ரமணி Vs ரமணி

ரமணி Vs ரமணி

அத்தியாயம்14

யாரை லவ் பண்ணலாம்னு இருக்கே? ப்ரியாவையா?

நான் பொதுவா சொன்னேன்.நீ ஏன் குறிப்பா அவளை கேட்கிறாய்?

நாய் எலும்புத்துண்டை பார்ப்பது போல்தானே நீ அவளை பாக்கிறாய்! யாரும் பாக்கலைன்னு நினைக்கிறாய்.உலகம் ஒரு ஓரமா உன்னை பாத்துட்டுத்தான் இருக்கு!

அதை விடுடா! இப்ப பாய்கிட்ட என்ன பேச போறோம்?

ஒரு பேக்கரில வண்டிய நிறுத்து.ஒரு டீயை போட்டுட்டு பேசுவோம்.!

எதிர்பட்ட ஒரு பேக்கரி வாசலில் ராஜ்தூத்தை ஸ்டேண்ட் போட்ட ரமணியும் டெல்லியும் உள்ளே நுழைந்து காலியான இருக்கையில் சாய்ந்தனர்.

பேனை போட்டுட்டு அப்படியே ரெண்டு டீ கொடுப்பா! என்றான் டெல்லி.

வந்த டீ யை குடிக்க தொடங்கிய டெல்லியின் பார்வை வேறோரு இருக்கையில் அமர்ந்திருந்தவனின் மேல் நிலைத்தது.

யோவ்! அந்த கட்டம் போட்ட சட்டைய எங்கியோ பாத்த மாதிரி இருக்கு! நீ அவனை பாத்துருக்கியா? என்றான் ரமணியிடம்.

தற்செயலாக கவனிப்பது போல் கட்டம் போட்ட சட்டைக்காரனை கவனித்த ரமணிக்கு முதலில் அவனை அடையாளம் தெரியவில்லை.பெரும் முயற்சிக்கு பின் அவன் ஞாபக சக்தி கட்டம் போட்ட சட்டைக்காரனை கண்டு பிடித்தது.

இவனை நான் மனவாழைத் தோப்புல நடந்த சூட்டிங்ல சுட்ருக்கேன்! என்றான் ரமணி.

வாட்ஸ் அப் குரூப்ல வந்த வீடீயோவுல நீ இவனை சுட்டதா வீடீயோ வருது.ஆனா நீ சுட்ட ஆளு இங்க உயிரோட இருக்கான்.ஒரே குழப்பமா இருக்கு!

அப்ப நான் நடிச்சதெல்லாம் உண்மையாவே சினிமா சூட்டிங்தானோ?

அப்படியும் இருக்கலாம்.இல்லை பாதி உண்மை.பாதி பொய்யா இருக்கலாம்!

நான் போய் அவன்கிட்ட பேசட்டுமா?

இருக்கிற பிரச்சனை போதாதா? புதுசா இதை வேற ஏண்டா இழுத்து விடுற?

பேசறதால என்ன வந்துற போகுது.?

வேணாம்! இருக்கிற பிரச்சனையை முதல்ல முடிப்போம்.இதை அப்புறமா பார்ப்போம்.!

ரமணி பில்லுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்த போது அவனது போன் அடித்தது.

மறுமுனையில் பேசிய ப்ரியா வீட்டுக்காரரே எங்கிருக்கீங்க? என்றாள்.

ம்! சுடுகாட்டுல? என்றான் ரமணி எரிச்சலுடன்.

வீட்டுல இருந்திருந்தா இந்நேரம் அங்கதான் போயிருப்பீங்க?

என்ன சொல்ற?

ஆமாய்யா! உன்னையும் டெல்லியையும் தேடி நாலஞ்சு ரவுடிங்க வந்துட்டு போனாங்க! ஒரே மிரட்டல்.எங்கிருக்கான்னு சொல்லுன்னு!

நீ சொல்லிட்டியா?

நான் என்ன உன் பொண்டாட்டியா? நீ சொல்லிட்டு போக!

சரி! சரி! ஆரம்பிக்காதே! ரொம்ப தேங்க்ஸ்! என்று போனை அணைத்த ரமணி சாவு வீட்டு வாசல்ல வந்து நிக்குதாம்! ப்ரியா சொல்லுது! என்றான்.
ரமணி Vs ரமணி

அத்தியாயம் 15

அப்ப நாம வீட்டுக்கு போக முடியாது!

வீட்டுக்கு போகலைன்னா பேன் மேல இருக்கிற அந்த அஞ்சு பாக்கெட்டை எப்படி எடுப்பது.?

