என் வினோதமானவனே
அத்தியாயம்-10
சரியாக அந்த ‘ஷீலா’ சம்பவம் நடந்து ஒரு வாரத்தின் பின்பு…
கடந்து வந்த ஏழு நாட்களில்… ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டிருந்த, ‘ப்ளேபாய்’ அர்ஜூன்.. ஆம், அவள் பார்வையில் தற்போது அர்ஜூன், ‘ப்ளேபாய்’ அர்ஜூனே தான்!!
முற்றிலும் குணமாகி வந்திருந்த போதிலும் கூட.. அவள் அர்ஜூனைச் சென்று பார்க்கவோ, நலம் விசாரிக்கவோ நாடவில்லை. மாறாக.. தன் காதலை.. தன்னை ஏமாற்றியவன் என்று தோன்ற.. தோன்ற.. ஷக்தி அர்ஜூனை உள்ளுக்குள் வெறுக்க ஆரம்பித்திருந்தாள்.
அர்ஜூனைப் பற்றி.. அவள்.. வடித்து வைத்திருந்த தோற்றம் எங்கே? அன்று இன்ஜினியரிங் ஃபேகல்ட்டி ‘விஜய்’ மூலம்.. உண்மை அறிந்த பின்பு அர்ஜூனுக்கு.. அவள் மனத்தில்.. அவள் கொடுத்த இடம் எங்கே?
முளைத்து அரும்பே விடாத அவள் மனம் என்னும் தோட்டத்தில் பூத்த முதல் காதல்ச் செடி.. அந்நொடி கறுகிப் போனது.
ஆனாலும் அவளுள்.. காதல் வயப்பட்ட பிற பெண்களைப் போல அவள் துக்கம் அனுஷ்டிக்கவேயில்லை. பெரிய எமகண்டத்திலிருந்து தப்பித்தது போன்ற ஓர் ஆறுதலும், ஆசுவாசமும் அந்த மெல்லிடையாளுக்குத் தோன்றியதும் ஏனோ?
அப்படியானால் அர்ஜூன் மேல் எழுந்தது காதலே இல்லையா என்ன? அதுவெறும் அட்ராக்ஷன் மட்டுமே தானோ? தோழி காவ்யாவுடன்.. மைதானத்தைக் கடந்து.. மெல்ல மெல்ல அன்னநடை நடந்து கொண்டிருந்தவளின் வெண் மேனியை.. ஆரத்தழுவி அணைத்துக் கொண்டது சலசலத்துச் சென்ற தென்றல்.
அந்த இதமான தென்றலில் அவள் மார்பில் போத்தியிருந்த துப்பட்டா… மெல்ல மேலெழுந்து அவள் முகத்தோடு பட்டு மோதியது.
தன் புஷ்டியான விரல்களால்… முகத்தை மறைத்த துப்பட்டாவை கீழிறக்கிய அந்த தருணம்… அந்த செக்கன் கண்களுக்குள் மின்னல் வெட்டினாற் போன்று, தலை சரித்து கண் சிமிட்டி சிரிக்கும் அழகான இளா வந்து போனான்.
அன்றும் அவனது ஜர்ஸி இதே போலத் தானே காற்றில் மிதந்து வந்து அவள் முகத்துடன் மோதி நின்றது?அவனது திடீர் நினைவில்.. ஒரு நிமிஷம் நின்று தொடர்ந்தது பெண்ணவளின் நடை.
அவள் விழிகளோ.. மெல்ல திரும்பி.. கடைக்கண்ணால் யாரும் அறியா வண்ணம்.. மைதானத்தில் இருந்த பேவிலியன்னை பார்த்து மீண்டது. அன்று..இதே மைதானத்தில் இளா செய்த அத்தனை செயல்களும் பைத்தியக்காரத்தனமாகத் தான் தோன்றியது அவளுக்கு.
ஆனால் இப்போது?
ஷீலா பிரச்சினையின் நேரம்.. சட்டென அவளைக் கட்டியணைத்து காப்பாற்றி.. அவள் மேல் விழுந்த அடியைத் தாங்கிக் கொண்டானோ… அன்றிலிருந்து அவன் முறைப்பு.. திட்டல், கோபம் எல்லாவற்றையும் நினைக்கும் போதும்.. உடலெங்கும் ஓர் பட்டாம்பூச்சி படபடப்பு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
இன்றும் அந்த பட்டாம்பூச்சி படபடப்பு தோன்றுவதை.. இதயப்பக்கத்தில் கை வைத்தவள்.. நன்கே அறிந்து கொண்டாள்.ஊரறியா இரகசியம்… கண்களை அகல விரித்து.. அடிக்கண்ணால் முறைக்கும் இளாவை.. ஷக்திக்குப் பிடித்துப்போனது இப்போதெல்லாம்.
அன்று…
அப்போதெல்லாம் இளா அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த காலம்.. இவளும் அவளது முறைப்பின் உண்மைக் காரணம் அறியாமலேயே குழம்பிப் போயிருந்த காலமும் கூட..மொத்த வர்த்தக பீடமும் திரண்டிருந்தது அந்த செயற்கை புல்வெளி போடப்பட்டிருந்த மைதானத்தில் தான்.
பின்னே.. கொமர்ஸ் ஃபேகல்ட்டியின் ஹீரோ, “அர்ஜூன்” கால்பந்து விளையாடுகிறான் என்று.. மொத்த காலேஜூமே அறிந்து வைத்திருந்தால்… என்ன தான் நடக்கும்!! அர்ஜூனின் அதே அணியில் தான் இருந்தான்.. ஷக்தியை எப்போதும் முறைக்கும் இளா.
மற்ற அணியில் இரண்டாமாண்டு வர்த்தகப் பிரிவு மாணவர்கள்!! தன்னுடைய தலைகேசத்தில் வழிந்து கொண்டிருந்த வியர்வை.. நெற்றியில் ஓவியக் கோடாக பதிந்திருக்க.. வியர்வை சொட்டச் சொட்ட.. நீல நிற ஜர்ஸியுடனும், ஸாக்ஸூடன் கூடிய ஸ்போர்ட் ஷூவுடனும்… நின்றிருந்த கம்பீரமான இளா அவள் கண்களுக்குள் விரிந்தான்.
முழு மைதானமுமே, அரவம் வானை முட்ட, “அர்ஜூன்!!.. அர்ஜூன்!!..” என்று தான் கத்திக் கொண்டிருந்தது. உள்ளே அர்ஜூனுடன் இணைந்து விளையாடிக் கொண்டிருந்த இளாவின் கூர்விழிகள் அவளையே தான் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது.
கூட்டத்தோடு கூட்டமாக அவளும் சேர்ந்து இரு கை தட்டியவாறு.. எம்பி எம்பி குதித்தவளாக, “அர்ஜூன்!! அர்ஜூன்!!” என்று அவள் கத்தும் ஒலி மட்டும் பிரத்தியேகமாகக் கேட்க,க்ரவுண்ட்டில் நின்றிருந்தவனின் நாடி, நரம்பிலெல்லாம்.. ஒருவகையான ஆவேசத்தீ பாய்ந்தது அவனுக்கு .
இளாவுக்கு.. தன் ஷக்தி.. ‘அர்ஜூன்’ பெயர் சொல்வது பிடிக்கவில்லை. அந்த கவலையுடன் எழுந்த கோபத்தில்.. மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளாவின் கால்களுக்கிடையில் பந்து வரவே, அங்கிருந்தே…ஷக்தியை கண்களால் வெறித்துப் பார்த்துக் கொண்டே.. கோல் போஸ்ட்டிற்கு.. ஓங்கி ஓர் உதை விட்டான் இளா.
அந்தோ பரிதாபம்.. அவனுடைய துரதிர்ஷ்டம்.. அந்த சேர மன்னன் இளங்கோவின் உதையில் பறந்த பந்து.. கம்பத்தில் பட்டு மீண்டும் வரவே… ஒரு கோல் மிஸ்ஸாகிப் போனது.
முழு அரங்குமே… மிஸ்ஸான கோலில், ‘ஊ’வென சோர்ந்து போக, அவளோ தலையில் கை வைத்தபடி அமர்ந்த காட்சிக் கோலம் அவன் நெஞ்சில் அப்படியே பதிந்து போனது.
தன் ஷக்தியின் கண்களுக்கு நாம் ஹீரோவாக அல்லாமல் போனோமே என்ற கவலை கோபமாக உருவெடுக்க, அவளைப் பார்த்துக் கொண்டே, கோபத்தில் முஷ்டி மடக்கி.. காற்றில் ஒரு குத்து விட்டு..புற்களுக்கு ஓர் உதை உதைக்கவும் செய்தான்.
அவனது அடாவடித்தனமான செய்கையில் எதேர்ச்சையாக இளாவை நோக்கித் திரும்பிய அவள் கண்கள்.. ஒரு கணம் ஜர்க்காகித் தான் நின்றது. காரணம்.. அவன்.. அவளையே தான் உற்று நோக்கிக் கொண்டிருந்தான். வழமை போல சினந்து முறைக்கும் அவனது விழிகளையே பார்த்துக் கொண்டிருந்த நேரம் தான் அது நடந்தது.
மைதானத்திலிருந்த வண்ணமே, தன்னிரு விரல்களால்.. தன் இரு விழிகளைச் சுட்டிக்காட்டி, அவளை நோக்கிக் காட்டியவன், “வாட்ச் மீ க்ளோஸ்லி” என்று அதரங்கள் திறந்து சத்தமே வெளிவராமல் உரைத்தான்.
தூரத்திலிருந்தாலும் கூட.. அவனது உதட்டசைவு சரியாகப் புரியா விட்டாலும் கூட.. அவனது செய்கையில்… அவன் தன்னை அவதானிக்கச் சொல்கிறான் என்பது மாத்திரம் புரிந்து போனது.
அர்ஜூன் விளையாடுவதைக் கண்டு மலர்ந்திருந்த இதழ்கள்.. கொஞ்சம் கொஞ்சமாக மூடிக் கொள்ள.. வெண்பனியில் உறைந்த பொம்மை போல.. கல்லாய் உறைந்து நின்று அவனையே பார்த்திருக்கலானாள் பருவமங்கை.
அவள் தன்னையே தான் பார்க்கிறாள் என்றானதும்..இளாவின் பாதங்களில்.. யாரோ ராக்கெட் கட்டி விட்டது போன்ற வேகம் கூடிப்போனது.
இரண்டுக்கு ஒன்று என இவர்கள் வாங்கியிருந்த கோல் பட்டியல்…. அடுத்தடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் எகிறிக் கொண்டே போனது. அர்ஜூனும், இளங்கோவும் ஒரே அணியினராக இருந்தாலும் கூட…ஷக்தியால் ஹீரோ ரேஞ்சுக்கு அவதானிக்கப்படும் அர்ஜூன் மேல் மலையளவு எரிச்சலும், கோபமும் எழுந்தது இளாவுக்கு.
இறுதியில் அர்ஜூனுக்கு.. வரும் பந்தையெல்லாம், தான் ஓடிச் சென்று மறைத்து.. இடையிடையே கால் வைத்து தடுத்து, எதிரணியினரே எதிர்கொள்ள முடியாத வேகத்துடன்… அதிரடியாக எடுத்துக் கொண்டு போய்.. தீவிர வெறியுடன் விளையாடி… அடுத்தடுத்து தொடராக, மூன்று கோல்களைத் தனியாக எடுத்துக் கொடுத்தான் இளா.
“அர்ஜூன்.. அர்ஜூன்” என்ற கூவல் அடங்கிப் போய்.. தற்போது முழு அரங்குமே, “இளங்.. கோ.. இளங்.. கோ”என்று கூப்பாடு போட்டு.. தங்கள் மகிழ்ச்சி ஆரவாத்தை வெளிப்படுத்தலாயிற்று.
அதிரடி ஆட்டத்தில்… எதிர்பாராத வெற்றி பெற்றது இளாவின் அணி. நண்பன் தன்னை மானசீகமாக எதிர்த்து வெற்றி பெற்றதை அறியாத அர்ஜூனோ.. அணி ஜெயித்த சந்தோஷத்தில்.. இளாவைக் கட்டியணைத்துக் கொண்டாட.. இளாவோ கத்திக் கொண்டு.. கைகளை உயர்த்திக் கொண்டே பேவிலியன் பக்கம் ஓடோடி வந்தான்.
அவனது கத்தலையும், வியர்வை வடிய வடிய பேவிலியன் பக்கம் ஓடி வந்ததையும் பைத்தியக்காரத்தனமாகக் கொண்டவள், அவனை ஒரு மாதிரி பார்த்து வைக்க.. விளையாட்டை கண்டு கழித்த ரசிகைகள் குழாமுக்கு … பறக்கும் முத்தம் கொடுப்பது போல ஓர் முத்தம்… அவளையே வைத்த கண்வாங்காமல் பார்த்த வண்ணமே கொடுத்து வைத்தான் அவன்.
அப்போது… அது கூட்டத்தில் இருந்த ஒட்டுமொத்த பெண் ரசிகைகளுக்காக என்று எண்ணிக் கொண்டவளுக்கு, தற்போது அது அவளுக்கு கொடுக்கப்பட்டதாகவே தோன்றியது.
அதே சமயம் ஒருபடி மேலே போய்.. தலைவழியாக ஜர்ஸியை கழற்றி.. காற்றில் ஒரு சுற்று சுற்றி அவன் வீச, சரியாக அது வந்து அவள் முகத்திலேயே விழுந்தது.
அப்போது அவன் வியர்வை ஈரமும், வாசமும் அருவெறுப்பாகத் தோன்றினாலும் கூட.. இப்போது அதை எண்ணி அவள் முகம் மலர்ந்தது.ஏன்? ஏன் இந்த முகமலர்ச்சி? அவனது வியர்வை வாசத்தை அவள் மனமும், உடலும் வேண்டுகிறதா என்ன?
மைதானத்தைக் கடந்து.. சில நினைவுகளை சுமந்து நடந்து வந்து கொண்டிருந்தவளின் முகத்திலே மந்தகாசப் புன்னகை. தனியாகச் சிரிக்கும் தோழியை புருவங்கள் சுருங்க வித்தியாசமாகப் பார்த்த.. உடன் நடந்து வந்து கொண்டிருந்த காவ்யாவோ… ஷக்தியின் கைச்சந்திற்கு இலேசாக இடிக்க.. அப்போது தான் நனவுலகம் வந்தாள் மற்றவள்.
ஷக்தியைப் பார்த்து கிளுக்கிச் சிரித்தவள், “என்னடீ.. நடந்திட்டிருக்கும் போதே.. பகல் கனவா? நானும் இந்த வன் வீக்கா பார்க்கறேன்.. நீ நீயாக இல்லை..ரொம்ப யோசிக்குறே.. தனியா சிரிக்குறே? என்னாச்சு..?.”என்று கேட்டாள்.
அதற்கு எந்த பதிலுமே தராமல்.. பேருக்கு புன்னகையொன்றை சிந்தி, “ஒண்ணுமில்லைடீ..” என்று தலையாட்டி மறுத்தவளின் கைகள்.. தன் ஷோல்டர் பேகிற்குள் கை விட்டு தேடியது எதுவோ ஒன்றை.
தேடிய பொருள் கிடைக்கவில்லை என்றானதும்.. சடன் பிரேக் போட்டது போல நடையை நிறுத்தி.. தலையில் கை வைத்து.. நெற்றியில் அடித்துக் கொண்டவள், “ஐய்யோ…” என்றாள் திடும்மென.
காவ்யாவோ.. அப்படியே நின்று விட்ட தோழியை நோக்கி,பதற்றமாக “என்னாச்சு?”என்று கேட்க, இவளோ திரும்பி நடந்து கொண்டே அவளை நோக்கி, “என் பர்ஸை.. பார்க்கிங் ஏரியாவில் விட்டுட்டு வந்துட்டேன் போல இருக்கு… நீ போ… நான் போய் எடுத்துட்டு வரேன்”என்றவள்.. காவ்யாவுக்கு புறமுதுகிட்டு விரைய, காவ்யாவோ.. மற்றவளின் புறமுதுகைப் பார்த்த வண்ணம், “சீக்கிரம் வாடி… ரொம்ப லேட் பண்ணாதே”என்று உரைத்தது எல்லாம் காற்றிலே கரைந்து போனது.
அங்கே… ஆனந்த் மற்றும் இளா அடங்கிய நண்பர் குழாத்துடன் இணைந்து.. கேன்டீனிற்கு முன்னால் போடப்பட்டிருந்த மேசை, நாற்காலிகளில் அமர்ந்து.. நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான் இளா.
விஜயின் தாக்குதலில் இருந்து, இளாவின் உதவியுடன்.. முற்றாகத் தேறி வந்திருந்த அர்ஜூனுக்கு… கடந்த ஏழு நாட்களில் ஒரு தரமேனும் தன்னை வந்து பாராத.. ஷக்தியின் பாராமுகம் உள்ளே நெருஞ்சி முள்ளாக குத்திக் கொண்டேயிருந்தது.
ஷீலா மேட்டர் கேள்விப்பட்டு… தன்னை விட்டும் சொல்லாமல் ஒதுங்கிக் கொண்ட ஷக்தி… அர்ஜூனின் சிந்தனையில் தற்போதெல்லாம் அடிக்கடி வந்து போய்க் கொண்டேயிருந்தாள்.
ஷக்தி!! அவன் பார்வையில்.. கைக்கு எட்டி.. வாய்க்கு எட்டாத இன்பக்கனியாகவே.. அர்ஜூனுக்கு தோன்றியது. அதே சமயம் தன் இமேஜை.. ஷக்தி முன்னால் டெமேஜ்ஜாக்கிய… இன்ஜினியரிங் பேகல்ட்டிகாரன் “விஜய்”யை சமயம் பார்த்து தட்ட வேண்டும் என்ற கொலைவெறி இந்த ஒரு வாரமாக அவனுள் மிகுந்து கொண்டே தானிருந்தது.
இளா.. அந்த பத்துப் பதினைந்து பேர் கொண்ட நண்பர் குழுவுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தாலும் கூட.. அவன் பார்வை.. அர்ஜூன் மேலேயே பதிந்திருந்தது.
வழமைக்கு மாறாக.. தன் தாடையை தடவி விட்டுக் கொண்டே.. பலத்த யோசனையுடன் அமர்ந்திருந்த அர்ஜூனைக் காணக் காண உள்ளுக்குள் ஏதோவொன்று உறுத்திக் கொண்டே இருந்தது இளாவுக்கு. அந்த சந்தேகத்தை உறுதி செய்யும் முகமாக.. அர்ஜூனின் செல் வைப்ரேட் மோடில் இருந்து குறுகுறுக்கவே.. அழைப்பை ஏற்றவன், “நான் சொன்னது என்ன ஆச்சு?..”என்ற வண்ணமே.. டேபிளை விட்டும் நகர்ந்து போய் பேசலானான் அர்ஜூன். அதைக்கண்டு இளங்கோவின் கண்கள் மெல்ல இடுங்கி.. பின் பழைய நிலையை அடைந்தது.
அர்ஜூன் ஒதுக்குப்புறமாக நின்று.. அழைப்பையெடுத்த மறுமுனையாளனுக்கு.. சிற்சில கட்டளைகளை.. தன் சுட்டு விரலை ஆட்டி ஆட்டி பிறப்பித்துக் கொண்டிருப்பது மாத்திரம் புரிந்தது. அங்கே தன்னை இளா உற்றுக் கவனிப்பதை அறியாமல், மறுமுனையாளனிடம், அர்ஜூன்“அதெல்லாம் அப்பா பார்த்துக்குவார்.. நான் சொன்னதை மட்டும் செய்..”என்று கூற… மறுமுனையில் என்ன பதில் வந்ததோ?
