அழகுக்கு அழகானேன் உன்னாலே
அத்தியாயம் 31
ராக்கம்மா பாட்டி அறையை விட்டு சென்றதும் அப்படியே கட்டிலில் பொத்தென அமர்ந்தவளின் காதில் பலரது பேச்சுக் குரல்களும் விழுந்தன. அவை யாவும் அவளது மனதில் சென்றடையவில்லை. சிறிது நேரத்தில் அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்த தன் செல்வங்களை பார்த்தும் சுய உணர்விற்கு வராது மலங்க மலங்க விழித்தவளை அவ்வறையில் இருந்து வெளியே இழுத்துச் சென்றனர் மழலைகள் இருவரும்.
“வாங்கம்மா.. இங்கப்பாருங்களேன்.. நம்மளப் பார்க்க எத்தனை பேர் வந்துருக்காங்கன்னு..” என்று சிவாணி கூற, எதுவும் புரியாது அங்கிருந்தோரைப் பார்க்க, அவளது அருகில் வந்த பெண்மணி,
“ஹேய்.. பாக்யா.. நல்லாருக்கியா? என்ன அப்படி பார்க்குற? வெளிநாடு போயிட்டு வந்ததும் இந்த சித்திய மறந்துட்ட பாரேன்?! அட.. என்னைய தெரியலையா நான் தான் காரைக்குடி கல்யாணி சித்தி..” என்று கூற, தனது சிந்தனையில் இருந்து வெளியே வந்த பாக்யமதி, அப்போது தான் அவரை நன்றாக பார்த்தாள். பார்த்ததும் அவர் எப்போதும் தங்கள் குடும்பத்தோடு போட்டியிடுவதும் ஞாபகம் வரவே, பொய்யான புன்னகையோடு,
“ஆமா சித்தி. இப்போ தான் ஞாபகத்துக்கு வருது.. சாரி சித்தி.. நான் என்னமோ நினைச்சுட்டு இருந்தேனா.. உங்களை கவனிக்காம போயிட்டேன்.. ம்ம்.. நல்லாருக்கேன்.. நீங்க.. அப்புறம் மல்லிகா.. சித்தப்பா.. எல்லோரும் எப்படி இருக்கீங்க?” என்று கேட்க, பெரிய பெருமூச்சு ஒற்றை வெளியிட்டவாறே,
“ஹூம்.. உனக்கென்னமா? நீ தான் வெளிநாட்டு மருமகளாகிட்டியே?! பெரிய பணக்காரனையில்ல கல்யாணம் பண்ணிருக்கியாம்! அப்புறம் எப்படி இந்த சித்தியெல்லாம் உன் கண்ணுக்கு தெரியும்?! நாங்க வந்து உன் கல்யாணத்தை நிறுத்திடுவோம்னு நினைச்சா.. கல்யாணத்தை வெளிநாட்டுலேயே முடிச்சுக்கிட்ட?! ஏதோ பெரியாத்தா போன் பண்ணி உன் பிள்ளைங்களுக்கு மொட்டையடிச்சு காது குத்தம் போறதா.. சொன்னாங்க.. அதான்.. வந்தோம்..” என்று கூற,
‘க்கும் ரொம்ப தான் சலிச்சுக்குறாங்க.. ஆமா.. பின்ன? உங்க கண்ணு முன்னால மட்டும் என் கல்யாணம் நடந்துருந்தா.. அடுத்த நாளே டிவொர்ஸ் வாங்கிய கொடுத்துருக்க மாட்டீங்க?’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாலும்,
“ச்சே.. அப்படியெல்லாம் இல்ல சித்தி.. நீங்களா எதுக்கு எதையாவது நினைச்சுக்குறீங்க? ஆமா சாப்பிட்டீங்களா? முதல்ல வாங்க.. சாப்பிடுங்க.. அப்புறமா மத்ததை எல்லாம் பேசிக்கலாம்..” என்றவாறே அவரை உணவு மேஜைக்கு அழைத்துச் சென்றாள்.
