குறிஞ்சி - காதலும் காதல் சார்ந்த இடமும்
அத்தியாயம் 24
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின் (குறள்#1267)
கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல், கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது.
பாலா அவனைப்பற்றி அனைத்தையும் உஷாவிடம் கூறியிருந்தான். உஷாவுக்கு அவனை எப்படி சமாதானப்படுத்துவது என தெரியவில்லை. ஏற்கனவே இருந்த அவனின் காதலுக்கு நியாயம் செய்ய நினைக்கிறான். ஆனால் இவளோ உன் காதல் எனக்குதான் வேண்டும் என விடாப்பிடியாய் நிற்கிறாள். எதிர்காலம் இல்லாத காதலை இன்னும் எதற்கு அவன் இழுத்து பிடிக்கிறான்? என்பதே உஷாவின் கேள்வி.
அதற்கு தக்க பதிலை அவன் வைத்திருந்தாலும் அதை வெளிப்படுத்த அவனுக்கு தைரியம் வரவில்லை. அவன் தயங்குவதை வைத்து அவளே ஒருவாறு புரிந்துகொண்டு அவனிடம், பாலா உங்களிடமே பதில் இருக்குது. அந்த பதிலை என்னிடம் நீங்க சொல்லலேன்னாலும் பரவாயில்ல, நேரடியா அந்த பொண்ணுக்கிட்டயே சொல்லுங்க. ஆனா அவ மனச பாதிக்காத மாதிரி பக்குவமா எடுத்து சொல்றது உங்ககிட்ட தான் இருக்கு. என்னைவிடவும் உங்களுக்கு வயசும், அனுபவமும் அதிகம். ஏற்கனவே ஒடைஞ்சு போயிருக்கும் அவளை பாத்து ஹாண்டில் பண்ணுங்க. ப்ளீஸ் என்றாள்.
உள்ளே இருந்து மெல்லிய விசும்பல் ஒலி கேட்க, இவ்வளவும் கேட்டிருப்பாளோ என அவனுக்கு பயம். ஓசையின்றி உள்ளே எட்டிப்பார்த்தவன், எவ்வித களங்கமும் இன்றி நித்சலமாக உறங்கும் ஆருவை கண்டு நெகிழ்ந்து போனான். அவளை மேலும் வருத்த அவனுக்கு மனமில்லை. மெல்லடி வைத்து உள்ளே வந்தவன், காற்றிலாடிய அவள் கூந்தலை ஒதுக்கி காதின் பின் அழுத்தி, பளிங்கை ஒத்த அவள் முன் நெற்றியில் தன் தடத்தை பதித்து வந்தவழியில் வெளியேறி கதவை மூடி ஹாலுக்கு வந்தவன் உஷாவிடம் விடைபெற்று தனது வீட்டிற்கு சென்றான்.
ஆரு அவன் செய்கைகள் அனைத்தையும் அறிந்திருந்தாள். அவன் இவ்வளவு நேரம் பேசிய பேச்சை கேட்டிருந்தவள் தாங்க முடியாமல் தான் அழுத்திருந்தாள், அந்த விசும்பல்களும் அவளுடையதே. யாரோ வருவதறிந்து, முகத்தை அழுந்த துடைத்தபின் தான் அவன் சென்று பார்த்தான். அவன் தன் இதழ்களை பதிக்கும்போது ஏற்பட்ட கூச்சத்தை மிகுந்த சிரமப்பட்டு தான் கடந்திருந்தாள். அவன் வெளியில் செல்லும் வரை பொறுத்திருந்தவள், மீண்டும் அந்த ஆனந்தத்தை எண்ணி மீண்டும் அழுதாள்.
பெண்களுக்கு தங்கள் உணர்ச்சிவசப்படும் தருணங்களை கடப்பதற்கு அழுகையும் ஒரு சிறந்த வழி போலும். ஆண்களின் அழுகைக்கு வலியும் வேதனையும் மட்டுமே காரணமாக இருக்கும்போது, பெண்களின் அழுகைக்கு அந்த இலக்கணம் பொருந்துவதில்லை. இன்பம், துன்பம், ஏமாற்றம், துரோகம் என பல்வேறுபட்ட உணர்ச்சிகளின் வெளிப்படும் அழுகை தான் அவர்களிடம்.
