வேள்வி தீயில் வெந்து தணியும் காதலே
14
வேள்வி தீயில் வெந்து தணியும் காதலே !!
ஐந்து வருடங்களுக்கு பின்
இன்று
“பட்டுக்குட்டிய குளிக்க வச்சிட்டீங்களா, நான் அவனுக்கு கொஞ்சம் கேப்ப கூழ் காய்ச்சி எடுத்துட்டு வரேன்.. அதுன்னா, ரெண்டு ஸ்பூன் அதிகம் புள்ள சாப்பிடுவான் “என்று இளமையாக துள்ளித் திரிந்த சிந்து இன்று வெள்ளை முடியும் தளர்ந்து போன முகத்தோடு சமையலறை நோக்கி போக.. பரத்வாஜ் வீல் சேரில் அமர்ந்திருந்த தன் மகனை நோக்கி வேகமாக போனார்..
“அம்மா கிட்ட பேசிகிட்டு இருந்தேன் ராகவ், வர லேட் ஆயிடுச்சு குளிக்க போகலாமா?” என்று பாசமாக தன் மகன் தலையை தடவி விட.. அவன் கண்கள் மட்டும் மூடி திறந்தது..
இந்த ஐந்து வருடத்தில் அவனிடம் ஏற்பட்ட ஒரே ஒரு மாற்றம், முன்னேற்றம் இந்த ஒன்றுதான், வேண்டும் என்றால் கண்களை மூடி திறப்பான் இல்லையென்றால் அதே போல் கண்கள் திறந்தே இருக்கும்.. பரத்வாஜ் , சிந்துவின் வாழ்க்கையும் இவனோடவே முடிந்து விட்டது .. தங்களுடைய தொழில் அத்தனையையும் அதற்கான ஆட்கள் போட்டு பார்த்துக்கொண்டு, முழு நேரமும் ராகவை சுற்றியே அவர்கள் ஓட ஆரம்பித்தனர் … ஒருவர் இல்லை என்றாலும் அவனை சமாளிக்க முடியாது ஆறடி உயரம் கொண்ட ஆண்மகன் தாயின் அபார கவனிப்பில் அப்படியே உடலை வைத்திருந்தார்கள்… எத்தனை வேலை ஆட்கள் இருந்தாலும் தன் மகனுக்கு செய்வதை தன் தலையாகிய கடமையில் ஒன்றாக இருவரும் செய்தனர்.. எவ்வளவு வளர்ந்தாலும் அவன் அவர்களுக்கு மகன்தானே… நன்றாக குளித்து மணமணக்க வீல்சேரில் தள்ளிக்கொண்டு வெளியே வந்தார் பரத்வாஜ்..
இன்றைய ராகவ்!! தலைமுடியை ஒட்ட நறுக்கி மஞ்சள் நிற டி-ஷர்ட் ,தொடை அளவு ஷார்ட்ஸ்
அணிந்து சாப்பாடு மேஜையில் அமர வைத்து சிந்து அவனுக்கு உணவை அள்ளிக் கொடுத்து வாயை துடைத்து விட்டவர்.. இருவருமாக அவனை அழைத்துக் கொண்டு கோவில், குளம் என்று சுற்ற ஆரம்பித்து விட்டனர்.. ஐந்து வருடத்தில் அவர்கள் போகாத மருத்துவமனையே கிடையாது.. இக்கரையில் தொடங்கி அக்கரை வரைக்கும் காசை தண்ணியாக செலவழித்து மருத்துவர்களாக போய் பார்த்து விரக்திதான் மிஞ்சியது .. அனைவரும் சொன்ன ஒரே வார்த்தை..
அவராக சரியானால் உண்டு , இல்லை என்றால் காலத்திற்கும் இப்படியே வைத்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று முடித்து விட்டனர் அதிலும் ஒரு மருத்துவர் வேண்டுமாயின் உங்கள் மகனின் உறுப்புகளை தானம் பண்ணுங்கள்.. அதன் மூலமாக நான்கு பேர் உயிரோடு வாழ்வார்கள் என்று கூறி இன்னும் பெற்றவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்து விட , தன் மகன் குணமே ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை .. கண்ணார இப்படியே பார்த்துக்கொண்டு வாழ்ந்து விடுகிறோம் என்று அவனை கூட்டிக்கொண்டு .. கடவுள் தான் துணை இருக்க வேண்டும் என்ற உலகத்திற்கு அப்பாற்பட்ட சக்தியை நாட ஆரம்பித்து விட்டனர்..
வேறு என்னதான் அவர்களும் செய்ய முடியும் … ஏழு வருடத்திற்கு பிறகு பிறந்த மகன் ,போ என்று விடவா முடியும் .. அவர்கள் செய்த பாவத்திற்கும் , அவன் செய்த பாவத்திற்கும் சேர்த்தே பாவ மன்னிப்பு கேட்டுக் கொண்டு அலைகின்றனர் .. இன்றோடு காயத்ரி இறந்து 5 வருடங்கள் ஆகிறது…
இரவு தோட்டத்தில் ராகவ் இந்த பக்கமும் அந்த பக்கமும் பரத்வாஜ் சிந்து அமர்ந்து கொண்டனர் அவனின் திருமண போட்டோவை ராகவ் மடியில் வைத்துக் கொண்ட பரத்வாஜ், ஒவ்வொரு கதையாக கூற, சிந்து மல்லிகைப் பூவை தொடுத்து கொண்டிருந்தார்..
” காயத்ரிக்கு மல்லிகை பூவுன்னா ரொம்ப பிடிக்கும் 6 மணி ஆனா ,இந்த மல்லிகை பூவெல்லாம் தொடுத்து அவளும் தலையில வச்சுக்கிட்டு சாமிக்கும் கொஞ்சம் போடுவா , ஆனா இன்னைக்கு ஆறு மணி ஆனா இந்த பூவை பறிச்சு அவளோட போட்டோவுக்கு போடுற நிலைமையா மாறி போச்சு” என்று என்னதான் அந்த விஷயத்தை மறக்க நினைத்தாலும் அவர் இதய குமுறல் வெளியே வந்துவிட.. பரத்வாஜ் தன் மனைவியை கடிந்து கொண்டார்
“உன்னை எத்தனை தடவை சொல்லி இருக்கேன் இத பத்தி பேசாதன்னு, பாரு ராகவ் கண்ணுல கண்ணீர் வருது “என்று ராகவ் கண்ணில் வடிந்த கண்ணீரை துடைத்து விட்டார்.. காயத்ரியைப் பற்றி அழகான விஷயங்களை கூறினால் அவன் கண்களில் ஒரு சாந்தம் வரும்.. அதுவே அவள் இறப்பு பற்றி பேசினால் அவன் கண்கள் தானாக கண்ணீர் வடிக்கும் இந்த ரெண்டு அறிகுறிகள் மட்டுமே அவன் இன்னும் உயிர் வாழ்கிறான் என்பதற்கு அத்தாட்சி..
அப்படி என்ன காதல்? உயிரைக் கொடுத்த பெற்றவர்களை தாண்டி ஒரு பெண் மீது ,எவ்வளவு காதல் வைத்திருந்தால் அவள் போனதோடு தன் உலகத்தையும் இவன் நிறுத்தி இருப்பான் ,அவன் காதல் பார்த்து பிரமிக்கதான் தோன்றியது.. தொடுத்து வைத்த மல்லிகை சரத்தை காயத்ரி போட்டோவிற்கு அணிந்துவிட்டு அமர்ந்திருக்க..
ராகவ் குவாரி மேனேஜர் அந்த நாளைக்குரிய கணக்கு வழக்குகளை முடித்து பரத்வாஜ்ஜிடம் கையெழுத்து வாங்குவதற்காக உள்ளே வந்தவர் ராகவ்வை ஒரு பார்வை பார்த்துவிட்டு பரத்வாஜ் அருகில் அமர்ந்தார்..
“சார் இப்படியே இன்னும் எத்தனை வருஷத்துக்கு இருக்க போறீங்க..”
“தெரியல, ஆனா இருந்து தானே ஆகணும்” என்று கொண்டு வந்த பைல்களை கையெழுத்து போட்டு அடுக்கி வைக்க ஆரம்பித்தார்..
“சார் சுவிட்சர்லாந்துல ஒரு டாக்டர் இருக்காருன்னு சொன்னிங்களே போய் பார்த்தீர்களா ??”என்று மேனேஜர் ராகவ் மீது உள்ள நலன் கருதி கேட்க..
