என் வினோதமானவனே!

This entry is part 1 of 4 in the series என் வினோதமானவனே

என் வினோதமானவனே

என் வினோதமானவனே!

என் வினோதமானவனே!

என் வினோதமானவனே 2

என் வினோதமானவனே 2

என் வினோதமானவனே 3

என் வினோதமானவனே 3

என் வினோதமானவனே 4

என் வினோதமானவனே 4

(1)
கொழும்பிலுள்ள பணக்காரர்கள் எல்லாம் விரும்பி செல்லக்கூடிய மெக்காஓ பார்.
துகில் களைந்த வண்ணம், “ஸ்ட்ரிப்டீஸ்” டான்ஸ் ஆடும் கன்னியர்களும், இந்த பக்கத்தில், அமைதியாக வயலின் வாசித்துக் கொண்டிருந்த கலைஞர்களும் என.. அங்கிருந்த அனைத்தும் அவன் கவனத்தில் இம்மியளவேனும் பதியவில்லை.
அவனது கவனமெல்லாம் இருந்தது அந்த “ரம்” ஏந்திய கிளாஸில். கண்களில் வெறியுடன், க்ளாஸில் இருந்த கொஞ்சநஞ்ச துளியையும் ஒரே கல்ப்பில் அடித்தவன் கண்கள் சிவந்து வீங்கிப் போயிருந்தது.
அவன் பக்கத்தில், அமர்ந்திருந்த, அவனது ஆருயிர் நண்பன் ஆனந்த், டீபோய் மீது இருந்த , காலியான நான்காவது “ரம்” பாட்டிலை விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு பெக்கை மட்டுமே அடித்திருந்த ஆனந்திற்கு, நண்பன் “இளங்கோ” நான்கு ரம் பாட்டிலை உள்ளே தள்ளிய பின்பும் கூட மட்டையாகாமல் ஸ்டெடியாக இருப்பது.. அடித்த மொத்த சரக்கின் போதையையும் இறக்குவதாக இருந்தது.
பின்னே.. சரக்கை தொட்டு கூட பார்த்திராத “டீடோட்டலர்” இளங்கோ, “ரம்” அடிப்பது என்பதே ஆச்சரியம்!! அதில் நான்கு பாட்டில்கள் காலியான பின்னும் ஸ்டெடியாக இருப்பது இன்னும் கொஞ்சம் ஆச்சரியம்!
அதே சமயம்.. நண்பன் தற்போது கடந்து கொண்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலை பற்றி அறிந்து வைத்திருப்பவனாயிற்றே ஆனந்த்? அதனால் இளங்கோ மேல் கழிவிரக்கமும் தோன்றிற்று மற்றவனுக்கு. ஆனந்தின் விழிகள்.. தன் பள்ளிப்பருவத்திலிருந்து தன்னுடனேயே இன்றளவும் இருக்கும் இளங்கோவின் முகத்தை ஏறிட்டு நோக்கியது.
தன்னுடைய வெள்ளை நிற ஸ்லிம்ஃபிட் ஷேர்ட்டின் மேலிரண்டு பட்டன்களையும் திறந்து விட்ட வண்ணம், நீண்ட ஸ்லீவின் மணிக்கட்டு பட்டன்களைத் திறந்து.. அதை பாதி முழங்கை வரை மேலேற்றியிருந்தவனின் முகத்தில்.. இரண்டு நாட்களாக சவரம் செய்யப்படாத தாடி.. முகத்தில் ஓர் இறுக்கம்!!
அவன் எதிரில் அமர்ந்திருந்த ஆனந்த், வெறித்த பார்வையுடன், வெற்று கிளாஸைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த இளங்கோவின் தோள்களைத் தொட்டான். அந்த தொடுதலுக்கும் கூட பிரக்ஞை அற்றவனாக, அப்படியே அமர்ந்திருந்தான் இளங்கோ.
மெல்ல வாய் திறந்த ஆனந்த், “மச்சி… இந்த “பத்து கோடி” மேட்டரை எல்லாம் பெருசா எடுத்துக்காதே மச்சி… எப்படியும் அவன் நம்ம கையில் மாட்டாமல் போக மாட்டான்..அன்னைக்கு இருக்கு அவனுக்கு!!”என்று கறுவியவனாக.. தன் கிளாஸில் இருந்த சரக்கை அருந்தி முடித்து.. புறங்கையால் வாய் துடைத்துக் கொண்டான். தன் பெயரில் பறிபோன “பத்து கோடி”யுமோ?? இல்லை நண்பனின் ஆறுதல் வார்த்தைகளுமோ அவன் நெஞ்சை அடையவேயில்லை. அவன் மனக்கண் முன்னே வந்து கன்னங்குழிய குழிய சிரித்துக் கொண்டிருந்தாள் அவள்!!
அந்த நகைக்கும் கண்களில் தான் எத்தனை மென்மை?அடர்த்தி? உருளும் கருமணிகளில் தான் எத்தனை நளினம்?? அந்தக் கண்களுக்குள் இருக்கும் வேஷத்தை, துரோகத்தை அறிந்து கொள்ளாமலேயே போனான் அவன்.
டீ போய் மீதிருந்த வைப்ரேட் மோட்டில் இருந்த.. இளங்கோவின் செல்ஃபோன் சற்றே துள்ளித் துள்ளி நகரத் தொடங்கியவாறே அலறியது. வெறித்த பார்வையுடன் திரையை நோக்கியவனுக்கு அவள் முகத்தை செல்ஃபீ புகைப்படமாகக் காணவும் மனம் கசந்தது.
கூடவே.. அவள் வைத்த, குளுகுளு கன்னத்து முத்தத்தைத் தாங்கிக் கொண்டு, கிறங்கிப் போய் அந்த புகைப்படத்தில் நின்றிருக்கும் அவன்!! இத்தனை நாளாக அவன் ஒரு ஏமாளி என்பதை தெரியாமலேயே இருந்திருக்கிறான். அவளும் தான் இரட்டை வேடம் பூண்டவளாக.. அவனை ஏமாற்றிக் கொண்டு இருந்திருக்கிறாள்.
அந்த முத்தமும், அவள் புன்னகைத்த முகமும்.. ஏதேதோ நினைவுகளைக் கிளறி விட, டீ போய் மீதிருந்த செல்லை கைகளால் தட்டி விட.. அத்தோடு இருந்த காலியான ரம் பாட்டில்களும் சரேலென சரிந்து, கீழே ஃப்ளோரில் விழிந்து நொறுங்கலாயிற்று.
அந்த ஒலியில்.. அந்த கலகலப்பான இடமே ஒரு நிமிஷம் கப்சிப்பென்று அடங்கிப் போய்.. அவனையே வைத்த கண் வாங்காமல் பார்க்கலாயினர்.
இளங்கோவோ யாரையும் மதியாது கல்லென அமர்ந்திருந்தாலும், அவன் வலது உள்ளங்கையில் பாட்டிலின் கண்ணாடித் துகள் கிழித்ததில்.. இரத்தம் வழிந்து கொண்டிருந்ததையும் கூட பொருட்படுத்தாது இருந்தான்.
அதைக் கண்டு பதறிப் போன ஆனந்த், அவனது கையை சட்டென பற்றி, “டேய்.. என்னடா பண்ணிட்டிருக்க? கையில் இரத்தம் வருது”என்று இரைந்த குரலில் கத்தியவனாக,நண்பனின் உள்ளங்கை எடுத்து மடிமேல் வைத்து, ஹேன்ட் கர்ச்சீப்பை எடுத்து..அதற்குத் தற்காலிக கட்டொன்றை போட்டும் விட.. அதற்கும் கூட ஒன்றும் சொல்லவில்லை அவன்.
அந்த கணம் அங்கே விரைந்து வந்த பேரர்கள்.. ப்ளோரில் கிடந்த கண்ணாடித் துகள்களை நொடியும் தாமதியாமல் க்ளீன் செய்யவாரம்பித்தனர்.நிலைமை வழமைக்குத் திரும்பிய போதும் கூட.. அவனால் தன் வெறித்த பார்வையை மட்டும் மாற்றவே முடியவில்லை.
நண்பனின் தோளைத் தொட்டு இலேசாக உலுக்கியவன், சாந்தமான குரலில்,“மச்சி.. உன் பிஸினஸ் பிரச்சினையை.. பர்சனல் லைஃபுடன் போட்டு குழப்பிக்காதே.. தங்கச்சி கோல் பண்ணதும் எதுக்கு இப்படி டென்ஷனாகி ஃபோனை விட்டெறிஞ்ச? உனக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம்.. ஆனால் அதையெதையும் தங்கச்சி கிட்ட காட்டாதே… அவள் பாவம்டா… உன்னைக் காணாமல் ரொம்ப துடிச்சுப் போயிருப்பா… வா முதல்ல வீட்டுக்கு கிளம்பலாம்!” என்று அவனை எழுப்ப முயல.. தன் கைச்சந்தை ஆனந்திடம் இருந்து, கோபத்துடன் உருவிக் கொண்டான் இளங்கோ.
‘யாரு அவளா பாவம்? அவளால் ஏமாற்றப்பட்ட நான் தான்டா பாவம்!’ என்று இரைந்து கத்த வேண்டும் போல இருந்தது. உள்ளே மண்டிக் கிடக்கும் சோகத்திற்கு, ரம்மிற்கு பதிலாக விஷத்தைக் குடித்தாயினும் சோகத்துக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று கூட யோசனை தோன்றியது அவனுக்கு!
அந்த நொடியில் தோன்றிய அந்த மின்னல் தோன்றல்.. அடுத்த செக்கனே மறையவும் செய்தது. தனக்கு துரோகம் செய்த அவளே.. அந்தக் குற்றவுணர்வு சிறிதும் இல்லாமல் உயிருடன் இருக்கும் போது அவன் மட்டும் ஏன் உயிர் துறக்க வேண்டும்? என்று தோன்ற அமைதியானான் மீண்டும்.
அவன் விட்டெறிந்ததில் மூர்ச்சையாகிப் போயிருந்த அவனது செல்லுக்கு அழைப்பெடுத்துப் பார்த்துப் பார்த்து தோற்றுப் போன, ஆனந்தால் “தங்கச்சி” என்று அழைக்கப்பட்டவள்.. தற்போது ஆனந்தின் செல்லிற்கு அழைப்பெடுக்கலானாள்.
செல் சிணுங்கவும் இளங்கோவை விட்டு விட்டு.. அழைப்பை எடுத்தது யாரென்று பார்த்ததும், திரையில் தோன்றிய இலக்கங்களைக் கண்டு முகம் வேதனையில் சுருங்கியது.
அந்த பாரின் எந்தவிதமான அதிரல் சத்தங்களும், அவளுக்கு கேட்டு விடக்கூடாது என்று எண்ணிய ஆனந்த், செல்லை எடுத்துக் கொண்டு, பாரின் நுழைவாயில் பக்கம் வந்து நின்று.. அழைப்பை ஏற்கலானான்.
“ஹலோ அண்ணா.. அவன் உங்க கூடவா இருக்கான்? எத்தனை வாட்டி கோல் பண்ணிட்டேன்.. ஏன் ஆன்சர் பண்ண மாட்டேங்குறான்? இப்போ ரெண்டு பேரும் எங்கே இருக்கீங்க? அவன் சாப்பிட்டானாண்ணா?” என்று பதற்றத்துடன் அடுத்தடுத்தாக வந்து அவன் காதை நிரப்பியது ஓர் மென்மையான குரல்.
அவள் ஷக்தி. இளங்கோவின் ஷக்தி. திருமதி. ஷக்தி இளங்கோ.
வீட்டில் தனக்காக ஓர் ஜீவன் வாடுவதைக் கூட பொருட்படுத்தாது.. தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை தாங்கமாட்டாதவனாக.. பார் ஏறி வந்திருக்கும் இளங்கோ மேல் கோபம் மிகுந்தாலும், கவலையும் மீதூறியது மற்றவனுக்கு.
“இன்னைக்கு புது ஃபோன் மாடல்ஸ்.. ஷிப்பில் இருந்து வந்து இறக்கியிருக்குறதால் நானும், அவனும் வேர் ஹவுஸ் வந்துருக்கோம்மா.. இப்போ தான் பாஸ் கோல் பண்ணி சொன்னாரு.. அதான் உன்கிட்ட கூட சொல்ல முடியலை.. அதுவுமில்லாமல் உன் கோலை அட்டன்ட் பண்ணும் போது.. ஃபோன் ஸ்லிப்பாகி கீழே விழுந்து ஸ்விச்ட் ஆஃப்.. நீ ஒண்ணும் கவலைப்படாதே.. அவனைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வரேன்”என்று ஷக்திக்குப் பேச இடங்கொடாமல் செப்பிக் கொண்டே போனவன், பேசி முடித்ததும் கோலை கட் செய்தும் விட்டிருந்தான்.
அதன் பின் இளங்கோவை இங்கிருந்து அழைத்தே செல்வது என்ற முடிவுடன்.. அங்கிருந்து நகர்ந்தவன், “மச்சி இத்தோட போதும் நிறுத்திக்க.. வா வீட்டுக்குப் போகலாம்” என்றவன், இளங்கோ தன் கையை தள்ளி விட முயற்சித்தும் அசராமல் நின்றவன் இழுத்துக் கொண்டே வெளியே வந்தான்.
நான்கு ரம் பாட்டில்களை உள்ளே தள்ளியும், கொஞ்சம் கூட தள்ளாடாமல்.. விறைப்பான நடையுடன் தன்னுடன் வரும் நண்பனை அதிர்ச்சியுடன் பார்த்தான் ஆனந்த்.
தனது காரில் முன்னிருக்கைக் கதவைத் திறந்து நண்பனை அமர வைத்தவன், டிரைவர் இருக்கையில் வந்து அமர்ந்து வண்டியை எடுக்கலானான். எப்போதும் குடித்து விட்டு வராத கணவன்.. இன்று குடித்திருக்கிறான் என்று தெரிந்தால் ஷக்தியின் மனம் என்ன பாடுபடும் என்று கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்கவேயில்லையே இவன்!
ஆனந்த் சிறு புருவச்சுளிப்புடன் உள்ளே நொந்து கொண்டே வர.. இவனோ அதே மாறாத சிவந்த விழிப் பார்வையுடன் அமர்ந்திருந்தான். அவன் வீடு வந்ததும், வீட்டு நுழைவாயில் முன்னாலேயே வண்டியை நிறுத்தினான் ஆனந்த். இந்த மாதிரி ஓர் கோலத்தில் இளங்கோவைக் கண்டதும் ஷக்தியின் முகம் செல்லும் விதத்தைப் பார்க்கும் திராணி இந்த உடன்பிறவா சகோதரன் ஆனந்திற்கு இல்லை.
அதனால் அமைதியாக அவன் காரிலேயே அமர்ந்திருக்க, அதைப் புரிந்து கொண்டாற் போன்று, இறங்கினான் இளா. ஆனந்த், துக்கம் சுமந்த குரலில், “மச்சி நீ குடிச்சிருக்கேன்னு தெரிஞ்சா ஷக்தி ரொம்ப வருத்தப்படுவாடா.. அதனாலே பேசாமல் போய் கவுந்தடிச்சு படுத்துரு.. எதுவா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம்!!” என்று அவனது உள்ளத்து ஆற்றாமையையும், எரிமலையையும் அறியாது இலவச ஆலோசனை கூறி விட்டே அங்கிருந்து நகரலானான்.
அவனும் அமைதியாகவே உள்ளே சென்றான். அப்போதும் கூட அவன் நடையில் தள்ளாட்டம் இல்லை. மாறாக விழிகளில் கீழிமை கூட சிவந்து வீங்கிப் போயிருந்தது. அமைதியாகத் தன் வீட்டு வாசல் படியேறியவன்.. இலேசாக புருவங்கள் சுருக்கினான்.
அவன் வரும் வரை அவனுக்காக கண் விழித்து காத்திருந்தாள் அவன் மனைவி. தூக்கம் பறந்து போன சோர்ந்த விழிகளுடன்.. சோபாவில் அமர்ந்திருந்த ஷக்தியின் முகம்.. தன் தலைவனைக் கண்டதும் மலர்ந்தது. தன் மூன்று மாதக் கருவைச் சுமக்கும், மேடிட்ட வயிற்றுடன்.. சற்றே சிரமப்பட்டு எழுந்து கொண்டவள், தலைவனைக் கண்ட மகிழ்ச்சியில் மையல் ததும்பும் குரலில், “இளா.. ”என்ற வண்ணமே கணவனின் கையைப் பற்ற முனைந்தாள்.
அவனோ மனைவி தன் பெயரை அழைத்ததும், தற்போது தன்னைத் தொடுவதும் கூட தீது எனக் கொண்டவன் போல செந்நிற விழிகளுடன் வெறித்துப் பார்த்தான் அவன்.
கணவனின் செய்கையில் சற்றே கலங்கி நின்றவளை… அசட்டுப் பார்வையுடன் உச்சாதி பாதம் அளந்தான் அவள் கணவன். கலைந்து போன கூந்தல்.. அவன் எப்போதும் திகட்டத் திகட்டப் பார்க்கும் காதோரக் கன்னத்தில் வளர்ந்திருக்கும் பூனை முடி!
அழுதிருப்பாள் போலும்.. கண்கள் செந்நிறம் கொண்டிருந்தது. செர்ரிப் பழம் போல சிவந்திருந்தது மூக்கு நுனி! அதைக் கண்டு அவன் மனம் இரங்கவேயில்லை. தன் திருட்டு கணவனுக்குத் தெரிய வந்து விட்டதே என்றதும்,
கணவன் தன்னை என்ன செய்வானோ? என்ற அச்சத்தில் அழுதிருப்பாள் போலும் என்றே தோன்றியது அவனுக்கு. ஊதா நிறத்திலான ப்ளெய்ன் காட்டன் சேலையை அணிந்திருந்தவளின் வெண்மையான கழுத்தில், அவன் அணிவித்த தங்கத்தாலி!
கூடவே மேடிட்டிருந்த வயிறு! வயிற்றில் ஒரு சில கணங்கள் ஆதங்கத்துடன் நிலைத்தது அவன் கண்கள்! நண்பன் முன் கூட வராத கண்ணீர்.. துரோகியான மனைவியைக் கண்டதும் வெளிப்பட்டது.
சத்தமின்றி இடது கண்ணிலிருந்து மாத்திரம் கண்ணீர் சரேலென வழிந்தோட, அழுத்தமான குரலில், “உன் வாயால.. என் பேரை இனிக் கூப்பிடாதே..” என்றுரைக்க அதிர்ந்து போனாள் அவள்.
அவனது சொற்களும், அவனது கண்ணீரும் அவளை ரொம்பவே உருக்குலையச் செய்தது. அவனுக்கு கீழ் வேலை செய்யும் ஊழியன் பத்து கோடி ரூபாய் மோசம் செய்ததை அறிந்த போது, ‘இப்போது என்ன செய்யப்போகிறோம்?’ என்ற கையறு நிலையில் நின்றிருந்த வேளை அழாத கணவன்.. தற்போது அழுகிறான்!
கணவன் அழுகையில் தாய்மை மீதூற.. அவள் கைகள் அனிச்சையாய் நீண்டன அவனது கண்ணீர்த்துளி துடைக்க. .தன் கன்னம் நோக்கி வந்த அவள் கையை அவன் பற்றித் தள்ளி விட, அப்போது தான் கர்ச்சீப்பால் கட்டப்பட்ட அவன் காயம் கண்டாள் அவள்.
“பேபி.. இரத்தம் வருது!!” என்று நெஞ்சு பதற அலறினாள் அவள். அவனுக்கோ மனைவியின் “பேபி” என்ற அழைப்பில்.. கொலைவெறியே மிகுந்தது. மனைவியின் கழுத்தைப் பிடித்து நெறுக்க அவன் கைகள் எழ.. அதற்கு விடாமல் தடுத்தது அவளது மேடிட்ட வயிறு.