“ஹூம்.. உனக்கெல்லாம் யோகோ அடிக்கணும்னு இருக்கு.. உனக்கு எங்கயோ மச்சமிருக்கு..” என்றபடியே உணவு மேஜையில் அமர்ந்தவரை வெறுப்புடன் பார்த்தவாறே, பரிமாற வந்தவளை சுற்றி வளைத்துக் கொண்டனர் அவளது சொந்தங்கள். மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா என ஒரு சிறு கிராமமே அவளை நலம் விசாரித்துக் கொண்டிருப்பதை தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் அபிதீப் சர்மா. அவனுக்கு இந்த கூட்டம் கும்பல் என்றால் அலர்ஜி. இருந்தாலும் பாக்யமதிக்காக அனைவரிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசியவன், அதன் பின்னர் தனது மடிக்கணினியை மடியில் வைத்துக் கொண்டு, தோட்டத்தில் தனது வேலையை பார்க்க ஆரம்பித்திருந்தான்.
*****************************************************
“ஏன்டி மல்லிகா?”
“என்னம்மா? சாப்பிட விடாம தொணத்தொணங்குற?!”
“அடியேய் கூறுகெட்டவளே.. சும்மா சாப்பிட்டுட்டே இருக்காம.. அந்த வெள்ளக்கார தம்பிய உன் கைக்குள்ள போட்டுக்குற வழியப் பாரு..”
“அடப்போம்மா.. அவருக்கு தான் ஏற்கனவே கல்யாணமாகிடுச்சே.. அப்புறம் எதுக்கு அவரை கைக்குள்ள போட்டுக்கோன்னு சொல்ற?!”
“அடியேய்.. ஏற்கனவே கல்யாணமாகிருந்தா என்னடி? பணக்காரப்பையன்டி.. அவ ஒரு ஓரமா இருந்துட்டு போகட்டும்.. நீ மட்டும் அந்தப் பையன கைக்குள்ள போட்டுக்கிட்டேன்னா.. உன் வாழ்க்கையை பத்தி நான் கவலைப்பட வேண்டியதேயில்ல.. என் ராசாத்தி.. அம்மா சொல்றதை கேளும்மா..”
“எப்படிம்மா? மாமா தான் என்னைய நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேங்குறாரே..”
“அவ்வளவு தானா?! ஆம்பளைங்க எல்லோரும் ராமன் தான்னு யார் சொன்னா? சந்தர்ப்பம் கிடைக்காதவங்க தான் ராமன்னு சொல்லிக்குறாங்க.. நீயா அந்த பையன் கிட்ட போயி பழகு.. பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா.. தானா பத்திக்கப் போகுது.. தவிர.. அந்த பாக்யாவும் அவனை கண்டுக்குற மாதிரி தெரியல.. அவங்க ரெண்டு பேருக்குள்ளேயும் பேச்சு வார்த்தை நடந்து மாதிரியே தெரியல.. நீ முதல்ல போயி பழகு.. அப்புறம் அதை வைச்சு நான் நடிக்குற நடிப்புல அந்த பையனுக்கு நீ ரெண்டாவது பொண்டாட்டியா தான் இங்கிருந்து போவ..” என்று அம்மாவும் மகளும் தங்களுக்குள் தீட்டிய திட்டம், பந்தியில் அவர்களுக்கு பின்னால் அமர்ந்திருந்த பாக்யமதியின் காதில் தெளிவாக விழுந்தது. காவலுக்கு இல்லாத பயிரை யார் வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாடலாம் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கியது. தன்னுடைய பிடிவாதத்தினால் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருப்பதை உணர்ந்தவளுக்கு எப்படி அவனிடம் நெருங்குவது என்று தான் தெரியவில்லை. அவளது மனதுக்குள் இன்னும் ஏதோ ஒரு தடை இருப்பதை போல் உணர்ந்தாள். அவனிடம் நெருங்கவும் முடியாது, விலகவும் முடியாது தவித்தாள். அந்த நேரத்தில் ராக்கம்மா பாட்டியின் கதறல் சத்தம் வெளியே கேட்க, அங்கு சென்று பார்த்தவளின் இதயம் எகிறி வாய் வழியாக வந்துவிடும் போல துடித்தது.
“மாமா.. அந்தப் பக்கமா வருது.. பிடிங்க.. பிடிங்க.. ச்சோ.. என்ன மாமா? ஒரு கோழியை பிடிக்க முடியல..” என்றபடியே கோழியின் பின்னே மல்லிகா ஓட,
“அப்பா.. நீங்க தான் வின்னாரா இருக்கணும்.. கமான்பா..கமான்..” என்று சிவாணியின் குரலோடு அக்ஷயின் குரலும் ஒலிக்க, “அடப்பேராண்டி இந்த கோழியை அவ பிடிக்கட்டும்.. உங்களுக்கு பின்னாடி இருக்குற வெடக்கோழியை நீங்க பிடிங்க..” என்று ராக்கம்மா கத்த,
“அய்யோ.. க்ராணி.. எனக்கு கோழியெல்லாம் பிடிக்க வராது..” என்றபடியே வைக்கோல் பரப்பின் மீது ஒருபுறம் ஏற, மறுபுறம் மல்லிகா ஏறிக் கொண்டிருப்பதை பார்த்த பாக்யமதிக்கு பக்கென்று இருந்தது.
‘அய்யோ.. இப்போ தானே இவ அவ அம்மாவோட உள்ள பேசுனதை கேட்டேன்.. அதுக்குள்ள இங்க வந்துட்டாளே?! தாய் எட்டடின்னா குட்டி பதினாறடின்னு சொல்லுறது இதைத்தானா?!” என்று நினைத்தவளின் கால்கள் வேகமாக வைக்கோல் பரப்பின் மேல் ஏறத் தொடங்கியிருந்தது. ஒருபுறம் அபிதீவ் சர்மா ஏற, அவனின் எதிர்புறம் மல்லிகா ஏறிக் கொண்டிருக்க, அபிதீவ் சர்மாவின் இடது புறம் பாக்யமதி ஏறிக்கொண்டிருந்தாள். மல்லிகாவின் புறம் இருந்த வைக்கோலை ஒருபுறம் ராக்கம்மா பாட்டி சரிந்து கீழே செய்ய, கோழியை பிடிக்கவென நினைத்த பாக்யமதி, தடுமாறி அபிதீவ் சர்மாவின் மீது விழுந்தாள். இருவரும் ஒருவரின் மீது சரிந்ததினால் வைக்கோலும் அவர்களை மூடி மறைத்தவாறு சரிந்தது. பாக்யமதி கீழே விழுந்து அடிபடாமல் இருக்க, தன் மார்பின் மீது தாங்கியவளின் கைகள், அவளது இடையை தழுவி இருந்தது. விழுந்த வேகத்தில் அவளது புடவை அவனை முழுதாக சுற்றுக் கொள்ள, அவனிடமிருந்து அவளால் விலகவும் முடியவில்லை. அவனது மூச்சுக்காற்று அவளது நாசி உணர, அவளது பெண்மையின் வாசத்தை அவனது நாசி உணர்ந்தது. அவளது வழுவழுப்பான இடையின் மென்மையை உணர்ந்தன அபிதீவ் சர்மாவின் கைகள். தன்னையும் அறியாமல் அதில் சற்று அழுத்தத்தை அவன் கூட்ட, இதழை பல்லால் கடித்து தன் கூச்சத்தை வெளிப்படுத்தியவளின் முகத்தை ஆராய்ந்தான் அபிதீவ் சர்மா. கன்னங்கள் ரோஜாக்களாய் வெட்கத்தில் சிவந்து, கண்களை மூடி, நடுங்கிய உதடுகளை பற்களால் கடித்துக் கொண்டிருந்தவளிடமிருந்து, அச்செவ்விதழ்களை தன் இதழ்களால் விடுதலை செய்தவன், பின் அவைகளை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டான். இவர்கள் இவ்வாறு இருக்கும் நிலையாக மல்லிகாவையும் மழலையர்களையும் தந்திரமாய் தன்னோடு அழைத்துச் சென்றது மட்டுமல்லாது, வேறு யாரும் அப்பக்கம் செல்லாது பார்த்துக் கொண்டார் ராக்கம்மாள் பாட்டி. தன் இதழ் முத்தத்தில் மயங்கிக் கிடந்தவளை கீழே பிரட்டியவன், தனது வலது கையை அவளது இடையை சுற்றி வளைத்து பிடித்திருந்தான். இடது கையால் அவளது முடியிலும் முகத்திலும் இருந்த வைக்கோலை அகன்றிக் கொண்டே,
“நம்ம வீட்டுக்கு போகலாமா?” என்று கேட்டவனை, தன் விழி திறந்து பார்த்தவள், அவனது தலையிலும் கழுத்திலும் மார்பிலும் இருந்த வைக்கோலை அகன்றிக் கொண்டே,
“சாரி.. வெரி சாரி.. நா.. நா.. நான் உங்களை தப்பா நினைச்சுட்டேன்.. உங்கக்கிட்ட சொல்லாம போனது தப்பு தான்..” என்று கூற, அவளது உதடுகளை பேசவிடாது, தன் ஒற்றை விரல் கொண்டு தடுத்தவன், அவளது நெற்றியில் முத்தமிட்டு,
“நானும் கோவிச்சுட்டு உடனே போயிருக்கக்கூடாது.. உன்னைய வந்து பார்த்து பேசியிருக்கணும்.. உன்னையப் பத்தி மட்டும் விசாரிச்சேனே தவிர, நீ எவ்ளோ கஷ்டப்பட்டன்னு கேட்கவேயில்ல.. ரோஷினி உன்னைய நல்லாப் பார்த்துப்பான்னு நினைச்சேனே தவிர, நீ குழந்தையோடு இப்படி கஷ்டப்படுவேன்னு நினைக்கல.. தப்பெல்லாம் என் மேல தான்.. என்னோட ஈகோவை விட்டுட்டு உன்கிட்ட பேசிருந்தா.. இப்படி அநியாயமா நாலு வருஷ வாழ்க்கையை தொலைச்சுருக்க மாட்டோம்..” என்றவனின் தலைமுடிக்குள் கையை அலையவிட்டவாறே,
“இப்போக்கூட.. அந்த மல்லிகா மட்டும் இங்க வரலைன்னா.. இன்னமும் என்னோட ஈகோ.. உங்களை தேடி வர வைச்சுருக்காது.. ஐம் சாரி அபி..” என்றவளின் முகம் முழுவதும் முத்தமிட்டவன்,
“நீ என்னைய அபின்னு சொல்லி எவ்வளவு நாளாச்சு? என் கோபமே.. உனக்கு நான் வேணாம்.. ஆனா என் மூலமா வந்த புள்ளைங்க மட்டும் வேணுமாங்குறது தான்.. ஆனா இப்போ.. ஐம் வெரி ஹாப்பியஸ்ட் பேர்சன் இன் தி வேர்ல்ட்..” என்றவன் அவளை முழுமையாக ஆக்கிரமிக்கத் தொடங்க, அவனது வேகத்திற்கு தடை போட நினைத்தவளின் தடைகளை உடைத்து மேலும் முன்னேறினான்.
“ம்ம்ம்.. யாராவது பார்த்துடப் போறாங்க?!”
“இப்போ எனக்கிருக்குற சந்தோஷத்துக்கு நான் எதுக்காகவும் யாருக்காகவும் உன்னைய விட்டு விலகுவதா இல்ல..”
“அதுக்குன்னு நேரம் காலம் இருக்குதுல..”
“ஹூம்.. நாலு வருஷமா நான் காத்த விரதம் இன்னைக்கு முடிஞ்சே ஆகணும்..” என்றவாறே பாக்யமதியை தன் கையில் ஏந்திக் கொண்டவன், அவர்களது அறையை நோக்கி செல்ல, அங்கிருந்த அனைவரும் ஆவென பார்த்திருந்தனர். மல்லிகாவும் அவளது தாயாரும் கூட, ‘ச்சீ.. ச்சீ.. இந்த பழம் புளிக்கும்..’ என்ற நிலைக்கு வந்திருந்தனர். இந்த உலகம் அன்பால் பிணைக்கப்பட்டது. அன்பும், உறவுகளும் பின்னிப்பிணைந்த கூட்டுக் கலவை தான் இவ்வுலக வாழ்வியல்.இந்த உறவுகளில் கணவன், மனைவி என்ற உறவு வலிமையானது..அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, நாளும் கோளும் தேர்வு செய்து மங்கல அணி கட்டப்பட்ட திருமண வாழ்க்கை எக்காலத்திலும் வரமாக பார்க்கப்படுகிறது. உண்மையான அன்பிலும் உறவிலும் விரிசல்தான் எட்டிப்பார்க்கிறதே தவிர உயிர்த்துடிப்பு இல்லையென்று சொல்லி விட முடியாது. ‘விட்டுக்கொடுத்தவன் கெட்டுப் போனதில்லை’ என்பது பழமொழி. இது இல்லற வாழ்க்கையின் இலக்கணம் என்பதனை மறந்துவிடாதீர்கள்.. வாழ்வது கொஞ்ச காலம் அதனை ஏன் புரிதலோடு வாழ்ந்து அனுபவிக்கக் கூடாது..