“ப்ச் போய் பார்த்தோம் , என்ன சொல்வார், வழக்கம் போல அவரா சரியாகுவார்னு சொல்லி அனுப்பிட்டார்.. “
“ஓஓஓ தப்பா நினைக்காதீங்க சார், எனக்கு தெரிஞ்ச ஒரு நரம்பியல் நிபுணர் இருக்கார்.. ஏன் அவர்கிட்ட நீங்க போய் பார்க்க கூடாது .. “
“அது ..
“நீங்க நினைக்கிற மாதிரி அமெரிக்கா. சுவிட்சர்லாந்துல இருக்குற மாதிரி பெரிய டாக்டர் எல்லாம் கிடையாது , ஆனால் கைராசிக்காரர் அதோட பணத்துக்காக தொழில் பண்ணாம சேவைக்காக தொழில் பண்ணிக்கிட்டு இருக்காரு, ஏழை மக்களுக்காக அவர் சம்பளத்தையும் கொடுத்து அந்த பணியை கடவுள் பணி போல செய்து கொண்டிருக்கிறார், இதுவரைக்கும் அவரால் நன்மை அடைஞ்சவங்க நிறைய பேர் .. நம்ம இந்தியாவுலேயே மிகப்பெரிய நரம்பியல் நிபுணர்கள்ல அவரும் ஒருத்தர்… இந்த வருஷம் அதுக்கான பரிசு கூட வாங்கினார்.. “
“ஓஓஓ..
“ம்ம் ஏன் அவர்கிட்ட நம்ம தம்பியை கொண்டு போய் காட்டக்கூடாது… “பரத்வாஜூக்கு சலிப்பாக இருந்தாலும், தாயக்கட்டை உருட்டுவதில் ஏன் ஒற்றைக் கட்டை தாயமாக விழக் கூடாது.. பத்து இடத்தில் முடியாதது ஒரு இடத்தில் முடிந்தாலும் அவர்களுக்கு நன்மைதானே.. சரி எத்தனையோ இடங்களுக்கு போய் பார்த்தாயிற்று. இந்த ஒரு இடத்திலும் பார்த்து விட்டால் என்ன என்று தோன்ற
“யார் சார் அது எங்க இருக்காங்க?”
“மாதவன் நியூரோ சர்ஜன் , ஜெனரல் கூட பார்ப்பார்.. இன்னும் மருத்துவ துறையில நிறைய தெரியும் , ஜார்கண்ட் மாநிலம் ஸ்வெர்னரேகா ஆறு கேள்விப்பட்டு இருக்கீங்களா?…
“இல்லையே ..
” அது பக்கத்துல உள்ள கிராமத்துலதான் அவர் இருக்கார்..
“அங்க என்ன பண்றார்??” …
” ஆற்றுல மீன் பிடிக்கிற மாதிரி,அங்க தங்கவேட்டை நடத்துவாங்க எங்க இருந்து தங்க வருதுன்னு தெரியாது ஆனா ஆற்றுக்குள்ள கற்களுக்கு இடையில் தங்க குவியல் கிடக்கும்.. சோ மக்கள் காலையிலிருந்து இரவு வரை அந்த தங்கத்தை சலிச்சு எடுப்பாங்க, அவங்க வாழ்வாதாரம் அதுதான் .. அதனால தண்ணிக்குள்ள கிடக்குற விஷப்பாம்புகள் கடிக்க வாய்ப்பு உண்டு, அதிக நேரம் தண்ணீரில் இருக்கிறதுனால அவங்களோட உடல் அடிக்கடி பாதிக்கப்படும் .. இவங்களுக்காகவே அங்க மருத்துவமும் பார்த்துக்கிட்டு அதே சமயம் தன்னுடைய நரம்பியல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியும் பண்ணிட்டு இருக்கார் .. “
“இந்தியாவுடைய டாப் நியூராலஜி டாக்டர்ல அவரும் ஒருத்தர் ஆனா அந்த பகட்டு கொஞ்சம் கூட இல்லாம ரொம்ப எளிமையான மனுஷன் ..”
“ஓ நான் கேள்விப்பட்டதே இல்லை பெரிய ஆளா சின்ன பையனா ?”
