மயங்குவதேனோ மதுரவனே
கதை முன்னோட்டம்…
“என்னைக்கேக்காம நீங்களா எப்டி ம்மா நிச்சியம் பண்ணுவீங்க?. நான் வித்யாவ லவ் பண்ற விஷயம் உங்களுக்கு தெரியும் தான. தெருஞ்சிருந்தும் இப்டி பண்ணா என்னமா அர்த்தம்?…” நடுவீட்டில் நின்று கொண்டு சந்திரன் தாயிடம் வினவ சௌந்தரம் இயல்பாக, “என்ன அர்த்தம்?. அந்த வித்யா பொண்ண உனக்கு கட்டி வக்கிறதுல எனக்கு இஷ்டமில்லேன்னு அர்த்தம்…”
“என்னால காதலிச்ச பொண்ண விட்டுட்டு வேற ஒருத்திய கல்யாணம் பண்ண முடியாது…”
“அப்ப நீ என்னையும் இந்த குடும்பத்தையும் மறந்துட வேண்டியது தான்…” அவன் இயலாமையில், “ம்மா…” தாயும் மகனும் பேசிக்கொண்டிருக்க, தனக்கும் இதற்கும் சம்ந்தமே இல்லை என்பது போல், தொலைக்காட்சி பெட்டியில் செய்திகளில் மூழ்கியிருந்தார் சந்திரனின் தந்தை வரதராஜன்.
தன் அறையில் மேஜையின் மேல் விரித்து வைத்திருந்த காகிதத்தில் தன் கவனத்தை பதித்திருந்த மதுரவனின் கைபேசி ஒலிக்க, அதை எடுத்து பேசலானான். “சொல்லுங்க சார்…” எதிர்புறம் சொன்ன பதிலில் முகம் மலர்ந்தவன், “நிஜமாவா சார்…” அடுத்த நொடியே யோசனையுடன், “அந்த பொண்ண நீங்க கஷ்டபடுத்தலேல, அவங்களா தான ஒத்துக்கிட்டாங்க…” ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டு உறுதி செய்து கொண்டவன், சில நிமிடங்களில் தன் தோள் பையோடு வெளியேறினான்.
அறைக்கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டு மூவரது கவனமும் அவனிடம் திரும்ப, அதை எதையும் சட்டை செய்யாது வீட்டு வாயிலில் நிறுத்தியிருந்த தன் இருசக்கர வாகனத்தை கிளப்பி கொண்டு சென்றான். அடுத்த அரை மணிநேரத்தில் ஒரு தங்கும் விடுதிக்குள் நுழைந்தவன், தான் வழக்கமாக பதிவு செய்யும் அறைக்கு சென்றான். கதவை திறந்ததும் அனிச்சையாய் அவனது விரல்கள் விளக்கை அணைத்தது. உள்ளே ஏற்கனவே அவள் அமர்ந்திருந்தாள். “பயப்படாதிங்க…” என்றவன் அவள் செய்ய வேண்டியதை சொல்ல, ஐந்து நிமிடங்களில் அவள் குரல் கொடுத்தாள்.
மங்கலான வெளிச்சம் தரும் இரவு விளக்கை அவன் ஒளிர விட, மற்றவர் கண்களை உறுத்தாத வண்ணம் அவளது உடைகளை கலைந்திருந்தாள். உடலில் இருந்த காயங்கள் அவள் அடைந்திருக்கும் வலிகளை சொல்ல, ஒரே நிமிடத்தில் அவனது வேலையை முடித்து விட்டு, “டிரஸ் பண்ணிக்கோங்க மா…” என பக்கவாட்டில் இருந்த மற்றொரு அறைக்குள் நுழைந்தான், ஊராருக்கு மதுவாகவும், அவனது பாட்டிக்கு முரளியாகவும் இருக்கும் மதுரவன்.
