முகிழ்த்தேனே நின் முத்தத்தால்
முத்தம்13!!
காலையில் தாண்டவம் வெளியே செல்லும் நேரம் கமலம் பெரும்பாலும் தூக்கத்தில் இருப்பதால் அவரால் அவனை பார்க்க முடிவதில்லை என்று, அன்று இரவு வெகு நேரம் விழித்திருந்து அவனிடம் பேச வேண்டும் என்றார்.
“என்ன பேசணும்?” என்று இருவரும் அவரைப் பார்க்க..
“இல்ல பாப்பா ஊர்ல இருக்கிற நிலம் இங்கே இருக்கிற டெபாசிட் பணம்.. இத பத்தி எல்லாம் உங்க ரெண்டு பேராண்டையும் பேசிட்டனா எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்”
“இப்ப எதுக்கு கமலாம்மா.. அதை பத்தி எல்லாம்?” என்றான்.
“என் நிலமை அப்படி பேச வைக்குது யா..” என்றவர் சில பத்திரங்களை கொண்டு வந்து கொடுத்தார். “இது ஊர்ல இருக்கிற எங்களோட நிலம். இப்போதைக்கு குத்தகைக்கு கொடுத்து இருக்கேன். இவ்ளோ வருது” என்று பணம் விவரம் சொன்னார். “இது இப்ப நான் இருக்கிற வீட்டோட பத்திரம்.. இது நான் டெபாசிட் பண்ணி வச்சிருக்க பணத்தோட பாஸ்புக்.. இதுக்கு அடுத்த வாரிசா யாரையும் அப்போ போடல.. என்ன நாளைக்கு கொஞ்சம் பேங்க்கு அழைச்சிட்டு போ யா.. இதெல்லாம் முடிச்சுட்டு வருவோம்” என்றதும் நேத்ராவுக்கு கோபம் பொங்க கண்டன பார்வை பார்த்தாள்.
“சும்மா முறைக்காத பாப்பா..” என்று அவர் சிரிக்க..
“அவ முறைக்குறதுலேயும் ஒரு அர்த்தம் இருக்கு தானே அத்த.. இப்ப எதுக்கு இந்த பத்திரத்தை எல்லாம் என்கிட்ட கொடுக்குற அத்த நீ?” என்றான் தாண்டவம்.
“எனக்கு என்ன புள்ளையா குட்டியா? எனக்கு அப்புறம் இதெல்லாம் உங்களுக்கு தானே.. அதான் நல்லா இருக்கும்போது எது எது எங்க இருக்குன்னு சொல்லிட்டேனா.. பின்னாடி கஷ்டம் இருக்காது பாரு” என்றவர், மறுநாள் காலையில் வம்படியாக அவனோடு சென்று தன் பேரில் உள்ள பணத்திற்கு வாரிசாக தாண்டவனை நியமித்து விட்டு தான் வந்தார்.
வரும் வழியில் “உன்கிட்ட தனியா பேசணும் தான் வந்தேன் தாண்டவம். நீ நினைக்கிறது போல நேத்ரா பாப்பா என்னோட மச்சினன் பொண்ணு கிடையாது” என்றதும் காரை ஓட்டிக்கொண்டு இருந்தவன் காரை ஓரமாக நிறுத்தி அவர் பக்கம் திரும்பினான் அதிர்ச்சியாக…
“நிறைய விஷயங்கள் எனக்கே தெரியாது யா.. அந்த பொண்ணு வாயிலிருந்து வந்தா தான் உண்டு. அந்த பொண்ணு ரொம்ப பெரிய இடத்து பொண்ணு யா.. நான் அவங்க வீட்ல வேலை பார்த்தவ, நான் குத்தகை விட்டேனு சொன்ன நிலம் கூட அவங்க அப்பா எங்களுக்கு கொடுத்தது தான். இப்ப அதை வித்தாலோ.. அதுல ஏதும் செஞ்சாலோ நேத்ரா பாப்பா என் கூட இருக்கிறது தெரிஞ்சு போயிரும். அதனாலதான் இந்த பணம் இதெல்லாம் உன் பேருக்கே மாத்துனேன்.. அந்த புள்ளைய நல்லா பாத்துக்க தாண்டவம்!!” என்று அவன் கையைப் பிடித்து கண் கலங்க கூறினார்.
