ஈரம் பூத்த நிலா
ஈரம் பூத்த நிலா 3
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
“வாவ் !! இங்க இருந்து பாக்கும் போது கண்ணுக்குத் தெரியற பசுமையும், மூச்சுக் காத்துல வர்ற குளுமையும் மனசுக்கு ரொம்பவே இதமா இருக்கில்லையா?”
நளினியின் கேள்விக்கு உடனே பதில் சொல்லாத கௌதம் கை கட்டிச் சுத்தியும் தெரிஞ்ச… கண்களோடு மனசையும் குளிர்விக்கும் இயற்கைக் காட்சிகள ரசிச்சுக்கிட்டு இருந்தான்..
அவங்க அப்ப நின்னுக்கிட்டு இருந்தது வெற்றியின் வீட்டு மொட்டை மாடி.. வந்து குளிச்சு துணி மாத்தினதும் ரெண்டு பேரும் இங்க வந்துட்டாங்க.. வெற்றி ஒரு மணி நேரத்துல வந்துடறதாச் சொல்லிட்டு வயல் பக்கம் போயிருந்தான்.. அதுவும் ஆச்சு.. இதோ ! எந்த நிமிசமும் அவன் வர்ற நேரம் தான்..
எதுக்க இயற்கை கொஞ்சி விளையாடிக்கிட்டிருக்க கௌதம் பார்வையால அத அளந்தான்.. ஒரு பக்கம் கரும்பு.. இன்னொரு பக்கம் மஞ்சள்.. நடுவுல வாழையும், நெற்ப் பயிர் வயல்களும்… குயில் கூவ, காகம் கரைய, தேனீக்கள் ரீங்காரமிட, சேவல்கள் கொக்கரிக்க, ஆடு மாடுகள் ஒற்றை அம்மாவில் உலக உணர்ச்சிகள் அத்தனையும் கொட்ட.. அணில்கள் மரத்துக்கு மரம் ஓடிச் சுற்றியேற.. ஓணாண்கள் ஏளனமாய்த் தலையாட்ட.. தென்னங் கீற்றுகளும், கரும்பு மஞ்சள் தோகைகளும் மென்காற்றுக்கு தலையாட்டி ஜதி போட… சுழன்று வரும் தென்றலில் எல்லாம் கலந்த புது வித மணம் உள்ளம் வருட.. நளினி சொன்னது உண்மையே ! அங்க மனச அமைதியாக்கற ஒரு அலாதிச் சூழல் இருக்கத் தான் செஞ்சுது.. கௌதம் தொடர்ந்து ரசிக்க முடியாத படி நளினி கூவலாச் சொன்னா..
“ஹேய்.. அங்க பாரு.. ஒரு மயில் தோகை விரிச்சு ஆடிக்கிட்டிருக்கு”
கௌதம் தன் பார்வை வீச்சத் திருப்ப.. அங்க ரம்மியமான காட்சியக் கண்டான்.. அந்தப் பரந்த தோட்டத்துக்கு அடுத்ததா கொஞ்சம் மானாவாரி பூமி இருக்க அங்க ஒரு பெரிய வேப்பமரம் பூத்துக் குலுங்கி இனிய மணத்த காத்துல பரப்பிக்கிட்டிருக்க அதுக்குக் கீழ ஒரு ஆண் மயில் தோகைய விரிச்சு சின்ன ஸ்டெப் போட்டு நடனமாடிக்கிட்டு இருந்தது.. அப்பப்ப தன் வண்ணமய கொண்டை அசைய குரல் குடுத்துச் சிலிர்க்கச் செய்தது.. நளினி உற்சாகமா துள்ளிக் குதிச்சு செல்லுல வீடியோ எடுத்த படி சொன்னா..
“மயில் கூவுது பாரு”
“தப்பாச் சொல்லாத.. மயில் அகவுதுங்கறதே சரி.. குயில் தான் கூவும்”
“அதுக்கேன்டா நீ ஆந்தை மாதிரி அலர்றே? தடித் தாண்டவராயா..”
