18-என் மழை மேகமாய் நீ ஆகினாய்…

18-என் மழை மேகமாய் நீ ஆகினாய்…

18-என் மழை மேகமாய் நீ ஆகினாய்…

18-என் மழை மேகமாய் நீ ஆகினாய்…

18-என் மழை மேகமாய் நீ ஆகினாய்…

காதல் கொண்ட மனது  தன் இணையின் குரலுக்காக ஏங்கி தவம் இருக்கையில் கர்ண கொடூரமாக தன் பாட்டியின் குரல் காதில் விழ உணர்ச்சிகள் அனைத்தும் வடிந்து கோபமாக உருவெடுத்தது…

அதன் வெளிப்பாடுதான்  பேச மனம் இல்லாமல் காலை கட் செய்து விட்டு போனை வெறித்துப் பார்த்தபடியே சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தான் கரிகாலன்….

 இங்கு பாட்டிக்கோ என்னடா இவன் போனை கட் செய்து விட்டானே… என்ன  நினைத்து கொண்டு இருக்கிறான் என்று புரியவில்லையே?? நான் சொன்னதை எப்படிப் புரிந்து கொண்டான் என்பதும் புரியவில்லையே என ஒரே குழப்பம்..

மீண்டும் பேரனுக்கு அழைக்க, வேண்டா வெறுப்போடு  அவன் அட்டெண்ட் செய்து, பாட்டி பேசும் முன்னர்,” உங்களுக்கும் வேலையில்லை அவளுக்கும் வேலையில்லை.. ரெண்டு பேரும் ஏதோ ஒன்னு செஞ்சுட்டு, சண்டை போட்டுட்டு சின்ன குழந்தைகள் மாதிரி என்கிட்ட   கம்ப்ளைன்ட் பண்ணாதீங்க..

அவளின் விளையாட்டு புத்தியை சரி செய்து குடும்பத்துக்கு ஏற்ற குத்துவிளக்காய் மாற்றுவீர்கள் என நினைத்தால் நீங்களும் அவ கூட சேர்ந்து லூட்டி அடிக்கிறீங்க…

அவ என்னடான்னா இவன் இங்க தொட்டான் அங்க தொட்டு பேசினான்  இங்கே கிள்ளினான், அங்கே கையை பிடித்து இழுத்தான் என்று ஒரு எல்கேஜி குழந்தை போல  வந்து உங்களிடம் கம்ப்ளைன்ட் பண்ணுகிறாள்….

 நீங்களும் அதைக் கேட்டுக்கொண்டு அவளுக்கு புத்தி சொல்லாமல் என்னிடம் பஞ்சாயத்து பண்ணுகிறீர்கள்….

 இப்பொழுது மட்டும் எதற்காக அவளைப் பற்றி என்னிடம் குறை கூற வருகிறீர்கள்?? நீங்கள்  ஆச்சு அவள் ஆச்சு உங்களுக்குள் என்னமோ பண்ணிக்கோங்க…

  இன்னொரு முறை இந்த மாதிரி என்கிட்ட போன் பண்ணி பேசினா.. நான்  உங்களை கண்டபடி திட்டி விடுவேன் பாட்டி.. ஏற்கனவே பல டென்ஷனில் இருக்கிறேன், சும்மா சும்மா என்ன தொந்தரவு பண்ணாதீங்க..  முதல்ல நீங்க போனை வையுங்க”.. என்று கடுகடுப்பாக கூறி இவன் வைத்து விட்டான்..

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக வருதே நமக்கு.. இவன் மாமியாகாரி பண்ற அட்டூழியம் தாங்க முடியாம இவனை வர வைக்கலாம் என நாம் ஒரு திட்டம் போட்டால், அது நமக்கே வேறு விதமாய் திரும்பி முடிகிறது…

 இவனை நம்புவது வேஸ்ட் நானே இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன்.. என்று அவன் வரும்போது வரட்டும் என இந்த யோசனையை கைவிட்டார் பாட்டி, ஒரு அருமையான யோசனை உடன் வியாவை நாடினார்..

அதிகாலை மூன்றரை மணி..