“அப்புறம் இன்னொரு விஷயம்.. யா..” என்று மெல்ல தயங்கியவர்.. “நீயா நெருங்குற வரைக்கும் அந்த புள்ள அதுவா உன்னை நோக்கி வராது. ரொம்ப கஷ்டப்பட்டுடுச்சு!! இனிமேலாவது நல்ல வாழனும் நீங்க!” என்றார் ஆத்மார்த்தமாக…
வீட்டில் கமலத்தை இறக்கி விட்டவனுக்கு பாரம் ஏறிக்கொண்டது.
முதலில் அந்தஸ்து பேதம் அவனை ஆட்டியது. ‘ஒருவேளை அதனால்தான் நம்மை அவ கண்டுக்கவே இல்லையோ?’ என்று மனம் அடித்துக் கொண்டது. ‘ஆனாலும் அவளை பார்த்தால் அந்தஸ்து பேதம் பார்ப்பவள் போல இல்லை.. இத்தனை நாட்களில் அந்த ஏரியாவில் ஓரளவு நன்றாக பழகுவாள்! இந்த மாதிரி இருந்தா எப்படி பழகுவா?’ என்று யோசித்தவன் எதிரில் இருக்கும் கடலை தான் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
பார்த்தது முதல் அந்த பெண் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு அவனிடம்!! அதைவிட அவளின் குழந்தையிடம்!! ‘இரண்டு பேரும் என்னை என்ன செய்கிறார்கள் என்றே எனக்கு தெரியவில்லை.. இதில் நானாக அவளை நெருங்க வேண்டுமா? எப்படி நெருங்க?’ என்று விழித்தான்!!
‘அவகிட்ட முதலில் பேசுவோம்!’ என்று யோசித்தவன், செயல் படுத்த முடியாமல் தடுமாறினான்.
அன்று அவன் மேல் படுத்துக்கொண்டிருந்த சிமி பாப்பாவை பார்த்தவன் “அப்புகுட்டி நான் ஒரு கதை சொல்லவா?” என்றதும் அவனை நிமிர்ந்து பார்த்து அரிசி பல்லை காட்டி சிரித்து தலையாட்டியது.
நிசப்தமான இரவு நேரம் உள்ளறையில் கமலம் நன்கு உறக்கத்தில்.. கூடத்தில் மெத்தையில் நேத்ரா..
மகள் தன்னிடம் எப்படியும் வரப்போவதில்லை என்று புரிந்து விடிவிளக்கை போட்டுவிட்டு, தூக்கம் வராமல் தான், அவளும் எதிர்காலத்தை நினைத்து யோசித்துக் கொண்டே இருந்தாள். அப்போது தான் அவளின் காதுகளில் மெல்லிய அழுத்தமான குரலில் தாண்டவனின் வார்த்தைகள் விழுந்தது.
“ஒரு ஊருல.. ஒரு ராஜகுமாரி இருந்தாங்களாம். அன்பும் அழகும் நிறைஞ்சவங்களாம் அந்த ராஜகுமாரி!! ரொம்ப அந்தஸ்த்தில்.. அதிகாரித்தில்.. செல்வத்தில் வளர்ந்தவங்களாம் ராஜகுமாரி!! அப்படிப்பட்ட ராஜகுமாரி ஒரு சாதாரண சிப்பாய கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்” என்றான் அவன் மீது படுத்திருந்த சிமி இப்பொழுது நன்றாக அவன் நெஞ்சின் மீது இரண்டு பக்கமும் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து இருந்து கதை கேட்க ஆரம்பித்தது. மகள் மட்டுமல்ல அம்மாவும் என்ன சொல்ல வருகிறான்? யாரை சொல்கிறான்? என்று கேட்க ஆர்வமாகவே இருந்தாள்.