“நீ கொடியிடைக் குமரியோ? இடுப்புல ரெண்டு டயர் தெரியுது பாரு..”
“அது… நான் இப்படி பூசின மாதிரி இருக்கறது தான் அழகுன்னு எத்தன பேரு சொல்லி இருக்காங்க தெரியுமா?”
“பூசின மாதிரி இல்ல.. மூட்டைல திணிச்ச மாதிரி.. அத விடு.. அப்படி எத்தன பேரு சொன்னாங்க?”
“ம்ம்… எங்கம்மா..”
“அதுல ஒண்ணும் ஆச்சரியமில்ல.. காக்கைக்குப் பொன் குஞ்சு.. நெக்ஸ்ட்?”
“எங்க மம்மி”
“ஓ… அடுத்தது..”
“எங்க மதர்..”
“மேல.. மேல”
“ம்ம்……”
“நாஞ் சொல்லட்டுமா? உங்கப்பாவோட வொய்ப்…”
“கரெக்ட்.. எங்கூடச் சேர்ந்ததால உனக்கும் அப்பப்ப மூளை வேலை செய்யுது.. வெரி குட்.. கீப் இட் அப்!”
“அடிங்ங்ங்… உங்கம்மாவத் தவிர யாருமே நீ அழகுன்னு சொன்னதில்லைங்கறத எப்படியெல்லாம் சமாளிக்கற பாத்தியா?”
“என்னடா.. எப்ப பாத்தாலும் லேடீஸ் கிட்ட வம்பிழுத்துக்கிட்டு..”
இடைல வந்த வெற்றியின் குரலுக்கு ரெண்டு பேரும் திரும்பிப் பாக்க அவன் மாடியேறி வந்துக்கிட்டிருந்தான்.. துளியும் சளைக்காத கௌதம் சுத்தியும் அவசரமா பாத்துக்கிட்டே கேட்டான்..
“லேடீஸா.. அப்படி யாரையும் இங்க காணமே?”
நளினி அலுப்பாச் சொன்னா..
“அவங் கெடக்கறான் வெற்றி.. வாயேன் ! ரெண்டு பேரும் இந்த சிட்சுவேஷனுக்கு அப்படியே ஜாலியா ஒரு டூயட் பாடிட்டு வரலாம்”
வெற்றி பதில் சொல்றதுக்கு முந்தி கௌதம் குறுக்க பாய்ஞ்சான்..
“அது சரி ! ஆனா, உங் குரலுக்கு இங்க இருக்கற அத்தன எருமையும் தெறிச்சு ஓடிருமே? அப்புறம்.. சாயந்திரத்துக்கு கட்டஞ் சாயா தான்.. ஓ.கே வா?”
நளினி சூடா பதில் குடுத்து சண்டை பெருசாகாம இருக்க வெற்றி சமாதானமாச் சொன்னான்..
“உங்க சண்டைய அப்புறம் வச்சுக்கலாம்.. ரெண்டு பேரும் கீழ வர முடியுமா? தாத்தா உங்களப் பாக்கணும்ங்கறார்.. அவரால படியேற முடியாது”
அடுத்த நொடியே ரெண்டு பேரும் பரபரத்து படில எறங்க நளினி சொன்னா..
‘நாங்க அவர் இருக்கற இடம் தேடிப் போயி பாக்கறது தான் முறை.. எங்க இருக்கார்?”
“பின் பக்கம்… கால் நடைகளுக்கான எடம்.. அத நாங்க தொண்டுப் பட்டி இல்லேன்னா கட்டுத் தரைன்னு சொல்றது வழக்கம்”
“தொண்டுப் பட்டி.. கட்டுத் தரை.. தொண்டுப் பட்டிக்கு விளக்கம் தெரியல.. கட்டும் துறை தான் பேச்சு வழக்குல கட்டுத்தரையா மருவி இருக்குமோ?”
