விழிகளில் பேசு காதல் மொழி
அத்தியாயம் 4
டெப்டி- கமிஷனர் அங்கே இருந்தவரை அமைதியாகப் பதுங்கி இருந்தவர்கள், அவர் ரிஜிஸ்டர் ஆபிஸ் வளாகத்தை விட்டு கிளம்பியதும் அவ்விடத்தைச் சுற்றி ரங்கன் மற்றும் பொன்னம்பலத்தின் படைகள் ஆங்காங்கே பதுங்கி நின்று அவர்களை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதை கவனித்தனர் அர்நவ்வும் ஆதர்ஷினியும்.
அங்கே ரங்கனின் பண்ணை வீட்டில் ஆங்காரத்துடன் பொன்னம்பலமோ, “இதுக்குத் தான்டா அன்னிக்கே படிச்சு படிச்சு சொன்னேன். இந்த நாயயெல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும்னு. நீ கேட்டியா ரங்கா? என்னமோ உன் சொந்தத் தம்பி மாதிரி தலைல தூக்கி வச்சுகிட்டு ஆடுன. இப்போ உன்னோட சேர்த்து என்னையும் தூக்குலத் தொங்க வச்சுருவான் போல!
இதப் பாரு! இதுல நீ நா மட்டும் மிங்கிள் ஆகல. பெரிய தலைக்கு தெரிஞ்சுது நாம அவ்ளோ தா. நீ என்ன பண்ணுவியோ, ஏது பண்ணுவியோ, எனக்கு அந்த பென்ட்ரைவ் வேணும். இல்ல….. நா என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது.” என வெறிபிடித்தாற் போன்று கத்திக் கூச்சலிட்டு விட்டு, தனது தோளில் கிடந்த துண்டையெடுத்து உதறிக் கொண்டேக் கிளம்பிச் சென்றுவிட்டான்.
ஆனால் ரங்கனின் மனமோ எரிமலையாய் வெடித்துக் கொண்டிருந்தது. கிருஷ்ணகிரியில் உள்ள பெட்டிக்கடை முதல் கிரானைட் கம்பெனிகள் வரைக் கட்டப் பஞ்சாயத்து என்றப் பெயரில் நூதனமுறையில் கொள்ளையடித்தான் ரவுடி ரங்கன்.
முதலில் பேரம்… பணியவில்லை என்றால் மிரட்டல்… அதற்கும் மசியவில்லை என்றால் அடையாளமில்லாமல் அழித்துவிடுவான் ரங்கன். இதில் இறுதிக்கட்ட சூழ்நிலையில் தான் பொன்னம்பலம் வந்து சிறப்பாக பங்கேற்றுக் கொள்வான்.
உண்மையில் சுரேஷ், ரங்கனின் உடன்பிறந்த சகோதரனல்ல. அவன் யார்? அவனை ஏன் இதுவரை உயிருடன் விட்டு வைத்திருக்கின்றனர் என்பது இதுவரை ரங்கன், பொன்னம்பலம் மற்றும் அந்த ‘பெரிய தலை’த் தவிர வேறு எவருக்கும் தெரியாது.
சுரேஷ் உட்பட அனைவரிடமும் சிறு வயதில் தொலைந்த தன் சகோதரன் திரும்பக் கிடைத்துவிட்டதாக சொல்லி நம்ப வைத்திருந்தான் ரங்கன். அநாதையாக இருந்த ரங்கனுக்கு சுரேஷ் வந்ததும் தான் தன் செல்வாக்கு பெருகியதாக ஒருக் குருட்டு நம்பிக்கை. ஆனால் அவனேத் தனக்கு எமனாவான் என ரங்கன் கனவிலும் கருதவில்லை.