கர்ப்பிணியை அடிக்க முடியாதவனாய், டீபோய் மீதிருந்த வாஸை எடுத்தவன், சற்று தள்ளி சுவற்றோடு பொருத்தப்பட்டிருந்த நவீனரக தொலைக்காட்சி திரையின் மீது விட்டெறிந்தான் கோபத்துடன்.
சில்லு சில்லாக தொலைக்காட்சி திரைக் கண்ணாடி தன் புறமுதுகுக்குப் பின் நொறுங்கும் ஒலி கேட்டு.. கண்கள் மூடி, காதுகள் பொத்தி நின்றவளின் உடல் அச்சத்தில் ஏகத்துக்கும் நடுங்கத் தொடங்கியது.
அதை உணர்ச்சி துடைத்த பார்வையுடன் பார்த்தவன், கீழுதட்டை கடித்துக் கொண்டு ஷக்தியை நோக்கி, “நான் உன்னை உயிருக்கும் மேலா நேசிச்சேன்.. எப்படி உன்னால எனக்கு துரோகம் செய்ய மனசு வந்தது?உனக்கு நான் என்ன குறை வைச்சேஏஏன்?..” என்று இறுதியில் எகிறிய குரலில் கேட்க, அவள் உள்ளமும் ஒரு கணம் அதிர்ந்து ஓய்ந்தது.
“இந்த உலகத்திலேயே.. எனக்கிருக்கும் ஒரே சொந்தம் நீன்னு நினைச்சிட்டிருந்தேன்.. உன்னால தான் என் உலகத்துல புது உறவுகள் உருவானதுன்னு நினைச்சிட்டிருந்தேன்.. ஆனால் எப்படி உன்னால அந்த நினைப்பில் மண்ணள்ளிப் போட முடிஞ்சது..?”என்று அவன் கண்களில் நீருடன் கேட்க, அவன் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் குற்றவாளியாக நின்றாள் அவள்.
தன் கர்ச்சீப் சுற்றப்பட்ட வலது கையை அவள் முகத்துக்கு நேராக காட்டி, “என் இந்த கை.. உன்னைத் தவிர யாரையும் தீண்டியது இல்லை தெரியுமா?” என்று கேட்டவனுக்கு அடுத்து குரல் மென்மையாக வெளிவந்தது.
“ஆனால் நீ!! .. உன்னால மட்டும் எப்படி முடிஞ்சது!! அவன் கூட செக்ஸ் வைச்சுக்கிட்டே… எப்படி எதுவும் நடக்காத மாதிரி உன்னால என் கூட குடும்பம் நடத்த முடிஞ்சது?..”என்று கேட்டவன், “ஹவ் குட் யூ டு தேட் டு மீ?”- தன்னைத் தானே சுட்டிக்காட்டி கேட்டான் அவன்.
கணவனின் கேள்விகள் அனைத்தும் அவள் இதயத்தை கத்தியின்றி, இரத்தமின்றி பெயர்க்க, உவர் நீர் விழிகளை நிறைத்து அவன் விம்பத்தை மறைக்க, தழுதழுத்த குரலில், “இளா..” என்றாள் மீண்டும்.
தன் மனைவி வேற்றாடவனுடன் இருப்பதைக் காணும் எல்லா ஆடவனுக்கும் கோப வெறி மிகுவது இயற்கை! அந்த கோபவெறியை இறுதி வரைக் கட்டுப்படுத்த முடியாது போகவே, அவளுடைய கழுத்தை நெரித்துப் பிடித்தான் அவன்.
எப்போதும் அவனின் வன்முகம் கண்டு பழக்கப்படாதவள், இன்று அவனது வன்முறைக் கண்டு திகைத்து.. அவன் குரல்வளையை நெரித்ததில் மூச்செடுக்க சிரமப்பட்டவளாக.. அவன் கையை தன் கழுத்திலிருந்தும் அகற்ற பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டு நின்றாள்.
அவனோ, தன் கழுத்து நரம்புகள் புடைத்து வெளித்தெரிய, பற்களைக் கடித்துக் கொண்டு, “பேஸ்ஸாதே!! .. உன் வ்வயிற்றில் வளர்ற க்குழந்தைக்கு அப்பா ய்யாரு..? சொல்லு அப்பா ய்யாரு..?” என்று கேட்ட கேள்வியில், அவள் போராட்டம் நின்று போனது.
அவன் நெரித்தல் வலிக்கவேயில்லை போல.. கல்லென சமைந்து நின்றாள் அவள்.
அவளது நிர்மலமான பார்வை… இளங்கோவை ஏதோ செய்ய.. மனதுக்குள் சலனம் தோன்ற.. அவளைத் தள்ளி விட்டான் அவன். ஏற்கனவே பலவீனமாக இருப்பவளாயிற்றே? அவன் தள்ளலில்.. சமநிலை தடுமாறி நிலத்தில் போய் விழுந்தாள் அவள்.
அவள் விழுந்ததும்.. நின்ற சுவாசம் தடைப்பட்டு வந்ததில்.. தனங்கள் ஏறி இறங்க மூச்சு வாங்கிக் கொண்டு நின்றவளை வலியும், கோபமும் ஒருங்கே விசிறியடிக்கப் பார்த்தான் இளங்கோ.
அந்த கணம்.. அவன் காதுகளைத் தீண்டிச் சென்றது ஓர் மழலைக் குரல்!
“அப்பா.. ஏன் அம்மாவைத் திட்டுறீங்க? .. அம்மா அழுறாங்க.. அம்மா பாவம்..”என்ற தேம்பும் குரலுக்கு சொந்தக்காரி ஆறே வயதான அவர்கள் மகள் “அனுஷ்யா”.
அவன் தலை மெல்ல திரும்பி மகளைப் பார்த்தது. ஹாலில் நடந்த களேபரத்தில்.. தூக்கம் கலைந்து எழுந்து வந்திருப்பாள் போலும்! தூக்கக் கலக்க விழிகளுடன் நின்றிருந்தாள் அனு.
மூன்று மாதக் கருவுக்கு தந்தை யாரென்று கேட்டவனுக்கு.. அனுவின் தந்தை யாரென்று கேட்க முடியவில்லை. அச்சு அசல் தன் சாயல் கொண்டு பிறந்திருக்கும் மகளின் பிறப்பை சந்தேகிக்கவும் முடியாது அவனுக்கு! அவர்களது ஏழு வருட அழகான தாம்பத்தியத்துக்கு சான்று அனுஷ்யா!
குழந்தை பயந்தாளோ? தன்னை ஹீரோ ரேஞ்சுக்கு எண்ணி வைத்திருப்பவள்..தாயை இழிவாக நடத்தியதைக் கண்டு… தன்னைப் பற்றி என்ன எண்ணியிருக்கக் கூடும்? என்று பற்பல கேள்விகள் அவனுள்.
குழந்தை முன் சடாரென மண்டியிட்டமர்ந்தவன், அனுவைத் தன் நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டே.. கண்ணீர் மல்க, “அப்பா ஒண்ணும் அவ்வளவு மோசமானவன் இல்லைடா!” என்றவன், குழந்தையின் நெற்றிக் கூந்தல் ஒதுக்கி நெற்றியில் முத்தம் வைத்தான்.
மகளின் முன்னால் வன்முறையைப் பிரயோகிக்க விருப்பப்படாதவன், கறுத்த முகத்துடன் ஷக்தியைப் பாராமலேயே வெளியேறினான். அவன் சென்று விட்டான் என்பதற்கு சான்றாக அவனது “பல்சர்” சீறிப்பாயும் ஓசை கேட்டு அடங்கியது.
தன்னைத் தள்ளி விட்டு செல்பவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, கணவனைக் காட்டிலும் குழந்தையை சமாதானப்படுத்த நோக்கம் கொண்டு, அமர்ந்திருந்த நிலையிலேயே, அனுவின் கைகளைப் பற்றி இழுத்து.. தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவளுக்கு குபுகுபுவென வந்தது கண்ணீர்.
தாயின் நெஞ்சுக் கூட்டுக்குள் தலை வைத்திருந்த சின்னவளோ.. தலையுயர்த்தி தாயை நோக்கி, “அம்மா.. அப்பா ரொம்ப திட்டிட்டாரா? அப்பா மோசம் ..” என்று தந்தை மீது கோபித்துக் கொள்ள பதறிப் போனாள் அவள்.
மகளை இறுக கட்டியணைத்துக் கொண்டவள், தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “ச்சேச்சே அப்பா மோசமில்லைடா கண்ணா.. இன்னைக்கு அனு பாப்பா.. சுவரெல்லாம் கிறுக்குறீங்கன்னு அம்மா ச்சோக் கலர் தரலைல? அதுக்கு அனு பாப்பா என்ன பண்ணீங்க? கோபத்தில்.. கையில இருந்து பென்சிலை அம்மா மேல தூக்கி வீசினீங்கள்ல? ..அப்படின்னா அனு பாப்பாவும் மோசமில்லையா?” என்று மென்மையான குரலில் கேட்டாள் ஷக்தி.
சட்டென மறுப்பாக தலையாட்டிய சின்னவள், “இல்லை அனு பாப்பா குட் கேர்ள்.. நான் தான் அம்மா கிட்ட ஸாரி கேட்டேனே?”என்றாள்.
“அதே போல தான் அப்பாவும்.. கோபத்துல இப்படி நடந்துக்கிட்டார்.. சீக்கிரமே வந்து.. அம்மாவிடம் ஸாரி கேட்பார்.. அப்பாவும் குட் பாய் தான்” என்று எடுத்துரைத்தவளுக்கு அப்போது தெரியவில்லை போனவன் இனி திரும்பி வரப்போவதேயில்லை என்று.
அனுவுடன் அறைக்குச் சென்று, அவளை துயில் கொள்ள செய்து கொண்டிருந்த போது.. அறையில் இருந்த லேன்ட் லைன் ஃபோன் சிணுங்கவே, படபடப்புடனேயே அழைப்பை ஏற்றாள் அவள்.
அவன் குரல். அவளை ஒருநிலையில் இருக்க விடாமல், அலைக்கழிக்க செய்யும் அவன் குரல்! அந்தக் குரலில் தெரிந்த கிறக்கமே அவள் மயிர்க்கால்களை மீண்டும் கூச்செறியச் செய்தது.
“ஹாய் பேபி மறுபடியும் நானே!! .. உன் கிட்ட நான் கேட்டது எல்லாம்.. ஒரே ஒரு நாள் தான்..சத்தமே இல்லாமல் என் ஆசையை நிறைவேற்றி வைச்சுட்டு.. எதுவுமே நடக்காதது போல.. உன் “பேபி” கூட சந்தோஷமா இருந்திருக்கலாம்.. நவ் வெய்ட் என்ட் சீ மை கேம் பேபி” என்று கூறிய அந்த குரல் இறுதியில் இடிஇடியென நகைத்து விட்டு அழைப்பைத் துண்டிக்க… அந்த நகைப்பில் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தாள் அவள்.
கணவனைப் பற்றிய எண்ணம் ஒரு பக்கம், அவனின் மிரட்டல் ஒரு பக்கம்.. இரண்டுக்கும் மத்தியில் இருதலைக் கொள்ளி எறும்பு போல ஆனாள் அவள்.
குழந்தை மீண்டும் தூங்கி விட்டிருக்க.. விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே கண்ணீர் விட்டழுது கொண்டிருந்தாள் ஷக்தி. அதே சமயம் இம்முறை அவள் செல் ஒலிக்க… ட்ராயர் மீதிருந்த செல்லை எடுத்தவளுக்கு மீண்டும் அச்சம் வந்து தொற்றிக் கொண்டது.
இப்போதெல்லாம் தெரியாத இலக்கங்களில் இருந்து அழைப்பு வந்தாலே.. அவள் உடல் பதறுவது ஏனோ உண்மை!! மீண்டும் அவன் தானோ?
‘என் பேபியை நிரந்தரமா பிரிய நேரிட்டாலும்… நான் உன் வலையில் விழ மாட்டேன்!’ என்று சொல்லி விட எண்ணி.. அழைப்பை ஏற்றவள்,
மறுமுனையில் இருந்து ஒரு பெண்குரல் கேட்கவும் தான் ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள். “ஹலோ.. மிஸஸ். இளங்கோ… உங்க ஹஸ்பண்ட்க்கு ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு.. நீங்க உடனே கிளம்பி நவலோக்க ஹாஸ்பிட்டலுக்கு வாங்க”என்று உச்சபட்ச பரபரப்பில் அந்த குரல் கேட்க.. அவள் கையில் இருந்த ஃபோன் மெல்ல நழுவி கீழே விழலாயிற்று.
அத்தியாயம்- 2
மூன்று மாதங்களுக்கு பிறகு…
அந்த தனியார் மருத்துவமனையின் கட்டிலில் நிர்ச்சலனமான உடலுடன் கண்கள் மூடி படுத்துக்கிடந்த இளங்கோவின் மூடிய விழிகளுக்குப் பின்னிருந்த கருமணிகள் இரண்டும் தொட்டிக்குள் நீந்தும் மீன்களைப் போல அங்குமிங்கும் அலைபாயத் தொடங்கியது.
இத்தனை நாட்களாக உயிர் இருந்தும் பிணம் போல கிடந்தவனின்.. சேலைன் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த கைகளோ… அந்தக் கட்டிலின் வெண்மை நிற பெட்ஷீட்டை இறுகப் பற்றிக் கொண்டது.
ஈசிஜி மானிட்டர் திரையில் அவனது இதய அதிர்வின் வேகம்.. தாருமாறாக ஏறி இறங்கலாயிற்று. இளங்கோவின் மாற்றங்களை எல்லாம்… பக்கத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவன் தம்பி, ‘ஆதித்யா’வோ.. சட்டென தன் இருப்பிடத்தை விட்டும் எழுந்து, அண்ணனின் தோள்களை அதிர்ச்சியுடன் மெல்லப் பற்ற.. அந்நேரம் தான் யாரும் எதிர்பாராத அதிசயம் நடந்தது.
ஆழ்ந்த தூக்கத்தில் கோர கனவு கண்டு விழிப்பவன் போல, இதழ்கள் பிரித்து பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டே எழுந்தான் இளங்கோ.
அன்றைய ஆக்ஸிடெண்ட்டின் பின் கோமாவுக்கு சென்ற அண்ணன் இன்று.. தெய்வாதீனமாக விழித்தெழுவதைக் கண் கூடாகக் கண்ட இளையவன் ஆதித்யா, கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்க்க, உடம்பில் ஓர் பதற்றம் பரவ ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றிருந்தான்.
இளங்கோ… தம்பியை புருவங்கள் இரண்டும் இடுங்க நோக்கிக் கொண்டே, உள்ளங்கையில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த ட்ரிப்ஸ் குழாயை பிடுங்கியவனாக, மஞ்சத்தை விட்டும் எழுந்து, அழுத்தமான குரலில், “டேய் எவ்வளவு நாள்டா…நான் இப்படி… இங்கே படுத்துக் கிடக்கிறேன்..?”என்று கேட்டான்.
சடாரென எழுந்த அண்ணனை… கண்கள் கலங்க கட்டிக் கொண்டான் ஆதித்யா. அவனுக்கோ.. தம்பியின் அணைப்பைக் காட்டிலும், உடலும், உள்ளமும் ‘ஷக்திக்கு’ என்னானதோ? ஏதானதோ? என்று பரபரத்துக் கொண்டேயிருந்ததால்…தம்பியின் அணைப்பில் இளகல் காட்டவில்லை அவன் உடல்.
கண்களை புறங்கையால் துடைத்துக் கொண்டே அண்ணனை நோக்கியவன், இலேசாக குரல் தழுதழுக்க, “எவ்.. வளவு நாளா? எவ்வளவு மாசம்னு கேளு!..”என்றான் ஆதி.
“மாசமா?”-இடிந்து போன மெல்லிய குரலில் உரைத்தவன், மஞ்சத்தில் தொப்பென அமர்ந்தான்.
மூன்று மாதங்களாக சுயநினைவின்றி.. ஆக்ஸிடெண்ட்டின் விளைவால் கோமாவில் இருந்து வந்த அண்ணனின் அதிர்வை.. சாதாரணமான அதிர்ச்சி என்று எண்ணிக் கொண்டான் போலும் இளையவன்.
ஆகையால்.. அந்த ஆறடி உயர ஆண்மகனின் மென்மையான இதயத்தில் ஏற்பட்டுக் கொண்டிருந்த வலியை அறியாமல் போனான் ஆதி.
எங்கோ விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அண்ணனை நோக்கியவன், “ஆமா ஒரு நாளா.. இரண்டு நாளா?.. மூணு மாசமா நீ இப்படி தான் இருக்க?..”என்றான்.
இளையவன் சந்தோஷமான மனநிலையில் இருக்க, மூத்தவனோ அதற்கு முரண்பாடான மனநிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தான்.
தனக்கு மட்டுமே கேட்கக் கூடிய முணுமுணுக்கும் குரலில், கண்கள் செந்நிறம் கொள்ள, கவலையுடன்.. “மூணு மாசம்… எல்லாமே..கை விட்டுப் போச்சே!!” என்று சொல்லிக் கொண்டவன் தான், அதன் பின் எழுந்து செல்ல முயற்சிக்கவுமில்லை. யாருடனும் பேசவுமில்லை.
அவன் கண்ணின் ஓரம்.. ஓர் ஒற்றை நீர்த்துளி கசிந்தோடியது. வலியுடன் கண்களை மூடிக் கொண்டே தம்பியிடம்,அடிபட்ட குரலில், “இந்நேரம்.. அவள் கல்யாணம்.. முடிஞ்சிருக்கும் இல்லைடா? ” என்றான் சம்பந்தமேயில்லாமல்.
‘யார் கல்யாணம்?’ என்று இளையவனுக்கு கேட்க வேண்டும் போல இருந்தாலும், தமையன்.. இத்தனை நாள் உறங்கிக் கிடந்ததில், மருந்தின் வீரியத்தில் ஏதோ உளறுகிறான் என்று எண்ணிக் கொண்டான் .
“இருண்ணா.. நான் போய் ஒரு கோல் பண்ணிட்டு.. டாக்டரிடம் விஷயத்தை சொல்லிட்டு வந்துர்றேன்..”என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தவன், தன் அண்ணி ஷக்திக்கு அழைப்பெடுக்கலானான்.
இளங்கோ பிறந்து.. சரியாக ஒரு வருட இடைவெளியில்.. அவன் பெற்றோர்கள் செய்த அன்பின் விபரீதத்தில் பிறந்தவன் தான் ‘ஆதித்யா’. இருவருக்கும் ஒரு வருட இடைவெளியே என்பதாலோ என்னவோ, ‘வாடா.. போடா’ என்று நண்பர்கள் போல உரையாடிக் கொள்வது தான் வழமை.
ஆதி, இளங்கோவை ‘அண்ணா’ என்று அழைப்பதும், குறிஞ்சி மலர் பூப்பதும் ஒன்று. இரண்டுமே அபூர்வம் தான். அந்த அபூர்வத்தை அனுபவிக்கும் மனநிலையில் இல்லாமல் போனது இளங்கோவின் துரதிர்ஷ்டம்! அவன் கண்விழித்திருந்த நேரம்.. ஷக்தி எப்போதும் தன் கணவனைக் காண வரும் நேரம்.
இன்றும் அதே போல…. தன் உடன்பிறந்த சகோதரனுடனும், அனு பாப்பாவுடனும்.. ஹாஸ்பிடல் மாடிப்படிகளேறி வந்து கொண்டிருந்த நேரம் தான்.. கொழுந்தனிடம் இருந்து அந்த அழைப்பு வந்தது.
அதில்… தன் வயிற்றில் தற்போது ஆறு மாத கருவாக வளர்ந்திருக்கும் சிசுவின் நிலையைக் கூட மறந்து போனவள்… கணவனின் அறை நாடி வேகமாக விரையவாரம்பித்தாள்.
