விழிகளில் பேசு காதல் மொழி
அத்தியாயம் 5
ஆக்ரோஷமாக அர்நவ்வை நோக்கித் திரும்பியவள், சற்று நேரம் மூச்சு வாங்க சுற்றிலும் கண்களை ஓடவிட்டாள் ஆதர்ஷினி.
‘இன்னும் எவரேனும் மிச்சம் உள்ளார்களா?’ என சுற்றிலும் நோட்டமிட்டவள், மெல்ல நிதானத்திற்கு வந்து அர்நவ்வை நேருக்கு நேர் நின்று, அவனது விழிகளைப் பார்த்தபடி, அவனை நோக்கி நடந்து வந்தாள் ஆதர்ஷினி.
தன்னை ஆதர்ஷினி உதறித் தள்ளிவிட்டு சென்றதும், சில கணங்களுக்கு அர்நவ்விற்கு ஒன்றும் புரியவில்லை.
‘தன்னை விட்டு ஏன் அவள் விலகிச் செல்கிறாள்’ என யோசித்தவன், பின் நெற்றியில் கைவைத்து “ஷிட்..!” எனத் தன்னைத் தானே நொந்து கொண்டிருந்த வேளையில் ஆதர்ஷினி தன் ஆக்ரோஷத்தை எல்லாம், களத்தில் காட்டிக் கொண்டிருந்தாள்.
இவையனைத்தையும் காரினுள் இருந்துக் கண்ட அனைவரும், அதிர்ச்சியில் கண்ணையும் வாயையும் விரித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவ்வதிர்ச்சியிலிருந்து முதலில் வெளிவந்த வசந்த், “ஆங்… என்னடா நடக்குது இங்க?” எனக் கேட்க,
பிரபுவோ, “ஹும்… இதுக்கு பேசாம பருத்தி மூட்டை குடௌன்லயே இருந்திருக்கலாம்” என அர்நவ்வை கலாய்த்தபடி சுரேஷிடம் ஜாடைக் காட்ட,
“டேய்! வாய மூடுங்கடா! இவங்க ரெண்டு பேர்ல யார் காண்டானாலும் நமக்கு தான்டா பிரச்சனை.” என சுரேஷ் தன் நண்பர்களை அடக்க முயல,
“‘நமக்கு’ இல்ல மச்சி. ‘உனக்கு’ன்னு சொல்லு. இந்தக் கோர்த்துவிடுற வேலைலா வேணாம்.” என மாதேஷ் கழன்று கொள்ள முயல,
“என்ன இருந்தாலும் உங்க ஃப்ரண்ட் பண்ணது தப்பு சுரேஷ்.” என தாரா தன் தோழிக்காக ஆதங்கப்பட்டாள்.
ஏதோ யோசித்த சுரேஷ், “அர்நவ் அப்டிபட்ட ஆளில்ல தாரா. ஆனாலும் ஏன் இப்டி பண்ணான்னு தா புரியல” என்றுக் கூற,
“நீர் மங்குனி அமைச்சர் என்பதை நொடிக்கு ஒரு முறை நிரூபித்துக் கொண்டிருக்கிறாய்! இன்னுமாடா புரியல. ஆதர்ஷினி மேல ஐயாவுக்கு லவ் வந்துடுச்சு.” என சரியாகக் கணித்து பிரபு கூற,
“ஐய்யோ! யாரு பெத்த புள்ளையோ, லைஃப் லாங் அடிவாங்க ஆசைப்படுது.” என வசந்த்தும் அர்நவ்வைக் கிண்டலடித்தபடி கூறினான்.
“டேய்! அர்நவ் ஒன்னும் அடிக்கத் தெரியாத ஆளில்ல. கேரள மர்மக்கலைகள்ல வெல் ட்ரைன்டு. ஏன் இப்போக்கூட அர்நவ், அங்கப் போகலன்னா நம்ம ஆதர்ஷினியக் கத்தியால குத்திப் போட்ருப்பாங்க. பாக்கதானே செஞ்சீங்க?!” எனத் தன் நண்பனை விட்டுக் கொடுக்காமல் பேசினான் சுரேஷ்.