இப்போது தன் உயிருக்கே உலை வைக்கும் அளவிற்கு சுரேஷ் துணிந்திருக்கிறான் என்றால் அதில் நிச்சயமாக யாரோத் தூண்டிவிட்டுத் தான் தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அது யார்? இது ஒருபுறம் ரங்கனின் மூளையைத் துளைத்தெடுக்க,
அவனின் மனமோ ‘ஒரு பொட்டக்கழுத! என் கோட்டைக்குள்ளயே வந்து அதுவும் என் தம்பின்னு தெரிஞ்சும் கூட்டிட்டுப் போயிருக்கான்னா, அவளுக்கு என்ன திண்ணக்கம் இருக்கணும்?! அடியே! உன்ன விடமாட்டேன்டி..!’ எனக் குமுறிக் கொண்டிருந்தது.
சோஃபாவில் இருக் கைகளையும் நீட்டி அமர்ந்திருந்தவனின் எண்ணவோட்டங்களைக் கலைக்கும் வண்ணம், அவனது செல்ஃபோன் அலற, அதையெடுத்து காதில் வைத்த ரங்கனின் விழிகள், சுரேஷின் திருமணத்தைக் கேள்விப்பட்டதும் இரத்தசிவப்பாக மாறி,
“அஅஅஏஏஏய்ய்! ஏன்டா அங்க கல்யாணம் நடக்குற வரைக்கும் உங்கக் கையென்ன பூப்பறிச்சுட்டிருந்துச்சா?! எ…. என்னடா பொடலங்கா கமிஷனரு! அவனக் கொன்னுட்டு கூப்புடுங்கடான்னா, ரன்னிங் கமென்ட்ரியா சொல்றீங்க?! போங்கடா! ஒருத்தரையும் விடாதீங்க. உருத்தெரியாம அழிச்சுருங்க!” என கர்ணக்கொடூரமாக் கத்தினான் ரவுடி ரங்கன்.
எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்கும் என கணித்த அர்நவ் “இப்ப பேசிட்டு இருக்க நேரமில்ல. வாங்க கிளம்பலாம்” என திருமணத்தம்பதிகள் மற்றும் நண்பர் பட்டாளமென, அனைவரையும் தன் காரில் ஏறச் சொல்லிப் பணித்துக் கொண்டே சுற்றிலும் நோட்டமிட்டுக் கொண்டிருந்த அர்நவ் தேவ், ஆதர்ஷினி மட்டும் ஏறாமல் இருப்பதை கண்டு எரிச்சலுற்றான்.
“ம்ப்ச்சு… ஹலோ தர்ஷினி…. ம்ம்ம்….. ஹேய் உன்னைத்தான். இன்னும் வண்டில ஏறலையா?!” எனக் கோபத்தில் அழுத்திக் கேட்டிருந்தான் அர்நவ் தேவ்.
“ஹலோ! கால் மீ ஆதர்ஷினி. பை த வே, நா உங்கக்கூட வரேன்னு சொல்லவே இல்லையே. நீங்க போங்க. என்னப் பாத்துக்க எனக்குத் தெரியும்.”என ஆதர்ஷினியின் இதழ்கள் அர்நவ்விடம் பேசினாலும் அவளின் கண்களிரண்டும் சுழன்று சுற்றிப் பார்த்துக் கொண்டேயிருந்தது.
அவளின் செயல்களிலும் வார்த்தைகளிலும் இருந்த நம்பாமையை எண்ணி சற்றே வியந்து போனான் அர்நவ்.
ஏனெனில் அவன் ஒன்று சொன்னால் அதில் ஆயிரம் அர்த்தம் பொதிந்திருக்குமென நம்பி, அங்கே அத்தனை பேரும் அவனது காரில் அடைக்கலமாகியிருக்க, இவளோ இப்படி சொல்கிறாளே என்று சற்று மனத்தாங்கல் முதன்முறையாக அர்நவ்விற்குள் தோன்றுவதை அவனால் தடுக்க முடியவில்லை.
அதோடு இதுவரை அர்நவ் தேவ்வின் வாழ்க்கைப் பயணத்தில் அவனது கட்டளைக்கு மறுபேச்சு இருந்ததில்லை. இப்போதும் அப்படியே தான் நிகழ்ந்தது என்றாலும், அதிலும் விதிவிலக்காக ஆதர்ஷினி இருக்கிறாளே!