அது இப்ப முக்கியமில்லை.என்ன காரணம்னு தெரியலை.நாகோட ஆளுக நம்மை துரத்துறாங்க! சரக்கு குறையுதுன்னு தெரிஞ்சா பாய் சும்மா இருக்க மாட்டான்.இந்த ரெண்டுக்கும் நடுவுல ஒருத்தன் நம்மை போன் பண்ணி டைரக்ட் பண்றான்.பாய் கிட்ட நாமளே போய் விசாரிப்பது குழிய வெட்டி படுத்துக்கற உள்ளே படுத்துக்கிற மாதிரி.!

பேசாம பாய்கிட்டயே தலைமறைவாகிருவோம்!

யோவ்! அந்தாளே போலீஸுக்கு பயந்து சரக்கை நம்மகிட்ட கொடுத்திருக்கான்.நாம அதே சரக்கோட அவன் வீட்டுலயே போய் தங்கினால் நல்லாவாஇருக்கும்!

பேக்குல சரக்கிருக்குன்னு சொன்னாத்தானே தெரியும்.?நாம தங்குறதுக்கு வேற இடம் எதாவது இருந்தா சொல்ல சொல்லி கேட்போம்!

இது ஒகே! வா போகலாம்!

இருவரும் பாய் வீட்டிற்குள் நுழைந்த போது உசேன் எங்கேயோ காணாமல் போயிருந்தான்.வீட்டிற்கு வெளியே நின்ற ரமணி ஆசிப் பாய்! வீட்டுல இருக்கீங்களா? என்றான்.
வீட்டின் மயான அமைதி தொடர்ந்து கொண்டிருக்க உள்ளே யாரோ முனகும் ஓசை கேட்டது.
ரமணியும் டெல்லியும் தயக்கமாக ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.டெல்லி முன்னால போ என்று சைகை செய்து விட்டு தன் துப்பாக்கியை கையில் எடுத்து கொண்டான்.
இருண்ட வராண்டாவை தாண்டி ஹாலுக்கு வந்த போது அதன் வெளிச்சத்தில் உசேன் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தது தெரிந்தது.சற்று தூரத்தில் ஆசிப் உதட்டோர ரத்தத்துடன் மண்டியிட்டு உட்கார வைக்கப்பட்டிருந்தான்.அவன் நெற்றியில் ஒரு துப்பாக்கி வைக்கப்பட்டிருந்தது.அவனை சுற்றி நான்கு பேர் எம கிங்கரர்கள் போல் நின்றிருந்தனர்.

அதில் ஒருவன் டெல்லியை பார்த்து அந்த பழைய இரும்பை கீழே போடு! என்றான்.
டெல்லி பாயை பார்த்தான்.ஆசிப் கண்களாலேயே கீழே போடு என்றான்.டெல்லி தவற விட்ட துப்பாக்கியை ஒருவன் கைப்பற்றினான்.

என்ன டானு? பழைய இரும்போட சுத்துற? என்றான் கிண்டலாக.

வறுமையான டானா இருப்பானோ? என்றான் இன்னொருவன்.

என்ன பாய்? டபுள் கேம் ஆடுறியா? நாகோட சரக்கு உன்கிட்ட எப்படி வந்துச்சு? உண்மைய சொல்லு?

நான் நாகுக்கிட்டதான் சொல்லுவேன்! என்றான் ஆசிப்.

துரை எங்ககிட்ட சொல்ல மாட்டிங்களோ? இந்த புள்ள பூச்சிகளை வேற உள்ளே இழுத்து விட்ருக்க? ஆமா யாரு இவனுக?

ரமணியின் கையிலிருந்த பேக் பிடுங்கப்பட்டு சரக்குகள் சரி பார்க்கப்பட்டன.

இவன்தான் துரைசிங்கத்தோட பையன்! பேரு ரமணி! என்றான் ஆசிப்.

அவரு பொய் சொல்றாருங்க.எங்கப்பா பேரு குப்புசாமி! என்றான் ரமணி.

என்னடா டிராமா பண்றீங்க?

உண்மையத்தான் சொல்றேன்.துரையோட பையன்தான் இந்த ரமணி.உங்காளுகளை தூக்குனதும் இவன்தான்.

வாட்ஸ் அப்ல பாத்தேன்.நீ அவ்வளவு பெரிய டானாடா? என்று ரமணியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.ரமணி கன்னத்தை தடவிக் கொண்டு நின்ற போது அவனுடைய போன் அடித்தது.

அதை எடுக்க போன ரமணியை தடுத்து எடுத்தவன் ஹலோ! என்றான்.

நான் சம்பத் பேசறேன்! என்றது எதிர்முனை.

நீ சாகலையா? என்றான் இந்தப்பக்கத்துக்காரன் குரலை அடையாளம் கண்டு அதிர்ச்சியுடன்.

நாகுவை போட்டுட்டுத்தான்டா நான் போவேன்.துரையை போட்டதை நான் இன்னும் மறக்கலை! என்றது கரகரத்த குரல்

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *