விழிகளில் பேசு காதல் மொழி
அத்தியாயம் 2
டப்! டொம்!
நண்பர்கள் பட்டாளம் அனைவரும் கரவொளி எழுப்பி விசிலடித்து, பேப்பர் மழைப் பொழிய, ரிஜிஸ்டர் ஆபிஸில் ஆதர்ஷினியின் நெருங்கியத் தோழியான தாராவின் கழுத்தில் திருமாங்கல்யத்தைக் கட்டினான் சுரேஷ். திருமணப் பதிப்பு படிவத்தில் இருவரும் கையெழுத்திட்டுவிட்டு தன் தோழியிடம் பேனாவை நீட்டினாள் தாரா.
மை தீண்டாத அடர்கருமயிர் கொண்ட கண்ணில் தோழமையும், ஒப்பனைகள் ஏதும் இல்லாமலேயே சிவந்திருக்கும் இதழில் சிறுப் புன்னகையுடன் சாட்சிக் கையெழுத்தைப் போட பேனாவை வாங்கிக் கொண்டவள், கையெழுத்திடும் முன் தாராவின் கணவனாகிய சுரெஷிடம், “தாராவ நல்லாப் பாத்துப்பீங்கள்ல?” எனக் கேட்க, சுரேஷோ எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே, “ஏ..ன்.. இப்படிலாம் கேக்குறீங்க? இஷ்டமில்லேனா இவ்ளோ ரிஸ்க் எடுத்திருக்க மாட்டேனே. அ..தெல்..லாம் நா ரொம்ப நல்லாப் பார்த்துப்பேங்க. நீங்க தைரியமா சைன் பண்ணுங்க” என மாப்பிள்ளைத் தடுமாறியபடியேக் கூற, ஒரளவு திருப்தியான முகபாவனையுடன் கையெழுத்திட்டாள் ஆதர்ஷினி.
ஏனெனில் மாப்பிள்ளையை கடத்திக் கொண்டு வருவதற்காகத் தான் அதிகாலையில் ஆதர்ஷினி கிளம்பியதே. பலர் கண்களில் மண்ணைத் தூவிவிட்டும், சிலரை பந்தாடிவிட்டும் அவள் அழைத்து வந்த தினுசில் பைக்கில் அமர்ந்து வரும்போது கூட ‘அம்மாடியோவ்! எல்லாரும் காலால, கையால அடிக்குறத பாத்துருக்கோம். தலைமுடியால அடிக்குறத இன்னிக்கு தான்டா பாக்குறேன். எப்டிதா ஃபுட்பால் ஆடுற மாதிரி கால்லயே அடிச்சு நொறுக்க முடிஞ்சுதோ?! நல்லவேளை மாப்ள! நீ இவளக் கல்யாணம் பண்ணிக்கப் போறதில்ல! யப்பா!’ என உள்ளுக்குள்ளேயேப் புலம்பியவன், அவளைத் தொடாமல் தள்ளியே அமர்ந்து வந்தான் சுரேஷ்.
திருமணமான மகிழ்ச்சியை தன் தோழி ஆதர்ஷினியை இறுக்க அணைத்து ஆனந்தக்கண்ணீருடன் தெரிவித்தாள் தாரா. “தேங்க்யூ சோ மச் டி. நீ மட்டும் இல்லைனா இந்தக் கல்யாணம் நடந்திருக்காது.” கண்கலங்கியபடி தாரா கூறவும் மற்றவர்கள் அனைவரும் பொங்கிவிட்டார்கள்.