சித்தியின் அறைக்கதவு  தட்டப்பட, ” யாரது அர்த்தராத்திரியில் இப்படி தூக்கத்தை கொடுப்பது” என்று மிகுந்த கோபத்துடன் அரை தூக்கத்தில் எழுந்து கதவை திறக்க…

 சர்வ லக்ஷணமாக வியா  நின்று கொண்டிருந்தாள்…

நெற்றியில் ஒற்றை ரூபாய் அகல கட்டின புடவைக்கு ஏற்றார் போல நீலக் கலரில் பொட்டு, அதற்கு மேலே சற்று  பட்டையாக சந்தனக் கீற்று, அதற்கு மேலே அதைவிட சற்று பட்டையாக திருநீறு…

 பொட்டுக்கு கீழே  அதன் பாதி அளவு பருமனில் குங்குமம்.. மொத்தத்தில் நெற்றி முழுக்க வகைவகையாய் கலர் கலராய் பொட்டுக்கள்…

தலைக்கு குளித்து ஈரம் காயாத தலைமுடி… இரு பக்க காதின் ஓரம்  சிறு கத்தை முடிகளை எடுத்து தண்ணி ஜடை போட்டு, கீழ் நுனியில் முடிச்சுட்டு ரப்பர் பேண்ட் போட்டு இருந்தாள்.. 

காற்றில் அவை அழகாக பறந்து இவளுக்கு மேலும் பேரழகை கொடுத்துக் கொண்டிருந்தன…

கையில் சாம்பிராணிப் புகையோடு கரண்டி.. அவளை  சுற்றி ஒரு புகை மண்டலத்தை தோற்றுவித்து மேலும் அழகூட்டியது..

 இவள் நின்று கொண்டிருந்த கோலம் பார்த்து “ஐயோ பே….பே…..பேய்”…… என்று சித்தி பயந்து அலறி கத்தி கூச்சலிட்டு அனைவரையும் தூக்கத்திலிருந்து எழுப்பி ஒரே களேபரம்…

பின்னாடியே இதை அனைத்தையும் பார்த்து உள்ளூர சிரித்து கொண்டே  எதார்த்தமாய் உள்ளே வந்த பாட்டி, “ஏன் சம்பந்தி இப்படி பயப்படுறீங்க?? நம்ம மானசா பாப்பா தான் இது.. இப்பதான் சாமி கும்பிட்டுட்டு வருகிறோம், இதுக்கு மேல எங்க வீட்ல யாரும் தூங்க கூடாது, நீ போய் ரூம் முழுக்க சாம்பிராணி காட்டி விட்டு வா பாப்பா” என்று கூறினார்…

“இந்தாங்க எல்லாரும் அருகம்புல் சாறு குடிங்க.. முடிச்சதுக்கப்புறம்  உங்க காலைக் கடன்களை முடித்துவிட்டு கால் மணி நேரத்துல வாசலுக்கு வந்துருங்க, யோகா மாஸ்டர் வந்துருவாரு எல்லாரும் யோகா பண்ணனும்…

 இது வீட்டு ஆட்களுக்கு மட்டுமல்ல வீட்டுக்கு யாராவது வந்து தங்கி இருந்தாலும் எங்களுடைய இந்த பழக்கத்தை கடைபிடிக்கவேண்டும் சீக்கிரம் குடிங்க” என்றபடி இவர்களுக்காகவே ஸ்பெஷலாக தயாரித்தபச்சை கலரில், கீரைகள் காய்கறிகள், இலை தழைகள், புற்கள் என்று கைக்குக் கிடைத்ததையெல்லாம் அள்ளி போட்டு அரைத்து ஜூஸ்..

அவர்களை ஒரு வாயாவது  குடிக்க வைத்து விட்டு வெளியே சென்றார் புன்சிரிப்போடு…

அதற்கே  சித்தியும் அவள் அப்பாவும் முதல் நாள் சாப்பிட்டது  முதல்கொண்டு வாந்தி..