‘ஆமாம்’ என்பது போல அனைவரும் தலையாட்டி ஆமோதித்தனர்.
தாராவிடம், “தரு! அர்நவ்வுக்கு தா ஆதர்ஷினின்னு இருந்தா கண்டிப்பா நா ரொம்ப சந்தோஷப்படுவேன். ஏன்னா…” என சற்றே உணர்ச்சிவசப்பட்டுப் பேச முயல,
“யப்பா உசிதமணி! போதும்டா… முடியல.” என இவர்கள் அனைவரும் அர்நவ்-ஆதர்ஷினியைப் பற்றி பேசிக் கொண்டிருக்க,
அங்கே ஆதர்ஷினி அர்நவ்வின் அருகில் வந்து, சற்றே ஏளனத்துடன் “பொண்ணுங்கன்னா உங்கள மாதிரி பணக்காரர்களுக்கு அவ்ளோ இளப்பமா?.” எனக் கூறியவள்,
மேற்கொண்டு தன்னிலை விளக்கத்தைச் சொல்ல முனைந்தவனை கையுயர்த்தித் தடுத்தவள், “நீங்கக் கேட்டப் பென்ட்ரைவ் என் வீட்டுல தா இருக்கு. குடுத்துடுறேன். அதுக்காக இப்டி ச்சீப் ட்ரிக்ஸ்லாம் யூஸ் பண்ணாதீங்க. ப்ளீஸ்”. என சோர்வுடன் கூறிவிட்டு, அங்கிருந்த தன் பைக்கின் அருகே செல்லும் போதே, கால்கள் தள்ளாட மயங்கி விழப் போனாள் ஆதர்ஷினி.
அப்போது ‘தன்னை வந்துத் தாங்கிப் பிடிக்க அர்நவ் தேவ் வருவான்’ என எண்ணிக் கொண்டு, நிதானித்தபடித் திரும்பிப் பார்த்தாள் ஆதர்ஷினி.
அவனோ இறுகிய முகத்துடன், இருக் கைகளையும் தன் ஜீன்ஸ்ஸிற்குள் நுழைத்துக் கொண்டு அசையாமல் நின்றான் அவளைப் பார்த்தபடி.
ஹும்… உதவி செய்யும் பொருட்டு இவன் தாங்கிப் பிடிக்க போனால்தான், அதற்குமொரு குதர்க்கமானக் காரணம் கண்டுபிடிப்பாளே இந்த ராங்கிக்காரி ஆதர்ஷினி.
‘ஹும்… பெரிய இவன்… தான் அப்படி இல்லையென செயலில் காட்டுகிறானாம்…’ என முகத்தைத் திருப்பியவள், தன் பைக்கின் ‘பௌ’ச்சில் இருந்த ஜூஸ் பாட்டிலையெடுத்து அருந்த ஆரம்பித்தாள்.
பின் பைக்கில் ஏறியமர்ந்து, அதை உதைத்து ஸ்டார்ட் செய்தவள் நேராக அர்நவ்விடம் வந்து, “இன்னிக்கு காலேஜ்ஜோட லாஸ்ட் டே. சோ நேரா காலேஜ்க்கு வந்துடுங்க. வழி… சுரேஷ் சொல்லுவாரு.” எனக் கூறிவிட்டு தன் பைக்கில் சிட்டாகப் பறந்துவிட்டாள்.
ஆதர்ஷினியின் பைக்கைக் கண்டதும் ஆச்சரியத்தில் சற்றே உயர்ந்த அர்நவ்வின் புருவங்கள், பின்னிறங்கி, ‘இவளின் ரசனையில் இன்னும் வேறென்னென்ன இருக்கக்கூடும்’ என அறிந்து கொள்ளும் ஆர்வம் அவனின் தீர்க்கமான விழிகளில் தெளிவாகத் தெரிந்தது.
