மயங்குவதேனோ மதுரவனே
மயக்கம் 6…
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் ஆயிரத்து எழுபத்து நான்கு மதிப்பெண்களை பெற்று விட்டு, தன் மேல் படிப்பிற்காக ஓவியக் கல்லூரியில் இணைய வேண்டும் என்று கேட்ட மகனை, புரியாது பார்த்தார் வரதன். “மது நீ தெரிஞ்சுதான் பேசுறியா?…”
“ஆமா ப்பா, நல்லா தெருஞ்சு தான் சொல்றேன்…”
“உன்னோட கட் ஆஃப்க்கு என்ன படிப்புக்கு வேணும்ன்னாலும் சீட் கிடைக்கும் மது, அதவிட்டுட்டு நீ என்னடான்னா இப்டி சொல்லுற?…”
“எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு ப்பா…”
“இதை படிச்சுட்டு, ஃப்யூச்சர்ல உன்னால ஸ்டேன்டர்டா நிக்க முடியும்ன்னு நினைக்கிறியா மது?…”
“என்னால ஸ்டேன்டர்டா நிக்க முடியுமான்னு தெரில, பட் எதுக்காகவும் உங்ககிட்ட திரும்ப வந்து நிக்க மாட்டேன்…” என்று உறுதியாய் மொழிந்தவனை வலியோடு பார்த்தார் தந்தையானவர்.
அவர் அறிவார், தன் மகன் அப்படித்தான். அடித்தாலும் ஏன் என்று கேட்க மாட்டான், வலித்தாலும் வாய்திறந்து சொல்ல மாட்டான். வரதனின் தாயார் அலமேலு, தன்னைப்போலவே தன் பேரனையும் வளர்த்திருந்தார். அன்பை அடை மழையாய் அவனிடம் பொழிந்து, நம்பிக்கையை விதைத்து வளர்த்தவர். எந்த சூழ்நிலையிலும் என்ன நடந்தாலும், எத்தனை வலித்தாலும் சரி, ஏன் இந்த வாழ்க்கை என்ற எண்ணம் மட்டும் அவனுள் எழுந்ததே இல்லை. பத்து வயதிலேயே தன் பேரனின் மனதை அத்தனை பக்குவபடுத்தி இருந்தார் அலமேலு. தாயின் அரவணைப்பு இல்லாது போனால் என்ன, தந்தையின் தோள் கிடைக்கா விட்டால் என்ன, இது உன் வாழ்க்கை. உன் தேவைக்கு வாழு, ஆசைகள் நிறைவேறாது போனாலும் உனக்கு பிடித்தமாய் வாழ்வை புதிதாய் துவங்கு என சொல்லி சொல்லி வளர்த்தவர். அதனால் தானோ என்னவோ மது சிறுவயதில் இருந்தே அவனுக்கு தோணுவதைத்தான் செய்வான், பிடித்தபடி தான் நடந்து கொள்வான்.
வரதன் மகனுக்கு வேறு படிப்பை தேர்ந்தெடுக்கும் படி சொல்லி புரியவைக்க முயற்சிக்க, மதுவோ தன் நிலையிலேயே உறுதியாய் நின்றான். “அப்பா டிரா பண்றதுன்றது என்னோட ஆசை இல்ல, என்னோட மனசுக்கு தேவையான ஒன்னு. ஆசைப்பட்டது கிடைக்கலேன்னா பரவாயில்லன்னு விட்டுடலாம், ஒரு மனுஷனோட தேவைகளை தொலச்சுட்டு பொய்யா ஒரு வாழ்க்கை வாழ முடியாது…” மதி சொன்னதை கேட்டதும், அதற்கு மேல் மறுக்க தோன்றாது அவனது விருப்பப்படியே ஓவியக்கல்லூரியில் இணைத்து விட்டார் வரதன். இதுவரை இதுதான் வேண்டும் என்று கேட்காத மகன், தன் தந்தையிடம் முதலும் முடிவுமாய் கேட்டது தனக்கு பிடித்தமான கல்வியைத்தான். முதலில் ஓராண்டு டிப்ளமோ பிரிவில் சேர்ந்து, அடிப்படையை கற்றத்தேர்ந்தான் மது. பின் ஐந்து ஆண்டுகளில் பட்ட மேற்படிப்பை முடித்து விட்டு வெளிவரும் போது கல்லூரியின் தலைசிறந்த மாணவனாய் இருந்தான்.