ஒரு வழியாய் அறையை விட்டு ஒரு மணி நேரம் கழித்து வெளியே  வந்தவர்களை முறைத்த வண்ணம் பாட்டி…

“இப்படி நேரம் தவறி வந்தா எப்படி?? யோகா கிளாஸ் முடிஞ்சு போச்சு.. சரி வாங்க தோட்டத்துக்கு  போகலாம்.. கொஞ்ச நேரம் களை பிடுங்குவோம்…

குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும் பொழுது உடலுக்கும்  ஆரோக்கியம் அதே சமயம் வீட்டை சுற்றியும் சுத்தமாக இருக்கும் வாங்க சம்மந்தி” என கையை பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று விட்டார்..

ஒரு மணி நேரம் முதுகு ஓடிய வேலை…

காலை உணவிற்கு வேகவைத்த வேர்க்கடலை, வேகவைக்காத பச்சைக் காய்கறிகள் சாலட், கவுனி அரிசி கஞ்சி, முளைக்கட்டிய  பயிறு வகைகள் கலந்த சாலட், என அடுக்கி வைக்கப்பட்டிருக்க உண்மையில் நொந்தே போய்விட்டார் சித்தி…

இதற்குமேல் இவர்கள் வீட்டில் நம்மால் இருக்க முடியாது டா சாமி..குடும்பமா இது கொள்ளைக் கூட்டம்.. நான் உடனே ஊருக்குக் கிளம்ப வேண்டும் ஆனால் இந்த பொன் முட்டையிடும் வாத்தை எப்படி அப்படியே விட்டுச் செல்வது?? யோசனையாய் சித்தி இருக்க, தாத்தாவின் மூலம் அதற்கும் ஒரு விடிவு வந்தது..

அவருக்கு இங்கு நடக்கும் விஷயங்களை பார்த்தவரை,தன் பேத்தியை இவர்கள் நன்கு தான் வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாய் புரிந்துவிட்டது.. ஆனால் ஏனோ இவள் சித்தி காரியை அந்த பாட்டிக்கு பிடிக்காத காரணத்தால் மிகவும் குத்தி பேசுகிறார்கள் அதுதான் இவர் மனதிற்கு இடித்தது..

வீசினகையும் வெறும் கையுமாக தன் பேத்தி வந்தது தான் இதற்கு ஒரே காரணம் என முடிவு செய்து, காலை உணவிற்குப் பின் அனைவரிடமும் பேச வேண்டும் என கூறினார்..

இந்தக் கிழம் என்ன பேசப் போகிறது என்ற சித்தி யோசனையாய் நடை போட்டுக் கொண்டிருந்தார்..

 கரிகாலனின் தாத்தாவிடம் பேசுவதுபோல ஆரம்பித்தார்,” இங்க பாருங்க சம்பந்தி, எப்படியோ ஒரு விதத்தில் என் பேத்திக்கும் உங்க பேரனுக்கும் கல்யாணம் ஆயிருச்சு. நடந்து முடிந்ததை பேச வேண்டாம் ஆனால் இனி நடக்கப் போவதைப் பற்றி சிறிது நான் பேச வேண்டும்..

என்னதான் இருந்தாலும்  எங்க பொண்ணு எந்த சீர் செனத்தி இல்லாமல் வந்த பொண்ணு தானே என்று நாளைக்கு யாராவது ஏதாவது சொன்னால் எங்க பாப்பா என்ன பண்ணும் பாவம்…அதனால் எங்க தகுதிக்கு தகுந்த மாதிரி செய்து அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறோம்..

 என் மகள் வயிற்று பெண்ணிவள்.இவளுக்கு யார் செய்கிறார்களோ இல்லையோ நான் செய்ய வேண்டியது என் கடமை.. அப்பொழுதுதான் என் மகளின் ஆத்மா சாந்தியடையும்.. 

எனக்கு இருக்கும் சிறு காணி நிலமும் பேங்க் பேலன்ஸ் போக என் மனைவியின் நகைகளும் சிலது உள்ளன.. அவை அனைத்தையும் என் பேத்திக்கு போட்டு அழகு பார்த்து… மாப்பிள்ளையையும்  அழைத்து, அவருக்கும் மறு வீட்டு விருந்து செய்து முறையாய் எங்கள் பெண்ணை அனுப்பி வைக்கிறோம்..

அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் அதனால் இப்பொழுது என் பேத்தியை அழைத்துக் கொண்டு என் வீட்டிற்கு செல்கிறோம்..

 மாப்பிள்ளை வந்தவுடன் தகவல் கூறுங்கள் முறையாக  வந்து அழைத்துச் சென்று விருந்து முடித்து சீரோடு மகளையும் மாப்பிள்ளையும் நாங்களே வந்து அன்பாய் விட்டு விட்டுச் செல்கிறோம்…

இதற்கு நீங்கள் கண்டிப்பாக அனுமதி தரவேண்டும்..என் பேத்தியை அவள் அப்பா சித்தியுடன் அனுப்புவதற்கும் நான் தயாராக இல்லை..

எனக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லை ஏதோ கேன்சர் என்று  கூறுகிறார்கள்.. எனக்கு அதைப்பற்றி கவலையும் இல்லை வயசாகிவிட்டது எப்பொழுது இந்தக் கட்டை போனால் என்ன??..

இதை அறிந்து கொண்டு என்னை வைத்து உங்களிடம் ஏதாவது பணம் கறக்கலாம் என்று நினைத்துத்தான், இத்தனை நாள் என் கண்ணில் என் பேத்தியை காட்டாதவள் திடீரென்று அவள் இருக்கும் இடம் எல்லாம் தெரிந்து விட்டது வாருங்கள் போகலாம் என அழைத்து வந்திருக்கிறாள்…

இது கூட தெரியாத முட்டாள் அல்ல நான்..சமயம் பார்த்து இதை மாப்பிள்ளையிடம் கூறலாம் என்று தான் இவர்கள் ஆடி ஆட்டத்தையும் பொறுத்துக் கொண்டு இங்கு அமைதியாய் இருந்தேன்..

ஆனால் இடத்தைக் கொடுத்தால் இவர்கள் மடத்தை பிடுங்குவார்கள் என்பதால் இதோடு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே சபையிலேயே இதைப் பற்றி பேசுகிறேன்..

இப்பொழுது நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதை சொல்லுங்கள் சம்பந்தி உங்கள் பேச்சுக்கு நான் மிகுந்த மதிப்பு கொடுக்கிறேன்”..

தன் மனதில் நினைத்தவற்றை அனைவர் முன்னிலையிலும் கூறியதோடு சித்தியின்  பிளானை அனைவர் முன்னிலையில் போட்டு உடைத்து அவரை சற்று கதி கலங்க வைத்துவிட்டார் தாத்தா…

யாரும் கேள்வி கேட்கும் முன்னர், நாமே முந்திக் கொள்ளலாம் என்று நினைத்து, ” என்னைப் பத்தி நீங்க இவ்வளவு கேவலமா நினைச்சுருக்கிறீங்க  எனும் போது எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது.. அப்படி ஒன்னும் இவளை தூக்கி நான் தலையில் வைத்துக் கொண்டாட வேண்டும் என்று அவசியம் எனக்கு இல்லை”.. என்று தாத்தாவைப் பார்த்து கூறியதோடு தன் கணவரையும் பார்த்து பேசலானார்..

“இங்க பாருங்க உங்களுக்கு உங்க மக வேணும்னா கொஞ்சிக் குலாவிக்கோங்க,  ஆனால் இனிமேல் எதற்கும் நான் வரமாட்டேன்.. அவளும் என் வீட்டிற்கு வரக் கூடாது..   இப்பொழுது நான் கிளம்புகிறேன் என்னோடு வருவதாக இருந்தால் தாராளமாய் நீங்கள் வரலாம்…

 இல்லை உங்கள் மகள் தான் வேண்டுமென்றால் இங்கேயே இருந்து கொள்ளுங்கள்” என்றபடி அவரது அறைக்குச் சென்று தன் மூட்டை முடிச்சுகளை  கட்டலானார்..

கீ கொடுத்த பொம்மை போல கணவரும் குழந்தைகளும் அவரவர் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு அனைவரிடமும் பொதுப்படையாக கூறிக் கொண்டு கிளம்பி விட்டனர்..

