மயங்குவதேனோ மதுரவனே!…

This entry is part 4 of 7 in the series மயங்குவதேனோ மதுரவனே

மயங்குவதேனோ மதுரவனே

மயங்குவதேனோ மதுரவனே!…

மயங்குவதேனோ மதுரவனே!…

மயங்குவதேனோ மதுரவனே!…

மயங்குவதேனோ மதுரவனே!…

மயங்குவதேனோ மதுரவனே!…

மயங்குவதேனோ மதுரவனே!…

மயங்குவதேனோ மதுரவனே!…

மயங்குவதேனோ மதுரவனே!…

மயங்குவதேனோ மதுரவனே!…

மயங்குவதேனோ மதுரவனே!…

மயங்குவதேனோ மதுரவனே!…

மயங்குவதேனோ மதுரவனே!…

மயங்குவதேனோ மதுரவனே!…

மயங்குவதேனோ மதுரவனே!…

மயக்கம் 3…
ஒன்றரை மாதங்களுக்கு பின்..
கணவன் சந்திரனுடன் தன் புகுந்த வீட்டில் அடியெடுத்து வைத்தாள் சஹானா. அவன் உடன் வந்தாளே தவிர அவனது கைப்பற்றி வரவில்லை. திருமண மேடையில் கன்னியின் முகம் பாராமல் மாங்கலயம் பூட்டியவன், அக்னியை சுற்றி வரும் நேரம் மட்டுமே கரம் பற்றி இருந்தான். அத்தோடு தன்கடமை முடிந்ததென விலகி கொண்டான். ஆரத்தி எடுத்த சௌந்தரம் மருமகளை, “வலது கால் வச்சு உள்ள வாம்மா…” என சொற்களால் வரவேற்க, வரதராஜன் புன்னகையால் வரவேற்றார். பூஜை அறையில் விளக்கேற்றும் வைபமும், பால் பழம் சாப்பிடும் சம்பிரதாயமும் நடந்து முடிய, அடுத்த நொடியே கட்டி வந்த மனைவியை விட்டுவிட்டு உடைமாற்றி கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினான் புது மாப்பிள்ளையானவன்.
சந்திரன் நேரே சென்றது வித்யா பணிபுரியும் அலுவலகத்திற்கு தான். தன்எதிரே வந்து நின்ற அவனை கண்டவள், ஒரு நொடி அதிர்ந்து, பின் அவசரமாய் எழுந்து வெளியே வந்தாள். “இங்க என்ன பண்ற சந்திரா?…” அவளது குரல் சீறலாய் வெளிவர, “உன்னை பாக்கத்தான் வந்தேன் வித்யா…” அவள் புரியாமல் பார்த்து, “எதுக்கு?…”
“லவ் யூ வித்யா, ஐ மிஸ் யூ. என்னால நீ இல்லாம வாழ முடியாது. பிளீஸ் என்னோட வந்துடு…”
“இதென்ன முட்டாள் தனம் சந்திரா…”
“என்னோட காதல் உனக்கு முட்டாள் தனமா தெரியுதா?…” என்றவனின் வார்த்தைகள் வலியில் தோய்ந்து வெளிவந்தன. வித்யா கலங்கிய கண்களுடன், “உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. நீ இப்போ இன்னொருத்தியோட ஹஸ்பெண்ட் சந்திரா. நான் எப்டி உன்கூட வர முடியும்?…”
“தாலி கட்டிட்டா மட்டும் அது கல்யாணம் ஆய்டாது வித்யா…”
“அப்போ தாலி கட்டாம வாழ்ந்தா அதுக்கு பேரு கல்யாணமா?…”
“நீ ஏன் இப்டி பேசுற?…”
“நீதான் புருஞ்சுக்காம பேசுற. நான் இப்போ உன்கூட வந்தா, அதுக்கு பேரே வேற சந்திரா. நான் என்னை பெத்தவங்களோட கவுரவத்த காப்பாத்தணும்ன்னு நினைக்கிறேன். உனக்குமே அந்த கடமை இருக்கு தான?…”