“ஓய்! இதென்ன ஓரவஞ்சமா இருக்கே. உங்கப்பாக் கண்ணுல மண்ணைத் தூவிட்டு உன்ன கூட்டிட்டு வர நாங்க பட்டப் பாடெல்லாம் தர்மக்கணக்கா?! மச்சா! சாச்சுபுட்டா மச்சா!” என மாதேஷ் நடிகர் வடிவேலு போலப் பேசிக் கலாய்க்க, இன்னொரு நண்பனான வசந்த் “அதானே! மாலை, பட்டுசேலைன்னு தாலிவரைக்கும் எல்லாத்துலயும் நாங்களும் உழைப்பப் போட்ருக்கோம்மா. டேய்! என்னடா! பேந்த பேந்த முழிச்சுகிட்டு நிக்கற. சொல்ற எங்களப்பத்தி.” என மாப்பிள்ளையை வம்பிழுக்க, “டேய் இதெல்லாம் ஒரு விஷயமாடா?! விடுங்கடா!!” என சுரேஷ் மழுப்ப, மொத்த நண்பர்கூட்டமும் “அடப்பாவி!” என் வாயைப் பிளந்தனர்.
உடனே அக்கூட்டத்திலிருந்து முந்திக் கொண்டு வந்த பிரபு, “அம்மாடி தாரா! பால்டப்பால பால் குடிக்கலைன்னாலும் அவன் இன்னும் பச்சப்புள்ள தாம்மா.” என சொல்லிக் கொண்டே சுரேஷின் கையை எடுத்து தாராவின் கையில் வைத்து, “என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன்மா. இவன் கண்ணுலருந்து வெங்காயம் வெட்டும்போது கூட கண்ணு கலங்காமப் பாத்துக்கம்மா!” என நடித்தபடி வராதக் கண்ணீரைத் துடைத்தபடி டவலை வாயில் பொத்திக்கொண்டு போலியாக அழ, எல்லோரும் “ஓஓஓஓ” எனக் கோரசாகக் கத்தவும் தாராவின் முகம் ஒரளவு தெளிந்து சிரிக்க ஆரம்பித்தாள்.
இருந்தாலும் “ஆது! அப்பாவ நெனச்சா தான் ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்றேன்” என மீண்டும் தாரா கண்கலங்க, “போச்சுடா! மறுபடியும் மொதல்லருந்தா?!” என மாதேஷ் தலையில் கை வைக்க, “ப்ச்சு. அசடு மாதிரி பேசாத. உங்கப்பா சம்மதத்தோடதா உன் கல்யாணம் நடந்துச்சு. என்ன… புரியலையா?! அங்க ப்ரௌன் கலர் ரெய்ன்கோர்ட் போட்டுட்டு நிக்குறது யார்னு தெரியுதா?” எனத் தூரத்தில் இருக்கும் வேப்பமரத்தின் நிழலில் நின்றிருந்த தாராவின் தந்தையை ஆதர்ஷினி கைக்காட்டவும், அதிர்ந்து போனாள் தாரா. தன் தந்தை யாரோப் போல நின்று தன்னைப் பார்ப்பதைக் கண்டதும் வாயைப் பொத்திக் கொண்டு அழலானாள் தாரா.
“உன் கல்யாணம் டெப்டி-கமிஷனருக்கு தெரியாம நடந்துருமா?! நீ எங்க உங்கப்பாவப் பார்த்த?! உன் ‘அவர்’ வர்றாரான்னு மட்டும் பாத்துருப்ப. பெத்தவங்களையும் கொஞ்சம் யோசிக்கணும் தரு. இப்ப நீயேப் போய் பேசுனாலும் அவர் பேசுற மனநிலைல இல்ல. சோ யு நீட் டு கட்ரோல் யுவர்செல்ப்ஃ.” என ஆதர்ஷினி ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க, “இவ்ளோ நடந்தும் மண்டமேல இருந்த கொண்டைய மறந்துட்டோமேடா” என அவ்வளவு நேரமாக தாங்கள் செய்ததையெல்லாம் வீரமாகப் பேசிய வசந்த், தன்னை மறந்து கமென்ட் பண்ண, அதுவரை சீரியசாகப் பேசிக் கொண்டிருந்த ஆதர்ஷினியும் ‘பக்’கென சிரித்துவிட்டாள். ஏனெனில் தாராவை அவளின் தந்தை அல்லவா கண்டும் காணாமல் அவர்களுடன் அனுப்பி வைத்திருக்கிறார்!
அதைத் தொடர்ந்து அனைவரும் அச்சிரிப்பில் இணைந்து கொண்டனர். தன் மகள் சிரிப்புடன் இருப்பதைக் கண்ட டெப்டி-கமிஷனருக்கும் புன்னகைப் பிறந்தது. பிறகு வாக்கி டாக்கியை கையில் எடுத்தவாறு மிடுக்குடன் வண்டியில் கிளம்பிச் சென்றுவிட்டார். தன் தந்தை சிரிப்பதைப் பார்த்துவிட்டத் திருப்தி, மனதினுள் அமைதியைப் பரப்ப, அதன்பிறகே தாரா இயல்புநிலைக்கு வந்தாள் எனச் சொல்லலாம்.
“ஹூம். இனிமே நாங்கள்லாம் உங்கக் கண்ணுக்கு தெரியவாப் போறோம். உங்க ‘அவர்’ மட்டும் தா முக்கியமாத் தெரியும். என்ன சார் நா சொல்றது சரிதானே?!” என மாப்பிள்ளையான சுரேஷைப் பார்த்துக் கண்ணடித்தபடி ஆதர்ஷினி கேட்க, சுரேஷோ சற்றுத் தடுமாறி விட்டு, “சரியாப் போச்சு. மாடர்ன் பொண்டாட்டி மாதிரி சீரியல் பார்த்துட்டு என் வயித்தக் காயப்போடாம இருந்தா சரி” என்றுக் கூறவும் ஆதர்ஷினி மற்றும் சுரேஷின் நண்பர்களும் ‘கொல்’ லென சிரிக்க ஆரம்பிக்க, தாராவோ ஏகத்திற்கும் முறைத்து பார்த்தாள்.
‘ஐய்யய்யோ! முதலுக்கே மோசமாகிடுமோ! நைட்டு கச்சேரி கட் பண்ணிட்டான்னா?! ஆத்தடி!’ என்று உஷாரான சுரேஷ், மெல்ல மனைவியின் தோளை அணைத்து, “ஹேய்! சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டா ச்செல்லம். நீ என்னடான்னா முகத்தை இப்டி தூக்கி வச்சுட்ருக்க. இப்டியிருந்தா முகம் பார்க்க சகிக்கல.” என்று சுரேஷ் கூறிக் கொண்டிருக்கும் பொழுது சற்றே சமாதானமடைந்த தாராவின் முகம், இறுதியில் ‘முகம் பார்க்க சகிக்கல’ என்ற வார்த்தையில் மீண்டும் கடுத்தது. கையில் இருந்த பூச்செண்டை வைத்து சுரேஷின் தலையிலேயே ஓங்கி ஒரு போடு போட்டாள். திடீர் தாக்குதலில் சுரேஷ் வாயடைத்து நிற்க, ஆதர்ஷினியோ தன் வலதுகை விரல்களைக் கொண்டு இதழ்களின் மேல் உள்ளங்கை வெளியேத் தெரியுமாறு வைத்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
என்ன தோழியின் திருமணமா?! ஆம். ஆதர்ஷினி தன் தோழியின் திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்து போடத் தான் அதிகாலையிலேயே கிளம்பியது.
எல்லோரும் பொதுவாக பெண்ணை அழைத்து வர சிரமப்படுவார்கள். ஆனால் இங்கே ரவுடி ரங்கனின் தம்பியல்லவா மாப்பிள்ளை! தம்பிக்கு அண்ணன் மீது அதீத பயம். ஆகையால் சுரேஷை அழைத்து வரும் பொறுப்பும் நம் தலைவியைச் சார்ந்ததாகிற்று. அத்தனைக் காவல் தடைகளையும் தாண்டி வந்து, இதோ! இனிதே திருமணமும் முடிந்தது.