கோபத்தில் விழிகள் சிவக்க, இரைந்த குரலில், “ஏய்.. டூ வாட் ஐ சே..!!” என்று கத்தியது இலேசாக கேட்டது இளாவுக்கு. அழைப்பைத் துண்டித்து.. தன் கோப முகத்தை.. சாதாரண முகம் போல மாற்றிக் கொண்டவன், மீண்டும் வந்து அமர்ந்த போது.. அர்ஜூன் முகத்தில் முன்பிருந்த யோசனை பாவம் காணமலாகி விட்டிருப்பதைக் கண்டான் இளா.
அந்த சமயம் தான்.. இளாவின் பாங்கற் கூட்டம் யாருமே எதிர்பார்த்திராதது நடந்து. அரக்கப் பறக்க.. ஓடி வந்து அந்த சீமெந்து தரையில் விழுந்து, சமாளித்து எழுந்து… மூக்கிலிருந்து பொளபொளவென்று இரத்தம் வழிந்தோட ஓடி வந்தான் ஓர் சக மாணவன்.
அவனைக் கண்டு.. பதறியடித்துக் கொண்டு.. முதலில் எழுந்தான் இளா.
வந்த சகமாணவனோ, தன் நண்பர் குழாத்தை நோக்கி, “மச்சி.. இன்ஜினியரிங் பேகல்ட்டிகாரன்.. பேசிட்டிருக்கும் போதே… அடிச்சிட்டான்டா.. நம்ம பசங்களை.. யாருன்னே தெரியாத வெளியாட்களைக் கூட்டிட்டு வந்து அடிக்குறானுங்கடா…!! இடமே சுடுகாடா இருக்கு.. எல்லாரும் வாங்கடா.. ” என்று கூறியது மட்டும் தான் தாமதம்..
இள இரத்தம் அல்லவா? எக்கச்சக்கமாக சூடேறத் தான் செய்தது.
யதேச்சையாக அர்ஜூன் பக்கம் திரும்பியவனுக்கு, அவன் முகம் ஒரு செக்கன்.. பொய்யோ என ஐய்யுறத்தக்களவுக்கு மலர்ந்து… மறு செக்கன்.. போலிக் கோபத்தைப் பூசிக் கொண்டு, “டேய் மச்சி.. வாங்கடா!!..” என்ற வண்ணமே நகர்ந்ததை துல்லியமாக அவதானித்த இளங்கோவின்.. ஒற்றை இடதுபுருவம் மாத்திரம் ஏறி இறங்கியது.
எல்லாம் விழுந்தடித்துக் கொண்டு, பிற நண்பர்களுடன் ஓடாமல்..இளா மட்டும் நகராமல் அவ்விடத்திலேயே நின்றிருந்தான்.
நடக்கப்போவது திட்டமிடப்பட்ட ஓர் கலவரம் என்பது மாத்திரம் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.
இன்று காலையில் அவனிடம் அர்ஜூன்.. கை முஷ்டி மடக்கி.. சுவற்றுக்கு ஓர் குத்து விட்டுக் கொண்டே, “நான் யாருன்னு அந்த விஜய்க்கு காட்டுறேன் மச்சி” என்று கறுவிய அவன் முகம் வேறு.. எதையோ ஒன்றை உணர்த்தியது.
நண்பர்களுடன் ஓட முனைந்த..கோபத்தில் முறுக்கேறிப் போயிருந்த ஆனந்தின் முன்னங்கையை பற்றித் தடுத்தான் இளா. ஆனந்த் புரியாமல் குழம்பி நிற்க, நிதானமிக்க உறுதியான தொனியில், “மச்சி.. இதில் ஏதோ உள்குத்து இருக்கும் போல இருக்கு.. காலேஜ் சண்டையில் வெளியாட்கள்னா.. கண்டிப்பா அது பெரிய இஷ்யூ தான்… நீ எதுக்கும் நம்ம கேர்ள்ஸை… முதலில் பத்திரமான இடத்துக்கு அழைச்சிட்டுப் போ.. அப்படியே நடந்திட்டிருக்குறதை.. நம்ம டீன் என்ட் வைஸ் சான்ஸிலருக்கு இன்ஃபோர்ம் பண்ணு..” என்று சமயோசிதமாக யோசித்து பதில் சொல்ல, மறு நிமிடம் அங்கிருந்து நகர்ந்தான் ஆனந்த்.
இந்நேரம் ஷக்தி எங்கிருக்கக் கூடும்? அவள் பாதுகாப்பாக இருக்கக் கூடுமா? என்ற சிந்தனையே பொறுப்புள்ள காதலனாக அவனுக்கு எழவே, கேன்டீனை விட்டும்.. பரபரப்புடனேயே வெளியே வந்தான் இளங்கோ.
அங்கே அவன் கண்டது எதிர்பார்த்திராத புகை மூட்டம். பல்கலைக்கழகத்தின் பார்க்கிங் ஏரியாவிலிருந்து புகை கிளம்பிக் கொண்டிருப்பதையும்.. ஒரு முரட்டுக் கும்பல்… கட்டிடங்களின் கண்ணாடிகளையும், எதிர்ப்படும் மாணவர்களையும் இன்னும் ஏன் ப்ரோஃபசர்களையும் கூட பேட் மற்றும் உருட்டுக்கட்டை, இரும்புச் சங்கிலி, ஹாக்கி மட்டை இவற்றால் பிளந்து கட்டிக் கொண்டிருப்பது புரிந்தது.
அவன் பாதங்கள் அங்கு நில்லாமல்.. வேகமெடுத்து ஓடலாயிற்று. முதலாம் வருட மாணவர்களுக்கு லெக்சர்ஸ் நடக்கவென ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு ஓடோடி சென்றவனின் கண்கள்… அவளையே தான் தேடியது.
அந்த மண்டபம் முழுவதையும் செக்யூரிட்டி கார்ட்கள் காத்து நிற்க..உள்ளே இருந்த மானாக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் போனது கூட தெய்வாதீனம் தான். உள்ளே நுழைந்து அந்த கும்பலுக்குள் தன் ஷக்தி இருக்கிறாளா? என்று நோட்டம் விட்டான் இளா.
தேடியவள் இல்லை. இருப்பினும் அவள் தோழி காவ்யா நின்றிருந்தாள். அதுவும் பதற்றமான விழிகளுடன். நொடியும் தாமதிக்காமல் காவ்யாவை நாடிச் சென்றவன்,தன் படபடப்பை அடக்க முடியாமல் கொந்தளித்தவனாக, “காவ்யா.. காவ்யா… ஷக்தி எங்கே?” என்று கேட்டான்.
கலவரத்தில் மூண்ட பயத்தில் ஏறத்தாழ அழும் குரலில் காவ்யாவோ, “அண்.. ணா.. அவள்.. அவளுடைய பர்ஸை தொலைச்சி… ட்டாண்ணா.. அதான் பார்த்து… ட்டு வரேன்னு பார்க்கிங் ஏரியா போனாள்ணா..போனவள் இன்னுமும் வரலை.. எனக்கு ரொம்ப பயமா இருக்குண்ணா!!” என்றாள்.
அதைக் கேட்டு பயம் என்றால் என்னவென்று அறியாத இளம் வாலிபனுக்கும் கூட.. உள்ளே ஓர் நடுக்கம் பரவியது.
ஏனெனில்.. புகைமூட்டம் வந்து கொண்டிருந்தது பார்க்கிங் ஏரியாவில் இருந்து அல்லவா? இலேசாக கண்கள் கலங்கினாலும் அதை கணக்கில் கொள்ளாது, தலையில் அடித்து தலையை கோதிக் கொண்டே, “ஓ..ஷிட்..இந்த நேரத்தில் போய்..” என்று எதையோ சொல்ல வந்தவன், பாதியிலேயே பேச்சை நிறுத்தி காவ்யாவை நோக்கினான்.
“சரி நீ இங்கேயே பத்திரமா இரு.. நான் போய் அவளை அழைச்சிட்டு வரேன்..” என்று தைரியம் சொன்னவன் மீண்டும் அந்த விரிவுரை மண்டபத்தை விட்டும் கிளம்பினான்.
கொழும்புப் பல்கலைக்கழக வரலாற்றில் கறைபடிந்த நாள் அன்று. மாணவர்களின் உட்பூசலுக்குள், சில அரசியல் சதியால் வெளியாட்கள் நுழைந்த நாள் அன்று.
சில மாணவர்கள்.. திரும்ப எதிர்தாக்குதல் நடத்திக் கொண்டிருக்க.. இன்னும் சில மாணவர்கள் நெற்றி, முழங்கை என இரத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் காணும் போது ஷக்தியின் நிலை என்னானதோ? என்ற பதற்றம் அவனை பூதமாகப் பிடித்துக் கொண்டது. அவன் கண்கள் பிரதான நுழைவாயிலில்.. அவளைத் தான் தேடிக் கொண்டிருந்தது.
அதில் ஒரு குண்டன்.. அங்குமிங்கும் அலைந்து திரிந்து ஓடிக் கொண்டிருந்த இளாவைக் குறி வைத்து நகர்ந்து வரலானான். சரியாக இளாவின் பின் மண்டைக்கு ஓங்கி ஓர் அடி வைக்கப் போக.. சுதாரித்து திரும்பினான் இளங்கோ.
அந்தத் திரும்பலை சற்றும் எதிர்பார்க்காத.. அந்த குண்டன் சமநிலையின்றி விழப்போக.. அவன் பின்புறத்திற்கே கால்களால் எட்டி ஓர் உதை உதைத்தான் இளா. அதில் முகங்குப்புறப் போய் விழுந்தவனின் முகம்.. அங்கிருந்த கற்களில் உராய்ந்து..இரத்தத்தை வழவழைக்கலாயிற்று.
விழுந்தவன் எழுந்து வந்து தாக்க முதல்.. அவ்விடத்தை சட்டுப்புட்டென்று காலி செய்து விட்டு.. தன் உயிரைத் தேடிப் போனான் இளா.
பார்க்கிங் ஏரியாவில்.. தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள்.. எல்லாம் சுக்குநூறாக உடைந்திருப்பதைப் பார்த்து, இவள் எங்கே போனாள் என்றே யோசனை மிகுந்தது அவனுக்கு.
கண்களில் தேடலுடனும், நெஞ்சு முழுவதும் காதலுடனும் ஷக்தியைத் தேடி வந்து கொண்டிருந்தவனின் உள்ளே ஆயிரம் நிலநடுக்கங்கள் வந்து போய்க் கொண்டேயிருந்தது.
பார்க்கிங் ஏரியாவிற்கு அடுத்ததாக உள்ள செக்யூரிட்டி கார்ட்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த குட்டி பில்ட்டிங்க் சுவருக்குப் பின்னே ஓர் பெண்ணின் துப்பட்டா தென்படுவது புரிந்தது.
அதைக் கண்டதும்.. இத்தனை நேரம் பதற்றத்தில் இருந்தவனின் இதழ்கள் மலரவே… அவன் நொடியும் தாமதியாமல்.. அந்த சுவரை நாடிப் போனான். அங்கே இருந்தது சாக்ஷாத் ஷக்தியே தான்.
பர்ஸைத் தொலைத்துத் தேட வந்தவளுக்கு.. நொடிப் பொழுதில் உலகம் மாறி… காலேஜூக்குள் யார் யாரோ புகுந்து.. அத்துமீறி நடந்து… செய்து கொண்டிருக்கும் கொடூரத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது.
தரித்திருந்த காரின் கண்ணாடியை ஒருவன் ஹாக்கி மட்டையால் ஓங்கியடைத்து உடைக்க, உடைந்த கண்ணாடித் துண்டொன்று காற்றில் பறந்து வந்து அவள் வலது கைச்சந்தைக் கிழித்து விட்டுச் சென்றது.
ஆழமாகப் பட்டுவிட்டது போலும்.. குபுகுபுவென இரத்தம் வெளியே எட்டிப் பார்க்க.. பர்ஸை மறந்தவள்.. இடது உள்ளங்கையால்.. வலது கைச்சந்தைப் பொத்தி.. இரத்தம் வருவதை தடுக்க முயற்சித்தவளாக.. ஓடிச் சென்று.. சுவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு நிற்கலானாள்.
யாராவது எதேச்சையாக இந்தப்பக்கம் திரும்பினாலும் கூட.. அவள் இருக்கும் இடத்தைப் பார்த்து விடும் அபாயம்.கதறி அழத் துடித்த தொண்டையை.. கீழுதட்டைக் கடித்து சத்தம் வராமல் தடுத்து.. கண்ணீர் விட்டழுதாள் ஷக்தி.
அந்த நேரம் தான் இளா அங்கே வந்து சேர்ந்தான்.தன் பக்கமாக காலடிகள் சில கேட்கவும்.. இன்னும் கொஞ்சம் வெளவெளத்துப் போனாள் அவள்.
அவளை நோக்கி வருவது இளங்கோ என்று அறியாதவளின் கண்கள்….அழுகையை நிறுத்திக் கொண்டது. சுற்றுமுற்றும் ஏதாவது ஒரு பொருளை அவசர அவசரமாகத் தேடவாரம்பித்தது அவளது கண்கள்.
அச்சமயத்தில் அவளுக்கு கிடைத்தது மண்ணில் கிடந்த சாதாரண செங்கல்.. குனிந்து சட்டென்று பொறுக்கிக் கொண்டவள், தன்னை தாக்க வரும் அந்த ரவுடி அருகே வரும் போது.. அவன் முகத்துக்கே தாக்க தயாராக… இரு கைகளாலும் செங்கல்லைப் பற்றிப் பிடித்துக் கொண்டு நின்றாள். அவனும் வந்து அவள் தோள் தொட்டான்.
இவளோ திரும்பி.. செங்கல்லால் அடிக்க ஓங்கிய கை அந்தரத்திலேயே நிற்க அப்படியே நின்று விட்டாள் ஷக்தி. வந்ததோ இளங்கோ!!
இளாவைக் கண்டதும் தடாலென நிலத்தில் வீழ்ந்தது அவள் கையிலிருந்த செங்கல். கலைந்து போன கூந்தலும், கைச்சந்தில் இரத்தம் வழிய, ஆங்காங்கே வியர்க்க விறுவிறுக்க நின்றிருந்தவளைக் காணக் காண உள்ளே ஏதோ செய்தது இளங்கோவுக்கு.
யாரின் கண்களிலாவது பட்டு விடுவோமோ என்று பயந்தவன் அவளையும் அழைத்துக் கொண்டு சுவர் பின்னாடி போனான்.
அவளோ.. அவனைக் கண்டதும் ,ஓடோடிச் சென்று அவளது இளா மாரில் தஞ்சம் புகலானாள்.தன் காதலியிடமிருந்து முதல் அணைப்பு காதலுடன் கிடைக்க வேண்டும் என்று கற்பனைக் கோட்டைக் கட்டி வைத்திருந்தவனுக்கு..
இப்படியான ஓர் இக்கட்டான நிலையில் தன்னை அவள் அச்சத்தில் .. தான் முதல் அணைப்பு கிடைக்கக் கூடும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அவனது பரந்து விரிந்த மார்பில்.. தன் தலையை இன்னும் இன்னும் புதைத்துக் கொண்டவளின் உடல்.. தடதடவென நடுங்கிக் கொண்டிருந்தது.
அந்த நடுங்கிய குரலின் ஊடாகவே.. அவனது முதுகை இன்னும் இறுகி அணைத்துக் கொண்டவள், திக்கித் திணறிய குரலில், “என.. எனக்கு ரொம்ப பயமாக இரு.. க் இளா.. எப்ப… டியாவது என்னை இங்கே.. யிருந்து கூட்டி.. ட்டுப் போ..” என்றவளின் குரல்.. கவலையைக் கொடுத்தது அவனுக்கு.
அதற்கு மேலும் தாங்கமாட்டாது.. அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான் இளா., “இங்கே பாரு.. ஒண்ணுமில்லை.. நான் இருக்கேன்.. உன்னை பத்திரமான இடத்துக்கு.. நான் அழைச்சிட்டுப்போறேன்.. உனக்கு எதுவுமாக விட மாட்டேன் ஷக்தி…” என்றவன், பேன்ட்டில் இருந்து ஹேன்ட் கர்ச்சீஃப்பை எடுத்து.. அவள் வலது கைச்சந்துக்கு கட்டு போட்டவன், அவள் கரம் பற்றி, உறுதியான குரலில், “வா போகலாம்..”என்றான்.
அந்த வார்த்தைக்குத் தான் எத்தனை உரம்? அவன் பின்னால்… காந்தத்தினால் ஈர்க்கப்பட்ட இரும்பு போல நகர்ந்தாள் அவள். வலியில்.. ஒரு ரவுடி.. நீண்ட மரக்கட்டையை எடுத்து வந்து.. இளங்கோவுக்கு.. இடது புறமாகத் தாக்க.. அந்தத் தாக்குதலை முற்றிலும் எதிர்பாராதவனின் கை … அப்போதும் கூட அவள் கையை விடவேயில்லை.
பட்ட அடியில்.. காது… ‘க்கூங்ங்ங்ங்ங்….’என்று ஒலியெழுப்ப… ஒரு துளி இரத்தம் காதுத் துவாரம் வழியாக.. கன்னத்தில் இறங்கி வழிந்தோடியது.
கீழே குனிந்து… பாரிய கல்லை எடுத்து.. ரவுடியின் கண்களுக்கே.. ஓங்கி ஓர் அடி அடித்தவன்.. அவளை இழுத்துக் கொண்டு அங்கிருந்து இடம்பெயர்ந்தான். அவளுக்கோ… இளங்கோவின் அதிரடியில் அடிவாங்கியும் வலியைத் தாங்கிக் கொண்டிருக்கும் அவன் மனவலிமையில்.. இதய மத்தியில் மூச்சு சிக்குண்டு வெளியேறுவதைப் போல இருந்தது.
அவனையே பார்த்துக் கொண்டு வந்தவளுக்கு… அவளை நாடி வந்த ஹாக்கி மட்டையுடன் வந்த முரடனை அவள் கவனிக்காது போனாள் . ஆனால் அவளிலேயே தன் ஐம்புலன்கள் அனைத்தையும் விழிப்பாக வைத்திருக்கவனுக்கு புரிய.. சட்டென்று அவளை அணைத்து தன் முதுகில்… அந்த அடியை வாங்கிக் கொண்டு நின்றான். ஹாக்கி மட்டை பதிந்த வேகத்தில்.. அவன் டீஷேர்ட் பரபரவென பிரிந்து கொண்டே போனது.
அதைப் பார்த்து ஷக்திக்கு.. உடல் நடுநடுங்கிக் கண்ணீர் கொட்டோ கொட்டென்று கொட்டலாயிற்று. அடுத்த கணம் சமாளித்து திரும்பியவன், ஹாக்கி மட்டையை அடித்தவனிடமிருந்து பிடுங்கி… நெஞ்சு மத்தியில் எத்தி ஓர் உதை விட்டான்.
மீண்டும் அவளை அழைத்துக் கொண்டு முன்னேறிய கணம்.. யாரோ எங்கேயிருந்தோ அடித்த கல்லொன்று… அவனுடைய கன்னத்தில் பட்டு… தோல் கிழிந்து.. சதை தெறித்துத் தொங்கி.. இரத்தம் எட்டிப் பார்த்தது.
அதைக்கண்டு அவள், உயிரைக் கடைந்தெடுக்கும் குரலில், “இளாஆஆஆஆ!!..” என்று கத்த.. அதையும் கூட காதில் வாங்காது…. அவளை ஒருமாதிரி பாதுகாப்பாக அழைத்து வந்து.. பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்பட்ட.. ஆயினும் இன்னும் திறந்து வைக்கப்படாத, “இங்கிலிஷ் டீச்சிங் என்ட் லேர்னிங் யுனிட்டி”ற்குள் விட்டான்.
ஆள் நடமாட்டம் இல்லாததால்..அங்கே அந்த ரவுடிக் கும்பல் நுழைந்திருக்காமல் போனது கூட.. அவர்களது அதிர்ஷ்டமே!!
உள்ளே வந்து… டைல்ஸ் தரையில் அமர்ந்து கொண்டே பெருமூச்சு வாங்கியவன், மரண அடி வாங்கியிருந்த அந்த நிலைமையிலும், அவளை உச்சாதி பாதம் வரை ஆராய்ந்து, “ஒணக்கொண்ணும் ஆகலையே?” என்று தான் கேட்டான்.