“இனி உங்களிடம் எதுவும் தேறாது என்று முடிவு செய்ததாலேயே அவள் ஏதோ ஒரு காரணத்தை கூறி  இங்கிருந்து கிளம்பி விட்டாள், இதற்குமேல் என்னோடு என் பேத்தியை நீங்கள் அனுப்புவதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா சம்மந்தி”?? என்று மிக தன்மையாகவே தாத்தா கேட்டார்..

“அவர் கேட்பது நியாயம்தானே.. ஒரு வாரம் பேத்தியை தன்னோடு வைத்து சீராட்டி அனுப்பட்டுமே”.. என்று பாட்டி வியாவிற்காக பரிந்து பேசினார்..

அனைவரும் இதை ஆமோதிக்க, அவளின் பயணம் ஏற்பாடாகியது..”சீனியரிடம் சொல்லாமல் போனால் அவர் கோபித்துக் கொள்ள மாட்டாரா பாட்டி”..

“அவன் கிட்ட நான் சொல்லிக்கிறேன் நீ கிளம்பு..அவன் வந்தவுடன்  உனக்கு தகவல் கொடுக்கிறேன், உன் தாத்தாவுடன் மற்ற உறவினர்களையும் அனுப்பிவை.. அவர்களோடு கரிகாலனும்  இணைந்து அங்கு வரட்டும்,அதன்பின் விருந்து முடித்து ஒரே நாளில் மீண்டும் வந்து விடுங்கள் சரியா”?? என இவள் தடவை தலையை அன்பாய்  தடவி கொடுத்தபடி பாட்டி கேட்டார்…

“சரி பாட்டி” என்றவாறு ஒரு பத்து நாட்களுக்கு தேவையான துணி மணிகளை எடுத்து வைத்தவாறு தன் பிரயாணத்திற்கு ஆயத்தமானாள் வியா…

தாத்தாவின் கிராமம்…

இவள் தந்தை தான் சென்னை  வாசியே தவிர தாத்தா காஞ்சிபுரம் உத்திரமேரூரில் உள்ள சிறு கிராமமான  வில்லிவளம் தான் சொந்த ஊர்…

அன்பான மக்கள்.. அண்டையில் உறவினர்கள்.. என்று தன் காலத்தை அங்கேயே கழித்து விட்டார் தாத்தா.. 

இப்பொழுது பல வருடங்களுக்குப் பின்பு தான்  இளவயதில் வாழ்ந்த அந்த இடத்திற்கு மீண்டும் வருகிறாள் வியா..

உறவினர்களின் பாசப்பிணைப்புகளுக்கு பின்னர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஒரு நாள் ஆகிவிட்டது அவளுக்கு.. இன்னும் கரிகாலனிடம் இருந்து ஒரு அழைப்பு கூட  வரவில்லை..

இவள் ஒரு முறை அழைத்து அவன் எடுக்காததால் அவனாக கூப்பிடும் வரை நாம் பேசக்கூடாது என்று வைராக்கியத்தில் அவனுக்காகக் காத்திருக்கிறாள்..

தனது ஒருவார  பயணம் பத்து நாட்களாய் தொடர அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு மிகுந்த உற்சாகத்தில் வீட்டிற்கு வந்தான் கரிகாலன்..

வந்ததும் கூட்டத்தில் இருப்பவர்களிடம் பேசிவிட்டு குளித்துவிட்டு வருவதாக கூறி தன் அறைக்குச் சென்றான் தன்னவளை காண ஆவலாய்…

அங்கு அவனுக்கு முதல் ஷாக்.. அறையில் வியா இல்லை.. சுத்தமாக துடைத்து வைத்திருக்கின்ற அறை அவனை வரவேற்றது…

சரி என்று பயணக் களைப்புத் தீர குளித்து  கீழே வந்து காலை உணவிற்குப் பின் சாவகாசமாக பாட்டியிடம்,” நான் வந்து இவ்வளவு நேரம் ஆகிறது.. எங்கே போனால் உங்கள் செல்ல பேத்தி”?? என்று எதார்த்தமாக கேட்க,  பாட்டியின் பதார்த்தமாக பதில் கூறினார்..