பைக்கில் செல்லும் தன் வெண்ணிலவைத் தனக்கே தனக்கென்று சொந்தமாக்கிக் கொள்ள அர்நவ்வின் மனமோ ஏங்கித் தவித்தது.
காரிடம் செல்லும்போதே, லாக்கை எடுத்து விட்டவன், டிரைவிவ் சீட்டில் அமர்ந்து கொண்டு, சீட் பெல்ட்டை மாட்டிக் கொண்டிருந்தான். அப்போது சுரேஷின் கை அர்நவ்வின் தோளில் அழுத்திப் பதிந்தது.
“மச்சி… என்னாச்சு?” என சுரேஷ் கேட்க,
“ஒண்ணுமில்ல சுரேஷ். நீ ஏதும் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணணுமா? இல்ல… இப்டியே காலேஜ் போய்டுவோமா? ஆதர்ஷினி நேரா காலேஜ்ஜுக்கு உங்களக் கூட்டிட்டு வர சொல்லிருக்காங்க.” என உணர்ச்சி துடைத்த முகத்துடன் கூறினான்.
ஒருவரையோருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டவர்களில், பிரபு அர்நவ்விடம், “இல்ல சார். ஏதாவது டிரெஸ் ஷாப்புக்கு கூட்டிட்டு போங்க. அங்கப் போயி டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு அப்டியே காலேஜ் போலாம் சார்.” என மெதுவாக கூறினான்.
அதன்படியே ஒரு பிரபல ஷாப்பிங் மாலில் சென்று சுரேஷும் தாராவும் டிரெஸ் மாற்றிக் கொண்டு வர, அப்படியேக் கிளம்பினர் காலேஜ்ஜிற்கு.
************
காலேஜ் வாசலில் ஆதர்ஷினி, அர்நவ்வின் காரை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
ஆனால் அதே காலேஜ் வாசலிலே இன்னுமொரு ஜோடிக்கண்கள் ஆதர்ஷினியைத் தான் ரசித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் ‘பெண் பார்க்க லட்சணமாகத் தான் இருக்கிறாள். வெகு நேரமாக நிற்கின்றாளே! இவள் தன் சகாக்களுக்காக காத்திருக்கிறாள் போல’ என நினைத்துக் கொண்டு அவளையே பார்த்திருந்தது அவ்விருக்கண்கள்.
சற்று நேரத்தில் அர்நவ்வின் கார் அங்கு வந்ததும் சற்றே…. இல்லையில்லை.. நன்றாகவே அதிர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்த விழிகளின் சொந்தக்காரர், நமது அருமைக் கதாநாயகன் அர்நவ் தேவ்வின் அன்னை வசுந்தராவே தான்.
‘இவன் இங்கே என்ன செய்கிறான்?’ என யோசித்துக் கொண்டே, அங்கு நடப்பவையெல்லாம் காருக்குள் மறைந்திருந்தவாறு கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தார்.
எதையும் இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டு டிரைவிங்கில் இருந்த அர்நவ்விடம், “அதோ! ஆதர்ஷினி அங்கே நிற்கிறாள்!” என தாரா காலேஜ் வாசலைக் கைகாட்டிக் கத்த, காட்டப்பட்ட இடத்தைப் பார்த்த அவனது கண்கள் அசைய மறுத்து அப்படியே உறைந்து நின்றது.
அது…..
இளம் ஊதா நிறத்தில் பொன்னிற ஜரிகை பளபளக்க, கையில் கண்ணையும் மேனியையும் உறுத்தாத வண்ணம், பொன்னிற வளையல்கள் பாந்தமாக அணிந்து கூந்தலைத் தளரப் பின்னி, ஒற்றை அடுக்கில் மல்லிகைச் சரமும் வாசமுள்ள பன்னீர் ரோஜா ஒன்றை அக்கூந்தலில் சூடிக் கொண்டு, கால்களில் மெல்லிய வேலைப்பாடுகள் கொண்டு, மிதமான சலங்கைச் சத்தமுள்ள வெள்ளிக் கொலுசு அணிந்து கொண்டு, அர்நவ்வின் காரைப் பார்த்ததும் கண்ணில் ஒளியுடன், முகம் மலர்ந்த ஆதர்ஷினியின் அந்த நொடித் தோற்றம் அர்நவ்வால் மறக்க முடியாத எழிலோவியமாக மனதில் பதிந்தது.
அனைவரும் வேகமாக காரிலிருந்து இறங்கி ஆதர்ஷினியிடம் சென்றனர். அவ்வளவு நேரமும் கடுகடுவென வந்தவன், ஆதர்ஷினியைக் கண்டதும் முகம் முழுவதும் புன்னகைத் தவழ, காரை விட்டு இறங்கி மெதுவாக இறங்கி வந்தான் அர்நவ் தேவ்.
அர்நவ் காரிலிருந்து புன்னகையுடன்க இறங்குவதைப் பார்த்த ஆதர்ஷினிக்கு உள்ளுக்குள் ஏதோ செய்ய, இதயம் படபடத்தது. முதன்முறையாக சேலையை அங்கங்கே சரிசெய்தபடி நெளிந்தாள். அவளின் அச்செயல் அர்நவ்வின் புன்னகையை இன்னும் பெரிதாக்கியது.
‘என் பார்வை அவளைத் தாக்குவதாக உணர்கிறாளா?!’ என ஆச்சரியத்துடன் விரிந்தக் கண்களில் மாயக்கண்ணனின் குறும்பும் கலந்த கொள்ள, ஏதும் பேசாமல் குறுஞ்சிரிப்பு மட்டும் அர்நவ்வின் இதழில் தவழ்ந்து கொண்டிருந்தது.
மற்றவர்களுக்கு அவளது தோற்றம் எப்போதும் காண்பது தானல்லவா. ஆகையால் அவர்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
மாறாக, “இன்னிக்கு எவ்ளோ நேரம் தாக்குபிடிப்ப ஆதி?” என மாதேஷ் கிண்டலடிக்க,
“ஏன்டா… நீ வேற. சீனியர் ஸ்பீச் வரைக்கும் தா இதுக்கு ஆயுசு. அப்பறம் தான்டா ‘கெட்டப்’ சேஞ்ச் பண்ண முடியும். நம்ம ஹெச் ஓ டி வேற சேலைல தா வரணும்னு கண்டிப்பா சொல்லிடுச்சு. ச்சே… எரிச்சலா வருதுடா. எப்டி தா இதையெல்லாம் கட்டிட்டு சுத்துறாங்களோ?! ப்ப்பா….” என சேலைத் தலைப்பால் விசிறிக் கொண்டே பைக்கில் சாய்ந்தவாறு கூறினாள் ஆதர்ஷினி.
அவ்வப்போது கண்கள் அர்நவ் தேவ்விடம் செல்வதை ஆதர்ஷினியினால் தடுக்க முடியவில்லை.
மனதினுள்ளே ஒரு பதற்றம்… ‘எங்கேனும் தெரிகிறதோ..? ச்சே… வேறு எங்கேயாவது பார்க்கிறானா பார்? கள்ளூளிமங்கன்… இடுப்பில் எதாவது தெரிகிறதோ..’ என உள்ளுக்குள்ளேயே புலம்பிக் கொண்டுத் தடுமாறினாள் ஆதர்ஷினி.
அப்போது “சார். கார் பார்க்கிங் அந்தப்பக்கம். காரை அங்கப் போய் பார்க் பண்ணுங்க சார்.” என வாட்ச்மேன் வந்து அர்நவ்விடம் காரை எடுக்கச் சொல்லிக் கூற,
அப்போதும் புன்னகையென்பது சிறிதும் மாறாமல், காரினை எடுக்கச் சென்ற அர்நவ் தேவ், எல்லோருக்குமே… ஏன்…. வசுந்தராவுக்குமே அதிசயக் கண்காட்சியில் ஒன்றாகத் தெரிந்தான். ஆனால் அப்போதும் விழிகளை ஆதர்ஷினியிடமிருந்து எடுத்தானில்லை.