மறுப்பாக இல்லை என்று தலையாட்டியவளுக்கு.. அப்போது தான் இடது காதோரம் வழிந்து கொண்டிருந்த இரத்தமும், கன்னத்து சதையின் தொய்வும் புரிந்தது. அந்நொடி வரை.. தன் உடல் உபாதைகளின் வலியே புரியவில்லை இளங்கோவுக்கு.
குபுகுபுவென வந்து கொண்டிருந்த இரத்தத்தைக் கண்டு.. கண்ணீர் விட்டழுது, “ஐயோ இரத்தம்!!..”என்று ஷக்தி கதறியதைக் கண்டதும் தான் வலித்தது அவனுக்கு.
தன் வலியைக் கண்டதும் பதறும் அவளின் மனவலி புரிந்து… அந்த சூழ்நிலையிலும் வலியுடன் சிரிக்க முயன்றான் அவன்.
ஆனால் முடியவில்லை. கிழிந்திருந்த கன்னத்து தசைகள் அல்லவா..? அதரங்களை இழுக்க முடியாது வலித்தது. “அது ஒண்ணுமில்லைமா..” என்று அவன் பேசிக் கொண்டிருந்த போதே.. தன் துப்பட்டாவை எடுத்து.. அவனது காது.. கன்னம் என்று வழியும் இரத்தத்தைத் துடைத்து விடலானாள் அவள்.
தன் இதயம் கவர்ந்த பெண்ணின் கரிசனையில்… அத்தனை வலியிலும் குளிர்ந்தது இளாவின் உள்ளம். அப்படியே…அவள் மடியிலேயே.. மயங்கிச் சரிந்தான் அவன்.
இறுதியாக.. இளா, “எ.. என.. க்கு.. இது… ப்போ.. தும்… எனக்.. காக.. எ.. ன் ஷக்தி வடிச்ச இந்த கண்ணீர்.. போ.. தும்… நான்.. நிம்மதியா கண்ணை மூடிருவேன்…”என்ற படி கண்ணை மூடவும், இவளது ஒரு துளி கண்ணீர்.. மூடிய கண்ணிமைகளின் மேல் விழவும் சரியாக இருந்தது.
அவன் சொற்கள்.. அவளது இதயத்தின் ஆழம் வரை சென்று தாக்க.. அவனது கன்னத்தை இரு கைகளாலும் பற்றி.., “இளா.. ப்ளீஸ் இளா.. இப்படியெல்லாம் சொல்லி என்னை பயமுறுத்தாதே இளா..”என்றவளாக..அவனை உலுக்கி எழுப்ப முனைந்து கொண்டிருந்தாள் அப்பாவி ஷக்தி.
அத்தியாயம்– 11
நடந்து முடிந்த கொடூரமான கலவரம்.. ‘மாணவர்களுக்கிடையிலான கலவரம்’ எனக் கொள்ளப்பட்டாலும் கூட… நிலைமை சமரசமாகும் வரை… கொழும்புப் பல்கலைக்கழகம் கால வரையறையின்றி மூடப்பட்டது.
இதைப்பற்றி ஆராய்ச்சி செய்து… நடந்ததை கண்டறியும் முகமாக.. உயர்கல்வி அமைச்சினால் ஓர் ஆணையமும் உடனடியாக அமைக்கப்பட்டது.
வைஸ் சான்ஸிலரின் தகவலுக்கு அமைய.. அங்கே வந்து சேர்ந்த போலீஸைக் கண்டதும்..மாணவக்கூட்டத்துக்குள் புகுந்த கறுப்பாடுகள் பல தெறித்து ஓட.. கலவரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களையும் கொத்தோடு அள்ளி வந்து கொழும்பின் அரச மருத்துவமனையை நிரப்பியிருந்தது காவல்துறை.
கொழும்பு பிரதான வைத்தியசாலையின்… அதிதீவிர சிகிச்சை பிரிவின்…. ஆக்ஸிடெண்ட் வார்டில்… எங்கு பார்த்தாலும், தலையிலும், கையிலும், காலிலும் கட்டுடன் பல்கலைக்கழக மாணவர்களும், அவர்களைக் காண அவர் தம் சொந்தங்களும் தான் அங்கே நிறைந்து வழிந்து கொண்டிருந்தனர்.
அங்கே தான்… தனக்கென வைத்திய நிர்வாகம் அளித்திருந்த ஒரு தனி பெட்டில் கண்கள் மூடி படுத்திருந்தாள் ஷக்தி. அவள் அண்ணன் பரசுராமன் இன்னும் அவளை வந்து பார்க்கவில்லை போலும். அநேகமாக விஷயம் கேள்விப்பட்டு.. பாதி வழியில் அவர் வந்து கொண்டிருக்கக் கூடும்!!
கைச்சந்தில் கண்ணாடி கிழித்து உண்டான காயத்துக்கு மருந்திட்டு.. ஓர் கட்டுடன் கண்ணயர்ந்திருந்தவள்.. சடாரென கெட்ட கனவு கண்டது போல.. திடுக்கிட்டுக் கண் விழித்தாள்.
எழுந்ததும் தான் எங்கிருக்கிறோம் என்பதை அறிய அவளுக்கு ஓரிரு நாழிகைகள் தேவைப்பட்டது.அந்தளவுக்கு மருந்தின் வீரியத்தின் வசம் ஆட்பட்டிருந்தாள் ஷக்தி.
தலையைப் பிடித்துக் கொண்டு… கட்டிலில் எழுந்தமர்ந்து கொண்டவளின் கண்கள் சுற்றுமுற்றும் யாரையோ தேடலாயிற்று. அவளுடைய பெட்டைச் சுற்றி தொடர் வரிசையாக போடப்பட்டிருந்த பெட்களில் எல்லாம்.. அவளுக்கு பரிச்சயமான முகங்கள்!! எல்லாரும் அவளுடைய காலேஜ் மாணவர்கள்!!
கூடவே மூளையில் மின்னல் வெட்டினாற் போன்று… ஞாபகம் வந்து போனான் இளங்கோவும்.. அவனுடைய காயம்பட்ட முகமும்!! அவள் காதோரம் பிரம்மையாக ஒலித்தது அவனுடைய இறுதிக் குரல்.
“எ.. என.. க்கு.. இது… ப்போ.. தும்… எனக்.. காக.. எ.. ன் ஷக்தி வடிச்ச இந்த கண்ணீர்.. போ.. தும்… நான்.. நிம்மதியா கண்ணை மூடிருவேன்…”என்ற படி அவன் கண்ணை மூடியது ஞாபகம் வரவே… கட்டிலை விட்டும் எழுந்து கொண்டவளின் அடிபட்ட கை.. அசைய..மறுத்தது.
அத்தனை வலியையும் பொறுத்துக் கொண்டு மீண்டும்.. எழுந்து.. இளங்கோவை நாடி செல்லலானாள் ஷக்தி. இளா.. இளா.. இளா… – அவள் மனதில் இளாவைத் தவிர வேறெந்த சிந்தனையும் ஓடவில்லை. அவனுக்கு என்னாயிற்று? அவள் விட்ட ஒரு கண்ணீர் தந்த சந்தோஷத்துக்காக உயிர் போனாலும் பரவாயில்லை என்ற அவளது இளா. அவள் இளா!!
அவளது கருநயனங்களில் இருந்து.. உருண்டு திரண்ட கண்ணீர்த்துளிகள்.. சரேலென வழிந்து ஓடியது.
ஆனால் எந்த வார்டில் இருக்கிறான் என்று தான் தெரியவில்லை. அவனைப் பார்த்தே விடுவது என்ற வைராக்கியத்துடன்.. அவனைத் தேடி… ஒவ்வொரு வார்டாக.. சென்றாள் அவள்.
அவள் சென்ற அத்தனை வார்டுகளிலும்… பல மாணவர்கள்.. கால் உடைபட்டு.. கை முறிபட்டு… ட்ரிப்ஸ் குழாயுடன்… கட்டுக்களுடன் படுத்திருக்க… அதைக் காணும் போதெல்லாம் நெஞ்சு வலித்தது அவளுக்கு.
அவள் கண்கள் ஓயாது தன் தலைவனைத் தேடின. எங்கிருக்கிறான் இந்த ஷக்தியின் சிவன்?
அந்த கோரிடோர் வழியாக நடந்து வந்தவளின் கண்களுக்கு.. தெய்வாதீனமாகத் தட்டுப்பட்டான் அர்ஜூன். அவளுக்கு புறமுதுகிட்டு நின்றிருந்தவனின் பின்னந்தலைக் கேசத்தினூடாக சென்றிருந்தது ஒரு கட்டு. பாவம் அவன்!!!
இந்த இஞ்சினியரிங் ஃபேகல்ட்டி என்ட் கொமர்ஸ் ஃபேகல்ட்டிக்கு இடையில் நடந்த சண்டையில் அவனுக்கும் அடி விழுந்திருக்கிறது போலும்!! என்று எண்ணிக் கொண்டவளுக்கு… துரோகம் செய்த ஆடவனேயானாலும் கூட.. பெண்மை உள்ளம் அல்லவா? அதில் கழிவிரக்கம் மிகவே செய்தது.
‘அவனிடமாவது இளா எங்கே?’ என்று கேட்கலாம் என்று தோன்ற, அவன் ஷோல்டரைப் பற்றப் போனவள்.. ஃபோனில் அவன் யாருடனோ உரையாற்றியதைக் கேட்டு… அப்படியே உறைந்து நின்று விட்டாள்.அர்ஜூன்..அவளுக்கு புறமுதுகிட்டுத் தான் நின்றிருந்தான்.
உண்மையில்.. தன் முகத்தை அவளுக்கு காட்டாமலேயே… தன் நிஜமான சொரூபத்தை.. ஷக்திக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தான் அவன்.
அதைக்கேட்டு திகைப்பூண்டை மிதித்தாற் போன்று.. தன் ரோமாஞ்சனங்கள் எல்லாம் சிலிர்த்துக் கொள்ள நின்று விட்டாள் பூலோகத்து மேனகை!!
இவன்.. இந்த அர்ஜூன் எப்படியாப்பட்ட மனிதன்!!
“எனக்கொண்ணும் பெருசா அடியில்லை டாட்.. ஆமா.. எல்லாம் நம்ம ப்ளேன் படி தான் நடந்திருக்கு.. இந்தக் கலவரத்தில் வெளியாட்கள் புகுந்தது..உங்க எதிரி நாராயணசாமியும், அவன் மகன் விஜியும் சேர்ந்து செய்த சதின்னு தான்…. இந்த முட்டாள் பசங்க நம்பிட்டிருக்காங்க..” – அவன் குரலில் தாண்டவமாடிய எகத்தாளமும், ஏளனமும் ஷக்தி எஞ்ஞான்றும் எதிர்பாராத ஒன்று.
“ அதுவரைக்கும் நமக்கு நல்லது.. விஜய் கை வைச்சது யார் மேலே? .. தி க்ரேட் பாலகிருஷ்ணன் மகன் அர்ஜூன் மேலே..!!! அப்போ அவ்வன் ப்பட்டுத் தான் ஆகணும்..” இப்போ நீங்க அரக்கப் பறக்கக் கிளம்பி வாங்க.. என்ட் அப்படியே ஹாஸ்பிடல் வாசலிலேயே ஒரு ப்ரஸ் மீட் வைச்சு.. மாணவர்களுக்கு இரங்கல் தெரிவிச்சு… உங்க எதிரியைத் தாக்கிப் பேசினால்.. பத்த வேண்டிய இடத்தில் பத்திக்கும்..” என்று மறுமுனையில் இருந்த தன் தந்தை மற்றும் அமைச்சர் பாலகிருஷ்ணனுக்கு செய்ய வேண்டியதை தெளிவாக எடுத்துரைத்தான் அர்ஜூன்.
த்ரேதா யுக அர்ஜூன்.. கிருஷ்ணனிடம் வியூகம் கற்கப் பெற்றான். ஆனால் இந்த கலியுக அர்ஜூனோ.. அவன் தந்தை கிருஷ்ணனுக்கே வியூகம் சொல்லிக் கொடுக்கிறான்!!
“சரிப்பா நான் வைச்சிடறேன்..!!”- என்றவனாக அவன் அழைப்பைத் துண்டிக்க.. இங்கே விதிர் விதிர்த்துப் போய் நின்றது ஐந்தரையடி ரோஜாப் பூஞ்செடியொன்று.
அர்ஜூன் இவ்வளவு கேவலமானவனா? அவன் திரும்பி அவளைக் கண்டு அதிர்ந்து நிற்கவும் சரியாக இருந்தது.
‘இவள் எங்கே இங்கே?’ என்று உள்ளே பகீரென்று இருந்த திகைப்பை மறைத்து.. முகத்தை மென்மையாக்கிக் கொண்டு ,“நீயேன்.. இந்த நிலைமையில் இருந்து எழுந்து வந்த ஷக்தி?.. ரெஸ்ட் எடுத்துக்க வேண்டியது தானே? வா உன்னை உன் வார்டுக்கு அழைச்சிட்டுப் போறேன்” என்றவனாக அவளது கையைப் பிடிக்கப்பார்க்க,இவளோ இரண்டெட்டு பின்னே நகர்ந்து நின்றாள்.
“தொடாதே அர்ஜூன்!!..” என்றாள் அந்தரத்தில் கை நீட்டி.
அர்ஜூன் அப்படியே நின்று அவளது விழிகளை நிர்ச்சலனமாக ஏறிட்டான். “முதலில் உன்னை ஒரு பொம்பளை பொறுக்கின்னு தான் நினைச்சேன்.. ஆனால் இப்போ தான் தெரியுது.. ஒரு நல்ல அரசியல்வாதி ஆகுறதுக்கான பத்துப் பொருத்தமும் உன்கிட்ட இருக்கு..”என்று தன் மனதில் எழுந்த கவலை அனைத்தையும் கொட்டினாள் ஷக்தி.
அர்ஜூனோ புரிந்தும் புரியாதவன் போன்றே.. “நீ ஃபோனில் கேட்டதை வைச்சு.. ஏதோ தப்பா..” என்றவனை .. முழுமையாக பேச விடவேயில்லை அவள்!!
“ம்.. ஆமா இதுவரை தப்பா தான் புரிஞ்சுக்கிட்டிருந்தேன்.. நவ் ஐ நோவ் த ட்ரூத்.. உங்க ரெண்டு பேருக்கும் இடையே நடந்த சண்டையில்…. இத்தனை பேர்.. ஒரு பாவமும் செய்யாமல்.. இரத்தம் சிந்தியிருக்காங்களே? அது உனக்கு கொஞ்சம் கூட உறுத்தலையா அர்ஜூன்??.. உன்னால “என் இளா” கூட க்ரிட்டிக்கல் ஸ்டேஜ்ல இருக்கான்..!!!” என்று தழுதழுத்த குரலில் பேசிக் கொண்டே போனாள் ஷக்தி.
அவன் காதுகளில் நாராசமாக விழுந்தது ‘என் இளா’ என்ற அவளது வார்த்தைகள்!!
அதில் இளாவுக்கும், அவளுக்குமிடையிலான.. அவன் அறியாத ஓர் உறவு புலப்படுவதைப் போல இருக்க, “என்ன சொன்ன? .. கம் அகேய்ன் என் இளாவா?”என்று கேட்டான் அர்ஜூன்.
“ம்.. ஆமா.. என் இளா தான்.. ஐ லவ் ஹிம்.. நான் காதலிக்குறது என் இளாவைத் தான்!!” என்று விட்டு… அர்ஜூனின் முகம் சென்ற தினுசை உள்ளுக்குள் அனுபவித்துக் கொண்டே.. அவனைத் தாண்டி செல்ல முற்பட்ட போது அவளது இடது முன்னங்கையைப் பற்றிப் பிடித்துக் கொண்டது அவன் கை.
அவள் அந்த கைச்சிறையில்..தன் நடையை நிறுத்தி நின்றாளே ஒழிய திரும்பித் தான் பார்க்கவில்லை.
உள்ளுக்குள் பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும், ஒரு பெண்ணால் நிராகரிக்கப்பட்ட வலியும் போட்டி போட, “அப்போ நீ என்னைக் காதலிக்குறதா சொன்னது?” என்று கேட்டான் அர்ஜூன்.
“உண்மை!! நான் அப்படி சொன்னதும் உண்மை!! .. இப்போ நான் இளாவைக் காதலிக்குறதும் உண்மை!!..” என்றவள் தற்போது தான் திரும்பி அர்ஜூன் முகத்தை நோக்கினாள்.
“அட் அ டைமில் பல பொண்ணைக் காதலிக்குறவன் ஆம்பளை இல்லை!! .. தன்னை நம்பி வந்த பொண்ணை கடைசி வரைக்கும்…. கைவிடாதவன் தான் ஆம்பளை… இளா ஆம்பளை!!.. இப்போ சொல்றேன்.. நான் இளாவைத் தான் காதலிக்குறேன்.. ஐ லவ் ஹிம்..!!” என்றவள் அவனிடமிருந்து.. தன் கையை உருவி இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகரலானாள்.
ஷக்தி, அர்ஜூனின் தன்மானத்திற்கு கொடுத்த பதிலடி!! அவன் முகத்தைக் கறுக்கச் செய்தது.உறைந்து போய் நின்றிருந்தவனின் கல் மனம்.. அப்போதும் கூட அப்பாவியாய் இரத்தம் சிந்திய மாணவர்களுக்காக ஒரு துளியேனும் இரக்கப்படவில்லை. இப்படியும் சில மனுஷ ஜந்துக்கள்!!
அப்படி அவள்… புதிதாகக் காதல் பூத்த இளாவை நாடிச் சென்றிருந்த வேளை வழியில் எதிர்ப்பட்டான் இளாவின் நண்பன் ஆனந்த்.
பெண்களை அழைத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றதாலோ என்னவோ எந்தவித காயங்களும் இல்லாமல்….. அதே பழைய ஆஜானுபாகுவான தோற்றத்துடனேயே நின்றிருந்தான் ஆனந்த்.
நேரே ஆனந்திடம் சென்றவளுக்கு , அவளையும் மீறி ஒரு பதற்றம் கலந்த படபடப்பு தொற்றிக் கொண்டது. இத்தனை நாளும் இளா கண் முன்னே தானே நின்றிருந்தான்? அப்போது தெரியவில்லை அவன் காதல்! இப்போது தெரிகிறதோ அந்த இளம் மங்கைக்கு.
“நிழலின் அருமை வெயிலில் தெரியும்” என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் பெரியவர்கள். அவள் தன் நிழலைத் தேடினாள்!! தன் நிஜத்தைத் தேடினாள்.
ஆனந்த்தோ.. ஷக்தியின் களைந்த கூந்தலையும், சோர்ந்த முகத்தையும் கழிவிரக்கத்துடன் பார்க்க,இவளோ படபடப்பாக தழுதழுத்த குரலில், “அண்ணா.. அண்ணா இளா எங்கேண்ணா?.. நான் இளாவைப் பார்த்தாகணும்..” என்றாள்.
அவளின் “அண்ணா” என்றழைப்பு அப்போதும் அவனுக்கு புதுவித பந்தத்தை நினைவுறுத்துவதாகவே இருந்தது. அது தவிர, நண்பன் இளா, ஷக்தியைக் கண்ட நாள் முதலாய் ‘லவ்’வுவதை அறிந்து வைத்திருப்பவனாயிற்றே அவன்??
அதனால் நண்பனின் காதலி என்ற உரிமையுடன், “அவனை ஐசியூவில் இருந்து… இப்போ தான் தனி ரூமுக்கு சேன்ஞ் பண்ணாங்கம்மா..” என்றவனாக, மாற்றப்பட்ட புது அறையைக் காட்டினான் ஆனந்த்.