மாப்பிள்ளை சுரேஷைப் பார்த்து, கார் சாவியை நீட்டினாள். “இனிமே நீங்க இங்க இருக்குறது சேஃப் இல்ல. சோ இப்பவே கிளம்புங்க.” என ஆதர்ஷினி அவர்களைக் கிளப்ப முயற்சி செய்ய, அவர்களோ பிரச்சனையின் தீவிரம் தெரியாமல், “ஏய் என்னப்பா! ஹோட்டல் போயி சாப்பாடு சாப்ட்டுட்டு… அட்லீஸ்ட் மேரேஜ் ட்ரீட்டாவது கொடுக்கணும்ல ஆது?!” எனத் திருமணக் குதூகலிப்பில் தாரா பேசிக் கொண்டிருக்க, ஆதர்ஷினியின் தீவிர யோசனையுடன் கூடிய முகம் பார்த்ததும் சுரேஷ் சுதாரித்தான். ஏனெனில் நேரிலேயே அனைத்து சங்கடங்களையும் கண்டவனல்லவா! அதனால் கார்க்கீயை வாங்கிக்கொண்டு தன் மனைவியிடம் திரும்பியவன், “எல்லாம் அப்றமா பார்த்துக்கலாம். எங்கண்ணனும் சாதாரண ஆளில்ல. சோ ஆதர்ஷினி சொல்ற மாதிரி கிளம்புறது தா பெஸ்ட். வண்டில ஏறு.” என சுரேஷ் கூறவும் மறுபேச்சின்றி காரை நோக்கி நடக்கலானார்கள்.
காரின் கதவைத் திறக்க முற்படும் போது, ரிஜிஸ்டர் ஆபிஸ் வாயிலினுள்ளே புழுதி சூழச் சீறிப் பாய்ந்து வந்தது உயர்ரக ஆஸ்டொன் மார்டின் கார். புழுதியில் ஒருசில கணங்கள் அவ்விடமே நிறைந்திருந்தது. அனைவரும் இறுமிக் கொண்டும், முகத்தை கைக்கொண்டு மூடி, கைகளால் அசைத்தபடி புழுதி முகத்தில் படாமல் இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
கார் கதவு திறந்து கொண்டு வெளியே வந்தவன், ஆளை அசரடிக்கும் ஆறடி உயரத்தில் ராயல் ப்ளூ டீஷெர்ட்டும், அடர்கருநீலவண்ண ஜீன்ஸும் அணிந்து கொண்டதில் அவனின் தேக அமைப்பு தெளிவாகத் தெரிய, அளவாக வெட்டப்பட்டு சீர்திருத்தப்பட்ட சிகையுடன், கண்ணையும் கருத்தையும் சுண்டியிழுக்கும் வகையில் பேரழகனாக, கண்ணில் கூலர்ஸ் அணிந்து வேகநடையுடன் சுரேஷிடம் வந்து நின்றான். அவன் யாரென்று இனங்கண்டு கொண்ட சுரேஷின் விழிகள் ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து நின்றது.
ஆனால் மனதிலோ ‘இன்று அதிகாலை நான்கு மணிக்கு தானே தகவல் சொன்னேன். அதற்குள் இவனால் எப்படி இவ்வளவு சீக்கிரம் சென்னையிலிருந்து இங்கு வர முடிந்தது’ என்றே யோசனை ஓடலானது.
ஆம். சென்னையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு காரில் பயணப்பட கிட்டத்தட்ட ஐந்தரையிலிருந்து ஆறு மணிநேரமாவது பிடிக்கும். புயல் வேகத்தில் வந்தால் ஒழிய, ஹெலிகாப்டர் தவிர்த்து வேறு வழியில் இவ்வளவு சீக்கிரம் வர இயலாது.
“ஹேய் அர்னவ்! நீ எப்படிடா…” என்று கேட்க ஆரம்பித்தது நான் தாமதம். யாரும் எதிர்பார்க்காத நேரம், சுரேஷை ஓங்கி அறைந்திருந்தான் அர்னவ். அப்படி அறைந்ததில் அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர். அடுத்த அடி அவனை அடிப்பதற்காக ஓங்கிய அவன் கை, சுரேஷின் கன்னத்தை பதம் முன்னர் ஒரு மென்மையும் வலிமையும் கூடிய கரமொன்று அறைவதைத் தடுப்பதற்காக பிடிக்கப்பட்டிருந்தது. அது வேறு யாராக இருக்க முடியும்?! நம் கதாநாயகி ஆதர்ஷினியே தான்.
