என் வினோதமானவனே
அத்தியாயம்– 14
ட்ரஸ்ஸிங்க் டேபிள் முன்னாடி நின்றிருந்தவள்… ஒன்றுக்கு இரண்டு தடவை.. தன் கன்னத்தை அங்குமிங்கும் திருப்பி.. போட்டிருந்த இலேசான டச்-அப் பொருத்தமாக இருக்கிறதா? என்று பார்த்துக் கொண்டாள்.
சும்மாவே ஷக்தி அழகி!! ஒப்பனை தந்த அழகில்.. இன்னும் கொஞ்சம் மிளிர்ந்தவள், தன் புத்தகங்கள் அடங்கிய ஷோல்டர் பேக்கினை மாட்டிக் கொண்டு… அறையை விட்டும் வெளியே வந்தாள்.
ஹாலிலே.. போடப்பட்டருந்த ஒற்றை சோபாவில்.. கைலியும், ஸ்லீவ்லெஸ் பெனியனும் அணிந்து, அன்றைய ‘தினக்குரல்’ பத்திரிகையை விரித்து வைத்துக் கொண்டு, அமர்ந்திருந்தார் அவள் அண்ணன் பரசுராம்.
தன் மன்னவனைக் காணப் போகும் சந்தோஷத்தில்.. கண்களில் கனவு மின்ன, அந்த ஒற்றை சோபாவைத் தாண்டி சென்றவளுக்கு, காதல் மயக்கத்தில் அதில் அமர்ந்திருந்த அண்ணனை விளங்கவேயில்லை.
“ஷக்தி.. சண்டே அன்னைக்கு… எங்கே கிளம்பிட்ட?” என்று அவள் முதுகுக்குப் பின் கேட்ட கணீர் குரலில், தன் நடை தடைப்பட்டு நிற்க, மெல்ல ஸ்லோமோஷனில் அண்ணனை நோக்கித் திரும்பினாள் ஷக்தி.
‘அச்சச்சோ.. அண்ணா ஹாலிலேயா இருக்கிறார்? நான் தான் கவனிக்கவில்லையே?’ என்று சிறு உதறல் எடுத்தது அவளுக்கு.
“வந்து.. இப்போ தான் ஸ்டடி ஹாலிடே விட்டாச்சுல்ல? இன்னும் வன் வீக்ல எக்ஸாம் க்ரூப் ஸ்டடி பண்ணலாம்னு… காவ்யா வீட்டுக்குப் போகலாம்னு இருந்தேன்.. அம்மாக்கிட்டேயும், அண்ணிக்கிட்டேயும் சொல்லிட்டேன்.. நீ.. நீங்க வீட்டில இருக்குறது எனக்குத் தெரியாதுண்ணா.. இஇல்லைன்னா.. உங்க கிட்டேயும் பர்மிஷன் கே.. கேட்டிருப்பேன்…” என்று திக்கித் திணறி கூற, அவர் முகத்திலோ சட்டென கழிவிரக்கத்தின் சாயல்!
தன் மென்மையான குட்டித் தங்கையை.. ‘எங்கே கிளம்பிட்ட?’ என்று கறாராகக் கேட்டு பயமுறுத்தி விட்டோமோ என்றே எண்ணத் தோன்றியது அவருக்கு. பத்திரிகையை மடித்து டீ போய் மீது போட்டு விட்டு, தன் முழு உயரத்துக்குமாக எழுந்து, “ஓ படிப்பு விஷயமா?? … சரி.. அப்போ கிளம்பு.. ஆனால் சீக்கிரம் வந்துருமா!!”என்று உரைக்க, ஷக்தியின் முகத்திலோ பளீர் புன்னகை.
தன் முத்துமூரல்களைக் காட்டி, “சரிண்ணா..”என்றவள், ஹாலிலிருந்தும் நகர முயல, அங்கே விறுவிறுவென நடந்து வந்த அவள் அண்ணி மீனாட்சி, கையிலிருந்த முறுக்கு டப்பாவை அவளிடம் நீட்டி, “ஷக்தி.. இந்தா இதில் முறுக்கு சுட்டு வைச்சிருக்கேன்… உன் ஃப்ரண்டுக்கு கொடுத்துடு..” என்றுரைக்க, அவளும் சந்தோஷமாகவே, “ச.. சரிண்ணி..”என்று பெற்றுக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.
பாவம் அண்ணி!! இது அவள் கேர்ள் பிரண்ட்டுக்கு அல்ல. பாய் பிரண்ட்டுக்கு என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
பைய பைய நடந்து.. அவர்கள் வீட்டுத் தெருவைத் தாண்டி.. பிரதான சாலைக்கு வந்த ஷக்தி.. இளா காத்திருக்கும் படிக் கூறிய பஸ் நிலையத்தில் தன் தலைவனுக்காக காத்திருக்கலானாள். அவள் அங்கே அந்த பஸ் நிலையத்தின் நிழற்குடைக்கு வந்த போது மணி எட்டு பத்து.
அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால், கூட்டம் வேறு கம்மியாக இருக்கவே, யார் கண்ணுக்கும் உறுத்தாது அமைதியாக அவன் வரவைப் பார்த்திருந்தாள் மங்கை.
அவளுக்கு முன்னாடி வந்து அங்கே நின்றிருந்த ஒரு சில ஆடவர்களும் சரி, அவள் வந்த பின்னால் வந்து நின்ற சில பெண்களும் சரி.. அவர்களுக்கான பேருந்து வரவும் ஏறி சென்று விட அவள் மட்டும் தனியாகக் காத்திருக்கலானாள்.
தன் பழைய நோக்கியா செல்லை எடுத்து மணி பார்த்த போது நேரம் ஒன்பது ஐந்து என்று காட்டவே.. உள்ளுக்குள் கவலையும், கோபமும், உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்த சூரிய வெயிலில் நின்று கொண்டிருப்பதால் ஏற்பட்ட எரிச்சலும் மிக நின்றிருந்தவள், ஓரிரு முறை இளாவுக்கு அழைப்பெடுத்து, அவன் தூக்காமல் போகவே கொஞ்சம் சோர்ந்தும் தான் போனாள்.
வருவதாக சொன்ன தலைவன் வராது போகவே…அவளுடைய சிவந்த முகம் கோபத்தில் இன்னும் சிவக்க, கண்களும் கொஞ்சம் கலங்க… ஒரு கையை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு மறுகையால், ஷோல்டர் பேக்கின் வாரினைப் பிடித்துக் கொண்டு தவிப்புடன் அவன் வரும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவன், அவளை அழைத்துச் செல்ல வந்த போது நேரம் ஒன்பதரையைத் தாண்டியிருந்தது. அவளோ அவன் பைக்கில் வந்து நிற்பது கூடத் தெரியாது.. வழியிலேயே நோட்டம் விட்டுக் கொண்டிருக்க, வண்டி ஹாரனை இருதடவை அடித்தான் அவன்.
அதில் பார்வையை எடுத்துத் தன் முன்னே நின்று அநாவசியமாக ஹாரன் அடிக்கும் எவனோ ஒருவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தவள், அங்கே இளாவைக் கண்டு இனிதாக அதிர்ந்தாள்.
இருப்பினும் தன்னை ஒன்றரை மணித்தியாலத்திற்கும் மேலாக.. கால் கடுக்க நின்று காக்க வைத்த அவன் மேல் கோபமும் பொங்க நின்றிருந்தாள் அவள். அவளை உச்சாதி பாதம் வரை ஆசையோடு தழுவினான் இளா.
கோபத்தில்.. இதழ்களை அழுந்த மூடிக் கொண்டிருந்த ஷக்தியின் குவிந்த அதரங்களை.. அப்படியே தாவிக் கவ்வ.. எக்குத்தப்பாக எண்ணம் கொண்டது மனம்!!
தன் ஷக்தியின் கோபம் அறிந்து, அவளை மலையிறக்குவதற்காக, “இன்னைக்கு இந்த சுடியில சூப்பரா இருக்கே ஷக்தி..” என்று சொல்ல.. அப்போதும் புன்னகைக்காமல்.. முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே நின்றிருந்தாள் அவள்.
பின்னே தாமதமாக வந்தவன், ஒரு ஸாரியாவது சொன்னானா? என்ற கவலை அவளுக்கு. அவனை பாராமல் யாருக்கோ காத்திருப்பவள் போலவும், இளா தன்னுடன் பேச வந்த மூன்றாவது மனிதன் போலவும்.. கணக்கே எடுக்காமல் நின்றிருந்தவளை நோக்கி, அவள் கோபம் இரசித்தவனாக அடிக்கடி ஹாரன் அடித்தான் அவன்.
அவனது ஓயாத ஹாரன்.. தனியாக நிழற்குடையின் கீழ் நின்றிருந்த அவள் செவிகளுக்குள் பாய்ந்து எரிச்சலைக் கொடுக்கவே, “ப்ச்” என்று எரிச்சலைக் காட்டியவளாக அவனைத் திரும்பி நோக்க, அவள் பார்வைக்காக காத்திருந்தவனோ, மென்மையாக புன்னகைத்தவனாக, “ஷக்தி வா.. வண்டியில் ஏறு..” என்று அழைத்தான்.
“நான் உன்னை எத்தனை மணிக்கு வர சொன்னேன்?.. நீ எத்தனை மணிக்கு வந்து நிற்குற?” என்று கேட்க, அப்போதும் அதற்கு பதிலாக புன்னகையையே தந்தான் அவன். ஹேன்டில் இருந்த கையை எடுத்து, தன்னிரு காதுகளையும் பற்றி, இரங்கும் குரலில், “ஸாரி..கொஞ்சம் தூங்கிட்டேன்.. வா.. வண்டியில் ஏறு..” என்று கூற, அப்போதும் அவள் கோபம் அடங்கவேயில்லை.
இவள், அவனுக்காக காலையிலேயே எழுந்து.. தலைக்கு குளித்துக் காத்திருந்தால்.. அசால்டாக ‘கொஞ்சம் தூங்கிட்டேன்’ என்கிறான்? இதழ்கள் துடிக்க அவனை நோக்கி, “வர வர.. உனக்கு என் மேல லவ்வே இல்லாமல் போச்சுல?” என்றவளுக்கு இறுதியில் தொண்டைக் கமற கூறியவள், அவன் முகத்தைப் பார்க்க பிரியப்படாமல்.. வழியிலேயே தன் கவனம் பதித்து நிற்கலானான்.
ஷக்தியின் கோபத்தில்.. அதன் பின்னாடி ஒழிந்திருந்த அவன் மீதான காதலில், குறுஞ்சிரிப்பொன்றை உதிர்த்தவன், அழகாய் தலை கோதிக் கொண்டே அவளைப் பார்த்தான்.
அவளைத் தன்னை நோக்கி திருப்ப வைப்பதற்காக மீண்டும் ஹாரன் அடித்தவன், “ஹேய்.. ஷக்தி..ஷக்தி.. இங்கே பாரு.. ப்ளீஸ் பாருடி..”என்று ஓயாமல் அவளை அழைத்துக் கொண்டே இருந்தான்.
அவளும் ஒரு கட்டத்தில் முடியாமல் திரும்பிப் பார்க்க, அது தான் சமயம் என்று கொண்ட அந்த கள்வனும், சட்டென அவளைப் பார்த்து இதழ் குவித்து முத்தமிட்டு, கண்ணடித்தவனைக் கண்டு இதயம் தடுமாற, தன் கண்ணிமைகளை படபடவென அடித்துக் கொண்டு நின்றாள் அவள்.
அவள் தடுமாறி நின்ற வேளை, மென்மையான குரலில், “நான் என்ன வேணும்னா பண்ணேன்? .. எனக்கு சண்டே மட்டும் தான் லீவுடி.. ஆறுநாளும் வொர்க் பண்ண டயர்ட்டில் தூங்கிட்டேன்.. இருந்தாலும் உன்னை அழைச்சிட்டுப் போகணும்ன்ற ஞாபகம் வந்தவுடன் முகத்தைக் கூட கழுவாமல் எழுந்திருச்சு.. ஓடி வந்திருக்கேன்.. ப்ளீஸ்..ஸாரி” என்று கூற.. அவன் ஞாயத்தில் மனம் உருகிப் போய் விட்டது ஷக்திக்கு.
ஆமாம், நிஜம் தான்.. வாரத்தில் ஆறு நாட்களுமே அதிகாலையில் எழுந்து வேலைக்குச் செல்கிறவனாயிற்றே அவன்?? வெயிலில் அலைந்து திரிந்து ஒவ்வொரு ஷாப்பிற்கும் சிம் சப்ளை செய்வது என்றால் கஷ்டம் தான்.
பாவம் இன்று விடுமறை நாள் என்றதும் அசந்து தூங்கி விட்டான் போலும் என்று எண்ணிக் கொண்டவள், நிழற்குடையை விட்டும் இறங்கி.. மெல்ல மெல்ல தன் சூரியனை நாடி வந்தாள் அவள்.
வெயிலில் அலைந்து திரிந்ததால் கறுத்துப் போயிருந்த அவன் கையைப் பற்றி, கண்களில் மையலுடன் அவளை நோக்கி, “பேபி.. அப்படி ரொம்ப டயர்ட்னா.. வீட்டிலேயே தூங்க வேண்டியது தானே? .. என்னை அப்புறம் கூட்டிப் போகலாம் இல்லையா?” என்று கேட்டாள்.
இது தான் அவனது ஷக்தி. அவன் தரப்பு ஞாயம் சொன்னதும்.. வீம்பு பிடிக்காமல் தன் ஈகோவைத் தூக்கிப் போட்டு விட்டு வந்து அவனுக்காக ஏங்கும் அவனது ஷக்தி.
“ம்ஹூஹூம் அது முடியாது.. எனக்கும் வீக் டேஸில் வேலை இருக்கு.. அம்மாவையும் சண்டேயை விட்டால் வீட்டில் பார்க்குறது கஷ்டம்.. எப்படியும் ஒரு நாள் என் தூக்கத்தை தியாகம் பண்ணித் தான் ஆகணும்..கமான் வண்டியில் ஏறு!!” என்ற வண்ணம் அவன் தன் பின்ஸீட்டைக் காட்ட, அவன் அம்மாவைப் பார்க்கப் போகும் சந்தோஷ படபடப்புடன் அவன் ஷோல்டரைப் பற்றி.. இலாவகமாக வண்டியில் ஏறிக் கொண்டாள் ஷக்தி.
அவனுடன் பைக் பயணம்!! என்றும் போல இன்றும் புதுமையாகவே உணர்ந்தாள் அவள்.
ஞாயிற்றுக்கிழமையில் சாலையும் பெரிதும் வெறிச்சோடிப் போயிருக்க, அதுவும் அந்த காதல் பறவைகளுக்கு அதிர்ஷ்டமாகப் போய் விடவே, அவன் தொடைகளுடன்.. தன் தொடையை இறுக்கி அமர்ந்தாள் அவள்.
அவளது அண்மையில்.. எதிர்க்காற்றுடன் முகத்தில் அடித்துக் கொண்டிருந்த அவளது மல்லிகை மண பாடி ஸ்ப்ரே நறுமணத்தில்… அவனது தேகம் முறுக்கேற… எஸ்லேட்டரை முறுக்கி.. உறுமிக் கொண்டே கொஞ்சம் வேகமெடுத்தான் அவன்.
அந்த வேகத்தில்.. கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்திருந்தவளின் முன்னெழில் கோலங்கள் இரண்டும்.. அவனது பரந்த முதுகோடு பட்டு மோத… அந்த மென்மையின் மோதலில் அவன் அடிவயிற்றில் அழகான பட்டாம்பூச்சிகளின் படபடப்பு.
ஆட்டங்கண்ட வண்டியை நேர்ப்படுத்திய நேரம், காதோரம் கிசுகிசுப்பாக அவள் குரல், “மெதுவா போடா.. பயமா இருக்கு!” என்று.
ஒருவாறு தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு வண்டியை ஓட்டியவனின் புன்னகை, ஸைட் மிரரில் தெரிய.. அதைப் பார்த்து மந்தகாசமாக நகைத்தாள் அவளும். அந்த குறுகிய பைக் பயணத்தின் இறுதியில்.. அவன் வீடும் வந்து விடவே, இறங்கிக் கொண்டவன், அவளது விழிகளை ஏறிட்டான்.
அது படபடப்பாக அடித்துக் கொள்வதைக் கண்டவன், “நான் இருக்கேன்ல? பயப்படாமல் வா.. அம்மாவுக்கு உன்னை நிச்சயம் பிடிக்கும்” என்று ஆறுதலாக மொழிந்தவனாக.. அவளை வீட்டுக்குள் அழைத்துச் சென்றான்.
ஹாலுக்குள் இருவரும் ஜோடியாக நுழைந்த போது கிச்சனிலிருந்து அதிகாரமாக சவுண்ட் வந்து கொண்டிருந்தது.அந்த அதிகாரமான அதட்டும் குரலுக்கு சொந்தக்காரி வேறு யாருமல்ல. அவனது தாயாரே தான்.
அவனது தம்பி ஆதித்யாவோ.. ஹாலிலே இருந்த சோபாவில் சம்மணம் கொட்டி அமர்ந்து.. தோசையை விண்டு, சாப்பிட்டுக் கொண்டே, உள்ளே இருந்து ஒலித்துக் கொண்டிருந்தது காரசாரமான இளாவின் தாய் குரல்.
“எத்தனை வாட்டி சொல்லிருக்கேன் ஆதி.. டெனிம் பார்டரை க்ளீனா வைச்சுக்கன்னு… சுத்தம்ன்றது உன் கிட்ட ஒரு துளி கூட கிடையாது.. இனி உன் டெனிமை நீயே துவைச்சுக்கோ..”என்று கத்தலுடன், சமையலறையிலிருந்து ஒரு நீல நிற டெனிமொன்று பறந்து வந்து.. ஆதியின் தலை மேல் சட்டென விழுந்தது.
தோசையை விண்டு வாயில் வைக்கப் போன ஆதியின் கை அந்தரத்தில் அப்படியே நின்றது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஷக்திக்கோ..நடப்பது சுவாரஸ்யத்தைக் கூட்டவே, அவள் சத்தமே வராமல் நகைக்க, அதைப் பார்த்து இளங்கோவோ,
“எங்க வீட்டில் அம்மாவும், ஆதியும் அப்படித் தான்.. கண்டுக்காதே” என்று கூற.. அவளும் புன்னகைத்துக் கொண்டே தலையாட்டி வைத்தாள்.
தோசைத் தட்டை டீ போய் மீது வைத்து விட்டு, கடுப்புடன் எழுந்த ஆதியும், சலித்துப் போன குரலில், “அம்மா நேத்து கொஞ்சம் க்ரவுண்டில் விளையாடுறப்போ.. கொஞ்சம் சேறு பட்டிருச்சு மா..”என்று இரைந்து கூறினான்.
அதற்கும் காரசாரமாகவே பதில் வந்தது இளா தாயிடம் இருந்து. “அதுக்கு இந்த டெனிம்மைத் தான் போட்டுட்டு போகணுமா? .. ஒழுங்கா லட்சணமா.. ஒரு த்ரீ கோட் போட்டுட்டு போயிருந்தால்… இந்த கறை பட்டிருக்குமா? உன் கையாலேயே இதை வாஷ் பண்ணு.. வாஷிங் மெஷின் பக்கம் வந்தால்.. கொன்னுருவேன்..!!” என்றார் அவரும்.
ஆதி அந்த டெனிமை என் கையால் நான் கழுவுவதா என்று தோன்ற.. தன்னிலையை தானே நொந்து கொண்டே பெருமூச்சு விட்டவாறு நின்றிருந்த தோரணையைக் கண்டு.. அடக்கவே முடியாது.. க்ளுக்கிச் சிரித்து விட்டாள் ஷக்தி.
அந்த ஒலியில் தான் ஆதி வாசல் பக்கம் திரும்பிப் பார்க்க, அங்கே அண்ணன் ஓர் அழகான பெண்ணின் கையை உரிமையுடன் பற்றிக் கொண்டு நிற்பதுவும், அந்தப் பெண்.. அவனைப் பார்த்து கேலி நகை உதிர்ப்பதுவும் புரிந்தது.
வெளியே தன் மூத்த புதல்வன், அவன் ஆசைப்பட்ட பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்தது தெரியாமல் இன்னும் கத்திக் கொண்டே இருந்தார் தாயார்.
“மூத்தவனும் தான் இருக்கான்.. எவ்வளவு சுத்த, பத்தமா இருக்கான்.. நீயும் தான் இருக்கியே?? .. உன்னைப் பெத்ததுக்கு நாலு பன்னிக்குட்டியை வாங்கி வளர்த்திருக்கலாம்..” என்று கூற.. இங்கே ஷக்தியோ குபீரென்று எழுந்த சிரிப்பை வாய் பொத்தி அடக்கிக் கொண்டாள்.
அதைப் பார்த்து இளாவும் நகைத்து வைக்க, அண்ணனும், அண்ணாவுடன் வந்த பெண்ணும் நகைப்பதைத் தாங்க மாட்டாமல், “ஆமா.. ஆமா.. உங்க மூத்தவனையே மெச்சுக்குங்க.. ஒரு நாள் இல்லைன்னா.. ஒரு நாள்.. உங்க முன்னாடி திடுதிப்புன்னு.. ஒரு அழகான பொண்ணை கூட்டி வந்து ‘இவள் தான்மா உங்க மருமகள்’னு சொல்லப் போறான்.. நீங்களும் வாயடைச்சு நிற்கப் போறீங்க!!” என்று இளங்கோவின் திட்டத்தை ஊகித்து இளையவன் கூறி வைக்க, அந்த கூற்றைக் கேட்டு சமையலறையில் இருந்து ஓடி வந்தார் இளாவின் தாய்.
“அப்படி ஏதாவது நடந்தா..” என்று ஏதோ சொல்லிக் கொண்டே.. கிச்சனிலிருந்து தோசை கரண்டியுடன் வந்த இளாவின் தாயார்.. இளையவன் கூறியது போலவே, மூத்தவன் ஓர் அழகான பெண்ணுடன் வந்து நிற்க விக்கித்துப் போய் நின்று விட்டார்.
தாயின் பேச்சு அப்படியே தடைப்பட்டு நின்று, அவர் அதிர்ச்சி அடைந்ததைப் பார்த்த ஆதி, சிரித்த அண்ணனை போட்டுக் கொடுப்பதற்காக வேண்டி, “நான் சொன்னா நம்பலைல?.. பாருங்க உங்க மூத்தவனுடைய லட்சணத்தை..”என்று அதிகப்படியாக கூறிக் கொண்டிருந்தவன்,தாய் பின்னாடி நின்று, அண்ணனுக்கு சின்ன பையன் போல பழிப்பு காட்டி நகைக்கவும் செய்தான்.
ஷக்தியோ.. அவனது தாயிடம், நல்ல முறையில் அறிமுகமாக வந்தால், இப்படி தவறான கோணத்தில் சிக்கிக்கிட்டோமே என்ற தவிப்புடன் நிற்க,
அவன் தாயோ, அவளையே தான் ஏற இறங்க முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இளாவோ அமைதியாகவே நின்றிருக்க, அவனது தாயின் முகமோ அவள் எதிர்பார்த்திராத வகையில் மென்மையாக மலர்ந்தது.
அவளை நாடி வந்தவர், சிறு புன்னகையுடன், “ஷக்தி..” என்று அவள் பெயரை உச்சரித்தவர், “கரெக்ட் தானே?” என்று கேட்டும் வைக்க, ஆதியும், ஷக்தியும் தான் விக்கித்துப் போய் நிற்கும் நிலை உருவானது.
இளா, தன் தாயிடம் ஷக்தியைப் பற்றி அனைத்தையும் கூறி தான் இருந்தான். இருப்பினும் இன்று அவளை அழைத்து வருவது பற்றி மட்டும் அவன் தன் தாயிடம் கூறியிருக்கவில்லை.
தாய்க்கு ஒரு இனிய அதிர்ச்சியாக.. அவரது வருங்கால மருமகளை, அவர் கண்ணே முன்னே நிறுத்திய பெருமிதம் அவன் முகமெங்கும் தாண்டவமாடிக் கொண்டிருந்தது.
இளாவோ ரொம்ப ரொம்ப கேஷுவலாக நின்று, கையை பின்னே கட்டிக் கொண்டு சிரித்தவன், தம்பியை நோக்கி, “போடா டேய் போடா.. துணியைத் துவைக்குற வேலையை மட்டும் பாரு.. பெரியவங்க நாங்க பேச.. ஆயிரம் இருக்கும்” என்று கூறி வைக்க,ஆதி.. அண்ணன் அருகில் வந்து தோள் தொட்டு, காதுக்குள் கிசுகிசுப்பாக, “அண்ணி வந்ததால் நீ தப்பிச்சேடா மவனே…” என்றுரைத்து விட்டு செல்ல, அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஷக்திக்கு எல்லாமே புதுமையான உணர்வைக் கொடுத்தது.
ஏனெனில் அவளுக்கும், அவள் அண்ணனுக்கும் இடையில் பதினாறு வருட இடைவெளி இருக்கும் பட்சத்தில்.. அண்ணனைக் கண்டால் எழுந்து நின்று மரியாதையுடன் பேசத் தோன்றியிருக்கிறதே ஒழிய, இந்த மாதிரி.. எடக்குமடக்காக கேலி பேசிய அனுபவம் அவளுக்கில்லை.
இளாவின் தாயார், அவன் தம்பிக்கிடையிலான சுவாரஸ்யமான வாய் தர்க்கம், அண்ணன், தம்பிக்கிடையிலான கேலி பேச்சு எல்லாமே பிடித்திருந்தது அவளுக்கு. ஹாலிலேயே நிற்பதைக் கண்ட இளாவின் தாயார், அவளது கையைப் பற்றி இழுத்தவராக, “நீ உள்ளே வாம்மா.. வீட்டில் அம்மா, அண்ணி, அண்ணா, அண்ணா பசங்க.. அக்கா எல்லாரும் நல்லாருக்காங்களா?” என்று இளா அவரிடம் கூறி வைத்திருக்கும் அவளுடைய குடும்ப அங்கத்தவர்கள் அனைவர் பற்றியும் அவர் விசாரிக்க, அவளுமே அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனாள்.
