உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி
தங்கம்மையை
அழைத்துக்கொண்டு வளவன் விருத்தாச்சலம் புறப்பட தயாரானான், சமுத்திரையிடம் “சுபா கூடவே
இரு, பாத்து பத்திரம் சீக்கிரம் வந்துர்றேன்” என்றவன் முன்னே நடந்து விட்டு மீண்டும்
வந்து அவளை அணைத்துக்கொண்டான், அவனோடு ஒன்றிக்கொண்டாள் புன்னகையோடு.
நண்பர்கள்
இருவரும் போன வருடம் தான் ,தங்களுக்கு என்று ஹ்யுண்டாய அல்காசர் , செவென் சீட்டெர்
கார் வாங்கியிருந்தார்கள், அதிகாலை புறப்பட்டவர்கள் காலை பதினோரு மணிவாக்கில் வீட்டை
அடைந்தார்கள்.
சொத்து பிரச்சனைகளுக்கு
பிறகு வளவன் அவன் வீட்டிற்கு போவதில்லை, எப்பொழுது வந்தாலும் பார்த்தியின் வீட்டிலே
தங்கிவிடுவான், இன்றும் பொருட்களை வீட்டில் இறங்கியவன் தங்கம்மையையும் அங்கே விட்டு
பார்த்தியின் வீட்டிற்கு சென்றான்.
“வாய்யா” என்ற
கல்யாணியை பார்த்தவன் “எப்படி இருக்க அத்தை” என்றான், “நல்ல இருக்கேன்யா, நீ ரூம்க்கு
போ நா டீ கொண்டு வரேன்” என்றவர் கிச்சன் சென்றார்.
டீ குடித்துவிட்டு
அறைக்கு சென்றவன், சிறிது நேரத்தில் நன்றாக உறங்கிவிட்டான், மதியம் கல்யாணி சமைத்ததை
உண்டுவிட்டு தங்களின் கடைக்கு சென்றான், இவனை பார்த்த ருத்ரனின் முகத்தில் எரிச்சல்,
அவரை கொஞ்சம் கூட மதிக்காதவன் கடையை வாங்க வந்தவன் போல சுற்றிப்பார்த்து கொண்டிருந்தான்.
அவனை கண்டு
கடையில் வேலை செய்யும் அவர்களின் ஆட்கள் முகத்தில் மிகுந்த சந்தோசம், அவனிடம் பேச முற்பட ருத்ரனின்
எரிக்கும் பார்வையில் அங்கு அங்கு நின்று கை ஆட்டி சிரித்தனர்.
அவன் பார்த்தவரை
புதிதாக சில ஆட்கள் இருப்பதை கவனித்தான், அவர்கள் கொஞ்சம் திமிராக இவனை பார்த்திருந்தனர்
,அனைத்தையும் நோட்டம் விட்டவன், அங்கிருந்து அவனின் அக்கா கோதையின் வீட்டிற்கு சென்று அவள் குடும்பத்தில் அனைவரையும்
பார்த்து பிள்ளைகளுக்கு உடை இனிப்புகள் அனைத்தையும் கொடுத்து மாமனிடம் கொஞ்சம் நேரம்
பேசிவிட்டு வந்தான்.
இரவு மகனுக்கு
உணவோடு கல்யாணியின் வீட்டிற்கு வந்தார் தங்கம்மை
நந்தினியுடன், “வாங்க அண்ணி” என்றவனை பார்த்தவள் “நல்லா இருக்கீங்களா, உங்க பொம்மி
நல்லா இருக்காளா” அவன் மெல்லிய புன்னகையோடு தலையாட்டினான்.
“என்ன அண்ணி
பிரச்சனை, அவனுக்கு இன்னும் என்னதான் வேணுமாம்”
“தெரில எனக்கு
அவர் விஷயத்தில ஒன்னும் தெரியல வேற போக்கிடம் இல்லாம இங்க இருக்கேன் அவ்ளோதான், அத்தை
இல்லனா நா செத்த இடத்துல புல்லு முளைச்சிருக்கும்” என்க.