தன் கையைத் தடுக்கும் தைரியம் எவருக்கு உள்ளது என்று அப்போது தான் ஆதர்ஷினியைத் திரும்பிப் பார்த்தான். பார்ப்பவரை அப்படியே உள்ளிழுத்துக் கொள்ளும் அதீத காந்தத்தன்மை வாய்ந்த அர்னவ்வின் கண்கள் சீற்றத்துடன் திரும்பி அவளை அப்படியே அணுவணுவாக அளவிட்டது.
பிறை நெற்றியில் சின்னச்சின்னதாய் முளைத்திருந்த முடிகள் அவள் புருவங்கள் வரையெட்டி காற்றின் மெல்லிய சாரலில் நெத்திச்சூட்டியாய் நர்த்தனமாட, புருவங்களிரண்டும் திருநெல்வேலி அரிவாளைப் போல கம்பீரமாக வளைந்திருக்க, கண்களிரண்டும் மானின் கருவிழிகள் போல் மயக்கினாலும் அதிலொரு தீர்க்கமான இறுக்கம் இருந்தது. அளவாக செதுக்கப்பட்டக் கன்னக்கதுப்புகளும் அதில் வெள்ளைப் பன்னீர் ரோஜாவின் மேலிருக்கும் நீர்த்துளிகள் போல் பிங்க் பருக்களும் கூட அவளுக்கு கன்னத்தில் ருசு ஏதும் தடவாமலேயே சிவந்திருந்தது, தனியழகாக அமைந்தது. அடர்ந்த பிங்க் நிறத்தில் சிவந்திருந்த இதழ்கள் அழுந்த மூடியிருந்ததில் இன்னும் சிவந்தது.
கருநாகம் போல் இடைவரை அடர்ந்து நீண்டக்கூந்தல் பின்னலிட்டு இருந்தது. அதற்கு ஏற்றாற்போல் கருநிற லேடீடாப் மற்றும் கருநிற ஜெகிங்க்ஸ் அணிந்து, வலது கையில் சிகப்பு மற்றும் மஞ்சள் நிறக் கயிறுகள் கட்டியிருக்க, இடதுகையிலோ மாம்பழ வடிவில் சில்வர் ப்ளேட்டுடன் கருப்பு வார் கைக்கடிகாரத்தை அணிந்து, காலில் கருமைநிறக் கட்ஷூ போட்டிருந்தாள். ஒப்பனைகள் ஏதுமில்லாமலேயே இயற்கையாகவே அழகாய் இருப்பது தனி சிறப்பென்றால் அதில் திறமைகளும் கலந்திருப்பது இன்னும் சிறப்பு தான் அல்லவா!
ஆனால் அர்னவ்வின் கண்ணில்பட்ட எதுவும் ஆதர்ஷினிக்கு கருத்தில் பதியவில்லை போலும். கண்ணில் கேள்வியுடன் அவனைத் தடுத்தவண்ணம் கூறினாள். “நீங்க சுரேஷோட ரிலேட்டிவ்வாவோ, இல்ல… வெல்விஷ்ஷராவோ, ஃப்ரண்டாக் கூட இருக்கலாம். ஆனா அவர் ஒய்ப்ஃ பக்கத்துல இருக்கும்போது அவர அடிக்க உங்களுக்கு எந்த ரைட்ஸும் இல்ல.” என சீற்றம் அடக்கப்பட்டக் குரலில் பேசினாள் ஆதர்ஷினி.
யாரிந்த அர்நவ் தேவ்? எதற்காக இங்கு வந்தான்? இவ்வளவு கோபத்துடன் ஏன் சுரேஷை அறைந்தான்? என்ன நடந்திருக்கும்?!