“அவ அவங்க ஊருக்கே, அவங்க தாத்தா கூட போய்விட்டாள்” என்று…

“கோபமும்,ஆச்சர்யமும்,யோசனையும் என பல முகங்கள் காட்டியவன்..இறுதியாக, ஒரேயடியாக போய் விட்டாளா இல்லை சில நாட்கள் மட்டும் தான் என விருந்தாளியாக சென்றிருக்கிறாளா?? அது மட்டும் சொல்லுங்கள் போதும்,மீதியை நான் முடிவு செய்து கொள்கிறேன்” என்று அடக்கப்பட்ட தன் கோபத்துடன் மிக நிதானமாகக் கேட்டான் கரிகாலன்…

“அடேய் அடேய் பேராண்டி எதுக்கு இத்தனை எமோஷன் உனக்கு??அவ போன் பண்ணினாலும்   நீ எடுக்கவில்லையாம்… அதனால் கோபித்துக்கொண்டு அவள் தாத்தா வீட்டிற்கு சென்றிருக்கிறாள்.. நீ வந்து சமாதானம் செய்தால்தான் இங்கு  வருவாளாம்.. உனக்கு எப்படி வசதி”..

“ஓ அந்த அளவுக்கு ஆகிப் போச்சா அவளுக்கு?? இது யார் கொடுத்த தைரியம் பாட்டி, நீங்களா?? இல்லை அவளே தானே எடுத்த சுய முடிவா”??

“க்கும் அவளுக்கு சொந்தமாக  முடிவு எடுக்கும் அளவிற்கு அறிவு மிகக் கூர்மையாக இருந்தால் இன்னும் ஏன் என் முந்தானையை பிடித்துக்கொண்டு  சுற்றுகிறாள்??அது எல்லாம் நான் கொடுத்த ஐடியா தான்”…

“ஏன் பாட்டி??  ஏன் என் வாழ்க்கையில் இப்படி கும்மி அடிக்கிறீர்கள்??அவளை கொஞ்சமாச்சும் வழிக்கு கொண்டுவர வேண்டும் என்று நானும் படாதபாடு படுகிறேன் என் அருகில் இருந்தாலே என் சொல் பேச்சு கேட்பது அரிது.. இதில் அவளை நாடு கடத்தி இருக்கிறீர்கள்..

நான் நல்லபடியாக குடும்பம்,குழந்தை குட்டி என வாழ்வதா வேண்டாமா?? ஏற்கனவே அருகில் நின்று பேசினேன் என்பதற்கே உங்களிடம் வந்து கம்ப்ளைன்ட் செய்தவள் அவள்…

 ஏதோ ஊரில் இல்லாத நேரம் வாழ்க்கை என்றால் என்ன?? என எடுத்துக் கூறி நல்லபடியாக மாற்றி வைத்து இருந்திருப்பீர்கள் என்று நம்பிக்கையுடன் வந்து பார்த்தால்….

 இங்கு அடித்தளமே ஆட்டம் காண்கிறது.. எனக்கு வர வர என்ன செய்வது என்று புரியாமல் கோபம் மட்டும் அதிகமாக வருகிறது.. இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை”.. என சற்று கோபமாக கூறினான்..

“அட போடா முட்டாள்”…. 

“என்னது நான் முட்டாளா??என்ன ஆச்சு உங்களுக்கு??ஏன் இப்படி எல்லாம் சம்பந்தமில்லாமல் என்னை திட்டிக் கொண்டிருக்கிறீர்கள்”??

“டேய் பேராண்டி மயிலே மயிலே இறகு போடு என்றால் போடுமா?? நாம்தான் புடுங்க வேண்டும்.. இது  தெரியாமல் நீ எல்லாம் எப்படி உன் தாத்தாவுக்கு பேரனாய் பிறந்தாயோ போ..

 உன் தாத்தா அந்தக் காலத்திலேயே ஊரே திரும்பிப் பார்க்கும் மம்முதன், நீ என்னடாவென்றால் கட்டுன பொண்டாட்டி  கிட்டேயே பேசத் தெரியாமல் முழிக்கிறாய், அட போடா போக்கத்தவனே”….