நளினி கேட்ட சந்தேகத்துக்கு பதில் சொல்றதுக்குள்ள அவங்க கட்டுத்தரைக்குப் பக்கமா வந்துட்டாங்க.. அங்க பெரிய கொத்துக்காரர் நாலு முழ வேட்டியோட மேல ஒண்ணும் போடாம தலைல ஒரு துண்ட உருமாலாக் கட்டிக்கிட்டு காராம் பசு ஒண்ண வருடிக் குடுத்துட்டிருக்க அந்தப் பசு கொஞ்சம் முன்ன ஈணின கன்னுக் குட்டிய நக்கிச் சுத்தம் பண்ணிக்கிட்டிருந்தது…
பெரியவர் சள்ளக் குச்சி மாதிரி உயரம் மட்டுமில்ல.. உடம்பும் அதிகச் சதையின்றி குச்சி மாதிரி தான் இருந்தார்.. எம்பதத் தாண்டின வயசுன்னாலும் திடமாத் தெரிஞ்சார்.. முறுக்கி விட்ட வெள்ளை மீசை அம்புக் கூர்மையா வானம் பாத்தாலும் இவங்க காலடிச் சத்தத்துக்கு திரும்பினவர் கண்ணுக் கூர்மைல அன்பா பொங்கி வழிஞ்சுது.. சடார்னு உருமால அவுத்து தோள்ல போட்டுக்கிட்டு ரெண்டு கையவும் முகத்துக்கிட்ட குவிச்சு பெரிய கும்பிடாப் போட்டுச் சொன்னார்..
“வாங்க.. வாங்க… இப்பத் தான் வந்தீங்களா?”
துடுக் சுபாவியான நளினி உடனே பதில் சொன்னா..
“இல்ல தாத்தா.. நாங்க வந்து ஒரு மணி நேரத்துக்கு மேல ஆச்சு”
பெரியவர் அண்ணாந்து சிரிச்சுட்டுச் சொன்னார்..
“இது ஒரு மொறை தங்கம்.. எங்க பக்கம் நீங்க மூணு நாளைக்கு முன்னால வந்திருந்தாலும் பாத்ததும் இப்படித் தான் சொல்லி வரவேற்பாங்க.. அது அப்படியே பழக்கமாயிடுச்சு”
பட்டினத்துலயே வளர்ந்து பழக்கப்பட்ட கௌதம் பெரியவர் கிட்ட மரியாதைக்கு ஏதோ பேசணும்ங்கறதுக்காக லூசுத் தனமா இந்தக் கேள்வியக் கேட்டான்..
“உங்க பிசினஸ் நல்லா போயிட்டிருக்கா தாத்தா?'”
மத்த ரெண்டு பேரோட பெரியவரும் இந்தக் கேள்விக்கு சில நொடி அசந்து போனாலும் சுதாரிச்சுக்கிட்டுச் சொன்னார்..
“பிசினஸ்னா தொழில் தான தம்பி? எனக்குத் தொழில்னு எதுவும் இல்லீங்களே?”
“விவசாயம் உங்க தொழில் இல்லீங்களா?”
இந்தக் கேள்வி காதுல உளுந்ததும் பெரியவர் முகம் கொஞ்சம் வேதனையக் காட்டி உடனே தெளிவாச்சு.. தோள்ல கெடந்த துண்ட எடுத்து மொகம் தொடைச்சுட்டு வெற்றியப் பாத்துச் சொன்னார்..
“அந்தக் கயித்துக் கட்டில எடுத்து வேப்ப மரத்து நெழல்ல போடுப்பா.. வந்தவங்கள நிக்க வச்சுப் பேசிக்கிட்டு.. நல்லாவா இருக்கு?”
வெற்றி வேகமா அங்க போட்டிருந்த பெரிய சாளைக்குள்ள (பனங் கீத்தால வேயப்பட்ட குடிசை) போயி கயித்துக் கட்டில எடுத்துட்டு வந்து வேப்ப மரத்து நெழல்ல போட்டு அதும் மேல ஒரு போர்வையும் விரிச்சான்… பெரியவர் கௌதம் தோள்ல அன்பா கையப் போட்டுச் சொன்னார்..
“அருமையான கேள்வி கேட்டீங்க தம்பி.. வாங்க.. உக்காந்து பேசலாம்’
சொல்லிட்டு திரும்பி நளினி கைய இன்னொரு கையால புடிச்சுச் சொன்னார்..
“வா சாமி.. நீயும் வந்து உக்காரு”
பெரியவர் நடு நாயகமா கட்டில்ல உக்கார பக்கத்துக்கு ஒருத்தரா இவங்க ரெண்டு பேரும் உக்காந்ததும் மடிப் பைல இருந்து வெத்தலைய எடுத்து காம்பக் கிள்ளிக்கிட்டே பேச ஆரம்பிச்சார்..
”விவரம் புரியாத பட்டணத்து ஆளான நீங்கன்னு மட்டுமில்ல தம்பி.. இப்பெல்லாம் எங்காளுங்களே விவசாயத்தத் தொழிலாத் தான் பாக்கறாங்க”
இடைவெளி குடுத்து தாத்தா ஒரு கொட்டப் பாக்க எடுத்து வாயால ‘உப்’னு ஊதி உள்ள போட்டு கடக் முடக்னு மென்னு நொறுக்கிட்டே வெத்தலைக்குச் சுண்ணாம்பு போட்டபடி இருக்க நளினி அடக்க முடியாம கேட்டா..
“அப்ப விவசாயம் பிசினஸ்ல சேராதா தாத்தா?”
தாத்தா சிறுஞ் சிரிப்பா சிரிச்சுக்கிட்டே சுண்ணாம்பு தடவின வெத்தலைய அழகாச் சுருட்டி வாய்க்குள்ள திணிச்சு அசை போட்டுக்கிட்டே சொன்னார்..
“விவசாயம்ங்கறது தொழில் இல்ல கண்ணு.. இந்த மண்ணுல பொறந்து,இங்கியே தவுந்து வளர்ந்து,இந்த மண்ணுல வெளஞ்சதையே ஆக்கித் தின்னு, இங்கயே பேண்டு கழிஞ்சு, இதுக்கே ரத்தத்தையும் வேர்வையும் சிந்தி.. கொஞ்சம் காசு மிச்சமானா இதுக்குப் பக்கத்துல இணைப் பூமிய வாங்கி.. கடசீல இந்த மண்ணுக்கே உரமாகறது தான் விவசாயி வாழ்க்கை சாமி.. அத ஒரு தொழிலாப் பாக்கறது பாவம்மா.. ஒரு அம்மா தன் கொழந்தைக்குச் செய்யறதையும், மகன் வயசான தாய்க்குச் செய்யறதையும் என்ன பேரு வச்சுச் சொல்றது? வெறும் கடமையா அது? அப்படித்தான் விவசாயப் பொழப்பும்.. இந்த மண் எங்க இன்னொரு தாய்.. போன, வந்த,வர்ற தலை முறைகளுக்கும் தாய்.. அவள ஒரு கம்பனியா, ஜடப் பொருளா பாக்க முடியுமா? தாய்ப் பாலுக்கும் அவ காட்டற அன்புக்கும் விலையோ,ஈடோ உண்டா என்ன? அதுக்கு ஈடா உங்களால இன்னொண்ணச் சொல்ல முடியுமா? விவசாயமும் அப்படித் தான்! அது தொழில் இல்ல.. இந்த மண்ணம்மா குடுத்தாலும் மறுத்தாலும் சொணங்காம வாழற மண் சார்ந்த வாழ்க்கை முறையது.. எப்ப விளை பூமிய சதுர அடிக் கணக்குல பிரிச்சு வீட்டு மனையா விக்க ஆரம்பிச்சாங்களோ அப்பவே விவசாயமும் விவசாயிங்களும் செத்துப் போயிட்டாங்க தாயே”
“அரசாங்கம் விவசாயிங்களக் கண்டுக்கறதில்லேன்னு சொல்றாங்களே?”
பெரியவர் சுண்ணாம்பு டப்பில ஆள்க் காட்டி விரலால கொஞ்சம் எடுத்து கீழ் கடை வாய்ப் பல்லுல இழுத்து வெத்தலையோட மென்னவர் உக்காந்த வாக்குல ஆள்காட்டி வெரலோட நடுவிரலையும் நேரா உதட்டுல வச்சு ‘பொழிச்’னு வெத்தலச் சாத்தத் துப்ப அது துளியும் சிதறாம, யாரு மேலயும் சிந்தாம பத்தடிக்கு அந்தப் பக்கம் போய் விழ எப்பவும் போல நளினி ‘வாவ்’னு வாயப் பிளந்து ஆச்சரியப்பட அவர் தொடர்ந்தார்..
“இதெல்லாம் சில வார்த்தைகள்ல முடியற விசயமில்ல கண்ணுங்களா? ரவைக்கு மொட்ட மாடில உக்காந்து நெலாச் சோறு சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்”னு சொல்லிக்கிட்டே எந்திரிச்சுக் கும்பிட்டு,”ரெண்டு பேரும் உத்தரவு குடுத்தீங்கன்னா எனக்குக் கொஞ்சம் சோலிங்க இருக்கு.. முடிச்சுட்டு வந்துடுவேன்”னு பணிவாக் கேக்கவும் ரெண்டு பேரும் ஆடிப் போயிட்டாங்கன்னே சொல்லலாம்.. துள்ளி எந்திரிச்ச நளினி கும்பிட்ட பெரியவர் கையப் புடிச்சுச் சொன்னா..
“என்ன தாத்தா இது? நீங்க போயிட்டு வாங்க.. நிச்சயம் உங்க கிட்ட நிறையப் பேசாம ஊருக்குப் போக மாட்டோம்”
பெரியவர் பேரங் கிட்டத் திரும்பி பாத்துக்கோங்கற மாதிரி ஜாடையா உத்தரவு போட்டுட்டு தோள்ல கெடந்த துண்ட எடுத்து ஒதறி தலைக்கு உருமாலாக் கட்டிக்கிட்டே வெளிய போக நளினி அவசரமா சன்னக் குரல்ல வெற்றியப் பாத்துக் கேட்டா..
“ரவைக்கு நெலாச் சோறு சாப்பிடலாம்னாரே.. அது என்னடா?”
“ராத்திரி வெட்ட வெளில நிலா வெளிச்சத்துல சாப்பிடறது”
அவ வழக்கம் போல ‘வாவ்’போட கௌதம் கேட்டான்..
“டேய் வெற்றி.. நாம ரெண்டு பேரும் மோகி வீட்டு வரைக்கும் போயிட்டு வரலாமா?”
இதக் கேட்டதும் புன்னகை சுருங்க யோசிச்ச வெற்றி தயங்கிச் சொன்னான்..
“நான் வர முடியாது.. பக்கம் தான்.. இந்த வழிலயே போனா ஆயிரம் அடில ஒரு பெரிய வீடு வரும்.. ப்ளூ கலர் கேட்.. பைக்க எடுத்துட்டு போ”
“நீ வந்தாத் தான் போவேன்.. இப்பக் கெளம்பறியா, இல்லையா?”
“தயவு செஞ்சு இந்த ஒரு விசயத்துல என்னக் கம்பெல் பண்ணாத.. என்னால முடியாது”
“காரணம் சரியாச் சொன்னா உன்னக் கட்டாயப் படுத்த மாட்டேன்.. ஏன் வர மாட்டே?”
வெற்றி ஒரு தடவ ஆழமா மூச்ச இழுத்து விட்டுச் சொன்னான்..
“ஏன்னா,எங்களுக்கும் அவ குடும்பத்துக்கும் இருபத்தஞ்சு வருசமா தீராப் பகை இருக்கு.. எனக்கு அத்தை பொண்ணு தான் அவ…..”
(இன்னும் பூக்கும்…
