விழிகளில் பேசு காதல் மொழி
அத்தியாயம் 25
காவல்துறை வாகனத்திலிருந்து இறங்கியவரைக் கண்டு ஆதர்ஷினி மெல்லிய புன்சிரிப்பை உதிர்த்தாளென்றால் தூரத்திலிருந்து பார்த்த தாராவோ அதிர்ந்து போனாள்.
“அப்பா…..!!!” என உணர்ச்சிவசப்பட்டு ஓடிவந்தவளை டெப்டி கமிஷனர் பார்த்தப் பார்வையில் ஓடி வந்த வேகத்திலேயே நின்றுவிட்டாள் தாரா.
‘என்னை மன்னித்து விடுங்கள் அப்பா…’ எனக் கைகூப்பி மௌனமாய் அழுத தனது மகளைக் கண்டு உள்ளுக்குள் உருகினாலும் வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல்,
“நீங்க கலெக்ட் பண்ண ஆதாரமெல்லாம் எங்களுக்கு சீக்கிரம் அனுப்பி வைக்கப் பாருங்க. இவள நாங்கப் பாத்துக்குறோம்.” என ஆதர்ஷினியிடம் கூறிக் கொண்டிருந்தவரிடம்,
“ஓய்…. எந்த ஸ்டேஷன்யா நீ… எங்க தாத்தா யாருன்னு தெரியுமா?! எங்க தாத்தாக்கிட்ட சொல்லி உன் சட்டையக் கழட்ட வைக்கிறேன்…. பாக்குறியா..?!” என ஆதர்ஷினியிடமிருந்நு திமிறியவாறேக் கூறிய லீலாவதியின் பின்னந்தலையை, காவல்துறை பெண்மணி ஒருவர் பட்டென அடித்தார் “மரியாதையப் பேசத் தெரியாதா?!” எனக் கேட்டபடி.
நிதானமாக லீலாவதியிடம் தனது பார்வையைத் திருப்பி, தனது மொபைலில் இன்றைய செய்தித் தொகுப்பு வீடியோக்களில் ஒன்றையெடுத்து லீலாவதியின் முகத்திற்கு நேராகக் காண்பித்தார் கமிஷனர்.
அதில் பல்லவராஜனின் இரங்கல் செய்தி ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்த லீலாவதி, ஆதர்ஷினியிடம் திமிறிக் கொண்டிருந்ததை நிறுத்தி, கண்ணில் கோர்த்த நீருடன், “தாத்தா…” என அதிர்ச்சிக்குள்ளாகி அசையாத சிலையாகிப் போனாள்.
அதுவரை ஓரளவிற்கு மருந்தின் வீரியத்திலிருந்து தாக்குபிடித்த ஆதர்ஷினிக்கு நிதானம் தளர ஆரம்பித்தது. அப்போது அங்கே அசுரவேகத்தில் வந்த இருப் பெரிய சுமோ ரகக் கார்கள், இவர்கள் அனைவரையும் சூழ்ந்து வந்து நின்றது.
காரிலிருந்து காட்டெருமைப் போல இறங்கியத் தடியன்கள், லீலாவதியை மரியாதையுடன் அழைத்து சென்று, ஒரு காரில் ஏற்றியவர்கள், மற்றவர்களை அடித்து கைகளைப் பின்னோக்கி கட்டியவாறு மற்றுமொரு காரில் ஏற்றினர்.
வலுவிழந்து நின்ற ஆதர்ஷினியை சமாளித்துக் கடத்துவது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை. தூரத்தில் நின்று இதைப் பார்த்த ஆதர்ஷினியின் நண்பர்கள் வேகமாக அங்கிருந்த புதர் ஒன்றில் சென்று பதுங்கினர்.
எதிர்த்துப் போராடிய கமிஷனர் மற்றும் இதரக் காவலாளிகளை அடித்துப் போட்டுவிட்டு, சாந்தா மற்றும் ஆதர்ஷினியை மட்டும் காரில் ஏற்றிக் கொண்டு, லீலாவதியின் ஆணைப்படி அவளது நண்பர் பட்டாளத்தை அவ்விடம் முழுவதும் தேடினர்.