“அண்ணி… என்ன
பேசறீங்க, என்னம்மா??” என்றான் தங்கமயிடம், “இதே தான் எப்போவும் சொல்றா..”
“முதல்ல நீங்க
என்ன யோசிக்கிறீங்கன்னு சொல்லுங்க, இந்த லைப் உங்களுக்கு வேணுமா?? நீங்க உங்க வாழ்கையை
பாருங்க அண்ணி, என்ன ஹெல்ப் வேணும் நா பண்றேன்” என்றான் நந்தினியிடம்.
“இதுல இருந்து
எனக்கு விடுதலை உண்டா தம்பி, நா வெளில போய் என்ன பண்ணுவேன், தனியா வாழ பயமா இருக்கு,
தற்கொலை பண்ணிக்க தைரியம் இல்ல” என்றவளை வேதனையோடு
பார்த்தான்.
“இங்கு இவள்
மூச்சுமுட்டி வாழ்ந்துகொண்டு இருக்கிறாள், தனக்கு விதிக்கப்பட்டது இது தான் என இவள்
மனதில் பதிந்துவிட்டது, முதலில் இதில் இருந்து வெளி கொண்டு வர வேண்டும்”.
கார்த்தியின்
வரவுக்காக வெகுநேரம் காத்திருந்தும் அவன் வரவில்லை, எங்கிருக்கிறான் என்று ஒரு ஊகம்
இருந்தது, நாளை திரும்பி செல்ல வேண்டும் அதற்க்கு முன் அவனை பார்த்து இதற்கு ஒரு முடிவு
செய்ய வேண்டும், விடியலில் எழுந்தவன் கிளம்பி
தயாராக இருந்தான், காலை ஏழு மணிக்கு வந்து சேர்ந்தான் கார்த்தி.
வந்தவனை வாசலிலே
தடுத்து நிறுத்தினான், “அடடா !! நீயா, என்ன இந்த பக்கம்? வழி மாறி வந்துட்டியா” என்று
நக்கல் செய்தவனை, கை கட்டி நிர்மலமான முகதோடு பார்த்திருந்தான் வளவன்.
“என்னடா வேணும்
உனக்கு, அதான் உனக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லன்னு போய்ட்டல்ல அப்புறம் என்ன?”
அவனை நோக்கி நக்கல் சிரிப்பை உதித்தவன் “அண்ணே சொத்து வேண்டாம்னு தான் எழுதி குடுத்தேன்,
சொந்தம் வேண்டாம்னு எங்கயும் சொல்லல, நீ இல்ல உங்க அப்….” என்றவன் ருத்ரனை பார்த்து
வார்த்தையை நிறுத்தி.
“யார் நினைச்சாலும் அது நடக்காது, நீ குடி, கூத்தடி, எக்கேடோ கெட்டு
போ, ஆனா என் அம்மாவை அதிகாரம் பண்ணுற வேல வெச்சுக்காத, அடுத்ததடவ பேசறதுக்கு வாயில
நாக்கு இருக்காது, கட்டின பொண்டாட்டிய கண்ட கழுதையும் அதிகாரம் பண்ணுது அத தட்டி கேக்காம
வேடிக்கை பாக்குறாங்க இதல்லாம் ஒரு பொழப்பு”
என்றான் ருத்ரனை பார்த்து.
“ஏய் என்னடா
? நானும் பாத்துட்டே இருக்கேன் ரொம்ப துள்ளுற” என்றார் தகப்பன் “பார்ரா உங்கள சொன்னதும்
ரோஷம் பொத்துட்டு வருது, என் அம்மாவை உங்க பையன் பேசும்போது உங்க ரோஷம் எங்க களையெடுக்க போயிருந்திச்சா” என்றான்.