“வித்யா ப்ளீஸ், நான் எப்டிடி நீ இல்லாம?…”
“வாழ பழகிக்கோ சந்திரா…”
அவனது கண்களும் கலங்கி விட்டிருந்தது. “உன்னை கட்டிபிடிச்சிருக்கேன், உன்கிட்ட இருந்து முத்தம் வாங்கீருக்கேன் வித்யா. இன்னொரு பொண்ணுகிட்ட போய் எப்டி டி?…”
“அவ யாரோ ஒரு பொண்ணு இல்ல சந்திரா, உன்னோட மனைவி. நீ தொட்டு தாலி கட்டுனவ…”
“நான் தாலி மட்டும் தான் கட்டுனேன், தொட எல்லாம் இல்ல…” வீம்பாய் பதில் சொன்னவனை பார்த்து அந்நிலையிலும் வித்யாவிற்கு சிரிப்பு வந்தது. கடந்த ஒன்றரை மாதங்களாய் நடந்து வருவது இதுதான். தாயின் சொல்லையும் மீற முடியாது, மனதார காதலித்த வித்யாவையும் விட இயலாது இருதலை கொள்ளி எறும்பாய் தவித்து கொண்டிருக்கிறான் சந்திரன். ஆடவனின் மனநிலையை உணர்ந்த வித்யாவோ, தன் தாயின் உடல் மற்றும் மனநிலையை கருத்தில் கொண்டு தன்காதலை மறந்து விட முடிவெடுத்து விட்டாள். சந்திரன் தினம் அவளிடம் வருவதும், பேச முயற்சிப்பதும், ஒவ்வொரு முறையும் வித்யா அவனுக்கு புரிய வைக்க முயல்வதுமாக நாட்கள் நகர்ந்தன. முதல்நாள் கூட அவள் அரைமணி நேரம் பேசியதின் விளைவு தான், இன்று காலை சந்திரன் சஹானாவின் கழுத்தில் மாங்கல்யம் பூட்டியது.
வித்யா நிதானமாய், “நீ என்னை பாக்க வந்தது தப்பு சந்திரா, முதல வீட்டுக்கு போ…” என்க சந்திரன், “வித்யா நான் உன்னை தொட்டிருக்கேன். அப்போ நீதான என் மனைவி?. நாலு மாசத்துக்கு முன்னாடியே நமக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு தானே அர்த்தம்?…” அவனை கனல் பார்வை பார்த்தவள், “என்ன வார்த்தை பேசுற சந்திரா?…”
“நான் உன்னை கட்டி பிடிச்சிருக்கேனே?…” மீண்டும் அதிலேயே வந்து நின்றவனிடம் வித்யா, “ஆனா நான் உன்னை மட்டுமே கட்டிபிடிக்கலையே?…” அவன் அதிர்ந்து பார்க்க, “தினமும் பக்கத்து வீட்டுல இருக்க நாலு வயசு பையன கட்டிபிடிக்கிறேன். அவனுக்கு தினமும் நாலஞ்சு முத்தம் கொடுக்குறேன் சந்திரா…”
“அவனும் நானும் ஒன்னா வித்யா…”
“நான் அந்த மனநிலைக்கு எப்பவோ வந்துட்டேன் டா…” அவன் பரிதாபமாய் பார்க்க, வித்யா மெலிதாய் புன்னகைத்தாள்.
சந்திரனின் கைப்பிடித்து அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தாள். அவன் பேச வாயெடுக்க அதற்கு தடைவிதித்தவள், “முதல நான் பேசுறத கேளு, அதுக்கு அப்புறம் நீ என்ன வேணும்ன்னாலும் முடிவெடு ஓகேவா?…” அவன் மௌனமாய் தலையசைக்க, “உனக்கே தெரியும் சந்திரா, எங்கம்மாக்கு நான் மட்டும் தான் இருக்கேன். என்னைத்தவிர அவங்களுக்கு வேற யாருமே இல்லடா. எனக்கு ஒன்னுன்னாலோ, இல்ல நான் ஏதாவது தப்பு பண்ணீட்டாலோ, அவங்களால தாங்கிக்க முடியுமா சொல்லு…” அவன் முடியாது என்பது போல் தலையசைக்க, “உனக்கும் உங்க அம்மான்னா ரொம்ப பிடிக்கும் தான?. ஒருவேள நீ எதாவது பெரிய தப்பு பண்ணா அவங்க ஏத்துப்பாங்களா?…” சிறு குழந்தையை போல் மெலிதான குரலில், “ஏத்துக்க மாட்டாங்க…”