கர்ப்பிணியாக இருக்கும் தங்கை.. ஃபோன் வந்ததும்.. ஓடுவதைக் கண்ட ஷக்தியின் அண்ணன் பதறித் தான் போனான். தங்கை சிசுவுடன் ஓடுவதால்.. அவள் உயிருக்கும், குழந்தை உயிருக்கும் ஏதாவது நடந்து விடுமோ என்றெழுந்த பயம் ஒரு பக்கம்!!
மாப்பிள்ளைக்கு ஏதாகிலுமோ என்ற கலக்கம் ஒரு பக்கம்! எல்லாம் அவள் அண்ணனுள்ளும் இழையோட, அனுவைப் பிடித்திருந்த கையை விடாமல்.. ஓடும் ஷக்தியின் பின்னால் விரைந்த வண்ணம், “யம்மா.. ஷக்தி.. மெதுவா போம்மா..” என்று அவள் முதுகுக்குப் பின் இரைந்து கத்தியதெல்லாம் அவளுக்குக் கேட்கவேயில்லை.
தன் கணவன் இளங்கோவைக் கண்டுவிடும் ஆவல் அவளுக்குள்! அந்நேரம் வயிற்றினுள் இருக்கும் இன்னோர் உயிரைப் பற்றியும் கூட யோசனையில்லை அவளுக்கு. அவள் சிந்தை முழுக்க அவள் கணவனே!
சடாரென தன் அறைக்கதவு திறக்கப்பட.. பட்டென்று தலை திருப்பிப் பார்த்தான் இளங்கோ. அங்கே அவள்!அவன் பார்வையும், அவள் பார்வையும் சந்தித்துக் கொண்டன.
மாடிப்படியேறி ஓடி வந்ததால் ஜாக்கெட்டில் ஆங்காங்கே வியர்த்திருக்க.. கூந்தல் எல்லாம் கலைந்து போனவளாக, சோர்ந்த மற்றும் ஈரம் சிந்தும் விழிகளுடன், அவனையே கலவரத்துடன் பார்த்தாள் அவள்.
இவனுக்கோ.. அவளைக் கண்டதும் அவன் விழிகளில் நொடிக்கும் குறைவான இன்ப அதிர்ச்சி. இத்தனை நாட்களில்.. இருந்ததை விடவும் அவள் ரொம்ப இளைத்துப் போயிருப்பதாகத் தோன்றியது அவனுக்கு.
அவனது கண்கள் மெல்ல கீழிறங்கி.. மேடிட்ட வயிற்றை வலி சுமந்த முகத்துடன் சந்தித்தது. அவளோ கணவனின் முகத்தை உடம்பில் இயங்கும் அத்தனை நாடி, நரம்புகள் எங்கும் புது இரத்தம் பாய்ந்தோடுவது போன்ற சந்தோஷத்துடன் பார்த்திருந்தாள்.
அவள் மெல்ல மெல்ல அடி மேல் அடி வைத்து உள்ளே வர வர.. இளங்கோவின் முகமோ கருத்து வாடத் தொடங்கியது. அதற்கும் மேலாக.. அங்கே பதற்றத்துடன் நுழைந்த அவளுடைய முரட்டுப் பேர்வழி அண்ணன் முகத்தைக் கண்டதும் அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கவாரம்பித்தது.
அவளோ ஆசையோடு கணவனை அணைக்க நெருங்க, அன்றைய நினைவுகளின் தாக்கத்தில் இருந்த இளங்கோவோ, அவளைப் பாராமல் வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டான். கணவனின் சின்ன புருவச் சுளிப்பைத் தாங்க மாட்டாதவளா.. அவனது முகத்திருப்பலைத் தாங்கக் கூடும்?
அவள் கண்களில் நின்றும் மௌனமாக வழிந்தோடியது கண்ணீர். தேம்பலுடன் விம்மியடங்கியது நெஞ்சு. அவளை நோக்கி மெல்ல திரும்பியவன் கேட்டான், “நீ எனக்கு துரோகம் பண்ணிட்டேல்ல?” என்று.
மூன்று மாதங்களாக.. அவளைப் போட்டு வருத்திக் கொண்டிருந்த நெருஞ்சி முள் மீண்டும் வெளிப்படையாக குத்தத் தொடங்கியது. கணவனின் வாடிய முகமும், வரண்ட ஈரமற்ற இதழ்களும் கூட அவளை வதைத்தது.
அவன் பார்வை மீண்டும் ஒரு முறை அவளது மேடிட்ட வயிற்றில் கவலையுடன் பதிந்து மீண்டது. “இன்னொருத்தன் குழந்தையை சுமந்துட்டு.. எப்படி உன்னால.. என் முன்னாடி.. வர முடியுது..?”- அவன் குரலில், நிறைத்திருந்தது துக்கமே! .
இவளுக்கோ எதை ஒரு மனைவி.. தன் கணவன் வாயால் கேட்கக் கூடாதோ அதைக் கேட்ட பரிதவிப்பு! அவனுக்கோ.. அவளது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தகப்பன் நானில்லையே? என்ற ஆதங்கம்!
அதேசமயம் அவளது என்பு துருத்தி வெளித் தெரியும் மெலிந்த கழுத்தில் சரசம் செய்து கொண்டிருந்த.. அவளது தாலி வேறு அவனை உறுத்த.. அவளில் இருந்தும் பார்வையை அகற்றிக் கொண்டவன், அவள் பக்கத்தில் நின்றிருந்த அவள் அண்ணனில் தன் கண்கள் பதித்தான் அவன்.
அவள் அண்ணன் ‘பரசுராமனி’ன் கண்களும், புருவங்களும் சற்றே இடுங்கி குழப்பத்தில் இருந்த அதே கணம்.. தன் தங்கை கணவனுக்கான இரங்கலையும் காட்டிக் கொண்டிருந்தது.
மாப்பிள்ளை ஏன் சம்பந்தா சம்பந்தமேயில்லாமல், “துரோகம்.. அது.. இது”என்று பிதற்றுகிறான் என்று பரசுராமன் அறிய வாய்ப்பில்லை தான். இருப்பினும் ஷக்தியின் உள்ளத்தில் அந்த சொற்கள் அம்பென வந்து தாக்கியது.
பரசுராமன் பிறந்து பதினாறு வருட இடைவெளியில் பிறந்த இறுதித் தங்கை தான் ஷக்தி. ஷக்திக்கே தற்போது இருபத்தொன்பது வயது எனில்… அவரின் வயது என்னவாக இருக்குமென்று நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்!
ஆனால் நடு நாற்பதுகளில் அவர் வயது தான் இருந்ததே ஒழிய.. இன்னும் ஆள் கம்பீரமாகத் தான் நடமாடிக் கொண்டிருப்பதிலும் கூட ஓர் அழகுண்டு!
ஷக்திக்கு முன்னாடி.. தனக்கு இன்னொரு தங்கை இருந்தாலும் கூட… இறுதி தங்கை மேல் பரசுராமருக்கு எப்போதுமே எக்ஸ்ட்ரா பாசம் உண்டு. ஷக்தி பிறந்ததிலிருந்து.. தந்தை பாசம் அனுபவிக்க முடியாமல் போன குறையை நிவர்த்தி செய்ததே.. இந்த முறுக்கு மீசையும்… திடகாத்திரமான உடலும் கொண்ட.. வெள்ளை வேஷ்டி.. ஆறடி ஐய்யனார் சிலை.. பரசுராமர் தான்!
மூன்று மாதங்களாக கணவனுடன் ஹாஸ்பிட்டல் வாசம் புரியும் தங்கையுடன்… சிரமமே பாராமல் அலைந்து கொண்டிருந்த பரசுராமருக்கு, மாப்பிள்ளை இளங்கோவின் கோபப்பார்வை ஏதோ வித்தியாசத்தை உணர்த்தியது.
அவர் கண்களை கோபம் வெடிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ.
பரசுராமனின் கண்களில்.. அவனை “என் தங்கச்சியை விட்டுடா!!”என்று கூறிக் கூறி.. இளங்கோவைக் கட்டி வைத்து.. தன் முரட்டு முஷ்டி மடக்கி.. அவன் முகத்துக்கே குத்திய நேரம் தோன்றாத ஓர் கருணை.. பரசுராமர் கண்களில் தற்போது வழிவதைக் கண்டான் அவன்.
ஏது இன்று போலிக் கருணை? என்று தோன்ற, சட்டென தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான் இளங்கோ. தன்னைக் காண மேடிட்ட வயிற்றுடன் வந்திருக்கும் அவளையும், அவள் அண்ணனையும் காணக் காண ஆத்திரமும், கோபமும், வெறியும், கவலையும், முதுகில் குத்தப்பட்ட வலியும் அவனை ஒரு சேரத் தாக்கியது.
அந்த கணம் டாக்டருக்கு தகவலைச் சொல்லி விட்டு.. உள்ளே நுழைந்த தம்பியை நோக்கியவன், கோபம் மண்டிய குரலில், விழிகள் அகலத் திறக்க, “ஆதி!! இப்போ எதுக்கு அவள் அண்ணன் இங்கே வந்திருக்கானாம்? அடிச்ச அடியில்.. மூணு மாசம் கோமாவுக்கு போய் வந்திருக்கும்.. நான் செத்துட்டேனா? இல்லையான்னு பார்க்க வந்திருக்கானாமா? இல்லை போலீஸ் கேஸாகிடும்னு பயந்து போய் வந்திருக்கானாமா?”என்று தன் ஆத்திரத்தை தம்பியைக் கொண்டு வெளிப்படுத்தினான் அவன்.
அதைக் கேட்டு குழம்பிப் போனது தம்பி ஆதித்யா மாத்திரம் இல்லை. அங்கேயிருந்த மற்ற இருவரும் தான்.
ஆதி, புரியாத தொனியில், “டேய் என்னடா உளர்ற? ஷக்தி அண்ணன் அடிச்ச அடியில் நீ.. மூணு மாசம் கோமாவுக்கு போயிட்டியா?”என்று கேட்டான்.
“மாப்பிள்ளை என்ன சொல்றீங்க?”-பரசுராமரும் இணைந்தே கேட்டு தன் குழப்பத்தை வெளிப்படுத்தலானார். அவரது ‘மாப்பிள்ளை’ என்னும் அழைப்பில் இன்னும் கொஞ்சம் கடுப்பானவன், “யாருக்கு யார் மாப்பிள்ளை? .. உன் தங்கச்சியை நான் கட்டிக்கிட்டிருந்தால்.. நான் உனக்கு மாப்பிள்ளைன்னு சொல்லலாம்..”என்று கேட்டதும்.. அங்கிருந்த அனைவர் முகமும் ஓரே பாவத்தைத் தான் காட்டியது.
அது அதிர்ச்சி பாவம்! அவன் முகம் மட்டும் சீற்றமாய்! அண்ணனின் தோள் புஜத்தில் கை வைத்து தன்னை நோக்கி திருப்பிய ஆதி, ‘பரசுராமனை’ அண்ணன் ஒரு போதும் இல்லாமல் தற்போது,
‘அவன்.. இவன்’ என்று வயதுக்கு தகுந்த மரியாதை கொடுக்காது பேசுவதில் சற்றே சினம் மிக, “இளா.. அவரை ‘அவன்.. இவன்’னு மரியாதையில்லாமல் பேசுவதை முதல்ல நிறுத்து!!.. அவர் தங்கச்சி யாரைக் கட்டியிருக்காள்னு உனக்குத் தெரியாதா?” என்று கேட்க, இளங்கோவின் முகத்தில் ஒரு அசட்டுச் சிரிப்பு தோன்றி மறைந்தது.
ஓ! ஷக்தியின் கணவன்.. பெரிய இடமோ? என்று தோன்ற, அதை கணக்கிலேயே கொள்ளாதவன் போல “யாரைக் கட்டியிருந்தால் எனக்கென்ன?” என்று கேட்டாலும் உள்ளே இதயத்தில் யாரோ சம்மட்டி கொண்டு அடிப்பது போல வலிக்கத் தான் செய்தது அவனுக்கு.
அண்ணன் வேண்டுமென்றே…அண்ணியை கொஞ்சம் கலங்கச் செய்து வேடிக்கைப் பார்த்து விளையாடுவது போல தோன்ற, காண்டானவனாக, “இளா.. விளையாடாதே!!… நிஜமாவே ஷக்தி.. யாரைக் கட்டியிருக்காள்னு உனக்குத் தெரியாது?” என்று கேட்டான் ஆதி.
அந்த கேள்விக்கு பதிலிறுக்க முடியாமல்.. அந்த கேள்வியின் பதிலை அறியவும் முடியாமல்.. அமைதியாக தம்பி முகத்தையே சோகத்துடன் பார்த்திருந்தான் அவன்.
புருவங்கள் இடுங்க தன்னையே பார்த்திருக்கும் அண்ணனின் முகத்தில் ஏதோ ஒன்று புரிபடுவது போல இருக்க, “ஷக்தியுடைய கணவன்… நீ தான் இளா!” என்று சொன்னதும்.. உள்ளுக்குள் இத்தனை நேரம் இருந்த எவரெஸ்ட்டின் பாரம் அகன்றது போல இலேசாக உணரத் தொடங்கினான் இளங்கோ.
“ஷக்தியின் கணவன் அவனா?”-தனக்குத் தானே கேட்டுக் கொண்டான் இளங்கோ.
மூன்று மாத கோமாவுக்கு போய் வந்திருப்பவன் இன்ப அதிர்ச்சிக்குள்ளானான். அப்படியானால் அவள் கழுத்தில் இருந்த தாலி.. அவன் அணிவித்த தாலியா? அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை அவன் குழந்தையா?
சட்டெனத் திரும்பி தன் மனைவி முகத்தை… விழிநீர் விம்பத்தை மறைக்கப் பார்த்தவன், மெல்ல தலையாட்டி, ‘இது எல்லாம் நிஜம்தானா?’ என்பது போல சைகையில் கேட்டான்.
அவளோ அழுது அழுது அதைத்துப் போன முகத்தில் சிறு புன்னகை இழையோட அவளும் மௌனமாகவே ‘ஆமாம்’ எனத் தலையாட்டினாள்.
அவஸ்தையாக கழிந்த அந்த நொடிகள்… அவன் வாழ்வில் மறக்க முடியாத நொடிகளாக மாறியது. மனைவி பின்னால் நின்று கொண்டு.. தன் ‘பரசு மாமா’வின் அகன்ற சுட்டு விரலைப் பிடித்துக் கொண்டு.. என்ன நடக்கிறது என்று தெரியாமல் நின்றிருந்த.. அவனது ஆறு வயது குழந்தை.. மெல்ல எட்டிப்பார்த்து, “அப்பா” என்றது.
குழந்தையின் ‘ அப்பா’ என்ற அழைப்பில்.. அவனது திறனற்ற உடம்பில்.. ஓர் எனர்ஜி பாய்வது போல இருந்தாலும் கூட.. அந்தக் குழந்தையின் முகத்தையே அமைதியாக ஒரு கணம் பார்த்துக் கொண்டேயிருந்தான் அவன்.
அண்ணனின் முகபாவத்தை வைத்து.. ‘அண்ணன் விளையாடவில்லை.. ஆயினும் எதுவோ ஒன்று அனர்த்தமாக நிகழ்ந்துள்ளது’ என்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது இளையவன் ஆதித்யாவுக்கு. “என்னடா பார்க்குற?.. அது உன் குழந்தை தான்..”என்று கூற, அதிர்ந்து விழித்தான் அவன்.
என்ன? அவளுடனான இந்த மூன்று மாத வாழ்க்கையில்.. ஆறு வயதில் ஓர் பெண் குழந்தையா? அவனால் நம்ப முடியவே இல்லை.
அதேசமயம் அவளது ஆறு மாத கரு கூட… சீரான வளர்ச்சியின்மையால்.. அவ்வளவாக வெளியே புடைத்துத் தெரியாதிருந்தமையால்.. அது மூன்று மாத கருவென்றே நம்பினான் அவன்.
“அண்ணி.. இவன் முழிக்குற முழியைப் பார்த்தால்.. எனக்கு ஏதோ சரியாப்படலை”என்று கூற… ஷக்திக்குள்ளும் பிரளயம் வெடித்துக் கொண்டு தான் இருந்தது.
ஆனால் கணவன் கண் விழித்த மகிழ்ச்சியிலும், அவனது குழப்பமான கேள்விகளும், அன்றைய சம்பவமும் அவளை சீராக யோசிக்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. அது தான் உண்மை!
அனுவையும், ஷக்தியையும் மாறி மாறி சுட்டிக்காட்டியவனாக, “இது உன் குழந்தை.. இதோ வாயும், வயிறுமா நின்னுட்டிருக்காளே.. இது உன் மனைவி… திருமதி. ஷக்தி இளங்கோ.”என்று கூற… தன் நெற்றியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான் அவன்.
பின் மண்டை வலிப்பது போல இருக்க, “டேய் என்னடா சொல்ற? அப்போ நான்… ஷக்தி அண்ணன் என்னை அடிச்சதால்… ஹாஸ்பிட்டலில்..”என்று ஏதேதோ அரைகுறையாக உளறினான் அவன். அவன் ஞாபகத்தில் இருந்தது என்னமோ அவ்வளவு தான்.
அவன் வலியுடன் தலையைப் பிடித்துக் கொண்டதை கூட பொறுக்க மாட்டாத.. இளங்கோவின் மனைவியின் கரங்கள்..அவனை நோக்கி நீண்டு.. நெற்றியைப் பற்றி மெல்ல நீவி விடத் தொடங்கியது.
அவள் ஸ்பரிசம் பட்டதும் ஏனோ அவன் முகத்தில் இருந்த இறுக்கம் தளர்ந்தது.நீவி விட்ட அவள் கரங்களை மெல்ல பற்றியவன், அவள் உள்ளங்கையில் தன் வலது கன்னத்தைப் பதித்தவனாக, கண்கள் மூடித் திறந்தான்.
கணவனின் பழைய அன்பு மீண்டதும் கொஞ்சமாக ஒளிர்ந்தது அவள் முகம். “ஷக்தி..இது எத்தனையாவது வருஷம்?”- மென்மையாக கேட்டான் அவன். “இரண்டாயிரத்து பதினெட்டு..”-இலேசாக கலங்கிய ஹஸ்கி குரலில் சொன்னாள் அவள்.
அதைக்கேட்டு பதறியடித்துக் கொண்டு விழுந்தது அவன் கேள்வி. “அப்படின்னா… இது.. டூ தௌசன்ட் லெவன் இல்லையா?”
தன் தங்கையினதும், மச்சானினதும் அன்னியோன்யத்தை வெகுநாட்கள் கழித்து கண்டதில்.. கண்கள் கலங்க, மென்மையான குரலில், “இல்லை மாப்பிள்ளை..”என்றார் பரசுராம்.
மனைவியை புரியாமல் விழித்துப் பார்த்துக் கொண்டே, “அப்படின்னா அடிபட்டு… நான் ஹாஸ்பிட்டலில் கிடந்தப்போ… ஷக்திக்கு கல்யாண ஏற்பாடாகி இருந்தது?”என்று மீண்டும் கூறியவன்.. தலையைப் பிடித்துக் கொள்ளலானான்.
ஷக்தியைக் காதலித்துக் கொண்டிருந்த நேரம் அது. ஷக்தியின் காதல் மேட்டர் ‘பரசுராமருக்கு தெரிய வர, இளாவை ஆள் வைத்து அடித்து விட்டு… ஷக்திக்கு கல்யாண ஏற்பாடு புரிந்தது வரை ஞாபகம் இருக்கிறது அவனுக்கு.
அதற்காகத் தான் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம் என்று கூட நினைத்துக் கொண்டான் அவன். அது தான் நீண்ட துயில் கலைந்து எழுந்ததும், முதல் கேள்வியாக..“டேய் எவ்வளவு நாள்டா.. நான் இப்படி படுத்துக் கிடக்கிறேன்”என்று கேட்டான்.. உடனே மண்டபம் சென்று ஷக்தி கல்யாணத்தை நிறுத்தி விடும் வேகத்துடன்.