அன்று இரவு முழுதும் அவளுக்கு மட்டுமல்ல, அவனுக்கும் தூக்கம் வந்தபாடில்லை. முற்றிலுமாக தன் மனத்தினின்று தன்னை வேறுபடுத்தி, தனது எண்ணங்களையும், செயல்களையும் சுய பரிசோதனை செய்திருந்தான். முடிவில் குழப்பமே மிஞ்சியது அவனிடம். அவளுக்கோ அவன் தன்னிடமே மீண்டு வந்ததை போன்ற உணர்வு. எதையோ பெரிதாய் சாதித்துவிட்டது போலிருந்தாள். அருகில் படுத்திருந்த உஷாவுக்கு இது எதுவும் தெரிந்திருக்கவில்லை.
காலையில் விரைந்து எழுந்தவன், அதே விரைவில் குளித்து ரெடியாகி அவர்களுக்காய் சேர்த்து ஹோட்டல் சென்று டிஃபன் பார்சல் வாங்கிவந்திருந்தான். இருவரும் 8 மணிக்குதான் எழுந்து பல்துலக்கி காபி அருந்தும்போதே இவன் பார்சலுடன் வந்திருந்தான். இடது கையை நனையாமல் ஆருவை குளித்துவிட்டு வா என்றான். உஷா இவர்களுக்குள் நடக்கும் சம்பாஷணைகளில் தலையிடாமல் வெறும் பார்வையாளராக மட்டுமே தன்னை நிறுத்திக்கொண்டாள்.
பின் மூவரும் ஒன்றாக உணவருந்தும்போதே மதியம் என்ன செய்வது என யோசித்து மூவரும் கூட்டாக சேர்ந்து சமைக்கலாம் என முடிவெடுத்திருந்தனர். காலை உணவுக்குப்பின் ஆருவுக்கு தேவையான மருந்துகளை அளித்தவன், உஷாவிடம் ஒரு ஆயிண்ட்மெண்டை தையல் போட்டிருந்த இடத்தில் தடவச்செய்தான். நேற்றைக்கு இன்று ஆருவின் முகம் சற்று தெளிவுடன் இருந்தது.
பாத்திரங்கள் போதுமான அளவு உஷாவிடம் இருந்த போதிலும் சமையல் பொருட்கள் ஏதும் இல்லை. அதற்கான லிஸ்ட் வாங்கிச்சென்று அவன் அனைத்தையும் வாங்கி வந்ததோடு மட்டுமல்லாமல் காய்கறிகளையும் நறுக்கி தர, உஷா சமையல் பார்த்துக்கொண்டாள். ஆரு தன்னால் இயன்ற சிறுசிறு உதவிகள் செய்ய ஒருவழியாக சமையலை முடித்து சாப்பிட மதியம் 1 மணியை தாண்டியது.
சாப்பிட்டு முடித்தவுடன், முகேஷ் தான் மாலை 4மணிக்கு வந்து இருவரையும் கோவளம் பீச் அழைத்துச் செல்வதாக கூறி, தயாராக இருக்கும்படி சொல்லி ஓய்வெடுக்கச் சென்றுவிட்டான். பெண்களிருவரும் நேரம்போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார்கள்.
முகேஷ் 4மணிக்கு தயாராகி கீழே வரும் வரையில் கதைதான் ஓடிக்கொண்டிருந்தது இருவருக்குள்ளும். வந்தவன் இருவரையும் உற்று பார்க்கவே சிரித்தபடி சென்று முகம் கழுவி மேக்கப் முடித்து வெளிவர அரைமணிநேரத்திற்கு மேலாகியிருந்தது.
இருவரையும் அழைத்துக்கொண்டு காரிலேற்றி கோவளம் கடற்கரையை நோக்கி வண்டியை செலுத்தினான். வழியின் இருபுறமும் ஆங்காங்கே உப்பளங்களை வேடிக்கை பார்த்தபடியும் தங்கள் இருவருக்குள்ளும் சிரித்து பேசியபடியும் வந்தனர் இருவரும்.
OMR சாலையிலிருந்து இடதுபுறம் பிரிந்து ECR சாலையை கிராஸ் செய்து வண்டி கோவள கடற்கையை அடைய முழுதாய் 20 நிமிடங்களுக்கு மேலானது. சென்னையின் கோவள கடற்கரை அவ்வளவாக ஜன சஞ்சாரம் அற்றது. ஒரு சிறுவர்பூங்காவுடன் கூடிய விளையாட்டு திடலும் அருகில் உண்டு. பௌர்ணமி முடிந்து சில தினங்கள் கழிந்திருந்தாலும் கடலில் ராட்சத அலைகள் எழும்பிக்கொண்டுதான் இருந்தது.
பெண்களிருவரும் கடலில் அலைகளுடன் விளையாட சென்றுவிட, அவர்களின் செருப்புக்கு காவலாய் அவர்களின் பார்வைக்கெட்டும் தொலைவில் அமர்ந்து வழக்கம்போலவே கடல் அலைகளையும், ஆர்ப்பரிப்பையும், கடல்ராஜன் நிலமகளின் அழகில் மயங்கி அவள்மீது மோகம் கொண்டு வந்து அணைப்பதையும், நிலமகள் அதை கண்டும் காணாமலும் போக்கு காட்ட அவன் விடாமல் மீண்டும் மீண்டும் அவளை துரத்திவரும் அந்த ஆடலில் மெய்மறந்திருந்தான்.
மெல்ல கடலாடி மீண்டவர்கள், தங்கள் செல் போன்களில் செல்ஃபீக்களாக எடுத்து நிறைத்தார்கள். ஆரு வழமைபோல அவனிடம் தந்து சில படங்கள் எடுக்குமாறு கூற ஏன் என்பதுபோல் பார்த்த உஷாவிடம், நாம் எடுத்த நூறு படங்கள் கூட அவர் எடுக்கும் ஒரு படத்திற்கு நிகரானது அல்ல என அவனின் இன்னொரு முகத்தை பற்றி கூற, அதுவரை உஷா அறிந்திருக்கவில்லை, அவன் ஒரு சிறந்த போட்டோஃக்ராபர் என.
இந்தமுறை இருவரையுமே கடலாட செய்து இயல்பாக வரும்படி முழுதும் கேண்டிட் ஷாட்களாக எடுத்து வைத்திருந்தான். ஒருவர்மேல் மற்றவர் நீரிறைத்து ஆட, அந்த நீர்ச்சாரைகளின் வரிசைகூட சிந்தாமல் சிதறாமல் படம்பிடித்திருந்தான் தனது மொபைலில். வாங்கிப்பார்த்த இருவரும் அயர்ந்து போனார்கள், இவனுக்கு மட்டும் எப்படி இது சாத்தியம் என்பதாய்.
பாவம் ஆருவுக்கு கைவலி அதிகம் இருந்தபடியால், அவள் இடது கரத்தை முழுதும் பயன்படுத்தமுடியாமல், சற்று தள்ளியே வைத்திருக்க, அவன் படங்களில் முழுதும் வலதுபுறம் மட்டுமே தெரியும்படிக்கு கவர் செய்திருந்தான், கூடுதலாக மேல்நோக்கிய படங்கள் முகங்களை முழுதும் தெரியும்படிக்கு, கழுத்துக்கு மேலேயே ஷாட்களை அமைத்து எடுத்திருந்ததில், அவன் திறம் வெளிப்பட்டிருந்தது.
வெளியில் உணவு முடித்து தங்கள் இருப்பிடத்தை அடைந்தவுடன், மறக்காமல் ஆருவுக்கு மருந்துகளை தரச்சொல்லி உஷாவிடம் கூறி, விரைவிலேயே இன்று விடைபெற்று கிளம்பிவிட்டான். இன்று அவர்களின் கடலாடலின்போது ஆருவை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்ததை, ஆருவும் இடையிடையே கவனித்திருந்தாள். பெண்மைக்கே உரிய இயற்கை உணர்வு, தன்மேல் ஆடவன் ஒருவன் பார்வை பதிந்திருப்பதை அவளுக்கு உணர்த்த தவறவில்லை.
அவனும் எவ்வளவோ முயன்றும் தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் தான் இவ்வாறு விரைவில் தப்பித்து சென்றதும். தன்னை வேண்டவே வேண்டாம் என உதறிச்சென்றவள் முன் தனக்கே தனக்காய், தன்னையே தேடி இத்தனை தூரம் வந்து இவ்வளவு துயரத்திலும் அவளவனின் கடைக்கண் பார்வை தன் மேல் விழாதா என ஏங்கி தவிக்கும் பேதையவளை ஒப்பிட்டு பார்க்கமுடியவில்லை அவனால். இது தனக்கு வாழ்வில் கிடைத்தற்கரிய பொருள் என தோன்றினாலும் தான் அதற்கு தகுதியானவன் தானா? என குழப்பமும் கூடவே வர, அவனால் எந்த ஒரு இறுதி முடிவும் எடுக்கமுடியவில்லை.
அதற்க்கு முடிவுகாணாமல் அவளிடம் சொல்லாடுவதில் பயனில்லை என எண்ணியே இன்று அவனிடம் இத்தனை விலக்கம்.