எதிரில் இருப்போரின் உணர்வுகளை தனக்குள்ளே உள்வாங்கி கொள்ளும் அவனது இயல்பு, அவனது ஓவியங்களிலும் பிரதிபலித்து அவைகளுக்கு உயிர் ஊட்டியது. மதுவின் கல்லூரி இறுதி ஆண்டு விழாவில், அன்றைய திரையுலகின் மிக முக்கிய தயாரிப்பாளரான ப்ரணவ் சிறப்பு விருந்தினராய் பங்கு கொண்டான். மாணவர்களின் ஓவியங்களை கண்டு ரசித்தவனுக்குள், மதுவின் தொப்புள் கொடி கூட வெட்டப்படாமல் இருந்த பிறந்த சிசுவின் ஓவியம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனோ அதை ஓவியமாய் கருத இயலாது உண்மை என்றே எண்ணம் தோன்றது. எப்போதும் தன் திரைபடங்களை பிரபல படுத்துவதற்கு புதுவிதமான யுக்திகளை கையாள்பவன் ப்ரணவ். மதுவின் தூரிகை அவனது கவனத்தை வெகுவாய் ஈர்க்க, அவனை தன் நிறுவனத்திற்கு என பணியாற்றும் படி கேட்டுக்கொண்டான்.
தன் மனதிற்கு விருப்பமாய் ஓவியக்கலையையும், பணத் தேவைக்கென ப்ரணவின் நிறுவனத்திற்கு வரைந்து கொடுப்பதையும் தன் வாழ்வென மாற்றிக் கொண்டான் மது. அன்றிலிருந்து ப்ரணவ்வின் திரைபட விளம்பரங்கள் அனைத்தும் மதுவின் கைவண்ணத்தில் ஓவியங்களாகவே வெளிவர துவங்கின. திரைப்படத்தின் நாயகன் நாயகி யார் என்பதை வெளியிடாது இறுதி வரை ரகசியமாய் வைத்திருந்து, அவர்களது முகத்தின் ஒரு பகுதி ஒவியத்தை முதல் அறிவுப்பாக வெளியிடுவான். அதன்பின் திரைப்படத்தில் அவர்களது கதாபாத்திரங்களை பற்றிய விபரங்களை மறைமுகமாய் சொல்லும் ஓவியம் வெளிவரும். அடுத்தத்தாய் அதில் பணியாற்றிய இயக்குனர் இசையமைப்பாளர் பாடலாசியர் பாடகர்கள் ஒளி, ஒலிபதிவு செய்பவர்கள் என படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் இருப்பது போன்ற ஓவியங்கள் வெளிவிடுவர். ப்ரணவ்வின் இந்த புதுவித அணுகுமுறையும், மதுவின் உயிரும் உணர்வுமான ஓவியங்களும் பெருமளவில் மக்களிடையே வரவேற்பு பெற, ஐந்து ஆண்டுகளாய் இருவரும் இணைந்தே பணியாற்றி வருகின்றனர்.
என்னதான் மது ப்ரணவ்விடம் வருடக்கணக்கில் பழகினாலும் எதையும் வெளிப்படையாய் பேச மாட்டான். தொழில் சார்ந்த பேச்சுக்களை தவிர, தன் குடும்பத்தை பற்றிக்கூட எதுவும் சொன்னதில்லை மது. அதே போல் ப்ரணவ்விடமும் எதையும் கேட்டுக்கொள்ள மாட்டான். மதுவின் குணத்தை அறிந்த ப்ரணவ்வும் தேவையின்றி எதையும் பேச மாட்டான். இவர்களது இந்த செயல் தான் இருவரையும் இத்தனை ஆண்டுகளாய் இணைத்து வைத்திருக்கிறது. ப்ரணவ்வின் அழைப்பின் பேரில், அவனது ஒவ்வொரு புது திரைப்படத்தின் பூஜை போடும் விழாவிற்கும் சென்று வருவான் மது. அன்றும் அப்படித்தான் ஒரு விழாவிற்கு சென்று வீடு திரும்பும் போது அவளை முதன் முதலாய் பார்த்தான்.