அதிலும் தம்பி.. ‘மூன்று மாதங்கள்’ என்றதும், ஷக்திக்கு இன்னொருவனுடன்..இந்நேரம் கல்யாணம் நிகழ்ந்திருக்கக் கூடும் என்று கூட எண்ணிக் கொண்டான் அவன்.
இந்த வேளை கர்ப்பவதியாக தன்னைப் பார்க்க வந்த ஷக்தியை வேற்றாடவனின் மனைவியாக எண்ணிக் கொண்டே தான், “நீ எனக்கு துரோகம் பண்ணிட்டேல்ல?”என்று கேட்கவும் செய்தான்.
ஆனால் அந்த சிசுவின் உதயத்துக்கும், தாலிக்கும் உரிமையாளன் அவன் என்றதும்.. சந்தோஷத்தில் ஆயிரம் யானை பலம் வந்தது போல உணர்ந்தான் அவன். மனைவியின் கையினை அப்போதும் விடாதவன், அதற்கு பிறகு என்ன நடந்தது என்று அறிய ஆவல் கொண்டவனாக, அவளை நோக்கி, “அதுக்கு அப்புறம் என்னாச்சு ஷக்தி..?” என்று கேட்டான்.
அவள் பதில் சொல்ல வாய் திறக்கப் போன கணம்.. உள்ளே வந்தார் டாக்டர். கோமாவுக்கு போன பேஷன்ட்.. திடீரென்று சுய நினைவுக்கு திரும்பியது மாத்திரமல்லாது… சாதாரணம் போல கட்டிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதுவும் கூட ஆச்சரியத்தைக் கொடுத்தது அவருக்கு.
அது.. ஓவர் நைட்டில் வாழ்க்கையே மாறி விட்டதே என்ற சந்தோஷத்தில்.. அவன் மனம் கொடுத்த எனர்ஜி தான் காரணம் என்று டாக்டருக்கு அப்போது புரிந்திருக்கவில்லை.
டாக்டர் வந்து.. அவனது பல்ஸ், ஈசிஜி மற்றும் கண்ணுக்கு டார்ச் அடித்து பரிசோதிக்க, டாக்டரிடம், ஆதி, “டாக்டர்….. அண்ணா.. கோமாவில் இருந்து வந்ததும்… வித்தியாசமா நடந்துக்குறான்.. இந்த வருஷம் டூ தௌசன்ட் எய்ட்டீன்னு சொன்னால்… ‘அப்போ இது..டூ தௌசன்ட் லெவன் இல்லையா?’ன்னு கேட்குறான் டாக்டர்” என்றதும், அமைதியாக இருந்த இளாவைப் பார்த்தவர், தன் டார்ச் லைட்டை கோர்ட் பாக்கெட்டில் இட்டவராக, அவனைப் பார்த்து, “இப்போ உங்களுக்கு.. எத்தனை வயசு.. மிஸ்டர். இளங்கோ?” என்று கேட்டார் அவர்.
“டுவென்டி ஃபைவ்”-என்று தன் தற்போதைய வயதில் இருந்து ஏழு வயதைக் குறைத்தவனாக அவன் சட்டென சொல்ல.. ஷக்தியின் முகமோ கொஞ்சம் சுருங்கியது.
“நீங்க எதுவரை படிச்சிருக்கீங்க? எங்கே படிச்சீங்க?”- அவரது கண்களில் அவனை ஆராயும் கூர்மைப் பார்வை பரவியிருந்தது.
“பி.பி. ஏ இன் கலம்போ யுனிவர்சிட்டி”
“நீங்க எந்த இயர்.. பாஸ் அவுட் ஆனீங்க?”
“டூ தௌசன்ட் நைன்ல”
அவனது சீரான பதில்களைக் கேட்டு மெல்ல மலர்ந்தது ஷக்தியின் வதனம். அதைப் பார்த்து.. டாக்டர் இளங்கோ சரியாகத் தான் பதிலளிக்கிறான் என்று ஊகித்துக் கொண்டார்.
அடுத்து டாக்டர், அனுவைக் காட்டி, “உங்க பொண்ணு.. பிறந்தநாள் ஞாபகம் இருக்கா?” என்று கேட்க, புருவங்களை சுருக்கி தலையாட்டியவன், “ம்ஹூஹூம்.. ஞாபகம் இல்லை டாக்டர்” என்றுரைக்க, ஏதோ புரிபடுவது போல இருந்தது அவருக்கு.
“மிஸ்டர். இளங்கோ.. உங்களுக்கு ஏதுமில்லை.. யூ ஷூட் டேக் ரெஸ்ட் நவ்.. அதுக்கப்புறம்.. உங்க ப்ரெய்னை.. ஒரு ஸ்கேன் எடுத்துப் பார்த்திடலாம்..” என்றவர், ஷக்தியை நோக்கி, “மிஸஸ் இளங்கோ… அவருக்கு ஏதாவது திரவ ஆகாரம் கொடுங்க..”என்றுரைத்தவர்,ஆதித்யாவை நோக்கி, “கம் டு மை ரூம்” என்று விட்டு அகல, அவர் பின்னாடியே விரைந்தான் ஆதித்யா.
அனு பாப்பாவை கைகளில் தூக்கிக் கொண்ட பரசுராம்.. தங்கையை நாடி வந்து, “ஷக்தி.. நீ மாப்பிள்ளை கூட இரு.. நான்.. அனுவோடு போய்..கேன்டீன்ல.. ஏதாவது குடிக்க இருக்குமான்னு பார்த்துட்டு வரேன்” என்று விட்டு அகல… அங்கே அவ்வறை அவனும், அவளுமாகத் தனிமைப்பட்டுப் போனது.
கணவன்.. தன்னோடு வாழ்ந்த ஏழு வருட வாழ்க்கையை மறந்து போனதையும் எண்ணி மகிழ்வாளா ஒரு பெண்?இதோ இவள் மகிழ்ந்தாள்;இளங்கோவின் ஷக்தி மகிழ்ந்தாள்.
குறிப்பாக அன்றைய இரவுச் சம்பவத்தை மறந்து போனதில்.. மகிழ்ச்சி வந்தாலும் கூட… எந்நேரம் அந்த ஞாபகங்கள் மீள எழும்? என்று யோசிக்கையில் அவஸ்த்தையாகவும் உணர்ந்தாள் ஷக்தி.
அவன் மறதி.. கடவுள் அவளுக்கு அளித்த வாய்ப்பா? இல்லை தற்காலிக தீர்வா? அறையில் யாருமில்லா தனிமையில்.. தன் காதலியையும், அவள் வயிற்றையும் மையலுடன் பார்த்துக் கொண்டேயிருந்தான் அவன்.
மனைவி சிசுவுடன் நின்றிருப்பது தாங்க மாட்டாமல், “ஏன் நின்னுட்டிருக்க? உட்கார் ஷக்தி” என்றவன்.. அவள் கையை உரிமையுடன் பற்றி இழுத்து.. மஞ்சத்தில் அமர வைக்கவும் செய்தான்.
அருகில் அவள் முகம்.. வெகுநாட்கள் கழித்து அவன் நாசியில் அவளது அதே வியர்வை வாசம்!!
காதல் பெருக்கெடுத்தோட அவளை நோக்கியவன், மனைவியிடம் அனைத்தையும் அறிய நாடியவனாக, “நான் அடிபட்டு ஹாஸ்பிட்டலில் இருந்த நேரம்.. எப்படி உன் கல்யாணம் நின்னு போச்சு ஷக்தி?” என்று கேட்டான் அவன்.
அவளிடமிருந்து பதில் வர முன்னரே.. பொறுமையேயற்று வாய் திறந்தவன், “ஒரு வேளை.. மாப்பிள்ளை ஓடிப்போயிட்டானா?”என்று கேட்டான்.
கணவனின் கூற்றில் கிளுக்கிச் சிரித்தவள், “இல்லை..”என்றாள் மென்மையாக.
“அப்போ?”
அவளோ கணவனின் அடர் கறுப்பு நிற கண்மணிகளைப் பார்த்துக் கொண்டே சொன்னாள், “ பொண்ணு தான்.. அவள் காதலனுடன் போயிருச்சு..”என்று. அந்த வார்த்தைகளின் அர்த்தம் புரியவே சொற்பநாழியானது இளங்கோவிற்கு.
இறுதியில் புரியவே, அவன் அதரங்கள் ஆனந்த அதிர்ச்சியில் திறந்து கொண்டது. அப்படியானால் குடும்பம், அண்ணன், ஊருலகம் இது எதையுமே பாராமல் அனைத்தையும் துச்சமாக தூக்கியெறிந்து விட்டு.. அவனுக்காக.. அவன் காதலுக்காக வந்திருக்கிறாளா அவள்?
கைகள் மனைவியை அணைத்துக் கொள்ள அலைபாய, உணர்ச்சி வசப்பட்டு, அவள் முகத்தை இழுத்து.. தன் நெஞ்சாங்கூட்டுக்குள் புதைத்துக் கொண்டான் இளங்கோ. அவன் கைகள்.. அவள் முதுகை ஆரத்தழுவித் தடவ.. அவன் இதழ்களோ, “ஷக்தி.. என் ஷக்தி!” என்று மையலுடன் முணுமுணுத்தது.
கணவனின் அணைப்பில் மொத்தமாக உருகிப் போய் நின்றிருந்தவளுக்கு.. உண்மை அறியாத கணவனுடன் ஒன்றுவது உள்ளே குற்றவுணர்வை தோற்றுவித்தது.
அதனால் அவனை அணைக்கத் துடித்த கைவிரல்களை இறுக மூடிக் கொண்டு அமைதியாக இருந்தாள் அவள். அவனோ, அணைப்பை விடாமலேயே.. சந்தோஷத்தில், “என்னால நம்பவே முடியலை.. எனக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தை.. என் மனைவியா நீ!!.. நடந்தது எதுவுமே ஞாபகம் இல்லை… உன் கூட நான் ஏழு வருஷம் குடும்பம் நடத்தியிருக்கேன்.. ஆனால் எனக்கு.. நான் ஆசைப்பட்ட வாழ்க்கை ஓவர் நைட்ல கிடைச்ச எஃபெக்ட்..!!.” என்றுரைத்தான் அவன்.
ஆமாம்.. அவனுக்கு மட்டுமா ஓவர் நைட்டில் அனைத்தும் சேஞ்சான எஃபெக்ட்?? இவளுக்கும் தான்!! இருப்பினும் அனைத்துமே அவன் நினைவுக்கு வரும் போது… உள்ளே ஏதோ பிசைவது போல இருந்தது ஷக்திக்கு!
அவன் அணைப்பில்.. அவள் இருந்த நேரம்.. சட்டெனத் திறந்தது கதவு. வந்தது அவள் அண்ணனும், அவள் குழந்தையும்! அவனிடமிருந்து பட்டென்று பிரிந்து கொண்டவள்.. அசடு வழிய எழுந்து நின்றாள்.
அவனுக்கோ… அவள் அண்ணன் அடித்த அடியின் ஞாபகங்கள் மனதில் இருக்கும் புதிய நினைவுகள் அல்லவா? அதனால் தன் மச்சானை.. முறைத்துப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான்.
வெகுநாட்கள் கழித்து தங்கை.. கணவனுடன் சந்தோஷமாக இருப்பதைக் கண்டு முகத்தில் திருப்தியின் சாயை படர்ந்தது அவருக்கு.
அனுவைக் கீழே இறக்கி விட்டு.. கையோடு தான் வாங்கி வந்திருந்த “இலைக்கஞ்சி” பாட்டிலைக் கொடுத்த பரசுராம், “இதை மாப்பிள்ளைக்கு கொடுமா.. நான் போய்.. ஆதியைப் பார்த்துட்டு வரேன்”என்றவராக.. அங்கிருந்து இங்கிதமாக ஒதுங்கி.. வெளியே சென்றார்.
குழந்தையைக் கண்டதும், “நான் அப்பா” என்ற கர்வம் பிறந்தது அவனுக்கு. அச்சு அசல் தன்னைப் பார்ப்பதைப் போலவே இருக்கும் தன் மழலைச் செல்வத்தின்.. பெயரை ஞாபகப்படுத்த முயன்று தோற்றுப் போனவன், வலியுடன் குழந்தையைப் பார்க்க,
அவனின் எண்ணவோட்டங்களை புரிந்து கொண்டாள் இளங்கோவின் மனைவி. கணவனின் தோளைத் தொட்டவள்,மென்மையாக புன்னகைத்து, தாய்மை சிந்தும் குரலில், “ நமக்குப் பிறந்த பெண்குழந்தையின் பெயர் என்னவாகத் தானிருக்கும்?”என்று கேட்டாள். அந்த கேள்வி பழைய நினைவினை மீள எழச் செய்தது அவனுள்.
காதலித்துக் கொண்டிருந்த நேரம்… அவன் குழந்தைக்கு வைக்க ஆசைப்பட்ட பெயர் சட்டென்று ஞாபகம் வரவே, நா தழுதழுக்க, “அனுஷ்யா!!” என்றான் அவன்.
தந்தை தன் பெயரை அழைத்ததில்.. குழந்தையினுள் உற்சாகம் ஊற்றெடுக்க, “அப்பா”என்று சிரித்துக் கொண்டே.. ஓடி வந்து மெத்தை மேல் ஏறி.. தந்தை மார்பில் அடைக்கலமானாள் அனுஷ்யா.
குழந்தையின் குண்டுக் கன்னங்களுக்கு மாறி மாறி முத்தம் வைத்தவன், “அப்படியே என்னைப் போலவே இருக்காள்ல?” என்றான் அவன்.
அந்த கேள்வி.. “இந்த குழந்தைக்கு அப்பா ய்யாரு?”என்று அவன் கேட்ட ஞாபகத்தைத் தூண்டி விட.. சட்டென வாடிப்போனது ஷக்தியின் முகம்!
மனைவியின் முகவாட்டம் அறியாமல்… குழந்தையுடன்.. இன்னோர் குழந்தையாகவே மாறி விளையாடிக் கொண்டிருந்தான் அவள் கணவன்!
அத்தியாயம்– 3
ஹாஸ்பிட்டலின் படிகளை.. தன் மணி வயிற்றைத் தள்ளிக் கொண்டு, வந்தவளின் இடப்புறத்தில்… நடந்து வந்து கொண்டிருந்தாள் ஷக்தியின் கடந்து அண்ணி மீனாட்சி.
தன்னருகே நடந்து வந்து கொண்டிருந்த அண்ணனின் முகத்தை நோக்கிய ஷக்தி, மென்மையான குரலில், “அண்ணா.. அவருக்கு இப்போ நினைவு தப்பியிருக்கு… பழையது எல்லாம் ஞாபகம் வச்சிக்கிட்டு மனசை நோகடிக்குற மாதிரி.. ஏதாவது குத்திக்காட்டி பேசினார்னா.. அதை பெருசா எடுத்துக்காதீங்கண்ணா..” என்றாள்.
அதைக் கேட்டதும் அவருடைய அகன்ற மீசை அதரங்கள் சட்டென விரிந்து முகம் புன்னகை சிந்தியது.
அவர் பதிலளிக்கும் முன்னர் வாய் திறந்த அவர் மனைவி மீனா, தன் நாத்தனாரை நோக்கி கனிவாக, “இதை நீ சொல்லணுமாம்மா.. மாப்பிள்ளையைப் பத்தி எங்களுக்கு தெரியாது? அவர் குணத்தில் தங்கம்.. அவரைப் போல மாப்பிள்ளை.. உங்க அண்ணனே உனக்கு தேடியிருந்தாலும் கிடைச்சிருக்காது..”என்று இயம்ப, அதில் அவள் முகம் கொஞ்சம் மலரத்தான் செய்தது.
நிஜம் தான். அவனைப் போல அவளிடம் அன்பு காட்டும், நேசம் செலுத்தும் கணவன்.. அவளது அண்ணனாலும் தான் அவளுக்காக பார்த்திருக்க முடியாது.
உள்ளங்கையில் தாங்கினான் அவளை. ஆனால் இப்போதோ அந்நினைவுகளேயற்றுப் படுத்துக் கிடக்கிறான்! அதை எண்ணிய போது.. அவளது மலர்ந்த முகம் கொஞ்சம் தேய்ந்து தான் போனது.
அதைக் கண்டு பரசுராமிற்கு.. இயல்பாகவே ‘தங்கை’ பாசம் ஊற்றெடுக்க, “இல்லைம்மா.. நான் எதையும் அலட்டிக்க மாட்டேன்.. மாப்பிள்ளை கோமாவை விட்டு மூணு மாதத்திலேயே வந்துருவாருன்னு நாம யாருமே எதிர்பார்க்காதது.. ஆனால் இப்போ கண்ணு முழிச்சு.. நம்ம கிட்டயே திரும்ப வந்துட்டாரு இல்லையா? அது போல அவர் நினைவுகளும் திரும்ப வந்துடும்.. இப்போ நீ பிள்ளைத்தாச்சியா இருக்கே ஷக்தி… அதனாலே.. உன் குழந்தையின் ஆரோக்கியம் பற்றியும் கூட கொஞ்சம் கவனம் வை..” என்றார் அவர்.
அவன் நினைவுகள்!! அது திரும்ப வரக்கூடுமா? அவள் வாழ்வு மீண்டும் தடம் புரளக் கூடுமா? அந்த யோசனை எழுந்த நொடி நெஞ்சில் ஏதோ சர்ரெக்கென்று மறுபக்கம் திரும்பிக் கொள்வது போல வலியெடுத்தது அவளுக்கு.
அவனது அறையும் வந்து விடவே, கதவைத் திறந்து, தங்கையையும், மனைவியையும் உள்ளே விட்டு, தானும் உள்ளே நுழைந்தார். அங்கோ அவளது ஆருயிர் கணவன், டாக்டரிடம் தீவிரமாக வாதம் செய்து கொண்டிருந்தான்.
“ஐ ஏம் கம்ப்ளீட்லி ஃபைன் டாக்டர்!”- இது அவன் குரல்!
“மிஸ்டர். இளங்கோ.. உங்களுக்கு வந்திருப்பது ரிட்ரோக்ரேட் அம்னீசியா.. இந்த மாதிரி பேஷண்ட்டை.. உடனே டிஸ்சார்ஜ் பண்ண முடியாது.. புரிஞ்சுக்குங்க.. நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கணும்..”- அவனுக்கு, அவனது உடல்நிலையைப் பற்றி தன்மையாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார் டாக்டர்.
“இல்லை டாக்டர்.. நான் டிஸ்சார்ஜ் ஆகிக்குறேன்!!..”-அவனது குரலில் பிடிவாதம் ஏகத்துக்கும் எகிறியிருந்தது. பின்னே.. தூக்கத்தில் இருந்து விழித்தவனுக்கு.. காதல் கை கூடிய சந்தோஷம் இருப்பின்.. அவனால் அந்த கட்டிலில் தான் வெறுமனே அமர்ந்திருக்க முடியுமா என்ன?
அவளை அள்ளி அணைக்க வேண்டும்! அவள் துவளத் துவள.. அவள் இதரங்களில் முத்துக்குளிக்க வேண்டும்! அவள் உயிரோடு.. இவன் இரண்டறக் கலக்க வேண்டும்!
இப்படி ஏகப்பட்ட ‘வேண்டும்!’ களை.. தன் காதலின் ஆசைகளை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு தான் டாக்டரிடம் அவ்வாறு கூறினான் இளங்கோ.அதற்கு டாக்டர் ஏதோ சொல்ல வாய் திறக்கப் போன கணம் தான் உள்ளே வந்த பரசுராம், அந்த அறையே எதிரொலிக்கும் கணீர் குரலில், “மாப்பிள்ளைக்கு… இருக்க பிரியமில்லைன்னா.. நாங்க அவரை.. டிஸ்சார்ஜ் பண்ணிக் கூட்டிப்போறோம் டாக்டர்!” என்றார்.
