ஈரம் பூத்த நிலா
ஈரம் பூத்த நிலா 2
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
சில பேருக்கு மட்டுமே அமையும்.. களங்கமற்ற அந்தக் குழந்தை முகம்.. முகம் மட்டுமா? அவ மனசும் அப்படியே ! யாரோடயும் நீடிச்ச கோபமோ, யாரையும் வெறுத்தோ பாக்கத் தெரியாத மனசு.. அவளப் பொறுத்த வரைக்கும் ‘எல்லோரும் நல்லவரே’.. வெற்றி அவசரமா நண்பன விட்டு விலகிச் சொன்னான்…
“ஹாய் நளினி.. வா லூசு ! நீ அன்னியமா என்ன? இது உன் ஊரு.. உன் வீடு.. உன்ன எதுக்கு ஸ்பெசலாக் கவனிக்கனும்?”
நளினி டப்னு கையறைஞ்சு கும்பிட்டுச் சொன்னா..
“போதும் உன் சென்டிமென்ட்.. வயித்துப் பசி எதையும் கேக்காத அளவுக்கு காத அடைச்சு வச்சிருக்கு.. மொதல்ல ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு எங்களக் கூட்டிட்டுப் போ”
பைங்களத் தூக்கிட்டு வெளிய பார்க்கிங் பக்கம் வந்து வெற்றி நெருங்கிப் போன வாகனத்தப் பாத்து நளினி ‘ஹெக்’னு நெஞ்சுல கை வச்சு அதிர்ச்சிய அப்பட்டமா வெளிக் காட்டினா.. ஏன்னா, அது ஒரு மினி டிராக்டர்… தன் அதிர்ச்சிய வாய் விட்டுச் சொல்லவும் செஞ்சா..
“அடப்பாவி !… இதுலயா எங்களக் கூட்டிட்டுப் போகப் போறே? .. கட்ட வண்டி எதும் உங்க தோட்டத்துல இல்லையா?”
“இருக்கே ? ஒத்த.. ரெட்ட மாட்டு வண்டி,ரேக்ளான்னு எல்லாமிருக்கு.. ஆனா,உழவர் சந்தைக்கு பாரம் கொண்டு வந்ததால இதுல வந்தேன்.. வண்டியப் பூட்டினா போய்ச் சேர மத்தியானமாயிடும்னு தான்.. ஒரு லட்சம் அட்வான்ஸா கட்டினா எந்தக் காரையும் அடுத்த நிமிசம் வீட்டுக்கு ஓட்டிட்டுப் போயிடலாம் நளினி… ஒம்பது லட்சம் குடுத்தாலும் ஒரு ஒத்த மாட்டு வண்டி இப்பக் கெடைக்காது…”
நளினி கெஞ்சற தொனில சொன்னா..
“ஸாரிடா.. இங்க பசில பெருங்குடல் சிறுங்குடல முழுங்கி நுரையீரலையும் ஸ்வாகா பண்ணத் தயாராயிட்டிருக்கு.. எதுவானாலும் தின்னுட்டு தெம்பா சண்டைய வச்சுக்கலாமே?”
வெற்றி அவனோட அலாதி புன்னகை மாறாம கைல இருந்த பேக்க டிராக்டர் பின்னால போட்டுட்டு ஏறி உக்காந்து அதுக்கு உயிர் குடுக்க அவங்க ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கமா ஏறி உக்காந்தாங்க.. டிராக்டர்னா குலுங்கி ஒதறணுமே?அலுங்காம குலுங்காம நகர்ந்தது அது ! தன் ஆச்சரியத்த அடக்காம கேட்டா அவ…
“வாவ் ! அம்சமா இருக்கே? நாங் கூட டிராக்டர்னா உலுக்கி ஒதறும்னு நெனச்சேன்”
வெற்றி அதே புன்னகையாய் பதில் தந்தான்..
“அதெல்லாம் போன நூற்றாண்டுல.. இப்ப எவ்வளவோ மாறிடுச்சே?”
அஞ்சாவது நிமிசம் பெருந்துறை போற ரோட்டுல திரும்பி அந்த ஓட்டல் முன்னால டிராக்டர் நிக்க எல்லாரும் இறங்கி உள்ள போயி வசதியா உக்காந்து ஆர்டர் பண்ணினதும் பீப்பாய் கௌதம் கேட்டான்..
“நாங்க எதுக்கு திடீர்னு உன் ஊருக்கு வந்தோம்னு யோசிச்சியா நண்பா?”
வெற்றி தோள் குலுக்கிச் சொன்னான்..