அதைக்கேட்ட மறுநொடி ஷக்தி அங்கு இல்லை. அவன் கைகாட்டிய திசையை நோக்கி விரைந்திருந்தாள் இளங்கோவின் காதலி. சட்டென திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவளின் பார்வையில் அவன்!!
புறங்கையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்க.. மூக்கில் ஒரு ஆக்ஸிஜன் மாஸ்க்குடன்…. அருகே ஈஸிஜி மானிட்டர்.. நார்மலாக ஏறி இறங்கிக் கொண்டிருக்க..நிர்ச்சலனமாக உறங்கிக் கொண்டிருந்தான் அவன்.
இடது காதோரமாக சேர்த்து.. தலையுடன் ஒரு நாடிக்கட்டு. கன்னத்தில்.. பிய்ந்து போன சதையை ஒட்ட வைப்பதற்காக ஒரு பெரிய பிளாஸ்டர் கட்டு.
கைகளில் சின்னஞ்சிறிய சிராய்ப்புக்கள்!! என்று இருந்தவனைக் கண்டதும்… உள்ளே நடுநடுங்கி.. அழுகை உடைப்பெடுத்தது அவளுக்கு. இதோ அவள் மன்னவன்!! தன்னுயிரைக் கொடுத்து.. இவளுயிர் காத்தவன்!! அமைதியாக உறங்கிக் கிடக்கிறான்!!
“இளா.. இளா..”- அவள் வாய் அரற்றிக் கொண்டேயிருந்தது. அவளது வெண்மையான விரல்களோ… அவளது கன்னத்தை மெல்ல தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது.
அன்று..அந்த தேள் கடித்த நேரம்.. அவன் சொன்ன வசனங்கள் மீண்டுமொருமுறை வந்து போனது அவளது சிந்தைக்கு!!
“ப்போ.. ஒ… ரு உண்மைக் காதலை உன்னால புரிஞ்சிக்க முடிய… லைல? இப்பவும் சொல்றே.. ன்.. நீ கண்டிப்பா ஒரு நாள் வருத்தப்படப்போற.. அப்போ உன் பக்கத்துல நான் இஇரு.. க்க மாட்டேன்!!.”
ஒரு நாள்!!! அவள் வருத்தப்படும் அந்த ஒரு நாள்!! அந்நாளும் இந்நாளோ? “அப்போ உன் பக்கத்துல நான் இருக்க மாட்டேன்!!!!”-அவளது தடவல் அப்படியே நின்றது.
வராமலேயே போய் விடுவானோ? அவளுக்கு இளா வேண்டும்! இந்த ஜென்மத்தைக் கடக்க அவள் இளா.. அவளுக்கு வேண்டும்!!
அவளது இடது விழியில் ஊற்றெடுத்த ஓர் கண்ணீர்த் துளியொன்று.. கன்னம் வழியாக சரேலென இறங்கி வந்து அவனது மூடியிருந்த இமை மேல் பட்டென்று விழுந்தது.
அவன் காதோரம் மென்மையான மற்றும் தழுதழுத்த குரலில், “எ.. எனக்கு நீ வேணும் இளா… இஇ.. இனி.. நா.. நான் உன்னை ஹர்ட் பண்ணவே மாட்டேன்டா… ஐ ஏம் இன் லவ் வித் யூ” என்று தன் உள்ளம் திறந்து.. தன் காதலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் அவள்.
அவனது அடிபடாத வலது காது மெல்ல உயர்ந்து தாழ்ந்தது போல ஓர் பிரம்மை எழுந்தது அவளுக்கு. இருப்பினும் அது பிரம்மை தானோ என்ற ஐயம் பிறக்கவே, அவனது காயம்பட்ட வதங்கிப் போன முகத்தை.. இரசித்துப் பார்த்தவாறு.. தலை கோதிக் கொண்டே இருந்தாள் அவள்.
ஆரம்பத்திலிருந்தே அர்ஜூன் மேலிருந்தது காதலா? சொல்லத் தெரியவில்லை அவளுக்கு. ஆனால் இந்நொடி புரிகிறது… இளாவை வெற்றுமார்புடன் ஸ்விம்மிங் பூலில் பார்த்தவுடன் கூச்சப்பட்டாளே.. அது காதல்!!
அர்ஜூனையும் தான் அன்று உள்பெனியனுடன் பார்த்தாள்.. அவனை வைத்த கண் வாங்காமல் இரசிக்கத் தோன்றியதே ஒழிய.. இளாவைப் பார்க்க நேரிட்ட போது தோன்றிய கூச்சம்.. அந்த படபடப்பு தோன்றவில்லையே ஏன்? மூடிய இமைகளின் பின் கருமணிகள் அங்குமிங்கும் அலைபாய.. மெல்ல கண் விழித்தான் இளா.
விழித்தவன் அதிர்ந்தான்;அவன் விழிகள் முன்னே.. அவன் அனுதினமும் ஆராதித்த ஓர் பொன்சிலை!! அதுவும் இந்திரலோக மேனகையை நிகர்த்த எழில் கொண்ட பெண் சிலை!! எந்த மடையனாவது விழி மூடிக் கொள்வானோ?
இதுவரை கிணற்றுக்குள் ஒலிப்பது போல கேட்டுக் கொண்டிருந்த அவள் குரல்.. நிஜத்திலும் தெளிவாகக் கேட்டான் அவன்.
அவன் கண் விழித்ததைக் கண்டவள், உணர்ச்சிப் பெருக்கோட.. சட்டென்று குனிந்து அவன் மாரோடு தலை வைத்து, அவன் ஷோல்டர்களை இறுகப் பற்றிக் கொண்டாள். “நா.. நா… நான் பயந்துட்டேன்.. எங்கே… என் இளாவை மறுபடியும் பார்க்க முடியாமல் போயிருமோன்னு பயந்துட்டேன்.. இளா..” என்றவளின் கண்ணீர்.. அவனது பரந்து விரிந்த மார்பு என்னும் வயற்காட்டை நனைக்கலாயிற்று.
அவள் கட்டியணைத்தது ஆனந்த அதிர்ச்சி என்றால்.. அவளது புலம்பல்… அவளது கண்ணீர் பேரதிர்ச்சி!!. கூடவே கவலையும் தொற்றிக் கொள்ள, அவள் அழுவதைத் தாங்க முடியாமல்,
ஆக்ஸிஜன் மாஸ்க்கை கழற்றியவன், இதமான குரலில், “எனக்கொண்ணுமில்லைமா…. இது ஜஸ்ட் சும்மா.. நீ அழாதே..” என்றான் இளா.
அது ஆடவனின் காதல் கொண்ட மனம்!!அவள் கண்ணீரை சகியாத அவன் மனம்!! அவளது காதலை மட்டுமே யாசிக்கும் மனம்! “எப்படி அழாமல் இருக்க முடியும்?… நீ வாங்கிய ஒவ்வொரு அடியும் எனக்காக!!!.. அப்போ எப்படி அழாமல் இருக்க முடியும்??”என்று கேட்டாள் ஷக்தி.
அவள் வார்த்தைகள்.. சொல்லாமல் சொல்லியது வஞ்சி அவளுக்குள் பூத்த அபூர்வ மலராம் காதல் மலரைப் பற்றி! அவனுடைய சுயாதீனமான கைகளில் ஒன்று மேலெழுந்து அவளுடைய கைகளை தன்னதற்குள் அடைக்கலமாக்கிக் கொண்டன.
“இளா.. உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு.. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு… எனக்காக உயிரை கூட துச்சமாக மதிக்குற ஜீவன்.. எனக்காக! .. எனக்கே எனக்காக..!!” என்று. அப்போதிருந்த முடியாத நிலையிலும்..மனத்தைக் கொள்ளை கொள்ளும் மந்தகாச சிரிப்பொன்றை சிரித்து வைத்தான் இளா.
“நான் காண்பது கனவா?.. என்னிடம் காதல் சொன்னது என் ஷக்தியா?..” என்றான் தனக்குத் தானே பேசுவது போல் சத்தமாக. “என் ஷக்தி!!”-அவனது உரிமை கலந்த அந்த வார்த்தை அவள் இதயம் வரை தீண்டி… அட் அ டைமில் பல பட்டாம்பூச்சிகளை பறக்கச் செய்தது.
அவன் மார்பு தொட்டு, “ஆமா.. உன் ஷக்தி.. இந்த இளாவின் ஷக்தி!! …” என்றாள்.பல பேர் அந்த கலவரத்தை உள்ளே வறுத்தெடுத்துக் கொண்டிருக்க.. இவனோ.. அவன் காதலை சேர்த்து வைத்த அந்த உன்னத கலவரத்திற்கு நன்றி சொல்லிக் கொண்டான்.
‘கலவரம் நடப்பதால் நல்ல விஷயம் நடந்தால் கலவரம் நல்லது!’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவனுக்கு.. அந்நேரம் அவளது அழகு முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது.
அவன் கண்ணும், அவள் கண்ணும் இரண்டறக் கலந்து.. ஒன்றாகி… அங்கே புது ராம இதிகாசம் எழுதப்பட்டுக் கொண்டிருந்த வேளை.. படாரென்று திறக்கப்பட்டது கதவு!!
இருவர் விழிகளும்.. சிந்தை கலைந்து.. கதவை நோக்க. அங்கே நின்றிருந்தார்.. நாற்பது, நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி!!அவர் கண்களில் இருந்த உறுதியும், நிமிர்வும் ஷக்தி வேறெந்த பெண்மணியிடம் கண்டதில்லை.
இவளோ, ‘யாருடா இது?’ என்று பார்த்து வைக்க, அவனோ தன் அதரங்கள் திறந்து, “அம்மா..” என்றான் தாய்ப்பசுவைக் கண்ட கன்றுக்குட்டி போல.அவள் விதிர்த்துப் போய் நிமிர்ந்தாள். ‘என்ன.. இது.. இளாவின் தாயாரா? அப்படின்னா அவள் அத்தை’என்று தோன்ற… தன் வருங்கால மாமியாரையே.. விழிகள் விரிய பார்த்திருந்தாள் அவள்.
அவர்.. இளாவின் தாயார்… இளா எப்போதும் ஒரு பெண்ணுடன் இருந்து பார்த்திராதவருக்கு… இன்று புதுமையாக இளா ஓர் பெண்ணுடன் இருப்பதும்,மகனின் விழிகள் வேறு… அவளை மென்மையாக தழுவுவதையும் நிமிடத்தில் கண்டு கொண்டார் அவன் தாயார்!
ஷக்திக்கும்.. அவன் தாயாரின் நொடி நேரத்துக்கும் குறைவான கணித்தல் பார்வை… உறுத்தலைக் கொடுத்தது.அதே சமயம் இளாவிடம் இருக்கும் அதே உறுத்தும் பார்வை.. யாரிடம் இருந்து வந்திருக்கக் கூடும் என்பதும் அப்போது தான் புரிந்தது அவளுக்கு.
அந்த பார்வையில் அவனை விட்டும் விலகியவள், இளா.. நீ ரெஸ்ட் எடுத்துக்க.. நான் உன்னை அப்புறம் வந்து பார்க்குறேன்!!” என்றவள்,அவன் மறுப்பாக பேச வாயெடுக்கும் முன்னர்.. அங்கிருந்தும் நகர்ந்து விட்டிருந்தாள்.
வெளியே வந்தவளுக்கு அப்போது தான் நிம்மதியாக பெருமூச்சு விட முடிந்தது.‘ஸப்பா என்னா பார்வைடா அது.. தப்பு செய்த குழந்தையை.. பிரின்ஸிபால் பார்க்குறமாதிரி…’ என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டே… மீண்டும் அவள் தன் பெட்டை அடைந்த நேரம், அவள் வீட்டிலிருந்து விஷயம் கேள்விப்பட்டு அவள் அண்ணா, அம்மா, அண்ணி ஆகியோர் வந்திருந்தனர்.
அவளைக் கண்டதும் ஓடோடி வந்த அவள் தாய், “எங்கேம்மா போன? .. நாங்க எல்லாம் பயந்துட்டோம்மா” என்க,இவளோ, இளாவைப் பார்க்கச் சென்ற விஷயத்தைக் கூறாமல், “வாஷ்ரூம்..போயிருந்தேன்மா” என்று சமாளித்தாள்.
எப்போதும் அவளுடன் அளவாக பேசும் பரசுராமனுக்கு.. தன் குட்டித்தங்கை கையில் கட்டுடன் நிற்பது கவலையைக் கொடுத்திருக்க வேண்டும்.அதை நேரிடையாக வெளிப்படுத்த தெரியாத அந்த முரட்டு மனிதரோ, தன் தாயிடம், “இப்போவே அவளை டிஸ்சார்ஜ் பண்ண சொல்லுங்க.. நாம நம்ம ஹாஸ்பிட்டலில்.. தங்கச்சிக்கு வைத்தியம் பார்த்துக்கலாம்..!!” என்றுரைத்தார்.
இது அவரளவில் அவள் மீது அவர் காட்டும் பாசம்!! இரக்கம்!! அன்பு!! அவளோ வீட்டார் பண்ண அலப்பறையில்.. தலையில் அடித்துக் கொள்ளாத குறை தான். இந்த சின்ன காயத்துக்கு எதுக்கு…பிரத்தியேக வைத்தியம் என்று அவள் வீட்டினரை சமசரப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகியது அவளுக்கு.
அத்தியாயம்-12
அதுவொரு அழகிய இராக்காலம். மேகக்காதலனுடன் தண்மதியும் சரசமாடிக் கொண்டிருந்த சௌந்தர்யமான இரவு அது. “அவளது டெராஸில்” அமர்ந்து.. முதுகை சுவரோடு சாய்த்து.. முழங்கால்களைக் கட்டிக் கொண்டு… அதையே பார்த்திருந்தவனுக்குள் அவள் ஞாபகம்!
அவளும்.. இந்த கடந்து வந்த இரு மாதங்களில்… அவன் மார்பில் முகம் புதைத்து கட்டியணைத்த நிலாக்கால நினைவுகள் பல வந்து போயிற்று அந்த சேர மன்னனுக்கு.
இரு மாதங்கள்!! கலவரம் நிகழ்ந்து.. பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் விடப்படும் வரை மூடப்பட்டு இரு மாதங்கள் ஆயிற்று. அந்த இரு மாதங்களும் தலைவனும், தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு களிக்கும் இடம் “அவளது டெராஸ்!!”.
சுற்றம் யாரும் அறியாமல்.. காதலர் தம்முள் கூடும் இரவுக்குறியை விட இனிதாவது யாவுள?அந்த இரவுக்குறியின் சிற்றின்பத்தைத் தான் அனுபவித்துக் கொண்டிருந்தனர் தலைவனும், தலைவியும்.
இன்றும் தன் தாமரை மலருக்காக காத்திருந்தான் சூரியன்!! அவனை வெகுநேரம் காத்திருக்க விடாமல்.. அனைவரும் உறங்கிய பிற்பாடு.. யாரும் அறியாமல் ஒரு கள்ளப்பூனை போல…. அவனது சுந்தரியும் வந்தாள்.அவனது கண்கள் அவளைக் கண்டதும் மென்மையை வாடகைக்கு வாங்கிக் கொண்டது. இதழ்களில் ஒரு மந்தகாசப் புன்னகை சூழ்ந்து கொண்டது.
அவள் அணிந்திருந்த இரவு பைஜாமாவில்.. சட்டையின் மேல் பட்டன்கள் இரண்டு திறந்திருக்க.. அதன் வழியாகத் தெரிந்த.. அவளது கோல்டன் செயினின் நீலக்கல் பதிக்கப்பெற்ற பென்டன் கூட இரவில் ஒளிர்ந்தது ஓர் தனியழகே!
லூஸ் ஹேருடன்.. தன்னுடைய பெரிய பிளாங்கட்டை.. ஓவர் கோர்ட் போல போர்த்திக் கொண்டு…. இரு கைகளாலும் ட்ரேயைத் தாங்கிப் பிடித்தவாறு.. தன் டெராஸூக்கு வந்தாள் ஷக்தி.
அவனைக் கண்டதும் ஒரு க்யூட் சிரிப்பு அவள் இதழோரத்தில்! தாயைக் கண்டதும் குழந்தை சிரிக்குமே.. அது போல!! இளாவுக்கு அருகில்.. நடுநிசி சந்திப்பிற்கு இடைஞ்சலாக இருக்கும் கொசுக்களை விரட்ட ஒரு கொசுவத்தி சுருள்.. இவர்கள் இருவரின் காதலைக் கண்டு புகைச்சலைக் கிளப்பிக் கொண்டே அமைதியாக இருந்தது.
அதற்குப் பக்கத்தில்.. டெராஸில் இருக்கும் பூச்சித் தொல்லையிலிருந்து விடுபட ஒரு ‘மோர்ட்டீன்” ஸ்ப்ரே!! இத்தனை ஏற்பாடுகள் அவள் தன் தலைவனுக்காக செய்திருந்தும்.. வந்ததும் முழந்தாளிட்டு அமர்ந்து கொண்டாள் இளங்கோவின் காதலி!!
பின்பு ட்ரேயைத் தரையில் வைத்தவள், தன்னிரு உள்ளங்கைகளையும் சூடு பரவ தேய்த்து.. அவனது முரட்டுக் கன்னங்களுக்கு வைத்தாள். அவனோ.. அவள் உள்ளங்கை மென்மையில் அது தந்த கதகதப்பில்.. எல்லாவற்றுக்கும் மேலாக, ஹஸ்கி குரலில், “இன்னைக்கு ரொம்ப குளிருதுல்ல “பேபி?” என்று கேட்ட அவள் கரிசனையில்.. அவளையே பார்த்தபடி நின்றிருந்தான்.
“பேபி”!! அவள் அழைக்கும் அந்த ஒற்றையழைப்பு எப்போதும் அவனுக்கு தனி தான்!! அவன் அவளது பேபியாகவே மாறிப் போவான்! மெல்ல, ‘இல்லை’ என்பது போல தலையாட்டியவன், அவள் கையோடு கொண்டு வந்த ட்ரேயையும் அதிலிருந்த உணவுகளையும் கண்களால் காட்டி, “ என்ன இது இன்னைக்கு ஸ்பெஷலா?”என்று கேட்டான்.
ட்ரேயில் இருந்த சேன்ட்விச் தட்டையும், பக்கத்தில் இருந்த கோக் டின்னையும் எடுத்துக் காட்டி, “இன்னைக்கு நான் பண்ணது.. ப்ரெட் பிட்ஸா வித் கோக்..ம் எடுத்துக்கோ” என்றுரைக்க, ஏதும் பேசாமல் கண்களில் காதலுடன் ஒன்றை எடுத்தான்.
அவன் மௌனமாக அவள் செய்த புது டிஷ்ஷான “ப்ரெட் பிட்ஸா”வை… எடுத்து ஒரு கடி கடிக்க.. அவள் கண்கள்… அவன் தன் உணவுக்கு என்ன சொல்லப் போகிறான் என்ற எதிர்பார்ப்புடன்.. அவனது முகத்தையே பார்த்திருந்தது.
அவளது எதிர்பார்ப்பு உணர்ந்து அவனும்.. வேண்டுமென்றே போலியாக, முகத்தை ஒரு மாதிரி கோணலாக்க, தன் நகங்களை டென்ஷனுடன் கடித்துக் கொண்டிருந்தவளின் முகமும் கொஞ்சம் கொஞ்சமாக வாடலாயிற்று.
அதைக் கண்டு சட்டென சிரித்தவன், அவள் கன்னத்தை ஒற்றைக் கையால் தாங்கி, இதமாக “நல்லாருக்கு… என் ஷக்தி பண்ணது ரொம்ப நல்லாருக்கு…”என்றுரைக்க ஒரு தரம் தன் இமைகளை மூடித் திறந்து.. அவனது பாராட்டை வாங்கிக் கொண்டாள் ஷக்தி!!
கோக் டின்னை திறந்து வாயில் கவிழ்த்துக் கொண்டவன், “பியர் இருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்குமே?”என்றான்.
அதிர்ச்சி மேலோங்கிய குரலில், “நீ குடிப்பியா இளா?..”என்று கேட்டாள்.