பரசுராம். கொழும்பில் மிகப்பெரும் தொழிலதிபர். பார்க்க ஆளும், உடையும் தான் பட்டிக்காட்டான் போல.. படிக்காதவராக.. ரொம்ப எளிமையானவராக அவரைக் காட்டிக் கொடுத்தாலும், அந்த ஹாஸ்பிட்டலின் பெரும்பாலான பங்குகளை தன்னகத்தே வைத்திருக்கும் ஷேர் ஹோல்டர் அவர்.
அவரே.. வாய் திறந்து “டிஸ்சார்ஜ் பண்ணிக் கூட்டிப்போறோம் டாக்டர்!” என்றதன் பின்பு… எதையுமே மறுத்துப் பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் டாக்டர்.
தனக்காகத் தான் தன் மச்சான் பரிந்து பேசினாலும் கூட… அன்றைய சம்பவங்களின் தாக்கத்தின் பசுமை காரணமாக, பரசுராமை நோக்கி முகத்தைத் திருப்பாமல்.. மார்புக்கு குறுக்காக கை கட்டி.. விட்டத்தையே வெறித்துப் பார்த்த படி அமர்ந்திருந்தான் அவன்.
‘பிள்ளையையும் கிள்ளி விட்டு.. தொட்டிலையும் ஆட்டி விடும்’ ரகம் அவர் என்று எண்ணிக் கொண்டான் அவன். மௌனமாக தலையசைத்து விட்டு, “சரி நான் ஈவ்னிங் வந்து அகேன் செக் பண்றேன்…” என்றவராக டாக்டர் அங்கிருந்து நகர, கட்டிலில் அமர்ந்திருந்த இளங்கோவின் கண்கள்.. தன் மனைவியின் முகத்தையே அதிகப்படி ஆவலுடன் ஆராய்ந்தது.
அவனோ கண்களாலேயே, தன் மனைவியை அள்ளிப் பருகிய வண்ணம், ‘வா அருகே’ என்பது போல அழைத்தான். அந்த பார்வையில் அப்படி என்ன சக்தியிருந்திருக்கக் கூடும்? ஷக்தியும்.. இரும்பால் ஈர்க்கப்பட்ட காந்தம் போல.. அவனை நோக்கி மெல்ல நகர்ந்தாள்.
அவனோ தன்னை நோக்கி வந்த மனைவியின் கையை மென்மையாக பற்றியிழுத்து.. நெற்றியில் காதலோடு முத்தம் பதிக்க, அண்ணனும், அண்ணியும் அங்கே இருக்கிறார்கள் என்ற நினைப்பிலே முகம் சிவந்து போனது அவளுக்கு.
அவள் காதல் சங்கடத்தில் விழிக்க, அவனோ அவளை நோக்கி, சற்றே அசூயை மீதூறும் குரலில், “ஏன் வர லேட்டு? உனக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்ணேன் தெரியுமா?” என்று கேட்டான்.
பெரும்பாலும் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள்.. சொந்தங்களின் வரவிற்காக காத்திருப்பது இயல்பு தானே? அந்த காத்திருப்புக்கும் மேலாக.. அவனுள் இருந்த காதலை உணர்ந்து கொண்டாள் ஷக்தி.
“வந்து.. ஸாரி.. கொஞ்சம் டிராபிக் இளா…அதான் லேட்டு”என்று சத்தமாக சொன்னவளையே ,அவனது கூர்மையான கண்களில்… காதல் மிகையோட பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவன் பார்வையில் உடல் கூசவே, அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவன் காதோரம், குனிந்து,
“ஏன் இப்போ இப்படி பண்றீங்க? அண்ணா இருக்காரு”என்று சங்கடத்துடன் நெளிந்தாள் அவள்.அவனோ, பரசுராம் காதில் விழ வேண்டுமென்றெண்ணத்துடன்.. வேண்டுமென்றே சத்தமாகவே, அழுத்தமான குரலில், “இப்போ நீ என் காதலி இல்லை? என் பொண்டாட்டி!!..திருமதி. இளங்கோ… எவனும் ஒண்ணும் கேட்க முடியாது.. எனக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்கு..”என்று கூறினான் அவன்.
அவர்கள் காதல் கூத்தில்… தர்மசங்கடத்தில் தான் பரசுராம் தம்பதிகள் நின்றிருந்தாலுமே கூட… இளங்கோவின் உரிமையான பேச்சு… பரசுராமின் நெஞ்சை நெகிழ்த்தத் தான் செய்தது. அதில் அவரின் முகமும் கொஞ்சம் மலர்ந்தது.
அந்த நேரம்.. அமைதியை வாடகைக்கு .. மின்னல் வெட்டுவது போல வெட்டும் குரல் இடையிடவே திரும்பி அங்கே நின்றிருந்த பெண்மணியைப் பார்த்தான் அவன். அது அவள் அண்ணி மீனாட்சியே தான்.
“தம்பி.. இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு?” என்று கேட்க, மனைவியில் இருந்து பார்வையைத் திருப்பி பார்த்தவனுக்கோ அந்தப் பெண்மணி யாரென்று புரியவில்லை.
“இது என் அண்ணி..”- அவன் பார்வையின் போக்கை உணர்ந்து.. தானாகவே சொன்னாள் அவள். தான் கையோடு கொண்டு வந்திருந்த பையிலிருந்த.. ரசம் அடங்கிய பாத்திரத்தை எடுத்து.. அங்கிருந்த மேசை மீது வைத்த மீனாட்சி, “தம்பிக்கு என் கையாலே செய்த ரசம் தான் ரொம்ப பிடிக்குமே? அதான் நானே பண்ணி எடுத்து வந்தேன்..”என்று கூறுகையில் அவனுடைய திண்ணிய புருவமொன்றை அழகாக மேலேறியது.
என்ன? இவளது அண்ணி கைப்பக்குவத்தில் ரசம் விரும்பி சாப்பிடும் அளவுக்கு… அவள் குடும்பத்துடன், ஃபிட் ஆகி விட்டேனா? என்ற வியப்பு தான் அது. ஏழு வருட வாழ்க்கையில் இத்தனை மாற்றங்களா? பின்னே அவன் காதலித்த ஆரம்பத்திலிருந்த எதிர்ப்பு அப்படியாயிற்றே?
அதே சமயம் அவனுள்..அவன் தாயைப் பற்றிய சிந்தனை எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. ஆனால் ஏன் தன்னைப் பார்க்க அம்மா வரவில்லை.. ஒரு வேளை பிடிக்காத பெண்ணை காதலித்ததையே ஒப்புக் கொள்ளாதவருக்கு.. இன்னும் சேரப் பிடிக்கவில்லையோ?
ஏழு வருட இந்தத் திருமண வாழ்க்கையில்.. வில்லன் பரசுராமும், அவனது மனைவி குடும்பமும் அவனை ஏற்றுக் கொண்ட போதும் கூட… அவன் தாயார் இன்னும் அவனை ஏற்றுக் கொள்ளவில்லையோ?
ஆனாலும் ஆக்ஸிடெண்ட்டாகி.. மூன்று மாதம் கோமாவில் இருந்து விட்டு வந்த பின்னரும் கூடவா.. அவன் தாயின் மனம் இளகவில்லை? தன் மகள் அனுஷ்யா பிறந்த பின்னருமா.. அவருக்கு தன் மகனையும், மருமகளையும், பேரக்குழந்தையையும் ஏற்க மனம் வரவில்லை? முகம் வாட நின்றிருந்தவனுக்கு… அப்போது தான் தன் முதல் குழந்தையின் ஞாபகம் வந்தது.
அவன் கண்கள் ஆவலுடன் அவளில் பதிந்து அவளையும் மீறி குழந்தையைத் தேடியது. “வேர் இஸ் மை பேபி? .. அனுக்குட்டி வரலை..?”என்று ஆர்வத்துடன் கேட்டான் அவன்.
“இல்லை.. கூட்டிட்டு வரலை.. ஸ்கூல் விட்டு நேரா.. என் அம்மா வீட்டுக்குப் போயிருப்பா இளா…”என்று ஷக்தி கூறிய வேளை, ரசம் போவ்லுடன் திரும்பிய மீனாட்சி, “ரசம் சாப்பிட்றீங்களா தம்பி?” என்ற வண்ணம் ரசத்தை அவன் கைகளில் திணித்தாள்.
ரசத்தின் மணமே.. இதுவரை மூக்கும், நாக்கும் செத்துப் போயிருந்தவனை சுண்டியிழுக்க, ஆழ மூச்சை உள்ளிழுத்து.. ரசத்தின் மணத்தை அனுபவித்துக் கொண்டே, ரசத்தைப் பருகவாரம்பித்தான் அவன்.
மெய்யாகவே, அருமையாகத் தான் இருந்தது மீனாட்சியின் ரசம். “ம்.. நிஜமாவே சூப்பரா தான் இருக்கு.. உங்க ரசத்துக்கு.. இந்த இளங்கோ மயங்கியது தப்பில்லைன்னு தான் தோணுது..”என்று கூற, அண்ணியின் முகத்திலே ஓர் கெத்து சிரிப்பு.
அத்துடன் நில்லாமல்.. கணவனை ஓரக்கண்ணால் போலிச்சீற்றத்துடன் பார்த்துக் கொண்டே, “நீங்க தான் தம்பி.. என் சமையலை முதன் முதல்ல பாராட்டியிருக்கீங்க… இதோ இருக்காரே என் புர்ருஷன் மிஸ்டர். “பர்ரசுர்ராம்”.. இதுவரைக்கும் வாயே திறந்ததில்லை…”என்று அவளுரைத்த “பர்ரசுர்ராம்”கூட.. அவளது வெடுக் வெடுக்கென்ற பேச்சுக்கு இன்னும் சுவாரசியம் சேர்ப்பதாக இருந்தது இளங்கோவிற்கு.
ரசத்தை ரசித்துப் பருகிக் கொண்டு அவன் நடப்பதை வேடிக்கைப் பார்க்க, அண்ணனை தரக்குறைவாக சொன்னதில் கோபம் போனது ஷக்திக்கு. அண்ணனுக்கு பரிந்து பேச நாடி, சற்றே சீற்றம் துளிர்க்கும் குரலில், “இருந்தாலும் உங்க கையாலேயே தானே இன்னைக்கு வரைக்கும்.. என் அண்ணன் சாப்பிடுறாரு.. எனக்கு ஒரு சின்ன அண்ணி செட் பண்ணி.. அவங்க கையாலே ஒண்ணும் சாப்பிடலையே?”என்று தன் அண்ணன் ‘ஏகபத்தினி விரதர்’ என்று சொல்லாமல் சொன்னாள் அவள்.
அதைக் கேட்டு அதிர்ந்து நின்ற மீனாட்சிக்கு.. தன் பெரிய மீசை கணவனுக்கு அப்படியேதேனும் ஆசைகளும் தான் உண்டாகிவிடுமோ என்ற அச்சமும் சட்டென எழுந்தது.
வாயைப் பிளந்த மீனா, “ஆ.. அப்படியெல்லாம் செஞ்சிருவாரா உங்க நொண்ணன்??.. முதல்ல செய்யட்டும்? அப்புறம் இருக்கு.. அடுத்த நிமிஷமே… தம்பி குடிச்சிட்டிருக்க இதே ரசத்தில்.. எலி மருந்தைக் கலந்து.. என் சக்களத்திக்கும், இவருக்கும் கொடுத்துட மாட்டேன்..”என்று கூறி விட்டு, கணவனை முறைப்புடன் பார்த்து.. முகவாயை தோளில் இடித்துக் கொண்ட தினுசில்.. அவையனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டே.. ரசம் அருந்திக் கொண்டிருந்த இளங்கோவிற்கு குபீர் சிரிப்பு எழுந்து.. புரையேறிப் போனது.
இத்தனைக்கும் மனைவியின் பேச்சுக்களை சாதாரணம் போல எடுத்துக் கொண்டு.. ஒரு வகையில் பார்த்தால் ரசித்துக் கொண்டே புன்னகை சிந்திய வண்ணம் நின்றிருந்த பரசுராம்.. இந்த பழைய நினைவுகள் கொண்ட இளங்கோவிற்கு புதிது.
தன் தங்கையை காதலித்ததற்காக ஆள் வைத்து அடக்கிய.. முரட்டு ஆசாமியான பரசுராமை.. அடக்க சரியான ஆள் தான் அவள் அண்ணி என்றே தோன்றியது அவனுக்கு.
அவனுக்கு புரையேறியதும் அவள் தன் மெல்லிய கரங்கள் கொண்டு உள்ளங்கையில் தட்ட, பரசுராமோ, “மாப்பிள்ளை மெதுவா..”என்று பதறித் தான் போனார்.
அதே சமயம் பேசும் மனைவியை நோக்கி, கடிந்து கொள்ளும் குரலில், “ஏய்.. அதான் மாப்பிள்ளை சாப்பிட்டுட்டிருக்காருல? .. எந்த நேரம் எதை பேசணும்னு தெரியாது? முதல்ல வாயை மூடு..”என்றுரைக்க,‘என்னடா இது? .. தான் புரையேறியதற்கு மனைவியிடம் கடிந்து கொண்டது அவரா?’ என்ற ஆச்சரியம் எழுந்தது அவனுக்கு.
அத்தோடு நில்லாமல்.. தன்னையே விழிகள் விரிய ஆச்சரியத்துடன் பார்க்கும் “நீங்க சாப்பிடுங்க மாப்பிள்ளை..”என்று பரிவாகக் கூறியவர், அவனது ஆச்சரியப் பார்வையை சந்திக்க முடியாமல் தர்மசங்கடத்தில் நெளிந்தார் உள்ளே.
அதைக் காட்டிக் கொள்ளவும், அங்கே நின்றிருக்கவும் மனமற்று, தன் மனைவியை நோக்கி, “ அவங்க ரெண்டு பேரும் பேசிட்டிருக்கட்டும்.. வா.. நாம ரெண்டு பேரும் போய் டாக்டரைப் பார்த்து.. எப்போ டிஸ்சார்ஜ் ஆகலாம்னு கேட்டுட்டு வரலாம்..”என்றவராக மனைவியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகரலானார்.
அவ்வறையின் தனிமையில் அவளும், அவனும் என்றானதும், அனைவரும் இருக்கும் போது சில்மிஷப்பார்வைப் பார்த்த கணவனை நோக்கி, “ஏன் இப்படி பண்றீங்க?”என்று மீண்டும் கோபம் கொண்டாள் அவள்.
அவள் கையை மெல்லப் பிடித்து இழுத்து.. தன் பக்கத்திலே அமர வைத்தவன், அவளது முகத்தையே குறுகுறுவென பார்த்துக் கொண்டே இருந்தான். காதலித்த நேரம் இருந்த ஷக்தியை விடவும்.. தாய்மையில் ஊறிய ஷக்தி ரொம்ப அழகியாகத் தெரிந்தாள் அவன் கண்களுக்கு.
அவளது வெண்மையான விரல்களுடன்.. தன் விரல்கள் கோர்த்துப் பிணைத்தான். அவன் கை விரல்களின் மென்மை கூட பித்தாக்கியது அவனை. கைகளை இதழ்களுக்கு எடுத்து வந்து.. முத்தமிட்டவன், அவளது நயனங்களை நோக்கி, “அதான் முன்னாடியே சொல்லிட்டேனே.. என் பொண்டாட்டி நீ.. எனக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்குன்னு.”என்று கூறினான் அவன்.
அவள் முகம் மென்னகை சிந்திக் கொண்டிருந்தாலும்.. அவள் கண்ணோடு யாரோடும் சொல்லாத சோகம் இருப்பது போல இருந்தது அவனுக்கு. அவன் நாடியை ஒற்றைக் கையால் தாங்கி நிமிர்த்தியவன், அவளை நோக்கி, “ஏன் உன் முகம் டல்லா இருக்கு?.. நான் உயிருடன் திரும்ப வந்தது உனக்கு சந்தோஷமா இல்லையா?”என்று கேட்டான்.
அவன் கண்விழிக்க மாட்டானா என்று தானே இத்தனை நாளும் தவமாய் தவமிருந்தாள். “ச்சேச்சே அப்படியில்லை”-அவசரமாக வெளிவந்தது அவள் குரல். அவன் கையொன்று எழுந்து.. அவள் தோளை இறுக்கிப் பற்றி அவனோடு அழுத்தியது.
அருகாமையில் அவன் ரசித்து மகிழ்ந்த நிலா முகம். அவன் மூச்சுக்காற்று.. அவள் கன்னத்தில் பட்டு மோத, “பின்னே எப்படி?.. ஒருவேளை.. என்னடா இவன் நம்மளோட வாழ்ந்த ஏழு வருஷ வாழ்க்கையை மறந்துட்டானேன்னு கவலையா இருக்கா?”என்று கேட்டான்.
அவள் எப்படி சொல்வாள் நடந்தவைகளை? அவள் எப்படி சொல்வாள் ‘வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அப்பா யார்?’என்று இவன் கேட்டதை? மௌனமாக தலை குனிந்த வண்ணமே இருந்தாள் அவள்.
மௌனமே அவனது கேள்விக்கு பதில் அளிப்பதாய் எடுத்துக் கொண்டவன், அவளை மீண்டும் சகஜமாக்க முனைந்தான்.
“விடு.. எல்லாம் சரியாகிடும்.. எனக்கு எதுவுமே ஞாபகமில்லை தான்.. ஆனால் நான் உயிருக்குயிரா நேசிச்ச பொண்ணு என் பொண்டாட்டியா.. என் குழந்தைங்களுக்கு தாயா.. என் பக்கத்தில்.. எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” என்றவன், அவள் மணி வயிற்றில் ஆதரவாக கை வைத்தான்.
அவனது கண்களில் கண்ணீர் துளிர்க்க, குனிந்து அவள் வயிற்றுக்கு முத்தம் வைத்தவன், சற்றே பெருமிதம் தாண்டவமாட, ஹஸ்கி குரலில், “என் குழந்தை.. இது என் குழந்தை ஷக்தி.. இந்த குழந்தைக்கு அப்பா நான்..”என்றான்.
அந்த சொற்களைக் கேட்டதும் மடை திறந்த வெள்ளம் போல அழுகை பீறிட்டோட, அவளுள் காதல் பெருக்கெடுத்தோடியது.
தன் கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொண்டவள், அவன் கன்னத்தை இரு கைகளாலும் மெல்லத் தடவிக் கொடுத்தவள், ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டுப் போயிருந்தாள்.
இத்தனை நாட்களாக எதை அவன் வாயால் கேட்க வேண்டும் போல இருந்ததோ.. அந்த சொற்கள்!!
கண்ணீர் அது பாட்டுக்கு வழிய.. தொண்டைக்குழியில் மூச்சு ஏறி இறங்க, அவள் உள்ளங்கையில் அவன் கன்னத்துத் தாடியின் சொரசொரப்பை அனுபவித்துக் கொண்டே, “ஆமா.. இதுஉ. உ.. உங்க குழந்தை.. இந்தக் குழந்தைக்கு… அப்பா நீங்க தான்.. என்றவளுக்கு.. சந்தோஷ ஆரவாரத்தில் பேச்சு வராமல் போகவே.. அவன் முகத்தை தன்னை நோக்கி இழுத்து.. ஆக்ரோஷத்துடன் முத்தம் வைத்துக் கொண்டே போனாள்.
அந்த நேரம் பார்த்து அறைக்கதவைத் திறந்து கொண்டு “தங்கச்சி..”என்ற வண்ணம் பரசுராம் வர, சட்டென கணவனிடமிருந்து பிரிந்து கொண்டவள்,
கண்களைத் துடைத்துக் கொண்டு தனியாக நின்றாள். மனைவியின் பிரிவில் கோபம் பொங்க, “இவன் வேற.. கரெக்ட்டா நந்தி மாதிரி..” என்று முணுமுணுக்க அவன் கைச்சந்தில் மெல்லாமாக ஓர் அடி அடித்து.. “அது என் அண்ணா..” என்று கண்கள் உருக்கி முறைத்தாள் அவள்.
