சித்ரா
2001-ல் முதல் முறை பார்த்தபோது இரண்டரை மணி நேரப் படம், ஒரு மணி நேரத்தில் முடிந்தது போலிருந்தது. இதுவரை ஏழெட்டு முறை பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன். இப்போதும் அந்த உணர்வு அப்படியேதான் இருக்கிறது.
ஓசூர் செந்தில்நகர் வீட்டில் ஒரு விடுமுறை நாள் காலை உணவிற்குப் பின் நானும், அம்முவும்தான் முதல்முறை ரிதம் பார்த்தோம். எனக்கு படம் சென்சார் செர்ட்டிஃபிகேட்டிலிருந்து பார்க்க வேண்டும்; அம்மு படத்தின் டைட்டில்களை எப்போதும் ஃபாஸ்ட் ஃபார்வர்டு செய்து விடுவார் (காட்சிகள் இல்லாத டைட்டில்களை). ரிதம் பார்க்க ஆரம்பித்தபோது, என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, டைட்டில்களை ஃபார்வேர்டு செய்துவிட்டார். வசந்த் படமென்றும், இசை ஏ.ஆர் என்றும் முன்னரே தெரியும். ஆனால், படம் பார்த்து முடித்தபின், ஆச்சர்யத்துடன் அம்முவிடம் “எடிட்டிங் யாருன்னு பாரு அம்மு. அட்டகாசமா இருந்தது” என்றேன்.
“ஸ்ரீகர் பிரசாத்” என்ற பெயர் அப்போதுதான் எனக்கு அறிமுகம் ஆனது. ஒரு படத்தில், எடிட்டிங் என்ன மாயம் செய்ய முடியும் என்பதற்கு ”ரிதம்” ஒரு உதாரணம் என்று நான் அம்முவிடம் சொன்னேன். அம்முவிற்கும் “ரிதம்” மிகவும் பிடித்திருந்தது. “எடிட்டிங் மட்டுமில்ல பாவா, படம் நல்லாருந்ததுக்கு ரஹ்மான் பிஜிஎம்-மும், வசந்த்தோட டயலாக்ஸூம் டைரக்ஷனும் கூட காரணங்கள்தான்” என்றார் அம்மு.
உண்மைதான். இயக்கம், பாடல்கள், பின்னணி இசை, உரையாடல்கள், காட்சிகள்…எல்லாமே கச்சிதமாய் பொருந்திப்போன ஒரு அழகான நல்ல சினிமா.
***
ஏ.ஆரின் அந்தக் காலம் ஒரு வசந்த காலம் என்றுதான் நினைக்கிறேன். என்ன ஒரு அற்புதமான பின்னணி இசை! என்ன ஒரு அட்டகாசமான பாடல்கள்!
இயற்கையின் ஐந்து ப்ரக்ருதியை (நிலம், நீர், காற்று, நெருப்பு, வான்) அடிப்படையாக வைத்து ரிதம் டீம் ஐந்துபாடல்களை அமைத்ததாக பின்னர் தெரிந்துகொண்டேன். தர்பாரி கானடா ராகத்தில் அமைந்த “காற்றே என் வாசல் வந்தாய்…” ஒரு அற்புதம் என்றால், ஆனந்த பைரவியில் அமைந்த “தனியே தன்னந்தனியே” எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு அற்புதம். அம்முவிற்கு மிகவும் பிடித்தது “கலகலவென” பாடல். உன்னி மேனனின் “தீம்தனனா”வும் ஒரு, சாரலுடன் கூடிய தென்றல்.
ஸ்ரீகாந்த் (ரமேஷ் அரவிந்த்) வரும் இடங்களிலெல்லாம், பின்தொடரும் “கலகலவென” பாடலின் அந்த இசைத் துணுக்கு அபாரம்.
***
ரிதமில்தான் மீனாவையும், அர்ஜூனையும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. மீனாதான் எத்தனை அழகு படத்தில்! வசந்த் படத்தில் எல்லா ஹீரோயின்களும் ஒருபடி அதிகமாகவே அழகாகி விடுகிறார்கள். மீனாவின் படங்களிலேயே, எனக்குப் பிடித்த மீனா இருந்தது ரிதமில்தான் என்று நினைக்கிறேன். படம் பார்த்துக் கொண்டிருந்தபோது அம்முவிடம் “மீனா அழகு அம்மு” என்றபோது திரும்பிச் சிரித்தார்.
***
“ரொம்ப நல்ல பையன்பா நீ, உனக்கு இன்னும் கொஞ்சம் நல்லது நடக்கலாம்” மனதில் துயரத்துடன் கார்த்திக்கிடம் அம்மா சொல்லும் அந்தக் காட்சி…நான் நெகிழ்ந்துபோய் அம்முவைப் பார்த்தேன்.
லவ் யு கார்த்தி, சித்ரா…
ப்ரியங்களும் அன்பும் வசந்த்…
வெங்கி
“Rhythm – ரிதம்” (2000 Indian – Tamil)
(மீள்)