“அந்த சேவகனால ராஜகுமாரியோட
ஒட்டவும் முடியல ஒதுங்கி நிற்கவும் முடியல!! ராஜகுமாரியா பாக்குறதா? மனைவியா பார்க்கிறதா? அப்படின்னு பெரும் குழப்பம்!!
சரி கொஞ்சம் விலகி தள்ளி நிக்கலாம்ன்னா.. அதுக்கும் இந்தப் பாழா போன மனசு ஒத்து வரமாட்டேங்குது. எங்கே நாம் ஒதுங்கி போன ‘அவனுக்கு நம்ம புடிக்கலையோனு?’ அந்த ராஜகுமாரி வருத்தப்படுவாங்களோனு இவன் மனம் தவியா தவிச்சது. அப்படியும் மெல்ல இவனா நெருங்கி போனாலும்.. அவங்க விலகி விலகி போனாங்க…” என்றதுமே அவளுக்கு தங்களைப் பற்றி தான் கூறுகிறான் என்று புரிந்தது!!
நேத்ராவுக்கு கோபம் வரவில்லை சிரிப்பு தான் வந்தது!! ‘கொழுப்ப பாரு.. பிள்ளைக்கு சொல்ற கதையை பாரு” என்று!!
“எவ்வளவு நெருங்கி போனாலும் ஒதுக்காறாங்களேனு அந்த புரிதல் கோவமா மாறவே மாட்டுது.
வருத்தமா தான் வலியா தான் மாறி தொலையுது. இந்த மனசு இருக்கு பாரு.. மனசு.. அது ஒரு விசித்திரமான ஜந்து!! அவங்களுக்கு நம்மள பிடிக்கலைன்னு தெரியும்.. தேட மாட்டாங்கன்னு தெரியும்.. பிடிச்சா நம்மை தேடுவாங்கனு தெரியும்!! ஆனாலும் அடிப்படை அறிவு கூட இல்லாம தேடனும் தேடனும்னு தவியா தவிக்குது.
தேட மாட்டாங்களானு ஏங்குது.
சரி நம்மை தேடலைனு ஒரு வழியா மனசை தேத்திகிட்டு நம்ம திரும்புனா.. அந்த ரெண்டு கண்ணு இல்ல கண்ணு.. அது நம்மை சுத்தமா சுழட்டி வேற எதையும் நினைக்க விடாமல் மீண்டும் மீண்டும் அவங்க பின்னாலேயே நாய்க்குட்டி போல வாலாட்டிக்கிட்டே சுத்துது!!” என்று அவன் தன் மனதில் உள்ளவற்றையெல்லாம் கொட்டிக் கொண்டே இருக்க.. அப்பா என்ன கதை சொல்கிறார் என்று புரியாமலேயே உறங்கி விட்டாள் சிமி. ஆனால் இப்போது உறக்கம் தொலைந்து போனது நேத்ராவுக்கு!!
“என்ன பாப்பா தூங்கிட்ட? அப்பா கதை சொன்னது ரொம்ப போரா இருந்ததா? பிடிக்கலையா?” என்றான். கேள்வி என்னமோ தூங்கும் மகளிடம் தான்! ஆனால் பதிலை எதிர்பார்த்தான் தூங்காத மனைவியிடமிருந்து..
அவன் கேட்டதும் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது நேத்ராவிற்கு. அம்மா மகள் இருவரிடம் இருந்து பதில் வராததால் பெருமூச்சு விட்டவன், மெல்ல தனது கட்டிலிலே குழந்தையை படுக்க வைக்க திரும்ப நேத்ராவின் உடல் சிரிப்பில் குலுங்குவது தெரிந்தது.