வந்தவளின் அண்ணனும், அவளிடம், “யம்மா டாக்டர் நாளை காலையில் டிஸ்சார்ஜ் ஆகிக்கலாம்னு சொன்னாரு.. சித்திரைப் புத்தாண்டு வரப்போறதால் ஸ்டாஃப்ஸூக்கு போனஸ் கொடுக்க வேண்டிய விஷயமா நான் போக வேண்டி இருக்கு.. நான் அண்ணியை அழைச்சுட்டு வீட்டுக்கு போய் விட்டுட்டு.. நேரா ஃபேக்டரி கிளம்புறேன்.. வீட்டில் இருந்து உனக்கு வண்டியை அனுப்புறேன்.. நீ அதில் வந்துடு சரியா?”என்றார் அவர்.
“சரிண்ணா..அவசரம்னா நீங்க கிளம்புங்க..”என்று அண்ணனை வழியனுப்பி வைக்கும் முகமாக அவள் சொல்ல, தன் மச்சானை நாடி வந்தவர், அவன் தோளைத் தொட்டு, கரிசனையாக மற்றும் மிருதுவான கண்களுடன், “உடம்பை பார்த்துக்குங்க மாப்பிள்ளை.. நான் கிளம்புறேன்..”என்று கூறிய நேரம்..அவர் முகத்தைப் பாராமல் விட்டத்தை வெறித்துக் கொண்டே.. அவர் தொடுகையில்.. அவனுள் எழுந்த சீற்றத்தில் கை முஷ்டி மடக்கி… மூசு மூசுவென மூச்சு வாங்கிக் கொண்டு நின்றவன் உடல் ஏகத்துக்கும் விறைக்கவாரம்பித்தது.
அதை உணர்ந்தும், உணராதவர் போல புன்னகையுடனேயே அங்கிருந்து அவர் நகர, செல்பவரின் புறமுதுகை வெறித்துப் பார்த்துக் கொண்டே, “என் கையையும், மண்டையையும் உடைச்சு.. இரத்தம் வரும் வரை அடிச்சுட்டு.. இப்போ உடம்பை பார்த்துக்குங்க மாப்பிள்ளைன்னு.. எப்படி உன் அண்ணால சொல்ல முடியுது?”என்று வெறுத்த குரலில் உரைத்தவன், சினம் கண்களில் தீயாக கொழுந்து விட்டெறிய, முழங்கை மடக்கி மெத்தையில் ஒரு குத்து விட்டவனாக, பற்களைக் கடித்துக் கொண்டு “அவ்வன் த்தான் என் க்காதலுக்கு எதிரி!!..”என்றான்.
அவனது காதல் எதிரி புராணத்தைக் கேட்டு திரும்பத் திரும்ப சலித்துப் போனவள், பெருமூச்சு விட்டுக் கொண்டே கணவனை நோக்கி, மென்மையான குரலில், “முதல்ல என் அண்ணனை ‘அவன்.. இவன்’னு பேசுறதை நிறுத்துங்க.. அது அப்போ.. இப்போ அண்ணனுக்கு உங்களைத் தான் ரொம்பப் பிடிக்கும்.. உங்களுக்கும் அப்படித் தான்.. யாருக்கும் தெரியாமல்.. நீங்க அவருக்கு நாட்டுச் சரக்கு எல்லாம் வாங்கி கொடுத்திருக்கீங்க தெரியுமா?” என்று கூறிய மேட்டரைக் கேட்டு அதிர்ந்து போனான் அவன்.
“வாட்?.. நான்.. போய்… நான் டீட்டோட்டலர்டீ.. நான் போய் அவனுக்கு..”என்று ஏதோ கூறவந்தவன், பரசுராமை “அவன்” என்றதில் சுருங்கிக் கொண்ட மனைவியின் செவ்வந்திப் பூ முகத்தைக் கண்டு, பாதியோடு கதையை நிறுத்திக் கொண்டான்.
இம்முறை கொஞ்சம் மரியாதையாகவே அவரை பெயர் சொல்லி அழைத்து, கடிய குரலில், “இதெல்லாம் நம்பும்படியாக இல்லையே? ஒருவேளை.. அவர் பையனுக்கு.. அனுவைக் கட்டி வைக்கும் ஐடியாவோ..?அப்படியெல்லாம் நிலைமை வந்தால்..நம் அனுவை.. பரசுராம் வீட்டுக்கு மருமகளா அனுப்பவே மாட்டேன்… சொல்லிட்டேன்..”என்று கட் என்ட் ஸ்ட்ரைட்டாக கூற… அடக்கவே மாட்டாமல் வாய் விட்டு நகைத்து விட்டாள் அவள். நகைக்கும் மனைவியை.. புரியாமல் பார்த்தான் அவன்.
அவள் நகைத்து முடிக்கும் வரை பொறுமையாகக் காத்திருந்தவனாக, அவளது முத்து மூரல் வரிசைகளையும், அதை மறைத்த அவளது மென்மையான விரல்களையும் ஆசை கமழப் பார்த்திருந்தான் அவன்.
“ஏன் சிரிச்சே?”- அவள் சிரித்து முடித்ததும் கேட்டான் அந்த ஜென்டில்மேன்.
“அப்படியொரு ஐடியாவை அண்ணனுக்கு கொடுத்து.. சம்பந்தி ஆகிக்கலாம்னு முதல்ல சொன்னதே நீங்க தான்..”என்று கூறியதும்.. “எது நானா?” என்றவனாக அதிர்ந்து போனான் அவன்.
அந்தளவுக்கு பரசுராமும், இளங்கோவும் நெருக்கமானவர்களா? அவனது அதிர்ந்த முகத்தை இரசித்துக் கொண்டே, இரு புருவங்களுடன், திரட்சியான அவள் மேலிமைகளும் சேர்ந்து உயர, வெகு வெகு ரம்மியமான முக பாவனையுடன், “ம்.. ஆமா பேபி.. நான் எதுக்கு பொய் சொல்லணும்?”என்று சொன்ன மனைவியை காணக் காண திகட்டவில்லை அவனுக்கு.
பல நாட்கள் கழித்து.. அவள் அருகாமையில்.. அந்த செர்ரிப்பழங்களைத் தாவிக் கடித்து.. பழரசம் அருந்த வேண்டும் போல.. அவ்வாண்மகனின் நாடி, நரம்பெல்லாம் ஓர் ஆசையுடன் கூடிய சிலிர்ப்பு தோன்ற அவளது இதழ்களையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ.
அவளுக்கோ.. அவனது பார்வையில்.. தன் உடலின் உஷ்ணம் ஜிவ்வென்று ஏறுவது புலனாயிற்று.
அவனது கண்களின் வெம்மை இவளையும் தாக்க.. தன் கொண்டானின் பார்வையை சமாளிக்க முடியாமல் அவள் இமைக்குடைகள் தாழ்ந்த நேரம்.. அதுவும் அவன் கண்களுக்கு அழகாய் தோன்றியது.
மெல்ல அவள் முகத்தை நாடி.. தன் முகத்தை கொண்டு சென்றவன்.. அவளது இரு கைச்சந்துகளையும் பற்றி.. தன்னை நோக்கி இழுத்து.. அதரங்கள் நோக்கிக் குனிந்த வேளை, கதவைத் தட்டும் ஒலியும், பின் திறக்கும் ஒலியும் கேட்டது.
‘ப்ம்ச்சு’ என்று சலித்துக் கொண்டவனாக இம்முறையும் தன்னவளை விட்டான் இளங்கோ. அங்கே கதவைத் திறந்து கொண்டு வந்த நபரோ.. அவன் முற்றிலும் எதிர்பார்த்திராத.. யாரென்றே இனங்காண முடியாத நபர்.
அவன் புருவங்கள் உயர்த்தி, ‘யார் இவர்?’ என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையிலே, உள்ளே வந்த நாற்பது வயதினை மதிக்கத்தக்க அவர்,அவன் மேல் ஒரு புன்னகை செலுத்தியவராக, “இப்போ எப்படியிருக்கு மிஸ்டர். இளங்கோ?” என்று கேட்டார் அவர்.
யாரென்று தெரியாவிட்டாலும் அவர் அணிந்திருந்த ஃபுல் ஸ்லீவ் சட்டையும், கறுப்பு நிற பேன்ட்டும் அவரின் ஆடையின் நேர்த்தியை பறைசாற்ற, “ஐ ஏம் ஃபைன்..”என்றான் அமைதியாக.
அவரோ கையோடு கொண்டு வந்திருந்த மலர்ச்செண்டினை அவன் கைகளில் கொடுத்தவர், அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து, சற்றே துக்கம் அனுஷ்டிக்கும் தொனியில், “என்ன பார்க்குறீங்க மிஸ்டர். இளங்கோ.. நான் யாருன்னா?”என்று அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டார் அவர்.
அவன் ஏதும் சொல்லவில்லை திரும்பி தன் மனைவியைப் பார்த்தான். நோயாளியாக மருத்துவமனையில் கிடப்பவன் அல்லவா? அவனைப் பார்க்க தெரிந்தவர்கள், அறிந்தவர்கள், உற்றார், உறவினர்கள்.. நேற்றிலிருந்து வந்த வண்ணமே தான் இருக்கின்றனர்.
பலரை அவனுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் அந்த ஏழு வருட இடைவெளிக்குள் அவனுடன் பழக்கமான பல நபரை.. அவனால் அடையாளங்காண முடியாமல் போனது. அப்போதெல்லாம்.. சின்ன குழந்தை தாயைப் பார்ப்பது போல.. தன் பக்கத்தே நிற்கும் மனைவியை ஒரு பார்வை பார்த்து வைப்பான் அவன்.
அவளும் தன் குழந்தையின் கேள்வியைப் புரிந்த தாயாக, “இது இன்னார்.. இது இன்னாரின் மகன்.. இது இன்னாரின் கஸின்”என்று தெரிந்தவர்களைக் கூறி.. தெரியாதவர்களை அறிமுகப்படுத்தி வைப்பாள்.
தற்போதும் அவன் கண்களில் இருந்த கேள்வியை சொல்லாமலேயே புரிந்து கொண்டவள், “இளா.. இது உங்க பாஸ் இளா… கியூ. டி.டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் எம். டி. மிஸ்டர். ராமமூர்த்தி. ” என்று அறிமுகப்படுத்தி வைத்தாள் அவள்.
அவரை நோக்கி மரியாதையாக மென்னகை சிந்தியவனாக, “ஐ ஏம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி சார்.. ஐ கான்ட் ரிமெம்பர் மை பாஸ்ட் செவன் யர்ஸ்.. ட்யூ டு திஸ் இன்சிடன்ட்” என்று விளக்கம் சொல்லப்போக, “நோ நீட் டு சே சாரி.. உங்கள் சிட்ச்சுவேஷன் என்னான்னு.. மிஸ்டர். ஆனந்த் தெளிவா எடுத்துச் சொன்னாரு..”என்றவர் முகம் அடுத்து பேசும் போது கொஞ்சம் தொங்கிப் போயிருந்தது.
பெருமூச்சு விட்டவராக, “ஆனாலும் நானும் உங்க கிட்ட மன்னிப்புக் கேட்க வேண்டும்.. நானும் உங்கள் வேலை பறிபோகாமல் இருக்க.. என்னாலானதை செய்தேன்.. இருந்தாலும் இது லீகல் இஷ்யூ.. ஐ கான்ட் டூ அனிதிங்க்..மீ டு ரியலி ஸாரி.. சீக்கிரம் குணமாகி வாங்க.. ஒரு நல்லவேலைக்கு நான் ஏற்பாடு பண்றேன்”என்றவர்.. “கெட் வெல் சூன்” என்று மொழிந்து விட்டு வெளியேற, அவன் முகமோ குழம்பிப் போயிருக்க.. இவள் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
அவன் என்ன வேலை பார்த்தான்? அது எதற்கு பறிபோக வேண்டும்? லீகல் இஷ்யூ ஆகுமளவுக்கு இவன் என்ன குழறுபடி செய்து வைத்தான்? என்று புரியவில்லை அவனுக்கு.
அவளுக்கோ.. அவனின் நிலையைக் கருத்தில் கொண்டாவது அவர் வாய் மூடி அமைதியாக இருந்திருக்கக் கூடாதா? என்ற ஆதங்கம் எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.
அந்த நேரம் மனைவியிடம் மேலதிக தகவல் நாடி திரும்பிய நேரம். இம்முறை உள்ளே வந்தான் அவன் நண்பன் ஆனந்த். “டேய் நம்ம பாஸ் உன்னைப் பார்க்கவா வந்துட்டுப் போறாரு? … “இல்லை இல்லை… நம்ம பாஸ் கிடையாதுல? என் பாஸ்.. ஆமா.. இப்போ அவர் எனக்கு தான் பாஸ்.. உனக்கு முன்னாள் பாஸ்..”என்று எதை எதையோ படபடவென அவன் பேசிக் கொண்டே போக, இளங்கோவின் கண்கள் குழப்பத்தில் இன்னும் இன்னும் கொஞ்சம் சுருங்கிக் கொண்டே போனது.
அதேசமயம் பள்ளிப்பருவத்திலிருந்து.. தற்போது வரை கூடவே இருக்கும் நண்பன் ஆனந்தின் படபட பேச்சு மட்டும் இன்னும் மாறவேயில்லை என்று மட்டும் தோன்றியது அவனுக்கு.
அதனால்.. உள்ளே அகம் மலர்ந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் நண்பனைக் கலாய்க்க நாடி, “ஸ்கூல்லேயும், காலேஜ்லேயும் தான் உன் தொல்லைன்னு பார்த்தால்… என் வேலையிலும்.. என் கூட வந்து தொத்திக்கிட்டியா? அப்புறம் எங்கே நான் உருப்படறது? அவர் எனக்கு ஏன்.. முன்னாள் பாஸ் ஆனார்னு.. இப்போ தானே புரியுது?”என்று சொல்லி வைக்க, கணவனின் கேலியுணர்ந்து.. வாய் மூடி கிளுக்கிச் சிரித்தாள் அவள்.
அதற்கு பதிலடியாக ஏதோ சொல்ல வாய் திறந்தவனும் கூட, தன் உடன் பிறவா சகோதரி ஷக்தியின் கிளுக்கிச் சிரிப்பை நீண்ட நாட்களின் பின்பு கண்ட சந்தோஷத்தில் அப்படியே அடங்கிப் போனான்.
நண்பன் அமைதியாக இருப்பதைப் பார்த்த இளங்கோ,சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு “என்னாச்சு மச்சி? அவர் ஏன் லீகல் இஷ்யூ.. அது.. இதுன்னு சொல்லிட்டுப் போறார்?”என்று கேட்டான்.
ஆனந்த் நடந்தது அனைத்தையும் சுருக்கமாக சொல்ல வந்தான். க்யூ. டி. டிஸ்ட்ரிப்யூடர்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம் என்பது இன்றைய சந்தையில் விற்கும் நவீனரக கைப்பேசிகளின் இறக்குமதியினைப் பெற்று.. இலங்கையின் உள்ளூர் சந்தைத் தளங்களில் விற்கும் நிறுவனம்.
சேம்சுங், ஹூவாவேய், எச். டி. சி, லெனோவா, மைக்ரோமேக்ஸ் போன்ற பல வகையான கைப்பேசிகளை இறக்குமதி செய்யும் நிறுவனத்தின், ஹூவாவேய் மோடல் ஃபோனிற்கான, கொழும்பு மாவட்டத்தின் சேல்ஸ் எக்ஸகடிவ் மேனேஜராக இருந்தவன் தான் இளங்கோ.
ஆனந்த்.. சேம்சுங் ஃபோன் பிரிவின் மேனேஜர். அவர்களுக்கு கீழே ஒரு டீம், டார்கெட் அச்சீவ்மென்ட், அச்சீவ்மென்ட் பார்ட்டீஸ் இப்படி ஏராளமான லொட்டு லொஸூக்கு உண்டு. அப்படி அவனுக்கு கீழே வேலை செய்த ஊழியனிடமிருந்து.. க்யூ. டீ. டிஸ்ட்ரிப்யூடர்ஸ்க்கு சேர வேண்டிய பத்து கோடி ரூபாயையும் காணவில்லை. அந்த ஊழியனும் தலைமறைவு.
அதேசமயம்.. அந்த ஊழியன்.. இளங்கோவுடன் நல்ல நண்பனாக பழகியதால்.. வந்திருந்த வியாபார சரக்கில் பத்துகோடி பெறுமதியான சரக்கினை அன்று கைமாற்றும் போது.. அவனது துரதிர்ஷ்டம்!!
எந்தவிதமான அக்ரீமெண்ட்டும் கூட செய்து கொள்ளவில்லை. பிறகு அதைப் பார்க்கலாம் என்றெண்ணி.. ஊழியன் மேலுள்ள நம்பிக்கையில்.. கொடுத்தனுப்பியது.
போனவன் போனவன் தான். அவன் பணத்துக்கும் கோவிந்தா.. கோவிந்தா!! எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல்.. எப்படி அந்த ஊழியனைப் பிடிப்பது.. பழி சுமத்துவது?
மேலிடம் அவனுக்கு மூன்று மாதங்கள் கால அவகாசம் கொடுத்திருந்தது. இருப்பினும் அதற்குள் எதுவுமே செய்ய முடியாமல் போனது. “அப்புறம் என்னாச்சு மச்சி..?” தன் வாழ்வில் என்ன நடந்தது என்று அறியும் சுவாரஸ்யம் அவனுக்கு.
“அந்த மூணு மாசத்துக்கான தவணை முடிஞ்சப்போ தான்… நாலு பாட்டில்.. ஒண்ணு இல்லை.. இரண்டு இல்லை மச்சி.. முழுசா நாலு பாட்டில்… ரம் அடிச்சுட்டு வீட்டுக்குப் போய்.. வீட்டிலேயிருந்து.. நீ உன் வண்டியை எடுத்துட்டு அவசரமா கிளம்ப… இந்த ஆக்ஸிடெண்ட் நடந்தது!” என்று கூற, “வாட்.. நான் ரம் அடிச்சேனே?” என்று கேட்டான் இளா.
“இல்லை.. உன் பொண்டாட்டி தான் அடிச்சா.. நீ குடிச்சுட்டு அந்த பாரில் பண்ண அட்டூழியத்தை.. கண்ணால பார்த்த சாட்சி இருக்கு… பார்க்குறியா?” என்றவன், அவன் கோமாவில் இருந்த போது.. வாட்ஸ்ஆப்பில் வைரலான.. அவன் குடித்து விட்டு.. ஃபோன் வரும்போது பாட்டில் உடைத்த வீடியோவைக் காட்டினான்.
இப்போது தான் தொழில்நுட்ப வசதிகளின் வளர்ச்சியினால்.. எல்லாமே வைரலாகிறதே!
அந்த வீடியோ.. கண்களை இரு முறை கசக்கி விட்டுக் கொண்டே பார்த்தான் அவன். என்ன தான் பத்து கோடி பிரச்சினை வந்தாலும்.. இளங்கோ திறமையான தொழிலாளி. அவனது வியாபார உத்தி கொண்ட லாவகமான மற்றும் கனிவான அணுகுமுறைக்கும் பேச்சுக்கும், கொழும்பின் சந்தைத் தளத்தில் மவுசு அதிகம்.
சரக்கு போட வந்திருப்பது “இளங்கோவின் டீம்”என்றால் சேம்பிள் என்று எதுவுமே பார்க்காமல் வாங்கிக் கொள்வதுண்டு கடையின் வாடிக்கையாளர்கள்.
மற்ற டீமில் உள்ள தவறு செய்யும் உறுப்பினர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்பதற்காக.. அந்த டீமின் உறுப்பினர்களை.. மற்ற மற்ற ஃபோன் ப்ரான்சஸிற்கு டிரான்ஸ்பர் செய்தார் ராம மூர்த்தி.