பிறகு எங்கும் அவர்கள் கிடைக்கவில்லை என்றதும், “போய் தொலையுதுங்க. அதுங்களால ஒரு பைசா பிரயோஜனம் கிடையாது. கிளம்புங்க.” என லீலாவதி கட்டளையிட்டதும் கிளம்பிவிட்டனர்.
அவர்கள் கிளம்பியதும், நண்பர்கள் அவரவர் மறைவிலிருந்து வெளி வந்து நின்றனர் என்ன செய்வதென்று அறியாமல்.
அப்போது மெல்லிய முணங்கலுடன் டெப்டி கமிஷனரின் குரல் கேட்க, ஜீப்பினருகே ஓடிச் சென்று பார்த்தனர் அனைவரும். லேசானக் காயங்கள் தவிர்த்து அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. எனினும் தாராவின் கலங்கிய முகம் கண்டு, தன்னையும் மீறி,
“அப்பாக்கு ஒன்னுமில்லடாம்மா. நீ பயப்படாத..” எனத் திணறியபடி தனது வலியை மறைத்துக் கூறியவரின் நெஞ்சில் விழுந்து,
“என்னை மன்னிச்சுடுங்கப்பா… ப்ளீஸ்ப்பா.. அப்பா… சாரிப்பா…” எனக் கிள்ளையாய் அரற்றிய தன் மகளின் தலையைக் கனிவுடன் தடவியவர்,
“இப்போ ஆபத்துல இருக்கறது உன் ஃப்ரண்டு. உனக்கு ஒன்னுன்னதும் அவ வந்தா. இப்போ அவளுக்கு நீ தேவை. நானே அந்த பிரபாவதி மேல் எஃபையார் போடுறேன். அவங்க வண்டி நம்பர வச்சு ஸ்பாட்ட ஈஸியாக ட்ரேஸ் பண்ணிரலாம். அந்த இடத்துக்கு ஒரு க்ரைம் டீம்ம நா ஸ்பாட்டுக்கு அனுப்புறேன். கண்டிப்பா அவுங்கள கையும் களவுமா புடிக்கணும். பட் நீ ஜாக்ரதையா இரு. ஓகேவா?!” என்றக் கமிஷனரும் நொடியும் தாமதிக்காமல்,
“ஹலோ கன்ட்ரோல் ரூம்… நா ஒரு வண்டி நம்பர அனுப்புறேன். அந்த வண்டிய ட்ரேஸ் பண்ணி லொக்கேஷன இமீடியட்டா ஷேர் பண்ணுங்க. இட்ஸ் அ எமர்ஜன்ஸி..” எனத் தனது வாக்கிடாக்கியில் ஆணையிட்டவாறு பேசிய வார்த்தைகளில் நம்பிக்கை பெற்றவர்களாக,
“கண்டிப்பா ஆதியக் காப்பாத்துவோம்பா..” என அனைவரும் கிளம்பினர் தன் தோழியையும் அவளது குடும்பத்தையும் காப்பதற்காக.
***********
கண்ணில் குரோதம் வழிய, “எவ்ளோ திமிர் இருந்தா, இவங்கள்லாம் ஒன்னா சேர்ந்த ஃபோட்டோவ எனக்கு அனுப்புவான்.. இவன எப்படிக் கதற விடுறேன் பாரு…” என தனது இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தவர், வைரப்பல் மின்ன சிரித்த பொன்னம்பலத்தைப் பார்த்து,
“த்தூத்தேறி…. ஒருக் கெழவனையும் கெழவியையும் கடத்துறதுக்கு இவ்வளோ பந்தாவா…? அன்னிக்கே ஒழுங்கா முடிச்சுருந்தா, இவ்ளோ தூரத்துக்கு வந்திருக்காதில்ல..?! போ… மிச்சமீதியப் புடிச்சு சீக்கிரம் கொண்டு வா..” எனக் கட்டளையிட்டுவிட்டு,
விறுவிறுவென சிவசேகரன் மற்றும் சுமனாவைப் பார்க்கச் சென்றார் ஆவேசத்துடன். படிகள் ஏறி வந்த வேகத்தில் நாற்காலியில் சிவசேகரன் முதுகோடு முதுகாகக் கயிற்றினால் கட்டப்பட்டிருந்த சுமனாவை ஓங்கி மிதித்துக் கீழேத் தள்ளினார் பிரபாவதி ஆங்காரத்துடன்.