“பாதகத்தி.. சிரிக்கிறா பாரு!! நம்ம இவ்வளவு ஆட்டி வச்சிட்டு.. இவ்வளவு நேரம் புலம்பி இருக்கேன் அதுக்கு ஒரு பதில் சொல்லாமல் சிரிக்க மட்டும் செய்யுறா?” என்று பொருமினான்.
“புள்ள தான் தூங்கிருச்சு.. அம்மா பதில் சொல்லாம் இல்ல.. கதை பிடிச்சிருந்தா பிடிக்கலையானு? ஒரு வேளை கேட்கலையோ?” என்றான் மெல்ல நூல் விட்ட மாதிரி..
“எல்லாம் கேட்டுச்சு.. கேட்டுச்சு!! ராஜகுமாரி என்ன சின்னதம்பி பிரபுவா? கல்யாணம்னா என்னனு தெரியாம பண்ணிக்க..” என்று சொல்லி சிரித்தவள், “ஆனாலும்.. இது.. இந்த பந்தம்..” திக்கியப்படி திரும்பி படுத்து கொண்டாள்.
அவளின் இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை தாண்டவம். அவள் பேச்சிலிருந்து இன்னும் கொஞ்சம் டைம் கேட்கிறாள் என்று புரிய.. “கல்யாணம்னா என்னென்னு ராஜகுமாரிக்கு புரிஞ்சா.. சரி!! பாவம் சேவகன் ரொம்ப நாளா பசியோடு இருக்கான்” என்றதும், ‘என்ன இவன் இப்படி பேசுகிறான்!’ என்று கூச்சமாகி போனது நேத்ராவுக்கு.
அதன்பின் இருவருக்குமான பொழுதை அதிகம் கூட்டிக்கொண்டான் தாண்டவம். அதுவும் குழந்தையை வைத்தே!!
காலையில் அவள் பிள்ளைக்கு உணவு ஊட்டும் போது அருகிலே இருந்து இவன் வேடிக்கை காட்டுவது மதியம் இப்போது எல்லாம் வீட்டிற்கு வந்தான். அவளையும் அமர வைத்து கொண்டான் கூடவே..
இப்போதெல்லாம் பிள்ளைக்கு நெற்றி முத்தம் கொடுக்கும் போதெல்லாம் அம்மாவுக்கும் கொடுத்தான். அவள் விலுகினாலும் விடுவதில்லை!!
மாலை போல கோவில்.. அருகில் இருக்கும் இடங்களுக்கு பிள்ளையை அழைத்துக் கொண்டு மூவருமாக சென்றனர். அதுவும் பிள்ளையின் மகிழ்ச்சிக்காக என்பது மேலோட்டமாக தெரிந்தாலும் மூவரும் ஒரு குடும்பம் என்பதை அவ்வப்போது நேத்ராவின் மனதில் ஆழ பதிய வைத்துக் கொண்டு இருந்தான்.
தாண்டவத்தின் வேலை ஆரம்ப காலகட்டத்தில் அரசியல்வாதிகளுக்கு அடியாளாக எடுபிடியாக இருந்தது. அப்போது அவனது நண்பன் செழியன் “இப்படியே இவனுங்களுக்கு நீ ஊழியம் செஞ்சுட்டு இருந்தா.. கண்டிப்பா முன்னேற முடியாது டா! உனக்கென்று ஒரு தனி தொழில் பார்” என்றான்.
அடித்துப் பிடித்து அடாவடியாக பேசி பழக்கப்பட்டவனுக்கு என்ன தொழில் செய்வது என்று குழப்பம் வர “அவங்களுக்காக செஞ்சத நீ உனக்காக செய்” என்று வட்டி தொழிலை ஆரம்பித்து வைத்தவன் அவன் தான்.