“என்னடா லூசுத் தனமா கேக்கறே? ரெண்டு வருசமா உங்களக் கூப்பிட்டுச் சலிச்ச பின்னால இந்த வருசம் மாரியம்மன் பொங்கலுக்கு வந்துருக்கீங்க.. அப்புறம் ஏன் எதுக்கு வந்தீங்கன்னு யோசிக்கணும்?”
இதுக்கு கௌதம் பதில் சொல்றதுக்கு முன்ன சப்பாத்திய மென்னுக்கிட்டே நளினி கேட்டா..
“பொங்கள்ள்னா எழ்ன விசேழம்?”
கௌதம் செல்லமாய் அவள் தலையில் தட்டிச் சொன்னான்..
“எரும.. ஒண்ணு தின்னுட்டுப் பேசு.. இல்லேன்னா பேசிட்டுத் தின்னு.. ரெண்டையும் ஒண்ணா செஞ்சு புதுசா ஒரு பாஷைய உண்டாக்காதே”
அவசரமா சப்பாத்திய முழுங்கிட்டு சொன்னா நளினி…
“பொங்கல்னா என்ன விசேஷம்னு கேட்டேன்டா மாடு”
இதுக்கு பதில வெற்றி சொன்னான்..
“எல்லாமே இருக்கும் நளினி.. வருசத்துக்கு ஒரு தடவ கோயில் சாட்டு.. ஊரே கூடி ஒரம்பரைங்கள அழைச்சு சந்தோசமா கொண்டாடற பொங்கலிது.. ஒயிலாட்டம், கும்மியாட்டம், சலங்கை ஆட்டம், கெடா வெட்டுன்னு ஊரே அதகளப்படும்.. பதினஞ்சு நாளும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தோட சில சமயம் சண்டைங்களும் நடக்கும்”
“இந்த வருசம் சண்டை நடந்தா பரவால்லாம இருக்கும்.. நாங்க ஜாலியா அத வேடிக்கை பாப்போம்”
கௌதமின் இந்த பதிலுக்கு கோபமான நளினி வேகமா பதில் சொன்னா…
“அடேய் அல்பம்.. உனக்கேன்டா இந்தக் குறுக்கு புத்தி? ஊரே கூடிச் சந்தோசமா இருக்கைல சண்டை வரணும்னு சாமி கும்பிடறியே?.. உன் நாக்குல தீய வெக்க”
வெற்றி சமாதானமாய் சொன்னான்..
“எந்தச் சண்டையவும் பெரியவங்க பெருசாக விட மாட்டாங்க நளினி”
நளினி ஆச்சரியத்தால கண்ணகலக் கேட்டா..
“பெரியவங்க சொன்னா கேப்பாங்களா என்ன?”
“கேக்கணும் நளினி.. அவங்க வயசுக்கும்,அனுபவத்துக்கும் சின்னவங்க குடுக்கற மரியாதை இது.. இந்த ஊர்ல அப்படித் தான்!”
“ஓ ! இது வரைக்கும் ஒரு தடவ கூட பெரியவங்க பேச்ச யாருமே மீறினதில்லையா?”
வெற்றி சில நொடிகள் தயங்கிச் சொன்னான்..
“ஒரு தடவ.. ஒரே ஒரு தடவ.. ஒரு குடும்பம் ஊர்ப் பெரியவங்க பேச்ச மீறுச்சு……”
அதுக்கு மேல சொல்ல யோசிக்கறவனா வெற்றி பேச்ச இழுக்க நளினி ஆர்வமா கேட்டா..
“கமான் வெற்றி.. யாரு குடும்பம்.. என்ன பிரச்னை?”
வெற்றி அலட்சியமா பதில் சொன்னான்..
“அது கால் நூற்றாண்டுக்கு முந்தின கதை.. பழைய குப்பை.. அதப் பேசறதுல இப்ப ஒரு பிரயோஜனமும் இல்ல.. அத விடு.. கௌதம் என்னமோ சொல்ல வந்தானே?”
கௌதம் நிம்மதிப் பெருமூச்சோட சொன்னான்..
“நல்ல வேளையா இப்பவாவது என் ஞாபகம் வந்ததே? அதாவது நண்பா.. நாங்க ரெண்டு பேருமே உங்க ஊரு பொங்கலுக்காக மட்டுமே இங்க வரல.. அதச் சாக்கா வச்சு இன்னொரு முக்கியமான காரியமா இங்க வந்திருக்கோம்”
“எதா இருந்தாலும் ஜமாய்ச்சுடலாம்டா தடியா… சொல்லு.. என்ன விசயம்?”
கௌதம் இதுக்கு பதில் சொல்லாம நளினியப் பாக்க அவ தடாலடியா ஆரம்பிச்சா..