“இப்ப நீ அதத்தான் செய்ய நினைக்கிற சந்திரா. நாம ஒருத்தர ஒருத்தர் லவ் பண்ணோம், நம்ம வீட்ல சம்மதிப்பாங்கன்னு நினைச்சோம். ஆனா உங்கம்மாக்கு என்னையும் என்னோட குடும்ப சூழலும் பிடிக்கல, கல்யாணத்துக்கு மறுத்துட்டாங்க. இப்ப நீ உங்க அம்மாக்கு பிடிச்ச பொண்ண கல்யாணமும் பண்ணீட்ட. இப்ப போய் நானும் நீயும் சேரனும் நினைச்சா, அது தப்பில்லயா?. ரெண்டு குடும்பமும் ஊருக்கு முன்னால அசிங்கப்படும். அதோட அந்த பொண்ணை பத்தி நினச்சு பாத்தியா?. நம்ம காதலுக்காக இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய ஏன் கேள்விக்குறி ஆக்கணும். பாவம் டா அந்த பொண்ணு. என்னால என்னைப்போலவே இருக்க இன்னொரு பொண்ணுக்கு துரோகம் பண்ண முடியாது சந்திரா, ப்ளீஸ் டா….” என நீளமாய் பேசி முடித்தாள் வித்யா.
சந்திரன் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க, “நான் தப்பா எதுவும் சொன்னேனா?…”
“இல்ல, ஆனா உன்னை பாக்காம நான் எப்டி டி…”
“தொடக்கம்ன்னு ஒன்னு இருந்தா, முடிவுன்னு ஒன்னு இருக்கும். இன்னையோட உனக்கும் எனக்குமான காதல் முடிஞ்சு போச்சு. உனக்காக ஒருத்தி, உன் வீட்ல இருக்கா. எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் என்னோட நினைப்பை அழிச்சுட்டு, அவள நினைக்க ஆரம்பி. இப்போ வீட்டுக்கு போ, இனிமேல் என்னை பாக்க வராத…” அவன் எதுவும் பேசும் முன் அங்கிருந்து அவசரமாய் ஓடி, அலுவலக ஓய்வறைக்குள் புகுந்து கொண்டாள் வித்யா.
அதுவரை சேர்த்து வைத்திருந்த தைரியமும் உறுதியும் சந்திரனிடம் பேசியதிலேயே மொத்தமாய் கரைந்து விட, பீறிட்டு வந்த அழுகையை அவனுக்கு காட்டாதிருக்க ஓடி வந்து விட்டாள். அவனிடம் சொல்லியதை எல்லாம் மீண்டும் மீண்டும் தனக்குள்ளே சொல்லி கொண்டாள். சந்திரனிற்கு திருமணம் முடிந்து விட்டது,  இனி தனக்கும் அவனுக்கும் எந்த உறவும் இல்லை என நுறு முறைக்கும் மேல் சொல்லி சொல்லி  தன் மனதில் பதிய வைத்தாள். மனவலி குறையும் மட்டும் அழுது தீர்த்து விட்டு, சந்திரனின் காதலியை அங்கேயே தொலைத்து விட்டு, இந்திராணி மாரியப்பனின் மகளாக மட்டுமே வெளியே வந்தாள், வித்யா.