“சேச்சே…நான் விளையாட்டுக்கு சொன்னேன்டி… குடிக்குறது.. அம்மாவுக்கு பிடிக்காது.. நோ ஸ்மோக்கிங்.. நோ ட்ரிங்கிங்..”என்றான் இளா.
அவனது பேச்சில் வந்த “அம்மா” எனும் பெயர்சொல்லில்.. சட்டென வந்து போனது அன்று ஹாஸ்பிட்டலில் வைத்து சந்தித்த இளாவின் அம்மா. “ஓஹ்… உங்க அம்மாவை உனக்கு ரொம்ப பிடிக்குமா இளா?..” என்று கேட்டாள் ஷக்தி.
தன் காதலி ‘அம்மாவைப்’ பற்றி கேட்டால் எந்த ஆண்மகனுக்குத் தான் பிடிக்காமல் போகும்? அவனுக்கும், தன் அம்மாவைப் பற்றி கேட்கும் அவளை ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது.
“ம் ஆமா.. அப்பா…. தம்பி பிறந்ததும் இறந்துட்டாரு.. அம்மாவுக்கு அப்போ இன்னும் வயசு இருந்தது.. நாங்களும் சின்னப்பசங்க.. அவங்க விரும்பியிருந்தால் இன்னொரு கல்யாணம் பண்ணியிருக்கலாம்.. ஆனால் இல்லை.. அவங்களும் படிச்சு.. களனி யுனிவர்ஸிட்டியில் “பாலிடிக்கல் சயின்ஸ்” டிபார்ட்மென்ட்டில் ப்ரோபசரா ஆனது மட்டுமில்லாமல்.. என்னையும், ஆதியையும் வளர்த்து ஆளாக்கினாங்க… நாங்க இன்னைக்கு இந்த நிலைமையில் இருக்கோம்னா.. அதுக்கு என் அம்மா தான் காரணம் ஷக்தி!!” என்று இளா… அவளது அத்தையைப் பற்றிச் சொல்லச் சொல்ல.. அவர் மேல் நல்லபிப்பிராயம் கூடிக் கொண்டே போனது அவளுக்கு.
அவரது கல்வி தான்.. அவருக்கு ஒரு அரசாங்க மேலதிகாரி போன்ற ஓர் கண்ணியமான தோற்றத்தைக் கொடுக்கிறது என்பது புரிந்தது அவருக்கு. இருந்தாலுமே கூட.. அன்று அவர் ஹாஸ்பிட்டலில் வைத்து பார்த்து வைத்த அந்த.. உறுத்தல் பார்வை ஒரு பக்கம் இடிக்கவே செய்தது.ஆளை எடை போடும் ஓர் ஆழமான பார்வை அது!!
அவனைப் பார்த்து ஸ்நேகமாகப் புன்னகைத்து, “என்னை உங்கம்மாவுக்கு இன்ட்ரோ கொடுக்குறியா இளா?..”என்று கேட்டாள் அவள்.
“கண்டிப்பா… ‘இந்த அழகு பதுமைதான்மா உங்க மருமகள்’னு ஒரு நாள் அறிமுகப்படுத்தி வைக்குறேன்” என்றான் அவன்.
அவனது முரட்டு உள்ளங்கைகள் தந்த கதகதப்பில்.. அவளது இமைக்குடைகள் மெல்ல தாழ்ந்தது. “தேங்க்ஸ் டீ பொண்டாட்டி..இந்த ப்ரெட் பிட்ஸா என்ட் கோக்’க்கு”என்றான் மீண்டும் அந்த கோக் டின்னை எடுத்துப் பருகிய வண்ணம்.
அவனது “பொண்டாட்டி” என்ற அழைப்பில் உள்ளே அடிவயிற்றில் படபடவென இறக்கை விரித்து பறந்தது போல ஓர் காதலுணர்வு தோன்றி மறைந்தது ஷக்திக்கு. “பொண்டாட்டியா?..”-அதை மறைத்து அதிர்ச்சி பொங்கும் குரலில் கேட்டாள் அவள்.
“ம்.. ஆமா.. இதைப் பார்க்குறப்போ.. இராத்திரி பசியுடன் வரும் கணவனுக்கு செர்வ் பண்ற பொண்டாட்டி ஞாபகம் வருது..நீ என் பொண்டாட்டி தான்டீ!!” என்று.
ஆண்களின் மென்குரல் அழகு!! அதிலும் தான் விரும்பும் ஆடவனின் மென்குரல்?? பெண்மையில் தீ மூட்டச் செய்யும்!! தாபத்தைச் சுரக்கச் செய்யும்!!
அவளுள்ளும் தாபம் பிறந்தது;சுரந்தது. கண்களில் காதலுடன் கூடிய ஓர் ஆசை மயக்கம் குடி கொண்டது. அவனெதிரே.. முழந்தாளிட்டு அமர்ந்திருந்தவள்.. தற்போது ஓர் தவழும் குழந்தையாக உருமாறி.. கைகளால் அடிமேல் அடி வைத்து அவனை நாடிப் போனவள்… தாபம் சிந்தும் கிறக்கமான குரலில், “பொண்டாட்டி இன்னும் ஒண்ணும் செய்வா?” என்றுரைக்க… அவனுக்கோ அவள் குரல், அவள் சொற்கள் எல்லாம் ஏதோவொன்றை உணர்த்தியது.
சட்டென பின்னே சாய்ந்து சுவரோடு சுவராக ஒன்றியவன், கிட்டத்தட்ட கதறும் குரலில், “ஹேய்!!! என் கற்புக்கு பங்கம் ஏற்படுத்திடாதேமா.. கல்யாணத்துக்கு அப்புறம் தான் இது எல்லாம்!!..”என்றான்.
அவள் கண்களில் கோபம் எட்டிப்பார்க்க.. இவன் கண்களிலோ அச்சப்படபடப்பு தோன்றிக் கொண்டிருந்தது. இதை அறியாத அவளோ, சலித்த குரலில், “பெருசா யோசிக்காதே பேபி..ஒரு சிங்கிள் கிஸ் தான் கொடுக்கப் போனேன்.. உனக்கு வேணாம்னா.. எனக்கும் வேணாம்.. கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம்..” என்றாள் .
அவனது விழிகளோ தற்போது, தன் முகத்துக்கு மிக மிக அருகாமையில்… அவளது சிவந்த ஈரமான அதரங்களையே தான் பார்த்துக் கொண்டிருந்தது.
தாபம் கொண்ட ஆண்மகனுக்குத் தலைவியவளின் அதரங்களின் அசைவு புரிந்ததேயொழிய.. அதன் வழியாக வந்த சொற்கள் தான் புரியவேயில்லை.
ஆண்மகன் அவன் அந்த நள்ளிரவில் ஒரு தீயாகப் பற்றிக் கொண்ட சமயம். அவள் பேசிக் கொண்டிருந்த நேரம் அவள் இடையுடன் கையிட்டு.. தன்னை நோக்கி படாரென்று ஓர் இழு இழுத்தான் இளா.
அவனுக்கோ அவளது சிவந்த அதரங்களைத் தவிர.. பிறிதொரு பொருள் அங்கே இருப்பதாய் தோன்றாது போகவே.. ஆவேசத்துடன் தாவி.. அவளது கீழிதழைக் கவ்விக் கொண்டான் அவன்.
தன்னுடலில் மின்சாரம் தாக்கியது போல ஓர் அதிர்வை.. அவன் முரட்டு அதரங்கள் தன்.. அதரங்களோடு முத்தயுத்தம் புரிகையில் உணர்ந்தாள் கன்னியவள்!! அவளுக்குள்ளே.. அந்த ஒற்றை முத்தத்தில் எங்கெங்கோ பற்றிக் கொண்டது. அவனது வேகத்தில் அந்தரத்தில் கை நீட்டி காற்றை இறுக்கிப் பிழிந்தாள் அவள். இறுக அணைத்துக் கொண்டாள் ஷக்தி.
அன்று கூடாமல் கூடல் சுகம் தரும்.. காதலின் பாலபாடமான முத்தத்தைப் பற்றி அறிந்து கொண்டாள் ஷக்தி!! ஒருசில மணித்துளிகளாக நீண்டு கொண்டே போனது அந்த முத்தம்! காதலனும், காதலியும் ஒரு மனநிலை பெற்று.. ஒருவரிலிருந்து ஒருவர் பிரிந்த நேரம்… சிவந்து வீங்கிப் போயிருந்தது அவள் கீழுதடு.
அவனைக் கண்கொண்டு நிமிர்ந்து பார்க்கவே கூச்சம் வந்து தடுத்தது ஷக்தியை. மெல்ல தலை தாழ்த்திய வண்ணமே அவள் சொன்னாள், “யாரோ கற்பு..கிற்புன்னு பேசினமாதிரி காதில் விழுந்தது!!” என்று.
அவனோ தலைகோதியவனாக அசடுவழிய புன்னகைத்தான். அவன், ஷக்தியின் இளங்கோ!!
****************************
கொழும்புப் பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டதன் பின்பு!
எந்தவித தங்குதடையுமின்றி.. வழமை போல சாதாரணமாகவே இயங்கிக் கொண்டிருந்தது கொழும்புப் பல்கலைக்கழகம்.
அங்கே ஆடிட்டோரியத்துக்குப் பக்கத்தில் இருந்த கேன்டீனில்.. ரொம்ப நாட்களுக்குப் பிறகு.. தன் நண்பர்களான ஆனந்த், கதிர், விமல்ராஜ், ஹரீஷ், ராகவ் என் ஒரு பத்துப் பதினைந்து பேர் அடங்கிய ஒரு கும்பலுடன் அமர்ந்து.. சாப்பிட்டுக் கொண்டே ஊர்வம்புகள் பேசி சிரித்துக் கொண்டிருந்தான் இளா.
பக்கத்தில் அமர்ந்திருந்த ஆனந்தின் கண்களோ.. ஹேர் ஜெல் வாசமும், சென்ட் வாசனையும் கமகமக்க.. தன் முறுக்கேறிய கைத்தசை நார்கள் தெரியுமளவுக்கு.. ஸ்லிம்பிட் டீஷேர்ட் மற்றும் டெனிம் அணிந்து.. மேசையில் ஒரு முழங்கை ஊன்றி.. மறுகையால் தொடையைப் பிடித்துக் கொண்டு.. ஸ்மார்ட்டாக அமர்ந்திருந்த இளாவையே ஆராய்ந்து கொண்டிருந்தது.
காதல் ஒரு மனிதனை எப்படியெல்லாம் மாற்றுகிறது? முன்பெல்லாம் ஏனோதானோ என பேன்ட்டும், சொக்காவும் அணிந்து வரும் இளங்கோவா இது? என்று பல கேள்விகள் எழுந்தது அவனுக்கு.
ஷக்தியின் காதல் தந்த சக்தியை.. இளங்கோவின் வதனத்திலும்.. அதில் உறைந்திருந்த சிரிப்பிலும் கண்டான் ஆனந்த்.அந்நேரம் பார்த்து கேன்டீனிற்குள் புயலென நுழைந்தான் அர்ஜூன்.
அவன் கண்கள் கோபத்தில் செம்மை பூத்திருக்க.. கை முஷ்டி இறுகப் பொத்தப்பட்டிருக்க.. வேக எட்டுக்கள் வைத்து.. இளாவை வந்தடைந்தான், இறுக பொத்தப்பட்ட முஷ்டியால்.. இளாவின் வாய்க்கே ஓர் குத்து விட்டான் அர்ஜூன். அந்த அடியில் அவன் உதடுகளிலிருந்து இலேசாக இரத்தம் எட்டிப் பார்க்க, பதறிப்போன ஆனந்தும், அவன் சகாக்களும்.. அர்ஜூனின் சட்டைக்காலரை சடாரென்று பற்றியிழுத்து, “ஏய்!!”என்று எகிறினர்.
ஆனந்தைப் பார்த்து, “மச்சி வேணாம்.. இதை நானும் அவனும் டீல் பண்ணிக்கிறோம்!”என்று… அவர்களை விலக்கி விட்டு.. அர்ஜூனை குனிந்து நோக்கினான்.
இளாவின் உயரத்துக்கு.. அர்ஜூன் தன் பார்வையை உயர்த்தியே மற்றவனைப் பார்க்க வேண்டியிருந்தது.
இளாவை சுட்டெரிக்கும் விழிகளுடன் நோக்கிய அர்ஜூன், “துரோகி!!!! நான் லவ் பண்ண பொண்ணை என்கிட்டேயிருந்து எடுத்துக்கிட்டேல்ல?.. இது தான் நீ என் நட்புக்கு கொடுக்கும் மரியாதையா??”என்று கேட்டவனின் குரல்.. அந்த கேன்டீன் மண்டபத்தின் சுவரெங்கிலும் பட்டு எதிரொலிக்க… ஒரு கணம் நிசப்தமானது அந்த இடமே!
அர்ஜூன் அடித்த அடியைப் போல மீண்டும் ஓர் அடி அடிக்க இளாவுக்கு எத்தனை நேரமாகும்? அன்று விஜய் ஆள்கள் அழைத்து வந்த நேரம்.. ஒற்றையாளாக அத்தனை பேரை பந்தாடியவன் அவன்!!
அவனுக்கும் அர்ஜூனை அடிக்க கை உயர்த்த வேண்டும் போலத்தான் இருந்தது.
இருப்பினும் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “ நான் த்துரோகியா இருந்தால்.. நீ இந்த க்கலவரத்தை உண்டு பண்ண விஷயத்தை எப்போவோ போட்டுக் கொடுத்திருப்பேன்.. இன்னும் உன் நட்பை மதிப்பதால் தான் நான் உன் மேல கை வைக்காமல் பேசிட்டிருக்கேன்..” என்றவன், அர்ஜூனின் நெஞ்சைத் தொட்டு, “த்துரோகி நான் இல்லை… ந்நீதான்..!!” என்றான்.
அர்ஜூனுக்கோ.. கலவரத்துக்கு நான் தான் காரணம் என்று இளா அறிந்து வைத்திருக்கிறான் என்பதே பீதியைக் கிளப்பியது.
இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு நிமிட சலனத்துடன் தன்னை சமன்படுத்திக் கொண்டவன், “யாரு நான் துரோகியா..?” என்று கேட்டான் அர்ஜூன்.
“ஆமா ஷக்திக்கு நீ பண்ணது துரோகம்… ஷீலாவைக் காதலிச்சிட்டே… ஷக்திக்கும் ப்ரப்போஸ் பண்ணது நீ!!…அது நீ செய்த துரோகம் தான்.. இப்போ சொல்லு யார் துரோகின்னு?”என்று அர்ஜூனிடமே மறுகேள்வி கேட்டான் இளா. இளா.. இதுவரை அர்ஜூன் செய்திருக்கும் தவறுகளை “செய்யாதே” என்று அறிவுரை கூறியிருக்கிறானே ஒழிய.. ஒரு போதும் தட்டிக் கேட்டதில்லை!
ஆனால் என்று விஷயம் ஷக்தியுடன் சம்பந்தப்பட்டிருந்ததோ.. அவன் காதலுடன் சம்பந்தப்பட்டிருந்ததோ.. இளங்கோவால் மௌனமாக இருக்க முடியவில்லை. அதிலும் அர்ஜூனால், ‘இளா துரோகி!’ என்று வேறு முத்திரை குத்தப்பட அதைத் தாங்க முடியவில்லை அவனால்!! தொடர்ந்து பேசிக் கொண்டே போனான் இளா. இதுநாள் வரை நண்பனிடம் சொல்லாத பல விஷயங்களை அன்று.. அர்ஜூனிடம் ஒப்புவித்துக் கொண்டிருந்தான் இளா.
இது தான் அவர்களின் கடைசிபேச்சு என்பது போல இருந்தது அவர்களுக்கிடையிலான உரையாடல். நிஜமும் அது தான். இந்த கேன்டீனில் தான் அவர்களது இறுதிப் பேச்சுவார்த்தை நடந்தேறியது. அதன் பிறகு அர்ஜூனும், இளாவும் எங்கு கண்டாலும் பேசிக் கொள்ளவேயில்லை.
அர்ஜூனை கண்ணுக்கு கண் நோக்கியவன், சற்றே காட்டமான தொனியில், “அவளை நீ உண்மையாக காதலிச்சிருந்தால்.. நட்புக்காக காதலை விட்டுக் கொடுத்திருப்பேன்…. ஆனால் நீ?? அவளை யூஸ் என்ட் த்ரோவாகத் தானே யூஸ் பண்ண?? .. உன் வேலை முடிஞ்சதும் கழட்டிவிட தானே ஐடியா பண்ண?? ..”என்று கேட்க அர்ஜூனிடம் நிஜமாகவே பதிலில்லை.
ஆயினும்.. ஷக்தி அர்ஜூனுக்கு சில்லறை விஷயம் தான்! இருப்பினும் ஷக்தி அன்று ஹாஸ்பிட்டலில் வைத்துப் பேசிய, “அட் அ டைமில் பல பொண்ணைக் காதலிக்குறவன் ஆம்பளை இல்லை!! .. தன்னை நம்பி வந்த பொண்ணை கடைசி வரைக்கும்…. கைவிடாதவன் தான் ஆம்பளை… இளா ஆம்பளை!!.. இப்போ சொல்றேன்.. நான் இளாவைத் தான் காதலிக்குறேன்.. ஐ லவ் ஹிம்..!”- என்ற ஷக்தியின் குரல்.. இந்த இரண்டு மாதங்களாக அலைக்கழித்துக் கொண்டேயிருந்தது.
எப்படி ஒரு பொட்டச்சி.. தன்னை “ஆம்பளை இல்லை” என்று சொல்லலாம் என்பதே.. மீண்டும் மீண்டும் அவன் நினைவுகளுக்கு வந்து உசுப்பேத்திக் கொண்டேயிருந்தது. அதன் விளைவே காலேஜ் தொடங்கியதும் அர்ஜூனின் இந்த எகிறல்!!! அடுத்து பேசும் போது இளாவின் குரல் மென்மை எய்தியிருந்தது.
“ஆனால் என் காதல் அப்படி கிடையாது அர்ஜூன்!!… லுக் அர்ஜூன்!!.. நீ காதலிச்ச பொண்ணை நான் எடுத்துக்கிட்டேன்னு சொன்னால் அது தப்பு!! … நான் லவ் பண்ண பொண்ணை.. தான் நீ எடுத்துக்கிட்ட.. லைக் யூ டிட் டு விஜய்… ஆனால் என்ன? விஜய்யும், ஷீலாவும் காதலிக்குறது தெரிஞ்சு.. ஷீலாவுக்கு ஸ்கெட்ச் போட்ட!!.. நான் ஷக்தியைக் காதலிக்குறது தெரியாமல்.. ஷக்திக்கு ஸ்கெட்ச் போட்ட!!” என்றுரைக்க, விழிகளும், புருவங்களும் ஒருசேர இடுங்க, “என்ன புதுக்கதை சொல்ற?”என்று கேட்டான் அர்ஜூன்.
முன்னாடி இருப்பவன் துரோகி என்பதையும் மறந்து.. பழைய ஸ்நேகிதனாக அர்ஜூனைக் கொண்டானோ இளா? அவன் குரலில் ஸ்நேகபாவம் துளிர்த்தது.
“ஆமா லவ் எட் ஃபர்ஸ்ட் சைட்ல எனக்கும் நம்பிக்கை இருந்ததில்லை.. ஷக்தியைப் பார்த்ததும் அந்த எண்ணம் மாறிச்சு.. அவளைக் கண்ட நாளிலிருந்து காதலிக்குறேன் அர்ஜூன்.. உன்னை மாதிரி டைம்பாஸ்க்கு கிடையாது..உனக்கு ஆயிரம் ஷக்தி கிடைக்கலாம்..ஆனால் இந்த ஜென்மத்தில் ஷக்தி ஒருத்தி கூட தான் என் வாழ்க்கை..” என்று கூறுவதைக் கேட்டு… நண்பனின் காதலின் உண்மைத்தன்மையில் அங்கிருந்த ஆண்கள் எல்லாரும் இளகிப் போய் நின்றிருந்த சமயம் அது.