“நான் என்ன சொல்றேன் நீங்க என்ன சொல்றீங்க பாட்டி??அவளுக்கு நாலு நல்ல புத்தி சொல்லி என் கூட வாழ சொல்லுங்க என்று சொன்னால் மயில், இறகு என்று கதை  அளந்து கொண்டு இருக்கிறீர்கள்..

 வரவர நீங்களும் அவளுடன் சேர்ந்து கொஞ்சம் நட்டு கழண்டது போல்தான் பேசுகிறீர்கள்..இனி உங்களிடம் சொல்வது பிரயோஜனம் இல்லை என்று புரிந்து விட்டது நானே என் வாழ்க்கை பார்த்துக் கொள்கிறேன்”..

அவனை பாவமாகவும் இப்படியும் ஒரு அப்பிராணி  பேரனா என்று ஆச்சரியமாகவும் பார்த்த பாட்டி,இது பட்டு திருந்த வேண்டிய கேஸ்..  ஜாடைமாடையாக சொன்னால் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பே இவனுக்கு கிடையாது.. என் என நினைத்து இந்த விஷயத்தைப் பற்றி  பேசுவதை இதோடு விட்டுவிட்டார்..

“அவங்க தாத்தா வந்து எங்க புள்ளைக்கு ஒன்னும் செய்யாம சும்மா அனுப்பி விட்டோம் அதனால் எங்கள் தகுதிக்கு  ஏற்றவாறு ஏதாவது சீர் செய்து அனுப்பி வைக்கிறோம் என்று கூறி அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்…

 நீ வந்ததும் தகவலும் கூறி விட்டேன் அவர்களும் கிளம்பி வந்து கொண்டிருக்கிறார்கள்..அனேகமாக இன்று மாலை வந்து விடுவார்கள்..

 எனவே மீண்டும் கிளம்புவதற்கு தயாராகிக் கொள்.. உனக்கு அங்கு மறு வீட்டு விருந்து செய்து உன்னையும்  அவளையும் கொண்டு வந்துவிடுவார்கள்….

 இனியாவது அவளுடன் உடலும் உயிருமாக வாழ்வதற்கு முயற்சி செய் தம்பி இதற்கு மேல் சொல்வதற்கு எனக்கு ஒன்றுமில்லையப்பா” என்றவாறு அங்கிருந்து எழுந்து சென்று விட்டார்..

நம்ம ஒன்னு கேட்டா இந்த பாட்டி ஒன்னு பேசுது அதுக்கப்புறம் நமக்கு புரியவில்லை என்று சொல்லி நம்மளையே மறைமுகமாக திட்டுகிறது இந்த  பாட்டிக்குஎன்னாச்சுனு தெரியல..

அவங்க தாத்தா வந்து கூப்பிட்டால் இவள் பாட்டுக்கு போவாளா??  என் கிட்ட ஒரு போன் பண்ணி பர்மிஷன் கூட கேட்க மாட்டாளா?? அந்த அளவுக்கு தான் நான் அவளை வைத்திருக்கிறேன்.. 

இருடி முழுதாக இதுதான் கடைசித் தடவை… இனிமேல் இந்த மாதிரி ஏதாவது பண்ணி பாரு  அப்படியே போயிரு இனி திரும்பி வராதனு உங்கிட்ட சொல்றேன்…

 என்றவாறு பாட்டி சற்று கடுமையாக கூறியதையும் அவளும் இல்லாத வெறுமையான அறையையும் ஏற்றுக்கொள்ள இயலாத கரிகாலன் அமைதியில்லாத மனநிலையில் கூடத்தில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக் கொண்டிருந்தான்…

அதே சமயம்  அந்த ஊரை விட்டே ஒதுக்கி வைத்த, இவனுக்கு எதிராக வேலை செய்த சேகரன் வெற்றிக் களிப்போடு இவர்கள் வீட்டுக்குள் குடும்ப சகிதமாக  வந்து கொண்டிருந்தார்…..

வீட்டினர் அனைவரின் மனதிலும் சற்று அதிர்ச்சி….

Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *