அழகுக்கு அழகானேன் உன்னாலே
அத்தியாயம் 2
“அம்மா.. எங்க? சொல்லு பாட்டி..”
“இப்ப வந்துடுவாம்மா.. நீ இதை சாப்பிடும்மா..”
“இல்ல.. அம்மா வந்துடட்டும்..” என்று பிடிவாதமாக வீட்டின் வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள் ஐந்து வயதேயான சின்னச் சிட்டு சிவாணி.
“என் கண்ணுல்ல.. உன் அம்மா வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் வந்துருவா.. நீ சாப்பிட்டு சீக்கிரம் தூங்குடா.. நாளைக்கு காலைல ஸ்கூலுக்கு சீக்கிரம் போகணும்லம்மா..”
“ம்ஹூம்.. அம்மா வரட்டும் பாட்டி..”
“வர வர நீ சொன்ன பேச்சு கேட்கவே மாட்டேங்குற.. உன் அம்மாவே பாவம்.. வேலை செஞ்சு ட்ரு டயர்டா வருவா.. நீ சாப்பிடாம இருக்குறதைப் பார்த்தா.. பெத்தவ மனசு துடிச்சுப் போயிடாது?! வாடாக் கண்ணா.. உனக்கு பிடிச்ச பருப்புத் துவையல் வைச்சு.. ரசம் சாதம் வைச்சுருக்கேன்.. வாடாம்மா..”
“ம்ஹூம்.. எனக்கு ரசஞ்சாதம் வேணாம் பாட்டி.. எதிர்த்த வீட்டு ராகுலுக்கு அவனோட அப்பா க்ரில் சிக்கனெல்லாம் வாங்கித் தர்றாரு.. என்னோட அப்பா என்னைய பார்க்க வருவாரு? எப்ப அதெல்லாம் வாங்கித் தருவாரு? ஸ்கூல்ல கூட எல்லோரும் உன் அப்பா எங்க இருக்காரு? எப்படி இருப்பாருன்னு கேட்குறாங்க.. அம்மாகிட்ட கேட்டா பதிலே சொல்ல மாட்டேங்குறாங்க.. நீங்களாவது சொல்லுங்களேன்..” என்ற தன் பேத்தியை தூக்கி இடுப்பில் வைத்து தாயம்மாள்,
“உங்கப்பா வெளிநாட்டுல இருக்காரும்மா.. உன்னைய பார்க்கணும்னு அவருக்கு அவ்ளோ ஆசை. ஆனா போன வேலையை முடிக்காம திருப்பி அனுப்ப மாட்டாங்கள்ள.. அதுனால தான் லேட்டாகுது. உன் அப்பா வரும் போது சிவாணிக்குட்டி கன்னமெல்லாம் வைச்சு அழகா.. ஜம்முன்னு இருந்தாத்தானே நல்லாருக்கும்?! வாடா கொஞ்சம் சாப்பிடும்மா..” என்றவர் தன் கையில் இருந்த உணவை சிறு சிறு கவளங்களாக அச்சிறுமிக்கு ஊட்டினார். அவர் கூறியவற்றை எல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவள், திடீரென அவர் புறம் திரும்பி,
“பாட்டி.. அப்பாவால இங்க வரமுடியாது சரி.. அவரால என்கிட்ட போன்ல கூடவா பேச முடியாது?! இப்பத்தான் வீடியோ கால் பண்ணி பேசமுடியுமே?! அப்புறம் அப்பா ஏன் கூட பேசவேயில்ல? அம்மா அவரோட போட்டோவைப் கூட எனக்கு காட்டமாட்டேங்குறாங்க.. எனக்கு அப்பா இருக்காரா? இல்லையா? எல்லோரும் என்னைய அப்பாயில்ல புள்ளன்னு சொல்றாங்க.. ஸ்கூல்ல கூட என்னைய ஒருமாதிரி பார்க்குறாங்க.. உண்மைய சொல்லுங்க.. எனக்கு அப்பா இருக்காரா? இல்லையா?” என்று கண்கலங்கியவளை தன் தோளோடு அணைத்துக் கொண்டவர்,
“எல்லாத்துக்கும் காலம் நேரம் வரணும் கண்ணு.. உன் அம்மாவோட குணத்துக்கு நீங்க ரெண்டு பேரும் நல்லாருப்பீங்க. சீக்கிரமே உன் அப்பாவும் உங்களைத் தேடி வந்துருவாரு..” என்ற தாயம்மாள் தன்னையும் அறியாமல் பெருமூச்சொன்றை வெளியிட்டார். சிவாணிக்கு சாப்பாடு ஊட்டி தூங்க வைத்தப் பின் கதவு சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தவர் கண் முன்னே நின்றிருந்தாள் பாக்யமதி.
“ஏன்டி இவ்வளோ நேரம்? புள்ள உன்னை எதிர்பார்த்து எவ்ளோ நேரம் வாசல்லயே நின்னுட்டுருந்தா தெரியுமா?” என்று படபடவென பேசிக் கொண்டிருந்தவருக்கு எந்த பதிலும் கூறாது உள்ளே நுழைந்தவள், தன் தோளில் இருந்த தோள்பையை கலட்டி சுவற்றில் இருக்கும் ஆணியில் மாட்டினாள். பிறகு நேரே குளியலறைக்குள் சென்று தன் கை கால்களை சுத்தம் செய்தவள், தன் முகத்தை அங்கிருந்த நீரினால் அடித்து கழுவினாள். அவளது முகத்தில் வழிந்த நீரோடு கண்ணில் வழிந்த கண்ணீரையும் சேர்த்து துடைத்தாள். அவளது அழுது சிவந்த முகத்தை பார்த்த தாயம்மாள், அவளை தன் முன்னே திருப்பினார்.
“ஏய்! ஏன்டி உன் முகம் இப்படி சிவந்திருக்கு? அழுதியா? ஏன் ஒரு மாதிரி இருக்க? யாராவது ஏதாவது சொன்னாங்களா?” என்றவர் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் கூறாது, தன்னைப் பற்றி இருந்த அவரது கையை விலக்கியவள், தன் மகளிருக்கும் அறைக்குள் நுழைந்தாள். அவள் பின்னோடே வந்தவர்,
“சொல்லுடி.. ஏன்டி இப்படி முகம் வாடியிருக்கு?” என்று கேட்க,
“அவங்களைப் பார்த்தேன்..” என்று கூறியவள், வேறெதுவும் பேசாது தன் மகளை அணைத்தவாறு அவளருகில் படுத்துக் கொண்டாள் பாக்யமதி. படுத்திருந்தவளின் அருகே வந்த தாயம்மாள், பாக்யமதியின் நெற்றி முடியை ஒதுக்கிவிட்டவாறே,
“அபிதீப் தம்பிய பார்த்தியாம்மா?” என்று கேட்க,
“ஆமாம்மா.. அவரைத் தான் பார்த்தேன்.” என்றவளின் கண்ணில் நீர் வழிய,
“அப்ப எம் பேரனையும் பார்த்தியா? அவர் என்ன சொன்னாரு? எப்ப வந்து உன்னைய கூட்டிட்டு போகப் போறாரு?” என்று முகம் முழுவதும் விகசிக்க கேட்டவரை திருப்பி பார்த்து,
“எதுக்கும்மா அவர் வந்து எங்களை கூட்டிட்டு போகணும்? நான் வேண்டாம்னு தானே துரத்தி விட்டாரு.. திரும்ப வந்து அவர் கூப்பிட்டா நான் போயிடுவேனா?” என்று கூறியவள், தூங்கிக் கொண்டிருக்கும் தன் மகளின் நெற்றியில் முத்தமொன்றை வைத்து,
“எங்களுக்கு யாரும் வேண்டாம்.. அவரில்லாமலேயே நாங்க வாழப் பழகிக்கிட்டோம்..” என்றவள் தன் மகளை அணைத்தப்படியே கண்மூடினாள்.
“கடவுளே! எம் பொண்ணுக்கு ஒரு வழிய காட்டமாட்டியா? எப்படி இருந்தப் பொண்ணு? இப்ப இப்படியாகிட்டாளே?!” என்று முணுமுணுத்தவாறு எழுந்தவர், சமையலறைக்குள் சென்று திருப்பிய போது அவர் கையில் பால் அடங்கிய டம்ளர் இருந்தது.
“அம்மாடி பாக்யா! இதை மட்டும் குடிச்சுட்டு படுத்துக்கோம்மா..”
“வேண்டாம்மா.. பசிக்கல..”
“இப்படி வெறும் வயிறா.. பட்டினி கிடந்தா மட்டும் எல்லாம் சரியாகிடும்னு சொன்னீன்னா.. நானும் உன்கூட சேர்ந்து பட்டினி கிடக்குறேன்.”
“அம்மா.. நிஜமாவே பசிக்கலம்மா..”
“பரவால்ல இதை மட்டும் குடிச்சுட்டு படுத்துக்கோ.. உன் பொண்ணை சமாளிக்கவாச்சும் உடம்புல தெம்பு வேண்டாம்மா?! எந்திரிம்மா..” என்றவாறே அவளை பலவாறு சமாதானப்படுத்தி, அந்த பாலை குடிக்க வைத்து, தானும் அவர்களருகில் படுத்து கொண்டார்.
அதிகாலையில் எழுந்த இளவஞ்சி, மின்னல் வேகத்தில் தனது வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தவளின் காலை பின்னிருந்து இரு பிஞ்சு விரல்கள் அணைத்துக் கொள்ள,
“அம்முக்குட்டி.. எந்திரிச்சுட்டீங்களா?” என்றவாறே தன் சின்னச்சிட்டை தூக்கி அணைத்துக் கொண்டவள்,
“பட்டுக்குட்டி.. சீக்கிரம் பல் தேச்சுட்டு வருவீங்களாம்.. அம்மா உங்களுக்கு பாலாத்தி தருவேணாம்..” என்றவாறே குளியலறைக்குள் இறக்கிவிட்டவள், ப்ரஷில் பேஸ்ட்டை வைத்து சிவாணியின் கையில் கொடுத்துவிட்டு, சமையலறைக்குள் நுழைந்தாள். பாலில் பூஸ்ட் போட்டு ஆத்தியவள், பல் துலக்கி விட்டு வந்த சிவாணியின் கையில் கொடுத்து குடிக்கப் செய்தாள். பின்னர் வேக வேகமாக தன்னையும் சுத்தப்படுத்தி கொண்டு வேலைக்கு கிளம்பியவள், சிவாணியையும் ஸ்கூல் செல்ல கிளம்பினாள்.
“சாப்பிட்டியா பாப்பு..” என்றவாறே சிவாணியின் இதழ்களை துடைத்த பாக்யமதி..
“சரி வா டைமாச்சு.. அப்புறம் நீயும் லேட்டு.. நானும் லேட்டு..” என்றவள் இருவரின் மதிய சாப்பாடு அடங்கிய பையை தனது ஸ்கூட்டியில் எடுத்து வைத்தாள். சிவாணியை தனக்கு பின்னால் ஏறி அமரச் செய்தவள்,
“நல்லா கெட்டியா பிடிச்சுக்கணும்..” என்று கூற,
“எப்பவும் இதையே சொல்றீங்கம்மா.. உனக்கு டயாலாக்கை மாத்துங்க.. கேட்டு கேட்டு புளிச்சுப்போச்சு..” என்ற சிவாணியை திரும்பி பார்த்த பாக்யமதியின் கண்கள் திருப்தியடைந்தன. கன்னத்தில் குழி விழ சிரித்த தன் தேவதையை எண்ணி பூரித்துப் போனாள். இச்சிறு வயதிலேயே பொறுப்புடன் ஒவ்வொரு விஷயத்தையும், அவள் யோசித்து செய்வதை பார்த்தவளுக்கு அவனின் ஞாபகம் நெஞ்சில் வந்து போனது. அவனும் இப்படி தான் பொறுப்பென்று வந்து விட்டால் அதை ஒரு போதும் தட்டியது கிடையாது. எதையும் யோசித்து நிதானமாக செய்பவன்; ஏனோ தன் விஷயத்தில் மட்டும் நிதானம் தவறிவிட்டதை எண்ணியவள், தன் தலையை குலுக்கி நிகழ்விற்கு வந்தாள்.
‘இன்னைக்கு ஏன் காலங்காத்தலயே அவரோட நினைப்பு வருதே?!’ என்று நினைத்தவாறே ஸ்கூட்டியை கிளப்பினாள் பாக்யமிதி. ஒரு வேளை நடப்பது முன்னமே தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பாளோ? அந்த கடவுளுக்கே வெளிச்சம்.
“பத்திரமா பார்த்து போயிட்டு வாங்க..” என்றவாறு கதவோரம் வந்து நின்றார் தாயம்மாள். வயிற்று வலியில் முகம் சிவந்து, தன் வேதனை பாக்யமதிக்கு தெரியக்கூடாதென நின்றிருந்தார் தாயம்மாள். அவரின் வேதனை அறியாதவளோ,
“சரிம்மா.. நீங்க உள்ளப் போங்க.. காலைல இருந்து உங்க முகமே சரியில்ல.. உடம்புக்கு எதுவும் பண்ணுதுன்னா சொல்லவும் மாட்டேங்குறீங்க?! இன்னைக்கு நீங்க எந்த வேலையும் செய்ய வேணாம். நானே எல்லா வேலையையும் முடிச்சுட்டேன். அதுனால நீங்க படுத்து ரெஸ்ட் எடுங்க. சாயங்காலம் நான் வந்ததும் நாம் ரெண்டு பேரும் ஹாஸ்பிட்டல் போலாம்.” என்று கூற, தாயாம்மாளை அழகாகப் பார்த்து சிரித்தவாறே கையசைத்த சிவாணி,
“பாட்டி.. வெளிய எங்கயும் போகமா விட்டுலேயே இருங்க.. நான் சீக்கிரம் வந்துடுவேன்..” என்றவளைப் பார்த்து சிரித்தவாறே கையாட்டி விடை கொடுத்தார் தாயம்மாள். ஸ்கூட்டியில் செல்லும் போது, தன் தாயை திரும்பிப் பார்த்த சிவாணி,
“அம்மா.. எனக்கு ஒரு டவுட்டு” என்று கேட்க, வளைவில் வண்டியை செலுத்திக் கொண்டே,
“கேளு பேபி..” என்று பதிலளித்த பாக்யமதியிடம்,
“அப்பா எங்கம்மா? எப்பத்தான் வருவாரு?” என்று கேட்க, ஒரு நிமிடம் தடுமாறிக் தான் போனாள்.
“எ.. எ.. என்ன திடீர்னு அப்பா பாசம் பொங்குது?” என்று கேட்ட பாக்யமதியை புருவம் சுருக்கி, முறைத்தாள் சிவாணி.
“நம்ம ஸ்கூல்ல ஆனுவல் டே வருதுதானேம்மா?!” என்று சிவாணி கேட்க, “அதுக்கென்ன இப்போ?” என்று பதிலளித்தாள் பாக்யமதி.
“என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லோரும் அவங்களோட அம்மா அப்பா ரெண்டு பேரையும் கூட்டிட்டு வர்றாங்க. நீங்க ஸ்கூல்ல வேலையா இருப்பீங்க. நான் தனியா உட்கார்ந்துட்டு இருக்கணும். அப்போ அப்பா என்கூட இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்?! அதுனால தான் கேட்குறேன்மா. அப்பாக்கு ஃபோன் போட்டு வரச் சொல்லுங்க. இல்லேன்னா என்கிட்ட போனை கொடுங்க. நான் அப்பாகிட்ட பேசிக்கிறேன்.” என்ற சிவாணியை எப்படி சமாளிப்பது என்று தெரியாது முழித்த பாக்யமதி,
“ஒன்னும் வேணாம்.. உன்னோட அப்பா இங்க எல்லாம் வரமாட்டாரு. சும்மா அடம்பிடிக்காம பாட்டிக்கூட சமந்தா இருக்கணும். சரியா?” என்று மிரட்டும் தோரணையில் கூற, “ஹும்.. எப்பப் பார்த்தாலும் இப்படியே சொல்றீங்க.. எல்லோரும் உனக்கு அப்பா இல்லயா? உன் அப்பா ஓடிப் போயிட்டாரா? உன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்ன பிரச்சனைன்னு கேட்குறாங்க..” என்று கூற,
“சிவாக்குட்டி.. அடுத்தவங்கப் பேசுவதை காதுலயே வாங்கக்கூடாது. இங்குப் பாரு ரோட்டுல எவ்ளோ குப்பையிருக்கு? அத்தனையையும் நாம எடுத்துப் போறோமா? இல்லைல்ல.. அதுமாதிரி தான் அவங்க பேசுறதை எல்லாம் காதுல வாங்கக்கூடாது.. ஆமா.. உன்கிட்ட இப்படி எல்லாம் யார் பேசுனது?” என்ற கேட்ட பாக்யமதிக்கு பதில் கூறாது முகத்தை திருப்பிக் கொண்டாள் சிவாணி. பள்ளிக்கூடத்திற்குள் ஸ்கூட்டியை நிறுத்தியதும், தன் தாயிடம் இருந்து கோபத்துடன் ஸ்கூல் பேக்கையும் லன்ஜ் பேக்கையும் வாங்கிக் கொண்ட சிவாணி, அவளை திரும்பிப் பார்க்காது நடந்து போக முயல, அவளது கையைப் பிடித்து தடுத்து நிறுத்திய பாக்யமதி,
“பட்டுக்குட்டிக்கு அம்மா மேல கோபமா?” என்று சிவாணியின் தாடையைப் பிடித்து கொண்ட பாக்யமதி,
“குட்டிம்மா கோவிச்சுக்காதடா.. எனக்கு உன்னை விட்டா யாருமில்லடா.. நீயும் என்கிட்ட பேசாம போனேன்னா.. அம்மாவால் தாங்க முடியாதுடா..” என்று கண்கலங்க, ஐந்து வயது சிறுமிக்கு என்ன புரிந்ததோ? தன் தாயின் கலங்கிய கண்களை துடைத்து விட்டவள்,
“சாரிம்மா.. இனிமே அப்பாப் பத்தி பேசமாட்டேன். அந்த கிஷோர் சார் இல்ல.. அவர் தான் அடிக்கடி அப்பாப் பத்தி என் ப்ரெண்ட்ஸ் முன்னாடி கேட்குறாரு. எனக்கு ரொம்ப ஷையா இருக்கும்மா..” என்று கூறியவளிடம்,
“இன்னொரு தடவை அந்தாளு உன்கிட்ட ஏதாவது கேட்டான்னா.. என் கதை உங்களுக்கு எதுக்கு சான்று திருப்பி கேளு.. அந்தாளுக்கிட்ட நான் பேசிக்கிறேன்.. சரியா!” என்றவள் சிவாணியின் கன்னத்தில் முத்தமிட்டு, அவளை அவளது வகுப்பறைக்குள் விட்டுவிட்டு தன் வேலையை பார்க்க சென்றாள். பிரபலங்கள் படிக்கும் மும்பையின் தலைசிறந்த பள்ளிக்கூடத்தில் நடன ஆசிரியராக பணிப்புரியும் பாக்யமதி, தன் மகளையும் அதே பள்ளிக்கூடத்தில் சேர்த்திருந்தாள். ஐந்து வருடத்திற்கு முன்பு வயிற்றில் பிள்ளையோடு மும்பை வந்தவளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் தான் தாயம்மாள். அவளுக்கென்று இருக்கும் உலகத்தில் வழுக்கட்டாயமாக நுழைய முயலும் கிஷோரைப் பார்க்க ஆசிரியர்கள் அறைக்குள் நுழைந்த பாக்யமதி,
“கிஷோர் சார்..” என்றவனை அழைக்க, தனது முப்பத்திரண்டு பல்லும் வெளியே தெரியும் அளவிற்கு சிரித்தபடியே அவளை நோக்கி திரும்பினான்.
“சார்.. தேவையில்லாம சிவாணிக்கிட்ட பேசுற வேலை வைச்சுக்காதீங்க.. அவளோட அப்பா எங்க இருந்தா உங்களுக்கென்ன? இன்னொரு தடவை இந்த மாதிரி நடந்துக்கிட்டீங்கன்னா.. உங்களைப் பத்தி மேனேஜ்மென்ட்கிட்ட கம்ப்ளெண்ட் பண்ணிடுவேன்.. மைண்ட் இட்.” என்று கூறிவிட்டு சென்றவளை முழுங்குவது போல் பார்த்தபடி நின்றிருந்தான் கிஷோர். ‘உன்னைய அடைஞ்சே தீருவேன்டி..’ என்று மனதில் நினைத்துக் கொண்டவனுக்கு, பாக்யமதி இந்த பள்ளிக்கு சேர்ந்ததில் இருந்தே அவள்மேல் ஒரு கண் இருக்கின்றது. அவளை அடைய தக்க சந்தர்ப்பம் பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றான். கிஷோரிடம் கத்திவிட்டு தன் வகுப்பறைக்குள் செல்ல இருந்தவளை வழிமறித்தவாறு வந்து நின்றான் க்ளர்க் சபரி. அவனை நிமிர்ந்து கேள்வியாக பார்த்த பாக்யமதியிடம்,
“மேடம் உங்களை பிரின்ஸிபல் சார் வரச்சொன்னாரு..” என்று கூறிவிட்டு செல்ல, ‘என்னவாக இருக்கும்??’ என்று யோசித்தவாறே, நடக்கப் போவதை அறியாது பள்ளி முதல்வர் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினாள் பாக்யமதி. அவளுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தான் என்னவோ?