இதனால் ஹூவாவேய்யிற்கு புதிய மேனேஜரும், புதிய ஊழியர்களும் வரவே.. அவர்கள் மத்தியில் கஸ்டமர்-செல்லர் ரிலேஷன்ஷிப் வளர.. சிறிது காலம் தேவைப்பட்டது.
அதே நேரம்.. ஊழியர்கள் முதலாம் திகதியானால், கடைக்காரர்களிடமிருந்து வசூல் செய்ய.. இறுக்கமான தன்மையை வேறு பிரயோகிக்க.. கடைக்காரர்களுக்கு அது பிடிக்காது போகவே.. “இளங்கோ டீம் இல்லையாப்பா? அப்போ வேணாம்.. நாங்க வேற ஆன்ட்ராய்டு ட்ரை பண்றோம்”என்று வெளிப்படையாகவே சொல்லவாரம்பித்தனர்.
ஒரு சில கடைக்காரர்கள்.. இளங்கோ நிலை கேள்விபட்டு.. ஹாஸ்பிடல் வரை வந்து பார்த்துப் போனதுமுண்டு. அந்தளவுக்கு இளங்கோ தொழில் வித்தையால் ஆள் மயக்கும் திறனை.. உள்ளங்கையில் வைத்திருந்தான் எனலாம்.
அவனில்லாத இந்த மூன்று மாதங்கள்.. கொழும்பு நகர ஹூவாவேயின் விற்பனை சரிவுப்பாதையை நோக்கியது. அதனால் தான் ராமமூர்த்தியும்.. மீண்டும் அவனை தன் கம்பெனிக்கு இழுத்துப் போட்டுக் கொள்ளும் சாக்கில், “சீக்கிரமே ஒரு நல்ல வேலைக்கு ஏற்பாடு பண்ணுறேன்”என்று கூறிச் சென்றதே!
ஆனால் ஹூவாவேவை வைத்து அவன் முன்னேறியது என்னவோ உண்மை.இந்த ஏழு வருடத்தில் சொந்தமாக வீடு வாங்கினான். பைக் வைத்திருந்தவன் கார் வாங்கினான். பெண்டாட்டியையும், குழந்தையையும் தங்கத்தில் குளிக்க வைத்தான். கொழும்புக்கு வெளியே ஒதுக்குப்புறமாக உள்ள பகுதியில் வருங்கால தேவை கருதி.. காணியும் வாங்கிப் போட்டான்.
எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்ல.. அத்தனையையும் மலைப்புடன் கேட்டுக் கொண்டே வந்தான் இளங்கோ. காலேஜில் இரண்டை சட்டை பட்டனைத் திறந்து.. தன் மார்பினை வெளிக்காட்டிக் கொண்டு, அங்குமிங்கும் சுற்றி வந்த அடாவடி இளங்கோ…
ஏழு வருஷத்தில் சொந்தமாக கார், வீடு, நகைநட்டு என்று வாங்கும் நிலைக்கு வந்தானா? ஆமாம். காலேஜில் அடாவடியாக சுற்றிக் கொண்டிருந்த நேரம்.. அவன் நிழலின் கீழ் பெண்ணிருக்கவில்லை. ஆனால் திருமணத்தின் பின் அவன் பொறுப்பின் கீழ் அவனது ஷக்தி. நிஜமாகவே அவனது சக்தி!!
அடுத்த வருஷமே ஒரு பெண்குழந்தை!! அவன் உழைக்கும் வேகம் குடும்பத்துக்காவே கூடியது.
“அப்புறம் என்னாச்சு மச்சி?”என்று அவன் ஈகராக கேட்க, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து, மீனாட்சி அண்ணி கொண்டு வந்த.. மேசை மீதிருந்த.. மிச்சமிருந்த ரசத்தை எட்டி வைத்தவன், ஒரே கல்ப்பில் அடித்தான்.
அதைக் கண்டு இளாவோ, “டேய் அது பேஷன்ட்.. எனக்காக கொண்டு வந்ததுடா?” என்றான். ஆனந்த்தோ அதைக் கேட்டவன் போலவே காட்டிக் கொள்ளவில்லை. நண்பனை சட்டை செய்தவன், ஷக்தியை நோக்கி, “தங்கச்சி.. இரு” என்றவன் மீண்டும் ஒரு சிப் அடித்து விட்டு, உதட்டை நாக்கைச் சுழற்றி ஈரப்படுத்தி, நாக்கை சப்புக் கொட்டியவனாக, “இது மீனாட்சி அண்ணி ரசமா?”என்று கேட்டான்.
அவள் மௌனமாக தலையாட்டி வைக்க, “அதான் நானும் பார்த்தேன்… பையன் எனக்கு பங்கு தராமல்.. பேஷன்ட்.. அது.. இதுன்னு சொல்றானேன்னு..”என்றான்.
அனைத்தையும் இறுதி சொட்டு விடாமல் மண்டி விட்டு, ரசத்தின் காரம் தொண்டையை அடைக்க, குரலையும் கனைத்துக் கொண்டு நண்பனைப் பார்த்த ஆனந்த், “ம்.. க்க்ஹ்ம்.. மச்சி.. பேஷன்டை விட.. பேஷன்டை பார்க்குறவங்க தான் தெம்பா இருக்கணும்..” என்றான்.
அத்தோடு நில்லாமல் நாற்காலியை விட்டு சற்றே எழுந்து.. பாஸ் வைத்து விட்டுப் போன பொக்கேவை சுற்றிலும் கண்களை ஓட விட்டவன், “மச்சி.. அந்த ஆளு வெறும் பொக்கே மட்டுமா கொணர்ந்தாரு?.. கூட Bப்ரூட்ஸ் ஏதும் கொண்டாரலை?”என்று வேண்டுமென்றே ப்ரூட்ஸ் என உச்சரித்தவன்,
“சரியான கஞ்ஜூஸ்டா அவரு.. வந்தது மெர்சிடிஸ் பென்ஸில்… ஆனால் ஒரு ஆப்பிள் கூட வாங்கியாரலை!”என்று கூற, இந்த தடவை கொஞ்சம் கடுப்பான இளா அவனை அடிப்பதற்கு சுற்றுமுற்றும் ஏதாவது அகப்படுகிறதா என்று தேடியவன்.. ஒன்றும் கிடைக்காமல் போகவே, பொக்கேயில் இருந்து ஒரு ரோஸ் நிற ரோஜா மலரைக் காம்பின்றி பிய்த்து.. விட்டெறிந்தான் ஆனந்த் மேல்.
அதை லாவகமாக பிடித்துக் கொண்ட ஆனந்த், “டேய்.. என் மேல உனக்கு ஃபீலிங்க்ஸ் இருக்கலாம்.. அதுக்காக சிஸ்டர் முன்னாடி.. இது தப்புடா” என்று கூறியதும்… வாய் விட்டே நகைத்து விட்டாள்.
மனைவியின் நகைப்பிலும், நண்பனின் மொக்கை ஜோக்கிலும் காண்டானவன், இம்முறை.. அந்த பொக்கேவையே விட்டெறியலானான். அந்த அதிரடியில் இருந்து லாவகமாக தப்பி.. அதையும் கேட்ச் பிடித்துக் கொண்டான் ஆனந்த்.
அவனை நோக்கி, “மச்சி ப்ளீஸ்.. என் அவஸ்தை தெரியாமல்.. காமெடின்ற பேரில் மொக்க போட்டுட்டிருக்க.. அப்புறம் என்னாச்சு? பத்து கோடிக்காக ஷூவரா ராமமூர்த்தி கோர்ட்ல.. என் மேல்.. கேஸ் ஃபைல் பண்ணியிருப்பாரு.. அவராக என் மேல வழக்கு பதிவு பண்ண இஷ்டப்படலைன்னாலும்.. மத்த ஷேர் ஹோல்டர்ஸ்.. அவருக்கு ப்ரஷர் கொடுத்திருப்பாங்க.. அதனாலே அது தான் நடந்திருக்கும்.. அப்புறம் என்னாச்சு மச்சி.. சொல்லு? நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச வீடு, கார், இடம், எல்லாம் திவாலாகி போச்சா?” என்று தவிப்புடன் கேட்டான் அவன். அதற்கு அவன் நண்பன் அளித்த பதிலைக் கேட்டு வியந்து நின்றான் அவன்.
“உன் மச்சான் தான்.. அந்த பத்து கோடியையும் கட்டி.. உன் வீடு.. தங்கச்சி நகை.., வண்டி எல்லாம் கோர்ட் எடுத்துக்காமல் காப்பாத்தினாரு..” என்று கூற,
சாய்ந்தமர்ந்திருந்தவன் அவனை அறியாமலேயே துள்ளி எழுந்து,முன்னாடி சாய்ந்து, விழியகல, “யாரு பரசுராமா?”என்று கேட்டான். ஆனால் அதற்கு ஆனந்த் விடை சொல்லவில்லை. அமைதியாகவே அமர்ந்திருந்தான்.
“உன் மச்சான்” அப்படியென்றால் அந்த பரசுராமாக அன்றி யாராகத் தான் இருக்கக் கூடும்? பரசுராம்.. இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் உள்ள சிற்றூரில் இருந்த.. ஒரு மஞ்சப்பையும், சில துணிமணிகளுடன் கொழும்பு வந்தவர் தான் அவர். தன் பதின்ம வயதில் நடைபாதையில்.. ஊரிலிருந்து கொணர்ந்த சொற்ப காசை வைத்து துணிக்கடை போட்டவர் தான்.
அப்புறம் வாடகைக்கு அறை வாங்கி துணிக்கடை திறந்தவர்.. இன்று இலங்கை முழுவதும் பல ஆடை காட்சியகங்களுக்கு சொந்தக்காரர். அவர் வாழ்க்கையின் கஷ்டம் அறிந்தவரானாலும், பதினாறு வருடங்கள் கழித்துப் பிறந்த தங்கையை எந்தவிதமான கஷ்டத்தையும் இன்றளவும் கூட அனுபவிக்க விட்டதில்லை.
உச்சத்துக்கு போனாலும்.. அவரைப் பார்த்தால் எளிமையானவராகவே தோன்றும். ஆங்கிலம் பேசத்தெரியாத நுண்ணறிவாளி! அப்படிப்பட்டவருக்கு… தங்கை ‘அப்பர் மிடில் கிளாஸ்’ பையனை காதலிக்கிறான் என்றதும் ஆத்திரம். தான் பார்த்த பணக்கார மாப்பிள்ளை தங்கை மறுத்ததில் கோபம்!
அந்த கோபம் எல்லா பெற்றோருக்குமோ, அண்ணன்களுக்குமோ ஞாயமானது தான்! ஷக்தியை மணக்க அவள் மனத்தின் சக்தியை மட்டுமே வேண்டி நின்றான் அவன். அவளின் பணச்சக்தியை எதிர்பார்க்கவில்லை அவன்.
அதை அறிந்த பின்னும் உழைப்பால் உயர்ந்த பரசுராமுக்கு.. தன் மச்சானுக்கு உதவாமல் இருக்கவும் முடியுமோ? எதிரியாக கருதிய பரசுராமன் உதவியிருக்கிறார் என்ற ஆச்சரியம் ஒருபுறம் இருந்தாலும் கூட, அவராக உதவாமல்.. தன் மனைவி போய் ஏதாவது உதவி கேட்டிருப்பாளோ? என்ற சந்தேகம் எழுந்தது அவனுள். கணவன் தன் முகத்தை நாடி திரும்ப தலையசைக்கும் போதே.. அவனது கேள்வியை ஊகித்துக் கொண்டாள் அவள்.
“என்னைப் பத்தி உங்களுக்கு தெரியாததா இளா? நான் எந்த உதவியும் அண்ணா கிட்ட கேட்கலை.. நீங்க அதை விரும்ப மாட்டீங்கன்னும் தெரியும்.. அவராகவே வந்து ஹெல்ப் பண்ணாரு?”என்று கலக்கத்துடன் கூறினாள்.
மனைவியின் சின்ன முகக்கலக்கம் கூட தாங்கவில்லை அவனுக்கு. அவன் முகமும் கொஞ்சம் சோர்ந்து போக, மஞ்சத்திலிருந்த மனைவியின் கைகளை மெல்ல பற்றி, “உன்னைப் பத்தி எனக்குத் தெரியும் ஷக்தி” என்றான் இதமாக.
பின்பு நண்பனை நோக்கி, குழப்பத்துடன், “ஆனால் அவருக்குத் தான் என்னைப் பிடிக்காதே மச்சி.. அவர் எதுக்கு.. எனக்கு ஹெல்ப்..” என்றவன் கூற்றை முழுமையாக முடிக்கவுமில்லை.
அதற்குள் இடையிட்ட ஆனந்த்..ஷக்தி சொன்னதையே தான் சொன்னான், “அது அப்போ.. அனு பிறந்த ஒரு வருஷத்தில் உன் லைஃபே மாறிடுச்சி.. ஷக்தி வீட்டில் அவளை ஏத்துக்கிட்டாங்க…”என்றான் அவன்.
அதற்கு தோதாக இவளும், கணவன் கண்களுடன் தன் கண்கள் கலக்க விட்டு, மெல்ல நகைத்து, “பரசுராமுக்கு அவர் பொண்டாட்டியை விட.. அவர் மச்சானை தான் ரொம்பப் பிடிக்கும்.” என்றாள்.
அத்தியாயம் -4

அன்றிரவு.. பரசுராமரின் இல்லத்தில்…
அறையின் லேம்ப் லைட் வெளிச்சத்தில்.. மிதமான ஏசி காற்றில், சோர்ந்து போய் உறங்கும் தன் குழந்தை செல்வத்தையே பார்த்திருந்தவனுக்கு.. யோசனையோ வேறெங்கோ இருந்தது.
என்ன தான் அவனுக்கு அம்னீசியாவாக இருந்த போதிலும், பழையது மறந்து மச்சான் பரசுராமனுடன் சமரசமாகி விட்டதாக மனைவி சொன்ன போதும் இளாவின் மனமோ அதை ஏற்றுக் கொள்ள முரண்டு பிடித்துக் கொண்டு தானிருந்தது.
அங்கணம்.. தான் இரவில் குட்டிக்குளியலொன்றை போட்டு விட்டு.. பாத்ரூம் கதவைத் திறந்து கொண்டு வந்த மனைவியின் சோப்பு வாசனையில் அவன் சிந்தனை மெல்லக் களையவே.. அவன் தன் தலையை உயர்த்தி தன் மனையாளை நோக்கினான்.
இதுவரை தீவிர பாவத்தைக் காட்டிய அவன் கண்கள், ஷக்தியைக் கண்டதும் மெல்ல மெல்ல இளகல் பாவத்தைக் காட்டத் தொடங்கியது.கண்ணிமைகளிலும், காதோரத்தின் கன்னத்து முடிகளிலும் நீர் வழிந்தோடிச் செல்ல..நைட்டிக்கு மேலாக வயிறு புடைத்துத் தெரிய, ஃப்ரஷ்ஷாக வெளியே வந்தவளுக்கோ… கணவனின் பார்வை ஏதோ செய்தது.
அவனிருந்த அறை முழுவதும் இருட்டு. அனுவிற்காக மட்டுமென சின்ன லேம்ப்பொன்று ட்ராயர் மேல் ஒளிர்ந்து கொண்டிருக்கையிலே, பாத்ரூமின் மின்விளக்கு ஒளி.. தான் அணிந்திருந்த சீ த்ரு நைட்டியின் உள்ளே அடைக்கலமாகியிருந்த மனைவியின் அங்க லாவண்யங்களை.. அப்பட்டமாக எடுத்துக்காட்டவே.. ஒரு அப்சரஸ் தான் தன்னெதிரெ நின்றதெனக் கொண்டான் இளங்கோ.
என்ன தான் ஏழு வருடங்கள் அவளுடன் இன்பமயமான இல்லறத்தையும், தாம்பத்தியத்தையும் சுகித்திருந்த போதும் கூட.. அன்று அந்நொடி.. அனைத்தையும் மறந்திருப்பவனுக்கு காதல் புதிது. காதலின் இமைகொட்டா பார்வை புதிது..அதிலும் கிறக்கம் தரும் அவளது பெண்மை, அண்மை, மென்மை எல்லாம் புதிதிலும் புதிது.
இளங்கோவின் ஷக்தி.. மெல்ல நடந்து வந்து.. அனுவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். தன் மதலையின் களைந்த கார் குழல் கோதி, காற்றுக்கு இரகசியம் சொல்லும் குரலில், “இன்னைக்கு பூரா.. அண்ணனுடைய சின்ன பையன்.. விக்கியுடன்.. ஓடியாடி விளையாடிட்டு எப்படி.. டயர்டா தூங்குறா பாருங்களேன்”என்றாள்.
அவன் ஏதும் பேசவில்லை.. மனைவியின் சிவந்த அதரங்களையும், கழுத்தின் ஆரம்பத்தில் நின்றிருந்த ஓர் நீர்த்துளியொன்று.. சர்ரென்று வழிந்து.. அவளுடைய மார்புப் பள்ளத்தாக்கின் இடையிலேயே ஓடி மறைந்ததை பின்தொடர்ந்தன அவன் கண்கள். மனைவியை தழுவத் துடிக்கும் தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டவன்,
தலை திருப்பி பெருமூச்சு விட்ட வண்ணமே, அண்ணாந்து சீலிங்கை நோக்கினான். கணவனின் பெருமூச்சும், ஆசைத் தெளித்த கண்களில் ஓர் நிராசையையும் கண்ட ஷக்திக்கு அவன் தலை திருப்பல் கவலையையே தந்தது. உரிமையுடன் கணவனின் மார்பில் தலை சாய்த்துக் கொண்டவள், அவனது திண்ணென்ற வயிற்றை கையால் அணைத்துக் கொண்டாள்.
அவனோ.. மனைவியின் நெருக்கத்தில் உள்ளே இளகிக் கொண்டிருந்தாலும், அவள் அணைப்புக்கு மறு அணைப்பு கொடுக்காமலேயே வாளாவிருந்தான்.
இவளோ மெல்ல வாய் திறந்து கேட்டாள், “ஏன்.. என் பேபி.. இப்போ உம்முன்னு இருக்கீங்க?” என்று. “பேபி.. என் மேலே கோபமா?”- அவள் அழைப்பில் தாய்மை ரசம் சொட்டியது.
காதலின் தலைவி.. இளைந்த குரல்.. அவனை இளக்கவே, விட்டத்தைப் பார்த்த வண்ணம், சற்றே கறாரான குரலில், “நீ கம்ப்பல் பண்ணதால் தான்… உன் அண்ணன் வீட்டுக்கு வந்தேன்.. இல்லைன்னா வந்திருக்கவே மாட்டேன்..”என்றவன், அவள் முகம் பார்த்தான்.
“புரிஞ்சுக்கடீ.. என்ன தான் உன் அண்ணனுக்கும், எனக்கும் இடையில் இருக்கும் சண்டை மறந்து .. நாங்க ரெண்டு பேரும் மச்சான்- மாப்பிள்ளைன்னு உறவு கொண்டாடினாலும் என்னாலே அவர் வீட்டில் இருக்க முடியலைடீ..!!” என்று அவஸ்தையுடன் சொன்னான் அவன்.
ஹாஸ்பிட்டலிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகும் போதே, அவன், அவர்கள் வீட்டுக்குப் போகலாம் என்ற போது.. ஒரே பிடியாக நின்று.. அவனை பரசுராம் வீட்டுக்கு அழைத்து வந்ததே அவள் தான்.
ஆனால் அதுவே தான் கணவனின் முகச் சுணக்கத்திற்கு காரணமாகும் என்பது தெரியவில்லை அவளுக்கு. கணவனின் முகத்தை அண்ணாந்து பார்த்தவள், யாருக்கும் டிஸ்டர்ப்பில்லாத மென்மையான குரலில், “உங்க நிலைமை புரியுது இளா.. இருந்தாலும் இந்த நிலைமையில்…”என்று ஏதோ சொல்ல வருகையில் இடையிட்டான் அவன்.
