? பாவம் பார்கவி. அவளுக்கு கொஞ்சமாவது வாங்கிட்டு வந்துருக்களாம்ல?”
“அவளுக்கா இப்போ விஷேசம்? உனக்குக் தான? திரும்பு நானே வச்சு விடுறேன்.” என்றவன் தன் கையில் இருந்த பூவை சித்ராவின் தலையில் வைக்க,பார்கவியின் நெஞ்சம் முழுவதும் ரணமானது. இன்றளவும் அவளுக்கொன ஒரு ரோஜாப்பூ கூட வாங்கித் தரவில்லை அவளது கணவன் மலைச்சாமி.
மாப்பிள்ளை வீட்டாருக்கு அவளை மிகவும் பிடித்துவிட திருமணநாளும் உறுதி செய்யப்பட்டது.
“சித்ரா என்னோட நகை?”
“நான் ஒன்னும் உன் நகையைத் தூக்கிட்டு ஓடிட மாட்டேன்.”
மேலும் ஒரு வாரம் சென்ற நிலையிலும் பார்கவி யின் நகையினை சித்ரா கொடுத்தபாடில்லை. தனது மாமியாருக்கு பயந்து இவளும் நகைப்பற்றி கேட்காமல் விட்டுவிட்டாள். முதுகெலும்பில்லாத புழுவைப் போல் தன்னை உணர்ந்தாள்.
“என்னங்க.”
“சொல்லு.”
“இல்ல நாள் தள்ளிப் போய் இன்னையோடு நாற்பது நாள் ஆகுது. இன்னும் ஹாஸ்பிட்டல் போய் செக்கப் பண்ணி பார்க்கலை.”
“அதுக்கு?”
“இல்ல நாளைக்கு வளர்பிறை. நாம வேணா ஹாஸ்பிட்டல் போய் பார்த்துடுவோமா?”
“ம்ம்ம். பார்க்கலாம்”
அடுத்த நாள் காலையில் எழுந்தவள் ஹாஸ்பிட்டல் செல்ல சந்தோஷமாக தயாரானாள்.
“என்ன மகாராணி எங்க கிளம்பிட்டீங்க?”
“இல்லத்தை. பிள்ளை உண்டாயிருக்கான்னு ஹாஸ்பிட்டல்ல போய் செக்கப் பண்ணப் போறோம்.”
“ஏன்டா அப்படியா?”
“ம்ம்ம்.”
“ஏன்டா பெரியவங்க எங்ககிட்ட எதுவும் கேட்க மாட்டீங்களோ? எதுக்குடா தனியார் ஆஸ்பத்திரிக்கு தான் போகனுமா? அரசு ஆஸ்பத்திரிக்கு போகக்கூடாதோ? கடையில் அப்பா மட்டும் தனியாயிருக்காரு. இன்னைக்கு அவருக்கு துணைக்கு போயிருந்துக்கோ. இந்த தெரு முக்குல தான் அரசு ஆஸ்பத்திரி. இந்நேரம் நர்ஸம்மா வந்துருக்கும். அவளைப் போய் பார்க்கச் சொல்லு.”
“அம்மா சொன்னது காதுல விழுந்துச்சு தானே. போயிட்டு வா.”
“சரிங்க. காசு?”
“கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு எதுக்கு காசு? போயிட்டு வா.” என்றவர் அதன் பிறகு அவளைப் பற்றி சிறிதும் கவனிக்கவில்லை.