சஹானாவிற்கு புது இடமும், சூழலும், புகுந்த வீடும் ஒருவித அச்சத்தை கொடுத்தது. எப்போதும் தந்தையின் சொல்லுக்கு மறுப்பு சொல்லாது தலையாட்டியே பழகியவள், இங்கு மாமியார் சௌந்தரத்தின் சொல்லை என்ன ஏதென்று கேட்காமல் செய்தாள். வீட்டிற்கு வந்ததும் விட்டு சென்ற கணவன், இரவு நெருங்கிய பின்பும் இன்னும் வந்து சேர வில்லை. எவரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை. வீட்டில் இருக்கும் உறவினர்களை சௌந்தரமும் வரதனும் கவனிக்க, மதுவோ திருமணம் முடிந்த உடனே மண்டபத்திலிருந்தே கிளம்பி சென்று விட்டான். என்ன செய்வது என்று தெரியாது கூடத்தில் ஓர் ஓரமாய் அமர்ந்திருந்தாள் சஹானா.
மருமகளின் அருகே வந்த சௌந்தரம், “என்கூட வாம்மா…” என அழைத்து சென்றார். “இது சந்திரனோட ரூம். குளிச்சுட்டு துணிய மாத்திக்கோ, உன்னோட பொருள் எல்லாம் உள்ளதான் இருக்கு…” என சொல்லி சென்றார். அவள் தயாராகி வரும் போது, உறவினர்கள் ஒவ்வொருவராய் கிளம்பியிருக்க வரதன், “வாம்மா சஹானா, வந்து சாப்டு…” எனவும் சமையல் மேஜைக்கு வந்தாள். வேலைக்கார பெண் உணவை பரிமாற, மாமியார் மாமனாருடன் உணவை முடித்துக்கொண்டாள். கணவனை பற்றி கேட்க ஆசையாய் இருந்தது. சௌந்தரத்தின் அதட்டலான குரலில் அவரிடம் கேட்க நா எழவில்லை. மாமனாரிடம் போய் எப்படி கேட்பது என்ற சங்கடத்துடன் எதுவும் கேட்காமல் அமைதியாகவே இருந்து விட்டாள். 
சௌந்தரம், “ரூம்ல போய் இரு சஹானா, சந்திரன் கொஞ்ச நேரத்துல வந்திடுவான்…” என அனுப்பி வைத்து விட்டு, மகனை கைபேசியில் அழைத்து உடனே வீட்டிற்கு வரும் படி கட்டளை இட்டார். அடுத்த அரைமணி நேரத்தில் அவன் வீட்டிற்கு வந்து சேர, “ரூமுக்கு போ சந்திரா, இந்த காதல் களிமண்ணெல்லாம் தூக்கி போட்டுட்டு ஒழுங்கா குடும்பம் நடத்துற வழிய பாரு…” என மகனிடம் மிரட்டலாய் மொழிந்து விட்டு தன் அறைக்குள் சென்றார் சௌந்தரம். அவன் தந்தையை வலியுடன் பார்க்க, வரதன் தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பதாய் அங்கிருந்து நகர்ந்தார்.
கதவு திறக்கும் சப்தம் கேட்டு, தயக்கமும் வெட்கமும் கூச்சமுமாய் இன்னும் சில இனம் புரியா உணர்வுகளுடன், உள்ளே நுழையும் தன் கணவனை ஏறிட்டாள் சஹா. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் இருந்து இன்னும் ஒரு வார்த்தை கூட சந்திரன் அவளிடம் பேசியதில்லை. ஏன் அவளது முகத்தை கூட பார்த்ததில்லை. ஆனால் சஹாவோ, தரகர் கொடுத்த புகைப்படத்தில் அவனை கண்ட நொடியிலேயே தன் மனதை இழந்து விட்டாள். நிச்சயதார்த்த தினத்தன்று மோதிரம் அணிவிப்பதற்காக, அவளது விரல் பற்றிய அந்நொடியிலேயே அவனை தன்னவனாய், தனக்கானவனாய், கணவனாய் எண்ண துவங்கி விட்டாள். மனதிற்குள் ஆயிரம் ஆயிரம் ஆசைகள் மலையென குவிந்து கிடக்க, கணவனது ஒற்றை பார்வைக்காக ஏங்கி நின்றாள் சஹா.