முக்கிய சாலையில் கட்சிக்கூட்டம் ஒன்று நடைபெற்று கொண்டிருக்க, அந்த வழியே வந்த வாகனங்களை காவல் துறையினர் வழிமாற்றம் செய்து கொண்டிருந்தனர். மதுவும் அருகிலிருந்த சிறு சிறு வீதிகளில் நுழைந்து தன் பயணத்தை தொடர்ந்தான். ஓரளவு விசாலமான அந்த தெருவினில் மனித நடமாட்டம் குறைவாக இருக்க, ஒன்றிரண்டு இரு சக்கர வாகங்கள் இயங்கி கொண்டிருந்தன. நண்பகல் சூரியனின் கதிர்வீச்சு கூட அன்று சற்று குறைவாகவே இருந்தது. மது நிதானமாய் வாகனத்தை இயக்கி செல்ல, எதிரே தடுமாற்றத்துடன் வண்டியை ஓட்டிக்கொண்டு வர, அதை கவனித்த மது, தன் வண்டியை ஓரமாய் நிறுத்திக் கொண்டான். ஆனால் அவளோ அவனை நெருங்கும் முன்பை வண்டியோடு சேர்ந்து கீழே விழுந்து விட்டாள். புதிதாக ஓட்ட கற்றுக்கொள்கிறாள் என அவளது உடல் மொழியே சொன்னது. தன்மீது மோதி விடக்கூடாது என்ற எண்ணத்தில் மது முன்னெச்சரிக்கையாய் செயல்பட, அவளோ அதற்கு அவசியமே இல்லை என்பது போல் முன்பே கீழே விழுந்திருந்தாள். நடந்த நிகழ்வில் மது தன்னை மறந்து சட்டென்று சிரித்து விட்டான். சிரிப்பொலியில் அவன் புறம் திரும்பியவள், கோபப்பார்வை ஒன்றை வீசிவிட்டு, அங்கிருந்து சென்றாள் மஞ்சரி.
மதுவிற்கு தான் அவளது பார்வை என்னவோ செய்தது. அவளது இடத்தில் தன்னை எண்ணி பார்த்தவன், பெண்மகளின் மனவலியை தானும் உணர்ந்தான். அதேபோல் தான் சிரித்திருக்க கூடாது என்ற எண்ணம் தோன்ற, அவளிடம் உடனே மன்னிப்பை வேண்ட நினைத்தான். ஆனால் அவளோ அதற்கு முன் அந்த தெருவில் இருந்து மறைந்திருந்தாள். அடுத்ததாய் எந்த பக்கம் சென்றாள் என தெரியாததால், தன் வீட்டை வந்தடைந்தான் மது. அவளது பார்வையும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணமுமே அவனை வேறு எதிலும் கவனத்தை செலுத்த விடாமல் செய்ய, அவளை தேடி அந்த தெருவிற்கு சென்றான் மது. ஒருவாரமாய் சென்ற நிலையில் மீண்டும் மதுவின் கண்களில் பட்டாள் அவள். ஆனால் இம்முறை நடந்து வந்தாள். அவனை கண்டதும் வேக எட்டுக்களில் எதிரே வந்து நின்றவளை பார்த்ததும், அவனது கால்கள் அனிச்சையாய் ஓர் அடி பின்னே வைத்தது.
மது முதன் முதலாய் ஒரு பெண்ணின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கிறான். அவளது மைவிழிகளும், சிவந்த முகமும், துடிக்கும் இதழ்களும் அவனது இதயத்துடிப்பை அதிகரித்து விட்டிருக்க, முகத்தில் வியர்வை துளிகள் பூக்க துவங்கின. மது பதற்றத்துடன் அவளை ஏறிட, “உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்னை பாத்து சிரிச்சிருப்ப?…” என்ற அவளது எதிர்பாரா கேள்வியில் உண்மையில் அவன் திகைத்து தான் போனான். அவசர அவசரமாய் மதுவின் இதழ்கள், “ஸாரி…” என உதிர்க்க, இப்போது திகைப்பது அவளின் முறையாயிற்று. அவன் மன்னிப்பை வேண்டுவான் என்று அவள் நிச்சயம் எதிர்பார்க்க வில்லை. தன்னுடைய நடவடிக்கைக்கு எதாவது சண்டையிடுவான் என நினைக்க, மதுவின் இந்த செயல் மஞ்சரிக்கு வியப்பை அளித்தது. அவனது பதற்றத்தையும் திணறலையும் கண்டவளுக்கு மதுவின் அசைவுகள் சுவாரஸ்யமாய் இருக்க தானாக புன்னகை மலர்ந்தது.
“அச்சச்சோ பயந்துட்டியா என்ன?…” என வினவியவளிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவன் விழிக்க, மஞ்சரி சட்டென்று சிரித்து விட்டாள். “சரி சரி, பயப்படாத…” என அவளது ஒருகை நீண்டு மதுவின் தோளை தொட, அனிச்சையாய் அவன் விலகி நின்றான். அதில் மேலும் வியந்தவள், “நீ இதுக்கு முன்னாடி பொண்ணுங்கட்ட பேசுனதே இல்லியா?…”
“இல்ல…” மெல்லிய குரலில் சொன்னவனிடம், “பொய் சொல்லாத…” என்றதும், சின்னதாய் சிரித்துவிட்டு அவ்விடம் விட்டு கிளம்பினான் மது. ஒரு பெண் வெகு இயல்பாக பழகும் போது, இரு சொற்கள் பேசுவதற்கே தடுமாறும் தன்னை நினைத்தே சிரித்து கொண்டான். ஏதோ மனம் புதுவிதமாய் உணர, அடிக்கடி அந்த தெருவிற்கு செல்ல துவங்கினான். அவளை சந்தித்த இடத்திற்கு சென்றாலே, மனம் உற்சாகமாவதை உணர்ந்தான் மது. அதற்கான காரண காரியம் ஆராய தோன்றவில்லை. மனதிற்கு பிடித்திருந்தது அவ்வளவே, தனக்கு தோன்றியதை செய்து கொண்டிருந்தான். பலநாட்கள் அவள் கண்ணில் படாவிட்டாலும், அவனை காணும் சில நாட்களில் தானாக வந்து அவனிடம் பேசி விட்டு செல்வாள் மஞ்சரி.
ஆரம்பத்தில் சிறு சிறு பேச்சுக்களில் துவங்கிய அவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக உருவம் பெற்றது. மஞ்சரிக்கு அவனை பிடிக்க முக்கிய காரணம் மதுவின் ஓவியத்திறன். அவனது ஓவியங்களால் வெகுவாய் ஈர்க்க பட்டவள், அதற்காகவே அவனை நேசிக்க துவங்கினாள். மதுவிற்கோ அம்மம்மா அலமேலுவிற்கு பின், தன்மேல் அன்பை காட்ட ஆள் கிடைத்து விட்டதாய் ஓர் மனநிறைவு. மஞ்சரியுடன் இருக்கும் தருணங்களில் மிகமிக மகிழ்ச்சியாய் உணர்ந்தான். அருகில் அமரும் போது அவளின் வாசத்திலும், தன்னோடு கைகோர்க்கும் நொடிதனில் அவளது தொடுகையிலும், சிலநேரங்களில் அவனை தீண்டிச்செல்லும் பெண்ணவளின் மூச்சுக்காற்றிலுமே பூரித்து போனான் மது. தன்னவளாய் ஒரு பெண், தனக்கே தனக்காய் மட்டும் ஒருவள் என்ற எண்ணமே மஞ்சரியிடம் அளவில்லாத காதல் கொள்ள வைத்தது. அவளது சிறு சிறு அசைவுகளையும் தனக்குள் பதிவு செய்பவன், மஞ்சரியிடம் தெரியும் நுண்ணளவு மாற்றத்தையும் உடனே கண்டு கொள்வான். இருவரது வீட்டிற்கும் தெரியாமலேயே இவர்களது காதல் வேரூன்றி வளர்ந்திருந்தது.