“நீ சுரேஷோட ப்ரண்டுன்றதனால தான் இவ்ளோ தூரம் சொல்லிட்ருக்கேன். வண்டில ஏறு.” என இழுத்து வைத்தப் பொறுமையுடன் இறுதியாகக் கேட்டான் அர்நவ் தேவ்.
“நீங்க அவங்கள பத்திரமா கூட்டிட்டு போங்க. நா என் வண்டில வர்றேன்” என அப்போதும் வர மறுப்பு தெரிவித்த ஆதர்ஷினியின் தலையில் ‘நங் நங்’ கெனக் குட்ட வேண்டும் போல பரபரத்தத் தன் கையை வெகுசிரமப்பட்டு அடக்கிக் கொண்டான் அர்நவ்.
‘உனக்கெல்லாம் சொன்னாப் புரியாது. பட்டாதான் புரியும்!’ என் மனதில் நினைத்துக் கொண்டு வேகமாக சென்று காரில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவன், காரினை ஸ்டார்ட் செய்தான்.
‘ஒரு பொண்ணுக்கு இவ்ளோ திமிர் ஆகாது. வரட்டும்! அத்தன பேரும் துரத்திட்டு வர்றதப் பார்த்தா, தன்னாலக் கார்ல வந்து ஏறப் போறா. ஹும்… இந்தப் பொண்ணுங்களுக்கு வெட்டி பந்தா பண்றதுக்கு போரே அடிக்காதோ?! ச்சே… எங்க போனாலும் இதே அலட்டல் பேர்வழிகளை பார்க்க வேண்டியிருக்கிறது’ என மனதினுள் ஆதர்ஷினியை நன்றாக வசைபாடியபடியே காரிலே தன் கோபத்தையேல்லாம் வெளிப்படுத்த மெல்ல உறுமிக் காட்டினான்.
ஆனால் ‘இளங்கன்று பயமறியாது’ என்றப் பழமொழிக்கு ஏற்றவாறு ஆதர்ஷினி எதற்கும் அசரவில்லை. சொல்லப்போனால் காரினை நோக்கித் திரும்பி அர்நவ்வைப் பார்த்து கைக்காட்டிக் கிளம்புமாறு சைகைக் காட்டினாள் ஆதர்ஷினி.
“உங்க ப்ரண்ட் நீங்க கூப்டாதா வருவாங்க. சோ தயவு செஞ்சு கூப்டுங்க. இல்லைனா அவுங்களுக்கு தா ஆபத்து!” எனப் பின்னால் திரும்பிப் பாராமல் ஸ்டியரிங் வீலை அழுத்திப் பிடித்து, அடக்கப்பட்டக் கோபத்துடன் அர்நவ் கூற,
தன் தோழியைப் பற்றி ஏதோ சொல்ல வாய் திறந்தத் தாராவின் கைகளைப் பற்றி ‘ஏதும் மறுத்து பேச வேண்டாம்’ எனக் கண்ணிலேயே ஜாடைக் காட்டிய சுரேஷ், காரினை விட்டு இறங்க எத்தனித்தவன் காரின் கண்ணாடி வழியே கண்டக் காட்சியில், அப்படியே உறைந்து போக, அப்போது தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.
ஆதர்ஷினியை நோக்கி ரங்கனின் அடியாட்களில் ஒருவன் கையில் கத்தியுடன் தூரத்தில் ஓடிவர, இதழில் ஏளனப்புன்னகையுடன் அர்நவ் ‘அலறிக் கொண்டு ஓடி வருவாள்.’ என எதிர்பார்த்துக் காரினைத் தயார்நிலையில் வைத்தபடி பார்த்திருந்தான்.