ஆனால் முன்னாடி நின்றிருந்த அந்த கருங்கற்பாறை மட்டும் இளகவேயில்லை.
“ ஓகே புரியுது… எனக்கு ஆயிரம் பொண்ணுங்க கிடைப்பாங்க..ஆனால் உனக்கு இந்த ஷக்தி கிடைப்பதே அபூர்வம்.. ஸோ.. இவளெல்லாம் ஒரு பீஸ்னு தூக்கிப் போட சொல்ற..?” என்றான் அர்ஜூன்.
போயும்.. போயும் ஒரு பெண்ணிடம் தோற்ற மனமல்லவா? அதை ஒத்துக் கொள்ள விடாமல்… இப்படி இளக்காரமாக அவளைப் பற்றிப் பேசி இன்பம் காண வைத்தது அவனை!
சட்டென ஒரு குறுஞ்சிரிப்பு சிந்தி.. வாய் மூடிக் கொண்ட இளா, “இல்லை…. மெய்யாலுமே உன்னை… ‘வேணாம்’னு தூக்கிப்போட்டது ஷக்தி தான்..இதுவரை உன் நட்பை நான் மதிச்சேன்.. நீ நல்லவனோ, கெட்டவனோ.. ஒரு நண்பனா நான் எப்போவும் உன் கூட இருந்தேன்..எப்போ… நீ என்னை துரோகின்னு பொய்க்குற்றம் சொன்னியோ?… அப்போவே நமக்கிடையில் இருந்த நட்புக்கயிறு அறுந்திரிச்சு அர்ஜூன்!!…
உன் கூட இனியும் நட்பாயிருந்தால்.. அது என் ஷக்திக்கு நான் செய்யும் பெரிய தவறாகப் போயிரும்..
என் பின்னாடி ஒரு கேங்.. உன் பின்னாடி ஒரு கேங்..அந்த ஷீலா பாய் பிரண்ட்… விஜய் மாதிரி கேங் வோர் பண்ண நீ ரெடின்னா.. நானும் தயார் தான்.. ஆனால் ஏற்கனவே கடைசி வருஷ படிப்பு.. இரண்டு மாசம் தள்ளிப் போயிருச்சு.. திரும்பவும் கேங் வோர் வந்து படிப்பு தள்ளி போக வேணாம்னு பார்க்குறேன் ..” தன் ஆதங்கம் அனைத்தையும் அமைதியாக கொட்டினான்.
‘சண்டைன்னா சண்டை.. சமாதானம்னா சமாதானம்!!’என்று சொல்லும் இளங்கோவையே நிர்மலமான முகத்துடன் பார்த்திருந்தான் அர்ஜூன்.
இறுதியாக அர்ஜூனைக் கடந்து போகும் முன்னர்.. அவன் தோளில் கை வைத்த நெடியவன், “நீ புத்திசாலின்னு நினைக்கிறேன்… யோசிச்சு முடிவெடு.. குட் பாய்” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
தன்னை எள்ளி நகையாடி விட்டு..ஒரு பெண்ணுக்காக நட்பைத் தூக்கியெறிந்து விட்டு செல்லும் இளாவினால்.. எழுந்த கோபாவேசத்தை அடக்க.. கை முஷ்டி மடக்கி.. கழுத்து நரம்புகள் புடைக்க… நின்றிருந்தான் அர்ஜூன்.
அர்ஜூனுடன் நட்பை ‘ப்ரேக்கப்’ செய்து கொண்ட இளா.. நேரே சென்றது தன் காதலியைத் தேடித் தான். அவள் முற்பகல் வேளைகளில் லைப்ரரியில் இருப்பதை அறிந்து.. நூலகத்திற்கு சென்றவனின் விழிகளில் பட்டாள்…
புத்தக ராக்கையிலிருந்து புத்தகம் எடுத்துக் கொண்டிருந்த ஷக்தி.
அரவமேயெழுப்பாது… அவள் புத்தகம் எடுத்து விட்டு திரும்பும் வரை.. அவள் பின்னாலேயே கமுக்கமாக, இதழ்களில் உறைந்த ஓர் மாயக்கண்ணனின் சிரிப்புடன் நின்றிருந்தான் அவன்.
அவளும், அவன் எதிர்பார்த்தது போலவே புத்தகத்துடன் திரும்ப.. அங்கே ஆஜானுபாகுவாக நின்றிருந்த இளாவைக் கண்டதும்.. பதறி பின்வாங்கி.. புத்தக ராக்கையில் தன் தலையை.. அன்று போல இடித்துக் கொள்ளப் போனவளை.. சட்டென்று கை நீட்டி பின்னந்தலையில் கை வைத்து அடிபடாமல் காத்தான் அவன்.
நெஞ்சு மத்தியில் கை வைத்து பெருமூச்சு விட்டவள், அவனது இடது தோள்புஜத்துக்கு செல்லமாக ஓர் தட்டு தட்டி, “இப்படி தான் பின்னாலே வந்து சொல்லாமல்.. கொள்ளாமல் நிற்பியா? பயந்துட்டேன் தெரியுமா?”என்று உரைக்கவும்.. அப்போதும் கூட இதழ்களில் உறைந்த புன்னகை மாறாமல்.. அவளது விழிகளையே காதலுடன் பார்த்த வண்ணம் நின்றிருந்தான் இளா.
அவனது மந்தகாசப்புன்னகையில் மனம் லயித்துப் போனவளின் கண்களுக்குத் தட்டுப்பட்டது அவன் இதழோரம் துளிர்த்திருந்த இரத்தம்!
அதைக் கண்டு.. அந்த வலி தன் வலி போல பதறியவள், “என்னடா இது இரத்தம்?..”என்றவள்,தன் துப்பட்டாவின் நுனியை எடுத்து.. அவனது இரத்தத்தை துடைத்துக் கொண்டே கலங்கிய முகத்துடன் அவனைப் பார்த்தாள்.
அவள் கரிசனை.. அந்த அன்பு.. அன்பில் இருந்த காதல்.. அவ்வாண்மகனின் இதயத்தைப் பெயர்த்து வந்து.. அவன் காலடியில் விழ வைத்தது.
“அது ஒண்ணுமில்லைமா விழுந்துட்டேன்..”-உண்மையை சொல்ல விரும்பாமல்.. லாஜிக்கே இல்லாமல் கதை விட்டான் இளா.
அதைக் கேட்டு புருவம் நெரித்தவள், அவனை போலியாக முறைத்துப் பார்த்து, “யாருகிட்ட கதை விடுற?.. இப்போ நீ சொல்லப்போறியா?.. இல்லை ஆனந்த் அண்ணாக்கிட்ட கேட்கவா?..” என்றவள், அங்கிருந்து நகர முயல.. அதற்கு விடாமல் அவள் கையைப் பற்றிப் பிடித்துக் கொண்டான் அவன்.
“இரு.. இரு அர்ஜூன் தான் அடிச்சான்..” என்று படபடப்பாக மொழிந்தவன்.. கேன்டீனில் நடந்த விவகாரங்களை ஒன்று விடாமல் கூறினான். அதைக்கேட்டு கோபம் பொங்க.. அவனை உறுத்து விழித்தவள், தன் காதலன் அடி வாங்கியதை தாங்க மாட்டாமல், “இரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சிருக்கான்.. நீ சும்மாவா வந்த?..”என்று கேட்டாள்.
“இல்லைடீ..”என்று அவள் கைகளிரண்டையும் பற்றி.. அவன் சமாளிக்க முயல.. அப்போதும் விடவில்லை அவள்.
“என்ன இல்லைடீ? இந்த அடியை வாங்கிட்டு.. நீ சும்மா வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? நீ துரோகி தான்னு.. ஏத்துக்கிட்டதா அர்த்தம்?”என்றாள் அவள்.
“விடு அர்ஜூன் தானே அடிச்சான்..”-அப்போதும் கூட.. அர்ஜூன் மேல் அவன் வைத்திருந்த பாசம், கொஞ்சநஞ்சமாகவேனும் புலப்பட்டது இளாவின் பேச்சில்.
“அவன் உனக்கு தான் பிரெண்ட்!!.. எனக்கு இல்லை..!!”என்றவளுக்கோ..தன் ‘பேபி’ மேலேயே கை வைத்து விட்டான் என்ற ஆத்திரம்!! கவலை!! எரிச்சல்!! கோபம்.. எல்லாமே.
இளாவின் இடது முன்னங்கையை உரிமையுடன் பற்றிக் கொண்டவன்… தீயென உருமாறி… உஷ்ணத் தகிப்புடன்.. அர்ஜூனை சுட்டெரிக்கும் விழிகளுடன்.. அர்ஜூனைத் தேடிப் போனாள்.
வழியில் இளா, “ஷக்தி.. எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்.. எங்கே போற? ஷக்தி..நான் சொல்றதைக் கேளு!!” என்று புலம்பிக் கொண்டே அவளுடன் சென்றான். ஆடிட்டோரியத்துக்கு பக்கத்தில் இருந்த கோரிடோர் ஓரமாக நின்று.. யாருடனோ செல்லில் பேசிக் கொண்டிருந்தான் அர்ஜூன்.
அவன் நேரெதிரே போய் நின்றதும் தான் தடைப்பட்டு நின்றது அவள் நடை. இளங்கோவுமே எதிர்பார்த்திராத வகையில்.. தன் ஒட்டு மொத்த பலத்தை எல்லாம் திரட்டி.. பளாரென்று ஒரு அறை.. வைத்திருந்தாள் அர்ஜூனின் முரட்டு கன்னத்துக்கு.
அவனோ அடிவாங்கிய கன்னத்தைத் தாங்கிக் கொண்டு ஷக்தியை வெறித்துப் பார்க்க, இவளோ, சுட்டு விரல் காட்டி எச்சரிக்கும் தோரணையில், “நீ என்னை ஏமாத்தியதற்கோ.. இல்லை வெளியாட்களைக் கூட்டி வந்து கலவரம் உண்டாக்கி நரிவேலை பார்த்துக்கோ… இல்லை இந்த அடி.. .. இது என் இளாவை அடிச்சதுக்கு.. உன் வாலை இத்தோடு சுருட்டிக்கோ.. இல்லை ந்நர்றுக்கிடுவ்வேன்..”என்று அழுத்தி சொன்னவளை.. விழிகள் விரிய பார்த்திருந்தனர் இரு ஆடவர்களும்.
ஒருத்தன் திருப்பி அந்த பெண் மேல் கை வைத்தால்.. இளா தன்னை எதிர்க்கக் கூடுமே என்ற ஆத்திரத்தில் பார்த்திருக்க.. இன்னொருவன்… காலேஜ் வந்த நாளில் ஒன்றும் தெரியாத பாப்பா மாதிரி இருந்த தன்னவளா… தன் மேல் கை வைத்ததற்காக அர்ஜூனைத் தைரியமாக அடித்தது என்று பார்த்திருந்தான்.
அர்ஜூன் ஸ்தம்பித்துப் போய் நிற்க.. இவளோ இளாவின் கையை மீண்டும் பற்றி, “நீ வா இளா!!” என்றவள் அவனை அழைத்துக் கொண்டு சென்றாள்.
அர்ஜூனை விட்டு நகர்ந்ததும் ஆடிட்டோரியத்துக்கு பின்னாலிருக்கும் குட்டி அறைக்கு தன் காதலியை அழைத்துச் சென்ற இளாவின் வலிய மார்புக்குள் புதைந்து போனது அவள் தலை.
ஆம், இளா அவளை இறுக கட்டியணைத்திருந்தான். அந்த அணைப்பு அவன் காதலின் ஆழத்தை சந்தோஷத்தை உணர்த்தாமல் உணர்த்தியது. தன்னை கட்டிக் கொண்டு கிடக்கும் அவளின் மதிவதனத்தை நெஞ்சிலிருந்து பிரித்தெடுத்தவன், “உனக்கு உன் ‘பேபி’யை ரொம்ப பிடிக்குமா..? என்னை யாரடிச்சாலும் திரும்ப அடிப்பியா?” என்று கேட்டான் அவன்.
அவளும்.. அந்த காயம்பட்ட இதழ்களை வலி சுமந்த கண்களுடன் பார்த்துக் கொண்டே, “ம்.. ஆமா..” என்றவளை… மீண்டும் இறுக அணைத்துக் கொண்டான் இளா.
அத்தியாயம்-13
கொழும்புப் பல்கலைக்கழகத்தின்… வாகை மரத்திற்கடியில் பச்சைப் பசேலென பரந்து விரிந்திருந்த புல்வெளியில்… தன் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு… தனியாக அமர்ந்திருந்தாள் ஷக்தி.
இன்று அவர்களுடைய சீனியர்கள் பாஸ் அவுட் ஆகும் நாள்!! இளாவும் காலேஜை விட்டு செல்லும் நாள்!! அங்கே அவள் மனம் உள்ளே ஆழிப்பேரலையாக ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க.. அமைதியாக வெளிக்கு அமர்ந்திருந்தாள் அவள்.
அவள் பின்னே.. காய்ந்த இலை சருகுகள் மிதிபடும் சத்தம் கேட்டது. தன்னைக் காண வந்திருப்பது யாரென புரிந்தது அவளுக்கு. இருப்பினும் அவள் திரும்பிப் பார்க்கவேயில்லை.
ஆம், நினைத்தது போல வந்தது அவள் தலைவனே தான்!! எல்லா இடமும் அவளைத் தேடித் தேடிக் களைத்திருப்பான் போலும், அவள் முதுகுக்குப் பின்னே.. சற்றே மூச்சு வாங்க கேட்டது அவன் குரல்!
“ஷ.. க்திஹ்!! … உன்னை எங்கேயெல்லாம் தேடுறது?… நீ இங்கே வந்து உட்கார்ந்திருக்கியா..?” என்றபடியே.. அவளை அவன் நெருங்கும் ஓசையும் கேட்டது அவளுக்கு. அவள் தன்னைப் பாராது கல்லென அமர்ந்திருப்பது புரிய, இளாவின் ஒற்றை புருவம் மெல்ல ஏறி இறங்கியது.
“ஷக்தி..?”- அவள் உடம்புக்கு ஏதாகிலுமோ என்ற அவன் பயம்.. அவன் குரலில் நன்றாகவே எதிரொலித்தது.
சட்டென்றுத் திரும்பி.. சடாரென்று பாய்ந்து.. அவனை கட்டிக் கொண்டாள் ஷக்தி.அவள் கூந்தலை மெல்ல தடவி விட்டவனாக, உச்சந்தலையில் இதழ் பதித்து, “என்னாச்சு ஷக்தி?”என்று கேட்டான் அவன்.
அவளது கூந்தலில் இருந்து வந்து கொண்டிருந்த ஒரு வகையான மல்லிகை நறுமணம்… அவனைக் கொஞ்சம் கிறங்கடிக்கத் தான் செய்தது. அவள் கைகளோ அவன் வயிற்றையும், முதுகையும் சுற்றியணைத்திருக்க.. அவள் தலை.. அவனது தோளில் இளைப்பாறிக் கொண்டிருந்தது.
சொற்ப விநாடிகள் அமைதியாகக் கழிந்தது. அவனும் தன்னவள் ஏதோ குழப்பத்தில் இருக்கிறாள்.. வாய் திறப்பாள் என்று மௌனமாகக் காத்திருந்தான். காதலித்த இத்தனை நாட்களில்.. ஷக்தியின் அணைப்பு சொல்லும் காதல் தகவல்கள் எல்லாம் அத்துப்படி இளாவுக்கு.
தோளோடு தலை பதித்து, வயிற்றைக் கட்டிக் கொண்டு.. அவள் காட்டும் அமைதி.. எப்போதுமே அவள் மனக்குழப்பத்தைக் குறிக்கும் என்பதை அறிந்து வைத்திருப்பவனாயிற்றே அவன்!!
அதனால் அவளாகவே வாய் திறக்கட்டும் என்று எண்ணிக் கொண்டவன்.. கொஞ்சம் அமைதியை அவளுக்கு அளித்து விட்டு.. அவளது கூந்தல் வாசத்தை முகர்ந்து கொண்டே அமர்ந்திருந்தான். ஒரு கட்டத்தில்.. அமைதியை உடைத்து, அவளாகவே வாய் திறந்தாள் பெண்ணவளும்.
“இளா… நாம காதலிச்ச இத்தனை மாசத்துல…. என்னடா இவள் அர்ஜூனை விட்டு… எனக்கு டக்குன்னு ஓகே சொல்லிட்டா.. அதே போல இன்னொருத்தன் வந்து லவ் ப்ரப்போஸ் பண்ணால்.. என்னை விட்டு அவளுக்கு ஓகே சொல்லிடுவாளோன்னு உனக்குத் தோணியிருக்கா?…”என்று அவள் கேள்வியைக் கேட்டு வைக்க, அமைதியாக அவளது கூந்தலைத் தடவிக் கொண்டிருந்தவனின் கை.. ஒரு நிமிஷம் வேலை நிறுத்தம் செய்து.. மீண்டும் தொடர்ந்தது.
“இது என்ன பேச்சு இது? … நமக்கிடையில் அர்ஜூன் பற்றிய பேச்சுக்கு இடமே தேவையில்லை..என்ட் மோர்ஓவர் ஐ நோவ் யூ மோர் தேன் யூ டூ…ஆமா நீ காலையில் சாப்பிட்டுட்டா வந்த? ”என்று…தன்னவளை அந்த பேச்சிலிருந்து திசை திருப்பக் கேட்டான் அவன்.
“இல்லை இளா பேச்சை மாத்தாதே… ஃபர்ஸ்ட் என் கேள்விக்கு ஆன்சர் பண்ணு…நான்…. அர்ஜூனுக்கு ஓகே சொன்னது உண்மை தான்… ஆனால் எப்போ அவனொரு பொம்பளை பொறுக்கின்னும், என்னையும், ஷீலாவையும் அட் அ டைமில் ஏமாத்திட்டிருந்திருக்கான்னும் தெரிஞ்சதோ…அந்த நேரம்.. அவன் மேல காதல் வரலை.. வெறுப்பு தான் வந்தது.. ஐய்யோ என்னை இவன் ஏமாத்திட்டானேன்னு கவலை வரலை இளா… தப்பிச்சிட்டோமேன்னு ஆறுதல் தான் வந்தது..” என்று தன் மனக்கிடங்கில் இருக்கும் எண்ணங்களை எல்லாம்.. தலைவன் கிளம்பிச் செல்லப் போகும் இறுதிநாளில் எடுத்துரைத்துக் கொண்டிருந்தாள் தலைவி.
அவளுள் ஒரு பயம்.. சின்ன பயம்.. என்ன தான் இளா அவளை உயிருக்குயிராய் காதலித்தாலும்.. அர்ஜூன் மேல் இன்னும் இவள்.. நுனியளவேனும் காதல் கொண்டிருக்கிறாளோ? என்று சந்தேகம் எழுந்து விடுமோ என்ற பயம்!! அந்த பயம் அவளுடைய இந்த மனக்குழப்பத்துக்கும், கேள்விகளுக்கும் அடிப்படையாக இருந்தது.
“தெரியும் ஷக்தி.. அர்ஜூன் மேல் உனக்கு வந்தது காதலே இல்லை.. ஜஸ்ட் இன்ஃபேட்டுவேஷன் தான்… ஏன்னா… அந்த விஜய் ஆட்கள் கூட்டி வந்து.. அர்ஜூனை அடிச்ச அந்த நாளில்.. அர்ஜூன் உனக்கு துரோகம் பண்ணியது.. விஜய் வாயிலாக..தெரிய வந்தப்போ.. ‘ஐய்யோ என் ஷக்தி மனசு ரொம்ப பாடுபடுமே’ன்னு கவலையுடன் நான் உன் கண்களையே தான் திரும்பிப் பார்த்தேன்.. அப்போ உன் கண்களில் கண்ணீரைப் பார்க்கலை.. “யூ ச்சீட்.. யூ கவர்ட்” அப்படின்னு எல்லார் முன்னாடியும் நீ அவன் மேல பொங்கலை… ஜஸ்ட் ஒரு பார்வை.. புழுவைப் பார்க்குறது போலத்தான்.. அவனைப் பார்த்த… இந்தப் பெரிய கண்களில்.. அவன் மேலுள்ள ஒரு வெறுப்பைத் தான்..அன்னைக்கு நான் பார்த்தேன்.. அப்போ தான் புரிஞ்சது அர்ஜூன் மேல உனக்கு வந்தது காதல் இல்லை… ஈர்ப்புன்னு.. ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட் யூ..நீ எதுவும் பேசத் தேவையில்லை..” என்றவன் அவளது செவ்வரி ஓடிய ஈரலிப்பான இதழ்களில் தன் விரல்கள் வைத்து மேற்கொண்டு பேசாதே என்று தடுத்தான்.
அவளா அதற்கு விடுவாள்? “இல்லை இளா… இருந்தாலும் நீ என்னை பேச விடு…”என்றவளின் கண்களில் காதல்ப்பெருக்கைக் கண்டான் இளங்கோ. அதில் விழுந்தவன் தான்.. அவள் கண்களுக்குள் தொலைந்து போனான். அவள் தொடர்ந்து சொன்னாள்.
“அர்ஜூனிடமோ.. இதுவரை எந்த ஆணிடமோ.. ஃபீல் செய்யாத ஒண்ணை.. நான் உன் பக்கத்தில் இருக்குறப்போ ஃபீல் பண்றேன்.. இந்த உலகத்திலேயே நான் தான் மோஸ்ட் லக்கியெஸ்ட் கேர்ள்ன்ற மாதிரி ஒரு ஃபீலை நீயெனக்கு கொடுக்குற இளா.. ஐ கான்ட் எக்ஸ்ப்ளேன் இட் இன் வர்ட்ஸ்..!! அன்னைக்கு அந்த விஜய்யுடைய ஆட்கள்… அர்ஜூனை அடிக்க வந்தப்போ.. என்னை அணைச்சு.. நீ என் அடியை வாங்கிக்கிட்டியே?? … அப்போ தெரிஞ்சது இந்த இளாவின் அருமை!!… அந்த கலவரம் நேரம்… உன் உயிரைத் துச்சமா மதிச்சு என்னைக் காப்பாத்திட்டு..என் ஒரு சொட்டுக் கண்ணீர் பார்த்து.. ‘இது போதும்மா’ன்னு சொன்னீயே… அப்போ புரிஞ்சது இந்த இளாவின் காதல்.. எனக்கான காதல்…!!” என்று அவள் அன்று பேசப் பேச.. அதில் உருகிப் போய் நின்றிருந்தான் அவன்.
எந்த ஆண்மகனின் இதயத்தையும் வளைக்கும் சக்தி கொண்டது.. அவன் மனதுக்கினிய பெண்ணின் காதல்க்குரல்!
அவன் இதயமும் அன்று வளைந்து… உருகிக் கொண்டிருந்தது அவளன்பினால்.
இலேசாக கண்கள் கலங்க, “என் வீட்டில் எனக்கு ஆயிரம் மாப்பிள்ளை பார்க்கலாம்.. என் வாழ்க்கையில் ஆயிரம் ஆண்கள் வந்து போகலாம்.. ஆனால் அவங்க யாரும்.. உன்னைப் போல காதலிக்கவும் மாட்டாங்க.. என்னைப் பார்த்துக்கவும் மாட்டாங்க..” என்று பேசிக் கொண்டே போக, இளாவின் கண்களும் இலேசாகக் கலங்கி.. உணர்ச்சி மேலீட்டினால் முகம் சிவந்து கொண்டு போயிற்று.
அவன் ஷக்தியின் விழிகளைப் பார்த்தான். அதில் இருந்த உண்மை..அவனை நெகிழ வைத்தது. அவள் கண்ணோரம் தேங்கி நின்ற சிறு துளி நீரை.. ஒற்றைப் பெருவிரலால் துடைத்தவன், மெலிதாகப் புன்னகைத்து, “ஹேய் ஃபர்ஸ்ட் இப்படி எமோஷனலா பேசுறதை நிறுத்து..”என்றான்.
அப்போதும் விடாமல், தன் கண்ணிர் பதிந்த அவன் கையின் முன்னங்கைப் பற்றி, மீண்டும் “இரு.. என்னை பேச விடு..!!” என்றவள் அன்று அனைத்தையும் மனம் திறந்து உளறிக் கொட்டிக் கொண்டிருந்தாள் அவனிடம்.
“ஒ… ருவேளை என் வீட்டில்… என் காதலை ஒத்துக்கலைன்னாலும்… நீ கூப்பிட்ட மறுநொடி உன் பின்னாலே வந்துருவேன்… இது சத்தியம்..!!! அதை ஞாபகம் வைச்சுக்கோ…” என்று கூற.. அவள் காதலின் ஸ்தீரத்தைக் கண்டு.. மெய்சிலிர்க்க நின்றான் இளா.
அவளையே ஒரு சில விநாடிகள் பார்த்திருந்தான் அவன். அவன் அழைத்தால்.. அவனுடன் வந்து விடுமளவுக்கு.. அவன் மேல் காதலா? இவன் தன்னை காலம்பூராக வைத்துக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையா?
அந்த கணம்.. அவளது வார்த்தை கேட்டு.. தாருமாறாக ஹோர்மோன் சுரந்தது அவனுக்கு.
எதைப்பற்றியும் யோசிக்காமல்.. சற்றே குனிந்து.. அவள் நெற்றியில் அழுத்தமான முத்தம் பதித்தான் இளா.அவனது மீசைமயிர் இவளது நெற்றியில் குறுக்க, அவள் நெற்றி மென்மை அவன் இதழ்களுக்கு இதமாக இருந்தது.
அவளும் அந்த முத்தத்தை ஏற்பது போல ஒரு கணம் கண்களை மூடித் திறந்தாள். “அப்படியெல்லாம் நடக்காது.. இரு வீட்டார் சம்மதத்துடன் தான் நம்ம கல்யாணம் நடக்கும்..”என்று அவளைத் தேற்றவும் செய்தான்.
“இளா.. இதையெல்லாம் ஏன் சொல்றேன்னு பார்க்குறியா? எப்போவும் இந்த மனசு… இளா ஒருவனை மட்டும் தான் நேசிக்கும்.. நீயும் இதே மாதிரி என்னைக் காதலிக்குறேல்ல? காலேஜ் விட்டு போனதும் என்னை மறந்துட மாட்டியே?”என்று.
இதோ இப்போது சொன்னாளே “காலேஜ் விட்டு போனதும் என்னை மறந்துட மாட்டியே?”என்று. அது தான் அவளது முக்கிய பிரச்சினையே!! காலேஜ்ஜை விட்டு செல்லும் தலைவன்… நூற்றிலொரு வாய்ப்பாக தன்னையும், தன் காதலையும் மறந்து விடுவாளோ என்று தான் அவளுக்கு பயமே!!
அவன் அதைக் கேட்டு, தன் நெற்றியோடு, அவள் நெற்றியை இடித்து,குறுஞ்சிரிப்பொன்றை உதிர்த்தான். பின்பு காதல் மீதூறிய குரலில், “ஹேய்.. உன்னை மறந்துடுவேன்னு நினைக்குறியா? நான்.. உன்னை அடிக்கடி காதலிக்குறேன்னு சொல்லும் ரகமில்லை தான்.. இருந்தாலும் என் காதல் ஸ்திரமானது.. அப்போ சொன்னது தான் இப்பவும்.. இப்போ சொல்றது தான் எப்போவும்… இந்த ஜென்மத்தில் எனக்கு ஷக்தி ஒருத்தி தான்..” என்றான் அவன்.
குரலில் ஈர்க்கப்பட்டவள்.. கலங்கிய விழித்திரையுடன் அவனை நோக்கினாள். அவன் தந்த உறுதிமொழியில்.. சந்தோஷம் வந்து தொற்றிக் கொண்டது அவளுக்கு. அவளைத் தோளோடு கையிட்டு அணைத்துக் கொண்டவன், இலட்சியம் மிகுந்த கண்களுடன், தன் திட்டங்களை எல்லாம் தன் காதலியுடன் பகிர்ந்து கொண்டான் .
“படிச்சு முடிச்சதும்.. வெட்டியா ஊர் சுத்தப்போறேன், அடுத்த பெண்களை சைட் அடிக்கப் போறேன்னு நினைக்குறியா? ம்ஹூஹூம்..இல்லை… உன்னை என் திருமதி.இளங்கோவா ஆக்கிக்கணும்… உன்னை உன் அண்ணாவிடம் நான் பெண் கேட்டு வரும் போது.. என் கையில் ஒரு வேலை இருக்கணும்.. அப்போ தான் உன் அண்ணாவைப் பார்த்து.. ‘என் ஷக்தியை நல்லபடியா வைச்சு காப்பாத்துவேன்.. தைரியமா உங்க பொண்ணை கொடுங்க’ ன்னு கேட்க முடியும்.. வேலைக்கு இந்த டிக்ரி மட்டும் போதுமா?.. இந்த ஷோர்ட் பீரியட்டில்… இப்போ புதுசா அறிமுகமாகியிருக்கும் சின்ன கோர்ஸஸ் படிக்கணும்..அப்போ தான் திருப்தியான வேலை கிடைக்கும்.. ஏன்னா என்னை நம்பி… இப்போ ஒரு பொண்ணு இருக்கா..”என்று எதிர்காலத்தைப் பற்றி திட்டவட்டமாக சிந்திக்கும் இளாவை… காதலுடன் பார்த்திருந்தாள் ஷக்தி.
“அதனால் உன்னை மறந்துருவேன்னு நினைக்காதே.. தைரியமா படி..” என்றவன் அடுத்து பேசுவதை கற்பனை பண்ணவே தித்திப்பாக இருந்தது ஷக்திக்கு. அவள் கன்னத்தை வலது பெருவிரலால் தடவிக் கொண்டே, அவளது மென்மையை அனுபவித்த வண்ணம்,
“நீயும், நானும் முடி நரைச்சு வயசான காலத்தில் .. நம்ம குழந்தை குட்டியையெல்லாம் கல்யாணம் கட்டிக் கொடுத்து.. நமக்குன்னு பேரக்குழந்தைகள் வரும் போது..அவங்களிடம் மனம் திறந்து சொல்ல… நாங்க பண்ணிய காதல் கூத்துக்கள் ஆயிரம் இருக்கும்….” என்று சொன்னான் அவன்.
“காதல் கூத்துக்கள்”- அந்த வார்த்தையே மனோ ரம்மியத்தைக் கொடுத்து அவளுக்கு. வழுக்கை விழுந்த முடி நரைத்த கிழவனாக இளா, அதே போல வெள்ளைமுடி, சுருங்கிய தோல் கொண்ட பாட்டியாக இவள்.. அவர்களைச் சுற்றி.. அவனதும், இவளதும் சாயலை ஒத்த… குட்டிக் குட்டிப் பேரக்குழந்தைகள்!!
சுடுகாடு தேடும் வயதிலும் காதலுடன் வாழ்வை கழிக்கும் இளா – ஷக்தி தம்பதியினரின் நினைவே அவள் முகத்தை நாணத்துடன் சிவக்க செய்தது.
அவள் முகம் விகசிப்பதைக் கண்டு இன்னும் சொன்னான், “உன் லைஃபை நீ திரும்பிப் பார்க்கும் போது.. அதில் ஃபுல்லா.. இந்த, இளாவின் காதலும், இளாவும் இருப்பான்… அதுக்கு நான் கேரன்ட்டி..” என்று.
இறுதி வரை தன்னுடன் இளா இருப்பான் என்று அவன் தந்த உறுதிமொழியே.. அவளுக்கு ஜென்ம சாபல்யம் அடைந்ததைப் போன்ற திருப்தியைக் கொடுத்தது. இன்னும் தொடர்ந்தான் அவன்.
“அதனாலே நீ பெருசா எதையும் யோசிக்காமல்.. நல்லா படி.. இன்னும் உனக்கு இரண்டு வருஷ படிப்பு இருக்கு… அதில் கவனம் செலுத்து…. படிச்சு முடிஞ்சதும் உன் அண்ணா எதிரில் போய்… உன்னை பெண் கேட்கும் போது இந்த இளா.. நல்ல நிலைமையில் இருப்பான்…. புரிஞ்சுதா?”என்று அவன் கேட்க, அவனை அப்படியே கட்டியணைத்து.. முத்தமழை பொழிய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது அவளுக்கு.
“ம்…”- மையல் உணர்ச்சியில் வாய் வார்த்தைகள் வழவெளிவர மறுக்கவே, கண்கள் கலங்க தலையாட்டி வைத்தாள் அவள்.
இருவரும்.. ஒருவர் கண்களோடு மற்றவர் கலக்க…. தன்னிலை மறந்து நின்றிருந்த நேரம்… பெருமளவிலான தண்ணீர்… சர்ரென்று தங்கள் தலையில் கொட்டப்படுவதை உணர்ந்து… காதல் தவம் கலைந்து… உடையும், உடலும் தெப்பமாக நனைந்து.. திடுக்கிட்டு எழுந்தனர் காதல் சந்நியாசிகள் இருவரும்.
அங்கே.. ஆளுக்கொரு கையில் ப்ளாஸ்டிக் பக்கெட்டுடன்… நின்றிருந்தனர் ஆனந்தும், அவனது சகபாடிகளும். ஷக்தியோ தண்ணீரின் குளிர்மையில் கை கால்களை உதறிக் கொண்டு நிற்க, இளாவின் பார்வை கழிவிரக்கத்துடன் தன் காதலி மேல் படிந்து மீண்டது.
ஆனந்த்தோ அவர்கள் நின்ற தோரணையைப் பார்த்து, அவர்களைக் காட்டிக் காட்டி கை நீட்டி நகைத்தவன், “ஹஹஹா… மச்சீ…. என்ன.. புளியமரத்து அடியிலே… உன் புஷ்பலதா மடியிலேவா?..” என்று கேட்க, சுரீரென்று கோபம் போனது இளாவுக்கு. கண்களில் பழிவெறி மின்ன, “டேய் அங்கேயே நில்லு… உன்னை என்ன ப்பண்றேன் பாரு…”என்று ஆனந்த் மேல் பாயப்போக, கைகள் வெடவெடக்க… பக்கெட்டைத் தூக்கி.. தன் மேல் பாய வரும் இளங்கோ மேல் போட்டு விட்டு… கண் மண் தெரியாமல்.. ஓடலாயினர் ஆனந்தும், அவன் சகாக்களும்.
தெப்பமாக நனைந்திருந்தாலும்.. அதைப் பார்த்து.. வாய் விட்டு சிரித்துக் கொண்டே நின்றிருந்தாள் ஷக்தி.
அது எல்லாம் காலேஜ் டேய்ஸின் பசுமையான நாட்கள்.. இப்போது கோபப்பட்டு.. ஆனந்தை அடிக்க ஓடும் இளா.. பின்னொரு கால் அதை நினைத்து… வயிறு வலிக்க வலிக்க சிரிக்கப் போவது தெரியாமல்… அவர்களை விரட்டிக் கொண்டிருந்தான்.
****************
அதன் பின்னர் வந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு…
ஷக்தி தன் கடைசி வருட இளமானிப் படிப்பை.. படித்துக் கொண்டிருந்த நேரம் அது. ஷக்தி… பத்தொன்பது வயதில் பார்த்த.. அதே ஷக்தியாகவே நீங்கள் கற்பனை செய்து வைத்திருப்பின் அது தவறு.
தற்போது அவள் தன்னுடைய டீன் ஏஜ் வயதைக் கடந்து… கீ பர்த்டே கொண்டாடும் அளவுக்கு மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி ரொம்பவே பக்குவப்பட்டிருந்தாள்.
கொஞ்சம் புஷ்டியாகத் தெரிந்தவள்.. தற்போது கொஞ்சம் மெலிந்து.. அந்த உடல்வாகிற்கு ஏற்ப.. கொஞ்சம் உயர்ந்து… அவளுடைய வெண்மை நிறம் கொஞ்சம் மங்கியிருக்க.. புருவங்களின் அடர்த்தி சற்றே குறைந்திருந்தாலும் கூட.. அவள் அழகியே!!
இருப்பினும் எஞ்ஞான்றும் மாறாது இருந்தது அவளுடைய கருகரு விழிகள் மாத்திரம் தான்!! அவன் கண்கள்..அவளது அந்த பரிணாமத்தையும் கொஞ்சம் இரசிக்கவே செய்தது. காலங்கள் சில உருண்டோடி விட்ட போதிலும் கூட.. இளாவின் காதல் அன்று போலவே இன்றும் மாறாதிருந்தது.
தன் தோழி காவ்யாவுடன்.. வெளியே இருந்த உயர்ரக ரெஸ்டாரன்ட்ட்டில் லன்ச் சாப்பிடலாம் என்று எண்ணி.. காலேஜை விட்டு வெளியே வந்தவள்…. ரோட் க்ராஸ் செய்வதற்காக நின்றிருந்த போது… அந்த சாலையின் காற்றைக் கிழித்துக் கொண்டு வந்தது அப்போதைய புது ரக பைக்கான “ஹீரோ ஹொண்டா”.
ரோட் க்ராஸ் செய்யப் போனவளை நோக்கி.. மோதுவது போல வந்த ஹெல்மட் அணிந்த பைக் காரனின் வேகத்தைக் கண்டு… அவள் விழிகள் விரித்து அப்படியே பதுமை போல் நிற்க, ‘க்ரீஈஈச்’ என்ற ஒலியுடன்.. ப்ரேக் போட்டு நிறுத்தியதும் தான்… நெஞ்சில் கை வைத்து பெருமூச்சு விட்ட ஷக்தி, அந்த வண்டிக்காரனைப் பார்த்து கோபம் குமிழிட.. ஏகத்துக்கும் முறைத்து வைத்தாள்.
வந்த பைக்காரனோ… ஸ்டேன்டைப் போட்டு விட்டு… தன் ஹெல்மட்டைக் கழற்ற… அங்கே இளா நின்று கொண்டிருப்பதைக் கண்டு.. ஆனந்தமாய் அதிர்ந்து நின்றவளுக்கு…. தன்னவனைக் கண்டதும்.. கோபம் இருந்த இடம் தெரியாமல் போயிற்று.
இளா அண்ணாவைக் கண்டால் ஷக்திக்கு சாப்பாடும் மறந்து விடும் என்பதை சரியாக ஊகித்து வைத்திருந்த காவ்யா, “சரிடீ.. நீ அப்புறமா வா.. நான் கெளம்புறேன்” என்றவளாக கிளம்பி விட… தன்னை மோத வந்த அந்த குறும்புக்கார மன்னனை நாடி.. போலி முறைப்பொன்றை சிந்தியவளாக வந்தாள் ஷக்தி.
அவள் தன்னருகே வந்ததும்… அவன் மையலுடன் நகைத்து வைக்க… அவன் எதிர்பார்த்திராத நேரம்.. அவன் கைச்சந்துக்கே ஆத்திரம் தீரும்வரை நாலு போடு போட்டாள் அவள்.
“உனக்கு இது விளையாட்டா இருக்கா? .. விளையாட்டா இருக்கா? .. நான் பயந்துட்டேன்.. தெரியுமா?” என்று நிறுத்தாமல் அடித்துக் கொண்டே போனவளின் கையை, சிரித்துக் கொண்டே பற்றி நிறுத்தியவன், “போதும்டீ.. வலிக்குது… எப்போவும் டீஷேர்ட்டில் உன்னை பார்க்க வர்றவன்.. இன்னைக்கு ஃபுல் ஸ்லீவ்ஸ்ல பார்க்க வந்திருக்கேனே.. ஏன்னு விசாரிச்சியா?” என்று கேட்டு வைக்க.. அப்போது தான்.. அவள் விழிகள் அவனை ஏறிட்டுப் பார்த்தது.