அதையே பற்றி கொண்டான் தாண்டவம். அவனோடு இருந்த ஆட்களின் உதவியால் தன் ஏரியாவில் முதலில் கொடுத்து வாங்கியவன், அடுத்தடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தனது வட்டாரத்தை விரிவாக்கிக் கொண்டான். அதில் அவன் அல்லகைகளுக்கும் பங்கு உண்டு. இவன் வட்டி வசூலித்து தருவது மட்டுமல்லாமல் மற்றவர்களும் அதாவது ஏதாவது பினான்சியரோ இல்லை புரொடியூசரோ இப்படிப்பட்ட ஆட்கள் தங்களுக்கு பணம் வசூல் ஆகவில்லை என்றால்.. அணுகுவது தாண்டவத்தை தான்!!
வெறும் அடிதடி மட்டும் கிடையாது அறிவுபூர்வமாகவும் யோசித்து செயல்படுபவன், வேகம் விவேகம் இரண்டையும் கையில் எடுத்துக் கொள்பவன், அதனாலே ‘பணம் வசூலாகவில்லையா? இழுத்தடிக்கிறானா? கூப்பிடு தாண்டவத்தை!’ என்ற அளவில் பிரபலம் அவன் சென்னையில்..
எந்த அளவு பிரபலமோ அந்த அளவு எதிரிகளையும் சம்பாதித்து வைத்திருக்கிறான் என்பது மிகை இல்லை. பணம் வாங்கியவன் இவனுக்கு கமிஷன் கொடுத்து அனுப்பி விடுவான். ஆனால் இவன் மிரட்டி சென்றவன் சினம் மிக கன்னம் வைத்து காத்திருப்பான் இவனை பழிவாங்க…
அதுபோல் பலதரப்பட்ட சம்பவங்கள் எல்லாம் நடந்தேறி இருக்கிறது. இரண்டு மூன்று முறை மயிறிழையில் உயிர் தப்பிய சம்பவங்களும் உண்டு!!
‘ஆனாலும் வேறு தொழிலை செய்வோமா?’ என்று அவன் யோசித்ததெல்லாம் இல்லை.
“எப்படி அவன் என்னை செய்யலாம்?” என்று பதிலுக்கு இரண்டு மடங்காய் அவனுக்கு செய்து விட்டு தான் ஓய்வான் தாண்டவம்.
அன்றும் அப்படித்தான்!! ஒரு பைனான்சியரிடம் கடன் வாங்கிய பிரபல ரவுடி.. கடனையும் வட்டியும் கொடுக்காமல் இழுத்தடிக்க அவர் தாண்டவத்தை அழைத்து இருந்தார். “கொஞ்சம் பார்த்து பண்ணிக்கொடு தாண்டவம்.. ரொம்ப நாளா இழுத்து அடிக்கிறான்!! எப்பொழுதும் தர 20% இல்லாம சேர்த்து 30% உனக்கு தரேன்! ஏன்னா அமௌண்ட் ரொம்ப பெருசு!” என்றார்.
ஏற்கனவே வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பில் இருந்தவனுக்கு ‘அமௌன்ட் பெரியது என்றால் கமிஷனும் அதுக்கு தகுந்தாற் போல் தானே வரும்’ என்று நினைத்தவன் “சரி சார்.. அவன் டீடைல்ஸ் எல்லாம் கொடுங்க!” என்று வாங்கியவன் இரண்டே நாட்களில் பணத்தை மீட்டு பினான்சியரிடம் கொடுக்க.. பேச்சற்று போய் பரவசமானார்,
இவனின் இந்த அதிரடியில்..
“வரவே வராது என்று நினைத்தேன் தாண்டவா.. எப்படியும் உன் கிட்ட வந்தா கிடைச்சிடும்னு தெரியும்! ஆனா இவ்வளவு சீக்கிரம் வரும்னு தெரியல.. இத வச்சு தான் இன்னொரு படத்துக்கு பூஜை போட ப்ரொடியூசருக்கு கொடுக்கணும்!! இந்தா சொன்னது போல 30%” என்று கொடுத்தவர் அவனுடைய அடியாட்களுக்கும் தாராளமாகவே பணத்தை கொடுத்து அனுப்பினார்.
பணம் கொடுத்தவன் இவ்வளவு சந்தோசத்தில் இருக்கும் போது என்னதான் வட்டிக்கு வாங்கி இருந்தாலும்.. அதை மொத்தமாக தூக்கி கொடுத்த கடுப்பில் இருந்த அந்த பிரபல ரவுடி தாண்டவத்தை கட்டம் கட்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதே சமயம் இவன் வண்டியில் வரும்போது எதிரில் வந்த வண்டி கட்டுபாடின்றி இவனை வேகமாக மோதி விட.. கையில் கட்டோடு வந்த தாண்டவத்தை பார்த்தவள் அதிர்ந்து போனாள்.
இவன் என்ன வேலை செய்கிறான் என்று முழுதாக அவளுக்கு தெரியாது. ஆனால் வட்டிக்கு விடுகிறான்.. வட்டிக்காரன் என்று மட்டுமே தெரியும்!! அதனால அவ்வப்போது “வட்டிகாரா..” என்று கூப்பிட்டு இருக்கிறாள்.
“என்னாச்சு.. என்னாச்சு..” என்று இவள் பதட்டத்தோடு கேட்க..
அருகில் இருந்த அல்லகைகளுள் ஒன்று “அது அண்ணி… ” என்று ஆரம்பிக்க.. அதற்குள் முந்தி கொண்ட தாண்டவம் “வண்டி ஸ்லிப் ஆகி விழுந்துட்டேன்!” என்று இவன் சமாளிக்க.. அவனது அல்லகையோ பொறுமலோடு “அண்ணாத்த… அவன சும்மா விடக்கூடாது!! கண்டிப்பா அந்த நாதாரி நல்லசிவன் வேலையா தான் இருக்கும்.. அவ்வளவு பணத்தை கொடுத்தவன் சும்மா இருப்பானா?” என்று பொருமி தீர்க்க.. இவளுக்கோ இங்கே அமைதி பொறுமை எல்லாம் பறந்து போனது.
“என்ன.. என்ன? யார் பண்ணா?” என்று இவள் பதட்டத்தோடு கேட்க.
போட்டு கொடுத்த அல்லகையை திரும்பி பார்த்து முறைத்தவன் மேலோட்டமாக தனது வேலையைப் பற்றி கூற அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“யோவ் வட்டிக்காரா.. நீ என்ன கந்து வட்டிகாரன் ரேஞ்சுக்கு பேசுற?” என்று அதிர்வோடு கேட்க.. அவளின் அந்த வட்டிக்காராவில் சன்னாசி முதல் அல்லக்கைகள் வரை அனைத்து முகத்திலும் நமட்டு சிரிப்பு!!
“இது புலிவால் புடிச்ச மாதிரி அவ்வளவு சீக்கிரம் விட முடியாது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிக்கிறேன்” என்று மனைவியின் பாசமான பார்வையில் கூறியவன், திரும்பி மற்றவர்களை பார்த்து “ஓடுங்கடா..” என்றான்.
ஆனாலும் நேத்ராவின் முகம் தெளியாததை கண்டு “அப்படியெல்லாம் எனக்கு ஒன்னும் நடக்காது.. நீ போட்டு மனச குழப்பிக்காத.. வெறும் கை கால் அடி தானே.. செத்தா போயிட்டேன்?” என்றான் இலகுவாக..
சாவு என்ற வார்த்தையில் அவளின் ஞாபகங்கள் கிளறி விட.. தாங்க மாட்டாமல் பிரிந்த இரு உயிர்களின் நினைவில் வலியை அடக்கி கண்களை இறுக்க முடினாள்.