“இங்கப்பாரு
உனக்கு தெளிவா சொல்றேன், அண்ணிக்கு உன் கூட வாழ விருப்பம் இல்லை, முறைப்படி உன்கிட்ட
இருந்து விவாகரத்து கேக்குறாங்க” என்க.
“என்னடா நீ
இருக்க தைரியத்துல தான் ஆடுறாளா, கோர்ட் வாசப்படிய மிதிச்சுடுவாளா பொட்ட கழுதை கழுத்த
திருவிடுவேன்” என்று ஆடிக்கொண்டிருந்தான்.
“பச்.. உன்னோட
சொற்பொழிவை கேக்க எனக்கு இப்போ நேரம் இல்ல, நோட்டீஸ் வரும் சைன் பண்ணிடு, அப்புறம்”
என்றவன் “அத்தை” என்க “சொல்லுயா” என்று வந்தார் கல்யாணி.
“நா சொன்ன
மாதிரி இங்க ஏதாவது சின்னதா சத்தம் கேட்டாலும் நீங்க நேரடியா நம்ம எஸ்.பி மேம்க்கு
போனை போட்ருங்க, நா அவங்க கிட்ட எல்லா விவரமும் தெளிவா பேசிட்டேன், இங்க உங்க மூனுபேரு
உயிருக்கும் உத்திரவாதம் இல்லனு எழுதி கொடுத்திருக்கேன், நீங்க மூணு பெரும் அன்னைக்கு
எதுக்கு கையெழுத்து கேக்குறன்னு கேட்டிங்களே, இதுக்கு தான் அதனால தைரியமா இருங்க யாரும்
உங்ககிட்ட கூட வர முடியாது” என்றவன் “என்ன மாப்ள பாத்துப்பீங்களா” என்க.
“நீ போ மச்சான்
நாங்க எல்லாம் இங்கதான இருக்கோம்” என்றான் வளவன் மற்றும் பார்த்தியின் பள்ளி தோழன்.
நந்தினியின்
வாழ்வு கார்த்தியுடன் இனைய வாய்ப்பில்லை, இத்தனை வருடங்களில் முதல் சில மாதங்களே அவனுடன்
அவள் மனைவியாக வாழ்த்ந்தது, அவனுக்கு வேறு பெண்ணோடு தொடர்பிருப்பது தெரிந்த நொடியில் இருந்து அவனை தன்
அருகில் கூட அவள் விடுவதில்லை, அடித்திருக்கிறான், மிதித்திருக்கிறான், சூடு கூட போட்டிருக்கிறான்,
இந்த விஷயத்தில் மட்டும் அவனை எதிர்த்து போராடி கொண்டிருக்கிறாள், இறுதி முயற்சியாக
கொலை கூட செய்துகொள் உன்னோடு வாழ்வதை விட அது சிறந்தது என்ற முடிவில் உறுதியாக இருந்தாள்.
ஒருவிதம் அவர்களின்
பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு நந்தினியின் விஷயத்தை பற்றி பார்த்திபன், சுபாவிடமும்,
பேச வேண்டும். அவளுக்கு நல்ல ஒரு வாழ்வை அமைத்து தர வேண்டும், என்ற உறுதியோடு சென்னைக்கு
வந்தான்.
ருத்ரன் இந்த
முறை பெரிதாக அவனிடம் பிரச்சனை செய்யவில்லை, தந்தையின் இறப்பிற்கு பிறகு வீட்டில் ஒரு
வித மயான நிலை, ஆறுமுகம் இருந்தவரை வீட்டில் எப்பொழும் பேச்சு சத்தம் இருந்துகொண்டே
இருக்கும், தங்கம்மை நந்தினியுடன், உரையாடிக்கொண்டே இருப்பார், வீடு உயிர்ப்போடு இருந்தது,
அனைத்தையும் அவரே பார்த்துக்கொண்டார்.