“வேணும்னா நம்ம ராகவ் தம்பி வயசுதான் இருக்கும் குடும்பத்தோட அங்கேயே தங்கியிருந்து வேலை பார்க்கிறார், ஒரு தடவை போய் பார்த்துட்டு வரலாமா நான் அவர்கிட்ட பேசி பார்க்கவா?நானும் கூட வர்றேன்..
“நல்லதுக்கு தானே சொல்றீங்க, எவ்வளவோ இடத்துக்கு போயாச்சு இதையும் போய் பாத்துட்டு வந்துரலாம், இப்பவே டாக்டர்கிட்ட பேசுங்களேன்” என்று சிந்து ஆசையில் ஓடி வந்தார். மேனேஜர் உடனே அந்த மருத்துவருக்கு .போனை போட்டு காதில் வைக்க
“ஹலோ இந்த பக்கம் நான், அந்த பக்கம் யாரு??” என்ற ஒரு குட்டி குரல் கேட்டது..
“அப்பா இல்லைங்களா தங்கம்..”
“யோவ் டாடி உனக்கு தான்டா ஃபோன் “என்று அந்த குழந்தை கத்திக் கொண்டே ஓட, சிந்து பரத்வாஜ் முகத்தில் ஐந்து வருடங்களுக்கு பிறகு சிரிப்பு .. அந்த பச்சிளம் குழந்தையின் குரல் கேட்டு..
மேனேஜர் சில விஷயங்களை பேசிவிட்டு பரதராஜிடம் கொடுக்க.. மாதவனின் பணிவான பேச்சில் ஏதோ ஒரு நம்பிக்கை ஒளி அவர்களுக்கு வந்தது..
“இது ஒன்னும் பிறவி கோளாறு இல்ல ,பிறவி கோளாறவே இருந்தாலும் இதையெல்லாம் இப்போ குணப்படுத்திடலாம், எந்த நரம்புல அவருக்கு அடைப்பு ஏற்பட்டிருக்குன்னு பார்த்தா அதற்கான சொல்யூஷன் பண்ணிடலாம், நூறு சதவீதம் சொல்ல முடியலைன்னாலும் கண்டிப்பா 50% அவர குணப்படுத்த என்னால முடியும்னு நான் நம்புறேன்.. நீங்களும் நம்பினா கூட்டிட்டு வாங்க பண்ணிடலாம்” என்று அவன் நம்பிக்கையான பேச்சில்..
“தம்பி இதுதான் எங்களுக்கு கடைசியான ஒரு வாய்ப்பு எதுவும் தோல்வி ஆயிடுச்சின்னா அவனுக்கும் கொஞ்சம் விஷத்தை குடுத்துட்டு நாங்களும் செத்து போயிடும்பா முடியல, போராடி போராடி சலிச்சு போச்சு , ஓடி விளையாண்ட என் புள்ளைய இப்படி ஜடமாக பார்த்து வலிக்குது “என்று பரத்வாஜ் கண்கள் வேதனை தாங்காது கண்ணீர் வடித்தது… அந்த பக்கத்தில் இருந்தவன் அமைதியாக அவர் சொன்னதை கேட்டுக் கொண்டு…
“ஆரம்பம்னு ஒன்னு இருந்தா எல்லாத்துக்கும் முடிவுன்னு ஒன்னு இருக்கும் சார் .. என்னை நம்பி வர்றீங்க கண்டிப்பா நல்லதே நடக்கும்னு நினைங்க.. என்னைக்கு வர்றீங்கன்னு சொல்லுங்க இங்க நீங்க தங்கிறதுக்கு ஏற்பாடு பண்ணுறேன்..
எதுக்கு தம்பி நாளை தள்ளி போடணும்,இப்பவே கிளம்பி வரோம் எங்களுக்கு அதைத் தவிர வேறு என்ன வேலை இருக்கு என்று பேசிவிட்டு வைத்தவர்கள்.. இரவே ஜார்கண்ட் செல்வதற்கு ப்ளைட் ஏறினார்கள்…
ஜார்கண்ட் மாநிலம் உங்களை அன்போடு வரவேற்கிறது அவன் மொழியில் கிடந்தது, நம்ம எங்க போனாலும் நம்ம தாய் மொழியை மறக்க கூடாது மக்களே சோ தமிழ் ஒன்லி..