“அன்னிக்கே உன்னக் கொன்னுருக்கணும். பாவம் பாத்து இரக்கப்பட்டேன்ல… அதா.. நா செஞ்சப் பெரியத் தப்பு..” என சுமனாவைப் பார்த்து கத்தியவர்,
சிவசேகரனிடம் திரும்பி, “ஏய்யா பெரிய மனுஷா…! தங்கச்சிக்காக வாழ்க்கையத் தியாகம் பண்றேன் பேர்வழின்னு இதெல்லாம் ஒரு பொழப்பாய்யா…?! த்தூ…” எனக் கொக்கரித்த பிரபாவதியின் சொல்லம்பினால் தாக்கப்பட்ட வலியுடன் கீழே விழுந்திருந்த சுமனா மௌனமாகக் கண்ணீர் வடிப்பதைப் பார்த்து வெகுண்டெழுந்து அடிக்குரலில்,
“ச்சீ… வாய மூடுறி பிடாரி! நீ கொழந்தப் பெத்துக்கிட்ட லட்சணத்த விட நாங்க ஒன்னும் மோசமில்ல. சுமனாவ நா கல்யாணம் பண்றேன்… பண்ணல.. அது எங்க இஷ்டம். அதக் கேக்க நீ யாருடி…?” என ஆவேசத்துடன் கூறிய சிவசேகரனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் பிரபாவதி.
“அவ்ளோ தைரியமிருக்குற ஆளு… உன் தங்கச்சி செத்ததா நியூஸ் பரவுன ஒருநாள்ல வராம.., மைனரு ஏன் ரெண்டு வாரம் கழிச்சு வந்தியாம் நியாயம் கேக்க? தில்லிருந்தா அப்பவேக் கூட்டிட்டு வந்து சபையக் கூட்டிருக்கலாம்ல.. ஹிம்.. உன்னால முடிஞ்சுருக்காது. ஏன்னா சட்டப்படி இப்போ நா மட்டும் தான் மாதவனோடப் பொண்டாட்டி. உன் தொங்கச்சி தா ஊரறிஞ்ச வப்பாட்டி. எப்புடி…?!” என விகாரமாக பேசி சிரித்தவரை அருவெறுப்புடன் பார்த்து காறி உமிழ்ந்தனர் இருவருமே.
அதைக் கண்டு கோபக்கனல் வீசப் பகையுணர்வுடன், “டேய்ய்…” என ஒருக்கையை உயர்த்த, வேகமாக ஒருவன் ஓடிவந்து சவுக்கை கொண்டு வந்து கொடுத்தான் பவ்யமாக.
ஆவேசத்துடன் பிரபாவதி வீசிய ஒவ்வொரு அடிக்கும் வலியைப் பொறுத்தபடி இறுகிப் போய் அமர்ந்திருந்தனர் இருவரும். கிட்டத்தட்ட அரைமணிநேர சித்திரவதையில் தன்னை மீறிய மயக்கத்திற்கு சென்றுவிட்டிருந்தனர் சிவசேகரனும் சுமனாவும்.
பிரபாவதியின் அகோர முகம் கண்டு மிரண்டு போயிருந்தனர் ருத்ரமூர்த்தியும் வசுந்தராவும். “கடவுளே…!!! இம்முறையாவது எங்களைத் தக்கத் தருணத்தில் வந்து காப்பாற்று” என மனமாரக் கண்ணீர் வடிய வேண்டிக் கொண்டார் வசுந்தரா.
***************
தன் மனைவியிடமும் மகனிடமும் மனம் விட்டு பேசி சிரித்துக் கொண்டிருந்த மாதவனைப் பார்த்தவாறே, ‘அம்மா ஃபோன் ஏன் ரீச்சாக மாட்டேங்குது… என்னாச்சு.. தனுவும் இன்னும் கால் பண்ணலியே… என்ன நடக்குது?!’ என யோசித்தவாறே,
வீட்டிலுள்ள தனது பாடிகார்ட்ஸ்ஸிற்கு அழைப்பு விடுத்துப் பார்த்தான். எவரும் எடுக்கவில்லை. மனதில் ஒருவிதக் கலவரம் பரவ, தனது மனைவிக்கு அழைப்பு விடுத்துப் பார்த்தான் அர்நவ்.
சற்று நேரத்தில் அழைப்பு ஏற்கப்பட்டதும் எதிர்முனையில் எவருள்ளனர் என்பதை அறியும் நிதானம் கூட இல்லாமல், “தனு… தனு… நீ எங்க இருக்க… காட் ஒரு ஃபோன் எடுக்க இவ்ளோ நேரமா..?! யூ ஸ்டுப்பிட்…” எனக் கத்த ஆரம்பித்த அர்நவ்வின் குரலை இடைமறித்து,
“ஒ… கமான் அத்தான்… எப்போ பாரு.. தனு தானா… நா லீலா பேசுறேன். வெயிட்.. வெயிட்.. வெயிட்.. நா யாருன்னு தானேக் கேக்கப் போறீங்க..?! அத நேர்ல சொல்றேன்.. உங்கப் பொண்டாட்டி இப்போதைக்கு சேஃப் தா. நாங்க சொல்ற லொக்கேக்ஷனுக்கு அந்தக் கெழவியையும் அவ மகனையும் கூட்டிட்டு வரலைன்னா, நிலைமை கை மீறிப் போயிரும். அப்போ நா ஃபோன வச்சுரட்டுங்களா?! ஐ லவ் யூ அத்தான்..” எனக் கூறிவிட்டு ஆதர்ஷினியைப் பார்த்து நக்கலாக சிரித்தாள் லீலாவதி.
கைகளிரண்டும் கட்டப்பட்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஆதர்ஷினி, உடலில் ஆங்காங்கே அடித்துத் துன்புறத்தப்பட்டதற்கான தடங்களுடன் வலுவில்லாது சோர்ந்து போய் மயங்கி இருந்தாள்.
‘வீட்டிலிருப்பதே ஆதர்ஷினிக்கு பாதுகாப்பு என நினைத்தது தவறாகிப் போயிற்றே?! இல்லை… இதற்கு பின் வேறு ஏதோ காரணமிருக்கிறது..’ என யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு சுரேஷ்ஷிடமிருந்து அழைப்பு வரவும், அவசரமாக அவ்வழைப்பை ஏற்றவன், சுரேஷ் மூலம் வேறு சில ஏற்பாடுகள் செய்துவிட்டு, மாதவன், ஜானகி மற்றும் அபிமன்யுவை அழைத்து கொண்டு கிளம்பினான் தனது பிரத்யேக வாகனத்தில்.
ஒருசில மணிநேரங்களில் லீலாவதி குறிப்பிட்ட இடத்திற்கு வந்தவன் பார்த்தது ஒரு பழைமையானக் கட்டிடத்தை. அதனுள்ளே செல்லும் பொழுது அவனிடம் ஏதும் ஆயுதங்கள் உள்ளனவா என பரிசோதிக்கப்பட்டன.
பின் உள்ளே சென்று பார்த்தபோது அக்கட்டிடம் முழுவதும் கெமிக்கல் ஃபேக்டரி போல இருந்தது. சுற்றிலும் தன் பார்வையை சுழலவிட்டவனின் கவனம் நொடியில் ஓரிடத்தில் நிலைகுத்தி நின்றது உயிரே உறைவது போல.
அது……….
தரையோடு தரையாக பத்தடி நீளமும் மூன்றடி அகலமும் கொண்ட நீர் நிரப்பப்பட்ட கண்ணாடித் தொட்டியின் மேலே உயரத்தில் ஆதர்ஷினி, கைகளிரண்டும் அந்தரத்தில் கயிற்றால் கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தாள்.
இதழினோரம் வழிந்த உதிரத்துடன் ஆதர்ஷினி மயக்கத்துடன் தலைக் கவிழ்ந்து இருக்க, அவளுக்கு சற்று தூரத்தில் கண்ணாடியினால் செய்யப்பட்ட அறையில் சிவசேகரனை முதுகோடு ஒட்டிய வண்ணமிருந்த நாற்காலியில் சுமனா கட்டப்பட்டிருக்க, அவர்களோடு சேர்த்து ருத்ரமூர்த்தியும் சாந்தாவும் அதேப்போல கட்டப்பட்டிருந்தனர்.
“அத்தான்…” என ஆசையுடன் ஓடிவந்து லீலாவதி அர்நவ்வைக் கட்டிக் கொள்ள, அசையாத கிரேக்க சிலையாக தன் மனையாளைப் பார்த்த வண்ணம் நின்றான் அர்நவ் தேவ்.
மேல்தளத்தின் படியிலிருந்து இறங்கி வந்தபடியே, “வாங்க மாப்ள… வாங்க.. வாங்க.. என்ன அங்கயே நின்னுட்டீங்க.. உள்ள வாங்க மாப்ள..” என ஏளனமாக வரவேற்ற பிரபாவதியை கொலைவெறியுடன் பார்த்தான் அர்நவ் தேவ்.
தன் மகன் வந்து விட்டான் என்ற செய்தி எனக் கண்டதும் வேகமாக அர்நவ்விம் ஓடி வந்த வசுந்தராவைப் பிடித்து, “அதுக்குள்ள என்ன அவசரம் சம்மந்தி… கொஞ்சம் இங்கேயே இருங்க..” என மேற்கொண்டு நகராமலிருக்க, துப்பாக்கி எடுத்து வசுந்தராவின் வலதுபக்க நெற்றிப்பொட்டில் வைத்தபடி நின்றார் பிரபாவதி.
“ஆனாலும் உன் பொண்டாட்டிய சும்மா சொல்லக்கூடாது. நல்லாவே சண்டை போட்டா. ஹிம்.. எப்படியிருந்தாலும் அவளும் பொண்ணு தான. எவ்ளோ நேரந்தா தாக்குபிடிப்பா?! பாவம்…. அடிச்ச அடியில பச்சி மயங்கிடுச்சு. பசங்க கூட சொன்னாங்க. எப்பிடியும் சாகடிக்க தா போறீங்க.. அதுக்கு முன்னாடி……” எனக் குரூரமான சிரிப்பொன்றை பிரபாவதி உதிர்க்க,
பெண்ணென்றும் பாராமல் ஓநாய்களுக்கு இரையாக்கத் துடிக்கும் இவளையெல்லாம் கல்லால் அடித்தேக் கொல்ல வேண்டும் என்ற வெறி அர்நவ்விற்கு உள்ளூர எழுந்தது. பல்லைக் கடித்தபடி உடலை முறுக்கிக் கொண்டு நின்றான் அர்நவ்தேவ் தனது உருமாற்றத்தை ருத்ரசிவனாக மாற்றியபடி.
தன் மகள் இப்படி துன்புறுத்தப்பட்டிருக்கிறாளே என்ற வலியில் துடித்தபடி, “ஐய்யோக் கண்ணம்மா…” என கதறியவர் பிரபாவதியின் வாய்மொழிக் கேட்டு,
“அடிப்பாவி.. பிரபா..! உனக்கு கோவம் எம்மேலன்னா, அத என்கிட்ட மட்டும் காட்டு. நீயும் ஒருத் தாய் தானே? உன்னால எப்டி இப்படியெல்லாம் பேச முடியுது?!” எனக் கத்தியபடி பிரபாவதியை நெருங்க முயன்றார் ஜானகி.
“ஆஹா… வாடியம்மா வா.. எவ்ளோ நாளாச்சு உன்னப் பாத்து.. ம்ம்ம்ம்… என்கிட்ட என்ன இல்லன்னு அவரு உன் நெனப்பாவே இருந்தாரு…?! எங்க அவரு…?! உன் முந்தானைல ஏதும் முடிஞ்சு வச்சு கூட்டிட்டு வந்திருக்கியா என்ன?!” எனத் தனது கணவரைத் தேடியவர்,
ஜானகியின் பின்னால் பயந்தவாறே நின்ற அபிமன்யுவைப் பார்த்து ஆச்சர்யத்துடன், “அடடே!! இது யாரிந்த பொடிப்பய..? ஓ….. உன் வயித்துல இருந்தவனா?! பரவால்லயே.. நீயும் ஒருமாதிரி வாழ்ந்துட்ட. ம்ம்ம்… ஆனா இனிமே என்கிட்டருந்து யாரும் தப்பிக்க முடியாது. ஒருத்தரையும் சும்மா விட மாட்டேன்..” என ஆங்காரமாக கத்தியபடி சிரித்தார் பிரபாவதி.
“இப்ப நா என்ன செய்யணும். சொல்லுங்க.” எனக் காரியத்தில் கண்ணாய் இருந்தபடி அர்நவ் கேட்க,
“ஹூம்…. இது பாய்ன்ட்டு. இதுனாலதா உன்ன எனக்கு ரெம்ப பிடிச்சுருக்கு. பெருசா ஒன்னுமில்ல. என் பொண்ண நீ கல்யாணம் பண்ணிக்கணும். அப்பறம் இந்த சொத்தெல்லாத்தையும் என் பேர்லயும் என் பொண்ணு பேர்லயும் மாத்தணும். அவ்ளோ தா. சிம்பிள். இதெல்லாம் பண்ணிட்டா நா எல்லாரையும் விட்டுடுறேன்.” என ஆசைக்காட்டியவாறு கண்ணில் வேட்டைக்கு தயாராக நிற்கும் ஓநாயின் பிரதிபலிப்பாக நின்றார் பிரபாவதி.
அர்நவ்விற்கு கால் செய்திருந்த நண்பர் பட்டாளத்தினையும் சேர்த்து தன்னோடு அழைத்துக்கொண்டு சென்றவன், மறைமுகமாக அனைவரையும் காப்பாற்ற மாதவனோடு அனுப்பியிருந்தான் அவ்விடத்தை முதலில் அடைந்திருந்தபோது.
ஜானகி மற்றும் அபிமன்யு மட்டுமே அர்நவ்வுடன் அக்கட்டிடத்தின் நுழைவாயில் நோக்கி சென்றனர். மாதவன் அந்த இடத்தை எப்படி தன்வசம் ஆக்குவது என்ற அர்நவ்வின் திட்டத்தை செயல்படுத்தும் வேலையை கச்சிதமாகக் கையாண்டு கொண்டிருந்தார் அர்நவ்வின் நண்பர்கள் மற்றும் பாடிகார்ட்ஸ் படையுடன்.
சரியாக அதேநேரத்தில் காவல்துறை க்ரைம் டீம் அங்கு வந்து சேர, மிகவும் வசதியாகிப் போனது நண்பர் பட்டாளத்திற்கும் மாதவனுக்கும்.
முதலில் அக்கட்டிடத்தை சுற்றியிருந்த ஆட்களை துப்புறவாக அகற்றிவிட்டு பின், ‘உள்ளே என்ன நிலவரம்’ என அறிந்து கொள்வதற்காக, ‘கட்டிடத்தில் எங்காவது வழி உள்ளதா’ எனப் பார்த்துக் கொண்டே வந்தவர்கள், தரையிலிருந்து மிக உயரத்தில் இருந்த சுவற்றோடு இணைக்கப்பட்டிருந்த காற்றாடி ஒன்று ஓடாமல் இருப்பதைக் கவனித்தனர்.
அதன் வழியாகப் பார்த்தால் மட்டுமே நிலவரம் என்னவென்று அறிய இயலுமென்பதால், ஒருவர் மீது ஒருவர் ஏறியவாறு மெல்ல மெல்ல அக்காற்றாடியை நெருங்கி, அதன் வழியே எட்டிப் பார்த்தபோது, உள்ளே யார் யார் எங்குள்ளனர் என்பது நன்றாகத் தெரிந்தது.
அந்தரத்தில் ஆதர்ஷினி தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த பிரபுவுக்கு மனம் தாளாமல் கண்ணீர் வந்துவிட்டது. பிறகு வந்தக் காரியம் முக்கியமெனப்பட கையில் வைத்திருந்த ஃபோனில் அனைத்து இடங்களையும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருக்கும் போது, அர்நவ் அவர்களைப் பார்த்து விட்டான்.
“சீக்கிரம் மூவ் பண்ணுங்கடா தடிமாடுங்களா…” என்ற மெல்லிய முணங்கலுடன் நின்றிருந்தான் எந்நேரமும் பாயத் தயாராக இருக்கும் வேட்டைப்புலியைப் போல.