சட்டென்று
அவர் இல்லாமல் போக ருத்ரன் மிகவும் தடுமாறினார், தந்தையோடு பெரிதாக உறவாடாதபோதும் இப்பொழுது
தந்தையை தேடியது மனது, தனது தகப்பனை போல இருக்கும் இளைய மகனை பார்க்கையில் பெரிய அநீதி
இழைத்துவிட்டதாக மனது குடைந்துகொண்டிருந்தது, அவர் இருந்திருந்தால் பேசவில்லை என்றாலும்
மகன் இந்த வீட்டிலே இருந்திருப்பான், கார்த்தியின் நடவடிக்கைகள் ஒன்றும் சரியில்லை
கடையிலும் இவர் அறியாமல் ஏதோ நடக்கிறது, யாரிடம் சொல்ல என்ன செய்ய ஒன்றும் புரியவில்லை,
ஆனாலும் சமுத்திரையை ஏற்றுக்கொள்ள முடியாது அதில் மனிதர் மிக தெளிவாக இருந்தார்.
வளவன் சென்னை
வந்த போது வீட்டில் யாரும் இல்லை, ஏனோ ஓய்வெடுக்க தோன்றவில்லை, உடனே தயாராகி வேலைக்கு
சென்றான், “பார்த்தி சாயந்திரம் கோவிலுக்கு போலாம், சுபாக்கு சொல்லிடு” என்று சொல்லிவிட்டு
அவன் வேலை பார்க்க தொடங்கினான்.
இவர்கள் மாலை
வீட்டிற்கு வந்தபோது சுபாவும், சமுத்திரையும் தயாராக இருந்தனர். அவனையே ஆவலாக பார்த்திருந்தாள்அவன்
பொம்மி, ஏதோ யோசனையிலே இருந்தான் அவளைக்கூட கவனிக்கவில்லை.
கோவிலுக்கு
சென்று தொழுதுவிட்டு அங்கேயே அமர்ந்து வீட்டில் நடந்த அனைத்தையும் சொல்லி தங்களால்
என்ன செய்ய இயலும் என்பதை பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.
பிறகு பொதுவாக
பேசிக்கொண்டிருக்க, தன் அருகில் எங்கேயோ பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த தன் பொம்மியை
பார்த்தான் , வந்ததில் இருந்து
அவளிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை அவனுக்கே சங்கடமாகி விட்டது, அவள் கையை பிடித்து
விரல்களை கோர்த்துக்கொண்டான், சட்டென்று திரும்பி அவனை பார்த்தவள் விழிகளில் கண்ணீர்
.
“என்ன செய்கிறேன்
நான், அவளை கவனியாமல்” கொஞ்சம் கோவம் கூட வந்தது, அனைவரும் ஹோட்டலில் உணவருந்தி வீட்டிற்கு
வந்தனர்.
லிஃட்டில்
இருந்து இறங்கியவுடன் வீட்டிற்குள் சென்று அடைந்துகொண்டாள் சமுத்திரா, அவள் சென்ற வேகத்தை
பார்த்து பார்த்தியும் சுபாவும் இவனை குற்றம் சாட்டும் பார்வை பார்க்க, நெற்றியை கீறிக்கொண்டான்
“அந்த டென்ஷன்ல இருந்தேன் சுபா, தப்பு தான் கவனிக்கல”.
“வெறும் தப்பு
இல்ல, பெரிய தப்பு, நேத்து நைட் நீ அவளுக்கு போன் பேசல, போன பக்கத்துலயே வெச்சுகிட்டு
விடிய விடிய பாத்துட்டு இருந்தா, இன்னைக்கு வந்தும் அவளை நீ கண்டுக்கல” என்று அவனை
காய்ந்துக்கொண்டிருந்தாள்.