ஆனால் ஏனோ… அர்நவ்வின் எதிர்பார்ப்பு தான் பொய்த்து போனது. ரங்கனின் அடியாட்கள் ஆதர்ஷினியை நெருங்கி வந்தும் ஆதர்ஷினி இருந்த இடத்தை விட்டு நகர்ந்தாளில்லை. அவளின் செயலில் அர்நவ்வின் முகத்தில் இருந்த ஏளனம் புன்னகை மறைந்து பதட்டம் குடிகொள்ள ஆரம்பித்தது.
ஒருக்கட்டத்தில் அர்நவ் தேவ் பொறுமையிழந்து காரினைவிட்டு இறங்கியபோது தான், அப்போது தான்… ஆதர்ஷினியின் கால்கள் எட்டு வைத்த விதத்தை கவனித்தான்.
ஒரு காலினை முன்வைத்து மறுகாலை வட்டமாக சுழற்றி பின்னோக்கி கொண்டுவந்து கையை உயர்த்தி நிறுத்திக் கொண்டு ‘எதற்கும் தயார்’ என அவள் நின்றத் தோற்றத்தைக் கண்டதும் ஸ்தம்பித்து நின்று போனான் அர்நவ் தேவ்.
‘அவளுக்கு தற்காப்புக் கலையான குன்ஃபூ தெரியுமா?’ என ஆதர்ஷினியை கண் இமைக்கக் கூட மறந்தவனாக அப்படியே மெய்மறந்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அர்நவ்.
நேராக அவளை நோக்கி வந்து கத்தியால் தாக்க முனைந்தவனை ஒருகையால் முதலில் கத்தியை அவனிடமிருந்து தட்டிவிட்டு, பின்பு அவனது நெஞ்சில் சரமாரியாகக் கைகளால் குத்தி, அதன்பிறகு இரு உள்ளங்கை பதிய அந்த அடியாளின் நெஞ்சில் ஒரு தள்ளு தான் தள்ளினாள் ஆனால் அந்த அடியாளோ சற்று தள்ளிப் போய் விழுந்தான்.
ஏனோ ஒரு குரல் உள்ளிருந்து அர்நவ்விற்கு கேட்டது ‘உன் தாய் உனக்கு வேறொருப் பெண்ணைப் பார்த்துவிட்டார்கள். வீணாகக் கற்பனை செய்யாதே!’. என்ன தான் அணைக்கட்ட முயன்றாலும், அதை ஒடைத்துக் கொண்டு ஆதர்ஷினியின் பின்னால் மனம் ஓடுவதை அர்நவ்வால் தடுக்க இயலவில்லை.
காரினுள்ளே இருந்து கொண்டு “அடி! விடாத… குத்து.. மூக்குலயே குத்து… அ… அப்டிதா…. கமான் டைகர்… கமான் டைகர்!” என மாதேஷ் ரன்னிங் கமென்ட்ரி கொடுத்துக் கொண்டிருக்க,
கோபத்துடன் திரும்பிப் பார்த்த தாரா, “ஏன்டா! இங்க என்ன டபிள்யூ டபிள்யூவா ஓடிட்ருக்கு? ஒரு பொண்ணு தனியா நின்னு அத்தனப் பேரையும் சமாளிச்சுட்ருக்கா. வேடிக்கைப் பாக்குறது மட்டுமில்லாம ‘கமான் டைகர்! கமான் டைகர்’ன்னா கமென்ட் பண்றீங்க? இறங்கிப் போய் ஆதிக்கு ஹெல்ப் பண்ணுங்கடா.” என மூவரையும் விரட்ட,
“எதுக்கு…. இல்ல எதுக்குங்கிறேன்?! நாங்களும் போய் ஆதிக்கிட்ட கண்ணுக் காது மூக்கப் பேத்துட்டு வரணும்னு எதிர்பாக்கிறியா? இப்ப நாங்கப் போனா, அவ ‘ஏன்டா கார விட்டு இறங்கி வந்தீங்க’ன்னு எங்கள எகிறியெகிறி மிதிக்குறத கண்குளுரப் பாக்கணும் உனக்கு?! என்ன ஒரு வில்லத்தனம்!” என பிரபுக் கேட்க,
“இவ்ளோ பேசுறியே.. எங்கள் அண்ணன் சுரேஷ் பாகுபலிய களத்துல இறக்க வேண்டியது தானே?!” என வசந்த், சுரேஷைக் கோர்த்துவிட,
விழிகள் திடீரெனப் பிதுங்க, “டேய்! எனக்கு இப்போதான்டா கல்யாணமே ஆகிருக்கு. இருக்குற காண்டுல அவ எங்க மிதிப்பான்னே தெரியாது. ஆள விடுரா சாமி.” எனத் திணறிக் கொண்டே சுரேஷ் பதில் சொல்ல,
“தரு! நீ வொரி பண்ணாத. எல்லாம் ஆதி பாத்துக்குவா.” என பிரபு தாராவை சமாதானப்படுத்தினான்.
ஆதர்ஷினியோ கைக்கால்கள் சோர்வைடையும்போது ஒரு யுக்தியைப் பயன்படுத்தினாள். அப்போது தான் அர்நவ் அவளது பின்னலிட்டக் கூந்தலைக் கவனித்தான். ஆதர்ஷினி தனது கால்கள் சோர்வடையும் போது தனது கூந்தலையும் பயன்படுத்தினாள் ஆயுதமாக.
என்ன….! கூந்தல் ஆயுதமாக்கப்பட்டதா?! அது எப்படி சாத்தியம்?!
ஆம். சற்றுக் கூர்ந்து பார்த்ததால் தான் ஆதர்ஷினியின் கூந்தலுடன் கருமைநிற வொயர் சேர்த்துப் பின்னலிடப்பட்டிருப்பது தெரிந்தது அர்நவ்விற்கு.
பொதுவாக சண்டையில் ஒருவரை நேருக்கு நேர் மோதி ஜெயிக்க முடியவில்லை என்றால் பின்னிருந்துத் தாக்கியாவது வீழ்த்த முனைவது தானே அடியாட்களின் வழக்கம்.
அப்படிப் பின்னால் இருந்து தாக்க முயற்சி செய்பவர்களைத் தான் தன் கூந்தல் கொண்டு சுழற்றி அடித்தாள் ஆதர்ஷினி.
இதுவரை அவன் கடந்து வந்தப் பாதையில், அவன் கண்டப் பெண்களில் இவள் முற்றிலும் வேறாகத் தெரிந்தாள். அர்நவ்வை நெருங்கிய பெண்களில், பலர் அவனது செல்வச்செழிப்பைப் பார்த்து வந்தவர்கள். இன்னும் பலர் அவனின் அழகில் மயங்கிக் கிடந்தவர்கள்.
ஆனால்… ஆதர்ஷினி?
அதன்பின் நடந்த அத்தனையையும் ஏதோக் கனவு காண்பவன் போல் கண்ட அர்நவ்வின் விழிகள் அவளிடமே லயித்து நின்றது.
கூந்தலைச் சுழற்றிக் கொண்டும், கால்களை சுழற்றி அவள் லாவகமாக எத்தும் விதமும்… அவ்வாறு அடிக்கும் போது அவ்வப்போது குவிந்த அவளது இதழ்களும், கத்தி போல் கூர்மையாக சுழன்ற விழிகளின் தீர்க்கமென, தன் இணையாக நினைத்த ஆதர்ஷினியைப் பெருமையுடன் பார்க்கலானான் அர்நவ்.
அவனது மூளையோ, ‘அவள் வேறு எவரையேனும் காதலித்திருந்தால் என்ன செய்வாய்?’ எனக் கேட்க, கனவு கலைந்தாற் போல சுயத்திற்கு திரும்பியவன்,
அசராமல் அவளை நோக்கி வருவோரைப் போட்டு வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தவள், மெல்ல சோர்வடைவதைக் கவனித்தான் அர்நவ்.
காரணம், அதிகாலையில் வீட்டிலிருந்துக் கிளம்பியதால் ஆதர்ஷினி ப்ரெட் சான்வெஜ் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டாள் ஆதர்ஷினி.
ஆகையால் இந்தத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் சக்தி, ஆதர்ஷினியிடம் குறைவதைக் கவனித்த அர்நவ், காரின் கதவை சாற்றி, அதை லாக் செய்தவன் ஆதர்ஷினியை நோக்கி விரைந்து வரலானான்.
ஆதர்ஷினியின் கவனத்தையும் மீறிப் பின்னிருந்து அவளது முதுகைத் துளைத்து சொருகுவதற்காகக் கத்தியோடு வந்த ஒருவனை பிடித்து அவனது கழுத்தில் ஒரு மர்ம அடி கொடுத்தவன், பின் ஆதர்ஷினியின் கை பிடித்து இழுத்தான்.
ஆனால் தன்னைத் தொட்டு இழுத்தது அர்நவ் என அறியாமல் அவனையும் தாக்கும் பொருட்டு இரு கைகளைக் கொண்டு முன்னேற முயன்றாள் ஆதர்ஷினி. தன்னைத் தாக்க வந்த கைகளை அநாயசமாகத் தடுத்து, ஆதர்ஷினியை ஒரு சுற்று சுற்றி அவளது கரங்களை அவள் பின்னோடு இறுக்கிப் பிடித்து அடக்கினான் அர்நவ் தேவ்.
அத்தனை நேரப் போராட்டத்தின் விளைவாக ஆதர்ஷினியின் மூச்சுக்குழல் அதீதத்திற்கும் விடைக்க, பெரிய பெரிய மூச்சுக்கள் எடுத்துவிட்ட வண்ணம் அர்நவ்வை மிகமிக அருகாமையில் முறைத்துப் பார்த்த வண்ணம் தன் உணர்வுகளோடு போராடினாள் ஆதர்ஷினி.
எல்லா உணர்வுகளும் மரித்து போன ஜடம் அல்லவே நமது கதாநாயகி. ‘அவளும் உயிரும் உணர்வும் உள்ள சகப்பெண்களில் ஒருத்தியே’ என அவளது உணர்ச்சிக் கொந்தளிப்புகள் ஆதர்ஷினிக்கே சாட்சியாக நின்றன.
அர்நவ்வின் காந்த விழிகள், தன்னை முழுமையாக விழுங்கத் துடிப்பதை உணர்ந்து, அவனது பிடியில் இருந்து வெளிவரும் பொருட்டு கைகளை அசைத்துக் கொண்டேத் தடுமாறினாள் ஆதர்ஷினி. அவனது இதழ்களுக்கு அருகாமையில் ஆதர்ஷினியின் இதழ்கள் நடுக்கத்துடன் தடுமாறுவதை உள்ளூர ரசித்தான் அர்நவ்.
அப்போது அர்நவ் ஒரு தவறு செய்தான். ஆதர்ஷினியின் இதழ் நோக்கிக் குனிந்தான். ஆனால் அந்த லயிப்பில் அர்நவ்வின் பிடி தளர்ந்திருக்க, ஒருசில கணங்கள் தடுமாறியவள், பிறகு அவனது நோக்கம் புரிந்து, தன்னில் உள்ள சக்தியேல்லாம் திரட்டி அர்நவ்விடம் இருந்து திமிறி வெளி வந்தாள் ஆதர்ஷினி.
அதன்பிறகு அவள் அடித்த அடியில் விழுந்தவர்கள் எவரும் மீண்டும் எழவேயில்லை. அந்த அளவிற்கு கோபத்தின் உச்சிக்கே சென்றிருந்தாள் ஆதர்ஷினி.
அனைவரையும் வீழ்த்தியவள், தன் இலக்கை அர்நவ்விடம் திருப்பினாள் ஆக்ரோஷமாக.