இவருக்கு எப்படி அவள் வீட்டு அங்கத்தவர்கள் அனைவரையும் தெரியும்?
மெல்ல திரும்பி தன் தலைவனைப் பார்த்தாள் அவள். அவனோ கெத்தாகப் புன்னகைத்து, காலரைத் தூக்கி விட்டுக் கொண்டே, வாயை மட்டும் சத்தமின்றி அசைத்து, “எல்லாம் ஐயாவுடைய வேலை!!” என்றுரைக்க, அவளும் மௌனமாகத் தலையாட்டி புன்னகைத்து வைத்தாள்.
பின்பு, அவருடன் இணைந்து கிச்சனை நோக்கி நடந்து கொண்டே, “எல்லாரும் நல்லாருக்காங்க அத்தை.. அண்ணா பசங்க வெக்கேஷனுக்கு அவங்க பாட்டி வீட்டுக்கு போயிருக்காங்க.. அக்கா எங்க கூட இல்லை.. அவள் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணி.. யு. எஸ்ல ஸெட்டில் ஆயிட்டா..” என்றவள், தன் ஷோல்டர் பேக்கைத் திறந்து.. அதிலிருந்த அண்ணி தந்த முறுக்கு டப்பாவை எடுத்து அவரிடம் நீட்டி, “இந்தாங்க.. முறுக்கு.. அண்ணி செய்தது…” என்றாள்.
அதை சந்தோஷமாக வாங்கிக் கொண்டவர், தன் வருங்கால மருமகளை நோக்கி, “என் கையாலே தோசை சாப்பிட்டுப் பார்க்குறியா..? இளாவுக்கு என் தோசைன்னா ரொம்பப் பிடிக்கும்..” என்று உரைக்க, அவளும் தான் மறுப்பாளா என்ன? அக்கணமும் கூட.. அத்தைக்குத் தெரியாமல்.. தன் சேர மன்னனை அவள் திரும்பிப் பார்க்க, இப்போதும் சத்தமில்லாமல், உதடு மட்டும் அசைத்து, “அம்மா.. தோசை சூப்பரா இருக்கும்!” என்று கையால் ‘சூப்பர்’ சிம்பல் செய்து காட்டினான் இளா.
அதற்கும் மறுபதிலாக தலையசைத்து புன்னகைத்தவள், அத்தையிடம் , “சரித்தை..” என்றவளாக அங்கிருந்து கிச்சனை நோக்கி செல்வதை ஒரு வித திருப்தி கலந்த இதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
பின்னே தன் தாயும், மனைவியும் அன்னியோன்யமாக பழகுவதைக் கண்டால் எந்த ஆண்மகனுக்குத் தான் திருப்தி மலராது?
சமையலறைக்குள் நுழையப் போன இளாவின் தாய், அங்கேயே நின்று திரும்பி மூத்த புதல்வனைப் பார்த்து, “இன்னும் ஏன் இங்கேயே நின்னுட்டிருக்க? நானும் எங்கேடா இவன் அரக்கப் பறக்க எழுந்து.. முகத்தைக் கூட கழுவாமல் ஓடுறான்னு பார்த்தேன்… பார்த்தால் ஷக்தியை அழைச்சிட்டு வரத்தானா இது எல்லாம் ? இப்போ தான் என் மருமகளை அழைச்சிட்டு வந்தாச்சுல்ல? .. இன்னும் என்ன? .. போ.. போய் குளிச்சிட்டு வா..” என்று அவனை ஏவ, அவனும் தாய் கட்டளைக்கு பணிந்த புதல்வனாக, “ம்.. சரிமா..” என்றவனாக, தன்னறைக்குச் சென்றான் இளா டவலை எடுத்து வருவதற்காக.
இளாவின் வீடு அவள் வீட்டைப் போல பெரிய வீடல்ல தான். ஒரு ஹால், மூன்று அறைகள், சமையலறை, குளிப்பறை கொண்டு அமைந்திருக்கும் சாதாரண மத்திய தர வர்க்க மக்களின் வீடு தான்.
இருப்பினும் அந்த வீட்டில் மகிழ்ச்சியும், வளமும் கொட்டிக் கிடப்பது போல தோன்றியது அவளுக்கு. மாமியாரும், மருமகளும் கிச்சுனுக்குள் நுழைந்த நேரம்.. யாரோ அழைப்பு மணியை அடிக்க, அவளை நோக்கி, “நீ இருமா.. நான் போய் என்னான்னு பார்த்துட்டு வரேன்” என்றவராக அவர் அங்கிருந்து செல்ல, வெறும் கைலியுடன்.. தோளில் ஒரு டவலுடன் மாத்திரம் வெற்று மார்புடன் சமையலறைக்குள் நுழைந்தான் இளா.
அவனை.. வெற்று மார்புடன்.. அன்று ஸ்விம்மிங் பூலில் வைத்துப் பார்த்த பின்னர் இன்று தான் மறுபடியும் பார்க்கிறாள் அம்மாது.
இறுக்கமான தோள் புஜங்கள். திண்ணென்று இருந்த மார்புத் தசைகள்! அந்த இரு மார்புத் தசைகளுக்கும் நடுவில் பொசுபொசுவென்ற மயிர்க்காடு! நெஞ்சு முடி அதிகம் இருக்கும் ஆண்களுக்கு..ஆசையும் அதிகம் இருக்குமாம்.. அவள் அக்கா அவளிடம் ஒருமுறை சொன்னதாக ஞாபகம்!!
அப்படியானால் அவனுக்கும்.. அவள் மீது ஆசை.. அதிகமாக இருக்கக் கூடுமோ? அவள் நெஞ்சம்.. திக் திக் என்று அடித்துக் கொண்ட ஒலி.. அவளுக்கே நன்கு கேட்டது. அவனோ மெல்ல மெல்ல அருகாமையில் வர.. இவளுக்கோ.. உள்ளே சுகமான அவஸ்தை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
அவளருகே வந்தவன், சமையல் மேடையுடன் நின்றவளை அணை கட்டி நின்று.. அவளை இறுக அணைத்துக் கொண்டான். குளிக்காமல் இருந்ததாலோ என்னவோ… அவனது மேனியின் வியர்வை வாசனை குப்பென்று அடித்துக் கொண்டிருந்தது.
அவன் அணைப்பில்.. அவன் அன்பில் உருகிப் போய் நின்றிருந்தாலும் கூட, அத்தை எந்நேரமும் வந்து விடக்கூடும் என்ற அச்சம் எழுந்தது அவளுள். அவள் வாய் தான், “விடுங்க அத்தை வந்துடப் போறாங்க..” என்று முணுமுணுத்தாலும், அவள் நாசியோ.. அவன் நெஞ்சுக்காட்டுக்குள் நுழைந்து.. அவன் தோல் உரசி.. அவன் வியர்வை வாசனையை நுகர்ந்து கொண்டிருந்தது. மொத்தத்தில் அவள், அவன் அணைப்பில் கிறங்கிப் போயிருந்தாள்.
அவன் நாடியை ஒற்றைக் கையால் உயர்த்தி, ஹஸ்கி வாய்ஸில், “ஏய்.. பொண்டாட்டி.. அம்மாவை இப்போவே கைக்குள்ள போட்டுக்கோ..”என்றுரைத்து விட்டு,நெற்றியில் இதழ் பதித்து அகன்றான் கள்வன்.
அவன் சென்ற பின்னும்.. அவனது வலிய தேகம் தந்த இறுக்கத்தில் அந்த அணைப்பின் மயக்கத்திலிருந்து வெளிவர ஒரு சில நாழி தேவைப்பட்டது அவளுக்கு.
கிச்சனுக்குள் மீண்டும் அவள் அத்தை நுழைந்த போதே, “ வந்தது டேக்ஸ் பில்மா… இப்போ எக்ஸாம்ஸ் சீசன் இல்லை உனக்கு?”என்று கொண்டே வந்தவர், மீண்டும் ஸ்டவ்வைப் போட்டுத் தோசையை ஊற்ற, இவளும் அவர் பக்கத்திலேயே நின்றவளாக, “இல்லை.. இப்போ ஸ்டடி ஹாலிடே அத்தை.. இன்னும் வன் வீக்கில் தான் எக்ஸேம் ஸ்டார்ட்..” என்றாள்.
ஒரு சில நிமிடங்களில் சுடச்சுட கிடைத்தது முறுமுறு தோசை. அதுவும் எல்லாரும் அமர்ந்து உணவருந்துவதற்கு முன் கிடைத்த சாம்பிள் தோசை.
அவர் பக்கத்திலேயே அமர்ந்து, தோசையை விண்டு வாய்க்குள் அடைத்துக் கொண்டை, “சூப்பரா இருக்கு அத்தை.. அண்ணி தோசைக்கு அப்புறம்.. நான் இரசிச்சு சாப்பிட்ட தோசை.. உங்களோடது தான்” என்றுரைக்க, அவர் முகத்தில் மென்மையான புன்னகை.
அவர் கைகளும், பார்வையும் தோசையிலேயே மும்முரமாக பதிந்திருக்க… அவரது தொனி மட்டும் வித்தியாசப்பட, இறுக்கமான வதனத்துடன், “ஷக்தி… வீட்டில் எங்கே போறேன்னு சொல்லிட்டு வந்த..?” என்று கேட்டார்.
அத்தையின் பக்கம் திரும்பாமல், தலையை கீழே தொங்கப் போட்டுக் கொண்டே, குற்றவுணர்வு மேலோங்கிய குரலில், “ஃப்ரண்ட் வீட்டுக்கு க்ரூப் ஸ்டடி பண்ண போறேன்னூஉ..”என்று இழுக்க, சட்டெனத் திரும்பி அவளைப் பார்த்தவர், “ஓ.. அப்போ பொய் சொல்லிட்டுத் தான் வந்திருக்க?..” என்று மறுகேள்வி கேட்டார் அவளது வருங்கால அத்தை .
ஆம், அத்தை சொல்வது உண்மை தானே! வீட்டில் பொய் சொல்லி விட்டு தானே வந்திருக்கிறாள்.!!அவளை இலேசாகக் குற்றம் சாட்டுவது போல இருந்தது அவரது கேள்வி.
அத்தை கொஞ்சம் மென்மையான குரலில் பேசுவது போலவே இருந்தாலும், அவர் சொல்ல வந்த விஷயம் மாத்திரம் என்னமோ மென்மையாகத் தோன்றவில்லை அவளுக்கு.
ஒருவேளை குளிப்பறையில் குளித்துக் கொண்டிருக்கும் தன் மகனுக்கு தான் பேசப்போகும் விடயம் கேட்டு விடக் கூடாது என்பதற்கான முன்னேற்பாடாக.. இந்த மெல்லிய குரலை அவர் தேர்ந்தெடுத்து இருக்கலாம்.
என்ன தான் இருப்பினும், அத்தை பேசியதிலும் ஓர் உண்மை இருந்தது. அந்த உண்மை அவளை சுடவும் செய்தது.
“நான் தெரியாமல் தான் கேட்குறேன்.. நம்ம பொண்ணு படிக்கத் தான் போகுதுன்னு நம்பி உன்னை அனுப்பியிருக்காரே உன் அண்ணா.. அவர் நம்பிக்கைக்கு துரோகம் பண்றோமேன்னு மனசு உறுத்தலையா ஷக்தி?” என்று கேட்டதில் அவளது முகம் அப்படியே வெளிறிப் போனது.
கண்கள் இலேசாகக் கலங்க அவள் நின்றிருந்த வேளை, அவளது அத்தை மேலும் சொன்னார். “நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை… ஸ்ட்ரெய்ட்டாவே சொல்றேன்.. என் இளா நான் சொல்ற பொண்ணை தான் கட்டணும்னு எனக்கொரு ஆசை.. ஆனால் இது நாள் வரை என் ஆசையை அவனிடம் சொன்னதில்லை.. அப்படி சொல்லியிருந்தால் ஒரு வேளை.. உன் மேல ஆசைப்படாமல் இருந்திருப்பானோ? என்னவோ?” என்றுரைக்க, அத்தைக்கு தன்னை பிடிக்கவில்லையோ என்று நொந்து போனாள் ஷக்தி.
அப்படியானால், ஒருவேளை அவன் தாய் கூறுவது போல, “நான் சொல்ற பொண்ணைத் தான் கட்டணும்!” என்று அவர் கூறியிருந்தால், இளா அவளைக் காதலித்திருப்பானா? அவளைக் காதலித்துக் கொண்டிருந்த வேளை.. அவன் தாய் இப்படியொரு வேண்டுகோளை முன் வைத்திருந்தால்.. அவளை அவன் மறந்து விட்டிருப்பானா? என்ற கேள்வியெழுந்தது அவளுக்கு.
வலி நிறைந்த முகத்துடன் அவரை அவள் பார்த்திருக்க, அவரோ, சலித்துக் கொண்டவராக ஒரு நெடுமூச்சு விட்டு, “ஹஹ்…. என்ன பண்ண? எல்லாம் தலைவிதி!!.. உன் மேல ஆசைப்பட்டுத் தொலைச்சிட்டான் என் பையன்.. நான் காதலுக்கு எதிரியில்லை தான்.. இருந்தாலும் உன் வீட்டுக்குத் தெரியாமல், பொய் சொல்லிட்டு இங்கே வந்தது.. இளா கூட ஊர் சுத்துறது.. எனக்குப் பிடிக்கலை..”என்று கூற, அவள் குற்றம் உணர்ந்தவளாக தலை குனித்துக் கொண்டாள்.
அவள் யோசிப்பதை தவறாக எடுத்துக் கொண்டவர், “என்ன? .. என் கிட்ட இவ்ளோ பேசுறவ.. ‘ஊர் சுத்தாதேன்னு உன் பையன் கிட்ட சொல்ல வேண்டியது தானே?’ன்னு யோசிக்குறியா?”என்று கேட்க, “ச்சேச்சே அப்படியெல..” என்று சொல்ல வந்தவளை அவர் கேட்கவேயில்லை.
“என்ன பண்றதுமா? நான் ஏதாவது சொல்லப் போய்.. அம்மாவுக்கு என் காதல் பிடிக்கலைன்னு என்னைத் தப்பா நினைச்சிட்டான்னா..ஏன்னா அவன் வயசு அப்படி”என்றார் அவர்.
இறுதியாக அவளை நோக்கி அவர் பேசியதிலும் ஓர் ஞாயம் இருந்தது. “என்ன?.. நான் உன்கிட்ட இளாவுடைய அம்மாவா பேசலை.. பொண்ணைப் பெத்தவங்க சைட்டில் இருந்து யோசிச்சுப் பார்த்து பேசுறேன்.. ஆயிரம் தான் இருந்தாலும்.. என் மகனுக்கு உன்னைப் பிடிச்சுப் போனதால்.. நீ தான் இந்த வீட்டுக்கு மூத்த மருமகள்.. அட்லீஸ்ட்.. உன் எக்ஸாம் முடிஞ்சு.. நாங்க பொண்ணு கேட்டு.. உன் வீட்டுக்கு வர்ற வரைக்குமாவது.. இதையெல்லாம் நிறுத்திக்கோமா” என்று அவர், ஓர் பெண்ணைப் பெத்திருந்தால் என்ற நிலைமையில் யோசித்துச் சொல்ல, அதிலிருக்கும் உட்கருத்தின் உண்மை புலப்படவே, “ம்.. சரியத்தை..”என்று ஒப்புக் கொண்டாலும், அந்த தாய் கை காட்டும் பெண் மேட்டர் ஒன்றுக்கு இரண்டு முறை அவளை யோசிக்க வைத்தது.
முகம் சோர்ந்தாற் போன்று இருந்தால்.. ‘என்ன முகம் சோர்ந்திருக்கு? அம்மா ஏதாவது சொன்னாங்களா?’என்று இளா கேட்டு விடுவானோ என்ற பயத்தில்… நன்மொழி பகன்ற தாயை அவன் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடுமோ என்ற பயத்தில்.. இழுத்து வைத்த அதரங்களுடனேயே அங்கிருந்து செல்லும் வரை அமர்ந்திருந்தாள் அவள்.
வீட்டுக்கு செல்லும் போது, பைக் ஓட்டிக் கொண்டிருந்தவனின் பரந்த… முதுகைக் கையிட்டு இறுக்கி அணைத்து, அதில் முகம் புதைத்துக் கொண்டவள், அவன் மேனி வாசனையை முகர்ந்தவளாக, குட்டிக் குட்டி முத்தம் வைக்க, அவனுக்கு கிளுகிளுப்பாக இருந்த வேளையிலும்.. அவள் அமைதி தான் ஏதோ செய்தது அவனை.
அவளை ஏற்றிக் கொண்ட அதே பஸ் ஸ்டேன்ட் வரவும்.. இறங்கிக் கொண்ட ஷக்தியின் வாடிய முகத்தை நோக்கியவன், “என்னாச்சு? ஏன் முகம் டல்லாருக்கு?” என்று கேட்டான் அவன்.
அவளோ எதுவுமே இல்லை என்பது போல காட்ட முனைந்தவளாக, இலேசாக முறுவலித்து, நெற்றியை சுட்டிக் காட்டி, “இல்லை தலைவலி அதான்..பை இளா.. நீ போ.. நான் போய்க்கிறேன்” என்றுரைக்க, அவனோ செல்லாமல்..பஸ் ஸ்டாண்டிலேயே பைக்கைத் தரித்து நிறுத்தி விட்டு.. இறங்கிக் கொண்டான்.
இவளோ என்னடா என்று பார்க்க, அவனோ, “இல்லை.. இன்னைக்கு உன் முகமே சரியில்லை.. அட்லீஸ்ட் உன் வீட்டு தெருமுனையிலாவது விட்டுட்டு வரேன்.. வா” என்றவனாக அவள் விரல்களைப் பற்றியவன், அவள் மறுபதிலளிக்கும் முன்னம்.. அவளோடு இணைந்து அந்த தெருவை நோக்கி நடந்தான்.
ரொம்ப நேரம் அமைதியாக நடந்து வந்தவள், தன் காதோரம் தவழ்ந்த நெற்றி முடியை ஒதுக்கியவளாக கிசுகிசுப்பான தொனியில், “இ.. இளா ஒரு கேள்வி கேட்டால் உண்மை சொல்வியா?”என்று கேட்டாள்.
அவன் முன்னங்கைக்கு முத்தமிட்டு விட்டு , உறுதி தொனிக்கும் குரலில், “நான் உன் கிட்ட உண்மையைத் தவிர வேறெதையும் பேசினதில்லை ஷக்தி!! ” என்றான்.
அந்தக் கூற்று.. அவளுக்கு ஏனோ பெருமிதத்தைக் கொடுத்தது. காதலன், காதலியிடம் பொய் சொல்லும் எத்தனையோ ஜோடிகளைப் பார்த்திருப்பவளுக்கு.. தன் தலைவன் தன்னிடம் இதுவரை உண்மை பகன்றிருப்பது சந்தோஷத்தை வரவழைத்தது.
அவளோ, வலியுடன் புன்னகைத்தவளாக, “இளா.. ஒருவேளை உங்க அம்மா உன்கிட்ட நான் கை.. காட்டுற பொண்ணை தான் கட்டணும்னு சொல்லியிருந்தால்.. என்னை நீ மறந்துட்டு.. உங்க அம்மா காட்டுற பொண்ணுக்கு நீ, ‘ஓகே’ சொல்லிருப்பியா?”என்று கேட்டாள்.
அவன் புருவங்கள் இரண்டும் ஒன்றாக சுருங்கியது. “என்ன திடீர்னு இந்தக் கேள்வி? அம்மா ஏதாவது சொன்னாங்களா..?” என்று அவன் சரியாக ஊகித்துக் கேட்க, இவளுக்கோ பக்கென்றானது.
என்ன காரணத்துக்காவும் இருவருக்குமிடையில் குழப்பத்தை மூட்டி வைக்க அவள் பிரியப்படவில்லை. ‘குடும்பத்துக்குள் வரும் முன்னர் தாயையும், மகனையும் பிரிச்சிட்டா சண்டாளி’ என்ற அவப்பெயரைக் கேட்க அவள் விருப்பப்படவேயில்லை.
அதனால் உடனடியாக அதை மறுத்தவள், தேய்ந்த குரலில், “ச்சேச்சே.. இல்லை.. சும்மா தோணிச்சு.. ஒரு கற்பனை..” என்று சொல்ல, அவனோ இகழ்வு சிறப்பு தொனி தாண்டவமாட, “ரொம்ப நல்ல கற்பனை..” என்றான்.
பின்பு, “நான் உன்னை சின்ஸியரா காதலிக்குறது தெரிஞ்சும்.. இப்படி ஒரு கேள்வி எதுக்கு?”என்று அவன் கேட்டு வைக்க, அவனது இரு கைகளையும் பிடித்துக் கொண்டவள், சிறு குழந்தைகள் சிணுங்குவதைப் போல, “பேச்சை மாத்தாதே இளா.. ஐ நீட் யோர் ஆன்சர்..” என்றாள்.
அந்த ஒதுக்குப் புறமான தெருமுனையில்.. அவளது மென்மையான கன்னத்தைக் காதலுடன் தாங்கிக் கொண்டவன், அவள் கண்ணோடு, தன் கண் கலக்க விட்டவனாக, “அப்படியே என் அம்மா.. என் கிட்ட.. சொல்லியிருந்தாலும் .. உன்னை தான் காதலிச்சிருப்பேன்.. உன்னை மட்டும் தான் காதலிச்சிருப்பேன்..” என்றுரைக்க, பெண்ணுள்ளே ஆயிரம் மத்தாப்பூ வெடிக்க, தன் வீட்டுத் தெருவென்றும் பாராது, அவன் இடையூடு கையிட்டு அணைத்து, அவன் நெஞ்சோடு தன் முகம் புதைத்துக் கொண்டாள் ஷக்தி.
அந்த எதிர்பாராத அணைப்பில்.. கையிலிருந்த மயிர்கள் எல்லாம் சில்லிட்டுக் கொண்டு நின்றது அவனுக்கு. அவளைத் திரும்பி அணைக்க முடியாதவாறு.. யாராவது பார்க்கிறார்களோ என்ற நாணம் எழுந்தது அவ்வாண்மகனுக்குள்.
சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்தவன்.. அந்த ஆள் நடமாட்டமே அற்ற தெருவில்..மனிதத் தலைகளையே காணோம் என்றானதும், தானும் அவளது இடையில் கையிட்டு அணைத்துக் கொண்டான் அவன்.
இதயத்துடிப்போசையுடன் அவனது ஏகாந்தமான குரலும் சேர்ந்து கேட்டது அவளுக்கு.மென்மையாக தலை கோதியவனாக, இதமான குரலில், “இப்போ சொல்றது தான் எப்போவும்.. எனக்கு இந்த ஜென்மத்தில்..”என்று அவன் தொடங்க, அவன் முடிக்க முன்னரேயே சட்டென இடையிட்டு, “ஷக்தி ஒருத்தி கூட தான் என் வாழ்க்கை..”என்று அவன் சொல்லும் டயலாக்கை இவள் சொல்ல.. இருவரும் அட் அ டைமில் சில்லறைகளை சிதற விட்டது போல மோனமாக நகைத்தனர்.
இருபுறமும், வீடுகள் சென்றிருக்க, நடுவிலே ஆள் அரவமேயற்ற ஓர் சாலை. அந்த சாலையின் முடிவிடத்தில் தகதகவென தங்க நிறத்தில் பாதியாக மிளிர்ந்து கொண்டிருந்தது சூரியன்.
அந்த கண்களில் அவள் எதைக் கண்டாலோ? .. அவன் கழுத்தோடு கையிட்டு, அவனைத் தன்னை நோக்கி இழுத்தவள், அவன் அதிர்ந்து நிமிரும் முன் அவனது அதரங்களைக் கவ்விக் கொண்டாள் ஷக்தி.
அவன் காதலில், ஷக்தியாக தரும் முத்தங்கள் அரிது. இன்றும் அந்த அரிய பொக்கிஷம் கிடைக்க.. மிருவாக இருந்த அவளது செர்ரிப் பழ இதழ்களை.. தாவிக் கடித்தது அந்த அணில் குஞ்சு.
ஒரு சில மணித்துளிகளாக நீண்டு கொண்டே போனது அந்த காதல் முத்தம். அந்த முத்த சுகத்தில் சுற்றம் மறந்தது காதல் ஜீவிகளுக்கு! தனக்காகவே தன்னை நேசிக்கும் ஜீவன் என்று தோன்ற.. அவனுக்கு தன் இதழ்களைக் கொடுத்து விட்டு.. அமைதியாக முத்த சுகம் அனுபவித்துக் கொண்டிருந்தாள் அவள்.
இருவரும் ஒரு மனநிலை அடைந்து.. தம்மிலிருந்து பிரிந்த நேரம்.. தன் இதழ்களை புறங்கையால் துடைத்துக் கொண்டான் இளா. அவளது கீழ் இதழ்களோ.. இலேசாகத் தடித்து வீங்கிப் போயிருந்தது.
அதே நேரம்… ஷக்தியின் செல்லுக்கு அடிக்கடி அழைப்பெடுத்து அழைப்பெடுத்து.. அவள் தூக்காமல் போகவே சோர்ந்து போனவராக, மாலையில் மேல்மாடித் தள பால்கனியில் நின்று, தங்கையைப் பற்றித் தீவிர யோசனையில் இருந்த, பரசுராமனின் கண்களில் துரதிர்ஷ்ட வசமாக விழுந்தனர் அந்தக் காதல் பறவைகள்.
தங்கை ஒரு ஆடவனின் மாரிலிருந்து பிரிவது, அந்த உயர்ந்த பால்கனியில் இருந்து, குட்டியாகத் தெரிய.. அப்படியே ஆடிப்போய் நின்றார் பரசுராம். அவள், அவனுக்கு கைகளால் “பை” சொல்லிக் கொண்டே தெருவோரமாக நடந்து வந்து, வீட்டின் கேட் திறந்து அவள் உள்ளே செல்லும் வரை அந்த வாலிபன் நின்று விட்டு கிளம்புவதைக் கண்டவரின் விழிகள் இரத்த நிறத்தில் சிவந்தது.
அதே இளைஞன். அன்று மேஜஸ்டிக் சிட்டியில் வைத்து அவர் மனைவி காட்டிய அதே இளைஞன். அப்படியானால் அன்று மீனா கண்டதும் நிஜமாகவே தங்கையைத் தானா? அதற்கு மேலும் பால்கனியில் நின்று கொண்டிருக்காமல்.. விறுவிறுவென்று புயல் போல நடந்து வந்து, வீட்டு ஹாலில், கைகளை பின்னால் கட்டிக் கொண்டு.. விறைப்பாக நின்றிருந்தார் பரசுராம்.
உள்ளே வந்த ஷக்தியின் கால்களோ, காதலன் முத்தத்தில் இன்னும் சரியாக தரையில் பாவவில்லை.
அவளது வெண்மையான முகம் செம்மை பூத்து.. நாணத்தை கடன் வாங்கியிருப்பதைக் கண்டவரின் உள்ளம் உள்ளே குமுறிக் கொண்டிருந்தது. சிரித்துக் கொண்டே.. ஷோல்டர் பேக்கைக் காற்றில் ஆட்டிக் கொண்டே வந்த தங்கை.. தன்னை கண்டதும் திடீரென நின்று..ஷோல்டர் பேக்கை தோளில் மாட்டிக் கொண்டு, பவ்யமாக நடந்து செல்வதைக் கண்டவரின் கண்கள் கோபத்தின் விளைவாக இரத்த நிறத்தில் சிவந்தது.
தன்னைக் கடந்து செல்லும் தங்கையை வெறித்துப் பார்த்தார் அவர். தங்கையின் புறமுதுகுக்குப் பின்னே ஒலித்தது அவருடைய காட்டமான குரல்!
“நில்லு.. எங்கே போயிட்டு வர..?” என்று கேட்டுக் கொண்டே, அவள் முன்னாடி போய் நின்றார் பரசுராம்.பொய் சொல்வதால் இதயம் படபடக்க, இமைகள் தடதடக்க நின்றவள், தரை பார்த்துக் குனிந்து, “நான் காவ்யா வீட்டிக்கு க்ரூப் ஸ்டடி பண்ண..” என்றுரைத்துக் கொண்டிருந்த நேரம், இடியென அவள் இடக்கன்னத்தில் இறங்கியது அவரது வலக்கை.
கன்னத்தில் கை விரல் தடம் சிவந்து பதிய.. கண்களில் நீர்த்துளி கருக்கட்ட நிமிர்ந்து பார்த்தவளின் முன்னே கோபத்தில் இரைந்து கத்தினார் பரசுராம்.
“ப்பொய்யாஆஆ சொல்ற..?” என்று.
தங்கைக்கு இதுவரை கை நீட்டியதேயில்லை அவர். தங்கை மாதிரியா நடத்தினார் அவளை? பெற்றப் பெண்ணைப் போல.. தான் பெறாத மூத்த மகளைப் போல அல்லவா அவளை நடத்தினார் அவர்?
தங்கையின் சிவந்த கன்னத்தைப் பார்த்து… இன்னும் கொஞ்சம் கோபம் அதிகமானது அவருக்கு. உள்ளே வலியும், எவனோ ஒருவனுடன் ஊர் சுற்றி விட்டு வரும் தங்கை மேல் கோபமும் போட்டி போட்டது அவருள்.
சின்னப் பெண்ணை நோக்கியவர், “காவ்யா இங்கே கோல் பண்ணி.. உன் கூட பேசணும்ங்குறா.. நீ அப்போ க்ரூப் ஸ்டடி பண்ண போனது எவன் கூட?” என்று கேட்டு வைக்க, இதயம் நடுநடுங்கிப் போனது.
என்ன காவ்யா வீட்டுக்கு அழைப்பெடுத்திருக்கிறாளா? அவளிடம் விஷயத்தை சொல்லாமல் இளாவுடன் போனது எவ்வளவு பெரிய தவறு? காலம் கடந்து எண்ணி வருத்தப்பட்டாள் அவள்.
அமைதியாக நின்றிருப்பவள், குற்றவுணர்வில் தலை குனிய, மீண்டும் அவளை அடிக்க அந்தரத்தில் கை ஓங்கியதைக் கண்டதும், நடந்திருப்பது அறியாத அவளது தாயோ.. ஓடி வந்து அவளைத் தாங்கிக் கொண்டு, “அவளை ஏம்ப்பா அடிக்குற..?” என்று கேட்க, அப்படியே ஓங்கிய கை அந்தரத்திலேயே நின்றது.
தங்கையின் கண்ணீர் வலிக்கிறது. இருப்பினும் அவள் செய்து வைத்திருக்கும் காரியம்? தாயை நோக்கியவர், “படிக்குறதுக்குன்னு இவளை காலேஜ்க்கு அனுப்பினால்… எங்க மானத்தை காற்றில் பறக்க விட்டுட்டு வந்திருக்கா..”என்றுரைக்க, மீனாட்சிக்குமே கணவனை சமாதானம் செய்வதா? இல்லை ஷக்தியை அவரிடமிருந்து காப்பாற்றுவதா? என்று புரியவில்லை.
இடையிட்டால்… அவர் கோபம் தன் மேல் பாயும் என்று மீனாட்சிக்கும் நன்கு தெரியும்!கைகள் வெடுவெடுக்க அமைதியாக நிற்க வேண்டிய சூழ்நிலை அவளுக்கு. பெற்றவராக தாயுள்ளம் தடதடத்துக் கொண்டு தான் இருந்தது.
“படிச்சது போதும்.. எல்லாம் கை மீறிப் போக முன்னாடி இவளுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைச்சுர வேண்டியது தான்..” என்று கூறிய அந்த நொடி,வெடுக்கென்று திரும்பி.. அண்ணன் முகத்தை கையாலாகாத்தனத்துடன் பார்த்தாள் அவள்.
அத்தியாயம்– 15
அன்று அவள் வீட்டுத் தெருமுனை வரை போய்.. தனக்கு உரிமையானவளை.. விட்டு வந்ததன் பின்பு, அவளிடமிருந்து எந்த மெஸேஜூமோ, ஃபோன் கோலுமோ இளாவுக்கு வரவேயில்லை.
சரி பரீட்சைக்கு படிக்கிறாளா இருக்கும் என்று அவள் எக்ஸாம் தொடங்கப் போவதாகச் சொன்ன அந்த ஒருவாரமும் அவள் படிக்கட்டும் என்று அவளை டிஸ்டர்ப் செய்யாமல் அமைதியாகவே இருந்தான் இளா.
ஆயினும் பரீட்சை தொடங்கிய பிறகு.. அவளுக்கு வாழ்த்து சொல்லி மெஸேஜ் பண்ணியும் நோ ரிப்ளை. அவனாக அழைப்பெடுத்துப் பார்த்தும் கூட, அவள் அலைபேசி வேலைநிறுத்தம் செய்திருப்பது புரிய.. அப்போது தான் ஏதோ அசம்பாவிதம் நடந்தேறுவது போல உறுத்திக் கொண்டே இருந்தது அவனுக்கு.
இரண்டு வாரங்கள் .. கடந்த இரண்டு வாரங்களாக பித்துப் பிடித்தவன் போலத் திரிந்தான் இளா. சரியாக சாப்பிட முடியாமல், உறங்க முடியாமல் அவளுக்கு என்னானதோ, ஏதானதோ என்ற கவலையிலேயே சுற்றித் திரிந்தவன்… பல முறை காலேஜ் கூட சென்று வந்தான்.
அந்தோ பரிதாபம்! அவன் காலேஜ் சென்ற நாட்கள் எல்லாம்.. அவளுக்கு எக்ஸாம் இல்லாத நாட்களாக இருக்க.. பார்வதி அவளை காணாமல்.. தேவதாஸாகவே திரிந்தான் அவன்.
மறு நாள் காலை.. அவள் வீட்டுக்கு சென்றாவது அனார்கலியின் முகம் பார்த்து விடும் உத்வேகம் பிறந்தது சலீமுக்கு. அதற்குப் பிறகு ஏற்படப் போகும் பின்விளைவுகளை விட அவள் மதிமுகம் காண வேண்டும் என்று அவனுள் எழும் தாபம் பெரிது அவனுக்கு.
எண்ணியதைப் போலவே… அவளைக் காண வேண்டும் என்ற ஆசையில்.. மறுநாள் காலை ஷக்தியின் வீட்டுக்கே சென்று விட்டிருந்தான் இளா. அவன் அதிர்ஷ்டம் பார்த்து.. காவலாளியும் கேட் அருகில் இல்லாமல் போகவே, எந்தவித தடையும் இல்லாமல் அவள் வீட்டுக்குள் புயலென நுழைந்தான் இளா.
அவனுடைய முழு வீட்டையுமே அடக்கி விடலாம் என்பது போல இருந்தது ஷக்தி வீட்டின் லிவிங் ரூமே!! ஆனால் இளாவின் மனமோ, அவள் வீட்டையும், அதன் கலைநயத்தையும் நயக்கும் நிலையில் இல்லை. மாறாக,அவன் கண்களும் சரி, உள்ளமும் சரி தன்னவளைத் தேடியே அலைபாய்ந்து கொண்டிருந்தது.
அவளைப் பார்க்க வரும் அவசரத்தில்.. அவன் நேர்த்தியாக சட்டை பட்டன்களைக் கூட போட்டிருக்கவில்லை. இரண்டு பட்டன்கள் திறந்திருக்க.. அதன் வழியாக அவனது வெள்ளை நிற உள்பெனியன் வெளியுலகிற்கு தரிசனம் தந்து கொண்டிருந்தது.
இரண்டு வாரங்களாக முளைத்து சவரம் செய்யாத அந்த தாடியிலிருந்து.. பதற்றமாக ஓடி வந்ததால் விளைந்த வியர்வைத் துளி ஊற்றெடுத்து.. தொண்டைக்குழி வழியாக இறங்கி.. அவனது உள்பெனியன் இடைவெளிக்குள் விழுந்தது. ஆக மொத்தத்தில்.. அவன் உச்சாதிபாதம் வரை பரபரப்பாகவே இருந்தான்.
அவன் கண்கள் அந்த வீட்டில் இருந்த இண்டு இடுக்கினையும், யாரோ ஒருவன் வீட்டுக்குள் நுழைந்ததைக் கண்டு அவசரமாக வெளியே வந்து பார்த்த பணியாட்களையும் இடைவிடாமல் ஆராய்ந்தது.
அவன் கண்களும் சரி.. அவன் நாடி, நாளங்களில் ஓடும் இரத்தமும் சரி ஷக்தியைக் காணும் வரை அமைதியடையாது. அந்த ஹால் முழுதும் தன் குரல் எதிரொலிக்க, “ஷக்தீஈஈ!! .. ஷக்தீஈஈ!!…” என்று தன்னவளின் பெயரை அழைத்துக் கொண்டே தன் உயிரின் பாதியையே தேடினான் இளா.
அவன் கால்கள்.. அவள் வீட்டு மாடிப்படியினை கடகடவென்று தாவி ஏறியது. அவன் கண்களோ ஒவ்வொரு அறையாகப் புகுந்து.. அவளைத் தேடித் தேடி சோர்ந்தும் போனது.
இறுதியாக மாடியின் ஈசானமூலையிலே திறந்திருந்த ஓர் அறைக்குள் புகுந்தவன் தன் ஷக்தியைக் கண்டு கொண்டான். அவன் ஷக்தியைக் கண்டு கொண்டான்.
அவன் கண்களிலே ஓர் நிம்மதி!! அவன் உடலிலே ஓர் ஆசுவாசப் பெருமூச்சு!! அவளைக் கண்டதும் அவன் குரலும் தான் அடங்கிப் போனது. கட்டிலிலே தன் கால்களையும், கைகளையும் குறுக்கிக் கொண்டு சோர்வுடன் படுத்திருந்தவள், அவன் குரலைக் கேட்டதும் புது இரத்தம் உடம்பெங்கும் பாய, சட்டென மஞ்சத்தை விட்டும் இறங்கி நின்று தன் சிவனைப் பார்த்தாள்.
வீட்டில் என்றும் இல்லாதவாறு இன்று வித்தியாசமாகக் கேட்ட ஆண்குரல் கேட்டு அவள் தாயும், அண்ணியும், ஷக்தியின் அறை பக்கமாக வந்து பார்க்க,இவனோ அதைப்பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கணக்கில் கொள்ளவில்லை.
தன் காதலியை நாடி.. கண்கள் திரையிட.. நடுங்கிய கைகளுடன், தேய்ந்து போன குரலில், “ஷக்தி..” என்ற வண்ணம் சென்றவனைக் கண்டதும், அவளுக்கும் கண்கள் பணிக்கத் தொடங்கியது.
இளாவுக்கு இதர அனைத்துமே சிந்தையில் இல்லை. தான் உயிராக நேசிக்கும் தன் ஷக்தியைத் தவிர. அவளது சோர்ந்திருந்த முகமே.. ஏதோவொன்று சரியில்லை என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்த, அவளுடைய கன்னங்களை இரு கைகளாலும் தாங்கியவன், தழுதழுத்த தொனியில், “உஉ.. உனக்கொண்ணும் ஆகலையே.. ஷ.. க்தி? நான் பயந்துட்டேன்டீ…!!”என்று கேட்க, அவளுக்கோ நடந்ததை சொல்ல முடியாமல் தொண்டையில் அழுகை வந்து அடைத்தது. அவனுடைய கையையே ஆதாரமாக பற்றிக் கொண்டு.. கண்களை மூடி கண்ணீர் வடித்து விம்மியழுதாள் ஷக்தி.
யாரோ ஒரு வாலிபன் தங்கள் வீட்டு பெண் மீது காட்டும் அன்பில் அவள் தாய்க்கும், அண்ணிக்கும் கூட இலேசாக நெஞ்சுருகத் தான் செய்தது.
அந்த நேரம் அவன் இடையில் பலமான ஓர் உதை விழ, தன் காதலியை விட்டு விட்டு இரண்டடி தள்ளி போய் விழுந்தான் இளா. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்த போது அங்கே தன் முறுக்கு மீசை கோபத்தில் துடிதுடிக்க, கண்கள் இரத்த சிவப்பாக, கொலைவெறியுடன் நின்றிருந்தார் பரசுராம்.
அவனை நோக்கி கண்களை உறுக்கி, “ஏன்டா.. திறந்த வீட்டுக்குள்ள.. நாய் நுழையுற மாதிரி.. நுழைஞ்சு.. என் வீட்டுப் பொண்ணை அத்துமீறித் தொட்டுப் பேசுவியா??..”என்று கேட்டவர், கீழே குனிந்து அவள் காலரை கொத்தோடு பற்றித் தூக்கி.. இளாவின் கன்னம் இரண்டும் பளார் பளாரென்று அறைகள் விட்டுக் கொண்டே போனார்.
இளாவுக்கோ இருப்பது இள இரத்தம். அவர் அடித்த ஆத்திரத்தில் அவனும் கையை உயர்த்துமளவுக்கு வெறி வந்தாலும், பின்னாளில் பிரச்சினை வரக்கூடும் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக.. தன் முஷ்டி மடக்கி நின்று.. அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டான்.
அவர் அடியின் வீரியத்தில் கீழுதடு கிழிந்து இரத்தம் எட்டிப் பார்க்க, ஷக்திக்கோ.. உடலெங்கும் ஓர் துணுக்கம் பரவி அடங்க… ஓடிப் போய் அண்ணனின் பெரிய முன்னங்கையைப் பற்றிக் கதறியவாறு கெஞ்சவாரம்பித்தாள்.
அவள் கண்களிலே வழிந்த நீர்.. அது அவனுக்கானது. “அண்ணா… ப்ளீ… ப்ளீஸ்ணா.. அ.. வர் என்கிட்ட அத்துமீறவே இல்லைண்ணா…விட்டுருண்ணா” அவள் கெஞ்சலெல்லாம் அவர் செவியில் விழவேயில்லை.
இரண்டு வாரங்களுக்கு முன்பு.. தங்கையும், இந்த வாலிபனும் ஒன்றாக சேர்ந்து நின்ற வரி வடிவமே ஞாபகம் வந்து கொண்டிருக்க.. அவர் சீற்றம் இன்னும் இன்னும் அதிகமானது.
தன் கையைப் பற்றியிருந்த தங்கையை உதறித் தள்ளி விட்டவர், அவளைப் பார்த்து கர்ஜிக்கும் குரலில், “நீ அங்கிட்டு போ..!!!”என்று கத்தவும் செய்தார் அவர். பரசுராமின் கோபாவேசத்தை கட்டுப்படுத்தத் தெரியாமல், அவர் தாயும், மனைவியும் நடப்பதைக் கேட்டு விதிர் விதிர்த்துப் போய் நின்று போய் நின்றிருந்தனர்.
அடக்கப்பட்ட கோபத்துடன், பெருமூச்சு விட்டவாறு அவரைப் பார்த்த இளா, “ஸாரி சார்… பர்மிஷன் கேட்காமல்.. வீட்டுக்குள்ளே வந்தது.. உங்க தங்கச்சியைத் தொட்டது தப்பு தான்.. ஆனால் நானும், உங்க தங்கச்சியும் ஒருத்தரையொருத்தர் சின்ஸியரா காதலிக்குறோம்…”என்று கூறிய மறு விநாடி அடுத்த அடி விழுந்தது அவன் கன்னத்தில்.
“எவ்வளவு தைரியமிருந்தால்.. என்கிட்டேயே என் தங்கச்சியை காதலிக்குறேன்னு சொல்வ?..” என்று மீண்டும் எகிறினார் அவர். பின்னே அவர் தங்கையை காதலிக்குறேன் என்று அவரிடம் சொல்லாமல், அடுத்தவனிடமா கூறுவது?
காதல் எல்லாம் கூடாது. பெற்றவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையைத் தான் தங்கை கட்ட வேண்டும் என்று பழைமை பேண் கருத்துக்களை கொண்டிருந்த பரசுராமுக்கு.. இளாவின் வார்த்தைகள் ஆத்திரத்தை மூட்டியிருக்க வேண்டும்.
அவன் சட்டையைக் கொத்தோடு பற்றி, ஒரு ஆட்டு ஆட்டி, “நாங்க க்கிளி போல ப்பொண்ணை வ்வளர்த்து ஆளாக்கி.. அது படிக்க க்காலேஜுக்கு. அனுப்பி வைச்சா.. அதுங்க மனசுல காதல்ன்ற… நஞ்சை விதைச்சு.. பீச், பார்க்குன்னு.. கூட்டிப்போய்” என்றவருக்கு அதற்கு மேலும் சொல்ல மனம் வரவில்லை.
“ச்சீ.. சொல்லவே நா கூசுது.. பெத்தவங்க மானத்தை கப்பலேத்தன்னே வருவீங்களாடா..??” என்று கேட்டார் பரசுராம்.
தன் காதலன் அடிவாங்குவதை எந்தக் காதலியால் தான் தாங்க முடியும்? ஓடோடி வந்து தன் அண்ணனின் கைப் பற்றி.. மீண்டும் கெஞ்சலானாள் ஷக்தி.
வார்த்தைகளை தெளிவாக உரைக்க முடியாமல் அழுகை நெஞ்சை அடைக்க, “அண்… ணா… அவர் அப்படிப்பட்டவர் இல்லைண்ணா.. ரொம்ப ரொம்ப நல்லவர்ணா..” என்றதெல்லாம் பரசுராம் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. அங்கே தன் தங்கையொருத்தி இல்லாதது போல பாவித்து, இளாவை நோக்கி, “அந்த அந்த வயசுல.. எது நல்லது.. எது கெட்டதுன்னு.. பார்த்து பார்த்து செய்த எங்களுக்கு.. கல்யாண வயசில்.. எவனை தேர்ந்தெடுக்கணும்னு தெரியாதா?” என்று கேட்டவர், இளாவைத் தள்ளி விட்டார் வெறியுடன்.
அவர் கவலையும், அவர் ஆத்திரமும் ஞாயமானது என்பது இளாவுக்கு புரியவே… பெண்ணைப் பெற்றவரின் ஆதங்கத்தை மதித்து அமைதியாக அடிகளை வாங்கிக் கொண்டான்.
அவன் நெஞ்சில்.. பரசுராம் ஓங்கி ஓர் மிதி மிதிக்கப் போக.. அதற்கு மேலும் அங்கு நடப்பவற்றையெல்லாம் பார்த்திருக்க மனமற்று, அண்ணன் காலில் சடாரென விழுந்தாள் அவள்.
அவர் முன்னே முழந்தாளிட்டு நின்று.. இரு கை கூப்பி வணங்கி, “நீ என்ன சொன்னாலும் கேட்குறேண்ணா.. ப்ளீஸ்ணா… என் இளாவை மட்டும் விட்டுருங்கண்ணா..” என்று அவள் கெஞ்ச.. தங்கையின் அழும் நயனங்களையே ஓங்கிய காலை இறக்காமலேயே பார்த்திருந்தார் பரசுராம்.
‘நீ என்ன சொன்னாலும் கேட்குறேண்ணா’ என்று அவளில் இருந்து வந்த வார்த்தைகளோ.. அந்த கண்ணீரோ.. அல்லது இரண்டுமோ.. அவரை கொஞ்சம் மலையிறக்க, இளாவை அடிக்காமல் அமைதியானவர், தங்கைக்கு புறமுதுகிட்டு திரும்பி நின்று, “இவன் இங்கே வர்றது.. இது தான் கடைசி தடவையா இருக்கட்டும்.. இல்லைன்னா நடக்கப் போகும் விபரீதங்களுக்கு நான் பொறுப்பு கிடையாது”என்றுரைக்க.. அவள் உடலெங்கும் ஓர் அதிர்வலை எழத்தான் செய்தது.
அண்ணனின் மனதை அறிந்த தங்கையாக அவளும், தன் மனதை தேற்றிக் கொண்டு.. ஓடிச்சென்று இளா பக்கத்தில் அமர்ந்தவளுக்கு… அழுகையின் உச்சத்தில் தேம்பல் கூட வந்தது.
நெஞ்சை இழுத்து விம்மியவளின் கைகள் அனிச்சையாய் அவனது இரத்தத்தை நோக்கி நீண்டது. அவள் காதலன்.. அவளுக்கு ஏதாகிலுமோ என்று பதறியவனாக அவளைக் காண வந்த அவளுடைய பதி.
அவன் காயத்தைத் தடவப் போன கைகளை உள்ளிழுத்துக் கொண்டவள், கை கூப்பி நின்று அவனைப் பார்த்து, மெல்லிய குரலில், “எ.. என்னா.. லே உன்னை.. இந்த லட்சணத்.. தில் பார்.. க்க முடியலை.. இளா! … ப்ளீஸ்.. போ.. போயிடு”என்றவள் கண்கள் மூடி அழுகையுடன் கெஞ்சினாள் அவள். ஷக்தியின் கண்ணீர் அவனை சுட.. அவளையே இயலாமையுடன் பார்த்திருந்தவனுக்கு.. இத்தனை நாளாக அவளிடமிருந்து எந்த தகவலும் வராமல் போனதுக்கான காரணம் புரிந்தது.
வீட்டில் அவர்களது காதல் மேட்டர் எப்படியோ அகப்பட்டு.. இப்படி எதிர்ப்பைக் கிளப்பும் என்று தெரிந்திருந்தால்.. முதலில் பரசுராமை அல்லவா கரெக்ட் பண்ணியிருப்பான்? அவளைப் பார்த்தவனுக்கு அந்நொடியிலும் அவள் நலம் பற்றிய சிந்தனையே!
இரத்தம் ஒழுகினாலும், சோர்ந்திருந்தாலும் கூட, “உனக்கொண்ணும் இல்லை தானேமா? நீ நல்லா தானே இருக்க?”என்று அந்நொடியிலும் கேட்க, ஷக்திக்கோ.. தன் மேல் இத்தனை காதல் வைத்திருக்கும் அவனை அப்படியே அணைத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.
ஆனால் முடியாதே? அண்ணா முன்னிலையில் எப்படி? அப்படியே அணைத்துக் கொண்டாலும் நிகழப் போகும் அசம்பாவிதங்கள் வேறு மனதை வாட்டவே, “ம்.. ஆமா.. ப்ளீஸ்.. இப்போ இங்கேயிருந்து போ இளா” என்றாள் அவள்.
எழும்போது.. கால் தடுக்கினாலும்.. மீண்டும் எழுந்து நின்று சமாளித்தவன், தன் ஷக்தியின் சொல்லை மதித்து அமைதியாக அங்கிருந்து நகர்ந்தான். போகும் தன் காதலனையே…கண்ணீர் மல்க பார்த்திருந்தாள் அவள்.
*********
தன் காலேஜ் நண்பர்கள் மூலம் ஷக்திக்கு எக்ஸாம் நடக்கும் நாட்களையும், ஷக்தி எக்ஸாம் எழுத வரும் நேரத்தையும் அறிந்து கொண்ட இளா.. கொஞ்சமும் காலம் தாழ்த்தாமல்.. அடுத்த நாள் காலை.. தன் ஷக்தியின் வரவுக்காக காலேஜ் வாயிலிலே காத்திருக்கலானான்.
அவன் காத்திருப்பு காத்திருப்பாகவே இருக்க.. அவன் இதயத்துக்கு சொந்தக்காரியான அந்த பேரழகி மட்டும் வரவேயில்லை.
மாறாக அவளது தோழி காவ்யா மட்டும்.. எக்ஸாம் எழுதுவதற்கு தயாராகி வருவதைக் கண்டவன், அவளிடமாவது ‘ஷக்தி எங்கே?’ என்று கேட்போம் என்று தோன்ற..காலேஜூக்குள் நுழைந்து விட்டவளை.. அவசரமாக நாடிப் போய், அவள் புறமுதுகை நோக்கி, இரைந்த குரலில், “காவ்யா” என்றான்.
இளாவின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்த காவ்யாவுக்கோ இளாவைக் கண்டதும் ஓர் அதிர்ச்சி. பின்னர் அவள் இலேசாக கண்களில் கண்ணீர் கோர்க்கத் தொடங்க, இளாவோ, ‘இவளுக்கு என்னவாயிற்று?’ என்பது போல புரியாதவனாக அவளைப் பார்த்துக் கொண்டே நிற்க, காவ்யா வாய் திறந்தாள்.
“ ஸாரிண்ணா.. எல்லாம் என்னால் தான்ணா!!” என்று அவள் தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல் ஸாரி கேட்டவளாக.. ஏதேதோ சொல்ல குழம்பிப் போனான் இளா.“என்ன சொல்ற காவ்யா..?”-புருவங்கள் இரண்டும் இடுங்க புரியாமல் கேட்டான் அவன்.
“வந்து… டூவீக்ஸ் முன்னாடி.. சன்டே.. அன்னைக்கு.. ஷக்தி உங்க வீட்டுக்கு வந்தாளாண்ணா?”என்று காவ்யா கேட்க, ..“ஆமா..” என்றான் இளாவும் சாதாரணமாக.
அவர்களின் காதல் மேட்டர் எக்குத்தப்பாக மாட்டிக் கொண்டது என்னால் தான் என்பதே அவளது குரலை தேயச் செய்ய, இளாவின் விழிகளை.. கவலையுடன் நோக்கிய காவ்யாவும், “அப்போ அவள்.. என் வீட்டுக்கு க்ரூப் ஸ்டடி பண்ண போறேன்னு.. சொல்லிட்டு வந்திருக்காண்ணா.. இது தெரியாமல் நானும் ஷக்தி வீட்டுக்கு கோல் பண்ணி…”என்று பாதி சொல்லவுமே.. முழுதும் சொல்ல தேவையில்லாமல் அனைத்தும் புரிந்தது இளாவுக்கு.
அதனால் தான் அவளிடமிருந்து குறுந்தகவல், அழைப்பு எல்லாம் ரத்தானதா? காலம் கடந்து உண்மை விஷயம் தெரிய வந்ததும் இளா.. ஆற்றாமையில் தன் காலை காற்றுக்கு ஓங்கி அடித்தான்.
“ஓ ஷிட்..!!” என்று கைசேதப்பட்டவனாக, இரு கைகளாலும் தலை கோதிக் கொண்ட வேளை.. காவ்யா தொடர்ந்து சொன்னாள்.
“அவங்க வீட்டுக்கு… விஷயம் தெரிய வந்திருச்சுண்ணா.. அவள் அண்ணா அவளை இனி காலேஜ் போகாதேன்னு சொல்லிட்டாரு.. அப்புறம் அவள் அம்மா தான் ஒருவழியா கெஞ்சி பேசி.. லாஸ்ட் யர்ன்றதால் எக்ஸாம் எழுத மட்டும் சம்மதிச்சிருக்காங்க.. கரெக்ட்டா எக்ஸாம் ஸ்டார்ட் ஆகும் போது.. அவங்க அண்ணாவே வந்து விட்டுட்டு..ஆஃப்டர் த்ரீ ஹவர்ஸ்.. அவரே வந்து காரில் கூட்டிட்டுப் போயிடுவாரு..”என்று கூற.. அப்போது தான் சரியாக விஷயமே புரிந்தது அவனுக்கு.
காதல் கொண்ட ஆண்மனம் அல்லவா? அவளுக்காக ஏங்கித் தவித்தது. அவனுக்கு அவளைப் பார்க்க வேண்டும்.. பேச வேண்டும். காவ்யாவை நோக்கி மீண்டும் நிமிர்ந்தவன், ஆழமான யோசனை முகத்தில் ஓட, “காவ்யா.. எனக்கொரு ஹெல்ப் பண்ணு..”என்றான் இளா.
“சொல்லுங்கண்ணா..”- அவளும் உவந்து சொல்ல, தன் முழுநீளக் கை ஷேர்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு பேனையையும், துண்டையும் எடுத்து எதேதோ கிறுக்கியவன், அதை எடுத்து காவ்யாவிடம் நீட்டி, “இதை.. ஷக்திக்கு எக்ஸாம் விட்டதும்.. யாருக்கும் தெரியாமல் கொடுத்துரு..”என்றான்.
காவ்யாவும் அந்த துண்டில் என்ன எழுதியிருக்கிறது என்பதை படிக்க ஆர்வம் காட்டாதவளாக, அதை எடுத்துக் கொண்டு எக்ஸாம் ஹாலை நோக்கிப் போனாள்.
அங்கே வாசலிலேயே நின்றிருந்தால்.. ஒருவேளை ஷக்தியை டிராப் செய்ய வரும்.. அவளது முரட்டு அண்ணன்காரனின் கண்ணில் ஏடாகூடமாக விழுந்து வைக்கக் கூடும் என்று யோசித்தவன், சூதானமாக.. எக்ஸாம் ஹாலுக்கு அருகில் அமைந்திருக்கும்.. மாணவர்கள் படிக்கவென அமைக்கப்பட்டிருந்த குட்டிக் குடில் போன்ற சீமெந்து ஹட்டில் போய் அவளுக்காக அமர்ந்திருந்தான்.
சரியாக எக்ஸாம் ஆரம்பிக்கும் நேரம் காவ்யா கூறியது போலவே.. பரசுராமன் தன் காரில் கொண்டு வந்து விட..மெல்ல இறங்கி அமைதியாக தரை பார்த்து குனிந்தவளாக, சோர்ந்த முகத்துடன் எக்ஸாம் ஹாலை நோக்கி செல்லும் தன்னவளையே வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் இளா.
இப்போது அவளுக்கு வேண்டியதெல்லாம்.. அவளுக்கு நானிருக்கிறேன் என்ற தைரியம் தான் என்று தெளிவாகப் புரிந்தது இளாவுக்கு.அவன் வீட்டிலிருக்கும் சுதந்திரம் போல… அவள் வீட்டிலும் சுதந்திரம் இருக்கும் என்று தானே அவன் நினைத்திருந்தான். இருவர் வீட்டிலும் எந்த எதிர்ப்பும் கிளம்பாது என்று தானே எண்ணியிருந்தான்.
ஆனால் அவளது அண்ணனே.. அவன் காதலுக்கு வில்லனாக வரக்கூடும் என்று அவன் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. எதிர்காலம் பற்றிய யோசனையுடன்.. அங்கேயே அமர்ந்திருக்கலானான் இளா.
சரியாக மூன்று மணித்தியால பரீட்சை முடிந்து.. கிளம்ப ஆயத்தமான ஷக்தியை நாடிப் போன காவ்யா, “ஷக்தி..இளாண்ணா..இதை உன்கிட்ட கொடுக்க சொன்னாரு..”என்று கூற.. இத்தனை நேரம் ஒளியிழந்திருந்த அவள் முகம் ஸ்விட்ச் போட்டது போல பளிச்சென்று ஒளிரலாயிற்று.
அழுது அழுது சின்னதாகிப் போன அவள் நயனங்கள் கொஞ்சம் விரிய, “இளாவா… இஇ.. இளா என்னைப் பார்க்க வந்தானா.?”என்று சிறிய ஆனந்த அதிர்ச்சி மீதூற கேட்டவள், தோழியின் பதிலைக் கூட கேட்க பொறுமையற்று.. அந்த கடதாசித் துண்டை விரித்துப் பார்த்தாள்.
“ம்.. ஆமா..”-தோழியின் கவனம் தன்னில் இல்லை என்பது தெரியாமல் பதிலிறுத்தாள் காவ்யா.
அந்த துண்டிலே.. எக்ஸாம் ஹாலுடன் இருக்கும் குட்டி அறைக்கு வருமாறு எழுதப்பட்டிருந்த அவன் கையெழுத்தைக் கண்டதும்.. இதழ்களில் புன்சிரிப்பு மலர, காவ்யாவின் கையைப் பற்றிக் கொண்டவள், “காவ்யா…. நான் இளாவைப் பார்க்கப் போறேன்… அண்ணா கேட்டால் வாஷ்ரூம் போயிருக்கேன்னு சொல்லி சமாளி” என்று வேகவேகமாக சொன்னவளின் கால்கள்.. எக்ஸாம் ஹாலுக்கு அடுத்ததாக இருக்கும் அந்த குட்டி அறையை நோக்கி விரைந்தது.
காவ்யாவுக்கு தோழியின் மனநிலை நன்றாகவே புரிந்தது. தன்னால் தானே அவர்கள் காதல் எக்குத்தப்பாக அகப்பட்டுக் கொண்டது என்ற குற்றவுணர்வில் இருந்தவள் அல்லவா அவள்?
அதனால் தோழிக்கு உதவ முன் வந்து.. வாசலை நோக்கி கேஷுவலாக எக்ஸாம் விட்டு நடந்து செல்பவள் போலவே நடந்து சென்றாள் அவள்.
சரியாக ஷக்தியின் முறுக்கு மீசை பரசுராம் அண்ணாவும் காரை விட்டும் இறங்கி.. காலேஜில் இருந்து வரும் மாணவிகளில் தன் தங்கையும் வருகிறாளா? என்று பார்த்த வண்ணம் நின்றிருப்பதைக் கண்டாள் காவ்யா. அவரை நோக்கி தூரத்திலிருந்தே மரியாதை நிமித்தம் அவள் புன்னகைக்க, அவரும் தன்னருகே வந்த காவ்யாவிடம், அவள் எதிர்பார்த்தது போலவே, “யம்மா.. ஷக்தி எங்கேமா?”என்று கேட்டார்.
உள்ளே மலையளவு பதற்றம் இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல், மென்மையான குரலில், “ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன்னு சொல்லிட்டுப் போனாண்ணா..எனக்கு டைமாச்சு.. நான் கிளம்புறேன்ணா”என்றவள், அவர் பதிலுக்கும் காத்திருக்காமல் தன் ஸ்கூட்டியில் ஏறி விரைய… மேற்கொண்டு ஏதும் கேட்க முடியாமல் போனது பரசுராமுக்கு.
‘என்ன பெண்ணிவள்? பெரியவங்க பேசும் போது நின்னு பேசணும்னு கூட தெரியலை?’என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவராக.. மீண்டும் தன் தங்கைக்காக காத்திருக்கலானார் அவர்.
அங்கே அந்த குட்டி அறையில் அவளுக்காக காத்திருந்த இளாவைக் கண்டதும்.. பொங்கியெழுந்த உணர்ச்சிகளுடன், கண்ணீரும் பெருக, “இளாஆஆ”என்று இரைந்து கத்திய வண்ணம், உற்சாகத்துடன் ஓடிச் சென்று தன் காதலனைக் கட்டிக் கொண்டாள் ஷக்தி.
அவனும் தன்னவளை இறுக இறுக கட்டிக் கொண்டு.. அவள் கழுத்து வளைவில் நாசி நுழைத்து.. அவன் எப்போதும் விரும்பும் அவள் வியர்வை வாசனையை உள்ளிழுத்த மூச்சுடன் முகர்ந்து தன் காதலைத் தெரியப்படுத்தினான் அவன்.
நேற்று அவனது காயம் தடவ முடியாது தவித்தவளுக்கு.. இன்று அந்த தெய்வமே வழிசமைத்துக் கொடுத்தது போல இருந்தது அந்த சந்திப்பு.
அவனது நீலம்பூத்த உதட்டையும், கன்னத்தையும் ஒற்றை விரலால் தடவியவள், “ஏன்டா.. நேத்து அப்படி பண்ணே? ..உனக்கு யாரு என் வீட்டுக்கு வர சொன்னா?.. நீ அடிவாங்கினப்போ.. என் உசுர் என் கையில் இல்லை இளா”என்றவள்.. அவன் பரந்த மார்பில் தலை புதைத்து மீண்டும் மீண்டும் தேம்பித் தேம்பி அழ, தனக்காக அழும் காதலியைத் தேற்றும் வழிவகை அறியாது போனான் இளா.
அவளது கூந்தலை மென்மையாக கோதி விட்டவனாக, “ஹேய்.. எனக்கு ஒண்ணுமில்லைமா.. ஐ ஏம் பர்ஃபக்ட்ளி ஆல்ரைட்..”என்று உரைத்தான் அவனும்
அவனது தாடியடர்ந்த கன்னத்தைத் தடவிக் கொண்டே, தேம்பித் தேம்பி, “என.. க்கு பய.. மா இருக்கு இளா.. எங்கே நான் உன்னை இழந்துடுவேன்னு ரொம்.. ப ரொ… ம்ப பயமா இருக்கு இளா.. அந்த பயத்தில் எனக்கு சூசையிட் தோட்ஸ் எல்லாம் வருது இளா.. என்னாலே ஒழுங்கா படிக்கக் கூட முடியலை இளா..”என்று அவள் வீட்டில் யாரிடமும் சொல்ல முடியாத அனைத்தையும் அவனிடம் சொல்ல பதறிப் போனான் இளா.
இலேசாக அவள் தலையில் குட்டி, “மண்டு.”என்றவன் அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டவனாக, “இங்கே பாரு.. அந்த மாதிரி தோட்ஸ்… இனி உனக்கு வரக்கூடாது.. நான் இருக்கேன்.. எப்போவும் நான் இருப்பேன்.. உன் கழுத்தில்.. நான் கட்டும் தாலி தான் ஏறும்.. அதில் மட்டும் நீ உறுதியா இரு.. எதைப்பத்தியும் யோசிக்காமல் எக்ஸாம்க்கு படி.. நான் எப்படியாவது என் அம்மாவைக் கூட்டிட்டு உன்னை பொண்ணு கேட்க வர்றேன்..”என்று தன்னால் இயன்ற மட்டும் ஏதேதோ சமாதானம் கூறி.. அவள் மனதைத் திடப்படுத்தலானான் அவன்.
அவன் சொன்ன மாதிரியெல்லாம் நடந்தால் நன்றாகத் தான் இருக்கும்! இருப்பினும் அவள் அண்ணன்? அண்ணன் ஒத்துக் கொள்வானா என்ன? “எங்க அண்ணா பத்தி உனக்குத் தெரியாது இளா.. அவர் இதுக்கு ஒத்துக்கவே மாட்டாரு.. காதல்ன்றது அவர் டிக்ஷனரியில் கெட்டவார்த்தை… ஒழுங்கில்லாத செயல்னு நினைக்குறவரு.. எனக்கு இது சரிப்பட்டு வரும்னு தோணலை..”என்று தன் அண்ணன் பற்றி முற்றிலும் அறிந்து வைத்திருக்கும் ஓர் தங்கையாக எடுத்துரைத்தாள் அவள்.
“அப்படியெல்லாம் இல்லை.. எல்லாம் நல்லதாகவே நடக்கும்.. வீடேறி வந்து பொண்ணு கேட்கும் போது அவரால் மறுக்க முடியாது..”என்று உறுதியான குரலில், ஆறுதல் சொன்னவன், அவள் நெற்றியில் குனிந்து இதழ் பதித்து விட்டு, அவளது சிவந்த இதழ்களை சிரிப்பது போல இரு விரல்களால் விரித்துப் பிடித்து, “இப்போ கொஞ்சம் சிரி..”என்றுரைக்க, அரை மனதுடன் தன் காதலனுக்காக சிரித்தாள் ஷக்தி.
அங்கே வாசலில் நின்றிருந்த பரசுராமருக்கோ.. நேரம் ஆக ஆக, “வாஷ்ரூம் செல்ல இவ்வளவு நேரமா?”என்று தோன்ற.. அவரது காத்திருக்கும் பொறுமையின் அளவும் எல்லை கடக்கவே, தாமே உள்ளே சென்று பார்த்து விடுவது என்று முடிவு செய்து.. உள்ளே நுழைய ஆயத்தமான போது.. ஷக்தி வெளியே வருவதைக் கண்டு தன் நடையை நிறுத்திக் கொண்டார்.
இறுகிப் போன முகத்துடன் எக்ஸாம் எழுதப் போன தங்கை.. தற்போது தெளிந்த முகத்துடன் வருவதைக் கண்டவருக்கு… கொஞ்சம் சந்தோஷமாகவே இருந்தாலும் கூட.. உள்ளே இதயத்தின் ஓரத்தில் உறுத்தவே செய்தது.
அமைதியாக வந்து, காரில் ஏற, தானும் டிரைவர் ஸீட்டில் ஏறி ரியர் வியூவ் மிரர் வழியாக தங்கையின் தெளிந்த முகத்தைப் பார்த்தவர், “என்ன இன்னைக்கு எக்ஸாம் ரொம்ப சுலபமோ?” என்று கேட்க, அவளும் சிறு புன்னகையுடன், “ஆமாண்ணா”என்றுரைக்க.. அப்படித்தான் போலும் என்று எடுத்துக் கொண்டு, அவரும் வண்டியை எடுக்கலானார்.
இளா வாய்ச்சொல் வீரன் அல்ல. அவன் வாய்ச்சொல் காக்கும் வீரன் என்று … அடுத்த நாள் மாலையே… நிரூபிக்கவும் செய்தான்.
தன் காதலியை இதற்கு மேலும் துவழ விடக்கூடாது. அவளது தற்கொலை எண்ணம் பற்றிய பேச்சு வேறு அவனை நில்லாமல் அலைக்கழிக்கவே, தன் தாயை அழைத்துக் கொண்டு ஷக்தியின் வீட்டுக்கு பெண் கேட்டு வந்திருந்தான் இளா.
தன் சேலைத்தலைப்பால் மாரை இழுத்து மூடிக் கொண்டு, நெற்றியில் சின்ன விபூதியுடன் நின்றிருந்த அந்த பெண்மணியையும், அவர் பக்கத்தில் பவ்யமாக நின்று, கையில் பழம், மல்லிப்பூ மற்றும் பட்டுச்சேலை சகிதம் ஒரு தட்டை ஏந்திய வண்ணம் நின்றிருந்த… முந்தைய நாள் காலை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து.. தங்கையிடம் பேசிய.. இளாவையும் ஏற இறங்கப் பார்த்தார் அவள் அண்ணன் பரசுராமன்.
அவன் தாய், மரியாதை நிமித்தம் இரு கை கூப்பி வணங்கி, “வணக்கம்..” என்றுரைக்க, அதற்கு மறு வணக்கம் வைக்காமல் வெறும் தலையை மட்டுமே ஆட்டி.. அந்த வணக்கத்தை வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டவர், சோபாவைக் காட்டி உட்காருமாறு சமிக்ஞை செய்தாரே ஒழிய, “உட்காருங்க” என்று மறந்தும் சொல்லவில்லை.
அவர் காட்டும் இளக்காரமும், மரியாதையின்மையும் இளாவுக்குத் தெள்ளத் தெளிவாக புரியவே செய்தது. இருப்பினும் ஷக்திக்காக அதைத் தாங்கிக் கொண்டு, தாயுடன் அமைதியாக சோபாவில் அமர்ந்தான் அவன்.
பேச்சை அறிமுகப்படலத்தில் இருந்து ஆரம்பிக்க நாடிய அவன் தாயும், “நான் இளாவுடைய அம்மா.. களனி யுனிவர்சிட்டியில் ப்ரோஃபஸரா இருக்கேன்.. “என்று சொல்ல, அதற்கும் ஏதோ கதை சொல்லி கேட்டுக் கொண்டிருப்பதைப் போல பொடுபோக்காக, “ஓ அப்படீங்களா மேடம்!!”என்று மட்டும் சொன்னார் பரசுராம்.
அதை கணக்கெடுக்காத அவன் தாயாரும், விஷயத்தை நாசுக்காக சொல்ல நாடி, “உங்களுக்கே தெரியும்.. உங்க தங்கச்சியும், என் மூத்த பையனும்… ஒருத்தரையொருத்தர் காதலிக்குறாங்க..” என்று தாய் ஆரம்பிக்கும் போதே.
கை முஷ்டியை இறுக்கி.. சோபாவில் கை வைக்கும் பகுதியை இறுகப் பற்றி நின்று.. தன் கோபத்தை அடக்கிக் கொள்ள படாதபாடு பட்டுப் போனார் அவர்.
இது அறியாத இளா அம்மாவோ, தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனார்.
“இது அவங்க வாழ்க்கை.. அவங்க மனசு பொருந்தி போகும் போது.. நாங்களும் அவங்களை சேர்த்து வைக்குறது தான் நல்லது.. என் பையன் உங்க பொண்ணை நல்லா பார்த்துப்பான்.. ஏன்னா என் வளர்ப்பு அப்படி..?” என்ற கணம் பரசுராமின் எல்லை காற்றோடு பறந்தது.
சோபாவை இறுகப் பற்றிய கையை எடுத்துக் காட்டி, “நிறுத்துங்க!!.. உங்க வளர்ப்பு எப்படின்னு தான் நேத்து நானும் பார்த்தேன்… ஒரு வயசு பொண்ணு இருக்கும் ரூமுக்குள்ள அத்துமீறி உள்ளே நுழையுறது தான்.. உங்க வளர்ப்பா..?”என்று ஒரு கேள்வி கேட்டு வைக்க, நடந்திருப்பது அறிந்து.. தெறிக்கும் சீற்ற விழிகளுடன் அவரும் ஒரு பார்வை பார்த்து வைத்தார் இளாவை.
இளாவும் தாயின் பார்வையை தாங்க முடியாமல் மெல்ல தலை குனிய, அவரோ ஆத்திரத்துடன், “என் பொண்ணு.. சின்ன பொண்ணு.. இப்போ இந்த காதல், கத்தரிக்காய் எல்லாம் இனிக்கத் தான் செய்யும்.. அப்பன் ஸ்தானத்தில் இருந்து நான் தான்.. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை.. அமைச்சுக் கொடுக்கணும்.. என் தங்கச்சிக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை.. பார்க்கணும்னு எனக்குத் தெரியும்.. நீங்க கிளம்பலாம்..” என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக அவர் உரைக்க, இளாவின் தாயாரோ என்ன பேசுவது என்று புரியாமல் வாயடைத்துப் போனார்.
இருந்தாலும் தன் மகன் ஆசைப்பட்டு விட்டான் என்பதற்காக பேசிப் பார்க்க நாடியவர், மென்மையாக, “அதில்லைப்பா..”என்று பரசுராமருடன் பேசிப் பார்க்க நாடிய போது அதற்கும் விடவில்லை மிஸ்டர். பரசுராமர்.
எப்படியாவது தன் வீடேறி வந்தவர்களை அவமானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி விடும் வெறி அவருக்குள். அதனால் அவர் அன்று தன் இயல்பையும் மீறித் தான் நடந்து கொண்டார்.
வாய்க்கு வந்தவாறு எல்லாம் தகுதியையும், தராதரத்தையும் பற்றிப் பேசி.. இளாவின் தாயாரையும், இளாவையும் மனதளவில் குன்றிப் போகச் செய்தார். அவர் பேசும் போது அவர் ஐய்யனார் மீசை துடித்து அடங்கியது.
“இங்கே பாருங்க.. ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலியுடன் சம்பந்தம் வச்சுக்கிட்டு.. என் நிலையை.. என்னையே தாழ்த்திக்க சொல்றீங்களா?.. அவள் செல்வ செழிப்போடு வளர்ந்தவ.. உங்க வீட்டுக்கு வந்து.. அவளை கஷ்டப்பட சொல்றீங்களா? அப்படி என் தங்கையை வைச்சு காப்பாத்துறதுக்கு என்ன தகுதி, இருக்கு…. உங்க பையன்கிட்ட?..” என்றவர், இளா செய்து கொண்டிருக்கும் வேலையை பற்றியும் வெளியில் விசாரித்திருப்பார் போலும். அதை சொல்லியும் இளாவை இழிவுக்குள்ளாக்கினார் அவர்.
தன் கெத்தைக் காட்ட காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டவர், “சாதாரண டிகிரி படிச்சு முடிச்சுட்டு.. கடை கடையா ஏறி இறங்கி சிம் சப்ளை பண்றவனுக்கு… போய் என் பொண்ணை கொடுக்க சொல்றீங்களா? அவள் அழகுக்கும், அந்தஸ்த்துக்கும் ஆயிரம் ராஜ்குமாரர்களைக் கொண்டு வந்து நிறுத்தி ஒரு சுயம்வரம் நடத்தி.. அவளுக்கு மாப்பிள்ளை தேர்வு செய்வேன்..!!”என்று சொன்ன விதம்.. இளாவின் தாயாருக்கு கோபத்தை மூட்டியது.
மகனின் எதிர்காலம் என்ற ஒரே காரணத்திற்காக அமைதியாக இருந்தவருக்கு.. அதே அவர் மகனின் தொழிலை பற்றியும் கீழ்த்தரமாக பேசுவது பிடிக்காமல் போனது.
சட்டென சோபாவை விட்டும் இளாவின் தாயார் எழுந்து கொள்ள, இளாவும் எழுந்தான். பரசுராமரும் அவர்கள் கிளம்பப் போகிறார்கள் போலும் என்ற எதிர்பார்ப்பில் எழுந்து நிற்க.. இளாவின் தாயாரும் பரசுராமருக்கு சளைத்தவர் அல்ல என்பதை தன் வார்த்தையாடல் மூலம் காட்டினார்.
நாசித்துவாரம் விடைத்து அடங்க, ஏறி இறங்க மூச்சு வாங்கியவர், “ எந்த தொழிலையும் கேவலமா பேசாதீங்க.. நீங்க கூட கொழும்புக்கு வந்தப்போ.. ஒரு மஞ்சப்பையுடன் தான் வந்ததாக.. ஊரே சொல்லும்!!!”என்று உரைக்க.. உண்மை தந்த கசப்பினால் கறுத்துப் போனது பரசுராமரின் முகம்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து இயலாத மட்டில் வாய் திறந்தான் இளா. நாகரிகமான முறையில் பெண் கேட்டும்.. பெண் தர மாட்டேன் என்றால் அவனும் தான் என்ன செய்வதாம்?
காதலி சொன்ன ‘சூசையிட் தோட்ஸ்’ வேறு ஒரு நிமிஷம் காதுக்குள் ஒலித்து ஓய, அதற்கு மேலும் அமைதி காக்க விரும்பாமல், அவரைப் பார்த்து எகிறலானான் இளா.
“நாகரிகமாக இருக்கட்டும்னு தான்.. படியேறி வந்து உங்க சம்மதம் கேட்டுட்டு இருக்கேன்.. அவளும் மேஜர்.. நானும் மேஜர்… எங்க ரெண்டு பேரையும் பிரிக்க உங்களால் முடியாது… ஷக்தி எனக்குத் தான்..!!” என்று அவர் முன்னிலையிலே தில்லாக சவால் விட்டான் இளா.
நேற்று அத்தனை அடியையும் அவன் வாங்கிக் கொள்ளவும்.. பயந்தாங்கொள்ளி என்று நினைத்துக் கொண்ட அதே இளா.. இன்று எதிர்ப்பேச்சு பேசுவது அதிர்ச்சியாக இருந்த வேளை.. அது அவர் தன்மானத்துக்கு பலத்த அடியாக இருந்தது.
ஆத்திரத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு அவனை நோக்கி, “ட்டேய் .. என்னடா சொன்ன? … என் பொண்ணை அவ்வளவு சீக்கிரம் உனக்கு கொடுத்திருவேனா…?” என்றவர், இளாவின் தாயாரை நோக்கி, அவரையும் குத்திக்காட்டிப் பேசும் முகமாக, “பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க தெரியலை.. இது தான் உங்க வளர்ப்பா..?”என்று கேட்டு வைக்க.. அவன் அம்மாவுக்கும் போனதே கோபம்!!
பின்னே வளர்ப்பு வளர்ப்பு என்று தன் வளர்ப்பையே குற்றம் சொல்லி பேசின்.. எந்த தாய்க்கும் கோபம் மூளுவதும் இயல்பு தானே?
அவருக்கு மகன் காதலித்த பெண் பற்றிய சிந்தனை எழவில்லை. மாறாக மகனின் வளர்ப்பைப் பற்றி குற்றம் சொன்னதே பெரிதாகப்பட்டது அவருக்கு.
“என்ன வளர்ப்பு? ஆ? என்ன பெரிய வளர்ப்பு? என் வளர்ப்பை குத்தம் சொல்றீங்களே உங்க வளர்ப்பு மட்டும் எப்படியாம்? .. உங்க பொண்ணு.. என் பையனுடன் ஊர் சுத்துறது பிடிக்காமல் நானே பொறுப்புள்ள அம்மாவா, அவளுக்கு.. அட்வைஸ் பண்ணியிருக்கேன்.. வேணும்னா நீங்களே கூப்பிட்டு கேளுங்க.. ஒழுங்கா கட்டுப்பாடா பொண்ணை வளர்க்கத் தெரியலை.. ஊரெல்லாம் மேய விட்டுட்டு.. என் பையனை குத்தம் சொல்றீங்களா?..”என்று பேராசிரியர் மேடமும் எக்குத்தப்பாக ஏதேதோ ஆத்திரத்தில் பேசி வைக்க, அந்த நேரம் பார்த்தா.. மொட்டை மாடியில் காற்றாட நின்று விட்டு ஷக்தியும் கீழே இறங்கி வர வேண்டும்?
கீழே ஹாலில் நடந்து கொண்டிருந்த பிரளயத்தைக் கேட்டு.. அங்கே தன் தலைவனும், அத்தையும் அவர்களுடன் தர்க்கம் புரிந்த படி தமையனும் நின்றிருப்பது கண்டு அப்படியே கல்லாகி நின்று விட்டாள்.
இளாவோ.. பேசும் தாயின் முன்னங்கைப் பற்றி வேண்டாமென்று தடுக்க.. அதை ஏற்கும் நிலையில் அவர் இல்லை.
“நீ சும்மா இரு..”என்று மகனை அடக்கியவர் மீண்டும் பேசலானார்.
“என் பையன்றதாலே.. உங்க பொண்ணு இன்னும் உங்க பொண்ணாவே இருக்கா..இல்லைன்னா அவள் வயித்துல ஒரு குழந்தையை கொடுக்க.. என் பையனுக்கு.. ரொம்ப நாள் ஆகியிருக்காது.. அவளுக்கும், அவள் காதலுக்கும் மதிப்பு கொடுத்தது தான்.. என் பையன் இதுவரைக்கும் கண்ணியமானவனா நடந்துக்குறான்..” என்று அப்போதும் ஷக்தியிடம் தள்ளி நின்று உறவாடிய மகனின் கண்ணியத்தை அவர் எடுத்துரைக்க.. அதுவெல்லாம் பரசுராமரின் மனதை எள்ளளவும் கலைக்கவில்லை.
மாறாக, “ஒழுங்கா கட்டுப்பாடா பொண்ணை வளர்க்கத் தெரியலை.. ஊரெல்லாம் மேய விட்டுட்டு.. என் பையனை குத்தம் சொல்றீங்களா?”என்ற வசனமே அவர் நெஞ்சில் நிரந்தரமாகத் தங்கிப் போயிற்று.
என்ன தான் பேசினாலும்.. சுற்றி வளைத்து மகனின் காதலை நிறைவேற்றி வைக்கும் விவகாரத்துக்கே வந்தவர், பரசுராமை நோக்கி தணிந்த குரலில், “வயசில் பெரியவங்க நாங்க.. அவங்க காதலை நாங்க தான் புரிஞ்சிக்கணும்.. அதை விட்டுட்டு…ஏதேதோ பேசிக்கிட்டு..”என்று சொன்னதையும் கூட அவர் காதுகள் உள்வாங்கிக் கொள்ளவில்லை.
அந்த பெண் வளர்ப்பைப் பற்றிய விமர்சனத்திலேயே உள்ளம் தேங்கி நிற்க, கை முஷ்டி மடக்கி.. கைகளில் நரம்போட நின்று.. ஆழ மூச்சை உள்ளிழுத்தவர்.. எதேச்சையாக தலையை திருப்ப.. அவர் கண்களில் விழுந்தாள்.. கைகளை பிசைந்து கொண்டு அப்பாவியாக நின்றிருந்த ஷக்தி.
இளாவின் தாயாரை விட்டு விட்டு, அவளை ஓரெட்டில் தாவி நாடிப் போனவர், விழிகள் விரிய ஆக்ரோஷமான முகத்துடன், “கேட்டியா? உன்னை ஒழுங்கா வளர்க்கத் தெரியலையாம்.. உன்னை ஊர் மேய விட்டிருக்கேனாம்… இந்த பழிச்சொல் எனக்குத் தேவையா?”என்றவர் அடித்த நிமிடம் அவள் கன்னத்தில் பளார் என விட்டார் ஓர் அறை.
அந்த அறையில் இளாவின் தாயாரின் பேச்சுக்கள் அப்படியே ஓய்ந்து போக, பதறிப்போனது என்னமோ இளா.
நேற்று அடிவாங்கிய கோழையா இது? என்று அவரே சந்தேகிக்கும் படி.. அடுத்த எட்டில் அவரை நாடி வந்தவர், இன்னொரு அறை அடிக்க ஓங்கிய பரசுராமனின் கையை அசைய விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.
தங்கையை விட்டு விட்டு இளாவை அவர் திரும்பி வெறிக்க.. இவனோ அந்த வெறித்தல் பார்வைக்கு கொஞ்சமும் அசராமல், கோபத்துடன் “இப்போ ஏன் அவளை அடிக்குறீங்க..?” என்று கேட்டான்.
“என் தங்கச்சி… நான் அடிப்பேன்…”-எல்லா அண்ணன்களைப் போலவும் உரிமையாக வந்தது அவர் குரல். தன் உயிரானவளை உற்றவரே ஆனாலும் அடிப்பதை எந்த காதல் மனம் ஏற்கும்?
பிடித்த அவர் கையை.. அவர் என்ன முயன்றும் தன் பிடியை இலகுவாக்காமல்.. அவன் விழிகளை வெறித்துப் பார்த்துக் கொண்டே எச்சரிக்கும் தொனியில், “இனியொருதரம் அவள் மேல் கையை வைச்சீங்கன்னா… சும்மா இருக்க மாட்டேன்..”என்று கூற.. அவன் கண்களில் பளபளத்த.. சொன்னதை செய்யும் வெறியில் கொஞ்சம் பின்வாங்கித் தான் போனார் அவர்.
அவனிடமிருந்து கையை எடுத்துக் கொண்டவர் பார்வை ஷக்தியை விடுத்து மற்ற இருவரையும் நோக்கியது.
“ இப்போ நீங்க கெளம்புறீங்களா? இல்லை கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளவா?”என்று கூற.. இந்த தடவை புசுபுசுவென கோபம் போனது பேராசிரியர் மேடம்க்கு.
“இதுக்கு அப்புறமும் உங்க வீட்டு படியேற.. நான் ஒண்ணும் மானரோஷம் இல்லாதவள் இல்லை.. சோத்துல உப்பு, போட்டு சாப்பிட்றவ..”என்ற இளாவின் தாயாரும், மகனை நோக்கி ஆக்ரோஷத்துடன், “நீ வாடா போகலாம்..”என்ற வண்ணம் விடுவிடுவென நடந்து வெளியேறி விட, வருத்தம் தோய்ந்த விழிகளுடன் ஷக்தியைப் பார்த்தான் இளா.
அவள் கன்னத்தில்.. அவள் அண்ணனின் கைவிரல் தடம் செக்கச் செவேலென பதிந்திருந்ததைப் பார்க்க இன்னும் கொஞ்சம் சீற்றம் மிகுந்தது அவனுக்கு.
தாய் அழைத்தவுடன் பின்னால் செல்லாதவன், இம்முறை பரசுராமை நேருக்கு நேர் விழி கொண்டு நோக்கினான். “இப்போ சொல்றேன் ஞாபகம் வைச்சுக்குங்க.. ஆயிரம் தான் நடந்தாலும்.. ஷக்தி தான் என் பொண்டாட்டி.. இதில் எந்த மாற்றமும் இல்லை.. உங்களுக்கு வேண்டியதை பண்ணிக்குங்க!” என்றவனின் கண்கள் மீண்டுமொரு முறை ஷக்தியின் கண்களை காதலுடன் தழுவியது.
அப்போதும் கூட தன் காதலில் உறுதி மாறாமல் பேசிச் சென்ற இளாவின் மேல் இன்னும் காதல் பெருக… வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.. அவன் புறமுதுகையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஷக்தி.
அவனை வெறித்துப் பார்த்த பரசுராம்.. திரும்பி தங்கையை நோக்கி.. தன் மென்னகையை மறைத்து மெல்ல தலை குனிந்து நின்றாள் ஷக்தி.
அன்றிரவு இளாவின் வீட்டில்…
அண்ணனின் பெண் பார்க்க சென்று நடந்தேறிய அவலக் கதை கேட்டு.. ரொம்பவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான் தம்பி ஆதி.
ஹாலில் நின்றிருந்த தாயை, சோபாவில் அமர்ந்து சோர்ந்து போன குரலில், “அம்மா.. என்னம்மா நீங்க.. இளா லவ் மேட்டர்மா..கொஞ்சம் பார்த்துப் பேசி இருக்கக் கூடாது.. இப்படி போய் சொதப்பிட்டு வந்திருக்கீங்க…?”என்று கூறிக் கொண்டிருந்தான் ஆதி.
ஆதி அமர்ந்திருந்த சோபாவின் பின்புறத்திலே சற்று தள்ளியிருந்த சுவரில் கை கட்டி சாய்ந்து நின்றிருந்த இளாவின் கண்களோ கோபத்திலும், கவலையிலும், இயலாமையிலும் சிவந்து போயிருந்தது.
ஆதியின் கேள்வியில் சூடான தாயாரோ, ஆதியிடம், “பின்னே என்னடா? .. அவன் என் வளர்ப்பை பத்தி தப்பா பேசுவான்..அதை அப்படியே கை கட்டி நின்னு.. கேட்டுட்டு வரணுமா..?” என்றவர், தற்போது மூத்தவனை நோக்கி, “ஆரம்பத்திலிருந்து அந்த பொண்ணை எனக்கும் பிடிக்கலைடா.. நீ சொன்ன ஒரே காரணத்துக்காக தான் அவளை நான் மருமகளா ஏத்துக்கிட்டேன்.. அவளை விட நல்ல அழகான, குணமுள்ள பொண்ணா நான் கட்டி வைக்கிறேன்.. அவளை மறந்துடு…” என்று கூற.. தாய் தந்த சொல்லின் அதிர்ச்சியில் தாயின் முகத்தை பட்டென நிமிர்ந்து பார்த்தான் இளா.
அத்தியாயம்– 16
கண்களில் கண்ணீர் நில்லாது வழிந்தோட… விழித்திரை வேறு கலங்கியிருக்க.. எதிரே நிற்பது யாரென்று புரியாதளவுக்கு… உடைந்து போனவளாக நின்றிருந்தாள் ஷக்தி.
அவள் என்னமோ.. திருமண வீட்டுக்கு செல்வது போல பட்டு சேலையும், தங்காபரணங்களும் பூண்டிருந்தாலும் கூட.. அவள் தேகத்தில் மிளிர்ந்த ஆடையின் அளவுக்கு.. அவள் முகத்தில் ஒளிர்வு இருக்கவில்லை.
இன்று.. அவளை பெண் பார்க்கவென்று மாப்பிள்ளை வீட்டார் வரும் நாள்!! அந்நாள் அவஸ்த்தையான நாளாகவே விடிந்திருந்தது. என்ன தான் அவள்.. அண்ணனின் அதட்டலின் பேரில் பெண் பாரக்கவென தயாராக நின்றிருந்தாலும் கூட.. அவளுக்கு இளா ஒருவனைத் தவிர.. வேறொருத்தனை கணவனாக நினைத்துப் பார்க்கவும் மனம் கூடவில்லை.
தன் செல்ல மகளின் கண்ணீரையும், அந்த கல்யாணத்தின் மீது அவள் காட்டும் வேண்டாவெறுப்பையும் பார்த்து அந்த வயதான தாயாருக்கோ.. மனம் ரொம்பவும் இளகிப் போயிற்று.
அதிலும் அன்று அவர்கள் வீட்டுக்குள்ளேயே வந்து.. ஷக்தியைத் தேடி ஆர்ப்பாட்டம் செய்து.. அவளைக் கண்டதும்.. தாயைக் கண்ட குழந்தையாக மாறிப் போய், “உனக்கு ஒண்ணும் ஆகலைல?” என்று கேட்ட அந்த பையன் இளா மேல் ஓர் நல்லபிப்பிராயமும் தோன்றியிருந்தது அவருக்கு.
இப்படியெல்லாம் தன் மகளைக் கஷ்டப்படுத்தி.. வரப்போகும் ஓர் வரனும், அதனால் கிடைக்கும் வாழ்க்கையும் தேவை தானா? என்று தோன்றவே, தானாகச் சென்று ஒருமுறை தன் மகனிடம் பேசிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தார் ஷக்தியின் தாயார்.
மாப்பிள்ளை வீடு.. அவர்களை விடவும் பெரிய இடம் என்பதால்.. அந்த வீட்டுப் பணியாட்களை, ‘அதை செய்… இதை செய்’ என ஆயிரம் தடவை ஏவியவராக.. அவர்கள் வீட்டையே அல்லோலகல்லோலப் படுத்திக் கொண்டிருந்தார் பரசுராம்.
நடுக்கூடத்தில் நின்று, கைகளை முதுகுக்குப் பின் கட்டிக் கொண்டு, “இந்த பூவையெல்லாம் கொண்டு போய்… சாடியில் போட்டுரு ராமு” என்று தன் பணியாளை வேலை வாங்கிக் கொண்டிருந்த பரசுராமின்.. பின்னால் வந்து நின்ற ஷக்தியின் தாயார், “ஏய்யா…பரசு”என்று தயக்கத்துடன் அழைக்க, சட்டெனத் திரும்பி தாயைப் பார்த்தார் பரசுராம்.
‘என்ன விஷயம்?’என்பது போல அவரது ஒற்றைப் புருவம் மட்டும் உயர.. அது தான் சமயம் எனக் கொண்ட அவளது தாயாரும், தயக்கம் அப்பிய குரலிலேயே, “அவளுக்குத் தான்… இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு சொல்றாள்ல? அந்த பையனேயே தான்..” என்று அவர் ஏதோ சொல்ல வர… என்றுமில்லாமல்.. தாய் மீது கோபம் கொண்டு அவர் கத்திய கத்தல்.. நடுக்கூடம் தாண்டி.. ஷக்தியிருந்த அறை வரை கேட்டது.
அண்ணனின் கிடுகிடுக்கச் செய்யும் குரலில்… தன் மடிமேல் இருந்த அண்ணனின் நான்கு வயதான இரண்டாவது குழந்தையும் தான் திடுக்கிட்டு நடுங்க.. சின்னவனை மாரோடு இறுக அணைத்துக் கொண்டாள் ஷக்தி.
தன் நயனங்களை அகல விரித்து.. பற்களை கடித்துக் கொண்டு “அம்மா.. நீங்க வாயை மூடுங்க!!..” என்று கத்திய பரசுராம்..அவனது தாய்க்குமே புதியவன்!!
ஏனெனில் ஒரு நாளும் தாயின் முன் குரலை உயர்த்தி பேசாத பரசு.. அன்று கத்திய கத்தலில்.. கொஞ்சம் மனம் வலித்தாலும்.. அப்படியே பெட்டிப் பாம்பாக.. அடங்கிப் போனார் அந்த வயதான தாய்.
சீற்றம் சற்றும் குறையாமலேயே, “அந்த பையனுக்கு கட்டிக் கொடுத்து, அவள் வாழ்க்கையை குட்டிச்சுவராக்க சொல்றீங்களா? அண்ணனா.. தகப்பன் ஸ்தானத்திலிருந்து என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும்..??” என்ற அவர் பேச்சு.. ஷக்தி மேல் அவர் வைத்திருக்கும் உரிமையையும், அன்பையும் உணர்த்தினாலும் கூட… இது அவள் வாழ்க்கையல்லவா? அவள் விரும்பும் மணாளனை.. கட்டிக் கொள்ளும் உரிமை அவளுக்கும் உண்டல்லவா? என்பதை யோசிக்க மறந்து போனார் பரசு.
ஏதோ வேகத்தில் பேசியவருக்கு.. தாயின் கண்களில் துளிர்விட்டிருந்த சோகமும், மனவாட்டமும் மனதை சுட்டிருக்க வேண்டும்!! தாயின் தோளை ஆதரவாகப் பற்றி.. தழுதழுத்த மற்றும் இளகிய குரலில், “இப்போ உங்களுக்கு… அவள் கண்ணீரைப் பார்த்து மனமிளகத் தான் தோணும்மா.. ஆனால் அவள் எதிர்காலத்தில் சந்தோஷமாயிருக்கிறது பார்த்து நீங்க சந்தோஷப்படுவீங்கமா..”என்று சொல்ல… அந்த பேதைத் தாயாலும் தான் என்ன சொல்ல முடியும்?
அந்த நேரம்.. வெளியே போர்டிகோவில் நின்றிருந்த.. பன்னிரண்டே வயதான.. அவரது மூத்த பையன் “சிவா”, ஊருக்கே தண்டோரா போடுபவன் போல, “மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாச்சு..”என்று கத்திக் கொண்டே உள்ளே ஓட,அந்த முன்னறிவித்தலில்.. அவருள் படபடப்பும், பதற்றமும் ஒருங்கே தொற்றிக் கொண்டது.
மீண்டும் தாயை நோக்கி சாதாரணமான குரலில், “அம்மா.. அவங்க வந்துட்டாங்க.. அவங்க முன்னாடி.. இப்படி கண்ணை கசக்கிக் கிட்டு நிற்காதீங்க.. தப்பா எடுத்துக்கப் போறாங்க..நீங்க போய்.. ஷக்தி ரெடியாகிட்டாளான்னு பாருங்க” என்று தாயை அனுப்பி வைத்தவர்.. வாசற்பக்கம் ஓடலானார் வந்தவர்களை வரவேற்பதற்காக.
அங்கே அவள் அமர்ந்திருந்த அறைக்குள்.. நுழைந்த மீனாட்சியைக் கண்டதும்.. ஆத்திரத்திலும், நடப்பதை நிறுத்த முடியாத இயலாமையிலும் மீண்டும் அழுகை வெடிக்கும் போலிருந்தது.
அத்தையின் முகம் வாடுவதை பொறுக்க மாட்டாத சின்ன பையன் ‘பிரகாஷோ’, அறைக்குள் வந்த தாயை நோக்கி, “ஏன் அத்தை கவலையா இருக்காங்க?.. அவங்களுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலையாமா?”என்று வயதுக்கு மீறிய கேள்வியை கேட்டான் அவன்.
அந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விக்கித்துப் போய் நின்றிருந்த மீனாட்சியோ.. அடுத்த நிமிஷம் சுதாரித்துக் கொண்டு, அதட்டும் குரலில், “ஷூ!” என்று வாயில் சுட்டு விரல் வைத்து எச்சரித்தவர், ஷக்தி மடியில் இருந்து சின்னவனை இறக்கி விட்டவராக, “.. நீ வெளியே போய்.. விளையாடு..”என்று அதட்ட… தாய் எதற்கு இத்தனை கோபம் கொள்கிறாள்? என்பது புரியாமல்.. சுட்டு விரலை வாய்க்குள் வைத்து சப்பிக் கொண்டே… அங்கிருந்து நகர்ந்தான் சின்னப் பையன்.
அன்று.. புதுப்பெண்ணுக்கான எந்த களையும் அற்று.. முகில் மறைத்த நிலவு போல ஒளியிழந்த வதனத்துடன் இருந்தாள் ஷக்தி. மணாளனாக ஒருவனை மனதுக்குள் வரித்துக் கொண்டு..அவனுடன் தினமும் இரவில்.. கனவில் குடும்பம் நடத்தும் ஷக்திக்கு… எப்படி இன்னொருவனை ஏற்க முடியும்?
அன்று காலேஜில் வைத்து நடந்த கலகத்தில்… ஒரு அடியைக் கூட அவள் மேல் படவிட்டானா அவன்? அத்தனை அடியையும் தான் தாங்கி.. உடலிலிருந்து இரத்தம் கசிந்தோட… அவளை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்து… அவளுயிரை தன்னுயிர் போல காத்து.. அந்த நன்றிக்கடனுக்கு பதிலாக.. அவனுக்காக அவள் உகுத்த ஒற்றைத் துளி கண்ணீர் போதும் என்றவன் அவள் தலைவன்!
அப்பேர்ப்பட்ட உன்னதமான காதலை… இதோ கூடத்தில் வந்து அமர்ந்து.. அவளை பெண் பார்க்கவென்று வந்திருக்கிறானே.. அவனால் அவள் மீது சொரிய முடியுமா?
அவள் கற்பை… அவள் சம்மதத்துடன் உவந்தேற்க.. பல சந்தர்ப்பங்கள் வாய்த்தும்.. ‘ம்ஹூஹூம்… கல்யாணமாகி.. நீ எனக்கே எனக்குன்னு முழுசா சொந்தமானப்புறம்.. நான் உன்னை முழுசா எடுத்துக்குறேன்’ என்று சொல்லி…
அத்தனை நாள் காதலையும், ஆசையையும் பொறுத்துக் கொண்டு கண்ணியம் காத்தவன் அவள் தலைவன்! தாலி என்ற லைசன்ஸ் கிடைத்து விட்டதும்.. கல்யாணமான முதல் நாளிரவே.. அத்துமீறி அவள் கற்பை சூறையாடக் காத்திருக்கும்.. அந்த புது மாப்பிள்ளையால்… தள்ளி நின்று கண்ணியம் காக்கவும் முடியுமா?
அவள் ஒற்றைப் பார்வைக்காக தவமாய் தவம் கிடந்து… அவளுக்கு பிடித்தது எது.. பிடிக்காதது எது என்று பலதும், பத்தும் அறிந்து… அவள் மனதை வென்று.. அவள் காதலை கையகப்படுத்திக் கொண்டவன் இளா!
ஷோவ் ரூமில் பிடித்த மாதிரி டிவி, வாஷிங் மெஷின், ஃப்ரிஜ் என பார்த்து வாங்குவது போல.. ஒற்றைப் பார்வையில்… வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும்.. முன்பின் அறிமுகமில்லாத மாப்பிள்ளை!! அவள் மனம் யாரைத் தான் தெரிவு செய்யக் கூடும்?
சொற்ப நேரத்துக்கெல்லாம் அவள் அண்ணி மீனாட்சி வந்து, அவள் கையில் காபித் தட்டை கொடுத்து, அவளை அழைத்துச் சென்று… வந்தவர்களுக்கு கொடுக்கச் சொல்ல.. அந்த பெண்பார்க்கும் படலத்தை சுத்தமாக வெறுத்தாள் ஷக்தி.
அவளோ யார் வந்தார்கள்? எத்தனை பேர் வந்தார்கள்? யார் மாப்பிள்ளை என்பதை கூட அறிய மனமற்று.. தலையை குனித்த வண்ணமே.. அமைதியாக நடந்து சென்றாள்.
ஷக்தியின் முகத்திலோ.. மருந்துக்கும் கூட சாந்தமும் இருக்கவில்லை. சிரிப்பும் இருக்கவில்லை. ஆனால் வந்திருந்தவனின் விழிகளோ.. அவளையே தான் அணு அணுவாக ஆராய்ந்தது. அவள் கட்டியிருந்த ஆரஞ்சு நிற பட்டு வேறு… ஷக்தியை எடுப்பாகக் காட்ட,
இலேசான ஒப்பனையுடன் நின்றிருந்தவளை யாருக்குத் தான் பிடிக்காது? அவள் பார்வை குனித்திருந்தமையால், அடர்ந்த நயன இமைகள் வேறு விசிறியாக கன்னத்தில் படிய, செக்கச் செவேலென சிவந்திருந்த அந்த தேனூறும் இதழ்களையே, தன் தாடையை கையால் நீவி விட்ட வண்ணம் கிறக்கத்துடன் பார்த்தான் வந்தவன். ஒற்றை நெக்லஸூடன்.. நெய்யில் குழைத்து குழைத்து செய்தது போல இருந்த அவள் வெண் சங்குக் கழுத்தும், அதற்குக் கீழே… கொஞ்சம் அவனை ஆட்டங்காணச் செய்த.. மலைக்க வைக்கும் கொங்கைகளும், சேலையின் ஒரு புறமாக இலேசாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த வெண்மையான இடையும், வாழைத்தண்டு போல பளபளத்துக் கொண்டிருந்த மென்மையான கைகளும், அவை கொண்ட புஷ்டியான விரல்களுமென அவன் பார்வை.. அவளது உச்சாதி பாதம் வரை தழுவிச் சென்றது.
ஏதோ ரொம்ப நேரமாய் மனதுக்குள் உறுத்த.. சட்டென விழிகள் உயர்த்தி பார்த்தவள்.. தன் முன்னே நின்றிருந்த ஆடவன்.. தன்னை ஒரு மாதிரி பார்ப்பது கண்டு.. கூசிப் போனவளாக.. மீண்டும் தலையை குனித்துக் கொண்டாள்.
வந்தவன்.. அவர்களை விடவும் பெரிய இடம் என்று பறைசாற்றும் முகமாக.. அவள் நிமிர்ந்ததும் தட்டுப்பட்டது அவனது கழுத்திலே அணிந்திருந்த பெரிய தங்கச் சங்கிலி!!
கோர்த்திருந்த கைகளில் இருந்த பெரிய பெரிய கல் பதித்த தங்க மோதிரங்கள்!!
இப்படி மாட்டை சந்தையில் விலை பேசுவது போல.. பெண்ணையும் நிற்க வைத்து திருமண சந்தையில் விலை பேசும் அந்தக் கலாசாரத்தை வெறுத்தாள் அவள்.
தங்கையின் மனம் பற்றி சிறிதும் கவலை கொள்ளாது, தன்னை அலங்கரித்து.. காமப் பார்வை வீசும் அவன் முன் காபித் தட்டை ஏந்தியவளாக.. நிற்க வைத்த பரசுவையும் வெறுத்தாள் ஷக்தி.
வந்திருந்தவன் இலங்கையில் பல கார்மெண்ட்ஸ்களை சொந்தமாக வைத்து நடாத்தும் பெரிய தொழிலதிபன் திரு. வாசுதேவன்.
பரம்பரை பரம்பரையாக ஆண்டு வந்த சொத்து.. அவன் உழைக்காமல் கூட இன்னும் நான்கைந்து தலைமுறைகளுக்கு.. சுகபோக வாழ்க்கை வாழுமளவுக்கு மிச்சமிருக்கும்! கையிலும் பிடிக்க முடியாத புளியங்கொம்பு சம்பந்தம்.. அவர் தங்கை ஷக்திக்கு வந்திருக்க.. அதை விட பரசுராம் என்ன முட்டாளா?
சோபாவில் தன் அன்னையுடன் அமர்ந்திருந்த வாசுதேவ்விற்கு, ஷக்தியை பார்த்த முதல் பார்வையிலேயே பிடித்திருந்தது.அவள் தான் எதிர்பார்த்ததை விடவும் “டக்கர்” என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்டாலும், அவள் சட்டென நிமிர்ந்து பார்த்து தலை குனிந்த வேளை.. அவள் முகம் சிரிப்பிழந்திருப்பதைக் கவனித்தான் அவன்.
தன் முன்னே புதுப்பெண் அலங்காரத்துடன் நிற்கும் ஷக்தி.. அந்த சிவந்த இதழ்களை கொஞ்சம் விரித்து சிரித்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும் போல தோன்றியது வாசுவுக்கு.
பின்னே நின்றிருந்த அவளது அண்ணி வேறு, “போம்மா.. போய்.. வந்தவங்களுக்கு காஃபி கொடு” என்று சொல்ல, மெல்ல நடந்து போய்.. அவன் தாய்க்கு காஃபியைக் கொடுத்து விட்டு, அவன் பக்கம் தட்டை நீட்டிய ஷக்தியை… இச்சையுடன் தழுவியது அவன் விழிகள்!
அந்த இச்சைப் பார்வையை நிமிர்ந்து பார்த்தவளுக்கு.. அருவெறுப்பில் தானாகவே இதழ் சுழியப் போக.. சட்டென்று கீழுதட்டைக் கடித்து.. இடம், பொருள், ஏவல் கருதி.. அவன் காஃபி எடுக்கும் வரை அமைதியாக நின்றாள் ஷக்தி!!
அங்கணம்.. அவள் கடித்த கீழுதடும் கூட.. அவனுள் ஏதோ செய்ய.. சூட்டுத் தம்ளரை.. தன் உள்ளங்கையால் அழுந்தப் பற்றிக் கொண்டவனாக அவளை விழுங்கி விடுவது போல பார்த்து வைத்தான் அவன்.
காஃபி கொடுத்தவளோ, மாப்பிள்ளையாக வந்திருந்தவனின் பார்வையைத் தாளமாட்டாமல், என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்பது போல விருட்டென்று உள்ளே சென்று விட்டாள்.
தங்கை வேகமாக விரைந்தது.. பரசுராமிற்கு முகத்தில் அறைந்தது போன்ற அவமானத்தையும், கோபத்தையும் கொடுத்தாலும் கூட… வந்திருப்பவர் முன்.. தன் கோபத்தைக் காட்ட முடியாமல் சிரித்துக் கொண்டே.. தன் சினத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார் அவர்.
வாசுதேவனுக்கோ… ஒளியிழந்த அவள் முகமும், தன் பார்வையை சகிக்காமல் அவள் ஓடி மறைந்த விதமும் அவனது புருவங்களை மெல்ல இடுங்க வைத்தது.
இடுங்கிய புருவங்களுடன் காபியை பருகிக் கொண்டிருந்தவனைப் பார்த்து பரசுராமோ, “அப்புறம் எப்படி? .. உங்களுக்கு எங்க பொண்ணை பிடிச்சிருக்கா?..” என்று கண்களில் ஆர்வம் மின்னக் கேட்க, காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்த வண்ணம் காபி பருகிக் கொண்டிருந்தவனோ, அதை டீபோய் மீது வைத்து விட்டு, “ஷக்தி மாதிரி.. ஒரு பொண்ணை யாருக்கு பிடிக்காமல் போகும் மிஸ்டர். பரசுராம்..?பட் ஐ வோன்ட் டூ டோக் டூ ஹர்.. தனியா பேசலாமா..?”என்றவனின் தொனி.. என்னமோ இதற்கு முதல் தமிழ் பேசாதவன்.. இப்போது தான் முதன் முறையாக பேசுவது போல.. ஆங்கில பாவத்துடன் இருந்தது.
எப்பேர்ப்பட்ட கோடீஸ்வரன் வாசுதேவன்?? அவன் தன் தங்கையுடன் தனியாக பேச வேண்டும் என்று கேட்டால்.. அதை பரசுவும் மறுப்பாரா என்ன? அவரும் சம்மதிக்கவே, அவர்கள் வீட்டு மொட்டைமாடியில் அவனுக்கும், அவளுக்குமாக ஓர் தனிமை கொடுக்கப்பட்டது.
அவனை நிமிர்ந்து பார்க்கவே அருவெறுப்பாக இருக்க.. மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு… தூரத்தே தெரியும் வானை வெறித்துப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள் ஷக்தி.
அவள் அவஸ்த்தையில் இருக்கிறாள் என்பதை காட்டும் முகமாக.. பெரும் பெரும் மூச்சுக்களை அவள் எடுத்து விடலானாள். அதன் விளைவாக அவள் தனங்களும் ஏறி இறங்க, அவளது நாசித்துவாரங்களும் விடைத்து விடைத்து அடங்க நின்றிருந்தவளை.. கண்களாலேயே அள்ளிப் பருகிக் கொண்டிருந்தான் வாசு.
அவள் ஏதும் பேசாமல் வானை வெறிக்க, இவனோ அமைதியாக அவள் அழகை இரசிக்க.. சொற்ப நொடிகள் மௌனமாகவே கழிந்தது.
அந்த மௌனமும் கூட அவனுக்கு பிடித்துப் போகவே, மென்மையாக வாய் திறந்தவன், “என் கண்ணைப் பார்த்து பேசமாட்டியா ஷக்தி? “என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?’ன்னு கேட்க மாட்டியா ஷக்தி?”என்று அவன் கனிந்த குரலில் கேட்க, அந்தக் குரல் வேறு எரிச்சலை மூட்டியது அவளுக்கு.
எரிச்சலுடன் உச்சுக் கொட்டிக் கொண்டே வாய் திறந்தவள், “இங்கே பாருங்க.. எனக்கு இந்த கல்யாண ஏற்பாடு பிடிக்கலை.. ப்ளீஸ் வேணாம்னு சொல்லிடுங்க..”என்று எப்படியோ தன் விருப்பமின்மையை பட்டெனச் சொல்லி விடவே, அவன் முகம் ஒரு நிமிஷம் இருண்டு.. பின் பழைய நிலையை அடைந்தது.
“ஏன்?”- தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் கையிட்டவனாக, தன் ஒற்றைப் புருவம் மாத்திரம் உயர்த்தி கறாராக கேட்டான் அவன். அவளோ என்ன ஆனாலும் பரவாயில்லை.. தன் மனதில் இருப்பதை வந்தவனிடம் சொல்ல ஆசை கொண்டு, சற்றே உணர்ச்சி வசப்பட்ட குரலில், “ஏன்னா.. நான் இன்னொருத்தரை காதலிக்குறேன்.. அவரைத் தான் கட்டிக்கணும்னு ஆசைப்பட்றேன்.. அவரை மனசுல வைச்சுக்கிட்டு.. உடலளவில் உங்க கூட குடும்பம் நடத்த என்னால முடியாது…” என்றவள், சட்டென கை கூப்பி நின்று, கண்களில் மௌனமாக கண்ணீர் வழிந்தோட, “ப்ளீஸ் இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க..” என்றாள் ஷக்தி.
என்றுமே அவனை இன்னொருவர் நிராகரித்தோ, புறக்கணித்தோ பழக்கப்படாதவனுக்கு, அவள் நிராகரிப்பும், அவள் புறக்கணிப்பும் உள்ளுக்குள் எரிமலை சீற்றத்தைக் கொடுத்தது.
அதிலும் ஓர் பெண்ணால் அவன் நிராகரிக்கப்படுவது அவன் தன்மானத்துக்கு பலத்த அடியாக இருக்க, கீழுதட்டைக் கடித்துக் கொண்டே, அழுத்தமாக தலை கோதிக் கொண்டவன், அவளைப் பார்த்து, “ நினைச்சேன்.. யூ வில் சே சச் அ ரிடிக்யூலஸ் ரீசன்னு நினைச்சேன்…ஏன்?..இந்த கல்யாண ஏற்பாடு பிடிக்கலைன்னா.. நீயாகவே நிறுத்த வேண்டியது தானே?”என்று கோபத்துடன் கேட்டான் அவன்.
இந்த கல்யாணத்தை அவளால் தடுத்து நிறுத்த முடியுமானதாக இருப்பின்.. வாசுதேவ் இங்கு வர முன்னமே தடுத்தி நிறுத்தியிருக்கமாட்டாளா?
தன் இயலாமையை எண்ணி மீண்டும் கண்களில் நீர் துளிர்க்க, ஈனமான தொனியில், “அது என்னால் முடியாது வாசு.. அண்ணா இதுக்கு ஒத்துக்கவே மாட்டாரு.. என் சம்.. மதம் இல்லா.. மல் தான் இந்த கல்.. யாணம் நடக்குது… அப்போ எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்த முடியும்? .. ஆனால் நீங்க நினைச்சால் முடியும்!!..”என்று தன்னை இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்பவளை.. நிர்மலமான விழிகளுடன் பார்த்தான் வாசு.
பின் என்ன தோன்றியதோ.. சட்டென வாய் விட்டு நகைத்தான் அவன். இதில் நகைக்க என்ன இருக்கிறது? என்பது போல புரியாமல் பார்த்தாள் அவள்.
அவனோ அடுத்த நிமிடம் தன் சிரிப்பை நிறுத்திக் கொண்டு, கோரமான முகபாவனையுடன், “ஓ.. லட்டு போல… ஒரு அழகான பொண்ணை க்கோட்டை விட.. நான் ஒண்ணும் க்கேனக்கூ இல்லை…” என்று ஏதோ சொல்ல வந்து சட்டென நிறுத்திக் கொண்டவன், “உனக்கு வேணும்னா நீயே கல்யாணத்தை நிறுத்திக்கோ..”என்றான். அப்படி நிறுத்தத் தான் முடியுமா அவளால்? அவன் முன்னே கை கூப்பி கெஞ்சுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவளுக்கு.
அப்பொழுதாவது அவன் மனம் இளகாதா? என்ற நப்பாசையுடன், “ப்ளீஸ் வாசு.. ப்ளீஸ்..”என்று கெஞ்ச, அவள் இதயம் தூக்கி வாரிப் போடும் அளவுக்கு கத்தினான் அவன்.
“ஏய்..!!” என்ற அவன் ஒற்றை இரைதலில்.. அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றாள் ஷக்தி.
அவளை முறைத்துப் பார்த்தவாறு, “ஒண்ணு… கல்யாணத்தை எப்படியாவது நிறுத்து.. இல்லை அவனை மறந்துடு..எப்படி ஃபர்ஸ்ட்நய்ட்ல இவன் ஜமாய்க்க போறான்னு மட்டும் கனவுகள் காணு.. ஓகே..?”என்றவன் அவளது பட்டுக் கன்னத்தை அவள் அனுமதியின்றித் தொட்டு வருடி விட்டு செல்ல, அவளையும் மீறி வெறுப்பில் அவளிதழ்கள் சுழித்தன.
போகும் அவனது புறமுதுகையே இரு கைகளையும் பிசைந்த வண்ணம் நின்று பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் அவள்.
மாடிப்படிகள் விட்டும் கீழே இறங்கி வந்தவனை, என்ன பதில் சொல்லப் போகிறானோ? என்று ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த பரசுராமின் பரபரப்பை அறிந்து கொண்டவனோ, அவரை நாடிப்போய், “மிஸ்டர். பரசுராம்.. எனக்கு ஷக்தியை ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. எவ்வளவு சீக்கிரம் இந்த கல்யாணத்தை நடத்த முடியுமோ? அவ்வளவு சீக்கிரம் நடத்தினால் சந்தோஷம்..”என்று ஷக்தி காதலுக்கு ஆப்பு வைக்கும்படியாக ஒரு வார்த்தை சேர்த்துக் கூற… அவனைத் தொடர்ந்து படியிறங்கி வந்தவள்.. அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பரம்பரை பரம்பரையாக பல சொத்துக்களை ஆளும் கோடீஸ்வரனுக்கு.. தங்கையை பிடித்துப் போனதில் ஒரு நிமிஷம் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
“கண்டிப்பா மாப்பிள்ளை.. நம்ம ஜோசியர் கிட்ட பேசிட்டு.. இந்த மாசத்துலேயே.. ஒரு நல்ல முகூர்த்த நாளா சொல்றேன்.. அப்போவே கல்யாணத்தை வைச்சிடலாம்..”என்ற பரசுவிடம், “அப்போ நாங்க கிளம்புறோம்”என்று உணர்ச்சி துடைத்த முகமாகவே கூறி விட்டு, தாயுடன் அங்கிருந்து நகர்ந்தான் அவன்.
அவன் சம்மதம் என்று கூறி விட்டு அகல.. என்ன பண்ணுவது? விருப்பமில்லாமல் அவனுடன் எப்படி வாழ்வது..? என்ற கவலையில் மூழ்கிப் போனாள் அவள்.
அவள் இளாவைக் காதலித்திருந்தாலுமோ, காதலிக்கவில்லையென்றாலுமோ… இச்சைப் பார்வை சிந்தும் அவன் முகத்தையும், எக்குத்தப்பாக பேசும் அவன் பேச்சுக்களையும் அவளுக்கு ஒரு போதும் பிடித்திருக்காது. அவளுக்கு என்றில்லை.. எந்த பெண்ணுமே.. இப்படியான ஓர் ஆண்மகன் தனக்கு கணவனாக வருவதை விரும்பவும் மாட்டாள்.
இறுதி மாடிப்படியிலேயே உடைந்து போய் உட்காந்து.. கைப்பிடி வரிசையில்… சோர்ந்து போனவளாக தலை வைத்து.. கண்ணீர் உகுத்தவளின் இதழ்கள் மட்டும், “இளா.. இளா”என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.
*************
சென்னைக்கொரு நேப்பியர் பாலம் போல.. கொழும்புக்கு என்றிருக்கும் களனி பாலத்திற்கு மேல்.. நட்ட நடு நிசியில் நண்பன் ஆனந்த் மற்றும் தம்பி ஆதி சகிதம் நின்றிருந்தான் இளா.
அந்த பாலத்திற்கு கீழே.. இலங்கையின் மூன்றாவது பெரிய நதியான களனி கங்கை நதி.. அமைதியாக.. தன் சமுத்திரக் காதலனைத் தேடி.. இரவில் பயணப்பட்டுக் கொண்டிருக்க.. பாலத்தின் மேலே.. தன் காதலியை எண்ணி எண்ணி சலனப்பட்டுக் கொண்டிருந்தான் அவன்.
என்றைக்குமே குடிக்காத டீ டோட்டலர் இளங்கோ.. அன்று அதீத துயர் தாங்க மாட்டாமல்… கொஞ்சம் ஓவராகவே போட்டிருந்தான்.
மழை பெய்து ஓய்ந்ததால்.. பாலத்தின் தார் தரை.. அந்த நட்ட நடு நிசியிலும் பளபளத்துக் கொண்டிருக்க, பாலத்தின் நடை பாதை பக்கமிருந்த… தடுப்புச் சுவர் மீதேறி.. கையில் பாட்டிலுடன் நின்ற வண்ணம், குழறிக் கொண்டிருந்தவனைக் கண்டு, ஆனந்துக்கும், இளாவின் தம்பிக்கும் உள்ளே குளிர் ஜூரம் பிறந்தது.
பின்னே.. அந்தத் தடுப்புச் சுவரில் ஏறி நிற்பவன்.. கொஞ்சம் தடுமாறி வீழ்ந்தாலும் கூட.. கரணம் தப்பினால் மரணம் என்பது போல ஆற்றுக்குள் வீழ்ந்து விடும் அபாயம் இருந்தும்.. அச்சமின்றி ஏறி நிற்பவனைக் கண்டால் யாருக்குத் தான் குளிர் ஜூரம் பிறக்காது?
அவனது கைகளை ஆளுக்கு ஒன்றாக பற்றிக் கொண்ட மற்ற இரு ஆடவர்களும், “டேய் இளா… முதல்ல அங்கேயிருந்து கீழே இறங்கு.. கீழே விழுந்தேன்னா.. அவ்வளவுதான்…” என்றவர்களாக அவனை கீழே பிடித்து இறக்க, அவர்களை நோக்கி திரும்பியவனின் கண்கள் சிவந்து கலங்கிப் போயிருந்தது.
என்றுமே அழாத இளா.. அழுவதைக் கண்டு.. ஆனந்துக்கும் சரி, இளாவின் தம்பி ஆதிக்கும் சரி.. இருவருக்கும் கூட கஷ்டமாகப் போனது. சின்ன குழந்தைகள் போல புறங்கையால் கண்ணீரைத் துடைத்து விட்ட வண்ணம், தழுதழுத்த குரலில், “என்.. னாலே அவ.. ளை விட முடி.. யாதுடா.. அவளுக்கு நான் இல்லாமல் வாழ முடியாதுடா… இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தால்.. நான் என் ஆசையை அவள்… க்கிட்ட சொல்லாமலேயே கடைசி வரை இருந்துட்டு போயிருப்பேன்..”என்றவனைப் பார்க்க பரிதாபமாகிப் போனது ஆனந்துக்கு.
அவன் தோளோடு கையிட்டு, ஆறுதல் சொல்லும் முகமாக, “என்ன மச்சி.. இதுக்குப் போய்.. இப்படி மனசுடைஞ்சு போகலாமா? இப்போ யாரு அவளை விட சொன்னா? ஷக்தி எப்படியும் உனக்கு தான் மச்சி… டேய்…”என்று கூறிய வார்த்தைகள் எல்லாம்.. இளங்கோவின் மனதுக்கு துளியளவும் ஆறுதல் அளிக்கவில்லை.
நண்பன் கையை தன் தோளிலிருந்தும் அகற்றியவனாக, நடுவீதிக்கு வந்தவன், அவர்களுக்கு புறமுதுகிட்டவனாய் இடுப்பில் கை வைத்து நின்று கொண்டான். என்ன தான் பார்ப்பதற்கு விறைப்பு பேர்விழியாக அவன் நின்றிருந்தாலும் கூட… உள்ளே அவன் மனம் தாய் முகம் காணாத குழந்தை போல அவளுக்காக பரிதவித்துக் கொண்டிருந்தது.
அவள் சொன்ன சூசையிட் தோட்ஸ் வேறு சமய சந்தர்ப்பம் பாராமல் அவன் மூளையில் உதிக்க, கலங்கிப் போனவனாக, “சும்.. மா இருந்த.. வளை காதல்னு சொல்லி.. அவளைக் காதலிக்க வைச்.. சது நானு! …. இப்போ போய்.. நான் அவளை விட்டால் .. அவ செத்து.. ருவா மச்சி..!! அவளை கொன்ன கொலைகார பாவியா… கிருவேன்டா..!! இது அவள் அண்ணனுக்கு ஏன்.. புரிய மாட்டேங்குது? ஒண்ணு அவங்களுக்காக வாழ்ந்துட்டுப் போறேன்.. இல்லை அவளுக்காக செத்துப் போறேன்டா..” என்றவனாக.. ஓரெட்டு முன்னே எடுத்து வைத்து.. ஜெட் வேகத்தில் வந்த காரின் மீது மோதப்போனவனை, “டேய்.. ” என்று பதறியவர்களாக கணத்தில் அவன் சட்டையைப் பிடித்து இழுத்து எடுத்தனர் ஆனந்தும், ஆதியும்.
அப்படி அவர்கள் செய்யவில்லையாயின்.. இன்று இளாவின் நிலை???
ஆதியோ..அண்ணன் மனமுடைந்து போனவனாக.. காரில் விழப்போனதைத் தாங்க மாட்டாது.. சட்டென கட்டியணைத்து, “அப்படியெல்லாம் எந்த தப்பான முடிவையும் எடுத்துராதேண்ணா.. என்னையும், அம்மாவையும் பத்தி கொஞ்சம் யோசிச்சுப்பாரு”என்ற ஆதிக்கு.. அவனையும் அறியாமல்.. உடல் வெடவெடக்கலாயிற்று.
ஆதி.. அவன் மேல் வைத்திருக்கும் அன்பு நன்றாகவே புரிந்தாலும் கூட, ஒருபக்கம் தன்னை புரிந்து கொள்ளாமல் பேசும் தாயின் நினைவு வேறு வந்து அவனை இன்னும் இன்னும் பலவீனனாக்கியது.
“அம்மாவைப் பத்தி நீ யோசிக்க சொல்ற? ஆனால் அவங்க.. என்னைப் பத்தி யோசிக்க மாட்டேங்குறாங்களேடா!!”என்று இடிந்து போன குரலில் சொன்னவன் கண்களில் இருந்து மௌனமாக வழிந்தது கண்ணீர்.
இளங்கோவோ.. உணர்ச்சி மறுத்த தசைப் பிண்டம் போல அப்படியே நின்றிருக்க.. அவனை ஆதியிலிருந்தும் பிரித்தெடுத்த ஆனந்த்.. ஆதி போல மென்மையாக தன் மனஸ்தாபத்தை வெளிக்காட்டவில்லை.
அவன் அன்பு வன்மையான சொல் வார்த்தைகளால் தான் வெளிப்பட்டது.
இளங்கோவை நோக்கி, சீற்றம் தொனிக்கும் குரலில், “ட்டேய் ல்லூசு ம்மாதிரி.. உளர்றாதே.. ஷக்தி உனக்குத் தான்.. நீ தைரியமா இரு மாப்பிள்ளை..!”என்று… சொன்னவன்.. வாய் வார்த்தைக்காக மாத்திரம் சொல்லவில்லை. உயிரைக் கொடுத்தாவது.. நண்பனின் காதலை சேர்த்து வைப்பது என்ற உறுதியுடன் தான் சொன்னான்.
ரொம்பவும் போதையாகியிருந்த இளாவை அவன் வீட்டுக்கு அழைத்துச் சென்றால்.. இளாவின் தாயார் மனம் நோகக் கூடும் என்பதால்.. அவனை தம்பியுடன் அவன் வீட்டுக்கு அனுப்பாமல்.. தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்த போது.. போதும் போதும் என்றாகியிருந்தது அவனுக்கு.
ஆனந்த் வீட்டில் அவனது தாயும், தந்தையும் திருமண வீடொன்றிற்காக… ஊருக்கு சென்றிருப்பதும் கூட அதிர்ஷ்டமானதாகவே போயிற்று ஆனந்துக்கு. அடுத்த நாள் காலை..இளா கண்ணயர்ந்ததே.. தன் செல்லின் ஓசை கேட்டு தான்.
கண்களைத் திறக்காமலேயே அழைப்பை ஏற்று காதில் வைத்தவன்.. மறுமுனையில் இருந்த பெண் சொன்ன செய்தி கேட்டு.. நெஞ்சமெல்லாம் படபடக்க மஞ்ணத்தை விட்டும் எழுந்தான். ஷக்தியை மாப்பிள்ளை வீட்டார் வந்து பார்த்து விட்டு சென்ற செய்தியை.. காவ்யா மூலம் செல் வழியாக.. விஷயத்தை அறிந்து கொண்டவன்.. ஒரு நிமிடம் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப் போனான்.
அனைவர் காதலிலும்.. காதலன் அல்லது காதலியை காதலிக்க ஒத்துக் கொள்ள வைப்பதில் போராட்டம் நிச்சயமாக எழுவதுண்டு. ஆனால் இளாவுக்கோ.. காதலை அடைவதில் ஒரு போராட்டம் இருந்ததென்றால்.. அந்தக் காதலை சொந்தமாக்கிக் கொள்வதிலும் இன்னொரு போராட்டம் இருக்கத் தான் செய்தது.
விஷயம் கேள்விப்பட்டு.. பரசுராம் மேல் ஆத்திரமும், கோபாவேசமும் பொங்கியது அவனுக்கு.
தன் வீட்டில் தன்னறையில் படுத்திருக்கும் நண்பன்.. முதன் முறையாக குடித்திருப்பதால்.. தலைவலிக்கும் என்று முன் அனுபவஸ்தனாக யோசித்து.. தானே தன் கையால் சூடான காஃபி போட்டுக் கொண்டே உள்ளே வந்த ஆனந்த், அங்கே இளா.. கட்டிலில் இருந்து எழுந்து.. தன் மணிப்பர்ஸையும், பைக் சாவியையும் எடுத்து பேன்ட் பாக்கெட்டுக்குள் இட்ட வண்ணம், வெளியே செல்ல தயாராக இருப்பது புரியவே, காபியை டிராயர் மேல் வைத்து விட்டு.. இளா பின்னாலேயே விரைந்தான் ஆனந்த்.
இளாவோ பின்னாலேயே ஆனந்த் வருவது அறிந்தும், அறியாதவனாக போய் தன் வண்டியில் ஏறி.. வண்டியை ஸ்டார்ட் செய்த வண்ணமிருக்க, பின்னாடியே வந்த ஆனந்த்தோ, “டேய் மச்சி.. எங்கே போற..?” என்று கேட்டான்.
அதற்கு பதிலிறுக்கும் பொறுமை கூட இளாவிடம் இருக்கவில்லை. மாறாக நேரே சென்று பரசுராமை சந்தித்து.. சட்டைக் காலரைப் பிடித்திழுத்து.. நல்லதாக நாலு வார்த்தை கேட்க வேண்டுமென்ற வெறி அவனுக்குள்.
அவன் எஸ்லேட்டரை முறுக்கிக் கொண்டேயிருக்க, இவனும் அதற்கு மேலும் நண்பனை மட்டும் தனியே அனுப்ப மனமற்று, வீட்டிற்கு அணியும் டீஷேர்ட் மற்றும் த்ரீ கோட்டரையே தான் அணிந்திருந்தாலும்… அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல், “நானும் வரேன்டா!!” என்றவனாக பின்னிருக்கையில் ஏறிக் கொள்ள, நிமிடமும் தாமதியாமல் பறந்தது இளாவின் வண்டி.
பரசுராமின் ஆடை காட்சியகத்தின் தலைமை அலுவலகத்திற்கே சென்றவன், பார்க்கிங் ஏரியாவில் பைக்கை தரிக்கும் அளவுக்கு பொறுமை கூட அற்றவனாக, காட்சியகத்தின் முன்னிலையிலேயே..வண்டியை அப்படியே போட்டு விட்டு நகர, ஆனந்த் தான்.. அதை உரிய இடத்தில் பார்க்க செய்ய வேண்டியவனாக ஆனான்.
திடுதிப்பென்று புயல் வேகத்தில்.. ஐந்தாம் தளத்துக்கு விரைந்தவன்.. அங்கே இருந்த அவர் அறையை நாடிப் போய் ,அந்த தளமே அதிரும் வண்ணம் இரைந்த குரலில், “யோவ் பரசுராம்.. வெளியே வாய்யா!..”என்று கத்த.. அங்கிருந்த ஊழியர்கள், மேனேஜர் என எல்லாரும் தங்கள் முதலாளியை யார் இவ்வளவு தரக்குறைவாக பெயர் சொல்லிக் கூப்பிடுவது என்று ஸ்தம்பித்துப் போய் நிற்க, அவரோ.. அவன் குரல் கேட்டு அமைதியாக வெளியே வந்து நின்று… அவனைக் கண்டதால் விளைந்த கோபத்தை கடினப்பட்டு அடக்கிக் கொண்டு, “மரியாதையா பேசினால் நல்லது..!” என்று மட்டும் சொன்னார்.
அதைக் கேட்டு பற்களைக் கடித்துக் கொண்டு அவனும், “ஷக்தி மனசை புரிஞ்சிக்காமல் காசையும், பணத்தையும் பெருசா நினைக்குறியே உனக்கெல்லாம் எதுக்குய்யா மரியாதை?”என்று எகிறிய வண்ணம் கேட்க, அவரோ ஒரு தரம் உள்ளுக்குள் கூனிக் குறுகிப் போனவராக.. நடப்பதை நின்று வேடிக்கை பார்க்கும் ஊழியர்கள் முன் அவமானப்படுத்துகிறானே? என்பது போல முகம் இறுக அவனைப் பார்த்தார்.
அவனிலிருந்தும் வீசிக் கொண்டிருந்த சாராய நெடி வேறு.. இளா மேல் இன்னும் இன்னும் தப்பபிப்பிராயம் வளர்த்துக் கொள்ள ஏதுவாகப் போயிற்று.
தங்கள் முதலாளியை தரக்குறைவாக பேசுவதை தாங்க மாட்டாத ஊழியர்களுள் ஒருவன், “நம்ம இடத்துக்கு வந்து.. நம்ம சாரையே தப்பா பேசுறான்.. பார்த்துட்டிருக்கீங்க.. வாங்கைய்யா.. அவனைப் பிடிச்சு வெளியே தள்ளலாம்”என்று கொண்டே வந்து.. அவனைப் பிடித்து.. வெளியே இழுத்துக் கொண்டே போக, அதற்கு விடாமல்.. ஓரிடத்திலேயே தம் கட்டி நின்றவன்,
முதுகுக்குப் பின்னே கை கட்டி நிற்கும் அவரை நோக்கி, சிவந்து துடித்த அதரங்களுடனும், கண்களுடனும், “என் பொண்ணு.. என் பொண்ணுன்னு வார்த்தைக்கு வார்த்தை ஷக்தியை சொல்றியே? .. அவன் மனசை புரிஞ்சு நடந்துக்க தெரியலையேய்யா உனக்கு? ..என்னை விட்டு ஷக்தியால் இருக்க முடியாதுடா.. செத்த்துர்ருவா.. புரிஞ்சுக்க…”என்று அவன்.. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அமைதியாக கேட்டும் கேளாதவன் போல நின்றிருந்தார் அவர்.
அவன் சொன்ன வார்த்தைகள் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு தானோ? அப்படித் தான் போலும்.
“இதுவரைக்கும் நான்.. எந்த விபரீதமான முடிவும் ஷக்தி விஷயத்தில்.. எடுத்தது இல்லை..!! ஏன்னா இது ரெண்டு இதயங்கள் சம்பந்தப்பட்ட மேட்டர் மட்டுமில்லை.. இரண்டு குடும்பங்கள் சம்மந்தப்பட்ட விஷயமும் தான்.. அப்படி ஒரு தலைகுனிவை ஏற்படுத்தும் ஓர் முடிவை எடுக்க வைச்சிராத!!.. அதையும் மீறி.. ஒருவேளை நீ… கல்யாண ஏற்பாடே பண்ணாலும் கூட.. ஷக்தியை மண்டபம் புகுந்து தூக்குவேன்.. உன்னாலே முடிஞ்சதை பார்த்துக்க..!!”என்று கூறியவன், தன்னைப் பற்றி தடுத்து நிறுத்தியவர்களின் கைகளை உதறி விட்டுக் கொண்டே அங்கிருந்தும் நகர.. அவர் அப்போதும் எதுவுமே பேசவில்லை. அமைதியாகவே நின்றிருந்தார்.
புயலுக்கு முன்னும் ஓர் அமைதி உண்டு. அவர் அமைதியும் புயலை ஏற்படுத்த வல்லதோ? ஆம். அவர் அமைதி அவன் வீட்டில் ஓர் புயலைத் தான் தோற்றுவித்து சென்றது.
அமைதியாக நின்றிருந்த பரசுராமுக்கு… இளா வந்து பேசி விட்டு சென்ற பேச்சுக்களுக்கு.. யார் மேல்.. எப்போது.. எங்கே கை வைக்க வேண்டும் என்று தெரிந்திருந்தது.
அவன் இரவானதும் வீட்டுக்கு வந்த போது.. வாசற்படியில், அலங்கோலமான தலை மயிருடன்.. நெற்றியில் கை வைத்தவராக.. இடி விழுந்தாற் போன்று அமர்ந்திருந்தார் இளாவின் தாயார்.
பதறிப் போனவனாக.. தாயை அடைந்தவன், அவர் முன்னே மண்டியிட்டு அமர்ந்து, அவர் முழங்கை மேல் கை வைத்து.. “ம்மா.. என்னாச்சுமா?” என்று கேட்க ஒரு பதிலும் இயம்பவில்லை அவன் தாய்.
“அம்மா உங்க கிட்ட தான் கேட்கிறேன்மா.. என்னாச்சு?”என்று அவன் கேட்க, அப்போதும் சிலையெனவே அமர்ந்திருந்தார் அவன் தாயார்.
அங்கணம் தமையன் குரல் கேட்டு வீட்டுக்குள் இருந்த வந்த ஆதி, “எதை சொல்ல இளா? பரசுவுடைய ஆட்கள் வந்து.. வீட்டை அடிச்சு உடைச்சு.. நாசம் பண்ணிட்டு போய்ட்டாங்கடா.. ‘உன் மவனுக்கு சொல்லி வை.. இன்னைக்கு வீட்டுக்கு நடந்தது.. அப்புறம் உன் மவனுக்கும் நடக்கும்!’ மிரட்டிட்டு போயிருக்கானுங்க… அதான் அம்மா அப்படி உடைஞ்சு போய் உட்கார்ந்திருக்காங்க” என்று தம்பி நடந்தது அனைத்தையும் விளக்க, இன்று மதியம் அவன் அத்தனை பேசியும் திரும்பி ஒரு வார்த்தை பேசாத பரசுராமின் அமைதிக்கான காரணம் தற்போது தான் புரிந்தது அவனுக்கு.
தம்பி பேசி முடித்த பிறகு.. ஏதோ சுயநினைவு வந்தாற் போன்று.. வாசற்படியில் இருந்து எழுந்த அவன் தாயார், வெறித்த பார்வையுடன் அவனை நோக்கி, “அப்பன் போனப்புறம்.. உன்னையும் உன் தம்பியையும் வளர்த்து ஆளாக்கினேன் பாரு.. அதுக்கு நல்ல நன்றிக்கடன் காட்டிட்டேப்பா!!!.. நான் தான் அன்னைக்கே தலைப்பாடா அடிச்சிக்கிட்டேனே.. அந்த பொண்ணு வேணாம்னு.. கேட்டியா நீ?? .. இப்போ பாரு.. வீட்டை இந்த கதி ஆக்கி வைச்சிருக்கானுங்க.. அப்புறம் நாளைக்கு என்னையும், உன் தம்பியையும்..” என்று ஏதேதோ அசம்பாவிதமாக சொல்ல வர, அதைக் கேட்கும் சக்தி இல்லாதவன் உடைந்து போனவனாக, “அம்மா”என்றவனாக அவரைத் தடுத்தான்.
அவர் மேற்கொண்டு சொல்லாமல் அப்படியே நிறுத்தி விட, இவனும் பரசு மேல் கோபம் மலையளவு மிகுந்தது.
உடைந்து போனவனாக.. திரும்பி நடந்து சென்று கொண்டிருந்தவனின் புறமுதுகை நோக்கிய அவன் தாயோ, “இப்போவும் சொல்றேன்டா.. அவளை மறந்துடு..வீட்டுக்கு வர முதல்லேயே இத்தனை கலகம் பண்ற பொண்ணு.. நம்ம குடும்பத்துக்கு வேண்டாம்டா..”என்று புலம்பிக் கொண்டே இருக்க..அவையெல்லாம் அவன் காதில் விழுந்தும் விழாதவன் போல அந்த பாதையில் அவன் நடந்து கொண்டே இருந்தான்.
அத்தியாயம்- 17
எங்கே இருக்கிறோம்? என்று சரியாக இனங்காண முடியாத.. சுற்றி வர கும்மிருட்டில் சூழ்ந்த ஓர் அறைக்குள், மர நாற்காலியில்.. அவன் கைகள் இரண்டும் பின்னே கட்டப்பட்டிருக்க… குற்றுயிரும், குலையியுருமாக அமர்ந்திருந்தான் இளா.
அவனது இடது நெற்றியின்.. புருவத்தினோரம்.. இரத்தத் துளி வழிந்து சென்றிருக்க.. அவன் கன்னத்திலும், அழகு மூரல்களிலும் (பற்கள்) கூட இரத்தம் பீறிட்டு ஓடிக் கொண்டிருந்தது.
அவன் கண்களோ… தன் மீது விழுந்த அடிகளில் மயக்க நிலைக்குப் போய் சொக்கி நின்று… கருமணிகள் போய் மேலே சொருகிக் கொள்ள, அவன் முகத்தின் மீது விசிறி அடிக்கப்பட்டது தண்ணீர்!!
தண்ணீர் தந்த குளுமையில்.. அவன் மயக்கமும் காணாமல் போக.. திடுக்கிட்டு கண் விழித்தான் இளா.
ஒரு வாரமாக.. தன் காதலியான ஷக்தியைக் காண முனைந்து தோற்றவன்.. நேற்று.. அத்தனை காவல்கட்டுக்களையும் அத்துமீறி தகர்த்தெறிந்து அவள் வீட்டுக்கு சென்று தன் அனார்கலியைப் பார்த்தான் சலீம்.
அங்கே அவனது அனார்கலி இல்லை. அவள் எங்கு போனாள்? என்பது தெரியாமல்.. பரசு வீட்டு ஹாலில் ஆடிப்போனவனாக நின்றிருந்த இளாவை நாடி வந்த பரசு,
“இன்னும் இரண்டு நாள்ல கல்யாணம்… முடிஞ்சா கல்யாணத்தப்போ வந்து.. ஷக்தியைப் பார்த்துக்க!!” என்று எகத்தாளமாக கூற, ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற இளா, பரசுவின் சட்டைக்காலரைப் பிடித்து, தன் பற்களைக் கடித்துக் கொண்டு, புருவங்கள் நெரித்து, “ஷக்திக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தால் என் கூடத் தான்!!”என்று உறுதியாக கூறி விட்டு.. மெயின் ரோடுக்கு வந்தவன்… நான்கைந்து ரவுடிகளால் கடத்தப்பட்டான்.
அதில் ஒரு காண்டாமிருகம்.. அவன் மூக்கில் க்ளோரோஃபோர்ம் தெளிக்கப்பட்ட கர்ச்சீப்பை வைத்து.. அழுத்து அழுத்து என்று அழுத்த..திணறித் திமிறி.. இறுதியில் முடியாமல் சுயநினைவிழந்தவன்.. கண் விழித்த போது.. அந்த இருட்டறையில் இருந்தான்.
எத்தனையோ அடிகள் அவன் உடலில் வீழ்ந்தாலும்.. பல்லைக் கடித்துக் கொண்டு தாங்கிக் கொண்டான் இளா.அடி தாள முடியாமல் அவன் மயங்கி வீழ்ந்த போதெல்லாம்.. அவன் மீது தண்ணீர் விசிறியடிக்கப்பட்டு.. பின் மீண்டும் அடி ஆரம்பமானது.
அந்த கணம் ‘கிரீச்’ என்ற ஒலியுடன் திறக்கப்பட்ட கதவின் வழியாக வந்த ஒளியில்.. அவன் கண்கள் கூச.. கண்களை சுருக்கிக் கொண்டு.. கதவு வழியாக வந்தவனைப் பார்த்தான் இளா. அங்கு நின்றிருந்ததோ… இந்த அத்தனை நாசகார செயல்களுக்கும் முழு காரணகர்த்தாவான பரசுராம்!!இதற்கெல்லாம் காரணம் அவர் தான் என்று முன்னாடியே அவன் ஊகித்து வைத்திருந்தால்.. அவரைக் கண்டதும் அதிராமலேயே நின்றிருந்தான் இளா.
அவன் தலையோ.. ஓயாமல் வாங்கிய அடியில் தொங்கிப் போயிருக்க, அவரைக் அடிக்கண்களால் முறைத்துப் பார்த்தான் இளா. அவனை நாடி வந்தவர், அவன் தொடை மேல் தன் ஒற்றைக் காலை வைத்து.. ஓங்கி அழுத்திக் கொண்டே, “ட்டேய் என்ன தைரியம் இருந்தால்.. என் வீட்டுக்கு வந்து.. என் சட்டைக்காலரையே பிடிப்ப? உனக்கு ப்பரசுராம் த்தங்கச்சி க்கேட்குதா?”என்று இரைந்து கத்திய வண்ணம், இளாவின் கன்னத்துக்கே ஓங்கி ஓர் அறை விட்டார் பரசு.
அவனுக்கு அவர் அறையைக் காட்டிலும், தொடையில் அவர் அழுத்திய அழுத்தம் தான் வலித்தது. “நீங்.. க எவ்வ… ளவு அடிச்சா.. லும் சரி… ஷக்தி என.. க்குத் தான்..”என்று அப்போதும் விடாமல் கூறினான் இளா.
அவனது தெனாவட்டான பேச்சில் அப்படியே சுருசுருவென கோபம் போக, அவனது சட்டைக் காலரைப் பற்றி இழுத்து, “உன்னை…”என்று பற்கள் கடித்தார் அவர்.அவனோ அப்போதும் அஞ்சாமல் அவர் விழிகளை நேருக்கு நேர் பார்த்தான். ஆனால் அவருக்கு என்ன தோன்றியதோ? திரும்பி அவன் மேல் தான் வைப்பது தீது எனக் கொண்டாரோ? என்னவோ? அவன் சட்டைக்காலரை உதறி விட்டவர், அங்கு நின்றிருந்த அடியாட்களிடம், “இவனை அடிக்குற அடியில்.. இவன் ஷக்தி நினைப்பையே மறக்கணும்.. கை, காலை இழுத்துக்கிட்டுத் தான்.. வாழ்க்கை பூராகவும் இவன் போகணும்..!!” என்று வன்மத்துடன் கூறியவரை அவர் குடும்பத்தில் யாராவது பார்த்திருப்பின், ‘இப்படியெல்லாம் பேசுவது பரசு தானா?”என்று குழம்பிப் போயிருக்கக் கூடும்!
அன்று.. அந்த இருட்டறையில் வைத்து.. காட்டுமிராண்டி போல நடந்து கொண்ட பரசு.. அவருள் இருக்கும் ஓர் கொடிய மிருகம்!
தன் உயிர் போவது அவளுக்காக என்னும் போது.. அத்தனை ரணத்திலும் இளாவின் முகத்தில் அழகாக ஓர் புன்னகை பூக்க, அவரை நோக்கி, “என்னைக் கொண்ணு போட்டாலும் சரி… ஷக்தி என்னைத் தவிர.. இன்னொருத்தனை மனசார நினைக்கவும் மாட்டாள், அவன் கூட வாழவும் மாட்டாள்..”என்று கூற… பரசுராமுக்கு அவன் பேசும் பேச்சுக்கள் எல்லாம் எரிமலை சீற்றத்தைக் கொடுத்தது.
அருகிலிருந்த ரவுடிப் பையனின் கையில் இருந்த ஹாக்கி மட்டையை பறித்தவர், ஓங்கி அவன் கன்னத்துக்கு அடியொன்றை விட்டவாறு, “என்னடா சொன்ன?” என்று கேட்டார் ஆவேசத்துடன்.
அவர் அடித்த அடியில்.. இளாவின் முரட்டுக் கன்னத்தோல் பிய்ந்து.. உள்ளிருக்கும் வெள்ளை சதை எட்டிப்பார்க்க.. வாயிலிருந்தும் வெளியே பீச்சியடித்தது இரத்தம்!!
அந்நிலையிலும் கூட.. பின்வாங்காது, ‘என்னை விட்டுடுங்க.. இதுக்கு மேல என்னால முடியாது’ என்று கதறாமல், அவரைப் பார்த்து “உ… னக்கு வேணும்னா… காதலில் நம்பிக்கையில்லாமல் இருக்கலாம்.. ஆனால் எனக்கி.. ருக்கு…ஷக்தி கழுத்தில்… என் தாலி தான் ஏறும்!! ” என்று சொன்னவை எல்லாம் பரசுவை.. நிலைகொள்ள விடாமல் தடுத்தது.
வெறும் அடியோடு மிரட்டி அனுப்ப நினைத்திருந்தவருக்கு.. அவனோ உயிர்ப்பிச்சை கேட்காமல்.. தெனாவட்டாக பேசுவது வெறியைக் கிளப்ப, அவனிடம், “அதையும் நான் பார்க்கத் தானே போறேன்..உயிரோடு இருந்தால்.. ஷக்தி கல்யாணத்துக்கு வந்து பாரு” என்றவர், தன் அடியாட்களிடம், “இவனை அடிச்சு.. களனி கங்கை ஆத்துல போடுங்க.. நாளை காலையில் இவன் பொணமா மெதக்கணும்…”என்று சொல்லி விட்டு, தன் வேஷ்டி நுனியை இடது கையால் பிடித்துக் கொண்டு அங்கிருந்தும் புயல் வேகத்தில் நகரலானார் .
அதன் பின் அவன் உடலில் விழுந்த அடிகள் ஒவ்வொன்றும்.. உயிரை வேரோடு உருவி எடுக்கும் வலியைக் கொடுத்தாலும் கூட.. பற்களைக் கடித்துக் கொண்டு ஏற்றுக் கொண்டான்.
இறுதியாக அங்கிருந்தவர்களில் ஒருவன், ஹாக்கி ஸ்டிக்கினால்.. அவன் பின்மண்டைக்கே ஓங்கி அடிக்க, தன் பெரிய நயனங்கள் விரிய, “நீ இல்லைன்னா..நான் செத்துருவேன்டா!!”என்று அவள் சொன்ன வார்த்தைகள் காதோரம் ஒலிக்க.. அப்படியே மயங்கிச் சரிந்தான் அவன்.
அதற்குப் பின்.. என்னானதோ? ஏதானதோ? என்று எதுவுமே தெரியவில்லை. எங்கும் கும்மிருட்டு.. எதிலும் கும்மிருட்டு..!!இமைகளின் மேல் பாராங்கல்லைத் தூக்கி வைத்தாற் போன்று வலியெடுக்க, கண்களை தூக்க முடியாமல் அவதிப்பட்டான் அவன்.
அவன் உடலில் நாலு பேர்களின் கைகள் படிவதையும்.. அவர்கள் தன்னை முட்டுக் கொடுத்து தூக்கி.. எங்கோ அழைத்துச் செல்வதும் இளங்கோவுக்கு புரிகிறது!!
இருப்பினும் அவர்களைத் தடுக்க முடியாத பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த இளா.. தன் இறுதி மூச்சுக்களை எண்ணிக் கொண்டிருந்தானோ? அவன் வாகனத்தில் ஏற்றப்படுவதும், கார் பயணிக்கும் ஒலியும் கூட கேட்கிறது அவனுக்கு!!
வண்டி சடன் பிரேக் போட்டு நிற்க, அவனை அந்த நால்வரும் வெளியே தூக்கியெடுக்க, அவன் மேனியில் கூதல் காற்றும், இரவு நேரத்தில் சலசலக்கும் தண்ணீரின் குளிர்மையும், பட்டு மோத… காதுகளில் இரவு நேர பூச்சிகளின் ரீங்காரம் கூட கேட்டது.ஆனால் இளாவால் தன் கண்களைத் தான் திறக்க முடியவில்லை.
அவர்கள் தூக்கி ஆற்றுக்குள் வீசப்போகும் நேரம்.. ஆம்புலன்ஸ் வண்டியிலிருந்து வரும் சைரன் ஒலி கேட்க, அந்த ரவுடிகளில் ஒருவன், “மச்சான்… போலீஸ்.. போலீஸ்டா!!” என்றுரைப்பதுவும், “ஏய் யாருப்பா நீங்க? அன்டைம்ல களனி ரிவர் பிரிட்ஜூக்கு அடியில்.. என்ன பண்ணிட்டிருக்கீங்க?”என்று தூரத்தில் ஒரு கம்பீரமான ஆண்குரலும் கேட்டது.
அந்த குரல் வந்த விநாடி.. தொப்பென தரையில் வீழ்த்தப்பட்டான் இளா. அவன் காதுகள்.. கார் கதவு திறந்துமூடும் ஒலியையும், கார் வேகமாக புறப்படும் ஒலியையும் நன்றாகவே கேட்டது.
உயிர் துறக்கப் போகும் அந்நிலையிலும் கூட, “ஷக்தி.. ஷக்தி..” என்று மலருக்கும் கேட்காத மெல்லிய குரலில் முணுமுணுத்தது அவன் இதழ்கள்! அந்நிலையில் அவன் காதுகள் தானும் மெல்ல மெல்ல வேலை நிறுத்தம் செய்யவாரம்பிக்க… கிணற்றுக்குள் இருந்து கேட்பது போல.. “சார்.. இங்கே ஒரு பாடி கிடக்கு சார்.. ஆனால் இன்னும் உயிர் இருக்கு!!” என்று சொன்னது மட்டும் கேட்க… அத்தோடு முற்றாக சுயநினைவிழந்து போனான் இளங்கோ.
அன்று களனி ஆற்றில் தூக்கி.. அந்த ரவுடிக் கும்பல் வீச முயன்ற போது.. அங்கே போலீஸார் விரைந்து வந்ததும், அவன் உயிர் தப்பியதும் தெய்வாதீனம் தான்!!
அவன்… ஏதோ தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருந்தவன் காற்றின் மேல் மட்டத்துக்கு வந்தாற் போன்று…. மூச்சை ஆழ இழுத்துக் கொண்டு கண்கள் விழித்த போது.. கொஞ்சம் பதறித் தான் போனான் இளா.
அவன் கண்கள் சுற்றிலும் பார்க்க… மூக்கு வேறு மருந்து நெடியை உணர, தான் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்தான் இளா.
அவனைச் சுற்றி ஈஸிஜி மானிட்டர் கருவி ஏறி இறங்க, கையில் டிரிப்ஸ் ஏற்றப்பட்டிருக்க, சட்டென விழித்தவனை… அருகிலேயே நின்று பார்த்துக் கொண்டிருந்த அவன் நண்பன் ஆனந்த், கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்க்க, இறுகியணைத்துக் கொண்டு, “டேய்… இளா…நாங்கலாம் ரொம்ப பயந்துட்டோம்டா! நீ இருந்த நிலைமையைப் பார்த்தி நான், ஆதி, உன் அம்மா எல்லாரும் பயந்துட்டோம்.. அங்கே மட்டும் போலீஸ் வந்திருக்கலைன்னா.. உன்னை உயிரோடு பார்த்திருப்பேனான்னு கூட தெரியலை… ” என்று கூற, அந்த அணைப்பு கூட அவஸ்த்தையாகவே இருந்தது இளங்கோவுக்கு.
இளங்கோவோ.. தலையில் ஓர் கட்டுடன், நெற்றியோரத்திலும், கன்னத்திலும் பிளாஸ்டருடனும், கண் மடலின் கீழே நீலம் பூத்திருக்க.. உதட்டில் இன்னும் இரத்தகாயம் இருக்க… பார்க்கவே பரிதாபமாக இருந்தது அவன் நிலை!
எழுந்தவன், தன் பின் மண்டையை அழுத்திப் பிடித்த வண்ணம், “டேய் மச்சி…எவ்வளவு நாள்டா.. நான் இங்கே.. இப்படி படுத்துக்கிடக்கேன்?” என்று தான் கேட்டான்.
நண்பன் திரும்பி வந்த சந்தோஷம் அப்பட்டமாகத் தெரிந்தது ஆனந்த் முகத்தில். அதனால் விளைந்த பெரும் புன்னகையுடன், “மச்சி.. இரண்டு நாளா இப்படி தான்டா படுத்துக்கிடக்க… அம்மாவும், ஆதியும் கேன்டீன் போயிருக்காங்கடா.. உன்னை வந்து பார்த்தால் ரொம்ப சந்தோஷப்படுவாங்க”என்று கூறியதெல்லாம் அவன் செவிகள் உள்வாங்கவில்லை.
சரியாக இரண்டு நாள்.. இரண்டு நாள்.. கிடைபிணமாக படுத்துக்கிடந்தவன் எழுந்த போது.. நினைவெங்கும் அவளே!!
அவன் விழிகள் திரும்பி… சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தது. அது முற்பகல் பத்து இருபதைக் காட்ட, அவனுள் பதற்றமும், படபடப்பும் ஒருங்கே எழுந்தது.
இன்னும் சொற்ப நேரத்தில் ஷக்தி கல்யாணம்! அவனால் எப்படி படுத்துக் கொண்டு சும்மாயிருக்க முடியும்??
சடாரென கட்டிலில் நின்றும் எழுந்தவன், வெளியே செல்ல விரைய, குழம்பிப் போன ஆனந்த், அவனைப் பார்த்து, “மச்சி எங்கே போற?” என்று கேட்டான்.
அவனோ திரும்பி ஆனந்த்தைப் பாராமல், கையிலிருந்த டிரிப்ஸ் குழாயைப் பிய்த்தெறிந்தவனாக, “ஷக்தி கல்யாண மண்டபத்துக்கு..” என்ற படி கதவை நாடிப் போக, சட்டென இளங்கோவின் முன்னங்கைப் பற்றித் தடுத்தவன், “இந்த நிலைமையில் எப்படி மச்சி?” என்று நண்பனின் உடல்நிலையைக் கருத்தில் கொள்பவனாகக் கேட்டான் அவன்.
இளங்கோவின் விழிகள் தன் முன்னங்கையைப் பற்றிய அவன் கையிலிருந்து.. ஆனந்தின் முகத்துக்கு மேலேறியது.
ஆனந்தைப் பார்த்து உறுதியான குரலில், “ நீ வர்றதுன்னா வா.. நான் போகத்தான் போறேன்..!”என்றவன்.. கதவைத் திறந்து கொண்டு ஹாஸ்பிட்டல் காரிடோரில் தன் கால்களை அழுத்தமாகப் பதித்து நடந்தான்.
நண்பனை தனியாக அனுப்ப மனமற்று, “டேய் நில்லுடா.. நானும் வரேன்!!” என்றவனாக.. இளங்கோ பின்னாலேயே ஓடினான் ஆனந்த்.
அங்கே நாவலர் மணி மண்டபத்தின்…
மணமேடையில், மணவாளனாக பட்டு வேஷ்டி, பட்டு சேலை அணிந்து அக்னி குண்டத்தின் முன் அமர்ந்திருந்த வாசுதேவின் பக்கத்தில்.. குனித்த தலை நிமிர்த்தாமல், தன் முழங்காலைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த ஷக்தியின் விழிகள் சிவந்து வீங்கியிருந்தது.
அழுது அழுது ஓய்ந்து அதைத்துப் போன முகத்துக்கு மேலாக போடப்பட்ட மேக்கப்.. அவள் முகத்தை கொஞ்சம் பூசினாற் போன்று காட்டியது.
இன்னும் சொற்ப நேரத்தில்.. ஐய்யர் ஜெபிக்கும் மந்திரங்களின் உச்சகட்டத்தில்.. வாசுதேவின் தாலி… ஷக்தியின் கழுத்தில் ஏறக்கூடும்! அவளால் திருமதி. வாசுதேவனாக வாழ முடியுமா?
அடுத்து எதுவும் நடக்கலாம் என்ற வாழ்கைக்கு மத்தியில்,அவளுயிரையும் காலன் வந்து வாங்கக் கூடாதா? என்று எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் தோன்றியது ஷக்திக்கு!
இளாவுடன் அவள் கண்டு வைத்த கனவுகள்!! வாழ்வு? அவன் சாயலில் அவள் வடித்து வைத்த கற்பனைக் குழந்தைகள்!! அந்த இன்பமயான வாழ்க்கை எல்லாம் நனவாக அன்றி, கனவாக கலைந்து போகப் போகின்றதே என்று எண்ணும் போது..
மஸ்காராவுடன் இணைந்து.. கறுப்பு நிறத்தில் வழிந்தோடியது அவளது கண்ணீர்!
அந்த நேரம்…. சற்றும் எதிர்பாராத விதமாக.. அந்த கல்யாண மண்டபத்துக்குள்.. நுழைந்தான் இளா. அவளும் அந்த நேரம் பார்த்து யதேச்சையாக திரும்பி.. நேராகப் பார்க்க.. அவளுடைய சோர்ந்த நயனங்களில் விழுந்தான் இளா.
அவளை நோக்கி வீறு கொண்ட சிங்கம் போல நடந்து வந்தவனின் தலையிலிருந்த கட்டும், முகத்தில் ஆங்காங்கே முளைத்திருந்த பிளாஸ்டரும்,அவளுக்கும் வலியைக் கொடுத்தது.
அதேவேளை அவன் காயங்களுக்கு யார் காரணம் என்று சொல்லாமலேயே புரிய.. திடீரென்று தன்னை… கண்டியில் இருக்கும் சித்தி வீட்டிற்கு அண்ணன் ஒருவாரமாக அனுப்பி வைத்ததன் சூட்சுமத்தையும் அறிந்தாள் அவள்.
மணமேடையில் அமர்ந்திருந்த அவள் பார்வையும், சம்யுக்தாவைக் கவர வந்த அந்த ப்ருத்விராஜ்ஜின் பார்வையும் ,ஒன்றையொன்றைத் தழுவி.. ஓர் நூறு நேசக்கவிதைகள் வாசித்துக் கொண்டன.
தன் தலைவன் வருவது தனக்காகத் தான் என்பதை அறியாமல் போவாளா அந்த ஐந்தரையடி தாமரை மலர்?
அவனைக் கண்டதும், நாடி, நரம்பெங்கும் காதல் ஹோர்மோன்கள் தாருமாறாக சுரக்க, கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தோட, மணமேடையிலிருந்து எழப் போனவளை, இறுக்கமாக பற்றிக் கொண்டது வாசுதேவனின் கை!!
ஆரம்பத்திலிருந்து ஷக்தியின் முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தவனாயிற்றே அவன்?
அவள் பார்வை.. யாரோ ஒரு ஆடவன் மேல் காதலுடன் பதிந்ததையும், அவன் வந்ததும் இவள் எழப்போனதையும் கண்டு கொண்டான் வாசு. அவனோ கோபத்தில் கையோடு கை வளையல்களையும் பிடித்து இறுக்க.. வளையல் உடைந்து.. கையைக் குத்தி இரத்தம் வந்தாலும் கூட.. அவளது கையை அப்போதும் கூட விடவில்லை அந்த கல் நெஞ்சுக்காரன்!!
அதைப் பார்த்து இளங்கோவும், அவளது அண்ணனும் நடப்பது அறியாமல் பதறிப்போன கணம் தான் அது நடந்தது. தன் வலியைப் பொறுத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள், உறுதியான குரலில், “எடு கையை!” என்றாள்.
மணமகள், மணமகனைப் பார்த்து மொழிந்த கூற்றில் ஐய்யரின் மந்திர உச்சாடனம் வேறு தடைப்பட்டு நிற்க, அடுத்து அவள் வாசுவை நோக்கி சீறும் அடிக்குரலில், “உன் கிட்ட தான் சொல்றேன்.. எடுடாஆ க்கையை!!!”என்று மொழிந்தது முழு கல்யாண மண்டபத்தையே ஆட்டுவித்தது.
மாபெரும் தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபதியான வாசுவுக்கு அவள் கூறிய சொற்கள் தன்மானத்துக்கு பலத்த அடியாகப் போய் விட… அவமானத்தில், இறுகிக் கறுத்துப் போன முகத்துடன், அவள் கையை விட்டான் வாசு.
அவன் விட்ட சந்தோஷத்தில் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் துளிர்க்க… மணமேடையை விட்டும் எழுந்தவள் கையிலிருந்து உருண்டோடிய விஷ மருந்து பாட்டில்… சரியாக உருண்டு வந்து.. கீழே நின்றிருந்த பரசுவின் கால் தட்டி நின்றது.
அதைப் பார்த்த பரசு.. உள்ளுக்குள் திடுக்கென்று அதிர்ந்தவராக.. தங்கையை துடித்த இமைகளுடன் பார்த்தார்.
ஒருவேளை வாசுவின் தாலி தங்கை கழுத்தில் ஏறியிருந்தால்.. தங்கை தற்கொலைக்கு முயன்றிருப்பாளோ? அவர் காதோரம், அன்று இளங்கோ மொழிந்த, “யோவ்… அவள் நானில்லைன்னா செத்துருவா.. புரிஞ்சுக்க?”என்ற கூற்றின் உண்மையும், வீரியமும் அப்போது தான் தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டார் பரசு.
அரங்கத்தில் நின்றவர்கள் எல்லாரும் அதிர்ந்து போய் நிற்க.. தன் பூமாலையைத் தூரத் தூக்கியெறிந்து விட்டு..ஓடி வந்து தன் தலைவனைக் கட்டிக் கொண்டாள் ஷக்தி.
முழு மண்டபமும் மணப்பெண்ணைப் பார்க்க, இவளோ பிறர் தன்னைப் பார்ப்பதைப் பற்றி சட்டை செய்யாமல், அவன் மார்பில் இன்னும் இன்னும் புதைந்தவளாக,தேம்பித் தேம்பி அழுதவளாக, “இளா… என்னைக் கூட்டிட்டுப் போயிரு இளா.. எப்படியாவது அழைச்சிட்டுப் போயிரு இளா.. . என்னால… நீயில்லாத வாழ்க்கையை நினைச்சுக்கூட பார்க்க முடியலை இளா… நீ வரலைன்னா.. அவன் தாலி என் கழுத்தில் ஏறிய மறுகணமே செத்துருப்பேன் இளா..”என்று கூறியதைக் கேட்டு, தங்கள் வீட்டுப் பெண் இன்னொரு ஆடவன் மேல் வைத்திருக்கும் காதல் பார்த்து மீனாட்சி அண்ணியும், அவள் தாயாரும் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தனர்.
அவளைத் தன்னிலிருந்தும் விலக்கி… அவள் முகமெங்கும் குட்டிக் குட்டி முத்தங்கள் பதித்தவன், அவள் கன்னத்தை இரு கைகளாலும் தாங்கி, “ஹேய்.. அப்படியெல்லாம் பேசாதேடா.. இதோ நான் வந்துட்டேன்ல? இனி அழுகக் கூடாது.. நான் உன்னை இங்கேயிருந்து அழைச்சுட்டுப் போகிறேன்…”என்றவனாக, யாருக்கும் காத்திருக்காமல்.. அவளது முன்னங்கைப் பற்றி.. உரிமையுடன் அங்கிருந்து அழைத்துச் செல்லலானான் இளா.
இதையெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு பரசுராம் வாயடைத்துப் போய் நிற்க, அங்கே மாப்பிள்ளையாக நின்றிருந்த வாசுதேவனால்.. ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனதை’ தாங்க முடியாமல் போகவே, அங்கே கல்யாணத்துக்கு வந்திருந்த அவனது குடும்ப நண்பர், போலிஸ் டி. ஸி. பியிடம் ஆவசேத்துடன் வந்து, “என்ன சார்.. பார்த்துட்டு இருக்கீங்க..? எனக்கு நிச்சயமான பொண்ணை இன்னொருத்தன் கூட்டிட்டு போயி..” என்று சொல்லிக் கொண்டிருந்த போது இடையிட்ட போலீஸ் அதிகாரி, “ஸாரிப்பா..அவளும் மேஜர்… பையனும் மேஜர்.. அவங்க மேலே ஏக்ஷன் எடுக்க முடியாது.. பொண்ணும் அவன் கூட இஷ்டப்பட்டுத் தானே போறா?” என்று கேட்க, அவமானத்தில் முகம் சிவக்க நின்றிருந்தான் தொழிலதிபன் வாசுதேவன்!
அன்று.. ஆயிரம் பேர் கூடி நின்ற அந்த மண்டபத்தில் அவனுக்கு விளைந்த அவமானம், அந்த மனவேதனை,கோபாவேசத்தில்… கையாலாகாத தன்மையுடன் நின்றிருந்தான் அவன்.
எல்லாவற்றுக்கும் இளாவையும், தன்னை உதாசீனமாக உதறித் தள்ளிவிட்டு செல்லும் ஷக்தியையும் பழிக்குப் பழி வாங்க வேண்டும் போல வெறி அவன் நாடி, நரம்பெங்கும் எழுந்தது.
தன் இளாவுடன் போகும் முன்னர்.. கண்ணீருடன் நின்றிருந்த தன் தாயை நாடிப் போனவள், இளாவுடன் அவர் காலில் வீழ்ந்தெழுந்தாள். தன் காலில் வீழ்ந்த இளசுகளை ஆசிர்வதிக்க முடியாத நிலையில் அமைதியாக மகள் முகம் பார்த்தார் அந்த வயதான தாயார்.
கண்ணீர் குமிழியிட்ட கண்களுடனும், தழுதழுத்த குரலுடனும், “அம்மா என்னை மன்னி.. ச்சிருங்கம்மா.. என்னால இளாவை விட்டு வாழ முடி.. யாது… அண்ணா பார்த்த மாப்பிள்ளை என்னை நல்லா பார்த்து… க்கலாம்.. ஆனால் சந்தோஷமா இருக்.. க மாட்டேன்மா.. இளா என்னை நல்லா பார்த்துப்பான்.. நானும் சந்தோஷமா இருப்பேன்மா..” என்று தன்னிலையைத் தெளிவாக எடுத்தரைத்து விட்டு…இளாவை நோக்கி கண்களாலேயே, “வா இளா போகலாம்” என்று அழைக்க, உரிமையுடன் அவள் தோட்டுத் தொட்டு அணைத்தவனாக அங்கிருந்து கூட்டி சென்றான் இளா. இளாவுடன் செல்லும் மகளை அழைக்க…நாவு துடித்தது தாயுள்ளத்துக்கு.
ஆனால் பரசு? அத்தனை பேர் முன்னாடி உழைப்பால் உயர்ந்த பரசுவின் முகத்தில் கரியைப் பூசி விட்டு செல்லும் ஷக்தியை ஆசிர்வதித்தாலோ? போகாதே என்று தடுத்தாலுமோ? பரசு என்ன சொல்லக்கூடுமோ? என்று அச்சத்துடன்…மனதுக்குள் ஷக்தியை வாழ்த்தியவராக, கண்களில் நீர் வழிய நின்றார் அவர்.
ஷக்தியின் தோளோடு அணைத்துப் பிடித்த அவன் கை, மண்டபத்தை விட்டும் வெளியே வந்த பின்னும் கூட, அவளை விட மறுத்தது. மணக்கோலத்தில் நின்றிருந்தவளைக் காணக் காண தெவிட்டவில்லை அவனுக்கு. இரண்டு நாட்களுக்கு முன் அவன் வாங்கிய அடியின் வலிகள் எல்லாம் எங்கேயோ பறந்து காணாமல் போனது.
மண்டபத்திலிருந்தே ஆட்டோ பிடித்தவன், உடன் வந்த ஆனந்திடம், “டேய் மச்சி.. இப்படியே வீட்டுக்கு போக முடியாது… நேரா ரெஜிஸ்டர் ஆபிஸூக்கு போகலாம்..சாட்சிகையெழுத்துப் போட.. சீக்கிரம் யாரையாவது ரெடி பண்ணு!” என்று கூற, ஆனந்தும் விரைந்து செயல்பட்டவனாக, “சரி மச்சி” என்ற வண்ணம், செல்லை எடுத்து தன் நண்பர்கள் பட்டாளத்துக்கு அழைத்து விஷயத்தை சொல்லி.. ரெஜிஸ்டர் ஆபிஸூக்கு வருமாறு கூறிக் கொண்டே வந்தான் ஆனந்த்.
அவனோ.. வளையல் குத்தி இரத்தம் வந்த அவள் வலது கையை எடுத்து.. தன் கர்ச்சீப்பால்.. கட்டுப்போட்டு..உள்ளங்கைக்கு முத்தமிட்டு விட்டு, “நான் இல்லைன்னா.. தற்கொலை முயற்சியில் கூட இறங்கும் அளவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமா ஷக்தி?”என்று கேட்டான் அவன்.
அவள் எதுவும் பேசவில்லை. வீட்டை விட்டு வந்தது, மண்டபத்தில் நடந்தது என அனைத்து சம்பவங்களிலும் அவள் இதயம் சாந்தம் பெறாமல் தவிக்க.. தவிப்புடன் அவன் விழிகள் பார்த்து, ‘ஆமாம்’ என்பது போல தலையாட்டியவள், அவனது கழுத்து வளைவில் ஆதரவாக சாய்ந்து கொண்டாள்.
அவனோ அவள் மனநிலையை உணர்ந்தவனாக…அவளது தலையை மென்மையாகத் தடவிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தலானான்.
ரெஜிஸ்டர் ஆபிஸ்ஸில் நுழைந்த போதே மாலை, தாலி என எல்லாமும் தயாராக வைத்து.. அவர்களுக்காக காத்திருந்தனர் இளங்கோவின் நண்பர்கள் பட்டாளம். திருமண பதிவாளரிடம் ஒருவழியாக பேசி… தாலி கட்டி, மாலை மாற்றி.. பெண் பக்கத்தில் சாட்சிக் கையெழுத்தாக ஆனந்த் கையெழுத்து போட, மாப்பிள்ளை பக்கத்திலிருந்து சாட்சிக் கையெழுத்தாக யார் போடுவது என்று பிரச்சினை எழுந்தது அங்கே?
பெற்றோர்களின் உடன்பாடின்றி நடக்கும் திருமணம் என்பதால், மாப்பிள்ளை பக்கத்தில் சாட்சி கையெழுத்தாக வரும் “கை” கொஞ்சம் பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்று எண்ணி, ஓர் லாயர் ஒன்றை வரச் சொல்லியிருந்தான் ஆனந்த். அவர் இன்னும் வராமல் போகவே படபடப்பு எழுந்தது அங்கே.
டென்ஷனுடன் ஆனந்தை நோக்கிய இளா, “சாட்சி கையெழுத்துக்கு சொல்லியிருந்த லாயர் எங்கேடா?”என்று கேட்க, ஆனந்தும் கொஞ்சம் படபடப்பானவனாக, “.. இதோ வந்துருவான் மச்சி…”என்று வாசல் பக்கம் பார்க்க, அங்கே சர்ரென்று வந்து நின்றது உயர்ரக சொகுசு கார்.
அதிலிருந்து முழுநீளக்கை பட்டு சட்டை, வேஷ்டியுடன்.. பத்துவிரல்களிலும் பத்து மோதிரங்களுடன், பளபளப்பாக வந்து இறங்கினார் அமைச்சர் பாலகிருஷ்ணன். காலேஜில் கலகம் விளைவித்த அதே அர்ஜூனின் தந்தை!!
கூடவே காரிலிருந்து அர்ஜூனும் இறங்கி வர, அவர்களையே புரியாமல் பார்த்த ஆனந்த், “டேய் இவனுங்க எதுக்குடா இங்கே வர்றானுங்க?”என்று கேட்டான் அவன்.
அங்கே வந்தது அமைச்சர் என்றானதும் அல்லோலகல்லோலப்பட்டது அந்த அலுவலகமே!!
பதிவாளரே.. சீட்டை விட்டு எழுந்து வந்து, அவர் முன்னே கை கட்டி குனிந்து நின்று, “வாங்கைய்யா” என்று பவ்யமாக வரவேற்க,
அவரோ சார் பதிவாளரின் தோளில் கை போட்டவராக இளாவைக்காட்டி, “நம்ம பையன் தான்.. என் ஃப்ரண்டுடையை பெஸ்ட் ஃப்ரண்டு… சாட்சி கையெழுத்து நீங்க தான் போடணும்னு.. என் பையன் கேட்டுக்கிட்டான்.. நம்மளால மறுக்க முடியுமா? சின்னஞ்சிறுசுங்க சந்தோஷமா வாழ்ந்துட்டு போகட்டுமே?” என்றுரைக்க, அங்கே ஷக்தியும், இளாவும், ஆனந்தும் அதிர்ந்து போய் நின்றிருந்தனர்.
‘என்ன??சாட்சி கையெழுத்து போடணும்!!’ என்று சொல்லி தந்தையை அழைத்து வந்தது அர்ஜூனா?
எதையும் பப்ளிசிட்டிக்காக செய்யும் அமைச்சர்.. எந்த மீடியாவுக்கும், பத்திரிகைக்கும் தெரிவிக்காது.. இன்னும் ஏன் சிங்கிள் கேமரா கூட இல்லாமல் வந்திருப்பது ஆச்சரியத்தை வருவித்தது அவர்களுக்கு.
அவர்கள் முகத்தைப் பார்த்தே அவர்களின் கேள்வியை அறிந்து கொண்ட அர்ஜூன், இளாவைப் பார்த்து,
தன் கைகளை பின்னாடி கட்டிக் கொண்டு சங்கோஜமான குரலில், , “நீ தான் என்கிட்ட ஒண்ணும் சொல்லவும் மாட்ட.. ஹெல்ப்னாலும் கேட்கவும் மாட்ட.. நம்ம பசங்க சொன்னாங்க…நடந்த மேட்டரை.. அதான் சாட்சி கையெழுத்து போட.. அப்பாவை நானே கூட்டி வந்தேன்..” என்றவன், இளாவை நோக்கி கை குலுக்க கை நீட்டியவனாக, “கங்கிராட்ஸ் மச்சி… ஹேப்பி மேரீட் லைஃப்..” என்று சொல்ல, இளாவின் முகத்தில் சின்னதாக ஓர் அரும்பு நகை படர்ந்தது.
ஷக்தி காதல் மேட்டரைத் தவறாகப் புரிந்து கொண்டு, ‘துரோகி!’ என்று பட்டம் சாட்டி விட்டானே? என்ற கவலையில், கோபத்தில் அர்ஜூனுக்கு அவ்வளவாக முகம் கொடுக்காத இளாவுக்கும் கூட… அன்று அர்ஜூன் மீது சிறு அன்பு துளிர்க்கத் தான் செய்தது.
“தேங்க்ஸ்டா..இட்ஸ் டைம்லி ஹெல்ப்!!” என்ற இளாவும் பதிலுக்கு.. கை குலுக்கிக் கொள்ள, அங்கே இளா சார்பாக கையெழுத்திட்ட அமைச்சர் பாலகிருஷ்ணனோ, தன் டை அடிக்கப்பட்ட மீசை தடவியவராக, பெருமிதத்தைக் காட்டிக் கொண்டார்.
அவர் எப்பேர்ப்பட்ட தில்லாலங்கடியாக இருந்தாலும், தங்கள் திருமணத்தை நடத்தி வைத்த.. வயசில் மூத்தவர் என்பதற்காக, அவர் காலில் வீழ்ந்தனர் மணமக்கள்!
உச்சி குளிர்ந்து போனவர், அவர்கள் உச்சந்தலையில் கை வைத்து எழ வைத்து, தன் பெருங்குரலில், “நல்லாருங்கப்பா.. பதினாறு பெற்று.. பெருவாழ்வு வாழ்க!!” என்றவர், தன் கையிலிருந்த தங்க மோதிரத்தைக் கழற்றி இளா விரலில் போட்டு விடவும் செய்தார்.
அர்ஜூனின் விழிகள் சிறு வருத்தத்துடன்.. இளா கட்டிய, அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் மஞ்சள் கயிற்றுத் தாலியையே பார்த்தது.
இருப்பினும் சிறு புன்னகையுடன், “வாழ்த்துக்கள் திருமதி. ஷக்தி இளங்கோ” என்றுரைத்த வண்ணம், அவளை நோக்கி அவன் கை நீட்ட.. அதை நாசுக்காக மறுத்தவள்.. இரு கை கூப்பி நின்று அவன் முகம் பார்த்து, “நன்றி…” என்று நேசமாக புன்னகைக்கவும் செய்தாள்!!