நாட்கள் நகர்வில் மதுவின் பழக்க வழக்கங்களும், திரையுலக நபர்களிடம் அவனுக்கு இருக்கும் அறிமுகமும் தெரிந்து, மஞ்சரி அவனை மனதளவில் மேலும் நெருங்கினாள். அவள் இல்லாது, தான் இல்லை என்ற நிலைக்கே வந்து விட்டிருந்தான் மது. அவளுடனான எதிர்கால வாழ்வை எண்ணி, தன் நிதானம் தொலைத்து கனவுகள் பல கண்டு, சிறு சிறு ஆசைகளில் உழன்று, கற்பனைகள் பல வளர்க்க துவங்கினான். அதை தன்னவளிடம் பகிர்ந்து கொள்ளவும் செய்தான். மஞ்சரியின் ஆலோசனையின் பெயரில் அவளது விருப்பத்திற்காக, தனது ஓவியங்கள் அனைத்தையும் திரட்டி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தான் மது. ப்ரணவ்வின் மூலமாக திரைஉலக பிரபலங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தான். மஞ்சரியும் அவனுக்கு துணையாய் இருந்து அனைத்து உதவிகளையும் செய்தாள். அனைத்தும் நன்றாகத்தான் நடந்து கொண்டிருந்தது, கண்காட்சி நாளின் விடியல் வரை.
அன்று தன்வாழ்வின் முக்கிய நிகழ்வின் துவக்கத்தை எதிர்நோக்கி சென்ற மதுவிற்கு, அவனது வாழ்வையே தழைகீழாக மாற்றும் சம்பவம் அங்கே நடந்து முடிந்திருந்தது. மது ஏற்பாடு செய்திருந்த அரங்கத்தின் அருகே இருந்த ஆடையகத்தில், இரவில் ஏற்பட்ட மின்கசிவால் நெருப்பு பற்றியிருக்க, அது அடுத்தடுத்து இருந்த கட்டிடங்களிலும் பரவி, பெரும் சேதத்தை விளைவித்திருந்தது. நெருப்பின் அக்னியில் மதுவின் ஓவியங்கள் அனைத்தும் தன் அடையாளத்தை தொலைத்து சாம்பலை பூசிக்கொண்டிருந்தன. கண்களால் காண்பதை அவன் நம்ப முடியாமல் தவிக்க, விபரம் அறிந்து வந்த மஞ்சரிக்கும் பெருத்த ஏமாற்றமே.
மதுவின் ஓவியங்கள் மூலம் வரவிருந்த பணம் கிடைக்காது, திரையுலக பிரபலங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் நழுவி போன வருத்தத்தில் அவள் இருக்க, மது தன் உணர்வுகளில் கலந்து உருபெற்றிருந்த ஓவியங்கள், உயிர்ப்பை தொலைத்து இருந்ததை நினைத்து நினைத்து கண்ணீர் வடித்தான். அலமேலு மங்கை உயிர்பிரிந்த போது சிறுவயது பாலகனாய் இருந்தவன், எப்படி தன்னை அநாதையாய் உணர்ந்தானோ அதே வலியை சற்றும் குறையாது இன்றும் அனுபவித்தான் மது. தோள்சாய்த்து ஆறுதல் சொல்ல வேண்டிய அவனது வருங்கால துணை எட்டியே நின்றுவிட, வலியை பகிர்ந்து கொள்ள ஆளில்லாது தவித்தான். எவரிடமும் எதையும் வாய்விட்டு சொல்லியோ கேட்டோ பழகாதவன், இப்போதும் எதையும் வார்த்தைகளாய் வெளியிடாது தன் மனதிற்குள்ளேயே புதைத்து கொண்டான். அதிகப்படியான மன அழுத்தத்தால் மதுவிற்கு குணமாகி இருந்த வலிப்பு நோய், பதினேழு வருடங்களுக்கு பின் மீண்டும் ஏற்பட்டு விட, மொத்தமாய் தளர்ந்து போனான். அவனது நிலையை நேரில் கண்ட மஞ்சரிக்கோ பயம் தொற்றிக் கொண்டது. மது தன்னை ஏமாற்றி விட்டதாய் நினைக்க துவங்கினாள்.
வரதனுக்கு விபரம் தெரிந்து அவரும் அதிர்ந்தார். ப்ரணவ்வின் மூலம் தகவல் அறிந்து மருத்துவமனை வந்து சேர்ந்தார். தன் வேலைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு மதுவின் உடனிருந்து அவனை கண்ணும் கருத்துமாய் கவனித்து கொண்டார். மதுவை காண வந்த மஞ்சரி, “உனக்கு ஃபிட்ஸ் வருமா மது?…” அவளது குரலில் அந்நிய தன்மையை உணர்ந்தவன் மெல்லிய குரலில், “இல்ல…”
“அப்போ நேத்து நடந்ததுக்கு பேரென்ன?…”
“சின்ன பிள்ளைல எனக்கு இந்த ப்ராப்ளம் இருந்தது. ஒன்பது வயசுலயே குணமாயிடுச்சு…”
“ஏன் என்கிட்ட நீ இதை பத்தி சொல்லல..”
“நானே அதை மறந்துட்டேன் மஞ்சு. இத்தனை வருஷமா நார்மலா தான் இருந்தேன். இப்டி திரும்ப இந்த ப்ராப்ளம் வரும்ன்னு நான் நினைக்கல…”
“எதுவா இருந்தாலும், நீ என்கிட்ட சொல்லீருக்கணும் மது…”
“இப்ப சொல்லாதனால என்னாயிடுச்சு?…”
“எனக்கு பயமா இருக்கு மது, உன்னோட எப்டி நான் இயல்பான ஒரு வாழ்க்கை வாழ முடியும்?…” அவளது சொற்கள் மதுவின் தன்மானத்தை சீண்டிவிட, அதை ஏற்க இயலாது அவளை ஆழ்ந்து பார்த்து, “நீ என்ன சொல்றன்னு புரியல மஞ்சு?…”
“நிஜமாவே உனக்கு புரியலையா, இல்ல புரியாத மாதி நடிக்கிறியா?…”
தன் எதிரில் நிற்பவளின் மனதில் இருப்பதை ஊகித்து கொண்டு, அவன் அமைதிகாக்க, “எதாவது பேசு மது…”
“நான் பேச எதுவும் இல்ல, உனக்கு தான் நிறைய பேச வேண்டி இருக்குன்னு நினைக்கிறேன்…” ஒரு பெருமூச்சை எடுத்துக்கொண்டவள், “ஓகே ஃபைன், என்னோட மனசுல இருக்குறத நான் சொல்லீடுறேன். உனக்கு எப்போ ஃபிட்ஸ் வருமோன்னு நினச்சு, பயந்து பயந்து என்னால ஒரு வாழ்க்கை வாழ முடியாது மது. உன்னோட இந்த ப்ராப்ளம் நாளைக்கு நம்ம லைஃப்ப எந்தளவுக்கு பாதிக்கும்ன்னு தெரியல. அத்தோட என்னோட அம்மா ப்பா உன்னை மாதி ஒருத்தனை எப்டி மாப்பிள்ளையா ஏத்துப்பாங்க. நானும் நீயும் ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழ முடியும்ன்னு எனக்கு தோணல. அதுனால…” அவள் தயங்கி நிறுத்த, “அதுனால…” என எடுத்துக்கொடுத்தான் மது. அவள் மெல்லிய குரலில், “நாம பிரிஞ்சுடலாம், அதுதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது….” விரக்தி முறுவல் ஒன்றை உதிர்த்தவன், “உனக்கு நல்லதுன்னு சொல்லு. எனக்கு எது நல்லதுன்னு எனக்கு தான் தெரியும். அது உனக்கு தெருஞ்சிருக்க வாய்ப்பில்ல, தெருஞ்சிருந்தா நீ இப்டி பேசீருக்க மாட்ட. விருப்பம் இல்லாத ஒருத்தர வற்புறுத்தி என்பக்கம் நிக்க வைக்கிறதுல எந்த பிரையோஜனமும் இல்ல. அப்டி செஞ்சா என்னை நானே ஏமாத்திக்கிறதுக்கு சமம். நான் ஏமாளியா இருக்க விரும்பல. நீ உன் விருப்பப்படி செய்…” என மதுவின் நினைப்பதை பேசிவிடும், இயல்பான குணத்தினால் அவன் உரைத்து விட, நொடியில் தன்னை தூக்கி எறிந்து விட்டதாய் எண்ணிய மஞ்சரி, அவனை வெட்டும் பார்வை பார்த்துவிட்டு வெளியேறினாள்.
அதுவரை மதுவிடம் இருந்த மனதைரியம் தொலைந்து போனது. எவரும் இல்லாது தான் மட்டுமே இருளில் நிற்பதாய் தோன்ற மனம் பயம் கொண்டது. சில மாதங்களில் பழகிவிட்ட மஞ்சரியின் அன்பும் அருகாமையும் இனி தனக்கு கிடையாதோ என்று எண்ணும் போதே தன்னுடலில் இருந்து உயிர் பிரிவதை போல் உணர்ந்தான். அவள் இல்லாது தன்னால் வாழ இயலுமா என்ற கேள்வி அவனை அச்சுறுத்த, விடை காண இயலாது தவித்தான். தனிமை அவனை கொல்லாமல் கொல்ல, தன் இயல்புக்கு மாறாய் மஞ்சரியை தேடி சென்றான் மது. மருத்துவமனை வாயிலில் அவளை பிடித்தவன், “மஞ்சு ப்ளீஸ் என்னை விட்டு போகாத, என்னால நீ இல்லாம இருக்க முடியாது மா. உனக்கு எந்த பயமும் வேணாம். நான் நிச்சயம் உன்னை நல்லா பாத்துக்குவேன். உன் அம்மா ப்பாட்ட நானே வந்து பேசுறேன், மஞ்சு ப்ளீஸ்…” கண்களில் நீருடன் கேட்டவனை கண்டு கொள்ளாதவள், “விருப்பம் இல்லாதவங்கள, உன்பக்கத்துல நிக்க வக்க மாட்டேன். ஏமாளியா இருக்க விரும்பலன்னு சொன்ன?…”
“அது ஏதோ என்னை அறியாம சொல்லீட்டேன். நான் பேசுனது தப்பு தப்பு. ஸாரி மஞ்சு, ஸாரி ஸாரி. ப்ளீஸ் மா, போகத மா ப்ளீஸ்…” என அனைவரின் முன்பும் மண்டியிட்டு அவளது கையை பற்றி, கெஞ்சிக்கொண்டிருந்தான் மது.
அவனையே பார்த்தவள், “சரி நான் உன்னை விட்டு போகல, உன்கூடவே இருக்கேன். எங்க வீட்லயும் நானே பேசுறேன். எனக்குள்ள ஒரே ஒரு கேள்வி இருக்கு, அதுக்கு மட்டும் பதில் சொல்லு போதும். என்ன சொல்றியா?…” எழுந்து நின்று கண்களை துடைத்து கொண்ட மது, வேகமாய் தலையாட்டி, “கேளு மஞ்சு, கண்டிப்பா சொல்றேன்…’
“இனிமேல் உனக்கு, இந்த மாதி ஃபிட்ஸ் வராதுன்னு உறுதியா சொல்ல முடியுமா?…” அவன் விடையின்றி இயலாமையில் மௌனமாய் நிற்க, “பதிலில்லாத கேள்வி நீ மது, உனக்கு என்னை பதிலாக்க முயற்சி பண்ணாத. நான் தியாகியும் இல்ல, எனக்கு அந்த அளவுக்கு பெரிய மனசும் இல்ல…” அந்த நொடி, தனது வாழ்க்கைக்காக பொது இடத்தில் ஓர் பெண்ணிடம் கெஞ்சி கொண்டு நிற்பதை அவமானமாய் உணர்ந்தான் மது. இத்தனை வருடங்களாய் தனிமையிலேயே வாழ்ந்தவன், இனிவரும் காலங்களையும் அவ்வாறே கடக்க முடியாதா என்ன?. அவனது மூளை கேள்வி எழுப்ப, மனமும் அதற்கு செவி சாய்த்தது. காலநிலை மாற்றங்களை போல தன் காதலையும் கடக்க முடிவு செய்தவன் நிதானமாய் அவளிடம், “எப்பவும் பதிலில்லாத கேள்வி தான் நான். என்னைக்கும் அதே மாதிரியே இருந்துக்குறேன். எனக்கான கேள்விக்கு நீ பதில் இல்லைன்னு இந்த செகன்ட், நான் முழுசா உணர்ந்துட்டேன். உன்னோட ஃபியூச்சர்க்கு பெஸ்ட் ஆஃப் லக்…” என்றவன் தனக்கான அறையை நோக்கி நடந்தான்.
மஞ்சரி அங்கிருந்து வெளியேற, அதுவரை நடந்த அனைத்தையும் ஓரமாய் நின்று பார்த்து கொண்டிருந்த வரதன், மகனை தேடி சென்றார். அவனது அறைக்கதவு உட்புறமாய் தாழிடப்பட்டிருக்க, வெளியிலேயே அமர்ந்து கொண்டார். தன் மகன் உள்ளே அழுது கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது. அதை எவன் எவருக்கும் காட்ட விரும்பவில்லை என்று உணர்ந்தவர், அவனாக கதவை திறக்கும் வரை காத்திருந்தார். அரை மணிநேரம் சென்று கதவை திறந்தவனின் முகம், தெளிவின்றி இருந்தது. எதையும் கேட்டு அவனை காயப்படுத்த விரும்பாது, அமைதியாக இருந்து விட்டார். இதோ இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. மஞ்சரிக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்து விட்ட செய்தியை அறிந்தான் மது.
மஞ்சரி என்பவள், அவனது கடந்த காலமாக மாறி நினைவுகளில் இருந்து மறைந்து விட, அவள் கொடுத்து விட்டு சென்ற காயத்தின் தழும்புகள் மட்டும் அழியாத வடுக்களாக மாறிப்போயின மதுவின் மனதினில். தன் தூரிகையின் துணையை நாடி, காதல் எனும் வலியில் இருந்து விலகி வந்துவிட்டான் அவன். விலகி தான் வந்தானே தவிர இன்னமும் மீண்டு வரவில்லை. தனக்கான வாழ்க்கையாய் அவன் கண்ட கனவுகள், கற்பனைகள், ஆசைகள் அனைத்தும் மதுவின் ஆழ்மனதில் அழியா நினைவுகளாய் துயில் கொண்டுள்ளன. அவை விழித்து விடும் நாட்களும் நெருங்கி கொண்டிருக்க, அதனால் ஏற்படும் விளைவுகளை மதுவினால் எதிர் கொள்ள இயலுமா என்று காலம் தான் தீர்மானிக்க வேண்டும். வெறும் கேள்வியாய் இருப்பவனுக்கு பதிலானவள் வந்து சேரும் நாளுக்காய் காத்திருப்போம்.