வெள்ளை நிறத்திலான முழுக்கை சட்டையும், கறுப்பு நிற பேன்ட்டும், லெதர் ஷூவும் அணிந்தும்.. ஃபேஷன் ஷோ மாடலைப் போல நின்றிருந்த இளா… மெய்யாலுமே ஆணழகன் தான். இருந்தாலும் கண்கள் காட்டிய இரசிப்பை… அவள் வார்த்தைகள் தான் காட்டாமல் போனது.
சிறிது நேரத்திற்கு முன் வேண்டுமென்றே அவன் மோத வந்த கோபத்தை முன்னிறுத்தி, “என்ன விஷயம்?” என்று கறாராகவே கேட்டாள் அவள்.
அதில் சிரிப்பு பொத்திக் கொண்டு வரவே,குறுஞ்சிரிப்பொன்றை அழகாக உதிர்த்தவன், அவளை மென்மையாக நோக்கி, “ஸ்ரீலங்காவில் புதுசா அறிமுகமாகி இருக்கும் சிம் நெட்வொர்க் ஏர்டெல்லில்.. எனக்கு வேலை கிடைச்சிருக்கு….” என்றான்.
ஆமாம், அப்போது தான் ‘பாரதி ஏர்டெல்” நிறுவனம் தன் கிளையை இலங்கையில் ஊன்றியிருந்த ஆரம்ப கட்டம் அது. அதற்கு விற்பனை முகவர்களும், மார்க்கெட்டிங் செய்கிற நபர்களும் ஆயிரக்கணக்கில் தேவைப்பட… தன் படிப்புத் தகுதியை மறந்து அந்த சாதாரண வேலைக்குப் போய் சேர்ந்திருந்தான் இளா.
“மார்கெட்டில் இருக்கும் ஒவ்வொரு கடைக்கும் சிம் தொகையா சப்ளை பண்ணும் சேல்ஸ் ரெப் வேலை தான்.. தகுதிக்கு ஏற்ற வேலையில்லை தான்.. இருந்தாலும்… இன்னும் அம்மாவுக்கு பாரமா இருக்க விரும்பலை ஷக்தி.. அதான் கிடைச்ச வேலையை ஏத்துக்கிட்டேன்.. ஜஸ்ட் அ டெம்ப்ரரி வொர்க் தான்…”என்று கூற.. தன் தாய்க்கு சுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக.. கிடைத்த வேலையை மனமுவந்து ஏற்றுக் கொண்ட இளாவின் செய்கை.. அவன் மேலுள்ள காதலை இன்னும் இன்னும் கூட்டவே செய்தது.
அவனை கண்களாலேயே தழுவியவள், மென்மையான குரலில், “என்ன வேலையா இருந்தால் என்ன? .. அத்தைக்கு பாரமா இருக்கக் கூடாதுன்னு.. நீ இந்த வேலையை ஏத்துக்கிட்டேல்ல.. அது தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு பேபி… கங்கரேட்ஸ்”என்று கை நீட்ட… கை கொடுக்காமல் மார்புக்கு குறுக்காக கை கட்டி நின்று அவளைப் பார்த்தவன்,“கங்ரேட்ஸ் வேணாம்.. முத்தம் கொடு” என்றவனாக கன்னம் திருப்ப, அவளும் சுற்றுமுற்றும் அழகாக திரும்பிப் பார்த்து விட்டு..அவசர அவசரமாக அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள். அதில் உல்லாசமாக உணர்ந்தான் இளங்கோ.
அவளது கண்களையே பார்த்திருந்தவன்.. “உன் கண்ணை அப்படியே பிச்சுத் திங்கணும் போல இருக்குடீ” என்று கூற… அவளது தாபம் சிந்தும் குரலில்… உடலில் இருக்கும் கோடான கோடி மயிர்க்கால்கள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டது.
அவனைப் பார்ப்பதை விடுத்து, அந்த பைக்கின் பெட்ரோல் டேங்கின் பளபளப்பை ஆராய்ந்து கொண்டே, தடவிக் கொடுத்தவள், “வாவ்.. இது என்ன புது பைக்… கம்பெனியாலே தந்தாங்களா?” என்று தன் சின்ன லோலாக்கு ஆட கேட்டாள்.
அவன் தன் மார்பு மேல் கட்டிய கைகளை பிரிக்காமலேயே அவளையே காதலுடன் நோக்கிய வண்ணம், “ம்.. ஆமா… நல்லாருக்கா..?” என்று கேட்டான்.
அவன் கை கட்டிய போது அந்த ஷேர்ட்டையும் மீறி.. முறுக்கேறித் தெரிந்த மார்புத் தசைகளின் இறுக்கத்தைக் கண்டு மதிமயங்கிப் போய் நின்றிருந்தவள், காதோரம் தவழ்ந்த முடியை காதுக்குப் பின் சொருகிக் கொண்டு.. மயக்கம் நிறைந்த குரலில், “ம்.. சூப்பரா இருக்கு..” என்றாள்.
அவள் எதை சூப்பரா இருக்கு என்றாள்? அவனையா? அவளது பைக்கையா? இல்லை முன்பு கேட்ட உடைகளுக்கான காம்ப்ளிமெண்டா? எது எப்படியோ தலைவியின் உள்ளத்தை அவ்வாறே அறிந்து கொண்டான் தலைவன்.
ஹெல்மெட்டை எடுத்து மாட்டியவாறு, பைக் ஹேன்டிலைப் பிடித்துக் கொண்டவன், “சரி வா.. வண்டியில் ஏறு.. ஐய்யா ஜாலி மூடில் இருக்கேன்.. வெளியில் போய் வரலாம்..” என்ற வண்ணம் வண்டியை உயிர்ப்பிக்க.. இவளோ பதறி பின்வாங்கிப் போனாள்.
தலையை வேகவேகமாக ஆட்டி மறுத்தவள், “ம்ஹூஹூம்.. என்னாலே முடியாது..ஆஃப்டர் லன்ச் எனக்கு ரொம்ப இம்போர்டன்டான லெக்சர்ஸ் இருக்கு..” என்றுரைக்க, காதலியின் மறுப்பில் கொஞ்சம் கோபம் போனது இளாவுக்கு.
ஜாலி மூடில் இருப்பவனுக்கு.. காதலியுடன் இன்று உணவருந்தவே வேண்டும் என்ற எண்ணம்!! அதற்கு அவள் “தடா” போடவே, சினத்துடன்.. எஸ்லேட்டரைத் திருகி.. என்ஜினை உறும விட்டவனாக.. விட்டத்தையே பார்த்த வண்ணம் நின்றிருந்தான் இளா.
இது அவன் காட்டும் கோபம்!!. ‘நான் அழைத்தால் நீ வந்தேயாக வேண்டும். இல்லையென்றால் இப்படியே தான் இருப்பேன்” என்று அவன் விடும் அன்பு மிரட்டல்.. அவளுக்கு புரிந்தது.
ஹேன்டிலில் பதிந்திருந்த அவன் மாநிறக்கை மேல்.. தன் மென்மையான கையை பதித்தவள், அக்கம், பக்கம் பார்த்தவளாக, எஸ்லேட்டரை விடவும் இரைந்த குரலில், “சரி.. சரி நான் வரேன்.. ஃபர்ஸ்ட் எஸ்லேட்டரை முறுக்குறதை நிறுத்து…!!” என்று கூறியும் கூட.. அவன் உறுமல் அடங்கவேயில்லை.
அவனை எப்படி அமைதிப்படுத்துவது என்று தெரியாமல்.. நகத்தைக் கடித்துக் கொண்டு திருதிருவென விழித்துக் கொண்டு நின்றவள், ஏதும் பேசாமல் வண்டியில் தாவி ஏறிக் கொண்டு, பின்னாலிருந்து அவனைக் கட்டியணைத்து, “ஐய்யோ ப்ளீஸ்… முதல்ல இப்படி பண்றதை நிறுத்து.. இது யுனிவர்சிட்டி ஏரியா.. செக்யூரிட்டி வந்து விரட்ட முதல்.. வண்டியைக் கிளப்பு!! ” என்று மொழிய, அவள் கட்டியணைத்த போது அவன் முதுகோடு “நச்”சென்று மோதிய அவள் தனங்கள் தந்த சுகத்தில்… உம்மென்றிருந்த முகம் மெல்ல மெல்ல இளகியது இளாவுக்கு.
இறுதியில் மென்மையான சிரிப்பு இதழ்களில் படர.. வண்டியை அங்கிருந்து எடுத்தான் இளா. பல்கலைக்கழக வளாகத்தை விட்டே நகர்ந்து… தாமரைத் தடாக அரங்கு இருக்கும் இடத்துக்கு அவன் வந்த போது தான் சீரான மூச்சு வந்தது அவளிடமிருந்து.
நெஞ்சு மத்தியில் கை வைத்து.. பெருமூச்சு விட்டுக் கொண்டவள், “இப்போ சாருக்கு ஹேப்பியா?” என்று கேட்க, அவனுக்கோ.. அவன் ஷக்தி.. அவள் பைக்கில் ஏறிய சந்தோஷத்தில் வானத்தில் ஜிவ்வென்று பறப்பது போன்ற உணர்வு தோன்றியது.
அந்த சந்தோஷத்தைத்..தன் வண்டியின் வேகத்தில் காட்டிக் கொண்டிருந்தான். இவளோ பதறிப் போனவள்.. அவன் வலிய முதுகோடு தன் தனங்கள் சாய்த்து.. அவன் காதோரம் மென்மையாக, “மெதுவா போ பேபி”என்றது கூட கிலுகிலுப்பை மூட்டியது அவனுக்கு.
அவனும் மெல்ல வேகம் குறைத்து… வண்டியை எடுக்க.. இவள் நாசியோ.. எதிர்க்காற்றோடு தன் நாசி முகர்ந்த அவனுக்கே அவனுக்கென்ற பிரத்தியேகமான வாசனையை உள்ளிழுத்துக் கொண்டவள் ஒரு மோன நிலைக்கு ஆட்பட்டாள்.
வண்டி போய்க்கொண்டேயிருந்ததைக் கண்டவள், மெல்ல முன்னோக்கி சாய்ந்து அவன் காதோரம், “நாம எங்கே போறோம் பேபி?” என்று கேட்டாள்.
அவளது பேபி என்ற அழைப்பில் உள்ளம் ஆர்ப்பரித்தவன்.. கண்ணாடி வழியாக அவளை நோக்கி, “சர்ப்ரைஸ்!!” என்றான். சரியாக கொழும்பின் மேஜஸ்டிக் சிட்டி வரவே… அன்டர்க்ரவுண்ட் பார்க்கிங் பக்கம் விரைந்தது அவன் வண்டி.
மேஜஸ்டிக் சிட்டி. சென்னைக்கு ஒரு மாயாஜால் போல, இலங்கையின் தலைநகரமான கொழும்புக்கு ஒரு மேஜஸ்டிக் சிட்டி.
பலவகையான ஆடை காட்சியகங்கள், ஃபுட் கோர்ட்கள் என்று கொண்டிருக்கும் மல்டிப்ளெக்ஸ் தான் அது. அவன் அழைத்து வந்திருப்பது மேஜஸ்டிக் சிட்டி என்றானதும் உள்ளே உதறல் எடுத்தது அவளுக்கு.
கைகளை பிசைந்து கொண்டு படபடப்பு மீதூறிய குரலில், “இங்கே எதுக்கு கூட்டி வந்த இளா…?” என்று கேட்டாள். அவளைப் போல படபடப்பெல்லாம் அவனிடம் இல்லை. அவள் முன்னங்கையை உரிமையுடன் பற்றிக் கொண்டவன், முன்னோக்கி நடந்த வண்ணம் அவளைத் திரும்பிப் பாராமல், “ஏன்..?”என்று கேட்டான்.
“வந்து.. மேல் ப்ளோரில் அண்ணா இருப்பாரு.. அவருடைய ஷோ ரூம் ப்ரான்ச் ஒண்ணு இங்கே தான் இருக்கு.. இன்னைக்கு மன்டே வேற? கன்பார்மா.. அண்ணா இங்கே தான் இருப்பாரு…” என்று பயத்துடன் அவள் மொழிய, “உன் அண்ணா இருந்தால் எனக்கென்ன? அப்படியே ஒருவேளை மாட்டிக்கிட்டு.. நான் யார்னு கேட்டாலும்.. ‘இது தான் உங்க வருங்கால மச்சான்’னு அறிமுகப்படுத்துறது தானே…?” என்றான் அவன்.
இவளுக்கோ அவன் தில்லில்.. தொண்டையில் அடைத்ததை விழுங்கிக் கொண்டே அவன் முகத்தை அச்சத்துடன் பார்த்தாள்.
“விளையாடாதே இளா… நான் வேற லெக்சர்ஸ் கட் அடிச்சுட்டு வந்துருக்கேன்..” என்றதையெல்லாம் அவன் பொருட்படுத்தவே இல்லை.
அவள் தன்னவள் என்ற உரிமையில் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், “பயப்படாமல் வா.. ஷக்தி.. நான் இருக்கேன்ல?” என்றவன்… அவள் மறுக்க மறுக்க.. உள்ளேயே அழைத்து சென்று விட்டிருந்தான்.
உள்ளே நுழையும் போதே.. கிடுகிடுவென்று நடுங்கத் தொடங்கியது அவளுக்கு. இது காதலிக்கும் எல்லா பெண்களுக்கும் எழும் ஓர் அச்சம் கலந்த தயக்கநிலை. எங்கே தன் குடும்பமோ, உற்றாருமோ, சுற்றமோ தம்மைக் கவனிக்கக் கூடாத விதத்தில் கவனித்து விடுமோ என்று எழும் அச்சம் அது.
அதே தான் அவளுக்கும் எழுந்தது. தன்னை அழைத்துக் கொண்டு.. கீழ் தளத்தில் இருக்கும் “க்ரில் ரெஸ்டாரென்ட்”டுக்கு விரைந்து கொண்டிருந்த, இளாவைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு.
அவளது தோழி காவ்யாவின் காதலன் “ராம்” கூட.. காவ்யாவுக்கு தெரிந்தவர்கள் யாராவது கண்டால்.. காதலியை அம்போ என்று போட்டு விட்டு.. ஓடி ஒளிவதை.. ஷக்தியே பலமுறை கண்டிருக்கிறாள்.
அப்படியிருக்கும் போது அவள் தலைவனின் இந்த அசாத்தியமான தைரியத்தை மெய்ச்சுவதா? இல்லை ‘ஓவர் தைரியம் உடம்புக்கு ஆகாது பேபி’ ன்னு அட்வைஸ் செய்வதா என்று தெரியவில்லை.
எது எப்படியோ.. அவன் காதல் உண்மை. அடிக்கடி சொல்வானே ஓர் வார்த்தை, “இந்த ஜென்மத்தில் ஷக்தி ஒருத்தி கூட தான் என் வாழ்க்கை” என்று. அது நூற்றுக்கு நூறு உண்மை. அதனால் தான் இளா… அவள் உற்றார் முன்.. தன்னை அவளது காதலனாக வெளிக்காட்டிக் கொள்ள தயங்கவேயில்லை.
அவளோ அச்ச மிகுதியில்.. அழும் குரலில் “ப்ளீஸ் … வேற எங்கேயாவது சாப்பிடப் போலாமே ப்ளீஸ் பேபி” என்றுரைக்க… அப்படியே இளகிப் போய் விட்டது வலிய ஆண்மகனின் உள்ளம்.
அந்த நேரம்… ஷக்தி கூறியது போல.. இரண்டாவது தளத்தில் இருக்கும் அவர்களது காட்சியறையில் தான் மேற்பார்வைக்காக நின்றிருந்தார் அண்ணன் பரசுராம். கூடவே.. அண்ணனுக்கு மதிய உணவை வழங்குவதற்காக வந்திருந்த அவர் பொஞ்சாதி மீனாட்சியும்.
அங்கே வந்திருந்த புதுரக ஆடைகளில் கவனம் பதித்திருந்தவருக்கு… மனைவி நாற்பக்கம் கண்ணாடிச் சுவரால் ஆக்கப்பட்டருந்த காட்சியகத்தில் நிற்பது ஓர் பெரும் பொருட்டாகவே தெரியவில்லை.
கண்ணாடி வழியாக கீழே தெரிந்த தளத்தில் போய் வரும் நபர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அண்ணி மீனாட்சியின் கண்களில் பட்டாள் ஷக்தி. அதைப் பார்த்து கண்களை அகல விரித்து.. ஃபோக்கஸ் செய்து பார்த்துக் கொண்டே, பின்புறமாக அந்தரத்தில் கை நீட்டி.. “ஏங்க… இங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்கங்க” என்றழைக்க, பரசுராமரும்.. இருப்பதை போட்டு விட்டு என்னமோ, ஏதோ என்று அங்கே ஓடி வர, கணவனின் கையைப் பிடித்துக் கொண்டவள், “ஏங்க.. அது நம்ம ஷக்தி மாதிரி இல்லை?..”என்று தூரத்தில் நின்றிருந்த ஷக்தியை சுட்டிக்காட்டி கேட்டாள்.
அந்த சமயம்.. இளாவும் ஷக்தியின் வேண்டுகோளுக்கு இணங்கி.. அவள் பேச்சை மதித்து, “சரி வா… பக்கத்து ரெஸ்டாரென்ட் போகலாம்” என்று அழைத்துக் கொண்டு போன நேரம் அது.
ஷக்தியின் பாதி சுடிதாரையும், அந்த இளைஞனையும் மட்டுமே பார்த்த பரசுராம்.. தங்கை மீது பொய்க்குற்றம் சாட்டும் மனைவி மேல் கோபம் கொண்டவராக, “சும்மா கண்டதையும் பார்த்துட்டு உளறாதே… அது வேற யாராவதா இருக்கலாம்.. “நம்ம பொண்ணு” இப்போ காலேஜில் இருப்பா… அப்படி ஊர் சுத்துறவளா.. என் அம்மா அவளை வளர்க்கலை..” என்று பொறிந்து தள்ளி விட முகம் சுணங்கிப் போனது மீனாட்சிக்கு.
“நம்ம பொண்ணு” – பரசுராம் வார்த்தையில் இருந்த ஒற்றை வார்த்தை.. அவர் தன் தங்கையை மகளாக எண்ணுகிறார் என்பதை நிரூபிக்க போதுமானது. மீனாட்சிக்கோ.. “இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு பொசுக்குன்னு கோபப்படுறாரு” என்று எண்ணிக் கொண்டவளுக்கு.. கணவனின் கோபம் உள்ளே கவலையையே கொடுத்தது.
முகத்தைத் திருப்பிக் கொண்டு வீறுநடை நடந்து செல்லும் கணவனின் பின்னாலேயே சென்றவள், “இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி வைய்யுறீங்க? நான் என்ன உங்க அம்மா வளர்ப்பை குத்தம் சொன்னேனா..? அது நம்ம வீட்டு பொண்ணு மாதிரி இருக்குன்னு தான் சொன்னேன்…. அத்தை வளர்ப்பு நீங்க எப்படியோ.. அப்படி தான் உங்க தங்கச்சியும் இருப்பான்னு எனக்குத் தெரியாது..” என்று எதை எதையோ சொல்லி.. அவரை மலையிறக்கிக் கொண்டிருந்தாள்.
ஆனால் ஷக்தி.. தன் அண்ணனின் நினைப்பைப் பொய்யாக்கிக் கொண்டு தானிருந்தாள். காதலிக்கும் அநேகம் பெண்கள் அனுபவிக்கும் இன்னொரு மனநிலை அது.
பெற்றோர், சகோதரரின் அன்பும், அவர் மேல் வைத்திருக்கும் மரியாதையும் மலை போல இருந்தாலும்.. அந்த வயசு…. தன் உள்ளம் தேர்ந்தெடுத்த துணையையே சர்வமுமமாக எண்ணச் சொல்லும்.ஷக்தியும் அந்த பெண்ணின் மனநிலையில் தான் இருந்தாள்.