ஒரு கை தட்டினால் ஓசை வராது. இரண்டு கையும் சேர்த்து தட்டினால் அந்த ஓசை பத்து பேருக்குக் கேட்கும். அதே போல் தான் வாழ்க்கையும். ஆம்! ஒருவர் பேசும் பொழுது ஒருவர் விட்டுக் கொடுத்துச் சென்றால் வீட்டில் அமைதி நிலவும். கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்.. அந்தப் பயிரை தண்ணீர் ஊற்றி வளர்க்கத் தெரியாமல் தரிசு நிலமாக்கிக் கொள்கின்றனர். தங்களது குடும்ப வாழ்க்கையில் மூன்றாம் மனிதரை எப்போதும் உள்ளே விடக்கூடாது. காந்தாரியின் பேச்சிற்கு செவி சாய்த்த பாக்யமதி, தன் கணவனான அபிதீவ் சர்மாவின் காதலை காண தவறிவிட்டாள். காந்தாரியின் உதாசீனத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென்று நினைத்து தன் தந்தையோடு சென்றாளே தவிர, தன் கணவனின் காயப்படுத்துகின்றோம் என்பதை புரிந்து கொள்ளாமல் போனாள். தனக்கு பிறந்த குழந்தைகளில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு சென்ற அபிதீவ் சர்மா, தனது தாயின் சதி திட்டத்தை அறியாது, கோபத்தில் தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்தான். அந்நேரத்தில் சற்று நிதானித்து செயல்பட்டிருந்தால், அனைவரின் உணர்வுகளும் அவனுக்கு புரிந்திருக்கும்.. கணவன், மனைவி மீதும் மனைவி, கணவன் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும்.. இல்லறம் எனும் பந்தம் நல்லறமாக சில தியாகங்களை இணையர்கள் இருவரும் செய்ய வேண்டும். நான் ஆண்… நான் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன் என்று கணவன் கூறக்கூடாது. மனைவியும் தான் பேசுவதே சரி என பிடிவாதம் பிடிக்கக்கூடாது.. தம்பதியர் தங்களுக்குள் இருக்கும் பிடிவாதத்தை துரத்திவிட்டு இருவரும் ஒருவராகப் பயணிக்க வேண்டும். அப்படி பயணித்தால் ஒரு காந்தாரியென்ன? ஓராயிரம் காந்தாரி வந்தாலும் கணவன் மனைவி பந்தத்தை பிரிக்க முடியாது.
அத்தியாயம் 32
அடுத்த நாள் காலையில் அனைவரும் குலதெய்வ கோயிலுக்கு சென்று மழலையர் இருவருக்கும் மொட்டையடித்து காது குத்திப் விழா ஏற்பாடு செய்திருக்க, தன் முன் தங்க சிலையாய் நின்றிருந்த மனைவியை விட்டு இம்மியளவும் பார்வை விலகாது பார்த்திருந்தான் அபிதீப் ஷர்மா. தன் தந்தையின் மடியில் மட்டுமே அமர வேண்டும் என சிவாணியும் அக்க்ஷையும் அடம்பிடிக்க, அவர்களது விருப்பம் போல், அவர்களை தன் மடியில் அமர வைத்து மொட்டை போட வைத்தனர். சொந்தகளின் ஆசியோடு மழலையர் இருவருக்கும் காது குத்தினார்கள். பொங்கலிடும் போது, தூக்கி சொருகிய புடவையோடு வேர்த்து வடிந்து களைத்து தெரிந்த மனைவியின் அருகே நின்று அனைத்து உதவிகளையும் புரிந்த அபிதீவ் சர்மாவை, கண்ட கன்னியர்கள், பாக்யமதியை பொறாமையோடு பார்த்திருந்தனர். எவ்விடத்திலும் தன் மனைவியை தனது கையணைப்பில் இருந்து, தனித்து விடாது, அடைகாக்கும் ராஜாளி பறவையானான். கோவிலின் பூஜை முடிந்து, அனைவரும் ஓய்வேடுத்து கொண்டிருக்க, ராக்கம்மா பாட்டியோடு நின்று பேசிக் கொண்டிருந்த அபிதீவ் சர்மாவை தேடி வந்தாள் சிவாணி.
“அப்பா.. இங்கப்பாருங்க..”
“என்னடா? ஏன் அழுகுற?”
“அம்மாவும் அக்ஷயும் ஒன்னா சேர்ந்து கிட்டு எனக்கு பம்பரம் கொடுக்க மாட்டேங்குறாங்க..”
“அப்படியா?! வா.. நான் வந்து என்னன்னு கேட்குறேன்..”
“அதெல்லாம் வேணாம்.. எனக்கு அவங்க தோற்கணும்.. நீங்க தான் வந்து எனக்கு ஹெல்ப் பண்ணணும்..”
“நானா? ஓகே.. கம்..” என்றவன் சிவாணியின் கையைப் பிடித்து கொண்டு மனைவி இருக்கும் இடத்திற்கு சென்றான். அங்கே தனது மனைவி, தூக்கி சொருகிய புடவையோடு, எழில் கொஞ்சும் அழகு தெரிய, தன் மகனோடு பம்பரம் விளையாடி கொண்டிருப்பதை பார்த்ததும், அவளிடமிருந்து தன் கண்களை விலக்க முடியாது, அவளின் அருகே சென்றான் அபிதீவ் சர்மா. தன் மனைவி மகனுடன் பம்பரம் விடும் போட்டியில், தன் மகளின் முன்னே தோற்க முடியாது திணறியவனுக்கு பம்பரம் விடக் கற்றுக் கொடுத்தாள் பாக்யமதி. அதனைப் பார்த்த வாண்டுகள் இருவரும் இடையில் கைவைத்து ஒருவரை ஒருவர் பார்த்து நிற்க, இருக்கும் நிலை மறந்து தங்கள் உலகிற்குள் மூழ்கி போயினர் காதல் தம்பதியர். தன் குடும்பத்தோடு ஒவ்வொரு நிமிடத்தையும் பொக்கிஷமாய் தங்களுக்குள் சேமித்துக் கொண்டனர். மனநிறைவாக அவர்களை அமெரிக்காவிற்கு வழியனுப்பி வைத்தார் ராக்கம்மா பாட்டி.
ஏர்போர்ட்டில் தம்பதிகளாக வந்திறங்கிய ரகுநாதனையும் ரோஷினியையும் ஆச்சரியமாக பாக்யமதி பார்த்திருக்க, கள்ளச்சிரிப்போடு அவர்களை பார்த்திருந்தான் அபிதீப் ஷர்மா. ரகுநாதனை கண்டதும், பாக்யமதியின் தோளில் கையிட்டு தன் உரிமையை வெளிப்படுத்திய அபிதீவ் சர்மாவை, குறும்போடு பார்த்திருந்தான் ரகுநாதன்.
வீட்டிற்கு வந்ததும் தன் தாயிடம் ஒரு வார்த்தை கூட பேசாத அபிதீவ் சர்மா, தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு தனியாக அரண்மனை கட்டி, அங்கு சென்றிருந்தான். தன் அருமை மனைவி ஆசையாக கற்றுக் கொண்டிருந்த நடனத்தின் மீது கொண்ட காதலுக்காக நடனம் பள்ளியை தொடங்கி, அதில் தன் மனைவியை செயலாளராக நியமித்தான். குடும்பத்தொழிலோடு சேர்த்து தன் மருத்துவப் பணியையும் செய்யத் தொடங்கினான். வாயோதிகத்தின் காரணமாக கஷ்டப்படும் காந்தாரிக்கு, தன்னாலான உதவியை செய்யும் பாக்யமதியை, அவன் ஒரு போதும் தடுத்ததில்லை. ஆனால் இன்றளவும் அவரை மன்னிக்கவும் இல்லை. தாய் காட்டும் வழியில் செல்கின்ற சிவாணியும் அக்ஷையும் கூட காந்தாரியை வெறுக்கவில்லை; அதற்காக அவரிடம் உறவும் கொண்டாடவில்லை. எட்டி நின்றே பழகினர் தன் தாயைப் போல்..
அன்பு செலுத்துங்கள்.. இணைந்து நின்று ஒருவொருக்கு ஒருவர் தோள் கொடுங்கள்..
இல்லறம் எனும் நல்லறத்தில்’அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது’ எனும் வள்ளுவத்தின் வழிநின்று வாழப்பழகிக் கொண்டால் அந்த வாழ்க்கையை வரலாறு பேசும்..
*******************சுபம்*************************