ஆனால் அதுவே ஆதர்ஷினிக்கு ஒருவித அவஸ்தையாக இருந்தது. அந்த அவஸ்தை அவளுக்கு சுகமென்றும் எண்ண முடியாமல் துன்பமென்றும் உணரப் பிடிக்காமல் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் தத்தளித்தாள்.
அர்நவ் காரினை எடுத்து சென்றதும் தான் மூச்சுக்குத் திணறியவள் போல, நிம்மதிப்பெருமூச்சொன்றை எடுத்துவிட்ட வண்ணம் அமைதியானாள் ஆதர்ஷினி.
இவையனைத்தும் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த வசுந்தராவுக்கு, தான் எண்ணி வந்த காரியத்தை நடத்துவதில் இருந்த சிரமங்கள் தன்னை விட்டு விலகிப் போவதையெண்ணி மனம் நிறைந்து போனது.
ஜானகியிடம் சொல்லாமல் இங்கு வந்து ஒருமுறை தன் மகனுக்கு பார்த்திருக்கும் பெண்ணைப் பார்த்துவிட்டால் நன்றாக இருக்குமென உணர்ந்து காலேஜ்ஜிற்கு வசுந்தரா ஒன்பதரை மணியளவிலேயே வந்துக் காத்திருந்தார்.
ஆனால் வந்தது மிகவும் வசதியாக போனது வசுந்தராவுக்கு. முதலில் சாதாரண உடையுடன், கலைத்து சோர்ந்த தோற்றத்துடன் காலேஜிற்குள் சென்ற ஆதர்ஷினியை சரியாக கவனிக்கவில்லை வசுந்தரா.
பிறகு சிறிது நேரம் கழித்து, பட்டு சேலையில் அத்தனை அலங்காரத்துடன் வெளிவந்த ஆதர்ஷினியை கண்டதும் முகம் மலர்ந்தது வசுந்தராவுக்கு.
இங்கு அவர் எதிர்பார்க்காத மற்றும் கண்கொள்ளாக் காட்சியாக தனது மகனையும் ஆதர்ஷினியுடன் சேர்த்து ‘ஜோடிப் பொருத்தம் எப்படி இருக்கிறது’ என்று பார்ப்பார் என அவர் கனவிலும் நினைக்கவே இல்லை.
அதிலும் அர்நவ் தேவ்வின் முகத்தில் இருந்த புன்னகையைக் கண்டு ஆதர்ஷினியிடம் தெரிந்த மாற்றத்தை மனதில் குறித்துக் கொண்டார் வசுந்தரா.
அப்படியென்றால் ஆதர்சிஷிக்கும் தன் மகனை மிகவும் பிடித்திருக்கின்றது என்று எண்ணிக் கொண்டவர், அடுத்து செய்ய வேண்டியக் காரியங்களை மனதில் வேகமாகபக் கணக்கு போட தொடங்கினார்.
யசோதையம்மா எப்படி தன் கண்ணனின் மீது அதீத பாசமும் பெருமையும் கொண்டிருந்தாரோ, அதே போல் தன் மகனை எண்ணி மிகவும் பெருமைக் கொண்டிருப்பவர் வசுந்தரா.
அவரின் மனதினுள்ளே, ‘என் மகனை பிடிக்காமல் போகுமா என்ன?!’ என்று மகிழ்ச்சியுடன் நினைத்துக் கொண்டவர், “டிரைவர்! வண்டி எடுங்க. போலாம்” எனக் காரோட்டிக்கு உத்தரவிட்டபடி இருக்கையில் பாந்தமாக சாய்ந்து கொண்டார்.
இனி நடக்கப் போவதை எண்ணி விதி நன்றாகவே வாய்விட்டுச் சிரித்தது.