“எதுக்கு இவ்வளவு கோவப்படுற?” என்றவனுக்கு அவள் பெயர் சட்டென்று வராது. ‘இதுவரை அவளை பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை டக்குனு இந்த பேரு வேற என் வாயில வந்து தொலைய மாட்டேங்குதே?’ என்று அவன் யோசிக்கும் முன்னே…
“செத்துடு.. !!” உச்சபட்ச கடுப்பில் சொன்னாள். “அடி வாங்கி கை கால் இல்லாமை இருக்குறதுக்கு.. எதுக்கு இருந்துட்டு.. !!” என்றாள் நெற்றிக்கண்ணை திறந்து காளியாய்.. எதிரே இருந்தவன் மொத்தமாய் காலி!!
“எதே.. செத்துடவா?” என்று அதிர்ச்சியில் தாண்டவன் கண்கள் விரிய அவளைப் பார்த்தான்.
ஆனாலும் கோபம் வரவில்லை.. சிரித்துக் கொண்டு அவள் கையை பிடித்தவன், “சரி.. நான் செத்துட்டா உனக்கு சந்தோசமா.. ??”
“ஆமா.. அப்படியே நீ எனக்காத்தான் சாகுற பாரு! நீ செத்தா நான் துக்கப் படறதுக்கு?? ஒரு தெரு நாய் செத்தா என்ன நடக்குமோ அதான் நடக்கும்.. !! உனக்காக எல்லாம் நான் ஒரு மயிரும்.. பீல் பண்ண மாட்டேன்.. !!” அவள் குரலில் கோபம் கொப்பளித்து வந்தது.
”ஹ்ஹா.. ஹ்ஹா.. !!” என்று அவன் லேசாக வாய் விட்டு சிரித்தவன்.
”அப்போ உன் கோபம் என்னோட தொழிலால இல்ல.. நான் உனக்காக சாகாம வேற ஒருத்தனுக்கு சாகிறதுல தான்! சோ.. உரிமை பிரச்சனை!” என்றான் சிரித்தபடி..
” பட் ‘ டென அவன் கன்னத்தில் ஒரு அடி வைத்தாள்.
”ச்சீ.. மனுஷனா நீ! சாவெல்லாம் சாதாரணமா உனக்கு?” என்று வாய்க்கு வந்தபடி திட்டினாள்.
“டேய்.. வட்டிக்காரா.. என்னை என்னெல்லான்டா பேச வெக்கற.. ?? போ… போ… போ… போய் எங்கியாவது செத்து தொலை போ.. !! என் கண் முன்னால இருந்து என்னை போட்டு வதைக்காத !!” குமுறினாள்.
”ஏய்ய்.. சாரி மா.. கண்ணம்மா!!” என்று அவள் தோளை தொட்டான். அவனைப் பார்த்த அவள் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
“போயா.. போ..” என்று திமிறியவளை அவன் விடாமல் இறுக்க அணைத்துக் கொள்ள..
கொஞ்ச நேரம் அவளது ஆத்திரமான திட்டுக்களை அடிகளை எல்லாம் வாங்கிக் கொண்டான்.
சண்டை.. கோபம்.. திட்டு.. அழுகை.. அடி.. கடி.. என எல்லாம் முடிய கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடந்து விட்டது.
“ஆமாம் உன் பெயருக்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டான், அவளை இலகுவாக்கும் பொருட்டு.
“ஏன்? என் பேரு உன் வாய்க்குள்ள நுழையலையா?” என்று சிரித்தவள் “நேத்ரா னா.. கண்கள்னு அர்த்தம்!!” என்றாள்.
“கண்கள்.. ஆமா.. உனக்கு அழகிய கண்ணு தான். நேத்ராவை விட கண்.. கண்ணம்மா நல்லா இருக்கு அப்படியே கூப்பிடுறேன்” என்று அவள் நெற்றி முட்டி சிரித்தவனின் இதழ்கள் அவளது இதழ்களை மென்மையாக தீண்டிச் சென்றது. ஆனால் அதன் தாக்கம் இருவருக்குள்ளும் நிலையாய் தகித்தது!!
இவ்வளவு நாட்களில் அவனது இயல்பான தொடுகை.. அரவணைப்பு.. சின்ன சின்ன முத்தங்கள் என்று அவனுக்கு பழகியிருந்தாள் நேத்ரா.
“ஆமா.. தாண்டவம் என்றால் என்ன? டான்ஸூனு அர்த்தமா?” என்று இவள் திரும்பி அவனை கலாய்க்க..
இதுவரை யாரும் அவனிடம் அப்படி கேட்டதில்லை “என் முழு பெயர் ஊர் தாண்டவம்!” என்றான், ஆனால் அது அவர்களின் குலதெய்வத்தின் பெயர் என்று அவனுக்கு தெரியவில்லை.
மேல் கலாச்சாரத்தில் வளர்ந்த நேத்ராவுக்குமே அப்பெயரின் மகத்துவம் தெரியவில்லை!! அதனால் அவள் இன்னும் கிண்டலாக பார்க்க.. “மொதல்ல இந்த பேரை மாத்தணும் டா சாமி..!” என்று நேராக பாரில் இருந்த ஊர்நியாயத்திடம் நியாயம் கேட்க சென்றான்!!
அவரோ முழுதாக மட்டையாகி விட.. அன்றிரவு அவர்களது கடையின் முன்னே ஒரு பொதுக்கூட்டமே கூடிவிட்டது, ஊர் தாண்டவத்திற்கு புதிதாக பெயர் வைக்க..
“கொஞ்ச நாள் கம்முனு இருந்தானுங்கன்னு பார்த்தா.. எங்க இவனுங்க அடங்குறதாவது!” என்று ஏரியா பெண்கள் அவனை கரித்து திட்டிக் கொண்டு செல்ல.. போகிற போக்கில் வாசல் நின்றிருந்த நேத்ராவை பார்த்து “இவன எல்லாம் கொஞ்சம் முந்தானையில முடிஞ்சுவை நேத்ரா..” என்று அறிவுரையும் கூறி சென்றார்கள்.
ஆள் ஆளுக்கு ஒவ்வொரு பெயர் சொல்ல.. அது வேண்டாம்.. இது வேண்டாம் என்று ஏகப்பட்ட நொட்டம் சொன்னான் தாண்டவம்.
பெயர் தேடி தேடி.. சொல்லி சொல்லி.. இவர்கள் களைத்து போனார்களோ இல்லையோ.. கூகுள் ஆண்டவரே “ஆண்டவா.. ஆளை விடுங்கடா!” என்று ஹாங்க் ஆனதெல்லாம் இவர்கள் அலப்பறையின் உச்சம்!!
“நம்ம பேர சொன்னா.. அந்த பரம்பரையே அப்படியே கெத்தா இருக்கணும் டா..” என்றவனை நாக்கு தள்ளி சோர்ந்து வாசலிலே உருண்டு கிடந்த அல்லக்கைகளில் ஒருவன் பார்த்து “ஆமா பெரிய இவரு ராசராச சோழன் பரம்பர..” என்று உளற.. அது தாண்டவம் காதில் விழுந்ததும், “டேய் திரும்ப சொல்லு.. அந்த பெயரை திரும்ப சொல்லு..” என்று அரை உயிராய் கிடந்தவனை அரட்டி மிரட்டி கேட்டான்.
“அது அண்ணாத்த.. ராஜராஜ சோழன்னு.. சும்மனாகாச்சுக்கும்..” அவன் சொல்லி முடிக்கும் முன்னே, அவன் கன்னத்தில் நச்சென்று ஒரு இச்சை கொடுத்து, “செல்லம்.. சூப்பர்.. சூப்பரா இருக்குடா! இனி நான் சோழன்.. ராஜராஜ சோழன்!!” என்று தாண்டவம் வித விதமாய் கூறி பார்த்து, எது நல்லா இருக்கு என்று அடுத்த அலப்பறைக்கு ஸ்டார்ட் ஆக.. அவனின் அல்லக்கைகள் எல்லாம் மயக்கத்துக்கே சென்றிருந்தனர்.
இச்சுகள் தொடரும்…