பெண்ணவளின் மனநிலைக்கு அப்படியான எதிர்மறையான மனநிலையில் இருந்தான் சந்திரன். அறைக்குள் நுழைந்தவன், அங்கு ஒருவள் இருப்பதாய் கூட எண்ணாமல் நேராய் குளியலறைக்குள் புகுந்து கொண்டான். வித்யாவிடம் பேசிவிட்டு அப்படியே மனம் போன போக்கில் தன் வாகனத்திலேயே நகரம் முழுக்க வந்தவனை, சௌந்தரத்தின் அழைப்பு தான் வீடு ஒன்று இருப்பதையே நினைவுக்கு கொண்டு வந்தது. தாயின் சொல்லை ஏற்று வந்தானே தவிர கட்டுப்பட்டு வரவில்லை. குளித்துவிட்டு இரவு அணியும் மெலிதான பருத்தி உடைக்கு மாறியவன், படுக்கையில் ஒரு ஓரமாய் படுத்து சில நிமிடங்களில் உறங்கி விட்டான். மனம் வெகுவாய் சோர்ந்திருக்க, பகலெல்லாம் சுற்றி வந்தது உடலையும் சோர்வடைய செய்ய, படுத்ததும் கண்ணயர்ந்து விட்டன ஆடவனின் இமைகள். அந்த அறையில் இருக்கும் மின்விளக்கு, மேஜை, கதவு போல் சஹானாவும் ஒருபொருளாய் சமைந்திருந்தாள் அவ்வளவே. எப்போதும் எந்நிலையிலும் தனக்கு வேண்டியதை வாய்விட்டு கேட்டறியாத பேதை, இன்றும் கணவனது செய்கையின் விளக்கத்தை கேட்க தோன்றாது மௌனம் காத்தாள்.
சஹானா கணவனிடம் பெரிதாய் கொஞ்சல் கெஞ்சலை எல்லாம் எதிர்பார்க்க வில்லை தான். ஆனால் இந்த பாராமுகத்தையும் அவள் சற்றும் எதிர்பார்த்திருக்க வில்லை. எப்போதும் இறுக்கமான முகத்தோடு இருக்கும் ராணுவ வீரர் தந்தை சிவநாதனின் கண்டிப்பில் வளர்ந்தவள். திருமண ஏற்பாடு நடந்த பின்பும், நிச்சயதார்த்த நிகழ்வின் போதும் சந்திரனின் நடவடிக்கைகளை வைத்து அவனும் தன் தந்தையை போல் என நினைத்திருந்தாள். ஆனால் அவனிடம் ஒற்றை பார்வைக்கும் புன்னகைக்குமே பஞ்சமாகி போகும் என எண்ணவில்லை. மனதை குண்டூசியால் கீறியது போல் வலித்தது. இயல்பான அவளது குணமும் பொறுமையும் அவனிடம் எதையும் கேட்கவோ பேசவோ முடியாமல் செய்துவிட, கண்களில் நீரோடு தரையில் படுத்து கொண்டாள். ஏனோ கணவனவன் ஒற்றை சொல் சொல்லாமல், கட்டிலில் படுக்க அவளுக்கு மனம் வரவில்லை. எதற்காக அழுகிறோம் என தெரியாமலேயே இரவு முழுவதும் கண்ணீர் வடித்தவள், தன்னை மறந்து உறங்கி போனாள்.
பிறந்த வீட்டின் வழக்கப்படி அதிகாலை ஆறு மணிக்கே விழிப்பு தட்டி விட்டது சஹாக்கு. மெல்ல எழுந்து வந்து கணவனின் முகம் பார்த்தாள். முகம் இறுக்கமாய் இருந்தது, அதையும் தாண்டி வேறு ஏதோ ஒன்று தெரிந்தது. பாவம் அதை  புரிந்து கொள்ளத்தான் இயல வில்லை, காதல் பாடத்தின் அரிச்சுவடி கூட அறியாத அந்த பேதைக்கு. இரண்டு நிமிடங்களுக்கும் மேலாய் சந்திரனையே பார்த்திருந்தவளின் விழிகளில் தெரிந்த அவனது கன்னத்தில் காய்ந்திருந்த கண்ணீர் தடம், அவளுக்கு ஒரே நொடியில் உணர்த்தியது, தன் கணவன் தன் தந்தையை போல் அல்ல என்று. யோசனையுடனே குளியல் அறைக்குள் புகுந்தவள், தயாராகி கூடத்திற்கு வந்தாள். வரதராஜனும் அப்போது தான் விழித்து, வாயிலில் கிடந்த பால் பையை எடுத்து கொண்டு வந்தார்.
“குட்மார்னிங் மா…” என்றவரிடம், “குட்மார்னிங் மாமா…” என புன்னகைத்தவள் பாலை வாங்கி கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தாள். பாலை காய்ச்சி கொண்டிருந்த நேரம், எழுந்து வந்த சௌந்தரம், “என்ன சஹானா அதுக்குள்ள முழிச்சுட்ட?…”
“பழகீருச்சு அத்த, அதான்…”
“சரி, நம்ம மூனு பேருக்கு மட்டும் டீ போடு, சந்திரன் எழுந்ததும் போட்டுக்கலாம்…”
“சரி அத்த…” என்றவள் தேநீரை தயாரித்து எடுத்து வந்தாள். மூவரும் ஆளுக்கொன்றாய் பருக, மீதமிருந்த ஒரு கோப்பையை கேள்வியாய் பார்த்தார் சௌந்தரம். சஹா, “மது மாமாக்கு அத்த…” அவர் பதில் சொல்லாமல் எழுந்து செல்ல வரதன், “அவன் நைட் வீட்டுக்கே வரல மா, இனிமே அவனுக்காக காபி, டீ எதுவும் போடாத. மதுக்கு வேணும்ன்னா அவனே போட்டுப்பான்…” என்று சொல்லி விட்டு சென்றவரை புரியாமல் பார்த்தாள் சஹா.
சிறிது நேரத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்மணி வந்து வேலைகளை கவனிக்க துவங்க, சௌந்தரம் சமையல் வேலையை மட்டும் மருமகளுக்கென கொடுத்து விட்டார். மாமியாரின் வாய்ச்சொல்லாக சந்திரனுக்கு பிடித்தமான வெண்பொங்கலும், சாம்பார் சட்னியுடன் இனிப்பிற்கென கேசரியை தயாரித்தாள் சஹா. அவள் வேலையை முடித்து விட்டு வெளியே வர, வீட்டிற்குள் நுழைந்தான் மது. அவனை பார்த்ததும் புன்னகைத்தவள் வெள்ளை மனதுடன், “உங்களுக்கு நைட் ஸிஃப்ட் வேலையா மாமா?…” சின்னதாய் சிரித்த மது, “எனக்கு நைட் பகல்ன்னு ஸிஃப்ட் எல்லாம் இல்ல, தோணும் போது செய்வேன். பீச்ல நைட் டைம்ல தான் ஆள் நடமாட்டம் இல்லாம இருக்கும். நேத்து பௌர்ணமி அதுனால அங்க போயிருந்தேன்…” அவனை விழிவிரித்து பார்த்தவள் கண்களில் மகிழ்ச்சியுடன், “உங்களுக்கு நிலான்னா பிடிக்குமா மாமா?…” அவன் கனிவாய் தலையசைக்க சிறுகுழந்தை போல், “எனக்கும் ரொம்ப பிடிக்கும் மாமா…” என்றவளிடம், “சரி நான் போய் ரெடியாய்ட்டு வரேன், அப்புறம் பேசுவோம்…” எனவும் தலையசைத்து விட்டு தன் அறை நோக்கி நடந்தாள் சஹானா. 
இன்னும் சந்திரன் எழுந்திருக்க வில்லை, இவளுக்கு எழுப்பவும் தோன்றவில்லை. தரையில் இருந்த படுக்கையை எவரும் அறியாமல் மடித்து வைத்தவள், தன் பொருட்களை அறையில் காலியாக இருந்த ஒரு அலமாரியில் எடுத்து வைத்தாள் சஹா. சௌந்தரம் முன்பே மகனிடம் சொல்லி வைத்திருந்ததால், சஹாவிற்காக அவன் செய்த வேலை இது ஒன்று மட்டுமே. மாமியார் சொல்லி தான் சஹா தற்போது இந்த வேலையும் செய்து கொண்டிருக்கிறாள். சுவர் கடிகாரம் மணி எட்டரையை காட்ட சௌந்தரம் குரல் கொடுத்தார். வெளியே வந்தவள் மாமியார் மாமனாருக்கு உணவை பரிமாறினாள். வயிறு நிறையவும் சௌந்தரம் கூடத்தில் தொலைக்காட்சி பெட்டியை இயக்கி அதன்முன் அமர்ந்து விட, வரதன் தங்களுக்கு சொந்தமான தரைஓடுகள் (டைல்ஸ்) தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்றார்.
சந்திரன் இன்னுமே உறக்கம் கலையாமல் இருக்க, உணவை கூட உண்ணாது அவனுக்காக காத்திருந்தாள் சஹா. அவர்களது அறையில் ஒரு கண்ணும், தொலைக்காட்சியில் ஒரு கண்ணுமாய் இருந்த மருமகளை கவனித்த சௌந்தரம், “சஹா நேராச்சு பாரு, போய் உன் புருஷன எழுப்பு…” அவள் தயங்கி நிற்க, “இதெல்லாம் இனிமேல் நீதான் செய்யணும் போ…” என்று அழுத்தமாய் கூற, வேறு வழியின்றி சென்றாள் சஹா. அவள் இரண்டு முறை அழைத்தும் அவன் விழிக்காதிருக்க, கைநீட்டி சந்திரனின் தோளில் லேசாய் தட்டினாள். பட்டென்று விழிகளை பிரித்தவன், தீச்சுட்டாற் போல் சற்று விலகி நின்றான். ஒரு நொடிக்கும் குறைவான பொழுதில் அவளை பார்வையால் எரித்து விட்டு அவன் ஓய்வறைக்காள் செல்ல, சஹா தான் அவனது செய்கையில் அதிர்ந்து போனாள். அந்த நொடி உணர்ந்து கொண்டாள் அவனுக்கு தன்னிடத்தில் எந்த விருப்பமும் இல்லையென்று. அவனது ஒற்றை பார்வையிலேயே அதை புரிந்து கொண்டாள் சஹா.
நொடியில் கண்களில் நிறைந்து விட்ட நீரை, முடிந்த வரை தனக்குள்ளே இழுத்து அடக்கி கொண்டாள். மருமகளின் முகத்தை பார்த்த சௌந்தரம் கண்ணும் காணாது இருந்து கொள்ள, சந்திரன் தயாராகி வந்தான். அவன் அணிந்திருந்த உடையே சொன்னது, அலுவலகம் செல்கிறான் என்று. வீட்டு வாயிலை நடந்தவனை சௌந்தரம், “சந்திரா சாப்டுபோ, சஹா அவனுக்கு டிபன் எடுத்து வை…” அவள் தன் கடமையை செய்ய, அவனும் கடனேயென உண்டு விட்டு கிளம்பினான். “நீ போய் ரெஸ்ட் எடும்மா…” என மாமியார் சொன்னது தான் தாமதம், அறைக்குள் சென்றவள் தன் மனவலியை தனக்குள்ளே புதைத்து, கண்ணீருடன் ஒரு மூலையில் முடங்கி கொண்டாள்.