( தமிழை தவிர ஒன்னும் தெரியாது ,அதை எப்படி நாசுக்காக சாமாளிக்குது )
ஸ்வர்ண ரேகா ஆறு தங்கம் விளையும் பூமியாக தகதகவென மின்னியது, பெண்கள் தாவணி போல ஒன்றை போட்டு தலையில் முக்காடிட்டு, மூக்கில் காதில் வித்யாசமான காதணி கழுத்தை அடைக்கும் ஆபரணங்கள் கையில் முறத்தை வைத்து மணலை சலித்து கொண்டும் ஆண்கள் நீரை இரைத்து வலையில் ஊற்றி கொண்டும் , தங்க வேட்டையில் இருந்தவர்கள் உள்ளே வந்த வண்ண காரை கண்டு ஒரு நிமிடம் திரும்பி பார்த்து விட்டு மறுபடியும் தங்கள் வேலையில் ஈடுபட …
“இடம் பார்கவே அழகா இருக்குல்ல” என்று சிந்து மகனை தள்ளி கொண்டு இறங்கினார்..
“சார் இதுக்கு மேல கார் மேலே ஏறாது நான் இங்கேயே பார்க் பண்ணவா?”
“ம்ம் சரி நாங்க அப்படியே இவனை அழைச்சிக்கிட்டு பொடி நடையா போறோம்” என்று அந்த அழகிய ஆற்றையும் அவர்கள் வாழ்க்கை முறையையும் பார்த்து கொண்டே மேடான இடம் நோக்கி போக ஆரம்பித்தனர் ..
“டாக்டர் மாதவன் வீடு எங்க இருக்கு ?”என்று ஒரு பெண்ணிடம் கேட்க அது பாவம் மொழி புரியாது முழிக்க…
“ஒத்து ஒத்து!! டேய் அடிச்ச கல்லை கொண்டு மண்டையை பிளந்திடுவேன் ” என்று ஒரு வாண்டு நின்ற பெண்ணை இடித்து தள்ளி விட்டு ஓடி வந்தவன் , அவனுக்கு பின்னாக மற்றொரு பெரிய வாண்டு …
“நீ ஓடினாலும் விட மாட்டேன்டியோவ் நின்னுடா மூனா கேனா!!” என்று ஒரு கல்லை தூக்கி ஏறிய …
“எப்பா நில்லுங்க இரண்டு பேரும் தமிழா?”பரத்வாஜ் குட்டி கரடியை பிடித்து அமுக்கினார்..
“ஆமா நான் தமிழ், அவன் ஹிந்தி இன்னா வேணும் பெருசு “என்றது அவர் கால் அளவு கிடந்த குட்டி வாண்டு….
” ஹாஹா டாக்டர் மாதவன் பாக்கணும்”…
“அவனா ? அதோ அந்த வீட்டுல நாயை குளிப்பாட்டிட்டு இருக்கான், போய் பாருங்க… யோவ் மாதவா உன்ன பார்க்க பெருசு இரண்டு வந்திருக்கு கூடவே ஒரு பொம்மையும் ” என்று இங்கிருந்தே குரல் கொடுக்க, ஏதோ அந்த குட்டியின் உருவத்தில் முகம் கொள்ளா புன்னகை வந்தது..
“தம்பி நீங்க யாருன்னு சொல்லவே இல்லையே…அவனை அறியும் ஆவல் இருவர் முகத்திலும்
“நேத்து வரை மைக்கல் சாக்சன் ,நாளையிலிருந்து அதானி “என்றான் சட்டை காலரை தூக்கி விட்டபடி துருதுரு கண்கள், துடுதுடு உதடு ,இரண்டு நிமிடம் கூட நிறுத்தி வைக்க முடியவில்லை நக்கல் பார்வை ,, ஏளனமாக உதட்டை வளைத்து பேசும் தோரணை அவர்களை அவனை விட்டு நகர விடவில்லை ..
“அப்ப இன்னைக்கு என்ன தம்பி ? …சிந்து கேட்டதும்
“மானே தேனே!! போட்டு நிரப்பிக்க “என்று பின்னால் கல் வர ஓடி மறைந்து விட்டான்… எங்கோ கேள்வி பட்டது போல இருக்குல்ல இதே டைலாக் ..
புதிய தொடக்கம் புதிதாக ஆரம்பம் ஆகும் !! அவன் ஐந்து வருட அமைதிக்கும் சேர்த்து புயல் அடிக்கும்…