“பெருசா ஒண்ணுமில்லடா.. எங்க கல்யாண விசயமாத் தான்”
வெற்றி ஆச்சரியம் தாங்காம கேட்டான்..
“உங்க கல்யாணத்துக்கும் எங்க ஊருக்கும் என்ன சம்பந்தம்? பிரியப் பட்டா ஜோரா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான?”
நளினி ஓட்டலே அதிர்ற மாதிரி சிரிச்சுச் சொன்னா..
“அரே பாப்ரே… இந்தப் பீப்பாய யாரு கட்டிக்குவா? நான் உன் ஊருக்காரன் ஒருத்தனுக்கு புரபோஸ் பண்ணி அவனக் கல்யாணம் பண்ணிக்க இல்ல இங்க வந்தேன்?”
வெற்றியின் ஆச்சரியம் அதிகமாக அதைக் குரலிலும் காட்டிக் கேட்டான்..
“என் ஊருக்காரனா.. யாரந்த லக்கி மேன்?”
நளினி உடனே பதில் தந்தா..
“மடையா.. உன் ஊர்ல உன்னத் தவிர எனக்கு வேற யாரத் தெரியும்?”
கொஞ்ச நேரம் ஒண்ணும் புரியாம முழிச்ச வெற்றி யோசிச்சுப் புரிஞ்சதும் அவம் பங்குக்கு தடாலடியா ஓட்டல் அதிரச் சிரிச்சுட்டுச் சொன்னான்..
“வெளையாடாத நளினி.. உனக்கு நானா? ம்கூம்… நீ ஓ.கேன்னு சொல்லு.. என்ன விட சூப்பர் மாப்பிள்ளைய நாங் கொண்டு வந்து நிறுத்தறேன்”
“ஓ… விவசாயம் தவிர இந்த பிசினஸ் கூட சைடுல பண்ணறியா?.. லுக் மை டியர் பிரண்ட்.. இங்க சூப்பருங்க எக்கச்சக்கமா கெடைக்கலாம்.. ஆனா,எனக்கு எவன் சூட்டாவான்னு நாந்தான் முடிவு பண்ணணும்.. ஐ லவ் யூ வெற்றி.. என் சைடுல எடுத்துச் செய்ய ஆம்பளைங்க இல்லாததால எல்லாம் நீ தான் பாத்துக்கணும்.. சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு.. பதினஞ்சு வருசத்துல பன்னெண்டு.. யெஸ் ! ஒரு டஜன் கொழந்தைங்க பெத்துக்கணும்.. வீடு பூரா மழலைச் சத்தமா இருக்கணும்.. நான் ரெடி.. நீ ரெடியா வெற்றி?”
இடைல ஏதோ சொல்ல வந்த வெற்றி அது முடியாம திறந்த வாயோட, அதிர்ச்சில அகல விரிஞ்ச கண்ணோட பாத்துக்கிட்டிருக்க கௌதம் சொன்னான்..
“பாத்தியா? பய ஷாக்காயிட்டான்.. காதலச் சொல்ற லட்சணமாடி இது? பேச்சு,மூச்சிருக்கான்னு பாரு”
வெற்றி சுதாரிச்சுச் சொன்னான்..
“விளையாட்டு போதும் நளினி”
“மறுபடியும் பார்றா.. வெளையாடற விசயமாடா இது? எனக்கு இன்னும் ரெண்டு நாள்ல பதில் சொல்லு.. போதும்.. இல்லாட்டி….”
“இல்லாட்டி…?”
“போடா கூந்தலேன்னு தூக்கி எறிஞ்சுட்டு இன்னொருத்தனத் தொரத்துவேன்.. நீ இல்லேன்னா வாழ்க்கையே இல்லேன்னு ஆயிடுமா என்ன?”
“அதான் நல்லது நளினி.. நான் இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கற ஐடியாவுல இல்ல.. டேய் கௌதம்.. நீ என்ன ஐடியாவுல இங்க வந்தே?”
அவன் நளினி பக்கம் விரல நீட்டிக்கிட்டே சொன்னான்..
“இந்த மூஞ்சிக்கெல்லாம் ஒரு லவ் இருக்கைல எனக்கு மட்டும் இருக்காதா? நானும் உங்க ஊரு பொண்ணு ஒருத்திய லவ் பண்றேன்”
வெற்றி இழுத்த மாதிரி கேட்டான்..
“யார்றா அது?”
“மோகிடா… நம்ம மோகி.. மோகனப் ப்ரியா…”
நளினி தந்த அதிர்ச்சிய விட இது பெரிய அதிர்ச்சியா இருந்தது வெற்றிக்கு…
(இன்னும் பூக்கும்…