ஒரு பல்பொருள் அங்காடியின் முகப்பில் விற்பனை பொருட்களை சரி பார்க்கும் வேலையை, மலர்ந்த முகத்துடன் செய்து கொண்டிருந்தாள் பவித்ரா. கன்னியாகுமரி வந்த ஒரே வாரத்தில் தனக்கென்று ஒரு வேலையை தேடிக்கொண்டாள். முதல் மாத சம்பளமும் வாங்கியாயிற்று. துவக்கத்தில் அவள் மேல் நம்பிக்கை இல்லாது தான் அவளுக்கு வேலையே கொடுத்தார், அந்த விற்பனை கூடத்தின் உரிமையாளர். யார் எவர் என்று தெரியாது எப்படி நம்பி வேலை தருவது என்று தயக்கம் அவருக்கு. இரண்டு நாட்கள் அவள் வேலை செய்வதை கண்காணித்தவருக்கு பவித்ராவிடம் நம்பிக்கை ஏற்பட்டு விட, அவரே அவள் தங்குவதற்கு மகளிர் விடுதி ஒன்றையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
பணம் செலுத்திய ரசீதை பெற்றுக்கொண்டு, தன்னிடம் பொருட்களை வாங்குவதற்காக வந்த அந்த பெண்ணை புன்னகையுடன் பார்த்தாள் பவித்ரா. அந்த பெண், “ஏன்கா இப்டி பாக்குறீங்க?…”
பவி, “இன்னைக்கு உன்னோட ஹஸ்பெண்ட் வரலையா மா?…” அவள் முகம் சிவந்து, “என்கூடவே இருந்தா வேலைக்கு போக வேண்டாமா?…”
“அதுசரி, உன்னை எப்டி தனியா அனுப்ப சம்மதிச்சாங்க?…”
“அவருக்கு தெரியாதுக்கா, தெருஞ்சா திட்டுவாரு…”
“அப்புறம் எதுக்கு இந்த வேல பாக்குற, வயித்துல புள்ளையோட இப்டி தனியா வரலாமா?…”
“எவ்ளோ நேரம் தான் வீட்ல சும்மாவே உக்காந்திருக்கது. அதான் நாலு நாளைக்கு ஒரு தடம் எதையாவது வாங்குறேன்ல பேர்ல இப்டி வந்து, வெளிய இருக்க மனுசங்கள பாத்துட்டு போறேன்…” எனவும் பவி சிரித்து, “நல்ல ஐடியா தான்…” என அந்த பெண் வாங்கிய பொருட்களை பையில் போட்டு கொடுத்தாள். 
எப்படியும் ஏழு மாதம் இருக்கக்கூடும், ஏனோ அந்த பெண்ணை பார்க்கும் போது சற்று பொறாமையாக கூட இருந்தது பவிக்கு. ஒருவேளை தனக்கும் இதுபோல் குழந்தை வரம் கிடைத்திருந்தால், தன் வாழ்வும் நன்றாய் இருந்திருக்குமோ?. என்ற எண்ணம் எழுந்தது. உடனே மூளை, ‘என்ன ஒரு நப்பாசை உனக்கு, அதெல்லாம் நடக்குற காரியமா?. ஒருவேள குழந்தைன்னு ஒன்னு உருவாகிருந்தா உன்னோட சேத்து அந்த பிஞ்சும் நரகத்தை அனுபவிச்சிருக்கும்…’ என அனுபவத்தை எடுத்து சொல்லி அவளுக்கு ஒரு கொட்டு வைக்க, தனது முட்டாள் தனமான எண்ணத்தை நினைத்து தனக்குள்ளே சிரித்து கொண்டாள் பவித்ரா. 
அதேநேரம் தன் அறையில் வேலையில் மூழ்கி இருந்தான் மது. பிரம்மாண்டமான மாளிகையின் முன் நைந்து கிழிந்த உடையோடு ஒரு வேளை உணவிற்காக கையேந்தி நிற்கும் சிறுமியின் ஓவியம் பாதியில் நிற்க, ஏனோ அந்த சிறுமியின் இடத்தில் தான் இருப்பது போன்றொரு பிரம்மை மதுரவனுக்கு…

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *