அழகுக்கு அழகானேன் உன்னாலே
அத்தியாயம் 10
“விடுங்க.. என்னை எங்க கூட்டிட்டு போறீங்க?”
“வாய் பேசாத.. வேற ஊருக்கு போகணும்னு சொன்னியாமே?! எங்கேயாவது போறேன்னு.. காலை எடுத்து வைச்ச.. இப்ப சும்மா ப்ராக்சர் தான் ஆகிருக்கு.. அப்புறம் உண்மையிலேயே காலை உடைச்சுடுவேன்..”
“நான் ஊரை விட்டு போகப்போறேன்னு உங்களுக்கு யார் சொன்னா? நான் ஒன்னும் உங்களுக்கு பயந்து ஓடுல..”
“ஆமா.. ஆமா.. நீ ரொம்ப தைரியசாலி தான்.. நியூஸ்லயே சொல்லிட்டாங்க.. நீ என்ன பண்ற? என்ன பேசுற? எல்லாத்தையும் எனக்கு சொல்ற உளவு படை ஒன்னை உன்கூடவே வைச்சு இருக்கேன்..”
“சிவாணி தானே?! எனக்கு தெரியும்.. பின்ன ஏன் நான் சொல்லாததையெல்லாம் சொல்றீங்க?. என்னை தூக்கிட்டு எங்கேயே போறீங்க? உங்க மனசுல என்ன தான் நினைச்சுட்டுருக்கீங்க?” என்ற பாக்யமதி, அபிதீவ் சர்மாவின் காரில் இருந்து துள்ளி இறங்கினாள்.
‘இவளை.. இருடி.. என்ன பண்ணுறேன்னு பாரு?!’ என்று தனக்குள் அவளைத் திட்டிக் கொண்டே, காரை விட்டு கீழே இறங்கியவனை முறைத்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் பாக்யமதி.
“உனக்கென்ன விஜயசாந்தின்னு நினைப்பா? ஸ்டார்ட் பண்ண வண்டியில இருந்து இப்படி குதிச்சு ஸ்டேண்ட் பண்ற?!”
“போதும்.. இப்ப எதுக்கு நல்லவர் மாதிரி வேஷம் போடுறீங்க? ஆமா.. யாரை கேட்டுட்டு நான் உங்க பொண்டாட்டின்னு எல்லோர்கிட்டேயும் சொன்னீங்க?! நான் உங்கக்கிட்ட கேட்டேனா? ம்ம்.. சொல்லுங்க.. நான் கேட்டேனா? நானும் என் பொண்ணும் நிம்மதியா வாழ்ந்துட்டுருக்கோம்.. தயவு செஞ்சு இடையில வந்து அந்த வாழ்க்கையை கெடுத்துடாதீங்க.. உங்களுக்கு புண்ணியமாப் போகும்..”
“யாரு நான் வந்து உங்க வாழ்க்கையை கெடுக்குறேனா? நான் பெத்த பொண்ணை என் கண்ணுல காட்டாம.. ஏமாத்தி வளக்குற நீ நல்லவ.. என் பொண்ணை பார்த்து அவக்கூட பேசிப் பழகணும்னு நினைக்குற நான் நல்லவர் மாதிரி நடிக்கிறேன்.. அப்படித்தானே?!”
“பின்ன? ஆமா எங்க உங்கம்மாவும் தங்கச்சியும்.. பெத்த பொண்ணை பார்க்குறதுக்கு அவங்கக்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டீங்களா? வாங்கலைன்னா.. முதல்ல போய் அவங்கக்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு வாங்க.. அப்புறம் வந்து ஊருக்கே தண்டோரா போட்டு சொல்லுங்க.. இந்த பாக்யமதி உங்க பொண்டாட்டி.. சிவாணி நான் பெத்த பொண்ணுன்னு..” என்று படபடவென பொரிந்தவள், காலை ஊணாமல் குதித்து கொண்டே அவ்விடத்தை விட்டு அகன்று சென்றாள். செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு முதன் முதலில் அவளைப் பார்த்த ஞாபகம் வந்தது.
நான்கு வருடங்களுக்கு முன்பு,
“டேய் அபி.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாருடா.. எல்லாம் உன்னோட நன்மைக்கு தான்டா..”
“நீங்ங என்னதான் சொன்னாலும் நான் இதை செய்ய மாட்டேன்.. இப்படி ஒரு கேவலமான செயல் மூலமா எனக்கு சொத்தும் வேணாம்.. உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்? நான் சம்பாதிச்சு தர்றேன்மா.. அந்தாளு பணம் நமக்கு வேணாம்மா..”
“டேய்.. நான் பணத்துக்காகவா சொல்றேன்.. இது உன்னோட உரிமைடா.. நான் சொல்றதை செஞ்சேன்னா.. உன் அம்மாவா உசுரோட இருப்பேன்.. இல்லேன்னா இப்பவே என்னைய எரிச்சுட்டு செத்துப் போயிடுவேன்.. எனக்கு ரெண்டுல ஒன்னு இப்ப தெரிஞ்சாகணும்.. உங்கப்பாக்கு முறையா வாங்கப்பட்டவாடா நான்.. எனக்கு அவரோட சொத்துல உரிமையில்ல்ன்னு சொல்லிட்டா அவ.. ம்ஹூம்.. நான் தான் ஜெயிக்கணும்.. படிச்சு பட்டம் வாங்குன நான் எங்க? படிக்காத முட்டாள் அவள் எங்க? இப்ப நான் சொல்றதை நீ கேட்கப் போறியா? இல்லையா?”
“ஏன்மா என் உயிரை எடுக்குறீங்க? நீங்க என் வாழ்க்கைல வேண்டா வெறுப்பா திணிக்குறது காரோ? பைக்கோ? இல்லம்மா.. உயிருள்ள பொண்ணும்மா.. வெறும் குழந்தைக்காகன்னு எப்படிம்மா கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்க?”
“டேய் உன்னைய என்ன அந்த பொண்ணு கூடவே வா குடும்பம் நடத்தச் சொல்றேன்? கல்யாணத்துக்கு முன்னாடியே டிவொர்ஸ் பேப்பர்ல கையெழுத்து வாங்கிட்டு.. அந்தப் பொண்ணுக்கு ஒரு அமௌண்ட்டை கொடுத்து செட்டில் பண்ணிடுவோம்.. அவ்வளவு தானே?! இதுக்கு போய் இவ்வளோ யோசிக்கும்?”
“என்னால ஒரு கல்யாணம் தான் பண்ண முடியும்.. என்னைய என்ன உங்க புருஷன்னு நினைச்சீங்களா? கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்றதுக்கு? இங்கப்பாருங்க.. என்னைய பொறுத்தவரைக்கும் குழந்தைக்காக வந்தாலும் அவ மட்டும் தான் என்னோட பொண்டாட்டி..”
“சரிடாப்பா.. அந்த பொண்ணுகூடவே காலத்துக்கும் வாழு.. யார் வேணான்னு சொன்னது?! ஆனா இந்த கல்யாணத்துக்கு மட்டும் ஒத்துக்கடா.. ப்ளீஸ்..”
“என்னமோ பண்ணி தொலைங்க.. ஆனா குழந்தைக்குறது கடவுளுடைய வரம்.. அதுக்காக எங்களை கட்டாயப்படுத்தக் கூடாது.. எனக்கு ட்யூட்டிக்கு டைமாகுது..” என்றவாறே அபிதீவ் சர்மா கிளம்பிச் செல்ல,
“அபி.. உனக்கு கல்யாணம் பண்ணி வைக்குறதே.. ஆம்பளப்புள்ள பெத்துக்குறதுக்கு தான்..” என்று கத்தினார் அபிதீவ் சர்மாவின் தாயார் காந்தாரி. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த காந்தாரிக்கும் இந்திய ராஜ்புட் வம்சமான ரிஷிகேஷ் ராஜ்புட்டிற்கும் பிறந்தவன் தான் அபிதீவ் சர்மா. தான் என்ற அகந்தையும் பணத்திமிரும் உள்ள காந்தாரியை பெற்றோருக்காக திருமணம் செய்து கொண்ட ரிஷிகேஷ் ராஜ்புட், நாளடைவில் காந்தாரியின் நடவடிக்கைகள் பிடிக்காது தன்னிடம் பிஏவாக வேலை செய்த செந்தில்நாதனின் தங்கையான பூங்கொடியை மணந்து கொண்டார். காந்தாரி படித்தவள் என்றதினால் தானே தன்னை மதிக்கவில்லை என்று நினைத்தவர், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமமான தளவாய்பளையத்தில் இருந்த பூங்கொடியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ரிஷிகேஷ் ராஜ்புட் செய்த செயலால் வெறுப்புற்ற காந்தாரி, அபிதீவ் சர்மாவை தன்னுடன் அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த கலாச்சாரத்தின் அடிப்படையில் வளர்க்கத் தொடங்கினார். என்னதான் அந்நாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்திருந்தாலும், தன் தந்தையை போல் ஒரு பெண்ணிற்கு துரோகம் இழைத்து விட்டு மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான். ஆகையால் தான், இறக்கும் தருவாயில், தன்னை காணவிழைந்த தந்தையை பார்க்க முடியாது என்று விலகினான். என்னதான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவருக்கு ரகுநாதன் எனும் மகன் இருந்தாலும், ரிஷிகேஷ் ராஜ்புட்டிற்கு தனது மூத்த மகனான அபிதீவ் சர்மா தான் எப்போதும் கண் முன்னே தோன்றுவான். தான் செய்த செயலால் திருமணத்தையே வெறுக்கும் இருமகன்களைப் பற்றி யோசித்தவர், தான் இறக்கும் தருவாயில், தனது இருமகன்களில் யார் ஒருவர், திருமணம் செய்து ஆண்பிள்ளை பெற்றெடுக்கின்றனரோ, அவன் தான் தனது வாரிசு எனவும், அவனுக்கு தான் சொத்தின் முழு பங்கும் கிடைக்குமென எழுதி வைத்து இறந்திருந்தார். எப்போதும் தன் கணவனை துளிகூட மதிக்காத காந்தாரி, வம்சத்தின் முதல் வாரிசிற்கான மரியாதை அனைத்தும் தனது மகனுக்கும் முதல் மனைவியான தனக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தவர், தனது இந்தியத் தோழியான க்ரேஸின் மகளான அலினாவை ஜாதகத்தின் பொருத்தத்தின் படி, அவனுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார்.
****************************************************
“குட் மார்னிங் டாக்டர்..”
“குட் மார்னிங் டாக்டர்..” என்று அங்கிருந்த அனைவரும் காலை வணக்கம் செலுத்த, கம்பீரமாக வேகநடையிட்டு வந்து கொண்டிருந்தான் அபிதீப் சர்மா. சிட்டி ஹானஸ்ட் ஹாஸ்பிட்டலில் இருக்கும் சிறப்பு நரம்பியல் நிபுணர். எப்போதும் இறுகிய முகத்துடன் இருப்பவனின் முகம், இந்த சில நாட்களாக மிகவும் இறுக்கமாக இருந்தது.
“ஹேய் சர்மா..” என்று அபிதீவ் சர்மாவின் தோளில் கையிட்ட ராபர்ட்டை திரும்பி ஒரு முறைத்தான் அபிதீவ் சர்மா. அதனை பார்த்த ராபர்ட், அவனது தோளில் இருந்த கையை எடுத்தவன்,
“ஏன்டா இப்படி எரிஞ்சு விழுகுற? புதுசா பிடிச்ச கேர்ள் ப்ரெண்ட்.. உங்கூட ப்ரெக்கப் பண்ணிட்டாளா?” என்று கேட்ட மறுநிமிடம், அவனது கையை முதுகுபுறமாக பிடித்து மடக்கிய அபிதீவ் சர்மா,
“என்ன சொன்ன? திரும்ப சொல்லு..” என்று கேட்க,
“இல்ல.. இல்ல.. எதுவுமே சொல்ல.. உன்னை பத்தி எதுவுமே சொல்லல..” என்று கத்த, அவனது கையை விட்டான் அபிதீவ் சர்மா.
“நானே வெறுப்புல இருக்கேன்.. இன்னும் கொஞ்சம் என்னை வெறுப்பேத்துன?” என்று தன் ஒற்றை விரலை நீட்டி மிரட்டியவன், தனது கடமைகளை நிறைவேற்ற சென்றான்.
கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா நாட்டின் மேற்குப்பகுதியின் தென்பாதியைக் கொண்டு பசிபிக் மாக்கடலுக்கு அடுத்து இருக்கும் ஒரு பெரிய மாநிலத்தில் வாழும் அபிதீவ் சர்மாவிற்கும், இந்தியாவின் தஞ்சை மாவட்டத்தில் பிறந்த பாக்யமதிக்கும் எவ்வாறு முடிச்சு விழுந்தது?