“இந்த வாழ்க்கை
இவர்களின் கருணை தானே, தனக்கு அவர்களை கேள்வி கேட்கும் உரிமை இருக்கிறதா, பேசவில்லை
என்று கோவம் கொள்ள முடியுமா? இப்படி தான் நடந்துகொண்டால் அவர்களுக்கு என் மீது வெறுப்பு
வருமோ?” என்று பலவாறாக யோசித்து மனம் குழம்பி கொண்டிருந்தது, இரவு முழுதும் உறங்கவில்லை,
காலையில் அவள் இருக்கும் நிலையை பார்த்து பதறிய சுபா அவளை பிடித்து வைத்து கேள்வி கேட்க
,தன் மனதின் அலைப்புறுதலை அவளிடம் சொல்லி தேம்பி
தேம்பி அழுதாள் சமுத்திரை.
இந்த விஷயத்தை
இப்படி ஒரு கோணத்தில் யோசிக்க முடியும் என்று சுபா கனவிலும் நினைக்கவில்லை, “அவங்க
பேசல கஷ்டமா இருக்கு, எனக்கு கோவம் வந்தா தப்பாயிடுமா, அவங்க என்கிட்டே பேசாமலே போய்டுவாங்களா”
என்று தேம்பியவளை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள், அனைத்தையும் கேட்டுக்கொண்டு
நின்றிருந்தான் பார்த்தி.
“இங்க பாரு
அவன் கிட்ட கோவப்படவும் அவனை கேள்வி கேட்கவும் உனக்கு எல்லா உரிமையும் இருக்கு, உனக்கு
பதில் சொல்லாம வேற யாருக்கு சொல்லுவான் ,இணைக்கு வரட்டும் கிள்ளிவளவன கிள்ளி கிள்ளி
எடுத்துடலாம்” என்று பேசி பேசி சமாதானம் செய்தாள்.
சமுத்திரையை
தேடி அவளின் அறைக்குள் செல்லும் முன் இதை அவனிடம் பகிர்ந்தாள் சுபா, “அவளின் உரிமை
என்ன என்பதை என்னுடன் வாழ்ந்து அவள் தெரிந்து கொள்ளட்டும், அவளைவிட உரிமை உள்ளவர் எவரும்
இல்லை என்பதை அவளே புரிந்துகொள்ளுவாள்” என்ற என்னதோடு அவளை தேடி சென்றான்.
அவளுடைய அறையினை
திறந்து பார்க்க அவள் இல்லை, மெல்ல நடந்து வந்து பார்க்க அறையை ஒட்டிய பால்கனியில்
கால்களை மடக்கி முகத்தை புதைத்து அமர்ந்திருந்தாள், அருகில் சென்று “பொம்மி” என்று
தோள் தொட கொஞ்சம் நகர்ந்துகொண்டாள்.
அவள் அருகில்
அமர்ந்து முகத்தை அழுத்தமாக பிடித்து நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தான், அவன் கண்களை
நேரே பார்த்தாள் “வெரி சாரி மன்னிச்சுக்கோ” என்று அவன் சொன்னபோது விழிகள் நிறைந்து
உடல் இளக தொடங்கியது, அவள் முகத்தை தன் நெஞ்சில் புதைத்துக்கொண்டான், “எந்த விளக்கமும்
நா சொல்லப்போறதில்ல, நா செஞ்சது தப்புதான், அழாத ப்ளீஸ்” மெல்ல மெல்ல அழுகை மட்டுப்பட்டது.
“தாத்தாகூட
பாரதியார் கவிதைகள் பாடுவோம் நானும் பார்த்தியும், உனக்காக மட்டும் பாடணும்னு ஒரு பாரதியார்
கவிதை வெச்சுருக்கேன் ஆறு வருஷமா!! இப்போ பாடவா…” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள் ஆர்வமாக.
அவள் முகத்தை
கைகளில் ஏந்தி நெற்றியில் இதழ் பதித்தான், அவளை தோளில் சாய்த்துக்கொண்டு, அவள் கைகளை
தன் நெஞ்சோடு அழுத்தி கொண்டான், கண்கள் மூடி லயித்து மென் குரலில் பாட தொடங்கினான்.
பாயு மொளி நீ யெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா!
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ மாணுடைய
பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா !
வான மழை
நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி, நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே!கண்ணம்மா!
வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!