“என்ன பெருசா இந்த நிலைமையில்..? உங்க அண்ணன் அந்த பத்து கோடி ரூபாயையும் கடனாகக் கூட வேண்டாம்னு சொன்னாலும், என்னால் அப்படியே விட்டுட முடியாது!!.. அப்படியிருக்கும் போது.. அவர் வீட்டில் இருக்குறது எனக்கு.. அவரை அண்டி பிழைக்குறது போல இருக்கு…”என்று கூறிக் கொண்டே போக, கண்களில் சிறிய கவலை வந்து குடி கொள்ள, “தெரியும் இளா.. உங்க மனநிலையை என்னாலே புரிஞ்சிக்க முடியுது..”என்று மீண்டும் அதையே சொல்லி.. மேற்கொண்டு தொடரவிட்ட போது.. அப்போதும் அவளை முழுமையாக சொல்ல விடவில்லை அவன்.
அவளை அள்ளி அணைத்துக் கொண்டது அவனது நரம்போடிய மாநிறக் கைகள்..
அவனோ, அவள் உச்சந்தலையின் சுகந்தத்தை முகர்ந்து கொண்டே, “புரிஞ்சுக்க முடியுதுல? இன்னைக்கு மதியம்.. என்னால ஒரு சோற்றுக் கவளம் கூட நிம்மதியா சாப்பிட முடியலை…ம்மூட்டைத் தூக்கி சம்பாதிச்சாவது உன்னை நான் காப்பாத்துறேன்.. நாளைக்கு காலையில் அனுவுடன் நீ ரெடியாகியிரு.. நம்ம வீட்டுக்குக் கிளம்பலாம்..” என்றதும்.. இதுவரை மலர்ந்திருந்த அவள் முகம் சட்டென சுருங்கியது.
அவள் வீடு!! அதன் தனிமை!! அந்த சூழல்!! மூன்றுமே அவளுக்கு அச்சத்தையே தருவித்தது. பொல்லாத நினைவுகள் வந்து நெஞ்சை முட்டி விட்டு சென்றது ஒரு கணம்.
பின்னே… கணவன் விபத்தில் சிக்கியதும்.. அண்ணன் வீட்டை தஞ்சமடைந்தது கூட.. அந்த பொல்லாத நினைவுகளில் இருந்து தப்பிக்கத் தானே? வீட்டுக்குப் போகலாம் என்றதும்.. அவள் முகம் சுருங்கியது,முதற்கொண்டு.. அவள் வயிற்றைத் தடவிக் கொடுத்தது வரை.. ஒன்று விடாமல் ஆராய்ந்தவன்,
“என்ன நம்ம வீட்டுக்குப் போறது உனக்குப் பிடிக்கலையோ? அங்கே போய் சோற்றுக்கு என்ன வழி செய்றதுன்னு யோசிக்குறியா?”என்று கேட்டான்.
“இல்லை.. அப்படியெல்லாம் இல்லை …நீங்க இருக்கும் இடம் தான்.. எனக்கு அயோத்தி..”என்றாள் இளங்கோவின் ஷக்தி. அந்த பதிலில்.. இளங்கோவின் முகம் சட்டென மலர்ந்தது. தாய்மை வரம் ஏந்தி நிற்கும் தன் தலைவியின் காதலில்.. அவன் உள்ளம் கனிந்தது.
அந்த இரவில்.. தனக்கு புறமுதுகிட்டுப் படுத்த.. மனைவியின் முகதுகை வெறித்துக் கொண்டே உறங்கியவனுக்கு… விடிகாலை வரையிலும் கூட தூக்கம் போகவேயில்லை.
தூக்கத்தில் எதேச்சையாக திரும்பிய ஷக்தியின் மதிமுகம்.. அவனது திடகாத்திரமான நெஞ்சாங்கூட்டுக்குள் புகுந்து அவனை கட்டியணைக்கவுமே… அதற்காகத் தான் காத்திருந்தாற் போன்று.. அவனைத் தன்னோடு தழுவிக் கொண்டது நித்திரை.
அடுத்த நாள் காலை…
இளங்கோவோ.. வீட்டுக்கு செல்லும் பரபரப்பில்.. அவளது லக்கேஜ்களையும், அனுவின் கூடைகளையும் எடுத்து.. காரின் டிக்கியில் ஏற்றிக் கொண்டிருந்தான் மும்முரமாக. போர்ட்டிகோவின் முன்.. அண்ணி மீனாட்சியின் கைகளை.. கண்களில் கண்ணீர்த்துளி ஓட பற்றிக் கொண்டாள் ஷக்தி.
“அப்போ நாங்க கிளம்புறோம் அண்ணி..”என்றவளுக்கு.. அதற்கு மேலும் முடியாமல் முகம் சோர்ந்து.. நா தழுதழுக்கவாரம்பித்தது. கணவன் தன்னுடன் இல்லாத மூன்று மாதங்களிலும்.. அவளுக்கு அடைக்கலம் தந்தவள் மீனாட்சி. கணவன் துணையற்று நிராதரவாக நின்ற பெண்ணவள்.. அவளுக்கு சோறு போட்டவள் மீனாட்சி..
அந்த நன்றிக்கு கைம்மாறு தான் ஏது? இளைய நாத்தனாரின் சோர்ந்த முகத்தைக் கண்டு, மனம் வாடவே, இளங்கோவிடம் தான் பேசிப் பார்க்க நாட்டம் கொண்ட மீனாட்சி,
“என்ன தம்பி.. இப்போ தான் ஹாஸ்பிட்டலில் இருந்து குணமாகி வந்திருக்கீங்க.. இப்போ போய் அந்த வீட்டுக்கு போகணும்னு என்ன அவசியம்?கொஞ்ச நாள்.. நம்ம கூட..”என்று உரைத்த வேளை இடையிட்டது ஒரு கம்பீரக் குரல்.அது பரசுராமரின் குரல்!!
பரசுராமின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்த தங்கை மகள் அனுவிடம் வந்த இளங்கோ, அனுவுக்காக கை நீட்ட, சிரித்துக் கொண்டே தந்தையிடம் பாய்ந்து.. அவன் கன்னத்தில் முத்தமிட்டது குழந்தை.
அதில் குஷியாகிப் போன ஆறடி உயர குழந்தையையும், தங்கையின் குழந்தையையும் வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருந்த பரசுராம், “மீனா.. விடு.. அதான் மாப்பிள்ளையே போகலாம்னு முடிவு பண்ணிட்டாருல்ல?” என்றார் தன் கைகளை பின்னே கட்டிக் கொண்டு.. நெஞ்சு நிமிர்த்தி.
அதற்கு பிறகு மீனாவும் கெஞ்சவில்லை. பரசுராமரும் அதைப் பற்றி தன் கருத்தை சொல்லவுமில்லை. அவளது அண்ணனது வீட்டை விட்டு புறப்படும் படலம் அந்நொடி ஆரம்பமானது ஷக்திக்கு.
மருமகன் பூரண குணமாகி வந்ததும்.. நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு வருவதாக நேர்ந்து கொண்ட அவளது தாயார்.. யாழ்ப்பாணம் சென்றிருக்க.. செல்லிலேயே வீட்டை விட்டு கிளம்பும் கதையை சொன்னாள் ஷக்தி.
அவரும் அரை மனதுடன் விடை கொடுக்கவே..தன்னை விட பதினாறு வருடங்கள் பெரியவரான, தன் தந்தைக்கு நிகரான அண்ணனின் காலைத் தொட்டு ஆசி பெற்றவளாக, “நான் கிளம்புறேன்னா.. அவரில்லாத நாட்களில்.. எனக்கு ஒரு தாயுமானவராக இருந்து.. என்னையும், என் குழந்தையும்… பார்த்துக்கிட்டதுக்கு..என்ன கைமாறு செய்யப்.. ”என்று உணர்ச்சி வசப்பட்டு கூறிக் கொண்டிருந்தவளின் கண்களையே உற்று நோக்கியவர், “நான் உன் அண்ணன்மா…!!” என்று ஒற்றை வார்த்தை மட்டும் சொல்லி அடக்கினார் அவர்.
அவர் சொன்னதே.. குறுகிய வார்த்தைகளாக இருக்கலாம்.. ஆனால் “அண்ணன்” என்ற உறவுமுறைக்கு.. அவர் வைத்திருந்த பதவுரையின் கனம் அதிகம்!! அங்கிருந்து விடை பெற்றாள் அவள். போவதற்கு முன் அவன் கண்களும், அவர் கண்களும் ஒன்றாக நோக்கிக் கொண்டன.
‘போயே ஆகணுமா மாப்பிள்ளை?’- வாய் கேட்க மறுத்ததை.. இயல்பை மீறிக் கேட்டது அவரின் கண்கள்! அவன் கண்களோ.. ஒரு தரம் மூடித் திறந்தன. ஒரு கரத்தில் குழந்தையை ஏந்திக் கொண்டு, மறுகரத்தில் மனைவியின் இடையை சுற்றி வளைத்துக் கொண்டு… பக்கா ஸ்மார்ட்டாக நின்றிருந்தவன், “போயிட்டு வரேன் “மச்சான்” என்றுரைக்க, அதில் அவன் மனைவியும் சரி, மீனாட்சியும் சரி.. பரசுராமரும் சரி.. சட்டென தலை உயர்த்தி அவனைப் பார்க்கவே செய்தனர்.
பரசுராமர்.. தன் முரட்டு மீசை சூழ்ந்த அதரங்கள் திறந்து, பளீரென வெண்பற்கள் காட்டி நகைத்தார். தன் வாழ்வின் கடினமான கசப்புப் பக்கங்களை எண்ணி உருகாத இரும்பு மனிதர், “மச்சான்”எனும் சிறு அழைப்புக்கு உருகிப் போனார்.
“சரிங்க மாப்பிள்ளை” என்றவர் அத்தோடு நிற்காமல்.. அவன் ஏறுவதற்கு காரின் கதவுகளை திறந்து விடவும் செய்தார்.
காரில் அவனுடன் ஒன்றாக பயணித்த நேரம்.. அவன் குழந்தையுடன் கொஞ்சிய வண்ணம் குதூகலமாகவே வர.. இவள் தான் சோபையிழந்து போன முகத்துடன் வர நேரிட்டது.
இதோ வந்தது அவர்களின் இல்லம்!! அவளும், அவனும் சேர்ந்து வாழ்வதற்காக அவன் கட்டிய கனவு இல்லம்!
எதுவுமே அவன் ஞாபகத்தில் இல்லை தான். இருப்பினும் அவன் முகத்தில் சந்தோஷமும், இறுமாப்பும் தெள்ளத் தெளிவாக விளங்குவதைக் கண்டாள் அவள். மூன்று மாதங்களாக பூட்டிக்கிடந்த வீட்டினை சுத்தப்படுத்தவும், கழுவவும் தேவை இருக்கவேயில்லை. எல்லாம் நீட்டாகவே இருந்தது. அனைத்தும் அவள் அண்ணனின் பரசுராமரின் உபயம்!!
அவர்கள் வந்த சிறிது நேரத்தில் எல்லாம் சமையல்காரம்மாளும், பரசுராமனின் உத்தரவுக்கு இணங்க வந்து விட… குழந்தையை சமையல்காரம்மாளிடம் ஒப்படைத்து விட்டு.. வீட்டை புதிதாகப் பார்ப்பவன் போல கண்களில் உற்சாகத்துடன் சுற்றி வந்தான் இளங்கோ.
பரசுராமரின் வீட்டில் இருக்கப் பிடிக்காதவனுக்கு.. அவன் இருந்த சூழ்நிலையில் அவர் நல்கிய உதவிகளைத் தானும் மறுக்க முடியவில்லை. அதனாலேயே ஒன்றும் பேசாமல் சமையல்காரம்மாளை ஏற்றுக் கொண்டான்.
முதன் முறையாக இந்த வீட்டைக் கட்டி, குடிபுகுந்த போது..அவளை அழைத்து வந்து.. ஒவ்வொரு இடமாகக் காட்டிக் காட்டி, “ இது தான் ஹால், இது கிச்சன்.. இது நம்ம ரூம்.. ரொம்ப பெருசா.. இருக்குல? இன்னைக்கு நய்ட்.. இங்கே தான் கச்சேரி” என்று காதில் இரகசியம் பேசிய கணவன்.. அவளைப் பின்னிருந்து அணைத்து, அவள் ஷோல்டரில் நாடி பதித்து உரைத்தவனின் ஞாபகம் வந்தது அவளுக்கு.
அதே சமயம்.. சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பு.. இந்த வீட்டில் இருக்கும் பொருட்களையும், கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி, ‘உன் வயிற்றில் வளர்ற இந்தக் குழந்தைக்கு அப்பா ய்யாரு?’ என்று கேட்ட.. இளங்கோவின் ரௌத்திர முகம் மின்னலென வந்து போக, உடல் விறைக்கவாரம்பித்தது அவளுக்கு. அவனுடன் வீட்டை சுற்றிப் பார்க்க செல்லாமல்.. தன்னறையில் அடைக்கலமானாள் அவள்.
வீடு முழுவதும் சுற்றிப் பார்த்து விட்டு, தன்னறைக்கு வந்தவனின் முகத்தில், ஏழுமலையானின் தரிசனத்தை அனுபவித்தாற் போன்று திருப்தி படர்ந்திருந்தது. அவள் மனைவியோ, வந்ததும் தனது சேலையைக் களைந்து விட்டு.. முழங்கால் வரை அளவுள்ள.. சாதாரண கவுனொன்றை அணிந்திருந்ததைக் கண்டான் அவன்.
சேலையிலும் பார்க்க.. கவுனில் இன்னும் நன்றாகத் தெரிந்த அவள் வயிற்றைக் கண்டு.. அவன் முகம் மலர்ந்தது. அவன் மெல்ல நடந்து வந்தான். அவனது கண்கள்.. மனைவியின் நயனங்களை, உற்று நோக்கிக் கொண்டிருந்தது.
“என் ஷக்தி.. ரொம்ப அழகி!!” என்றான்.
அவள் தன் கருவயிற்றை அணைத்துக் கொண்டே.. நாணத்துடன் தலை குனித்துக் கொண்டாள். “ஆமா.. என்னாலே நம்பவே முடியவில்லை.. காலேஜ்ல ரௌடி ரேஞ்சுக்கு திரிஞ்சுட்டு இருந்த நானா இப்படி?இந்த வீடு.. ப்ளேன்னிங்க் எல்லாம் என்னுடையதா ஷக்தி?” என்று கண்களில் மிளிர்வுடன் கேட்டான் அவன்.
அவளோ.. ஓர் ஒற்றைப் புருவம் மாத்திரம் உயர்த்தி, புன்னகைத்து, “ஆமா.. இந்த வீடு.. ப்ளேன்னிங்க் ,இந்த ஷக்தி..எல்லாம் உங்களுடையது தான்..” என்றாள். கொஞ்ச நேரம் நின்று பேசியதற்கே.. மார்பு ஏற இறங்க மூச்சு வாங்கிய மனைவியைக் கண்டு பொறுக்கவில்லை அவனுக்கு.
அவளைக் கைப்பற்றி அழைத்துக் கொண்டு போய் மஞ்சத்தில் அமர வைத்து, தானும் அமர்ந்தவன், அவளை நோக்கி, “ஷக்தி.. அம்மாவுக்கு நான் உன்னைக் காதலிச்சதில் விருப்பம் இல்லை தான்.. இருந்தாலும்.. நான் ஆக்ஸிடெண்ட்.. ஆனது தெரிஞ்சுமா.. அவங்க என்னை பார்க்க வரலை? கோமாவில் இருந்தப்போ கூடவா அவங்களுக்கு என்னை பார்க்கணும்னு தோணலை..?” என்று தான் கண் விழித்ததிலிருந்து அவன் மனதை உறுத்திக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்டான் அவன்.
அவன் கேள்விகளுக்கு அவளிடத்தில் பதிலிருந்தும் மௌனமே சாதித்தாள் அவள். கணவனின் முகத்தைப் பாரக்க சங்கடம் கொண்டு… அமைதியாய் சிரம் தாழ்த்திக் கொண்டாள் அவள்.
“ஏன் ஷக்தி பேசாமல் இருக்க?”- மனைவியின் மௌனம்.. ஏதோ உணர்த்த.. அது அவன் இருதயத்தை வண்டாய்க்குடைய.. கேட்டான் அவன். அந்த கேள்வியின் பின்னும் மௌனம் சாதித்தாள் அவன் ஷக்தி.
“உன் முகத்தைப் பார்த்தால் அம்மாவுக்கு ஏதாவது உடம்புக்கு….”என்றவனுக்கு..அதை முடிக்க முன்னரே.. கண்களில் நீர்க் கருக்கட்டத் தொடங்கியது.
அவனது தொண்டைக்குழி ஒரு முறை ஏறி இறங்கவும் செய்தது. கணவனின் கைகளைப் பற்றிக் கொண்டாள் ஷக்தி.
அவனது கண்களைத் தவிர்த்தவளாக, நா தழுதழுக்க, “இப்போ.. அத்தை நம்ம கூட இல்லை இளா..சா.. சாமிக்கிட்ட…போயிட்டாங்க” என்று அத்தையின் இறப்பு செய்தியை.. சிறு குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வதைப் போல சொன்னாள் அவள்.
அவன் தாய், தந்தையருக்கு.. இரண்டு வாரிசுகள். ஒன்று அவன். மற்றவன் அவன் தம்பி ஆதி. தந்தை சிறுவயதிலேயே இறந்து விட.. இரு ஆண்களையும் படிக்க வைத்து, ஆளாக்கிய தெய்வம் அவர். ஆதியைக் காட்டிலும்.. இளங்கோ.. தாயின் செல்லம்!!
தாயே உலகமெனக் கிடந்தவனுக்கு… தாயின் இறப்பு செய்தி துக்கத்தையே வரவழைத்தது. உலகத்திலேயே யாருக்கும் வரக்கூடாதது.. ஓர் துன்பியல் சம்பவத்தை எண்ணி.. காலங்கடந்து மீண்டும் வருந்துவது.
அவனும் வருந்தினான் ; ஆண்பிள்ளைகள் அழக்கூடாது என்று கெத்தாக சொல்லி வளர்க்கப்பட்ட சமுதாயத்தில் அவனும் கண்ணீர் விட்டு வருந்தினான். அவன் தாய் இறந்த போது அழுதான்;அவள் முதல் பிரசவ வேதனையைக் கடந்த போதும் அழுதிருக்கிறான்; அன்றைய கொடூரமான துர்சம்பவ நேரம்.. நிர்ச்சலனமான வெறுத்த பார்வையுடன் கண்ணீர் விட்டழுதான்.. தற்போது இப்போதும் அழுகிறான்.
“ப்ளீஸ் இளா.. அத்தைக்கு நீங்க எத்தனை முக்கியம்னு தெரியும்.. ப்ளீஸ் கன்ட்ரோல் யோர் செல்ஃப்..”என்று எத்தனை முறை சொல்லியும் கண்ணீர் விட்ட கணவனைத் தாளமாட்டாது.. சொன்னாள் அவள். அந்த வலிய ஆண்மகன்.. தன் சோகத்தின் தாகத்தில்.. அவளது மார்புக் குழிக்குள்.. தன் தலை புதைத்துக் கொண்டான் .
அவள் கரங்கள் அவனது பிடரி மயிரிலும், முதுகிலும் அலைபாய்ந்து ஆசுவாசமாக தடவிக் கொடுக்க, இதழ்களோ, “இங்கே பாருங்க பேபி.. பேபி.. உங்க அம்மா நம்மை விட்டும் எங்கும் போகலை..” என்று மொழிய அவளை விட்டும் மெல்ல நீங்கி.. கலங்கிய விழித்திரையுடன் அவள் முகம் பார்த்தான் அவன்.
அவன் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்து, “இதோ என் கிட்டயே தான் இருக்காங்க..”என்று அவள் கூறிய கணம்.. அவள் கண்களில் தாய்மையைப் பார்த்தான் அவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *